அமெரிக்காவின் வரிக்கு சீனா பதிலடி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதன் அனைத்து ஏற்றுமதிகள் மீதும் 10 சதவீத சுங்கவரி விதித்திருப்பதற்கு எதிராக சீனா உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது, இதில் பல அமெரிக்க ஏற்றுமதிகள் மீதான வரிவிதிப்பு உயர்வுகள், கூகுள் மீதான ஒரு விசாரணை மற்றும் டங்ஸ்டன் (tungsten - கனிமவேதியியல் தனிமம்) சம்பந்தப்பட்ட பொருட்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவை உட்பட ஒரு வரிசையான நடவடிக்கைகள் உள்ளன.

அது அமெரிக்க நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (liquified natural gas) ஏற்றுமதிகள் மீது 15 சதவீத கட்டாய வரியும், எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது 10 சதவீத சுங்கவரியையும் விதித்துள்ளது.

நவம்பர் 10, 2021 அன்று கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் உள்ள ஓக்லாந்து துறைமுக கப்பல் முனையத்திற்குள் நுழைய டிரக்குகள் வரிசையாக நிற்கும்போது.  [AP Photo/Noah Berger]

பைனான்சியல் டைம்ஸின் ஒரு அறிக்கையின்படி, கூகிள் மீதான போட்டி விசாரணை அதன் ஆண்ட்ராய்டு இயக்க முறைமை மற்றும் அதன் நடைமுறைகள் மென்பொருளைப் பயன்படுத்தும் சீன தொலைபேசி தயாரிப்பாளர்களுக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்கிறதா என்பதில் கவனம் செலுத்தும்.

அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) சிப் தயாரிப்பாளரான என்விடியா (Nvidia) மீது நம்பிக்கைக்கு எதிரான விசாரணையைத் தொடங்க டிசம்பரில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து கூகிள் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிப் தயாரிப்பாளரான இன்டெல் மீதான விசாரணையும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

“25 அரிய உலோகப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்” மீதான கட்டுப்பாடுகளுடன் சேர்த்து, டங்ஸ்டன் (tungsten) மீது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனா உலகின் மிகப்பெரிய டங்ஸ்டன் உற்பத்தியாளராக உள்ளது, இது உலகச் சந்தையில் 80 சதவீதத்தை வழங்குகிறது. டங்ஸ்டன் அதன் உயர் அடர்த்தி மற்றும் உருகுநிலைக்காக மதிப்பிடப்படுகிறது மற்றும் கவச-துளையிடும் ஏவுகணைகளின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.

சீனாவின் நிதி அமைச்சகம், பிப்ரவரி 4 முதல் நடைமுறைக்கு வந்த அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கையில், அவை உலக வர்த்தக அமைப்பின் விதிகளை கடுமையாக மீறியிருப்பதாக ஒரு மேலோட்டமான அறிக்கையை வெளியிட்டது.

“இது அதன் சொந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவாதது மட்டுமல்லாது, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சாதாரண பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் பதில் ஒப்பீட்டளவில் மௌனமாகவும், கணக்கிடப்பட்டதாகவும் குணாம்சப்படுத்தப்பட்டுள்ளது. திரவ இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரியை இலக்கு வைப்பதன் மூலம் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அமெரிக்கா கடந்த ஆண்டு சீனாவுக்கு 6 சதவீத திரவ இயற்கை எரிவாயுவை மட்டுமே கொடுத்துள்ளது; சீனா அமெரிக்காவிடமிருந்து நிலக்கரியை சிறிதளவே இறக்குமதி செய்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிலான் லோ ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த கருத்துக்கள், சீனாவின் நகர்வுகள் பற்றிய பொதுவான மதிப்பீட்டை சுருக்கமாகக் கூறியிருக்கிறது.

இந்த பதிலடியானது “கணக்கிடப்பட்டதாகவும் மற்றும் பொருத்தமானதாகவும்” இருக்கின்றன என்று விவரித்த அவர், “மேலதிக பதில் கொடுக்கப்படும் விதத்தில் துல்லியமாக எதிர்வினையாற்றாமல், பெய்ஜிங் ஏதோவொன்று செய்வதாக் காட்டிக்கொள்ள இது அனுமதிக்கிறது,” என்றார்.

மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட ட்ரம்ப் அச்சுறுத்தும் 25 சதவீத சுங்கவரி உயர்வுகளை 30 நாட்கள் நிறுத்தி வைத்ததை சீனத் தலைமை கருத்தில் கொண்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, மேலும் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு இடையிலான முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட தொலைபேசி அழைப்பில் இருந்து அதேபோன்ற ஏதோவொன்று வெளிப்படும் என்று நம்பலாம், அது இந்த வார இறுதியில் நடக்கக்கூடும்.

ஆனால் மோர்கன் ஸ்டான்லியின் தலைமை சீன பொருளாதார நிபுணர் ராபின் ஜிங்கின் கூற்றுப்படி, பெருமளவில் அது நடப்பதற்கான வாய்ப்பு இல்லை.

“சுங்கவரிகளைத் தவிர்ப்பதற்கான [ஒரு] உடன்பாட்டின் சாத்தியக்கூறு மட்டுப்படுத்தப்பட்டதாகவே தோன்றுகிறது,” என்று அவர் பைனான்சியல் டைம்ஸ் க்கு தெரிவித்துள்ளார். “தீவிரப்பாட்டைக் குறைப்பதற்கான பாதைகள்... இரு தரப்பிலிருந்தும் குறிப்பிடத்தக்க சமரசங்கள் தேவைப்படும்,” என்றார்.

எவ்வாறாயினும், ஒவ்வொரு நாளும் அவர் என்ன செய்வார் என்பது ட்ரம்ப் உட்பட யாருக்கும் தெரியாது என்பதால், ஒரு ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது, மேலும் ட்ரம்ப் அதை ஒரு வெற்றியாக அறிவிப்பார்.

சீன ஏற்றுமதிகள் மீதான சுங்கவரியில் ஒட்டுமொத்தமாக 10 சதவீத உயர்வு – மற்றும் 60 சதவீத வரிவிதிப்பு குறித்த அவரது முந்தைய அச்சுறுத்தலை ட்ரம்ப் பின்பற்றுவாரானால் – மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அதன் மிகக் குறைந்த வளர்ச்சியை அடைந்து வரும் மற்றும் ஏற்றுமதி வருவாயைச் சார்ந்துள்ள சீனப் பொருளாதாரத்தின் மீது நிச்சயமாக ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால் ட்ரம்ப் எதிர்பார்ப்பது போல் இது பெரிதாக இருக்காது, ஏனென்றால் அவரது முதல் நிர்வாகத்திலிருந்தே சீன நிறுவனங்கள் அமெரிக்க நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கும் புதிய சந்தைகளை வளர்ப்பதற்கும் ஒரு வழியாக தங்கள் செயல்பாடுகளில் சிலவற்றை மற்ற நாடுகளுக்கு அனுப்பி வருகின்றன.

இதன் விளைவாக, ரோடியம் குழுமத்தின் அறிக்கையின்படி, அமெரிக்க இறக்குமதிகளில் சீனாவின் நேரடி பங்கு 2017 முதல் 2023 வரை எட்டு சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. சில சீன உற்பத்தி வியட்நாம், மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு மாற்றப்பட்டு பின்னர் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஐஎன்ஜி (ING) நிதியியல் நிறுவனத்தில் இருக்கும் சீனாவின் சிறந்த பொருளாதார நிபுணர் லின் சாங் பைனான்சியல் டைம்ஸ் க்கு கூறுகையில், அமெரிக்க சுங்கவரிகள் மட்டுப்படுத்தப்பட்ட விளைவைக் கொண்டிருக்கும், ஏனென்றால் “முதல் வர்த்தகப் போரின் விளைவாக அமெரிக்காவிற்கான விலை-தூண்டுதல் ஏற்படுத்தக்கூடிய ஏற்றுமதிகள் ஏற்கனவே திருப்பி வேறுபக்கம் விடப்பட்டுள்ளன,” என்றார்.

ஆனால் இதன்மூலம் அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறைக்கப்படும் என்ற உட்குறிப்பை தரவில்லை. இது அவற்றின் விரிவாக்கத்திற்கான சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது, ஏனெனில் சீனாவை எதிர்த்துப் போராடுவதற்கு அது கணிசமான பற்றாக்குறையைக் கொண்டுள்ள குறைந்த செலவு ஏற்றுமதியாளர்களை இலக்கு கொள்ள வேண்டும்.

மெக்ஸிகோ மற்றும் கனடாவுக்கு எதிரான வரிவிதிப்புகளை கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டதில் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், ஃபெண்டானைல் (fentanyl) ஓபியாய்டு மருந்துகளின் சட்டவிரோத ஏற்றுமதிக்கு எதிராக அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அடிப்படையில், அந்த மோதல் ஒருபோதும் தீர்ந்தபாடில்லை.

கனேடிய பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ உடனான அவரது விவாதங்களைத் தொடர்ந்து, ட்ரம்ப் தனது வர்த்தகப் போர் நடவடிக்கையின் மையத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு திரும்பினார், விவாதங்கள் “கனடாவுடன் ஒரு இறுதி பொருளாதார உடன்படிக்கையை கட்டமைக்க முடியுமா” என்பதை ஆராய்வதை நோக்கி நகரும் என்று கூறினார்.

கனடா “மிகவும் கடுமையானது” என்றும் அமெரிக்காவை சரியாக நடத்தவில்லை என்றும் அவர் தொடர்ந்து கண்டித்து வருகிறார்.

அவரது நடவடிக்கைகளின் நோக்கம் சட்டவிரோத போதைப்பொருட்களின் பாய்ச்சலை நிறுத்துவதோ அல்லது “சட்டவிரோத” புலம்பெயர்ந்தவர்கள் என்றழைக்கப்படுபவர்களைத் தடுப்பதோ அல்ல, இவை இரண்டும் கனடாவிலிருந்து வரவில்லை, மாறாகப் போட்டியாளர்களான சீனா மற்றும் ஐரோப்பிய சக்திகள்மீது அதன் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த அமெரிக்காவை சாத்தியமான சிறந்த நிலையில் வைக்க அமெரிக்காவுக்கு அடிபணிய வைக்கும் ஒரு வட அமெரிக்க அணியைப் பலப்படுத்துவதாகும்.

கனடா 51 வது மாநிலமாக ஆவது குறித்த ட்ரம்பின் தொடர்ச்சியான குறிப்புகளும், அத்துடன் அவசியமானால் பலவந்தமாகக் கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கான அச்சுறுத்தல்களும், மற்றும் கால்வாய் தொடர்பாகப் பனாமா மீதான தாக்குதல்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த அடிப்படை முனைவின் வெளிப்பாடுகளாகும்.

வரிவிதிப்புகளின் அச்சுறுத்தலைப் பொறுத்த வரையில், எதுவும் தீர்க்கப்படவில்லை என்று கனடா வர்த்தக சபை எச்சரித்துள்ளது, மேலும் வரிவிதிப்புகள் இன்னும் மேசையில் இருப்பதால் வர்த்தகங்கள் இக்கட்டான நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எல்லை கடந்து, அமெரிக்க வாகன உற்பத்தித் துறையும், அவை திணிக்கவிருக்கும் பெரும் செலவு அதிகரிப்பு காரணமாக சுங்கவரிகளின் வாய்ப்பு குறித்து பீதியுடன் எதிர்வினையாற்றியுள்ளது, அதேபோல் நிச்சயமற்ற தன்மையால் பீடிக்கப்பட்டிருக்கிறது. பெரிய மூன்று (The Big Three) நிறுவனங்கள் மட்டுமல்ல, அவைகளுக்கு உதிரிப்பாகங்களை வழங்கும் பல நிறுவனங்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன.

வாகன வினியோகஸ்தர்கள் சங்கமான MEMA இன் தலைமை நிர்வாகி பில் லாங், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் கூறினார்: “வரிவிதிப்புகளின் அச்சுறுத்தலும் கூட பேரழிவுகரமானதாக இருக்கும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது.” ஒரு பெரிய விநியோகிப்பாளர்அதிக கட்டணங்களால் முடங்கிப்போனாலும் கூட, அது முழு தொழிற்துறையையும் முடக்கிவிடும் என்று அவர் கூறினார்.

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் வரிவிதிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிட தயாராகி வருகிறது, ஏனெனில் டிரம்ப் அது தனது பார்வையில் இருப்பதை தெளிவுபடுத்தியுள்ளார், ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவை நடத்துவதை ஒரு “கொடூரம்” என்று மீண்டும் மீண்டும் விவரித்துள்ளார்.

“ஐரோப்பிய ஒன்றியத்தில் இது நிச்சயமாக நடக்கும்”, “அவர்கள் உண்மையில் எங்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.” என்று ட்ரம்ப் தனது கட்டண திட்டங்களைப் பற்றி கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் வரிவிதிப்புப் போரை மட்டுமல்ல, மாறாகக் கிரீன்லாந்தை இணைத்துக் கொள்வதற்கான அமெரிக்க அச்சுறுத்தலையும் சமாளிக்க வேண்டும், இது முதலில் ஒரு நகைச்சுவையாகக் கருதப்பட்டது, ஆனால் இப்போது மற்ற ஏகாதிபத்திய சக்திகள் ஒரு பேராசைமிக்க அமெரிக்காவை வெறியாட்டத்தில் எதிர்கொள்கின்ற நிலையில் இது மிகவும் தீவிரமாகக் கருதப்படுகிறது.