இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கடும்போக்கு பெருவணிக சார்பு இந்து மேலாதிக்கவாத பா.ஜ.க., கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்களவையில் பெரும்பாண்மையை இழந்ததை அடுத்து, எதிர்க்கட்சியான இந்தியா (INDIA) கூட்டணி, குறிப்பாக, பல்வேறு ஸ்ராலிச மற்றும் மாவோவாத கட்சிகளை உள்ளடக்கிய அதன் “இடது அணி”, கண்டிக்கப்பட்ட அரசாங்கம் இனிமேல் வெகுஜன அழுத்தத்துக்கு அடிபணிந்து போகும் எனக் கூறிக்கொண்டது.
இது, பரவலான வேலையின்மை, தொடர்ச்சியான வறுமை மற்றும் பா.ஜ.க.யின் இடைவிடாத மதவாத தூண்டுதல்கள் சம்பந்தமாக வளர்ந்து வருகின்ற, ஆனால் இன்னும் முழுமையாக ஒழுங்கமையாத வெகுஜன கோபத்தை, ஸ்தாபன அரசியலின் பிற்போக்கு கட்டமைப்புக்குள் அடக்கி வைப்பதையும், நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வை ஒரு வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கத்தால் பதிலீடு செய்வதற்கான அவர்களது முயற்சிகளையும் இலக்காகக் கொண்ட ஒரு மோசடியாகும். அத்தகைய அராசங்கம், “முதலீட்டாளர்-சார்பு” கொள்கைகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான “புகோள மூலோபாய பங்காண்மை” ஆகியவற்றுக்காக மோடியின் அரசாங்கத்தைப் போலவே அர்ப்பணித்துக்கொண்டதாக இருக்கும்.
அப்போதிருந்து எட்டு மாதங்களாக, பா.ஜ.க. அரசாங்கம், உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக தனது மூர்க்கமான தாக்துலைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
இந்த மாத தொடக்கத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2025-2026 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், இந்தியாவின் வறிய தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களுக்கான சமூக செலவீனங்கள் வெட்டித்தள்ளப்பட்டுள்ள அதே வேளை, இந்தியப் பெரு வணிகங்களுக்கு பாரிய மானியங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு சலுகை கொண்ட சிறிய தட்டுக்களுக்கு வருமான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவ செலவீனங்கள் கூர்மையாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஆயினும் 2019 இல் இருந்து நிதி அமைச்சராக உள்ள சீதாராமன், இந்த வரவு-செலவுத் திட்டத்தை ”மக்களால் , மக்களுக்கானது” என கூறிக்கொள்ளும் மடத்துணிச்சலைக் கொண்டுள்ளார். உண்மையில், அடுத்தடுத்து ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கங்களின் கொள்கைகளால், கடந்த கால் நுாற்றாண்டுக்கு மேலாக மிக வேகமாக சொத்துக்களை அதிகரித்துக்கொண்டுள்ள, கௌதம் அதானி, முகேஷ் அம்பானி, டாடா மற்றும் பிர்லா போன்ற குடும்பங்களின் பில்லியனர்களான முதலாளித்துவ பெருந்தனவந்தர்களுக்கானதே (oligarchs) இந்த வரவு-செலவுத் திட்டம் ஆகும். இதில் பொதுச் சொத்துக்களை துரித கதியில் விற்றுத் தள்ளுதல், பெருவணிகங்களுக்கு பாரியளவில் வரிகளைக் குறைப்பதோடு ஏனைய சலுகைகளையும் வழங்குதல் மற்றும் அத்தோடு நிலையற்ற ஒப்பந்தத்-தொழில் வாய்ப்பை அரசாங்கமே உக்குவிப்பதும் அடங்கும்.
தனது வரவு செலவுத் திட்டத்தின் ”மக்கள் சார்” தன்மைக்கு சான்றாக, சீதாராமன் ரூபா 1,200,000 வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரிச் சலுகைகள் நீடிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். அத்தகைய நபர்கள், ஒரு குறிப்பிட்ட வரி பத்திரத்தை பயன்படுத்தி தாக்கல் செய்ப்படும் வரை, எந்தவொரு வருமான வரி விதிப்புக்கும் ஆளாக மாட்டார்கள். அதிகளவான பெருவணிக பத்திரிகைகள், இது நடுத்தர வர்க்கத்திற்கான வருமான வரி “கொடை” என கூறிக்கொள்கின்றன.
இவை அனைத்தும் பம்மாத்து வேலை ஆகும். பெரும்பாண்மையான இந்தியர்கள் தமது வருமானங்கள் மிகவும் மோசமாக உள்ளதால் வருமான வரி செலுத்துவதில்லை. 1.4 பில்லியனுக்கும் அதிகமான ஜனத்தொகை உள்ள நாட்டில் 2024 இல் 86 மில்லியன் மக்களே வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
தற்போது வரை, ஒருவர் வருமான வரி செலுத்த வேண்டுமெனில், அவர், ஆண்டு சராசரி வருமானமான 324,680 ரூபாவை விட இரு மடங்கு அதிகமான 700,000 ரூபா ஆண்டு வருமான வரம்புக்கும் மேலாக சம்பாதிக்க வேண்டும். அரசாங்கத்தின் “புதிய வரி விதிமுறையைப்” பயன்படுத்துபவர்களுக்கு மாத்திரமே, குறைந்த வருமான வரம்பு கிடைக்கும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். 2020-2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரி முறை, “பழைய வரி விதிப்புமுறையை” விட குறைந்த வரி விகிதங்களை வழங்குகின்ற போதிலும், எளிமைப்படுத்தல் என்ற பெயரில், பல விலக்களிப்புகளையும் குறைத்தல்களையும் இல்லாமல் செய்கின்றது.
சீதாராமன் மற்றும் பெருவணிக பத்திரிகைகளில் உள்ள ஏராளமான முன்னணி ஊக்குவிப்பாளர்கள், வருமான வரி வரம்பை உயர்த்துவதானது மத்தியதர வர்க்க நுகர்வோரின் செலவீனங்களை அதிகரிப்பதோடு, அதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கச் செய்யப்படும் என கூறிக்கொள்கின்றனர். உண்மையில், சலுகை பெற்ற மத்தியதர வர்க்க மக்களின் வருமானம் கூட சமீபத்திய ஆண்டுகளில் உணவு மற்றும் பிற பொருட்களின் கூர்மையான விலை அதிகரிப்பால் சுரண்டப்பட்டுள்ள நிலையில், நுகர்வில் எத்தகைய அதிகரிப்பை ஏற்படுத்தினாலும், அது மிக மிக மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலதனத்தின் அழுத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில், தனியார் இலாபம் ஈட்டுவதற்கு தடையாக உள்ள சூற்றுச்சூழல் மற்றும் ஏனைய விதிமுறைகளை அகற்றுவதன் மூலமோ அல்லது புறக்கணிப்பதன் மூலமோ “வியாபாரம் செய்வதை எளிதாக்குவதை” விரிவுபடுத்துவதன் பேரில், நிதியமைச்சர் வரவு-செலவுத் திட்ட வாக்குறுதி ஒன்றை அளித்தார். அரசாங்கம், ஒப்பீட்டளவில் பெரிய நிறுவனங்களில் கூட தொழிலாளர்களை விருப்பப்படி வேலை நீக்கம் செய்யவும், கம்பனி உரிமையாளர் தடையின்றி நிரந்தத் தொழிலாளர்களுப் பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடிய அளவிற்கு நாட்டின் தொழிலாளர் சட்டங்களை வெட்டித்தள்ளியுள்ளது.
பூகோள பொருளாதார நெருக்கடிகள், பலவீனமான மூலதன முதலீடு, மற்றும் நுகர்வோர் செலவீனங்களிலான, குறிப்பாக மிகவும் பின்தங்கிய நுகர்வோரின் செலவீனங்களிலான வளர்ச்சியில் மந்த நிலையையும் எதிர்கொண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடையத் தொடங்கிய நிலையில், இந்திய பெருநிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனங்களும், மோடி அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக குறிப்பிடத்தக்க அரச ஊக்குவிப்பை வழங்கும் என்று எதிர்பார்ப்பதை தெளிவுபடுத்தின.
அரசாங்கம் அவ்வாறு செய்த போதிலும் கூட, அவர்கள் ”நிதிய ஒருங்கிணைப்பை” முன்னெடுக்குமாறு, அதாவது விஷேடமாக விலை மானியங்கள் மற்றும் ஏனைய (சமத்துவமின்மையை குறைக்கும்) “மறுபகிர்மான” நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலான சிக்கன நடவடிக்கைகளை தீவிரமாக்குவதன் ஊடாக, மொத்த தேசிய உற்பத்திக்கு ஏற்ப வரவு-செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என அரசாங்கத்தை நெருக்கினர்.
சில கணிப்புகளின் படி, மார்ச் மாதத்தில் முடிவடையும் 2024-2025 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், குறைவான 6.2 சதவிகிதமாக இருக்கலாம். இது, எந்தவொரு முன்னேறிய முதலாளித்துவ நாடுகளினதும் வளர்ச்சி விகிதத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்றாலும், தொழிற் படைக்கு வருடாந்தம் புதிதாக உள்நுழைபவர்களை ஏற்றுக்கொள்ள மட்டும், இந்தியாவிற்கு 8 சதவித ஆண்டு அதிகரிப்பு விகிதம் அவசியம் என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்படுகின்றது.
இந்த வரவு-செலவு திட்டமானது பெருவணிகங்களுக்கு ஊக்குவிப்பு வழங்குதல் மற்றும் சமூக ஒதுக்கீடுகளை குறைப்பது போன்ற முரண்பாடான நிர்ப்பந்தங்களை புர்த்தி செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வரவு-செலவு திட்டத்தில், புதிய தொழிலதிபர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தொழிற் பயிற்சியாளர்களை ஊக்குவிக்க பல்வேறு மானியங்களை அறிவித்த அரசாங்கம், பல ஆண்டுகளாக நீடிக்கும் ”வேலையின்மை அதிகரிப்பை” பற்றி கவலைப்படுதவாக பாசாங்கு செய்துள்ளது. நிதியமைச்சருக்கு, பெப்ரவரி 1 அன்று தனது வரவு-செலவுத் திட்ட உரையில், கடந்த ஆண்டு நடவடிக்கைகள் வேலையின்மை நெருக்கடியில் சிறிய மாற்றத்தைக்கூட செய்யாமல், பல்கலைக்கழக பட்டதாரிகள், வேலையற்றோர் அல்லது திறமைக்கு பொருந்தாத தொழில் செய்பவர்கள் உட்பட பல மில்லியன் கணக்கானோரை விட்டுவிட்டதைப் பற்றி குறிப்பிடுவதற்கு எதுவும் இருக்காததோடு தொழில் உருவாக்கம் பற்றி எதுவும் பேசவில்லை.
இந்தியாவின் வளந்துவரும் கடன் பொறி
தற்போதய நிதி ஆண்டின் செலவான 47.16 றில்லியன் ரூபாய்களுடன் ஒப்பிடும் போது, 2025 ஏப்ரல் 21 தொடங்கி 2026 மார்ச் 31 அன்று முடிவடையும் நிதியாண்டில், 50.65 றில்லியன் ரூபா செலவு செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
வரவு-செலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட 31 சதவீதமான, சுமார் 15.69 றில்லியன் ரூபாவுக்கு, கடன் மூலம் நிதியளிக்கப்படுவதோடு, 12.76 றில்லியன் ரூபா வட்டி செலுத்த ஒதுக்கவேண்டியுள்ளது. இவை வரவு செலவுத் திட்டத்தில் மிகப் பெரிய பகுதியை பிடித்துக்கொள்கின்றது.
கடந்த தசாப்தத்துக்கு மேலாக, இந்திய நிறுவனங்களின் மூலதன முதலீடுகள் தடையின்றி வீழ்ச்சியடைந்து வருவதால், அரசாங்கமே எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய மூலதன முதலீட்டின் அடிப்படை ஆதாரமாக இருக்கின்றது. அரசாங்கம் மூலதனச் செலவுக்காக (CAPEX) கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாக 11.21 றில்லியன் ரூபா பிரமாண்டமான தொகையை ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியானது இந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு வசதியளிக்க, வீதிகள், பாலங்கள், துறைமுகங்கள் மற்றும் மின்சாரம் போன்ற உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காகவும், தனியார்-அரச பங்காண்மை வடிவிலும் செலவிடப்படவுள்ளது. நடைமுறையில் இது, தமது “சேவைகளுக்காக” வழமையாக அதிக கட்டணத்தை அரவிடுகின்ற, இலாபத்தை அதிகரிப்பதற்காக தரம் குறைந்த மூலப்பொருட்களை பயன்பத்துகின்ற மற்றும் அடிக்கடி குறித்த காலத்திற்குள் கட்டுமானங்களை நிறைவுசெய்யாமல் விடுகின்ற, அதானி மற்றும் அம்பானி போன்ற, அரசியல் ரீதியில் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள முதலாளிகளின் பைகளுக்குள், பிரமாண்டமான அரச நிதியை திருப்பிவிடுவதையே அர்த்தப்படுத்தும்.
உதாரணமாக, 2024 பெப்பிரவரிக்குள் முடிக்கவேண்டிய 1902 கட்டுமானத் திட்டங்களில் 443 திட்டங்களுக்கு, 4.92 றிரில்லியன் ரூபா அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது. இது அசல் மதிப்பீடுகளை விட 18 சதவீத பாரியளவான அதிகரிப்பு ஆகும்.
வரவு-செலவுத் திட்டத்தில் இராணுவத்திற்கு கிட்டத்தட்ட 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூபா 6.81 டிரில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் கிட்டத்தட்ட இரட்டை எண் சதவீத அளவுக்கு ஆண்டுதோறும் அதிகரிக்கப்படுவதற்கு மேலாக இம்முறை இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய கடனுக்கான வட்டிக் கட்டணங்கள், அரச மூலதனச் செலவு, இராணுவம் ஆகிய மூன்று பகுதிகளுக்கு மாத்திரம், அரசாங்கம் 30.78 றில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இது மொத்த வரவு-செலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட 61 சதவீதத்திற்கு சமம் ஆகும். ஏனைய செலவீனங்களுக்காக மிகச் சொற்பமான 39 சதவீதமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால்தான் சமூகத் துறை மற்றும் விவசாயமும் பாரியளவிலான வெட்டுக்களுக்கு இலக்காகியுள்ளன. அரசாங்கம் இந்த ஆண்டுக்கான வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறைக்கான 1.31 றில்லியன் ரூபா ஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்து, இந்த ஆண்டு வெறும் 1.27 றில்லியனை செலவிட எதிர்பார்க்கின்றது. இந்தியாவின் பொது விநியோக முறைமையின் ஊடாக விநியோகிக்கப்படும் அரசி, பருப்பு போன்ற மானிய உணவுப் பண்டங்களுக்கான கொடுப்பனவுக்கான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடு, கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் ரூபா 2 றில்லியன் ஆகும். பணவீக்கத்தின காரணமாக, இத்த ஒதுக்கீடு மிகப்பெரிய வெட்டுக்கு சமம் ஆகும். இதனால் அரசாங்கத்தின் பொதுவிநியோகத் திட்டத்தில் தங்கியுள்ள பல கோடி ஏழை மக்கள் இன்னமும் குறைவாக சாப்பிட நிர்ப்பந்திக்கப்படுவர்.
அதிர்ச்சியளிக்கும் வகையில் 2.4 மில்லியன் மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறை, குறைந்தபட்சம் 1.2 மில்லியன் ஆசிரியர்கள் பற்றாக்குறை என, விசாலமான பற்றாக்குறைகளுடன் உள்ள சுகாதரம் மற்றும் கல்விக்கான செலவுகள் துன்பகரமான முறையில் சொற்பமானதாக உள்ளன.
கிராமப் புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் பருவமுற்ற ஒருவருக்கு 100 நாட்கள் கூலி வேலைவாய்ப்பை உறுதி செய்யும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு போதுமான நிதியை அரசாங்கம் ஒதுக்கவில்லை. இந்த திட்டத்திற்கு வரவிருக்கும் ஆண்டு ஒதுக்கீடு இந்த ஆண்டைப் போலவே ரூபா 860 பில்லியன் ஆகும். கிராமப்புற தொழிலாள வர்க்கத்தின் இந்த மிக ஒடுக்கப்பட்ட அடுக்குகளுக்கு வழங்கப்படும் நாளாந்த ஊதியம், மோடி அரசாங்கத்தின் அப்பட்டமான கொடூரத்தை அம்பலப்படுத்துகின்றது. பல மாநிலங்களில், உடலை மிகவும் வருத்தி செய்யும் வெளிப்புற வேலைகளுக்கான நாளாந்த ஊதியங்கள் இன்று வரைக்கும் வாழ்க்கை நடத்துவதற்கு போதாத மிகக் குறைந்த தொகையான 200 ரூபாவே வழங்கப்படுகின்றது. இந்த சொற்ப தொகை கூட வாரக்கணக்கிலும் மாதக் கணக்கிலும் கூட வழங்காது அடிக்கடி இழுத்தடிக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 300 மில்லியன் பேரைக் கொண்ட குறைந்தபட்சம் 65 மில்லியன் கிராமப்புற குடும்பங்கள், தமது வாழ்வாதாரத்திற்காக இந்த அரச திட்டத்தை நம்பியுள்ளனர்.
இராணுவச் செலவு பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டமை, பொது செலவுக்கான நிதியை பிரமாண்டமான அளவு குறைக்கின்றது. இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்ட 6.81 றில்லியனில் 1.8 றில்லியன் ரூபாவானது போர் விமானங்கள், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகள், ஏனைய ஆயுதத் தொகுதிகள் போன்ற புதிய இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த இராணுவச் செலவு பிரதானமாக சீனாவை நோக்கியும் இரண்டாவதாக புது டெல்லியின் பரம எதிரியான பாகிஸ்தானை நோக்கியும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்திய முதலாளிகள், அமெரிக்க முதலீடு மற்றும் மூலோபாய சலுகைகளைப் பெறும் நோக்கில், சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்திய இராணுவ-மூலோபாய தாக்குதலுக்கு தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், பெருந்தனவந்தரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான மிகப்பெரிய நிறுவனமான இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தால் நிதியளிக்கப்படுகின்ற செல்வாக்குமிக்கி சிந்தனைக் குழாமான ஒப்சேவர் ரிசேர்ச் ஃபௌன்டேசன் (Observer Research Foundation-ORF) அமைப்பைப் பொறுத்தவரை, இராணுவத்திற்கான ஒதுக்கீடு போதுமானதல்ல, அல்லது நிதியானது சிப்பாய்களின், குறிப்பாக அவர்களின் ஓய்வூதியத்திற்கு குறைவாக செலவிடப்படுகின்ற, ஆயுதங்களுக்கு இன்னும் அதிகமாக செலவிடக்கூடியவாறு, அடிப்படையில் மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும்.
மோடி அரசாங்கம் ரூபா 470 பில்லியன் சேகரிக்கும் இலக்குடன் தனியார்மயமாக்கலை அறிவித்துள்ளது. இது 2024-2025 நிதி ஆண்டில் மோடி அரசாங்கம் தனது தனியார்மயமாக்கல் திட்டத்தில் இருந்து எதிர்பார்க்கும் 330 பில்லியன் ரூபாவை விட அதிகமாகும். பொது நிறுவனங்கள் மற்றும் துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற ஏனைய அரச சொத்துக்களில் தனியார்மயமாக்கலை முன்னெடுப்பதானது, இந்தியாவின் முதலாளிகளை செல்வந்தர்களாக்க மோடி அரசாங்கம் பயன்படுத்தும் மற்றுமொரு பொறிமுறை ஆகும். உதாரணமாக, அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனமான ஏயர் இந்தியாவை, டாடா குழுமத்திற்கு ஒரு சிறிய தொகைக்கு விற்றது.
இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்கள் மீது வரிச்சுமையை என்றுமில்லாதவாறு முழுமையாக சுமத்துதல்
இந்த வரவு-செலவுத் திட்டம், ஏற்கனவே உலகின் மிக மோசமான நாடுகளில் ஒன்றான இந்தியாவில் செல்வத்தையும் வருமான சமத்துவமின்மையையும் மேலும் அதிகரிக்கும். இந்திய அரசாங்கத்தின் வருமானம் பெருமளவில் வருமான வரிகள் மற்றும் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மிகப் பின்னடைவுகரமான சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST) மூலம் பெறப்பட்டவை ஆகும். அனைத்துப் பொருட்கள், சேவைகள் மற்றும் பொதியிடப்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்டுவதோடு விலைகளில் 12 முதல் 18 சதவீதம் வரை ஜி.எஸ்.டி. அடங்குகின்றது. 2017 ஏப்ரலில் இருந்து நாடு முழுவதிலும் ஜி.எஸ்.டி. விதிக்க முன்னரே, மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களின் மறைமுக வரிகள் திணிக்கப்பட்டிருந்த நிலையில், ஜி.எஸ்.டி. மூலம் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச் சுமை, அவர்களை நசுக்குகின்றது.
ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி ஆதாயத் தொகை ரூபா 26.16 றில்லியன் ஆகும். இதனுடன் ஒப்பிடுகையில் பெருநிறுவன வரி வருமானம் வெறுமனே 10.82 றில்லியன் ரூபா ஆகும். 2014 இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மோடி அரசாங்கம் பெருநிறுவனங்கள் மீதான வரிகளை தொடர்ச்சியாக குறைத்துவரும் அதே வேளை, வரிச் சுமையை சம்பள வருமானம் ஈட்டுபவர்கள் மீது திட்டமிட்டு சுமத்தி வருகின்றது. 2010-2011 நிதி ஆண்டில், பெருவணிகங்களின் வருமானத்தில் இருந்து நேரடியாக திரட்டப்பட்ட வரி 67 சதவீதமாக இருந்ததோடு மிகுதி ஊதியத் தொழிலாளர்களிடம் இருந்து வருமான வரியாக திரட்டப்பட்டுள்ளது. அப்போது ஜி.எஸ்.டி. வரி இருக்கவில்லை. தற்போது, ஊதிய வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் மக்கள் தொகையில் மிகக் தாழ்ந்த அடுக்குகள் மீதான மொத்த நேரடி மற்றும் மறைமுக வரிச்சுமை, வரி வசூலில் 71 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
ஜனவரி 15 அன்று இந்திய ஒக்ஸ்பாம் அறக்கட்டளை நிறுவனம், மக்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியின் அசாதாரண சுமையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அது கூறியதாவது:
2021-2022 இல், சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) வருமானமான 14.83 இலட்சம் கோடி ரூபாயில், சுமார் 64 சதவீதம், மக்கள் தொகையின் கீழ் மட்ட 50 சதவீதமானோரில் இருந்து வந்துள்ளது. மதிப்பீடுகளின் படி, ஜி.எஸ்.டி. வருமானத்தில் 33 சதவீதம், மக்கள் தொகையில் மத்திய நிலையில் உள்ள 40 சதவீதமானோரிடம் இருந்து வந்துள்ளதோடு உயர் மட்டத்தில் உள்ள 10 சதவீதமானோர்களிடம் இருந்து வெறும் 3 சதவீத வரியே அறவிடப்பபட்டுள்ளது.
பெரும்பாலான இந்தியர்களுக்கு தொடர்ச்சியான தொழில்கள் இல்லாததோடு அவர்கள் சாலையோரங்களில் சிறிய பஜ்ஜி விற்பனையாளர்கள், மற்றும் பிற தெருவோர வியாபாரிகளாகவும், நாளாந்த கூலித் தொழிலாளர்கள் மற்றும் சேவகர்களாகவும் இன்னும் இதுபோன்ற பல “முறைசாரா” தொழில் எனப்படுவதிலும் வாழ்வை ஓட்டுகின்றனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 15 சதவீதத்தை கொண்டுள்ள, குறிப்பாக, உற்பத்தி துறையில், புதிய வேலைகள் உருவாக்கப்படாமையால், மேலும் மேலும் இளைஞர்கள் ”சுய தொழில் செய்பவர்கள்” எனப்படுபவர்களாக மாறத் தள்ளப்பட்டுள்ளனர். விவசாய ஆய்வுக்கான அறக்கட்டளை (Foundation for Agrarian Study -FAS), 2022-2023 ஆம் ஆண்டில் நடத்திய கற்கையின் படி, அரசாங்கத்தின் குடும்ப நுகர்வோர் செலவு ஆய்வுத் தரவுகள், 360 மில்லியனுக்கும் அதிகமானோர் அன்றாட உணவு, ஆரோக்கியம் மற்றும் வீட்டுத் தேவையை பூர்த்திசெய்ய முடியாது இருக்கின்ற இந்திய மக்களின நிலைமை மிகவும் பரிதாபமானதாகும்.
இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் உலகில் “குறிப்பிடத்தக்கதாக” இருப்பதாக கூறப்பட்டாலும், முதலாளித்துவ பொருளியலாளர்களின் மிக மோசமான நிலைப்பாட்டடில் இருந்து சொன்னால் கூட இந்தியப் பொருளாதாரமானது கடும் நெருக்கடியில் உள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மூலதனத்தில் இருந்து வரும் மூலதன முதலீடு கடந்த பத்தாண்டுகளில் சரிந்துள்ளது. 2024 நிதியாண்டில், வெளிநாட்டு நேரடி முதலீட்டின் உட்பாய்ச்சல் 62.17 சதவீதம் சரிந்து, 10.58 பில்லியன டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இது 17 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும்.
மூலதன மூதலீட்டிற்காக மிகவும் ஏங்குவதால், இந்தியாவின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன், இந்தியாவின் பொருளாதாரம் சினாவின் பூகோள விநியோக சங்கிலியுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் அல்லது சீனாவிடம் இருந்து வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என கடந்த ஆண்டு கூறினார். பெய்ஜிங்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் நகர்வில் புதுடெல்லி தன்னை என்றுமில்லாத வகையில் மேலும் முழுமையாக ஒருங்கிணைத்துக்கொள்ளும் நேரத்திலும் கூட இதைப் பரிந்துரைத்துள்ளார்.
மேலும் படிக்க
- இந்திய ஆளும் வர்க்கமும் ஏகாதிபத்திய சக்திகளும் ஒரு இந்து மேலாதிக்க அரசை கட்டமைக்கும் மோடியை அரவணைக்கின்றனர்
- இந்தியாவின் அதிவலது பிரமத மந்திரி மோடியை வரவேற்பதில் பைடென் வாஷிங்டனை வழி நடத்துகிறார்
- அமெரிக்காவின் பாசிச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவிக்க தெற்காசிய அரசாங்கங்கள் விரைகின்றன