ட்ரம்பின் ஆதரவுடன் மேற்குக் கரையில் இரண்டாவது காஸா நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸா போர்நிறுத்தம் என்ற மூடிமறைப்பின் கீழ், குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு போர்க் குற்றவாளியான பெஞ்சமின் நெதன்யாகுவின் அதிவலது அரசாங்கம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள வடக்கு நகரமான ஜெனினில் உள்ள அகதிகள் முகாமையும், துல்கரேம் மற்றும் தம்முன் நகரங்களையும் மையமாகக் கொண்டு ஒரு இராணுவத் தாக்குதலை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) மேற்கொண்டுள்ள இரும்புச் சுவர் இராணுவ நடவடிக்கையில், ஜெனின் மற்றும் துல்கரேமின் ஒட்டுமொத்த சுற்றுப்புறப் பகுதிகளும் பாரிய விமானக் குண்டுவீச்சுக்கள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு இலக்காகி தூள் தூளாக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நடவடிக்கையானது, பத்தாயிரக் கணக்கான பாலஸ்தீனியர்களை இடம்பெயர நிர்பந்தித்ததுடன், வீடு வீடாக தேடுதல் வேட்டைகள் மற்றும் பாரிய படுகொலைகளின் ஒரு புதிய அலையைத் தூண்டியும் உள்ளன.

மேற்குக் கரை ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பைத் தொடர்ந்து புகை மூட்டம் எழுகிறது, பிப்ரவரி 2, 2025 [AP Photo/Majdi Mohammed]

பாலஸ்தீனிய மனித உரிமைகள் அமைப்பான அல்-ஹக், காஸாவில் பயன்படுத்திய அதே தந்திரோபாயங்களில் பலவற்றை மேற்குக் கரையில் இஸ்ரேல் பயன்படுத்துகிறது என்று எச்சரித்துள்ளது. “பாலஸ்தீனிய எதிர்ப்பை அழிப்பதற்கான இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை தந்திரோபாயங்கள், ஜெருசலேம் உட்பட மேற்குக் கரையில் மேலும் தெளிவாகத் தெரிகிறது” என்று அது குறிப்பிட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளுக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் இதேபோன்ற எச்சரிக்கையை X தளத்தில் வெளியிட்டார். “இந்த தாக்குதல்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை என்றால், பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை காஸாவுடன் மட்டும் நின்றுவிடாது. என் வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்” என்று அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் துணை ஒப்பந்தக்காரராக பணியாற்றி வரும் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் பாலஸ்தீனிய ஆணையம், ஜெனின் பகுதியில் போராளிகளுக்கு எதிராக நான்கு வார கால நடவடிக்கையை மேற்கொண்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஜனவரி 21 அன்று, இஸ்ரேலிய இராணுவம் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கையில், டசின் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், பரந்த அளவில் தண்ணீர் மற்றும் மின்சார தடைகளும் ஏற்பட்டுள்ளன.

இஸ்ரேலிய இராணுவம், மிகவும் அழிவுகரமான இராணுவமாகும். “போராளிகளால்” பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி, ஜெனின் அகதிகள் முகாமிலுள்ள 23 கட்டிடங்களை குறிவைத்து தாக்கியுள்ளதுடன், முகாமுக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும், முகாமுக்குள் உள்ள சில சாலைகளையும் இராணுவம் நாசப்படுத்தியுள்ளது. காஸாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த தந்திரோபாயம், இஸ்ரேலிய இராணுவ கவச வாகனங்களை அந்தப் பகுதி வழியாக நகர்த்துவதற்கும், முகாமை தனித்தனி பகுதிகளாகப் பிரிப்பதற்கும் சாலைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முகாமில் இருக்கும் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். பலர் ஜெனின் மாகாணம் முழுவதிலும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அல்-ஹக்கின் கூற்றுப்படி, “மீதமுள்ள குடும்பங்கள் தண்ணீர், மின்சாரம் மற்றும் பிற அடிப்படை சேவைகளை அணுக முடியாமல் பெரும் ஆபத்துக்கு மத்தியில் வாழ்கின்றன.”

மேற்குக் கரையில் உள்ள துல்கரேம் நகரம் மற்றும் அகதிகள் முகாமுக்கு எதிராக, இஸ்ரேலிய இராணுவம் தனது பெரிய அளவிலான தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால் உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் சொத்துக்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது. இராணுவம், ரமல்லாவின் பல பகுதிகளுக்குள் புகுந்து, பழைய நகரமான ஹெப்ரானில் ரொட்டி விநியோகித்துக் கொண்டிருந்த இரண்டு பாலஸ்தீனியர்களைத் தாக்கி கைது செய்தது.

மேலும் வடக்குப் பகுதியில், இஸ்ரேலிய இராணுவம் தம்முன் மற்றும் ஃபாரா அகதிகள் முகாமில் அதன் தாக்குதலைத் தொடர்ந்தது. நகரத்தின் பல்வேறு இடங்களை அது இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு மத்தியில், வீடு வீடாக தேடுதல்களை நடத்தியது. குடியிருப்பாளர்கள் கடுமையான விநியோக பற்றாக்குறை மற்றும் கிட்டத்தட்ட மொத்த மின்சார தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காஸாவைப் போலவே, மருத்துவமனைகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்து வருகின்றது. முந்தைய தாக்குதல்களில் பிரதான நுழைவாயில் மற்றும் அதற்கு இட்டுச் செல்லும் பிரதான சாலையை புல்டோசர் மூலம் தகர்த்த பின்னர், இராணுவம் ஜெனின் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டது. இது அவசர தேவைகளுக்கு ஈடுபட்டுவரும் ஆம்புலன்ஸ் வண்டி மீது நேரடியாக ஸ்டன் கையெறி குண்டுகளை வீசியது. மேலும் இது, பெய்ட்டா நகரில் நடந்த ஒரு சோதனையின் போது ஒரு துணை மருத்துவரைக் காயப்படுத்தி, தாபெத் தாபெட் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளது.

“தீங்கு விளைவித்தல் மற்றும் பராமரிப்பை மறுத்தல்” என்ற எல்லைகளற்ற மருத்துவ அமைப்பின் அறிக்கை, காஸா போர் தொடங்கியதிலிருந்து முதல் 12 மாதங்களில் மேற்குக் கரையில் சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது 647 தாக்குதல்களை இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் மேற்கோள் காட்டுகின்றன. இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள் மற்றும் கிராமங்களைச் சுற்றி வளைத்து, மருத்துவ அணுகலுக்கு முன்னெப்போதும் இல்லாத தடைகளை உருவாக்கி வருகின்றது.

இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையில் ஜெனின் பகுதியில் 25 பேர் கொல்லப்பட்டதோடு, 65 பேர் காயமடைந்தனர் என்று பாலஸ்தீனிய ஆணையத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இராணுவ நடவடிக்கையில், இதர நகரங்களில் குறைந்தது 10 பேர்கள் கொல்லப்பட்டதுடன், 100 பேர்கள் கைது செய்ய்பட்டுள்ளனர். இது, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மேற்குக் கரையில் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 70 ஆகவும், அக்டோபர் 2023 முதல் 900 க்கும் அதிகமானவர்களாகவும் கொண்டு வந்துள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய உதவி நிறுவனமான UNRWA மீதான இஸ்ரேலின் தடை (காஸா, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் செயல்படுவதைத் தடுக்கிறது) நடைமுறைக்கு வரும்போது, இவை அனைத்தும் நடைபெறுகின்றன. உதவி விநியோகத்தில் ஏற்படும் பேரழிவு தாக்கம் பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்று உதவி அமைப்புகள் எச்சரித்துள்ளன. காஸா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள சுமார் 2.5 மில்லியன் பாலஸ்தீன அகதிகளுக்கும், சிரியா, ஜோர்டான் மற்றும் லெபனானில் உள்ள 3 மில்லியன் பாலஸ்தீன அகதிகளுக்கும் UNRWA அமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட முக்கிய உதவி மற்றும் பொது சேவைகளை வழங்கி வருகிறது.

கடந்த ஆகஸ்டில், அப்போதைய வெளியுறவு அமைச்சராக இருந்த பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் காட்ஸ், “பயங்கரவாதிகளை” வேரறுக்க காஸாவில் காட்டியதைப் போலவே, மேற்குக் கரையிலும் இஸ்ரேல் “அதே தீரத்தை” காட்ட வேண்டும் என்று அழைப்புவிடுத்ததுடன், “பாலஸ்தீன குடியிருப்பாளர்களை தற்காலிகமாக வெளியேற்றுவதற்கும் மற்றும் எந்தவொரு அவசியமான நடவடிக்கைகளுக்கும்” அழைப்புவிடுத்தார். மிக சமீபத்தில், ஜெனின் அகதிகள் முகாமில் இருந்து ஆயுதமேந்திய எதிர்ப்பை அகற்றுவதே இஸ்ரேலிய இராணுவத்தின் நோக்கம் என்று அவர் பரிந்துரைத்தார். இதனால் “நடவடிக்கை முடிந்த பின்பும் பயங்கரவாதம் முகாமுக்குள் திரும்பாது—இது காஸாவில் மீண்டும் மீண்டும் திடீர் சோதனைகளின் வழிமுறையிலிருந்து கிடைக்கும் முதல் படிப்பினையாகும்.” மேலும், இந்த நடவடிக்கை முடிந்த பின்னரும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ஜெனின் அகதிகள் முகாமில் இருக்கும் என்று அவர் கூறினார்.

சில வாரங்களுக்கு முன்பு, நிதி அமைச்சரும் மத சியோனிசத் தலைவருமான பெசலெல் ஸ்மோட்ரிச், காஸாவில் பயன்படுத்தப்பட்ட அதே வன்முறையை ஜெனினிலும் இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்த வேண்டும் என்று கோரினார். குறிப்பாக, “பண்டுக், நப்லஸ் மற்றும் ஜெனின் நகரங்கள் ஜபாலியாவைப் [காஸாவில் உள்ள அகதிகள் முகாம்] போல தோற்றமளிக்க வேண்டும்” என்று கூறினார்.

இஸ்ரேலிய அரசு சாரா நிறுவனமான கெரெம் நவோட், மேற்குக் கரையில் பாலஸ்தீன நிலங்களை இஸ்ரேல் அபகரிப்பதைக் கண்காணிக்கும் ஒரு ஆய்வை இஸ்ரேலிய இணையத்தள பத்திரிகை +972 வெளியிட்டுள்ளது. காஸா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்கள் காரணமாக குறைந்தது 57 பாலஸ்தீன சமூகங்கள் (பெரும்பாலும் வடக்கு ஜோர்டான் பள்ளத்தாக்கு, ரமல்லாவின் கிழக்கே, பெத்லகேமின் தென்கிழக்கே மற்றும் தெற்கு ஹெப்ரான் மலைகள்) தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு காட்டுகிறது. இவற்றில், ஏழு பகுதிகளிலுள்ள மக்கள் முற்றாக இடம்பெயர்ந்துள்ளனர். அதே நேரத்தில் 50 இடங்கள் வரைபடத்திலிருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலிய குடியேறிகள் மேற்குக் கரையில் குறைந்தது 41 குடியேற்றப் பகுதிகள் மற்றும் மேய்ச்சல் பண்ணைகளை நிறுவியுள்ளதாக கெரெம் நவோட் மற்றும் பீஸ் நவ் என்ற தன்னார்வ அமைப்பு மதிப்பிட்டுள்ளது. அவற்றில் குறைந்தது 10 பாலஸ்தீன சமூகங்கள் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்திற்குத் திரும்புவதைத் தடுக்க குடியேறிகள் “கண்காணிப்பு சாவடிகளை” அமைத்துள்ளனர் அல்லது இஸ்ரேலிய கொடிகளை நட்டுள்ளனர். எல்லைகளற்ற மருத்துவக் குழுவின் அறிக்கையின்படி, அவர்கள் பாலஸ்தீனியர்களின் சுகாதாரப் பாதுகாப்பு அணுகலைத் தடுக்கின்றனர். சுகாதாரப் பணியாளர்களை மிரட்டி தாக்குகின்றனர். மேலும், மிகவும் தொலைதூர இடங்களிலுள்ள சமூகங்களைப் பாதிக்கும் வகையில் சாலைத் தடைகளை அமைத்துள்ளனர்.

இவை அனைத்தும் இஸ்ரேலிய இராணுவத்தின் கூட்டுச்சதியுடன் தொடர்கின்றன. இவர்கள் இனி சிவில் உடையில் குடியேறி, பாலஸ்தீனியர்களையும் அவர்களின் சொத்துக்களையும் துன்புறுத்தி தாக்குபவர்கள் அல்ல. மாறாக, இராணுவ சீருடையில் ஆயுதம் ஏந்திய குடியேறிகள் ஆவர். மேலும் இவர்கள், இராணுவ ரிசர்வ் படையினர்களாக தங்கள் பங்கைப் செயற்படுத்திக் கொண்டு, வன்முறைச் சோதனைகளை மேற்கொள்கிறார்கள். வீடுகளுக்குள் புகுந்து கால்நடைகளைத் திருடுகிறார்கள். மேலும், பாலஸ்தீனியர்களையும், பாதிக்கப்படக்கூடிய மேய்ச்சல் சமூகங்களை ஆதரிக்க வரும் இஸ்ரேலிய மற்றும் சர்வதேச ஆர்வலர்களையும் கைது செய்கிறார்கள். கடந்த டிசம்பர் மாதத்தில், குடியேறிகளின் தலைவர்கள், “காஸாவில் நடந்தது போல” மேற்குக் கரையில் ஒரு நடவடிக்கையைத் தொடங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த மாதம், அல்-ஃபண்டக் கிராமத்தின் வழியாக டசின் கணக்கான முகமூடி அணிந்த இஸ்ரேலியர்கள் கலவரத்தில் ஈடுபட்டு, பாலஸ்தீனியர்களின் சொத்துக்களுக்கும் ஒரு நர்சரி பள்ளிக்கும் தீ வைத்தனர். அவர்கள் ஒரு குடும்பம் தங்கியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்து கற்களை வீசினர். அருகிலுள்ள ஜின்சாபுட் கிராமத்தில் குடியேறிகள் கலவரத்தில் ஈடுபட்டு, கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த செயலை மேற்கொண்ட எவரும் கைது செய்யப்படவில்லை.

இதற்கு, இஸ்ரேலின் அதிவலது அரசியல்வாதிகளிடம் இருந்து பச்சை விளக்கு காட்டப்பட்டு வருவதோடு, அதிதீவிர தேசியவாத குடியேறிகள் இயக்கத்திற்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளிப்படையான ஆதரவும் உள்ளது.

பதவியேற்ற மூன்று வாரங்களில், ட்ரம்ப் 2,000 பவுண்டுகள் எடை கொண்ட குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்குவதில் பைடென் நிர்வாகத்தின் தடையை (ஒரு போர் நிறுத்தம் என்று கூறப்படும் நிலையிலும்) நீக்கியுள்ளார். மேலும், மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான நில அபகரிப்புகள் மற்றும் வன்முறைக்கு காரணமான குடியேறிகள் மற்றும் குழுக்களுக்கு எதிரான தடைகளையும் நீக்கியுள்ளார். ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடைகளை விதித்துள்ளார் (நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெலண்ட் மீது போர்க்குற்றங்களுக்காக குற்றச்சாட்டு பதிவு செய்வதன் மூலம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைத் தாக்கியதாக குற்றம் சாட்டுகிறார்) மேலும் UNRWA ஐ மாற்றுவதற்கான ஐ.நா.வின் முயற்சிகளுக்கு தலைமை தாங்குகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஆயிரக்கணக்கான குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் உட்பட 7.4 பில்லியன் டொலருக்கும் அதிகமான ஆயுதப் பொதியை இஸ்ரேலுக்கு விற்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை காங்கிரசிடம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், “தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களைச் சந்திக்க இஸ்ரேலின் திறன் மேம்படுத்தப்படுகிறது. அதன் தாயகப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது மற்றும் பிராந்திய அச்சுறுத்தல்களுக்கு ஒரு தடுப்பாக செயல்படுகிறது”, மேலும் இது பிராந்தியத்தில் வாஷிங்டனின் தாக்குதல் நாயாக இருக்கும் இஸ்ரேலின் பங்கை உறுதிப்படுத்துகிறது.

இந்த நடவடிக்கைகளை இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான இடாமர் பென்-க்விர் வரவேற்றுள்ளார். காஸா போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் ராஜினாமா செய்யும் வரை அவர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், ஸ்மோட்ரிச் கூறுகையில், “நமது தேசிய பாதுகாப்பை மேலும் மேம்படுத்தவும், நமது தாயகத்தின் அனைத்து பகுதிகளிலும் குடியேற்றத்தை விரிவுபடுத்தவும், உலகில் இஸ்ரேலின் நிலையை வலுப்படுத்தவும் இஸ்ரேல் அரசு தொடர்ந்து பயனுள்ள ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறது” என்றார்.

மேற்குக் கரையை இஸ்ரேல் இணைத்துக் கொள்வது குறித்து நான்கு வாரங்களில் அறிவிப்பை வெளியிடுவேன் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அவரது முந்தைய முயற்சியான, “அமைதியிலிருந்து செழிப்பு வரை”, மேற்குக் கரையின் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பகுதியை இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக இணைப்பதை அங்கீகரித்துள்ளது. இந்த நடவடிக்கையை அவரது அதிகாரிகள் ஆதரித்து வருகின்றனர். இவர்களில் இஸ்ரேலுக்கான அவர் முன்மொழிந்த தூதர் மைக் ஹக்கபீ, ஒரு சுவிசேஷ கிறிஸ்தவராக இருப்பதுடன், முன்னர் மேற்குக் கரையில் இஸ்ரேலின் “உரிமையை” அங்கீகரித்தவர் ஆவர். இவர், மேற்குக் கரையை அதன் எபிரேய மற்றும் விவிலிய பெயர்களான யூதேயா மற்றும் சமாரியா என்று குறிப்பிடுகிறார். மேலும் மற்றொரு சுவிசேஷ கிறிஸ்தவரான எலிஸ் ஸ்டெபானிக், ஐக்கிய நாடுகள் சபைக்கான ட்ரம்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலின் அளவைக் குறிப்பிட்டு கூறிய ட்ரம்ப், “இது ஒரு சிறிய நிலம், நீங்கள் அதைப் பற்றி நினைக்கும் போது, அவர்களால் செய்ய முடிந்ததை, செய்ய முடிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அங்கே நிறைய புத்திசாலித்தனமான மூளைத்திறன் நிறைய இருக்கிறது. ஆனால், அது மிகச் சிறிய நிலம், அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று, கடந்த ஆகஸ்டில், நியூ ஜெர்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் கூறினார். மேலும், “இது உண்மையில் ஒரு சிறிய இடம். நான் உண்மையில் சொல்கிறேன், ‘இன்னும் அதிகமான இடத்தைப் பெற ஏதாவது வழி இருக்கிறதா’”? என்று அவர் கூறியுள்ளார்.