ட்ரம்ப்-நவரோவின் உலகளாவிய பொருளாதார போர் திட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவரது உலகளாவிய பொருளாதார போரின் சமீபத்திய தீவிரப்பாடு அண்மையில் “பரஸ்பர சுங்கவரிகள்” (reciprocal tariffs - அமெரிக்காவின் உற்பத்திப்பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் அதே சுங்கவரிகளை அமெரிக்காவும் விதிக்கும்) என்ற பதாகையின் கீழ் வரையறுக்கப்பட்டது. எவ்வாறாயினும், அவர் எடுத்துள்ள நடவடிக்கைகள் “பரஸ்பர சுங்கவரிகள்” என்ற வார்த்தை குறிப்பிடுவதைக் காட்டிலும் மிக விரிவானதாக இருக்கும்.

ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள “பரஸ்பர சுங்கவரிகள்” வெறுமனே அமெரிக்க பொருட்கள் மீது மற்ற நாடுகள் விதிக்கும் சுங்கவரிகளுடன் அமெரிக்காவிற்குள் வரும் அவற்றின் பொருட்கள் மீது சமமான வரிவிதிப்புகளுடன் பொருந்துவது பற்றியது அல்ல. அமெரிக்க நிறுவனங்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாக அது கருதும் எந்தவொரு நாட்டின் சுங்கவரிகள், விதிநெறிமுறைகள், கட்டாய வரிகள் அல்லது மானியங்கள் ஆகியவற்றிற்கு எதிராக அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்பதை உள்ளடக்கிய ஒட்டுமொத்த போர் திட்டத்தின் ஒரு சிறிய பகுதியாக இது இருக்கிறது. 

இடமிருந்து, வெள்ளை மாளிகை பணியாளர்களின் துணைத் தலைவர் ஸ்டீபன் மில்லர் (Stephen Miller), வர்த்தகம் மற்றும் உற்பத்திக்கான வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் பீட்டர் நவரோ (Peter Navarro) மற்றும் வெள்ளை மாளிகை பணியாளர்களின் செயலாளர் வில் ஷார்ஃப் (Will Scharf).  [AP Photo/Alex Brandon]

பொருளாதார போர் திட்டம் வர்த்தக மற்றும் உற்பத்தி கொள்கையில் ட்ரம்பின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பீட்டர் நவரோவால்(Peter Navarro) பெரும்பாலும்  வரையப்பட்டுள்ளது, அங்கு அவர் வர்த்தக செயலராக நியமிக்கப்பட்ட ஹோவார்ட் லுட்னிக் (Howard Lutnick) மற்றும் ட்ர்ம்பின் வர்த்தகப் பிரதிநிதியாகப் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஜேமிசன் கிரீர் (Jamieson Greer) ஆகியோருடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் பணியாற்றவுள்ளார்.

ஒரு தீவிர சீன எதிர்ப்பாளராக அறியப்படும் நவரோ – 2011 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அவர் சீனாவால் மரணம் (Death by China) என்ற புத்தகத்தை எழுதினார் – முதல் டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றினார். ஆனால் கருவூலச் செயலர் ஸ்டீவன் முனுசின் மற்றும் தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குனர் கேரி கோன் உட்பட மற்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளில் அவர் ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகக் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 6, 2021 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகுறித்த விசாரணையில் சாட்சியமளிக்க மறுத்தபின்னர் காங்கிரஸை அவமதித்ததற்காகக் கடந்த ஆண்டு நவரோவுக்கு நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ட்ரம்பைப் பாதுகாப்பதில் காங்கிரஸை அவர் மீறியதும், ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு, குறிப்பாகச் சீனாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு அவர் குரல் கொடுத்ததும், அவரை ட்ரம்பின் “அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக ஆக்கும் இயக்கத்திற்குள் உயர்தரப் பிரமுகர்  (MAGA royalty)”  என்று அழைக்கப்படும் உறுப்பினர் அந்தஸ்துக்கு உயர்த்தியது.

பல தசாப்தங்களாக நவரோவை அவதானித்து வந்ததாகக் கூறிய பெயர் குறிப்பிடப்படாத ஆதாரம் ஒன்றின் வார்த்தைகளை மேற்கோளிட்டு பைனான்சியல் டைம்ஸ் (FT) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது: “அவர் அடிப்படையில் சீனாவிடமிருந்து பொருளாதாரரீதியாகவும், இராணுவரீதியாகவும், புவிசார் அரசியல்ரீதியாகவும் அமெரிக்காவிற்கு ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலாக நோக்குகின்ற ஒரு பேர்வழி. அவர் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தும் ஒரு மனிதர்.”

நவரோ, முதல் ட்ரம்ப் நிர்வாகத்தில் அவருக்கிருந்த கட்டுப்பாடுகள் இல்லாமல் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 13 அன்று வெளியிடப்பட்ட “பரஸ்பர வர்த்தகம் மற்றும் சுங்கவரிகள்” (“Reciprocal Trade and Tariffs”) என்ற தலைப்பிலான வெள்ளை மாளிகை ஆவணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகள் தெளிவாக விளக்கியுள்ளன.

அமெரிக்கா நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறது என்ற வழக்கமான பல்லவியுடன் இது தொடங்குகிறது, நியாயமற்ற நடைமுறைகள் மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளை அணுகுவதற்கான மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலைமைகளால்அமெரிக்கத் தொழிற்சாலைகள் சுமையைத் தாங்கும்போது, ஒரு தொடர்ச்சியான மற்றும் பெரிய வருடாந்திர வர்த்தக பற்றாக்குறை ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றன 

இது நன்கு நிறுவப்பட்ட நடைமுறையாகும். ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் திட்டமிடும் ஏகாதிபத்திய சக்திகள் எப்பொழுதும் தங்களை மற்றவர்களின் செயல்களால் “பாதிக்ப்பட்டவர்களாக” காட்டிக் கொள்ள முயல்கின்றன—ஹிட்லர் நிச்சயமாக இந்த மூலோபாயத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

அமெரிக்கா பதிலளிக்கும் முதல் நடவடிக்கையாக சுங்கவரிகள் உயர்த்தப்படும் போது பதில் நடவடிக்கைகள் அதையும் தாண்டி நீட்டிக்கப்படும் என்று ஆவணம் கூறுகிறது.

அமெரிக்கா அதன் வர்த்தகக் கூட்டாளிகளால் விதிக்கப்படும் நடைமுறைகளுக்கு எதிராகப் பரஸ்பர நடவடிக்கை எடுக்கும். அமெரிக்காவின் வணிகங்கள், தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர்கள்மீது அதன் வர்த்தகக் கூட்டாளிகளால் விதிக்கப்படும் நியாயமற்ற, பாரபட்சமான அல்லது எல்லைக்கு அப்பாற்பட்ட வரிகள், மதிப்பு கூட்டு வரி உட்பட  (value-added tax) போன்றவை இதில் அடங்கும்.

எல்லைக்கு அப்பாற்பட்ட வரிகள் என்பது அரசாங்கங்கள் தங்கள் நாடுகளில் தொழில்நுட்ப நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட வருவாயில் சிலவற்றை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளைக் குறிக்கிறது, எடுத்துக்காட்டாக ஒரு டிஜிட்டல் சேவைகள் வரிமூலம்.

ஐரோப்பாவில் திணிக்கப்பட்ட மதிப்புக் கூட்டு வரி பிரச்சினை, நவரோவுக்கு ஒரு குறிப்பிட்ட இலக்காக உள்ளது. “பரஸ்பர” அமெரிக்க வரிவிதிப்புகளைத் திணிப்பதன் மூலம் இலக்கு வைக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புக் கூட்டு வரி “பின்பற்ற வேண்டிய முன்னுதாரணம்” என்று அவர் கூறினார்.

நவரோவைப் பொறுத்த வரையில், மதிப்புக் கூட்டு வரி “ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதிகளுக்கு பெருமளவு மானியம் அளித்தாலும், அமெரிக்க ஏற்றுமதிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கவரி விகிதத்தைக் கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்த்துகிறது.”

“சுங்கவரியற்ற தடைகள் அல்லது மானியங்கள் உள்ளிட்ட நியாயமற்ற நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் பிற நாடுகளில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள்மீது விதிக்கப்பட்ட கடுமையான ஒழுங்குமுறை தேவைகள் ஆகியவற்றின் விளைவாக அமெரிக்க வணிகங்கள், தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு ஏற்படும் செலவுகளை” ட்ரம்ப் நிர்வாகம் ஆராயும்  என்று ஆவணம் கூறுகிறது.

“சுங்கவரியற்ற தடைகள்” அல்லது “நடவடிக்கை” என்ற வரையறை, பரஸ்பர சுங்க எதிர்வினை முறையின் விரிவான அளவை வலியுறுத்துகிறது.

“இறக்குமதிக் கொள்கைகள், சுகாதார மற்றும் தாவர சுகாதார நடவடிக்கைகள், வர்த்தகத்திற்கான தொழில்நுட்ப தடைகள், அரசாங்க கொள்முதல், ஏற்றுமதி மானியங்கள், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு இல்லாமை, டிஜிட்டல் வர்த்தக தடைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான அல்லது தனியார் நிறுவனங்களின் போட்டிக்கு எதிரான நடத்தையை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளல் ஆகியவை உட்பட சரக்குகளில் சர்வதேச வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும், தடுக்கும் அல்லது தாமதப்படுத்தும் எந்தவொரு அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்லது கொள்கைகள் அல்லது நாணயமற்ற தடைகள்” ஆகியவை இந்த வரையறைக்குள் அடங்கும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எந்தவொரு அரசாங்கத்தின் உள்நாட்டுக் கொள்கைகளும் அமெரிக்க பெருநிறுவனங்களின் மீது எந்த விதத்திலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டால், முடக்ககூடிய வரிகளைத் சுமத்துவதற்கான ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்படும். இது பொருளாதார வரலாற்றில் பார்க்கப்பட்ட எதையும் விட மிக அதிகமாக உள்ளது.

நாணயங்களின் மதிப்பும் நெருக்கமாக ஆராயப்படும். அவற்றின் சந்தை மதிப்பிலிருந்து “அமெரிக்கர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் விலகுவதற்கு” காரணமாக இருக்கும் கொள்கைகள் இருந்தால், அவை சாத்தியமாகச் செயல்பாட்டிற்கான அடிப்படையாக மாற்றப்படும்.

அனைத்து அடிப்படைகூறுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக, அமெரிக்க நிர்வாகத்தின் “மதிப்பாய்வில்” “சந்தை அணுகல் மீது ஏதேனும் நியாயமற்ற வரம்புகளை விதிக்கிறது அல்லது அமெரிக்காவின் சந்தைப் பொருளாதாரத்துடன் நியாயமான போட்டிக்கு ஒரு கட்டமைப்பு தடையைத் திணிக்கும் வேறு எந்த நடவடிக்கையும்” ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதற்கான பொருளாக இருக்கும் என்று ஆவணம் குறிப்பிடுகிறது.

இந்தத் திட்டம், “அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளால்” ஏற்படும் இழப்புகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்று குறிப்பிடுகிறது. “அத்தகைய நடவடிக்கைகள் என்ன என்று அழைக்கப்படுகின்றனவா அல்லது எழுதப்பட்டவையா அல்லது எழுதப்படாதவையா என்பதைப் பொருட்படுத்தாமல்,” இது நடைமுறையில் செயல்படுகிறது.

வர்த்தகத் துறை, கருவூலம், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி உள்ளிட்ட அமெரிக்க முகமைகளும் மற்றும் பீட்டர் நவரோ (வர்த்தகம் மற்றும் உற்பத்திக்கான மூத்த ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்) ஏப்ரல் 1 ஆம் ட்ரம்புக்கு ஒரு அறிக்கையை வழங்குவார்கள்.

இந்த அறிக்கை வழங்கப்படுவதற்கு முன்னரே, ட்ரம்ப் சுங்கவரி விதிக்கும் போரை முடுக்கிவிட்டுகொண்டிருக்கிறார். கடந்த வாரத்தின் முற்பகுதியில், கார்கள், மருந்துகள் மற்றும் கணினி சிப்புகளின் (chips) இறக்குமதி மீது சுமார் 25 சதவீத சுங்கவரிகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இது 25 சதவீதம் மற்றும் அதனைவிட அதிகமாக இருக்கும். ஆண்டு முழுவதும் குறிப்பிடத் தக்க அளவு உயர்ந்து இருக்கும்,” என்று சிப்புகள் மற்றும் மருந்துகளைக் குறிப்பிட்டு ட்ரம்ப் கூறியுள்ளார். நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை அமெரிக்காவிற்கு மாற்றுவதற்கு “ஒரு சிறிய வாய்ப்பை” வழங்க விரும்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

நிதி ஊடகங்களில் குறைந்தது, “பரஸ்பரத்தன்மை” என்பதன் உண்மையான பொருள் பற்றி எந்த ஐயமும் இல்லை.

ஃபைனான்சியல் டைம்ஸ் இன் வர்த்தக செய்தியாளர் அலன் பியாட்டி எழுதியதைப் போல: “பரஸ்பரத்தன்மை என்பது வெறுமனே ட்ரம்பும் நவரோவும் கருதியது போலவே இருக்கும். அமெரிக்கா தான் விரும்பும் சுங்க வரிகளை மிகவும் நெகிழ்வான சட்ட அடிப்படையில், தன்னிச்சையான மற்றும் எளிதில் மாற்றக்கூடிய காலக்கோடுகளுடன் விதிக்கும் பல்வேறு கருவிகளை உருவாக்கியுள்ளது.”

இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து நிலவி வரும் உலகளாவிய வர்த்தக முறையை ட்ரம்பின் நடவடிக்கைகளும் திட்டங்களும் முற்றிலுமாகச் சீர்குலைப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது அதையும் விடத் தீவிரமானதாக இருக்கிறது.

1930 களில், நாணய முகாம்கள், வர்த்தக முகாம்கள் மற்றும் சுங்கவரிப் போர்கள் இருந்தன, அவை பொருளாதார பதட்டங்களையும் உறுதியற்ற தன்மையையும் உருவாக்கின. இதற்கு ஒரு குறிப்பிடத் தக்க உதாரணம் அமெரிக்க 1930 ஸ்மூட்-ஹாலி சட்டம் (Smoot-Hawley Act) ஆகும், இது ஆயிரக்கணக்கான இறக்குமதி பொருட்கள்மீது வரிகளை உயர்த்தியது. இந்தச் செயல் மற்ற நாடுகளும் பதிலுக்கு வரிகளை விதிப்பதற்கு வழிவகுத்தது, இது உலகப் பொருளாதார நிலைமையை மேலும் மோசமாக்கியது மற்றும் இரண்டாம் உலகப் போருக்கான நிலைமைகளை உருவாக்குவதில் பெரிய பங்கு வகித்தது.

உலகின் பிற பகுதிகளுக்கு எதிரான ஒரு பொருளாதாரப் போரை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார கொள்கைகளை நோக்கிய ட்ரம்பின் முன்னோக்கானது 1930 களின் நடவடிக்கைகளைக் காட்டிலும் ஒரு படி மேலே சென்று, ஒரு மூன்றாம் உலகப் போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறை மேலும் அதிகரிக்கிறது.