முன்னோக்கு

பொது சுகாதாரத்தின் மீதான ட்ரம்பின் தாக்குதலும் H5N1 பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கோழிக் கூண்டுகளின் சில பகுதிகளை சுத்தம் செய்யும் ஊழியர்கள், கோழிக் கடைக்குள் வெட்டப்படும் கடைசி கோழிகளை எடுத்துச் செல்கின்றனர். வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 7, 2025, நியூ யோர்க் [AP Photo/Andres Kudacki]

அமெரிக்காவும் உலக முதலாளித்துவமும் முழுமையாகத் தயாராக இல்லாத நிலையில், கடந்த வாரம் முழுதும் ஏற்பட்ட தொடர்ச்சியான அபிவிருத்திகள், அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பறவைக் காய்ச்சல் (H5N1) பெருந்தொற்றின், உடனடி ஆபத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. வரலாற்று ரீதியாக, பறவைக் காய்ச்சல் மனிதர்களிடையே 50 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. அத்தகைய ஒரு நோய்க்கிருமி மாறுபாடு, சமூகம் முழுவதும் பரவத் தொடங்கினால், இந்த நெருக்கடி தற்போது பரவி வரும் COVID-19 பெருந்தொற்றை விரைவாகக் கடந்து செல்லக்கூடும். இந்த தொற்றுநோய் இதுவரை கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்களைக் கொன்றுள்ளது. மேலும், நெடுங் கோவிட் நோய் 400 மில்லியனுக்கும் அதிகமானவர்களை பலவீனப்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சமீபத்திய நிகழ்வு வெள்ளிக்கிழமை நடந்தது. நியூ யோர்க் ஆளுநரான கேத்தி ஹோச்சுல், நியூ யோர்க் நகரம், வெஸ்ட்செஸ்டர், சஃபோல்க் மற்றும் நாசாவ் பிராந்தியங்களில் உள்ள அனைத்து உயிருள்ள பறவை சந்தைகளை தற்காலிகமாக மூடவும், சுத்தம் செய்யவும் மற்றும் கிருமி நீக்கம் செய்யவும் உத்தரவிட்டார். கடந்த வாரத்தில் குயின்ஸ், பிராங்க்ஸ் மற்றும் புரூக்ளின் ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில், ஏழு பறவைகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பறவைக் காய்ச்சல் பாதிப்புகளைக் கண்டறிவதற்கான தாமதமான முயற்சியின் ஒரு பகுதியாக, “மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடம் இன்ஃப்ளூயன்ஸா A பற்றிய பரிசோதனையை துரிதப்படுத்த” பரிந்துரைக்கும் ஒரு ஆலோசனையை நியூ யோர்க் மாநில சுகாதாரத் துறை (NYSDOH) மற்றும் நியூ யோர்க் நகர சுகாதாரம் மற்றும் மனநலத் துறை (NYCDOHMH) திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சுகாதாரப் பராமரிப்பு வசதிகளுக்கும் வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 16 அன்று, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கிட்டத்தட்ட இதே போன்ற அறிக்கையை வெளியிட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்த ஆலோசனை, எந்தவொரு நோயாளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்ஃப்ளூயன்ஸா A நோய் இருப்பது கண்டறியப்பட்டால், பரிசோதனையில் நேர்மறை (Positive) என்று பதில் வந்த 24 மணி நேரத்திற்குள் அவருக்கு பறவைக் காய்ச்சலுக்கான மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்கா தற்போது மிக மோசமான பருவகால காய்ச்சலில் சிக்கியுள்ளது. நியூ யோர்க் மற்றும் 42 பிற மாநிலங்கள் காய்ச்சல், கோவிட்-19 மற்றும் சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) உள்ளிட்ட “உயர்” அல்லது “மிக அதிக” அளவிலான சுவாச நோய்களை அனுபவித்து வருகின்றன. இந்த பருவ காலத்தில் இதுவரை காய்ச்சலால் மட்டும் குறைந்தது 24 மில்லியன் நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 310,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 13,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) மதிப்பிட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் மனிதர்களிடையே பரவக்கூடியதாக பரிணமித்து வருகின்ற நிலையில், கடந்த ஆண்டு முழுவதும், பருவகால காய்ச்சல் மற்றும் பறவைக் காய்ச்சலால் இணை-தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் மூலம், வைரஸ்களுக்கு இடையிலான மரபணுக்கள் மறுவகைப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்க கூடிய ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இன்றுவரை பறவைக் காய்ச்சல் பற்றிய மிகக் குறைந்த பரிசோதனையே செய்யப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் கொண்டால், இது பொது சுகாதார அதிகாரிகளின் பார்வையின் கீழ் இத்தகைய மறுவகைப்படுத்தல் நடந்திருக்க கூடும்.

புதன்கிழமை மற்றொரு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டது. அமெரிக்க வேளாண்மைத் துறை (USDA) மிகவும் ஆபத்தான D1.1 மரபணு வகை பறவைக் காய்ச்சல், நெவாடாவில் குறைந்தது ஆறு பால் பண்ணைகளில் பரவி வருவதாகக் குறிக்கும் தரவுகளை வெளியிட்டது. இதே மரபணு வகைதான் சமீபத்தில் லூசியானாவில் ஒரு முதியவரைக் கொன்றது மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரு இளைஞரை உயிர்காக்கும் கருவிகளில் வைத்தது.

D1.1 வகையை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், கால்நடைகளிடையே இது எவ்வளவு விரைவாக ஆதிக்கம் செலுத்துகிறது என்பது குறித்து கவலை கொண்டுள்ளனர். அதன் திறன்களைத் தீர்மானிக்கவும், அது ஏன் இவ்வளவு வேகமாகப் பரவுகிறது மற்றும் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறது என்பதைக் கண்டறியவும், அவர்கள் இன்னும் முயற்சி செய்து வருகின்றனர். அமெரிக்க கோழி மற்றும் பால் பண்ணைத் தொழிலில் உள்ள விலங்குகளுடன் லட்சக்கணக்கான பண்ணைத் தொழிலாளர்கள் தொடர்பு கொள்வதால், இந்த கொடிய விகாரத்தின் ஆபத்து வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் விரைவாக வளரக்கூடும்.

இறுதியாக, வியாழனன்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், அதன் நீண்டகால நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு வாராந்திர அறிக்கையின் (MMWR) திருத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டது. இது பறவைக் காய்ச்சல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்த அறிக்கை ஆரம்பத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டபோது, பறவை காய்ச்சல் பூனைகளிடமிருந்து மனிதர்களுக்கும், வீடுகளுக்குள்ளும் பரவக்கூடும் என்பதைக் காட்டும் தரவுகளை உள்ளடக்கியிருந்தது. ஆனால், இந்தத் தகவல்கள் உடனடியாக நீக்கப்பட்டு, செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையின் பதிப்பில் சேர்க்கப்படவில்லை.

நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக, பல மத்திய கூட்டாட்சி நிறுவனங்களின் அனைத்து பொது தகவல் தொடர்புகளையும் அடக்குவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் விதித்த பெரும் வெளியீட்டுத் தடை காரணமாக, MMWR இன் வெளியீடு இரண்டு வாரங்களுக்கும் மேலாக தாமதமானது. வெளியீட்டுத் தடைக்கு முன்னர், பறவைக் காய்ச்சல் குறித்து குறைந்தபட்சம் மூன்று அறிக்கைகளாவது MMWR இல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்ததுடன், அவை அகற்றப்பட்டது தொடர்பாக விளக்கப்படவில்லை. இது 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், MMWR அறிக்கைகளில் பல COVID-19 ஆய்வுகளை வெளியிடுவதை ட்ரம்ப் தடுத்தபோது, ​​CDC மீதான அவரது கடுமையான தணிக்கையை நினைவூட்டுகிறது.

இந்த அச்சுறுத்தும் அபிவிருத்திகள் அனைத்தும், கடந்த திங்களன்று ட்ரம்பின் சுகாதார செயலராக வரவிருக்கும் வரவிருக்கும் தடுப்பூசி-எதிர்ப்பு வெறியராக பிதற்றிக்கொள்ளும் ரொபர்ட் எஃப். கென்னடி ஜூனியரை செனட் உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக நடைபெறுகின்றன. வாக்களிக்களிப்பதில் சிறிது காலம் முடிவெடுக்காமல் இருந்த ஒரே குடியரசுக் கட்சிக்காரரான பில் காசிடி, செனட் நிதிக் குழுவில் கென்னடிக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனால் செனட்டில் அவரது ஒப்புதல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரவிருக்கும் வாரங்களில், ட்ரம்பின் அறிவியல் எதிர்ப்பு போலி கும்பலின் மீதமுள்ளவர்கள் நாட்டின் பொது சுகாதார நிறுவனங்களைக் கைப்பற்ற உள்ளனர். அவர்களில் மிகவும் பிரபலமானவர்களைக் குறிப்பிட வேண்டுமானால், தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) தலைவராக COVID-19 வழக்கறிஞர் ஜெய் பட்டாச்சார்யா, மருத்துவக் காப்பீட்டு மற்றும் மருத்துவ உதவி மையங்களின் (CMS) தலைவராக தொலைக்காட்சி போலி டாக்டர் மெஹ்மெட் ஓஸ் மற்றும் CDC இன் தலைவராக கருக்கலைப்பு எதிர்ப்பு ஆர்வலர் டேவ் வெல்டன் ஆகியோர் அடங்குவர். இவர்கள் தலைமை தாங்கும் நிறுவனங்களை முடக்கி அழிப்பதே இவர்களின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

பாசிச செல்வந்த தட்டுக்காரன் எலோன் மஸ்க் தலைமையில், அமெரிக்காவில் அனைத்து சமூக சேவைகளையும் நசுக்குவதற்கான பரந்த நாசகார நடவடிக்கையுடன் சேர்ந்து, ஒட்டுமொத்த பொது சுகாதார கட்டிடமும் விரைவில் தகர்க்கப்பட உள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம், ஆயிரக்கணக்கான HHS, CDC, NIH, FDA (உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) மற்றும் CMS ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான நிர்வாக உத்தரவை தயாரித்து வருவதாக கடந்த வெள்ளிக்கிழமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது. நவம்பர் 2023 இல் கென்னடி, ஒரு தடுப்பூசி எதிர்ப்பு மாநாட்டில் 600 NIH தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார். மேலும், “நாங்கள் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு தொற்று நோய்க்கு ஒரு இடைவெளி கொடுக்கப் போகிறோம்” என்றும் அவர் கூறினார்.

இதற்கும் மேலாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் முதல் இரண்டு வாரங்கள் உலக சுகாதார அமைப்பு (WHO) உடனான அனைத்து உறவுகளும் முடிவுக்கு வந்ததையும், USAID க்கான நிதியாதாரங்கள் ரத்து செய்யப்பட்டதையும், ஆயிரக் கணக்கான பொது சுகாதார வலைப் பக்கங்கள் மூடப்பட்டதையும், ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானபூர்வ விசாரணை மீதான பெரும் தாக்குதல்களையும் கண்டுள்ளன.

மனிதகுலம் எதிர்கொள்ளும் எண்ணற்ற தொற்று நோய்களின் அச்சுறுத்தல் இதைவிட அதிகமாக இருக்க முடியாது. பறவைக் காய்ச்சல் மட்டுமல்ல, மனிதனுக்குத் தெரிந்த ஒவ்வொரு வைரஸும் நோய்க்கிருமியும், அதன் நெருங்கிய கூட்டாளிகளான ட்ரம்ப்பும் கென்னடியும் விரைவில் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள சமூகங்களுக்குள் தம்மை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றன.

ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் பொது சுகாதார விரோத நடவடிக்கைகள், எரியும் கட்டிடத்தில் உள்ள அனைத்து நீர் குழாய்களையும் மூடிவிட்டு, எல்லாம் நன்றாக இருக்கிறது என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுவதுக்கு ஒப்பானதாகும்.

இந்த யதார்த்தமான நெருக்கடிக்கு பிரதிபலிக்கும் விதமாக ஒரு சுண்டுவிரலைக் கூட உயர்த்தாத ஜனநாயகக் கட்சியின் செயல்பாடு, மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் எந்தவொரு பிரிவாலும் எதுவும் செய்யப்படாது என்பதை தெளிவுபடுத்துகிறது. மேலும், பைடென் நிர்வாகத்தின் கீழ், COVID-19 க்கு எதிரான அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் முற்றிலுமாக அகற்றியதன் மூலம், ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் பொது சுகாதார உள்கட்டமைப்பில் எஞ்சியிருப்பவற்றை விரைவாக தூக்கியெறிவதற்கான சித்தாந்த மற்றும் சடரீதியான முன்னுதாரணத்தை ஜனநாயகக் கட்சி அமைத்துக் கொடுத்தது.

உண்மையில், பறவை காய்ச்சல் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதற்கான மையமாக அமெரிக்கா இருப்பதுக்கான காரணம், பைடென் நிர்வாகம் மற்றும் இரு முதலாளித்துவக் கட்சிகளாலும் கட்டுப்படுத்தப்படும் மாநில அரசாங்கங்களின் குற்றவியல் அலட்சியமாகும். அவை கடந்த ஆண்டில் உயிர்களை விட இலாபங்களை ஈட்டி, நூற்றுக்கணக்கான பால் மாடுகள் மற்றும் கோழிப் பண்ணைகளில் H5N1 பரவ அனுமதித்தன. இந்தச் செயல்பாட்டில், 66 அமெரிக்கர்கள் அதிகாரப்பூர்வமாக பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இது 1997 இல் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டதில் இருந்து வேறெந்த நாட்டையும் விட இரண்டாவது மிக உயர்ந்த வருடாந்திர எண்ணிக்கையாகும்.

பொது சுகாதாரத்திற்கும் அடுத்த தொற்றுநோயைத் தடுப்பதற்குமான போராட்டம், கொள்கைப் பிடிப்பான விஞ்ஞானிகளுடன் ஐக்கியப்பட்டு, தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும். ஒரு சோசலிச பொது சுகாதார வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக மட்டுமே பறவைக் காய்ச்சலை அதன் தடங்களில் நிறுத்துவது, நடப்பில் உள்ள கோவிட்-19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவது, பருவகால காய்ச்சலை அகற்றுவது மற்றும் இன்னும் பலவற்றையும் நிறைவேற்றுவது முற்றிலும் சாத்தியமாகும்.

உயர் செயல்திறன் கொண்ட துகள்-காற்று (HEPA) வடிகட்டிகளுடன் மறுசீரமைப்பு செய்தல், Far-UVC தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான பயன்பாடு உட்பட, பூகோள ரீதியில் உட்புற இடங்களைப் புதுப்பிப்பதானது, அனைத்து சுவாச நோய்க்கிருமிகளின் பரவலையும் வியத்தகு முறையில் குறைக்கும் அதே வேளை, பறவைக் காய்ச்சல் மற்றும் பிற வளர்ந்து வரும் தொற்று நோய்களின் அபாயத்தையும் குறைக்கும். வெகுஜன பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல் மற்றும் உயர்தர முகக் கவசங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் இணைந்து, எண்ணற்ற நோய்க்கிருமிகளை அழிப்பது விரைவாக அடையப்படும்.

இந்த சோசலிச பொது சுகாதார மூலோபாயத்திற்கான போராட்டமானது, பாசிசத்துக்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈவிரக்கமற்ற தாக்குதலுக்கும் எதிரான போராட்டத்தில் ஒரு இன்றியமையாத அங்கமாக மாற வேண்டும்.