இலங்கையில் வெளியாகும் இரு பிரதான தினசரி ஆங்கில செய்தித்தாள்களான டெய்லி மிரர் மற்றும் தி ஐலண்ட், திங்கட்கிழமை எழுதிய ஆசிரியர் தலையங்கங்களில், தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக வளர்ந்து வரும் வெகுஜன வெறுப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளன.
'அரசின் வாக்குறுதிகளும் ஏழைகளின் இயலாமையும்' (மிரர்) மற்றும் 'கற்றுக்கொள்ளாத பாடங்கள்' (ஐலண்ட்) எனும் தலைப்புகளின் கீழ் வெளியான இந்த தலையங்கங்கள் இரண்டிலும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசுக்கு எதிராக வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'குழியை சுத்தம் செய்வதாக' வாக்குறுதி அளித்து அதிகாரத்திற்கு வந்த ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், 'குழிக்குள்ளேயே வீழ்ந்து மூழ்கிவிடுமோ?' எனும் கேள்வி 'பெரும்பான்மையான மக்களின்' மனதில் தோன்றியுள்ளது என மிரர் தலையங்கம் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது. 2022 வெகுஜன போராட்டத்திற்கு 'ஒப்பான நிலைமை' மீண்டும் உருவாகும் சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐலண்ட் தலையங்கம், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் ஆளும் கும்பலின் நலன்களைப் பிரதிபலிக்கும் இந்த இரண்டு செய்தித்தாள்களின் கவனமும், முதலாளித்துவ வர்க்க ஆட்சியை ஸ்திரமற்றதாக்கக் கூடிய அத்தகைய நிலைமையை தடுப்பது, ஜே,வி.பி./தே.ம.ச. அரசின் பொறுப்பு என்பதை சுட்டிக்காட்டுவதாகும்.
ஊடகங்களின் இந்த கவலைக்கு காரணம் என்ன?
கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக தினசரி ஊதியம் பெறும் 5 இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையிழந்ததை சுட்டிக் காட்டும் மிரர், பொது மக்கள் அனுபவிக்கும் வறுமை நிலை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது: 'ஒரு குடும்பத்தில் சுமார் நான்கு நபர்கள் இருப்பதாக கருதினால், 20 லட்சம் பேர், தேவையான குறைந்தபட்ச உணவை வாங்கும் திறனை இழந்துள்ளனர் என்பதே இதன் அர்த்தமாகும். தெருவின் இருபுறமும் பாதி கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள், இந்த மக்களில் பலர் இன்னும் வேலையில்லாத நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன.'
2023 ஏப்ரலில் வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி, 2019 முதல் வறுமை அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கும் மிரர், 2020 இல் 11.3 சதவீதத்தில் இருந்த வறுமை, 12.7 சதவீதமாக உயர்ந்து, மேலும் 3 லட்சம் 'புதிய ஏழைகள்' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது இரட்டிப்பாகி ' இன்னும் 25 லட்சம் பேர் ஏழைகளின் குழுவில் சேர்க்கப்படுவர்' என்று சுட்டிக்காட்டுகிறது.
இந்த வறுமை நிலைக்கும் மேலாக, இப்போது அரிசி மற்றும் தேங்காய் பற்றாக்குறை மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வு மூலம் வேகமாக வளர்ந்து வரும் சமூக கொந்தளிப்பு நிலை பற்றி செய்தித்தாள் எச்சரிக்கிறது. இந்த நிலைமைக்கு கடந்த கால அரசாங்கங்கள் அதிக பொறுப்பாளிகள் என்று கூறி, திசாநாயக்க அரசாங்கத்துக்கு மன்னிப்பு கொடுக்கும் மிரர், அரசாங்கம் ஒரு தொகை வாக்குறுதிகளை அளித்ததால் இந்த நிலைமை மோசமடைந்துள்ளது என்று காட்டுகிறது.
ஐலண்ட் செய்தித்தாள், வரக்கூடிய ஆபத்தைப் பற்றி பின்வருமாறு வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளது: '2022 மே மாதத்தில் நாம் கண்டதைப் போன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்படும் சாத்தியக்கூறு உள்ளது என்பதை புறக்கணிக்கக்கூடாது என்பதை தே.ம.ச. நினைவில் கொள்ள வேண்டும். நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தபோதும், மூன்று வருடங்களுக்கும் குறைவான காலத்தில் அது பதவி விலக வேண்டியதாயிற்று. இது யாருக்கும் நடக்கக்கூடிய ஒன்று.'
ஒரு வெகுஜனப் போராட்டத்தைப் பற்றி முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் அச்சத்தை பிரதிபலிக்கும் இந்த எச்சரிக்கைகள் குறித்து, தொழிலாளர் வர்க்கம் கடும் அவதானத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றி இந்த ஊடகங்களுக்கு கவலை கிடையாது. மாறாக முதலாளித்துவ வர்க்கத்தின் அமைப்பைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கம் தன்பக்கத்தில் தயார்நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தையே இவை சுட்டிக்காட்டுகின்றன.
2023 மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியபோது, அதன் சிரேஷ்ட அதிகாரி பீட்டர் ப்ரூயர் கூறியதைப் போல, அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து 'இலங்கையில் ஒரு மூர்க்கத்தனமான பரிசோதனை' நடத்துவதாலேயே உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிலைமைகள் அதிகரித்திருக்கின்றன. மிரர் அல்லது ஐலண்ட் பத்திரிகைகள், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமல் இருப்பது மறதியால் அல்ல, மாறாக அந்த கடுமையான திட்டங்களை அவை அனுமதிப்பதாலேயே ஆகும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஆளும் வர்க்கமும், அதன் தேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் திசாநாயக்க அரசாங்கமும், சமூகக் கொந்தளிப்பு நிலைமையைத் தவிர்க்க முடியாது என்பதை அறிவார்கள். அரசாங்கத்தால் செய்யக்கூடியது, தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஏழைகளின் போராட்டங்களை அடக்கி, எதேச்சதிகார ஆட்சிக்கு மாறுவது மட்டுமே.
பெப்ரவரி 7 அன்று இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் கூடியிருந்த பெரும் செல்வந்த வணிகர்கள் முன் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க, 'இலங்கை மீண்டும் மீள்வதற்கான ஒரே நடைமுறை வழி, சர்வதேச நாணய நிதியம் ஆதரவு அளிக்கும் பாதைதான்' என்று வலியுறுத்தினார் என மிரர் தெரிவித்துள்ளது. திசாநாயக்கின் வார்த்தைகளே இவை: 'ஒன்று, நாம் இந்த அடித்தளத்துடன் வீழ்ச்சியடையலாம், அல்லது இந்த [சர்வதேச நாணய நிதியத்தின்] அடித்தளத்தின் மீது வலுவாக எழுந்து, ஒரு பலம்வாய்ந்த அடித்தளத்தின் மீது நம் பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம்.' அவர் இங்கே குறிப்பிடுவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது பற்றியே ஆகும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுகோல்களில், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அரசாங்க வருவாயை 15.1 சதவீதம் வரை உயர்த்துவது, வரவுசெலவுத் திட்டத்தின் முதன்மைக் கணக்கில் 2.3 வீத உபரி வருமானத்தைக் காண்பிப்பது, அரசாங்க செலவினங்களை 13.8 சதவீதம் வரை கட்டுப்படுத்துவது மற்றும் கடன் வாங்கும் வரம்புக்குள் இருத்துவதும் அடங்கும் என திசாநாயக்க கூறினார்.
உண்மையில், உழைக்கும் மக்களுக்கு மிகவும் கடுமையான நிலைமைகளை உருவாக்குகினால் மட்டுமே இந்த எண்ணிக்கைகளை செயல்படுத்த முடியும்: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் மற்றும் தற்போதைய திசாநாயக்க நிர்வாகமும் அறிவித்துள்ளபடி, அரச தொழில்களில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கைள குறைப்பது, பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குவது அல்லது வணிகமயமாக்கவது மற்றும் அதன் மூலம் ஐந்து லட்சம் பேருக்கு மேல் உள்ள தொழிலாளர்களின் வேலைகளை பெரும் அளவில் அழிப்பது, மேலும் வரிகளை உயர்த்துவது, சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட சமூக சேவைகளை விரைவாக கைவிடுவது போன்றவை முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்த தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), முதலாளித்துவ முறைமையின் தற்போதைய ஆழ்ந்த நெருக்கடியின் பலிகடாவாக தங்களை ஆக்கிக்கொள்வதற்கு எதிராக, தொழிலாளர் வர்க்கமானது கிராமப்புற ஏழைகளின் ஆதரவைப் பெற்று தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாற்று வேலைத் திட்டத்திற்காகப் போராட அழைப்பு விடுத்தது. திசாநாயக்கின் ஜே.வி.பி./தே.ம.ச. பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் பகுப்பாய்வு செய்து, உலக சோசலிச வலைத் தளத்தில் நாங்கள் பின்வருமாறு எழுதினோம்:
'ஜே.வி.பி./தே.ம.ச. பெற்ற வாக்குகளின் அளவு நாடகபாணியல் அதிகரித்திருப்பது இரண்டு ஒன்றோடொன்று இணைந்த நிகழ்வுப் போக்குகளின் விளைவாகவே ஆகும் —ஒருபுறம், மேலும் மோசமடைந்து கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் காரணமாக மக்களின் பரந்த பிரிவுகளின் வெறுப்பு மற்றும் கோபமும் அதிகரித்துள்ளமை; மறுபுறம், 2022 மக்கள் எழுச்சி ஒரு புதுப்பிப்பைப் பெற்று புரட்சிகர பாதையை எடுப்பதைத் தடுப்பதற்கான ஒரு ஆயுதமாக ஜே.வி.பி./தே.ம.ச. கட்சியைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய திறனைக் கருத்தில் கொண்டு ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் அதற்கு குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கியமை.'
நாங்கள் மேலும் பின்வருமாறு கூறினோம்:
'அதுமட்டுமன்றி, வாழ்க்கை நிலைமைகள் மோசமடையும் போது, திசாநாயக்கின் வாக்குறுதிகள் ஒரு பொய் கட்டுக்கதை என்பதை உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ளும் நிலையில், தீவின் பிற பகுதிகளில் ஜே.வி.பி./தே.ம.ச. அரசுக்கு இருந்த பரவலான ஆதரவு விரைவில் ஆவியாகிவிடும். விக்ரமசிங்கைப் போலவே ஜே.வி.பி./தே.ம.ச.யும் தவிர்க்க முடியாத வகையில் எழுச்சியடையும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளை அடக்குவதற்காக பொலிஸ்-அரசு தாக்குதல்களை கையிலெடுக்க உந்தப்படும் என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கிறது. ஜே.வி.பி./தே.ம.ச., தனது அரசாங்கத்தின் கீழ் அடக்குமுறை நடவடிக்கைகளுக்குத் தயாராகும் வகையில், ஓய்வுபெற்ற இராணுவ முப்படையினர் மற்றும் பொலோஸ் அதிகாரிகளின் ஒரு குழுவை உருவாக்கி வருகிறது.'
உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வு நிரூபிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 4 அன்று சுதந்திர தின விழாவில் உரையாற்றிய திசாநாயக்க, அனைத்து உழைக்கும் மக்களும் தனது அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து 'தாய்நாட்டைக்” கட்டியெழுப்புவதில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்தினார். தாய்நாடு என்ற வார்த்தையால் அலங்கரிக்கப்பட்டிருப்பது முதலாளித்துவ முறைமையே ஆகும். தங்கள் உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள், தாய்நாட்ட கட்டியெழுப்புவதற்கு எதிரானவர்கள் என அடையாளப்படுத்தி, அரசாங்கம் அவர்களை அடக்குவதற்குத் தயங்காது. 1988-1990 காலகட்டத்தில், 'இந்திய ஏகாதிபத்தியவாதிகளின் படையெடுப்பிலிருந்து தாய்நாட்டைக் காப்பாற்றுவது' என்ற தங்களுடைய பாசிசப் பிரச்சாரத்தில் சேர்ந்துகொள்ளும்படி தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளை ஜே.வி.பி. கட்டாயப்படுத்தியதுடன், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களையும் அரசியல் எதிரிகளையும் படுகொலை செய்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நெருக்கடி மேலும் கடுமையாகும் போது, தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாளர் வர்க்கம் எழுச்சிபெற்றால், ஆளும் வர்க்கங்கள் எதேச்சதிகார மற்றும் பாசிச ஆட்சி வழிமுறைகளுக்குத் திரும்பும். இது உலக ரீதியில் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் போக்காகும். அமெரிக்காவில் அதிகாரத்திற்கு வந்த பாசிச ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறிப்பாக அந்நாட்டில் புலம்பெயர்ந்தவர்களை இலக்காகக் கொண்டு தொடங்கியுள்ள கொடூரமான தாக்குதல்கள், முதலாளித்துவ நெருக்கடிக்கு ஆளும் வர்க்கங்களின் பதிலைப் பிரதிபலிக்கின்றன.
தொழிலாளர் வர்க்கம் தங்கள் மூலோபாயத்தை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் ஒரு பகுதியாக, அனைத்து முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் அவற்றின் தொழிற்சங்கங்களில் இருந்தும் சுயாதீனமாக, ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும், வேலைத் தளங்களிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் அயல்புறங்களிலும், அதே போல் கிராமப்புற ஏழைகள் மத்தியிலும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை உருவாக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.
இந்த நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை கட்டியெழுப்பவேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது. முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துவதற்காக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை உருவாக்குவதன் பேரில், கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்டிக்கொள்வதற்காக, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதே இதன் நோக்கம் ஆகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளை மட்டும் நாம் கருத்தில் கொண்டாலும், ஜே.வி.பி.யுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவத்தினரும் செய்தது என்ன? அவர்கள், தொழிலாளர்களின் போராட்டத்தை கலைத்துவிட்டு, இப்போது அரசாங்கம் முன்னெடுக்கும் தாக்குதல்களை அனுமதித்துள்ளதுடன் அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறி அதை முழுமையாக ஆதரிக்கின்றனர்.
அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் மிகவும் வெட்கக்கேடான வகிபாகத்தை போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பிற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் முதலாளித்துவக் கட்சிகள் ஆற்றுகின்றன. திசாநாயக்கவின் அடக்குமுறை வலதுசாரி அரசாங்கத்தை 'மக்கள் அரசாங்கம்' என்று முத்திரை குத்திய முன்னிலை சோசலிசக் கட்சி, உழைக்கும் மக்களை நிவாரணத்திற்காக கெஞ்சிநிற்கும் வேலைத்திட்டத்திற்கு அடிபணிய வைக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
ஐக்கிய மக்க்கள் சக்தி உட்பட மீதமுள்ள ஊழல்மிக்க கட்சிகள், அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை முழுமையாக ஆதரிக்கும் அதே வேளை, வளர்ந்து வரும் வெகுஜன வெறுப்பையும் முதலாளித்துவ அமைப்பின் சொந்த பிரச்சாரத்திற்கு சுரண்டிக்கொள்வதற்கான மலட்டு விமர்சனங்களை முன்வைக்கின்றன.
தொழிலாள வர்க்கம் இந்தக் கட்சிகளில் இருந்து பிரிந்து, சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராட அதன் சுயாதீனமான பலத்தைத் அணிதிரட்டப் போராடும் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதில் இணைய வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.
மேலும் படிக்க
- இலங்கை ஜனாதிபதி பெருவணிக மன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதாக உறுதியளிக்கிறார்
- இலங்கையில் சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்திற்கு எதிரான IYSSE விரிவுரைக்கு பேராதனைப் பல்கலைக்கழகம் தடை விதித்ததை கண்டனம் செய்!
- இலங்கையில் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீதான பொலிஸ் தாக்குதலை கண்டனம் செய்! கைது செய்யப்பட்ட நான்கு ஆசிரியர்களை விடுதலை செய்!