காஸாவில் இரண்டாவது இனப்படுகொலைக்கு இஸ்ரேல் திட்டம், மேற்குக் கரையில் இனச்சுத்திகரிப்பு அதிகரிப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸாவில் மீண்டும் ஒரு இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்துள்ள இஸ்ரேலின் துணை நாடாளுமன்ற சபாநாயகரான நிசிம் வட்டுரி, பாலஸ்தீனக் குழந்தைகளை அவர்களின் தாய்மார்களிடமிருந்து பிரித்து, பின்னர் “மனிதர்களுக்கு கீழானவர்கள்” என்று அவர் விவரித்த அனைத்து வயது வந்தோரையும் படுகொலை செய்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கோல் பாரமா என்ற இஸ்ரேலிய செய்தி ஊடகத்துக்கு, லிகுட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (நெசெட் உறுப்பினர்) பொதுமக்கள் உட்பட யாரும் “காஸாவில் நிரபராதிகள் இல்லை... அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள், உலகில் யாரும் அவர்களை விரும்பவில்லை” என்று அறிவித்தார்.

2020 இல் நிசிம் வட்டுரி [Photo by צילם: שרון רביבו קמפיין הליכוד / CC BY-SA 4.0]

இஸ்ரேல் “குழந்தைகளையும் பெண்களையும் பிரிக்க வேண்டும், காஸாவில் உள்ள பெரியவர்களைக் கொல்ல வேண்டும், நாங்கள் மிகவும் அக்கறையுடன் நடந்து கொள்கிறோம்,” என்று அவர் அறிவித்தார். விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனிய கைதிகள் மேற்குக்கரை நகரமான ஜெனினுக்கு அனுப்பப்பட வேண்டும் “அப்போதுதான் அவர்கள் அங்கிருந்து அகற்றப்படுவார்கள்... ஜெனினை அழித்து விடுங்கள்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவை, ஒரு இழிவான பாசிஸ்டின் பிதற்றல்கள் மட்டுமல்ல. அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவுடன் காஸாவில் இருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கான அதன் நோக்கத்தை அறிவித்துள்ள பெஞ்சமின் நெத்தன்யாகுவின் ஆளும் லிக்குட் கூட்டணியால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் கொள்கைகளாகும். ஜெனின் மற்றும் பிற மேற்குக் கரை நகரங்களில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு எதிராக ஐந்து வார “ஆபரேஷன் இரும்புச் சுவர்” இராணுவ நடவடிக்கை ஒன்றைத் தொடங்கிய, இஸ்ரேல், ஏற்கனவே 40,000 மக்களை உள்நாட்டுக்குள்ளேயே இடம் பெயரத் தள்ளியுள்ளது.

இந்த இராணுவ நடவடிக்கையானது, காஸா மாதிரியை ஒவ்வொரு புள்ளியாகப் பின்பற்றி நடைபெறுகிறது. 2002 ஆம் ஆண்டு ஜெனின் மீதான தாக்குதலுக்குப் பிறகு மேற்குக் கரைக்கு எதிரான மிகப்பெரிய இஸ்ரேலிய தாக்குதலில் ஜெனின், துல்கரேம், துபாஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் திட்டமிட்டு தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன.

காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் உடன்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாதுகாப்பு அமைச்சரவை மேற்குக் கரையை அதன் போர் இலக்குகளில் சேர்த்துக் கொண்டதோடு, “யூதேயா மற்றும் சமாரியா [மேற்குக் கரையின் விவிலிய பெயர்கள்] மீது பாதுகாப்பை வலுப்படுத்தி, நடமாட்டங்கள் மற்றும் குடியேற்றப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பை பராமரிப்பதை வலியுறுத்தி” அழைப்பு விடுத்தது. இது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்தின் பாசிச உறுப்பினர்கள், ஊடகங்களில் உள்ள அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் குடியேற்றவாசிகளின் தலைவர்கள், “போரை மேற்குக் கரைக்கு மாற்றுமாறு” மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து நிகழ்ந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மேற்குக் கரையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தாக்குதல் விரிவடைந்து வருவதாகவும், இராணுவம் “வரும் ஆண்டு முழுவதும்” அகதிகள் முகாம்களில் நிலை கொண்டிருக்கும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளில் முதல் தடவையாக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை மேற்குக் கரையில் டாங்கிகளை நிறுத்தியுள்ளது. இது, பயங்கரவாத உள்கட்டமைப்பு என்று அது அழைப்பவற்றை பாலஸ்தீனிய நகரங்களில் இருந்து “அகற்ற” விமானப்படை மற்றும் நவீன ஆயுதங்கள், சிறப்பு படைகள் மற்றும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தரைவழி சோதனைகள் மற்றும் கவச வாகனங்கள், புல்டோசர்கள் உட்பட காஸாவில் பயன்படுத்தப்பட்ட அதே தந்திரோபாயங்களை அது பயன்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 10 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் ஒரு முதியவர் உட்பட குறைந்தது 70 பேர்கள் மேற்கு கரையில் கொல்லப்பட்டுள்ளனர். அதில், ஜெனினில் மட்டும் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸாவை போலவே, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நான்கு மருத்தவ நிலையங்களை இலக்கில் வைத்துள்ளது. ஜெனின் அகதிகள் முகாமின் ஊடகக் குழுவின் கூற்றுப்படி, இந்தப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் 470 கட்டமைப்புகளை அழித்தும் 153 வீடுகளில் சோதனைகளை நடத்தியும், 14 வான்வழித் தாக்குதல்களை நடத்தியும் உள்ளது. அகதிகள் முகாம்கள் மற்றும் நான்கு மருத்துவமனைகள் உட்பட ஜெனின் நகரின் 35 சதவீதத்திற்கான நீர் விநியோகத்தை இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்தும் மூடி வைத்துள்ளது. ஜெனின் அகதிகள் முகாமிலுள்ள மக்கள்தொகையில் இருபதாயிரம் பேரும், துல்கர்ம் அகதி முகாமின் மக்கள்தொகையில் முக்கால்வாசி பேரும் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இது வெளியேற்றப்பட்ட 40,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதை சாத்தியமற்றதாக்குகிறது. குறிப்பாக, வீடுகளை இடிப்பதுடன் சாலைகள் அமைக்கும் பணிகளும், முகாம்களை ஒரு முனையிலிருந்து மறு முனை வரை பல திசைகளில் துண்டிக்கப்படுவதும் அங்கு இடம்பெறுகின்றன.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படை 900 சோதனைச் சாவடிகளையும் தடைகளையும் ஏற்படுத்தி, மேற்குக் கரையை 300 தனித்தனி பகுதிகளாக துண்டித்துள்ளது. இது மக்களின் நடமாட்டத்தை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியுள்ளது.

இஸ்ரேலிய நாளேடான ஹாரெட்ஸ், இராணுவம் வெடிகுண்டு கருவிகள் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் எவரையும் சுட்டுத் தள்ளுவதற்கும், போர் மண்டலத்திலிருந்து சோதனைச் சாவடியை நோக்கி வரும் வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக வெளிப்படுத்தியுள்ளது.

பயங்கரவாத ஆட்சியைத் தூண்டும் வகையில், படையினர் வன்முறையில் ஈடுபட்டு வருவதால் இப்போது எதுவும் அனுமதிக்கப்படுகிறது. கேர்னல் முதல் கீழ்நிலை வரையிலான அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் படையினர் இப்போது தங்கள் முகங்களை மறைத்து வைத்துள்ளனர். மேலும், அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, கைது செய்யப்படுவதைத் தடுக்க ஊடக நேர்காணல்களில் அவர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட மாட்டாது.

மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதலானது, சியோனிசக் குடியிருப்புகளை விரிவுபடுத்துவதற்கும் மேற்குக் கரையை இணைப்பதற்குமான பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. 1993 ஆம் ஆண்டு ஒஸ்லோ ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டை முழுமையாக கொண்ட மற்றும் பாலஸ்தீனப் பிரதேசத்தின் 60 சதவீத பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதி C இலிருந்து பாலஸ்தீனியர்கள் முதலில் வெளியேற்றப்படுகின்றனர்.

பெத்லகேமில் உள்ள அகதிகள் உரிமைகளுக்கான பாடில் மையம், இஸ்ரேலின் நோக்கம் மேற்குக் கரையில் உள்ள “அகதிகள் முகாம்களை அகற்றி”, இஸ்ரேலிய காலனித்துவ ஆதிக்கத்தை முடுக்கிவிடுவதற்காக, “விரிவான அழிவு மற்றும் வேண்டுமென்றே கொலை செய்தல் உள்ளிட்ட படையெடுப்புகள் மற்றும் தாக்குதல்கள் மூலம் மேற்குக் கரையில் ஒரு புதிய நிலையை நிறுவுவதன் மூலம் இஸ்ரேலிய இருப்பை இயல்பாக்குவதாகும்” என்று கூறியது.

இஸ்ரேலிய இராணுவம் அகதிகள் முகாம்களை இடிப்பதில் கவனம் செலுத்துவது, ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்தை (UNRWA) அகற்றுவதற்கான நெதன்யாகுவின் முயற்சிகளுடன் சேர்ந்து வருகிறது. UNRWA நிறுவனம், பாலஸ்தீன பிரதேசங்கள், ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள சுமார் ஐந்து மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பாலஸ்தீன அகதிகளுக்கு முக்கிய நலன்புரி, சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை வழங்கி வருகிறது.

கடந்த மாத இறுதியில் இருந்து, இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் UNRWA நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளதால், இஸ்ரேல்/பாலஸ்தீனத்தில் இந்த ஐ.நா. நிறுவனம் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பார்வையில், அகதிகள் முகாம்களை அழிப்பது, UNRWA இருப்பதற்கான காரணத்தை நீக்குவதற்கு உதவுகிறது.

இது, இஸ்ரேல் / பாலஸ்தீனத்தில் செயல்படும் அனைத்து மனித உரிமை அமைப்புகள் மீதும் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலுக்கு வழி வகுத்துள்ளது. வெளிநாட்டு அரசாங்கங்களால் நிதியளிக்கப்படும் இஸ்ரேலிய மனித உரிமை குழுக்களிடமிருந்து நீதித்துறை பாதுகாப்பு மற்றும் வரி விலக்கு அந்தஸ்தை அகற்ற கோரும் சட்டத்தை பாராளுமன்றம் தாக்கல் செய்துள்ளது. 200 அல்லது அதற்கு மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் தாங்கள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நன்கொடைகளில் 80 சதவீதத்திற்கு சமமான வரியை செலுத்த வேண்டும் என்பது அனைத்து வெளிநாட்டு நன்கொடையாளர்களையும் தடுத்து நிறுத்தும்.

இது பாலஸ்தீனியர்களை ஆதரிக்கும் குழுக்களுக்கான உதவிகளை மேலும் துண்டிக்கவும், பாலஸ்தீன பகுதிகளின் இணைப்பை எளிதாக்கவும் உதவும். இஸ்ரேலிய மனித உரிமைகள் குழுவான B’tselem விளக்கியது போல், “சட்டத்தின் குறிக்கோள் நமது நிதி ஆதாரங்களை முடக்குவதன் மூலம் மனித உரிமை அமைப்புகளை அழிப்பதாகும்.”

மேற்குக் கரையில் இரும்புச் சுவர் இராணுவ நடவடிக்கை என்பது நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சின் மத சியோனிசக் கட்சி மற்றும் பிற அதிதீவிர தேசியவாத மற்றும் மதக் கட்சிகள், நெதன்யாகுவின் கூட்டணியில் நீடிப்பதற்கும், அதன் மூலம், ஓரளவிற்கு, அவரது தற்போதைய ஊழல் விசாரணையில் இருந்து அவரைப் பாதுகாப்பதற்கும், அவருக்கு கிடைத்த கைமாறாகும்.

ஸ்மோட்ரிச் தனது நிதி இலாகாவிற்கு கூடுதலாக, மேற்குக் கரையில் உள்ள அனைத்து சிவில் விவகாரங்களையும் மேற்பார்வையிடுகிறார். 1967 அரபு-இஸ்ரேலியப் போருக்குப் பின்னர், இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கான முழுமையான போரை நடத்தி, காஸா போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், மேற்குக் கரை மற்றும் காஸாவை இணைப்பதில் அவர் உறுதியாக உள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் தனது விரிவாக்க நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கும் என்று அவர் முழுமையாக எதிர்பார்க்கிறார்.

காஸா தெருவில் இஸ்ரேலிய மெர்காவா டாங்கி, 4 ஜனவரி 2024. [Photo by Yairfridman2003 / CC BY-SA 4.0]

இஸ்ரேலிய சிறைகளில் விசாரணை அல்லது குற்றச்சாட்டு இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களை விடுவிப்பதை உள்ளடக்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் நிர்வாகக் காவலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து மேற்குக் கரை குடியேற்றவாசிகளையும் விடுவித்தார். இது, “பாலஸ்தீன பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு, குடியேற்றங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் பற்றிய தெளிவான செய்தியை தெரிவிப்பதே இதன் நோக்கமாகும்” என்று அவர் கூறினார்.

மேற்குக் கரையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு சமூகங்களுக்கு எதிராக, இஸ்ரேலிய தற்காப்புக் குழுக்கள் தங்கள் பயங்கரவாத தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளன. ஜனவரி மாதத்தில் மட்டும், இஸ்ரேலிய குடியேறிகள் பாலஸ்தீன சமூகங்கள் மீது 375 தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவற்றில் ஆயுதமேந்திய தாக்குதல்கள், நில அபகரிப்புகள், உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் பயிர்கள் மற்றும் சொத்துக்களை அழித்தல் ஆகியவை அடங்கும் என்று இஸ்ரேலிய குடியேற்றம் மற்றும் நில அபகரிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் பாலஸ்தீன ஆணையத்தின் சுவர் மற்றும் குடியேற்ற எதிர்ப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாயன்று, பாலஸ்தீனிய செம்பிறைச் சங்கம், சட்டவிரோத குடியேற்றக்காரர்களால் அடிவயிற்றில் குத்தப்பட்ட 20 வயது ஊனமுற்ற நபரை வடக்கு நகரமான துபாஸில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றியதாக அதன் மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸும் பாலஸ்தீனிய அதிகார சபையும் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலை எதிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இஸ்ரேலிய தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, இஸ்ரேல் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மற்றும் போராளிகளை ஒழிப்பதாக இஸ்ரேல் செய்த அதே சாக்குப்போக்கைப் பயன்படுத்தி, பத்திரிகையாளர்கள் நிகழ்வுகளை செய்தி சேகரிப்பதைத் தடுத்து, ஜெனின் அகதிகள் முகாம் மற்றும் பிற முகாம்களுக்கு எதிராக பாலஸ்தீன அதிகாரசபை 52 நாட்கள் நீடித்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.