முன்னோக்கு

உக்ரேனின் கனிம வளங்களை கைப்பற்றுவதற்கான ட்ரம்பின் திட்டமும் அதிகரித்து வரும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய மோதலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை செப்டம்பர் 27, 2024 அன்று நியூ யோர்க்கில் உள்ள ட்ரம்ப் டவரில் சந்திக்கிரார். [AP Photo/Julia Demaree Nikhinson]

உக்ரேன் போர் மற்றும் இருதரப்பு உறவுகளை மீட்டெடுப்பது குறித்து விவாதிக்க அமெரிக்க மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவில் சந்தித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தைகளுக்கும் “சமாதானத்தை” அடைவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாறாக, அவை மனிதகுலத்தை அணு ஆயுத அழிவால் அச்சுறுத்தும் உலகளாவிய மோதலை ஒரு புதிய கட்டத்துக்கு எடுத்து செல்லுகிறது.

கடந்த வாரம், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஒரு ஒப்பந்தத்தை முன்மொழிவதற்காக கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்டை (Scott Bessent) கியேவிற்கு அனுப்பியபோது, ட்ரம்ப் நிர்வாகத்தின் உண்மையான பணயங்களை எடுத்துக்காட்டியது : அமெரிக்காவின் கடந்த கால மற்றும் எதிர்கால ஆதரவிற்கு ஈடாக, உக்ரேன் அதன் அரிய பூமி தனிமங்கள், லித்தியம் மற்றும் டைட்டானியம் இருப்புக்களில் பாதியை (அரை ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள) அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த ஆதாரவளங்களில் பெரும்பாலானவை ரஷ்ய ஆக்கிரமிப்பு பிராந்தியத்தில் இருப்பதால், ட்ரம்புக்கு மாஸ்கோவுடன் ஒரு உடன்படிக்கை தேவைப்படுகிறது.

அத்தகைய ஒரு உடன்பாடு ஏற்படுமா என்பது நிச்சயமில்லை. இராணுவ விரிவாக்கம் மற்றும் பொருளாதாரத் தடைகள் குறித்த அச்சுறுத்தல்களுடன் வாஷிங்டன் பலமுறை கலவையான சலுகைகளை வழங்கி வருகிறது. மத்திய கிழக்கில் சலுகைகளுக்காக ட்ரம்ப் புட்டினுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இப்பிராந்தியத்தில் அமெரிக்கா, காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றவும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கவும் தயாராகி வரும் அதே வேளையில், அமெரிக்க போர் உந்துதலின் மைய இலக்கான சீனாவுடனான ரஷ்யாவின் கூட்டணியை பலவீனப்படுத்தவும் முயன்று வருகிறது. பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் கடந்த வாரம் கூறியதைப் போல, “பசிபிக்கில் இராணுவ மோதல்களில் ஈடுபடுவதிலிருந்து சீனாவைத் தடுப்பதற்கு அமெரிக்கா முன்னுரிமை அளித்து வருகிறது.”

ஆரம்பத்தில் கனிமவள ஒப்பந்தத்தை முன்மொழிந்த ஜெலென்ஸ்கி, ட்ரம்பின் மாஃபியா பாணி கோரிக்கையை ஏற்க தயங்கினார். ஏனெனில், இது உக்ரேனை ஒரு அமெரிக்க காலனியின் மட்டத்திற்கு திறம்பட குறைக்கும். இதற்கு, தங்கள் செலவில் புட்டினுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிப்பதால், சீற்றமடைந்துள்ள ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவையும் ட்ரம்ப் நம்பியுள்ளார்.

“எனது கணக்கீடுகளின்படி, நாங்கள் உக்ரேனுக்கு 134 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளோம். இது, எங்களை மிகப்பெரிய சர்வதேச நன்கொடையாளராக ஆக்குகிறது” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் (Kaja Kallas) ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். ட்ரம்பின் போக்கைக் குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்பது குறித்து கல்லாஸ் அப்பட்டமாக பேசினார்: “உக்ரேனிய பிராந்தியங்களைப் பெறுவது ரஷ்யாவுக்கு சாத்தியமில்லை, அமெரிக்கா இயற்கை வளங்களைப் பெறுவது மற்றும் அமைதிகாப்பதற்கான செலவை ஐரோப்பா செலுத்துவதும் சாத்தியமில்லை. அது வேலை செய்யாது. நாம் இப்போது நமது பலத்தை அணிதிரட்ட வேண்டும்” என்று அவர் ஜேர்மன் செய்தி நிகழ்ச்சியான தாகெஸ்சாவ் (Tagesschau) க்கு தெரிவித்தார்.

இந்த சர்ச்சை – “ஜனநாயகம்” அல்லது “மேற்கத்திய மதிப்புகள்” பற்றிய அக்கறைகள் அல்ல – அமெரிக்காவிற்கும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பிளவின் வேராக உள்ளது. ஜனாதிபதி ஜோ பைடெனின் கீழ், அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரஷ்யாவிற்கு எதிரான தங்கள் போரை ஒருங்கிணைத்தன. இப்போது ஐரோப்பிய சக்திகள் ட்ரம்ப்பினால் தங்கள் கொள்ளைப் பொருட்கள் பறிக்கப்படும் என்று அஞ்சுகின்றன.

ட்ரம்ப் நிர்வாகத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் அதன் ஐரோப்பிய “கூட்டாளிகள்” மீதான, அதன் அவமதிப்பை தெளிவாகக் காட்டியுள்ளன. முதலில், ஐரோப்பாவிற்கான அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதிமொழிகள் குறித்து பாதுகாப்பு செயலாளர் ஹெக்ஸெத் கேள்வி எழுப்பியதுடன், போருக்கு முந்தைய எல்லைகளை மீட்டெடுப்பது மற்றும் உக்ரேனுக்கு நேட்டோ அங்கத்துவத்தை வழங்குவது ஆகிய நேட்டோவின் முந்தைய கோரிக்கைகளை கைவிடும் வகையில், ரஷ்யாவுடன் ஒரு சமாதான உடன்படிக்கையை முன்மொழிந்தார்.

இதற்குப் பின்னர், ட்ரம்ப் தனது ஐரோப்பிய கூட்டாளிகளுக்கு தெரிவிக்காமல் புட்டினுடன் 90 நிமிட தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். இருவரும் வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவிற்கு பரஸ்பர விஜயங்களை மேற்கொள்வதற்கும், ஜி7 இல் ரஷ்யாவை மீண்டும் சேர்ப்பது குறித்தும் விவாதித்தனர். இது, உக்ரேனையும் ஐரோப்பாவையும் விலக்கி, சவூதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான தற்போதைய பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது.

மூனிச் பாதுகாப்பு மாநாட்டில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக ஓர் எரியூட்டும் உரையை வழங்கியதன் மூலம் இந்த மோதலைத் தீவிரப்படுத்தினார். “ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் அச்சுறுத்தலாக நான் கவலைப்படுவது ரஷ்யா அல்ல” என்று குறிப்பிட்ட வான்ஸ், “உள்ளிருந்து வரும் அச்சுறுத்தல் குறித்துத்தான் நான் கவலைப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பிய அரசாங்கங்கள் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதாகவும், ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி (AfD) போன்ற தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கு எதிராக ஒரு “தடுப்பு சுவரைக்” கட்டுவதால், தங்கள் சொந்த மக்களைப் பற்றி அவை பயப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பின்னர் அவர் சான்சிலர் பதவிக்கான AfD வேட்பாளர் ஆலிஸ் வீடலை (Alice Weidel) தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.

இதற்கு ஐரோப்பிய ஊடகங்கள் ஆவேசத்துடன் எதிர்வினையாற்றின. மூனிச் மாநாடு “இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட புவிசார் அரசியல் ஒழுங்கமைப்பின் முடிவை” சமிக்கை செய்வதாக Der Spiegel அறிவித்தது. கார்டியன் (Guardian), டை ஸியெட் (Die Zeit) மற்றும் தி எகனாமிஸ்ட் (The Economist) ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் ட்ரம்பின் கொள்கைகளை ஐரோப்பா மீதான ஒரு “வன்முறை” என்றும் “தாக்குதல்” என்றும் விவரித்ததுடன், “அட்லாண்டிக் கடந்த கூட்டணியின் பொறிவை” அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டின.

“ஐரோப்பாவில் பாதுகாப்புக்கான சவால்களை” விவாதிக்க அவசரமாக ஒரு முறைசாரா உச்சி மாநாட்டைக் கூட்டியதன் மூலமாக முன்னணி ஐரோப்பிய சக்திகள் இதற்கு விடையிறுத்தன. பாரிசில் திங்களன்று இரவு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, போலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் அரசு தலைவர்களும், ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா (António Costa), ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயென் (Ursula von der Leyen) மற்றும் நேட்டோ பொதுச் செயலர் மார்க் ருட்டே (Mark Rutte) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ட்ரம்புக்கான ஐரோப்பிய எதிர்வினையானது, அவரது சொந்த பாசிசக் கொள்கைகளை விட குறைவான பிற்போக்குத்தனமானது அல்ல. இது மீள்ஆயுதபாணியாக்குதல், மீள்ஆயுதபாணியாக்குதல் மற்றும் மீண்டும் மீள்ஆயுதபாணியாக்குதல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஐரோப்பா அதன் இராணுவத்திற்கு குறைவாக முதலீடு செய்துள்ளது. இப்போது இந்த “பற்றாக்குறையை” ஈடுசெய்ய வேண்டியுள்ளது என்ற தொடர்ச்சியான அறைகூவல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 முதல் 5 சதவீதமாக இராணுவ செலவினங்களை அதிகரிப்பது உட்பட, தற்போதைய பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்களை திறம்பட இரட்டிப்பாக்குவது அல்லது மூன்று மடங்காக அதிகரிப்பது பற்றிய பேச்சு உள்ளது.

இத்தகைய பெரும் தொகைகள், தொழிலாள வர்க்கத்தின் மீதான மிருகத்தனமான தாக்குதல்கள் மூலமாக மட்டுமே கறந்தெடுக்கப்பட முடியும். இது, ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதையும் சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதையும் கோருகிறது.

தனது தாகெஸ்சாவ் நேர்காணலில், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் கல்லாஸ், ரஷ்யாவின் இராணுவத் தோல்வியை உறுதி செய்வதற்காக, உக்ரேனில் போரை அதிகரிக்க வேண்டும் என்று வெளிப்படையாக வாதிட்டார். இந்த இலக்குக்கு உக்ரேனிய இராணுவம் சோர்வடைந்து விட்டதால், ஒரு பாரிய நேட்டோ தலையீடு அவசியமாக தேவைப்படுகிறது. “ஒரு நாடு சரியான பாதையில் செல்ல வேண்டுமானால், அது அதன் கடைசி காலனித்துவ போரில் தோல்வியடைய வேண்டும்,” என்று அவர் கூறினார். மேலும், “ரஷ்யா அதன் கடைசி காலனித்துவ போரில் ஒருபோதும் தோல்வியடையவில்லை. எனவே, அது நடப்பதை உறுதி செய்வது நம் கையில்தான் உள்ளது. அதற்கு முன்பு நாங்கள் அவர்களுடன் வழக்கம் போல் வியாபாரம் செய்ய முடியாது” என்று அவர் தெரிவித்தார்.

விரைவில் ட்ரம்பை சந்திக்க உள்ள பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர், “சமாதான” உடன்படிக்கை என்றழைக்கப்படுவதன் பாகமாக, உக்ரேனுக்கு பிரிட்டிஷ் துருப்புகளை அனுப்ப ஏற்கனவே முன்வந்துள்ளார். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பல மாதங்களுக்கு முன்னர் இதேபோன்ற முன்மொழிவை முன்வைத்தார். டெய்லி டெலிகிராப்பில் (Daily Telegraph), ஸ்டார்மர் ஐரோப்பிய நாடுகள் “அவற்றின் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க வேண்டும் மற்றும் நேட்டோவில் ஒரு பெரிய பாத்திரம் வகிக்க வேண்டும்” என்றும் கோரினார். அவர் தன்னை அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான ஒரு இணைப்பாக பார்க்கிறார்.

அட்லாண்டிக் கடல் கடந்த சக்திகளுக்கு இடையிலான கூர்மையான மோதல்களுக்கான ஆழமான காரணம் உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியாகும். ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான பதட்டங்களை —இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்றிருந்த பதட்டங்கள்— கட்டுப்படுத்தவும், பனிப்போரின் போது சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் ஒரு பொதுவான முன்னணியை உருவாக்கவும் 1949 இல் நேட்டோ ஸ்தாபிக்கப்பட்டது. உள்நாட்டுப் பகைமைகளில் இருந்து ஒருபோதும் விடுபடவில்லை என்றாலும், நேட்டோ அதன் உறுப்பு நாடுகளிடையே நேரடி இராணுவ மோதலை பெரும்பாலும் தவிர்த்து வந்தது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேட்டோவும் அதன் உறுப்பு நாடுகளும் ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா உட்பட தொடர்ச்சியான ஏகாதிபத்திய போர்களை நடத்தி வந்தன. ஆனால் இப்போது, நேட்டோவே உடைந்து கொண்டிருக்கிறது. “விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு” என்றழைக்கப்படுவது சரிந்து வருகிறது. இது, காட்டின் சட்டத்திற்கும் (law of the jungle) அப்பட்டமான பலப்பிரயோகத்திற்கும் வழிவிட்டு வருகிறது.

[காட்டின் சட்டம் : வலிமையானவர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்வார்கள், பலவீனமானவர்கள் இதனை அனுபவிப்பதற்கு தள்ளப்படுவார்கள். ]

ட்ரம்ப் நிர்வாகம் பனாமா, கிரீன்லாந்து மற்றும் கனடா மீது உரிமை கோருகிறது என்பதோடு, பலாத்கார அச்சுறுத்தலில் இருந்து விலகிச் செல்லவில்லை. ஐரோப்பியர்கள் தங்களை “போருக்கு பொருத்தமானவர்களாக” ஆக்கிக் கொள்வதன் மூலமாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

முதல் உலகப் போரின் போது, வி.ஐ. லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் குறித்த தனது உன்னதமான பகுப்பாய்வில் அவர் இந்த செயல்முறையை பின்வருமாறு விளக்கினார்:

“ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான” அல்லது “அதிதீவிர-ஏகாதிபத்திய” கூட்டணிகள், அவை எந்த வடிவத்தை எடுத்தாலும், ஒரு ஏகாதிபத்திய கூட்டணிக்கு எதிரான மற்றொரு ஏகாதிபத்திய கூட்டணியாக இருந்தாலும் சரி, அல்லது அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு பொதுக் கூட்டணியாக இருந்தாலும் சரி, அவை தவிர்க்கவியலாமல் போர்களுக்கு இடையிலான காலகட்டங்களில் ஒரு “போர்நிறுத்தம்” என்பதற்கு அதிகமாக வேறொன்றுமில்லை. சமாதானக் கூட்டணிகள் போர்களுக்குக் களத்தைத் தயார் செய்கின்றன. மேலும், அவை போர்களிலிருந்து வளர்கின்றன; உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியலுக்குள் ஏகாதிபத்திய தொடர்புகள் மற்றும் உறவுகளின் ஒரே அடிப்படையில், சமாதான மற்றும் சமாதானமற்ற போராட்டம் மாற்று வடிவங்களை உருவாக்கி, ஒன்று மற்றொன்றை நிபந்தனை செய்கிறது.

இந்த இயக்கவியல் இப்போது நேட்டோவிற்குள்ளேயே விளையாடிக் கொண்டிருக்கிறது. கூர்மையடைந்து வரும் அட்லாண்டிக் கடந்த குரோதங்கள், வர்த்தகப் போர் மற்றும் இராணுவமயமாக்கத்தை நோக்கிய உலகளாவிய திருப்பம், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்புடைய தாக்குதல்கள் ஆகியவை பிரம்மாண்டமான வர்க்கப் போராட்டங்களை நிகழ்ச்சி நிரலில் நிறுத்தி வருகின்றன.

இதுவே, போருக்கு எதிரான போராட்டத்தின் புறநிலை அடிப்படையாகும். சுரண்டல் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்தை, அவற்றுக்கு காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைத்து, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு தாக்குதல் மட்டுமே போரின் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த முடியும்.