முன்னோக்கு

உக்ரேனில் மூன்று ஆண்டுகால போருக்குப் பிறகு, ஏகாதிபத்திய போர் பிரச்சாரம் பொறிந்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அக்டோபர் 11, 2022 அன்று கிழக்கு உக்ரேனின் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இனம்தெரியாத இடத்தில் இருந்து ரஷ்ய சிப்பாய்கள் உக்ரேனிய துருப்புகள் மீது பீரங்கி குண்டுகளை தீர்க்கின்றனர்.  [AP Photo/Alexei Alexandrov]

உக்ரேன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் ஆத்திரமூட்டலையும் போரை தீவிரப்படுத்துவதையும் நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்திய கதைகள், பொய்களின் மூட்டையாக அம்பலப்பட்டு வருகின்றன.

பிப்ரவரி 24, 2022 அன்று உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தபோது, நேட்டோ சக்திகளும் அவற்றுக்கு கீழ்ப்படிந்துள்ள ஊடகங்களும் ரஷ்ய படையெடுப்பை ஒரு “தூண்டுதலற்ற போர்” என்றும், முன்னெப்போதும் இல்லாத வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உளவியலில் இருந்து உருவான ஆக்கிரமிப்புச் செயல் என்றும் உலகளவில் அறிவித்தன.

இதற்கு நேர்மாறாக, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஆரம்பத்தில் இருந்தே போரின் உண்மையான தன்மையை பகுப்பாய்வு செய்தது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் பின்பான பேரழிவு விளைவுகளுக்கு, தன்னலக்குழுவின் அவநம்பிக்கையான மற்றும் பிற்போக்குத்தனமான பிரதிபலிப்பாக இருந்த ரஷ்யாவின் படையெடுப்பை WSWS எதிர்த்தது.

எவ்வாறிருப்பினும், ஏகாதிபத்திய சக்திகள் யுரேஷிய பெருநிலப்பரப்பில் அவற்றின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, இந்தப் போரைத் தூண்டிவிட்டதுடன், இடைவிடாமல் அதைத் தீவிரப்படுத்தியும் வந்தன என்பதை WSWS விளக்கியது. பிப்ரவரி 2023 இல், WSWS ஆசிரியர் குழு பின்வருமாறு எழுதியது:

நடைமுறையளவில் ஒவ்வொரு போரின் ஆரம்பக் கட்டங்களிலும், அரசாங்கங்கள் தற்காப்புக்காக செயல்படுவதாக கூறிக் கொள்கின்றன என்பதோடு, “முதல் தாக்குதலை” நடத்தியது யார் என்ற பிரச்சினையின் மீது கவனத்தை ஒருமுனைப்படுத்துகின்றன. இதைத் தொடர்ந்து எதிரியை அரக்கத்தனமாக சித்தரிக்கும் நோக்கில் இடைவிடாத அட்டூழியப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இருப்பினும், தவிர்க்க முடியாமல், உயிரிழப்புகள் அதிகரித்து, இரு தரப்பிலும் ஆரம்ப எதிர்பார்ப்புகள் சிதைக்கப்படுவதால், ஆழமான காரணங்களும் காரணிகளும் வெளிப்படுகின்றன. உக்ரேன் போரிலும் இதுதான் நிலை.

போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, போரின் “ஆழமான காரணங்களும் அடிப்படைக் காரணிகளும்” வெளிப்பட்டு வருகின்றன.

“தேசிய சுய-நிர்ணயம்” மற்றும் “ஜனநாயகத்தை” பாதுகாத்தல் பற்றிய வாய்வீச்சு போய்விட்டது. மாறாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் போரின் மூன்றாம் ஆண்டு நிறைவை, தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும், உக்ரேனில் எஞ்சியுள்ள கொள்ளைப் பொருட்களை யார் எடுத்துக்கொள்வது என்பது குறித்து சண்டையிடுகின்றனர்.

“முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய மண் வளங்கள் குறித்து உக்ரேனுடன் நாம் ஒரு ஒப்பந்தத்தை வைத்திருக்க வேண்டும்” என்று பிரெஞ்சு ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது ட்ரம்ப் கூறினார். உக்ரேனின் கனிம வளங்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஜெலென்ஸ்கி அரசாங்கத்தை கட்டாயப்படுத்துவதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகளை ட்ரம்ப் இதற்கு மேற்கோள் காட்டினார். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஐரோப்பிய சக்திகள் உக்ரேனுக்கு “மானியங்கள், கடன்கள் மற்றும் கடன் உத்தரவாதங்கள்” வடிவில் உதவிகளை வழங்கின என்றும், அவை ஒரு வழி அல்லது வேறு வழியில் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஏகாதிபத்திய திருடர்களுக்கு இடையிலான இந்த மோதலில், உக்ரேன் போரை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட அனைத்து பொய்களும் நொறுங்கி வருகின்றன. போரைத் தொடங்கியது புட்டின் அல்ல, உக்ரேன் தான் போரை ஆரம்பித்து வைத்ததாகவும், அதற்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்த உக்ரேன் மறுத்ததாகவும் ட்ரம்ப் வெளிப்படையாகக் கூறினார். இந்தப் போரில் அமெரிக்காவின் நலன்கள் மூலப்பொருட்கள் மற்றும் புவிசார் அரசியல் இருந்துள்ளன என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒரு “சர்வாதிகாரி” என்றும், இராணுவச் சட்டத்தின் மூலம் ஆட்சி செய்கிறார் என்றும் ட்ரம்ப் வெளிப்படையாகக் கூறுகிறார். மேலும், இந்தப் போர் “ஜனநாயகத்தை” பாதுகாப்பது பற்றியது என்ற பைடென் நிர்வாகத்தின் கூற்றையும் அவர் கேலி செய்கிறார்.

அவர்களது கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, போருக்கான எந்தவொரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வையும் எதிர்ப்பதில் தனது சொந்த பாத்திரத்தை விளக்குவதற்கு மக்ரோன் தன்னைத்தானே முடிச்சுப் போட்டுக் கொண்டார். மக்ரோன், “இதுபற்றி மற்ற தலைவர்களுடன் விவாதிப்பது நல்லது என்று நான் எப்போதும் நினைக்கிறேன், குறிப்பாக நீங்கள் உடன்படாதபோது. புச்சாவில் (Bucha) இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பிறகு ஜனாதிபதி புட்டினுடனான எனது கலந்துரையாடலை நான் நிறுத்திக் கொண்டேன். ... இப்போது ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், ஒரு புதிய அமெரிக்க நிர்வாகம் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் எந்தவொரு முயற்சியையும் நாசமாக்குவதற்காக, ஏகாதிபத்திய சக்திகளால் கையகப்படுத்தப்பட்ட மார்ச் 2022ல் இடம்பெற்ற புச்சா அட்டூழியக் குற்றச்சாட்டுகளைப் பற்றி மக்ரோன் இங்கு குறிப்பிடுகிறார். அந்த நேரத்தில், ஏகாதிபத்திய சக்திகள், நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் “எல்லாவற்றையும் மாற்றிவிட்டதாகக்” கூறி, “கொலையாளி” விளாடிமிர் புட்டினுடன் எந்தப் பேச்சுவார்த்தையையும் நினைத்துப் பார்க்க முடியாததாக ஆக்கின. மாறாக, புச்சாவில் நடந்த அட்டூழியங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் “ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரை அதிகரிப்பதற்கான ஒரு சாக்குப்போக்காகும்” என்று WSWS விளக்கியது.

எந்தவொரு அக்கறையுள்ள பத்திரிகையாளரும் மக்ரோனிடம் “டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டமை ஏதோவொரு விதத்தில் புச்சாவில் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் உயிர்ப்பித்ததா, அல்லது போரை நீடிப்பதற்கான பைடென் நிர்வாகத்தின் முயற்சிகளை ஆதரிப்பதற்கான ஒரு சாக்குபோக்காக அந்த மரணங்களை நீங்கள் பயன்படுத்தினீர்களா?” என்று கேட்டிருப்பார். இந்தக் கேள்வியைக் கேட்பது என்பது இதற்கான பதிலுக்காகும்.

உக்ரேன் போரில் நேட்டோவின் ஈடுபாட்டை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட மோசடியான பாசாங்குத்தனங்கள் நொருங்கி வருகின்றன. ஏனெனில், இந்தப் போர் நேட்டோ சக்திகளுக்கு ஒரு இரத்தந்தோய்ந்த படுதோல்வி என்பது தெளிவாகிறது. ஜனவரி 2023 இல், ஜெனரல் மார்க் மில்லியின் வார்த்தைகளில் கூறுவதானால், “ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனை”, அதாவது 2014 இல் ரஷ்யாவினால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தை விடுவிப்பதே நேட்டோ சக்திகளின் தந்திரோபாய நோக்கமாக வரையறுக்கப்பட்டிருந்தது. இன்னும் விரிவாகச் சொன்னால், புட்டின் அரசாங்கத்தை கவிழ்த்து, ரஷ்ய கூட்டமைப்பின் உடைவை உள்ளடக்கிய ரஷ்யா மீது ஒரு “மூலோபாய தோல்வியைத்” திணிப்பதையே அவர்கள் விரும்பினர்.

இந்த இலக்குகள் அனைத்திலும் நேட்டோ சக்திகள் தோல்வியடைந்துள்ளன. உக்ரேனும் அதன் நேட்டோ சக்திகளும் கிரிமியா மற்றும் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள டொன்பாஸ் பிராந்தியங்களை மீண்டும் கைப்பற்றுவதற்கு ஒருபோதும் நெருக்கமாக வரவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக உக்ரேன் அதன் பிராந்தியத்தில் இன்னும் கூடுதலாக அதன் 15 சதவீத நிலப்பரப்பை இழந்துள்ளது.

நேட்டோவின் போர் முயற்சி ஒரு பேரழிவு என்றாலும், போரின் விளைவுகள் மிகவும் உண்மையானவை. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் நேட்டோ இரண்டும், இந்தப் போரில் ஒரு மில்லியன் மக்கள் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்றும், உக்ரேனின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் மதிப்பிட்டுள்ளன.

உக்ரேன் போர் உலகின் ஒவ்வொரு மூலையையும் பாதித்துள்ளது. ஜேர்மனி முதல் ஜப்பான் வரையில் ஒவ்வொரு ஏகாதிபத்திய நாடும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒருபோதும் ஆக்ரோஷமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதில்லை என்று அவை அளித்த வாக்குறுதிகளை தூக்கியெறிந்து, பாரியளவில் மறுஆயுதபாணியாவதற்கு இந்தப் போரை பயன்படுத்தியுள்ளன.

மேலும், உக்ரேன் போர் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை சர்வதேச புவிசார் அரசியலில் முன்னணியிலும் மையத்திலும் வைத்துள்ளது. அக்டோபர் 2022 இல், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் உக்ரேன் போரின் விரிவாக்கம் அணுஆயுத “பிரளய” அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று கூறினார். அதே நேரத்தில், அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை 50 சதவீதம் வரை மதிப்பிட்டன. இந்த எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் போரை தொடர்ந்து விரிவுபடுத்தி, நேட்டோ டாங்கிகள், விமானங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யாவின் எல்லைகளுக்கு அனுப்பின.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே இப்போது நடந்து வரும் பேச்சுவார்த்தைகளின் விளைவு என்னவாக இருந்தாலும், இவர்களால் உலகளாவிய போர் பூதத்தை மீண்டும் பாட்டிலில் அடைத்து வைக்க முடியாது. மாறாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வளைகுடாப் போரை எதிர்த்து அதன் 1991 அறிக்கையில் விளக்கியதைப் போல:

1914 மற்றும் 1939க்கு முந்தைய ஆண்டுகளைப் போலவே, சிறிய மற்றும் பாதுகாப்பற்ற நாடுகளை சூறையாடுவதும் அடிமைப்படுத்துவதும் தவிர்க்க முடியாமல் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே மோதல்கள் மற்றும் போராட்டங்கள் தீவிரமடைவதுடன் பிணைந்துள்ளது.

ட்ரம்பும், அவர் பேசும் அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகளும், உக்ரேனிய போரை ஒரு மோசமான பேரழிவாகவும், நிர்வாகத்தின் மைய முன்னுரிமையான சீனாவுடனான மோதலுக்கான விநியோக தளத்தை உருவாக்க, அமெரிக்க ஆதிக்கத்தை செலுத்துவதிலிருந்து திசைதிருப்பலாகவும் பார்க்கிறது.

எவ்வாறாயினும், உக்ரேன் போரில் ட்ரம்பின் மூலோபாய மாற்றம், அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்திற்குள் குறிப்பிடத்தக்க பிளவுகளை வெளிக்கொணர்ந்துள்ளது. ஜனநாயக உரிமைகளை அழித்தல், சமூக செலவினங்களை வெட்டித்தள்ளுதல், புலம்பெயர்ந்தோர் மற்றும் கூட்டாட்சி தொழிலாளர்கள் மீதான அவரது தாக்குதல்களை எதிர்க்க எதுவும் செய்யாத ஜனநாயகக் கட்சியும், அதனுடன் இணைந்த ஊடக நிறுவனங்களும், ட்ரம்பின் உக்ரேன் கொள்கை மாற்றத்தை கடுமையாக எதிர்க்கின்றன. ஒரு தலையங்கத்தில், நியூயார்க் டைம்ஸ், “கிரெம்ளினில் உள்ள கொடுங்கோலரைப் போற்றுவது, அமெரிக்கர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டிய எந்தவொரு நடத்தைக்கும் அப்பாற்பட்டது” என்று அறிவிக்கிறது.

ட்ரம்ப் தனது இரண்டாவது நிர்வாகத்தின் போது, ​​அது எவ்வளவு குற்றகரமாகவோ அல்லது அரசியலமைப்புக்கு விரோதமாகவோ இருந்தாலும், வேறு எதையும் விவரிக்க டைம்ஸ் ஒருபோதும் இதுபோன்ற மொழியைப் பயன்படுத்தவில்லை. உக்ரேனில் தோல்வியை ஒப்புக்கொள்வது என்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நிலைப்பாட்டிலும் பொருளாதார மேலாதிக்கத்திலும் பேரழிவு தரும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் இந்தப் பிரிவுகள் அஞ்சுகின்றன. அடுத்த முறை ஒரு நிதி நெருக்கடி ஏற்படும்போது, ​​டாலரின் உலகளாவிய நிலைக்கு ஒரு பெரிய புதிய அரசாங்க பிணை எடுப்பு தேவைப்படும்போது என்ன நடக்கும் என்று அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்?

ட்ரம்பின் உக்ரேன் கொள்கை மாற்றத்தின் விளைவுகள் என்னவாக இருந்தாலும், அது உலகளாவிய ஏகாதிபத்திய வன்முறையின் இன்னும் மேலதிக வெடிப்புக்கான முன்னறிவிப்பாக மட்டுமே இருக்கும். உக்ரேனில் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே வெடித்த போர், பூகோள ரீதியாக விரிவடைந்துவரும் மோதலாக உருமாற்றம் அடைந்து வருகிறது. இதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலக்குகள் முன்னாள் காலனிகள் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் நாடுகள் மட்டுமல்ல, மாறாக உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போட்டியாளர்களும் அடங்குவர்.

உக்ரேனிய போரின் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், உலகெங்கிலுமான உழைக்கும் மக்கள் இன்றியமையாத படிப்பினைகளைப் பெற வேண்டும். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துப் பிரிவுகளும் உலகை மறுபங்கீடு செய்வதற்கும் முன்னாள் காலனிகளை அடிமைப்படுத்துவதற்குமான ஒரு வழிவகையாக போருக்கு பொறுப்பேற்றுள்ளன. முதலாளித்துவம் ஒரு உலகளாவிய மூன்றாம் உலகப் போரின் வெடிப்புடன் மனிதகுலத்தை நேருக்கு நேர் கொண்டு வருகிறது.

உக்ரேனிய போரின் இரத்தந்தோய்ந்த படுதோல்வியானது, ஏகாதிபத்திய சக்திகளின் ஆத்திரமூட்டல்களுக்கும் பிற்போக்குத்தனமான புட்டின் அரசாங்கத்திற்கும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கொள்கைப் பிடிப்பான எதிர்ப்பை நிரூபிக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரேன் இரண்டிலும், அனைத்துலகக் குழுவுடன் தனது ஐக்கியத்தை அறிவித்துள்ள ஒரு அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பு, போரை எதிர்க்கவும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை உலகெங்கிலுமான அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்தவும் போராடி வருகிறது.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த, போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் படையின் தலைவரான போக்டன் சிரோடியுக், ஜெலென்ஸ்கி ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரமான போரின் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தில் ஒரு இன்றியமையாத கூறுபாடாக, தோழர் போக்டனின் விடுதலைக்கான அவர்களின் அழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும்!