மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த வாரம் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கான ட்ரம்பின் சிறப்பு தூதர் கீத் கெல்லாக் உட்பட பல ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளை பிப்ரவரி 14 முதல் 16 வரை முனிச்சில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் சந்திக்கிறார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உடனான ட்ரம்பின் திடீர் தொலைபேசி அழைப்பின் பின்னணியில், அமெரிக்க அதிகாரிகளுக்கும் ஜெலென்ஸ்கி அரசாங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு நடைபெறுகிறது. அந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, “நீண்ட மற்றும் மிகவும் ஆக்கபூர்வமான அழைப்பின்” விளைவாக, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் நேட்டோ பினாமி போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்பின் கூற்றுப்படி, அவரும் புட்டினும் விரைவில் சவுதி அரேபியாவில் நேரில் சந்திக்க உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது உக்ரேனோ நேரடியாக இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.
கடந்த புதன்கிழமையன்று, அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் உக்ரேன் போர் “முடிவுக்கு வர வேண்டும்” என்று அறிவித்தார். உக்ரேனுக்கான நேட்டோ அங்கத்துவத்தை நிராகரித்த ஹெக்செத், 2014 க்கு முந்தைய அதன் எல்லைகளுக்கு திரும்புவதை “நடைமுறைக்கு” மாறானது என்று நிராகரித்தார். ரஷ்யாவுடனான மோதலில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் நேட்டோவின் மையக் கொள்கைகளாக இருக்கும் குறிப்பிட்ட இரண்டு கோரிக்கைகளும் இதுவரையும் இருந்து வருகின்றன. மேலும், உக்ரேனின் “பாதுகாப்பை” மேற்கொள்வதற்கு ஹெக்செத் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்தார்.
அதேநேரத்தில், நேட்டோ துருப்புகள் “எந்த நேரத்திலும் உக்ரேனுக்கு அமைதிகாக்கும் படையினராக நிலைநிறுத்தப்பட்டால், அவர்கள் நேட்டோ அல்லாத நடவடிக்கையின் பாகமாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், மேலும் அவை [நேட்டோ உடன்படிக்கையின்] ஷரத்து 5 இன் கீழ் வரக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார். நேட்டோ உறுப்பு நாட்டின் பிரதேசம் அல்லது ஆயுதப் படைகள் மீதான எந்தவொரு தாக்குதலும் அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாகும் என்று விதி 5 கூறுகிறது.
இதுவரையில், ஜெலென்ஸ்கியின் ஆட்சி, ட்ரம்ப்-புட்டின் தொலைபேசி அழைப்புக்கு முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதன் மூலமாக எதிர்வினையாற்றி வருவதுடன், முன்மொழியப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தன்னை ஒரு சமமான பங்காளியாக சித்தரித்துக் கொண்டுள்ளது. இது குறித்து ஜெலன்ஸ்கி சமூக ஊடகங்களில், “நான் ஜனாதிபதி ட்ரம்புடன் நீண்ட மற்றும் விரிவான உரையாடலை நடத்தினேன். எங்கள் பகிரப்பட்ட வாய்ப்புகள் மற்றும் நாம் எவ்வாறு ஒன்றாக உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியும் என்பதில் அவரது உண்மையான ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். இராஜதந்திரம், இராணுவம் மற்றும் பொருளாதாரம் என பல அம்சங்களை நாங்கள் விவாதித்தோம், புட்டின் தன்னிடம் கூறியதை ஜனாதிபதி ட்ரம்ப் எனக்குத் தெரிவித்தார். உக்ரேன் மற்றும் எங்கள் அனைத்து கூட்டாளிகளுடன் சேர்ந்து அமெரிக்காவின் பலம் ரஷ்யாவை அமைதிக்கு தள்ள போதுமானது என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
ட்ரம்ப் நிர்வாகத்துடன் “இணைந்து பணியாற்றத்” தயாராக இருப்பதாகக் கூறினாலும், சமீபத்தில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள், ஏற்கனவே கடுமையான நெருக்கடிக்குள் இருக்கும் ஜெலென்ஸ்கி அரசாங்கத்தின் நெருக்கடியை தெளிவாக ஆழப்படுத்தியுள்ளன.
செவ்வாயன்று, உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டம் உமெரோவ், நேட்டோ உக்ரேனின் எதிர்காலத்தில் இல்லை என்ற ஹெக்செத்தின் அறிக்கையை பகிரங்கமாக மறுத்தார். “நீங்கள் எந்த வகையான அறிக்கைகளுக்கும் பழகிக்கொள்ள வேண்டும். எங்கள் நிலைப்பாடு எப்போதும் மாறாது. நாங்கள் ஒரு நேட்டோ நாடாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் ஒரு நேட்டோ நாடாக இருப்போம்” என்று உமெரோவ் வலியுறுத்தினார்.
புட்டின்-ட்ரம்ப் தொலைபேசி அழைப்புக்கு முன்னதாக, நடந்துகொண்டிருக்கும் நேட்டோ பினாமி போருக்கும், கைப்பாவை ஜெலென்ஸ்கி ஆட்சிக்கும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு ஈடாக, உக்ரேன் அமெரிக்காவிற்கு அதன் “பகுதியிலுள்ள அரிய தாதுக்கள்” வடிவில் பணம் செலுத்த வேண்டும் என்று ட்ரம்ப் பல கோரிக்கைகளை முன்வைத்தார். மேலும், ஜெலென்ஸ்கி-வான்ஸ் சந்திப்புக்கு கூடுதலாக, அமெரிக்கா தொடர்ச்சியான ஆதரவை வழங்கி, “பூமியிலுள்ள அரிய தாதுக்களைப்” பெறுவதற்காக, ஜெலென்ஸ்கி அரசாங்கத்துடன் முறையான ஒப்பந்தத்தை உருவாக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்டை அனுப்புவதாக செவ்வாயன்று ட்ரம்ப் அறிவித்தார்.
உலக சோசலிச வலைத்தளம் விளக்கியதைப் போல, ட்ரம்பும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகளும் மோதலைத் தீர்க்க முயல்கிறது என்றால், அதற்கான காரணம் அமெரிக்க போர்க் கொள்கையின் திசையில் ஏற்பட்டுள்ள தந்திரோபாயப் பிளவுகளாகும். கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதன் மூலமும், கிரீன்லாந்து மற்றும் பனாமாவையும், மத்திய கிழக்கில் காஸாவையும் கைப்பற்றுவதன் மூலமும் அமெரிக்காவின் பிரதேசத்தை விரிவுபடுத்துவதே ட்ரம்பின் நோக்கமாக உள்ளது.
கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதை நியாயப்படுத்த, ரஷ்யா மற்றும் சீனாவுடனான அமெரிக்காவின் மோதலில் ஆர்க்டிக் ஒரு மையப் போர்க்களம் என்று ட்ரம்ப் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த உள்ளடக்கத்திற்குள்ளாக, உக்ரேனிய போருக்கான எந்தவொரு தீர்வும், ஒரு தற்காலிக மற்றும் தந்திரோபாய குணாம்சத்தைக் கொண்டிருக்கும். இது, உலகின் மேலெழுந்து வரும் ஏகாதிபத்திய மறுபங்கீட்டில், அமெரிக்க ஏகாதிபத்தியம் இதர போர்க்களங்களில் கவனம் செலுத்துவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதை காட்டுகிறது.
உக்ரேனின் கனிம வளத்தின் மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான ட்ரம்பின் திமிர்பிடித்த முயற்சி, ஏற்கனவே நூறாயிரக்கணக்கானவர்களின் உயிர்களைப் பலிகொண்ட ஒரு போரின் பின்னணியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாகும்.
ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய டைட்டானிய இருப்புக்களையும், கணிசமான யுரேனிய இருப்புக்களையும் உக்ரேன் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்க திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) சேமிக்க உக்ரேனின் நிலத்தடி எரிவாயு சேமிப்பு வசதிகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஜெலென்ஸ்கி எழுப்பினார். இது, ட்ரம்ப்பின் இரண்டு ஜனாதிபதி பதவிகளின் போதும் அவரது எரிசக்தி கொள்கையின் மைய அங்கமாக இருந்து வருகிறது. ஏனெனில், ரஷ்யாவை ஐரோப்பிய எரிசக்தி சந்தையில் இருந்து முற்றிலுமாக வெளியேற்ற அமெரிக்கா முயற்சிக்கும் அதே வேளையில், LNG துறையில் தனது சொந்த நலன்களை மேம்படுத்தவும் முயல்கிறது.
கடந்த வாரம் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில், ட்ரம்பின் அரிய பூமி கனிம கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளித்த ஜெலென்ஸ்கி, “நாங்கள் ஒரு ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசினால், அந்த ஒப்பந்தத்தை செய்து கொள்வோம். நாங்கள் அதற்காக மட்டுமே இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார். அதேநேரத்தில், நேட்டோ ஆதரவிலான கியேவ் அரசாங்கத்தின் தொடர்ச்சியான இருப்பை உறுதி செய்வதற்காக, எந்தவொரு உடன்படிக்கையின் பாகமாகவும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திடம் இருந்து “பாதுகாப்பு உத்தரவாதங்களை” அவர் கோரி வருகிறார்.
இதற்கிடையில் ட்ரம்ப், ஜெலென்ஸ்கி அரசாங்கத்தையும் அதன் அபாயகரமான தலைவிதியையும் பகிரங்கமாக கேலி செய்து வருகிறார். செவ்வாயன்று ஃபாக்ஸ் நியூஸ் உடனான ஒரு நேர்காணலில், “அவர்கள் (உக்ரேன்) ஒரு ஒப்பந்தம் செய்யலாம், அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்யாமலும் போகலாம். அவர்கள் என்றாவது ஒரு நாள் ரஷ்யர்களாக இருக்கலாம், அல்லது என்றாவது ஒரு நாள் ரஷ்யர்களாக இல்லாமலும் இருக்கலாம்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.
அதே நேர்காணலில், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு போரில் சாத்தியமான சிறந்த பலனைப் பெறுவதில் அவரது ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், “அரிதான மண், எண்ணெய், எரிவாயு மற்றும் பிற விஷயங்களின் அடிப்படையில் அவர்களிடம் மிகவும் மதிப்புமிக்க நிலம் உள்ளது. எங்கள் பணத்தைப் பாதுகாக்க விரும்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
“நான் அவர்களிடம், 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அரிய பூமியை விரும்புகிறேன் என்று சொன்னேன், அவர்கள் அதைச் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, குறைந்தபட்சம் நாம் முட்டாள்கள் என்று உணரக்கூடாது. இல்லையெனில், நாம் முட்டாள்கள். நான் அவர்களிடம் சொன்னேன், நாம் ஏதாவது ஒன்றைப் பெற வேண்டும். இந்த பணத்தை எங்களால் தொடர்ந்து செலுத்த முடியாது” என்று ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.
“ஒப்பந்தத்தை உருவாக்குபவரான” ட்ரம்பிற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்கும் ஜெலென்ஸ்கி, செவ்வாயன்று, எந்தவொரு சாத்தியமான பேச்சுவார்த்தைகளின் ஒரு பாகமாக, ரஷ்யாவுடன் பிரதேசத்தை பரிமாறிக்கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
உக்ரேனுக்கு சொந்தமான டொன்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வந்த போதிலும், குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யாவின் சொந்த தாக்குதல் முயற்சிகள் தோல்வியடைந்த போதிலும், கடந்த ஆகஸ்ட் மாதம், குர்ஸ்க் மீதான உக்ரேனின் ஆகஸ்ட் ஊடுருவலைத் தொடர்ந்து, உக்ரேன் ரஷ்யாவின் பிரதேசத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.
“நாங்கள் ஒரு பிரதேசத்தை மற்றொரு பிராந்தியத்திற்கு மாற்றுவோம்” என்று ஜெலன்ஸ்கி கார்டியனுக்கு அளித்த பேட்டியில் கூறினார். அவர் எந்த பிராந்தியத்தை பரிமாறிக்கொள்வார் என்பதை ஒப்புக் கொள்வதற்கு மறுத்துவிட்டார். “எனக்குத் தெரியாது, பார்ப்போம். ஆனால் எங்கள் பிரதேசங்கள் அனைத்தும் முக்கியமானவை, அங்கே எதற்கும் முன்னுரிமை இல்லை” என்று கூறினார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு பேச்சுவார்த்தை உடன்படிக்கையை ஏற்க உக்ரேனியர்கள் அதிகரித்தளவில் விருப்பம் கொண்டிருப்பதை உள்நாட்டு கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டுகின்ற அதேவேளையில், எந்தவொரு நிலப்பரப்பையும் இழப்பது நீண்ட காலமாக நாட்டின் பல்வேறு அதிதீவிர வலதுசாரி ஆயுதக் குழுக்கள் மற்றும் பாசிச உத்தியோகபூர்வ இராணுவப் பிரிவுகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது. அவை போரை நடத்துவதிலும் உக்ரேனிய அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பதிலும் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
கிழக்கு உக்ரேனிய மோதலுக்கு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயன்றவுடன், 2019 இல் ஆயிரக்கணக்கான பாசிஸ்டுகளின் எதிர்ப்புகளை ஜெலென்ஸ்கி எதிர்கொண்டார் என்பதை நினைவுகூருவது மதிப்புடையதாகும். அப்போதிருந்து, இந்த சக்திகள் பல ஆண்டுகளாக அரசு மற்றும் நேட்டோ ஆதரவின் மூலமாக மட்டுமே தைரியம் பெற்று வந்துள்ளன.
ஜெலென்ஸ்கி ஆட்சியின் ஆபத்தான நிலையை, இந்த வாரம் முன்னாள் வெளியுறவு மந்திரி டிமிட்ரி குலேபாவால் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அவர் “உக்ரேனிய” பிராந்தியத்தை விட்டுக்கொடுக்க முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கும் அரசியல் ரீதியாகவும், நேரடியாகவும் மரணம் ஏற்படும் என்று எச்சரித்தார்.
கடந்த வாரம், உக்ரேனிய ஊடகங்களுடன் பேசிய குலேபா (ஜெலென்ஸ்கி ஆட்சியில் நீண்ட காலம் பணியாற்றிய உறுப்பினர்களில் ஒருவர் மற்றும் சமீபத்தில் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் உள்ள பெல்ஃபர் அறிவியல் மற்றும் சர்வதேச விவகார மையத்தில் மூத்த உறுப்பினராக நியமிக்கப்பட்டார்) “நேட்டோவை கைவிடும் ஆவணத்தில் கையெழுத்திடும் ஒருவர் இன்னும் உடல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உயிர்வாழ வாய்ப்பு உள்ளது. ஆனால் பிரதேசங்களை விட்டுக்கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஒருவர் கொல்லப்படுவார் அல்லது அரசியலில் இருந்து வெளியேற்றப்படுவார்” என்று அச்சுறுத்தும் வகையில் எச்சரித்தார்.
மேலும், “போரை நிறுத்தும் அதே நேரத்தில் உள்நாட்டுப் புரட்சிக்கு இட்டுச் செல்லாத வகையில் பிராந்திய பிரச்சினையை விவரிக்கும் சூத்திரங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான பணியாக நான் பார்க்கிறேன்” என்று குலேபா கூறினார்.