யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மாணவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளைக் கோருவதை கண்டனம் செய்! இலவசக் கல்வியைப் பாதுகாக்க போராடுவதற்கு ஐக்கியப்படு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், 'ஒழுக்கமற்ற செயற்பாட்டுக்காக 'குற்றம் சாட்டப்பட்ட பல மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை பல்கலைக்கழக நிர்வாகம் விலக்கிக்கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது.

நிர்வாகத்தால் ஒன்பது மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்கக் கோரி, ஜனவரி 24-25 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரகத்தைத் தொடர்ந்தே ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். மாணவர்களின் எதிர்ப்புக்கு பதிலிருப்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொள்ள முடிவெடுத்தது. இந்த முடிவை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எதிர்க்கிறது.

மாணவர்கள் தண்டிக்கப்படுவதை எதிர்த்து ஜனவரி 24 அன்று சத்தியாகிரகம் செய்த யாழப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் (Photo: Facebook)

மாணவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்த வேண்டும், கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும், பாடங்களைத் தேர்வு செய்வதற்கான வசதிகள் வேண்டும், விரிவுரையாளர்களின் 'ஒழுங்கீனங்களை' விசாரிக்க வேண்டும், மாணவர்களுக்கு உடனடி நிதி உதவி வழங்க வேண்டும் ஆகியவை யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் கோரிக்கைகளில் அடங்கும். இந்த விடயங்களைப் பற்றி வட்ஸ்அப் மூலம் கலந்துரையாடியமைக்காக சிலர் தடை செய்யப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

'பல்கலைக்கழக நிர்வாகமானது சீரழிவு செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை; சொத்துக்களை சேதப்படுத்துதல் அல்லது கருத்து சுதந்திரத்தை தடுக்கும் செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிரான விசாரணைகளை திட்டமிட்டு தாமதப்படுத்துகிறது' என்று யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

ஆசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளில், பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்; குற்றங்களில் ஈடுபடும் மாணவர்களை தண்டனையிலிருந்து விடுவிக்கும் நிர்வாகத்தின் நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என்பன அடங்குகின்றன. மாணவர்களிடையே 'போதைப்பொருள் பயன்பாடு மற்றும் ஒழுக்கமற்ற நடத்தை' இருப்பதாகவும் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE), 'தவறான நடத்தையில்' ஈடுபட்டதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும், மற்றும் பல்கலைக்கழகத்தில் கடுமையான ஒழுக்க ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கையைக் கண்டனம் செய்கிறது.

இத்தகைய கோரிக்கை, மாணவர்களுக்கு மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளை அதிகப்படுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு மற்றும் அரசாங்கத்தினதும் கைகளில் பயன்படும்.

மாணவர்களின் எந்தவொரு அராஜக செயல்கள், பகிடிவதை அல்லது தீங்கு விளைவிப்பது உட்பட பிற்போக்கு நடவடிக்கைகளை ஐ.வை.எஸ்.எஸ்.இ. அங்கீகரிக்கவில்லை. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையேயான முரண்பாடுகள், குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளை பயன்படுத்தி, பல்கலைக்கழகத்தில் இரு தரப்பினரையும் பாதிக்கும் வகையில் அடக்குமுறை நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தும் என நாங்கள் எச்சரிக்கிறோம்.

செவ்வாய்க்கிழமை, அமைச்சரவை பேச்சாளரான நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்கள் முன் பேசுகையில், 'யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் ஊழியர்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கல்வி அமைச்சகம் ஒரு அறிக்கை கோரியுள்ளது' எனத் தெரிவித்தார்.

அரசாங்கம், “கல்வி செயல்பாடுகளுக்குத் தடை ஏற்படுத்தும் எந்தவொரு பிரச்சினையையும் விரைவாக தீர்க்கும்” என தெரிவித்த ஜயதிஸ்ஸ, தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன் அனைவரும் அமைச்சுடன் கலந்துரையாட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். “பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் மட்டுமே தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என அவர் கூறினார்.

பல்கலைக்கழகங்களிலும் நாட்டிலும் கருத்துவெளியிடுதல், பேச்சு மற்றும் அமைப்பு சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகளைத் திணிக்க வழி தேடும் ஒரு அரசாங்கத்திடம் இருந்து, இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கான உடனடி காரணங்கள் என்னவாக இருந்தாலும், அதற்கான தோற்றுவாய் வேறு இடத்தில் இருக்கிறது என நாங்கள் வலியுறுத்துகிறோம். அதாவது, கடந்த பல தசாப்தங்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் –அந்த வகையில் எல்லா பல்கலைக்கழகங்களிலும்- நிலைமை மோசமடைந்து வருகின்றமை, தற்போது உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது; இது நாடு ஆழமான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியில் மூழ்கியுள்ள சூழலில் நடைபெறுகிறது. உடனடி காரணங்கள் வெறும் கவனச்சிதறல்களே.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒழுக்கமான கல்வி நடவடிக்கைகளுக்கு உகந்த முறையான கல்வி வசதிகள் இல்லாததால் அவதிப்படுகிறார்கள். ஆசிரியர்கள், நூலகம் மற்றும் ஆய்வக வசதிகளில் பற்றாக்குறை நிலவுகிறது.

மாணவர்களின் பெரும்பாலானோர் கல்வி, விடுதி மற்றும் பிற செலவுகளைச் சமாளிக்க முடியாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பின்னர் அவர்கள் வேலைவாய்ப்பு பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த 26 ஆண்டுகள் நீடித்த கொடூர இனவாத போரால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இன்னும் இந்த இரண்டு மாகாணங்களும் இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையிலேயே உள்ளன.

ரணில் விக்கிரமசிங்கவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்ட கொடூரமான சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்கிறது.

இது பொருளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்களின் மீது சுமத்தும் ஒரு திட்டமாகும். இலங்கையின் பொருளாதார நெருக்கடி, பூகோள முதலாளித்துவ நெருக்கடியின் கூர்மையான வெளிப்பாடாகும். வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை உறுதி செய்வதற்கும் முதலீட்டாளர்களின் லாபத்தை அதிகரிப்பதற்கும் உழைக்கும் மக்களின் சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகளை அழிப்பதற்காகவே சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் பல தசாப்த கால சீரழிவு மேலும் ஆழப்படுத்தப்படுகிறது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தனியார் இலாபம் ஈட்டும் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கும் அதே வேளை, அரச கல்விக்கான செலவினங்களைத் தேக்க நிலையில் வைத்தன. தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளின் கீழ், இலவசக் கல்வி மீதான தாக்குதல்கள் மேலும் ஆழப்படுத்தப்படும்.

இது தனியார்மயமாக்கல், நலன்புரி வெட்டுக்கள், பல்வேறு வரிகள் மற்றும் கட்டணங்களை அதிகரிப்பது மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது போன்ற ஒட்டுமொத்த சிக்கனத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள அதே வேளை, பெரிய நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அதிகபட்ச வசதிகளை வழங்குகிறது.

பொதுக் கல்வியை வெட்டிச் சரிப்பது இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. பின்தங்கிய நாடுகள் என்று அழைக்கப்படுபவை முதல் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் வரை கல்விக்கான செலவுகள் வெட்டப்படுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள அதி செல்வந்த கும்பல்களால் மேலாதிக்கம் செலுத்தப்படும் உலகளாவிய முதலாளித்துவ முறைமை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூக சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் நெருக்கடி, தொற்றுநோய்கள், சர்வாதிகாரம் மற்றும் பாசிசம் மற்றும் போரையும் கட்டவிழ்த்துவிடுவதன் பக்கம் திரும்பியுள்ளது.

அனைவரையும் சூழ்ந்துகொண்டுள்ள இந்த முன்நகர்வுகள் குறித்து கவனம் செலுத்துமாறு மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. வலியுறுத்துகிறது. பல்கலைக்கழகங்களில் மோசமடைந்து வரும் நிலைமைகள் மற்றும் அவர்களைப் பாதிக்கும் சமூகப் பிரச்சினைகளுக்கான மூல காரணம் குறித்து ஆசிரியர்களும் மாணவர்களும் கவனம் செலுத்த வேண்டும்.

பல்கலைக்கழக பேரவை, மாணவர்களின் இடைநீக்கங்களை இரத்து செய்தது அனுதாபத்திற்காக அல்ல, மாறாக பல்கலைக்கழகத்தின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதன் பேரில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே பகைமையை உருவாக்குவதற்காகவே என்று நாங்கள் கூறுகிறோம்.

ஏனைய பல்கலைக்கழகங்களிலும் அடக்குமுறை நிலைமை காணப்படுகிறது. கல்வி வசதிகளைக் கோரி, தனியார்மயமாக்கலை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள், அரசாங்கத்தால் கட்டவிழ்த்துவிடப்படும் பொலிஸ் அடக்குமுறையை எதிர்கொள்கின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர சங்கத் தலைவர்கள் பல்கலைக்கழகத்தில் அடக்குமுறையான ஒழுக்க ஆட்சிக்கு அழைப்பு விடுப்பதை ஆதரிக்க வேண்டாம் என்று ஐ.வை.எஸ்.எஸ்.இ. புரிந்துணர்வுள்ள ஆசிரியர்களை கேட்டுக்கொள்கிறது. மாணவர்கள் மீதான அடக்குமுறை நிலைமைகள் ஆசிரியர்களுக்கும் விரைவில் ஏற்படும்.

இலவசக் கல்விக்கான ஒழுக்கமான சூழல் மற்றும் வசதிகளுக்கான மாணவர்களின் கோரிக்கைகளை ஐ.வை.எஸ்.எஸ்.இ. முழுமையாக ஆதரிக்கிறது. ஆசிரியர்களுடன் பகைமையை ஆழப்படுத்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாவணர் சங்கத் தலைவர்களின் செயல்பாடுகளையும் மாணவர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அரசியலுடன் ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூர்மையான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. அது, இலவசக் கல்விக்கான உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, தங்களுக்கான சலுகைகளுக்காக பேரம் பேசுகின்ற, சர்வதேச நாணய நிதிய கொள்கைகளை ஆதரிக்கின்ற மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு அடிவருடுகின்ற தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் தேசியவாத அரசியலில் மாணவர்களை சிக்க வைக்க முயல்கிறது.

பல்கலைக்கழகங்கள் உட்பட இலவசக் கல்வியின் வளர்ச்சிக்கு பாரிய நிதி ஒதுக்கீடுகள் தேவை. எந்த முதலாளித்துவ அரசாங்கமும் அதைச் செய்யத் தயாராக இல்லை.

அதனால்தான், முதலாளித்துவ முறைமைக்குள் இலவச கல்வியைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் எந்த தீர்வையும் காண முடியாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அதேபோல், முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் உழைக்கும் மக்களின் எந்தவொரு சமூகப் பிரச்சினைக்கும் தீர்வு கிடையாது.

போருக்காகவும் முதலாளித்துவ வர்க்கத்தின் பிற தேவைகளுக்காகவும் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களை நிராகரிப்பதன் மூலமும்; செல்வந்தர்களால் குவிக்கப்பட்ட செல்வத்தைக் கைப்பற்றுவதன் மூலமும்; வங்கிகளையும் பெரிய நிறுவனங்களையும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதன் மூலமும் மட்டுமே, கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய சமூக நலனுக்குத் தேவையான நிதியை விடுவிக்கவும், உற்பத்தியை மக்களின் நலன்களுக்காக ஒழுங்கமைக்கவும் முடியும்.

தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இனப் பிரிவினைகளைக் கடந்து, தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காகப் போராடுவதன் பேரில், இந்த சோசலிச வேலைத் திட்டத்திற்காகப் போராட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஐக்கியப்படுமாறு ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பு விடுக்கின்றது. சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைந்தே இந்தப் போராட்டத்தை நடத்த முடியும்.

நாங்கள் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் இலங்கைப் பகுதியாகும். இந்தத் வேலைத்திட்டத்திற்காக நாங்கள் உறுதியாகப் போராடுகிறோம். ஜனவரி 3 அன்று, அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் பேராதனை பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையை ஏற்பாடு செய்தோம். விரிவுரையின் தலைப்பு “சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவது எப்படி?”.

இந்தத் தலைப்பை எதிர்த்த துணைவேந்தர், இது “அரசாங்கக் கொள்கைகளை சவால் செய்வதாகும், எனவே அதை அனுமதிக்க முடியாது” என அறிவித்தார். இதனால் பேச்சு சுதந்திரத்திற்கான ஜனநாயக உரிமை நசுக்கப்படுகிறது. ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் தூண்டுதலுடன், பல்கலைக்கழக அதிகாரிகளின் இந்தத் தாக்குதலுக்கு எதிராக ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஒரு சக்திவாய்ந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறும், ஐ.வை.எஸ்.எஸ்.இ.யில் சேருமாறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்.