மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை, வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்திருந்த உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோர், வாய்மொழி மோதலில் ஈடுபட்டனர். இவை பகிரங்கமாக தொலைக்காட்சியில் வெளியாகின. இது, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் தோல்வியடைந்ததாலும், அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையே வளர்ந்து வரும் மோதலாலும் தூண்டப்பட்ட நெருக்கடியை அம்பலப்படுத்துகிறது.
இந்த வாரம் வெள்ளை மாளிகையில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் ஆகியோருடனான சந்திப்புகளுக்குப் பிறகு, உக்ரேனின் கனிம வளங்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திடும் விழாவிற்காக ஜெலென்ஸ்கி கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகைக்கு வந்திருந்தார்.
அதற்குப் பதிலாக, ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த மோதலைத் தொடர்ந்து ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
13 நிமிட உரையாடலின் போது, ட்ரம்பும் வான்ஸும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் தற்போதைய நிலை குறித்த ஒரு பேரழிவுகரமான சித்திரத்தை வரைந்தனர். “இப்போது நீங்கள் நாடு பூராக சுற்றித் திருந்து கட்டாய இராணுவ சேவையில் சேர்க்கப்பட்டவர்களை போர் முன்னரங்க நிலைகளுக்குச் செல்ல கட்டாயப்படுத்துகிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு மனிதவள பிரச்சினைகள் உள்ளது” என்று வான்ஸ் ஜெலன்ஸ்கியை குற்றம் சாட்டினார்.
“நீங்கள் மிகவும் ஒரு நல்ல நிலையில் இல்லை” என்று ட்ரம்ப் கூறினார். மேலும், “பல மில்லியன் மக்களின் உயிர்களுடன் சூதாடுகிறீர்கள், மூன்றாம் உலகப் போருடன் சூதாடுகிறீர்கள்” என்று குறிப்பிட்ட ட்ரம்ப், “உங்கள் நாடு பெரிய சிக்கலில் உள்ளது. இந்தப் போரில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்” என்று ஜெலன்ஸ்கி பார்த்து குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த ட்ரம்ப், “இந்த முட்டாள் ஜனாதிபதி [ஜோ பைடென்] மூலம், 350 பில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ உபகரணங்களை நாங்கள் உங்களுக்கு வழங்கினோம். நீங்கள் அங்கே புதைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் இருக்கும் படைவீரர்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
ஒபாமா மற்றும் பைடெனின் ஜனாதிபதி பதவிகளை ட்ரம்ப் கடுமையாக சாடிய போதிலும், அவரது முதல் நிர்வாகத்தின் போது அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளைக் குறிப்பிட்டு, “ஒபாமா உங்களுக்கு தாள்களைக் கொடுத்தார், நான் உங்களுக்கு ஜேவலின் ஏவுகணைகளைக் கொடுத்தேன்” என்று கூறி, உக்ரேனின் வழங்கிய ஆயுதங்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள ட்ரம்ப் சிரமப்பட்டார்.
ஜெலென்ஸ்கியை பகிரங்கமாகத் திட்டியதன் மூலம், ஜனநாயகக் கட்சியின் வசதியான உயர்-நடுத்தர வர்க்க அடித்தளத்திற்கு வெளியே பொதுமக்களிடையே குறிப்பிடத்தக்க ஆதரவைக் கொண்டிருக்காத உக்ரேனில் நடக்கும் போரினால், தேசிய அளவில் ஏற்பட்ட ஏமாற்றத்தை ட்ரம்ப் ஈர்க்க முயன்றார்.
ட்ரம்பின் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், வெள்ளைமாளிகை ஓவல் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த பகிரங்க மோதல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆழமான நெருக்கடிக்கு ஒரு சான்றாகும். குறிப்பாக உக்ரேன் போரின் பொறிவு அதன் கூர்மையான வெளிப்பாடாகும்.
உக்ரேனை ஒரு நேட்டோ படைத்தள அரசாக மாற்றும் திட்டமானது, இப்போது ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் ஐந்து நிர்வாகங்களை உள்ளடக்கியிருக்கிறது. 2008 ஆம் ஆண்டு, புஷ் நிர்வாகம் உக்ரேன் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக “மாறும்” என்று அறிவித்ததிலிருந்து, அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை செலவழித்து, ரஷ்யாவை சீர்குலைத்து அழிக்க, உக்ரேனை ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்தும் திட்டத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இழிபெயரை பணயம் வைத்துள்ளன.
பைடென் நிர்வாகத்தின் மைய வெளியுறவுக் கொள்கைத் திட்டமாக உக்ரேன் போர் இருந்தது. ரஷ்யாவை அதன் எல்லைகளில் ஒரு போருக்குள் இழுப்பதன் மூலமாக, பைடென் நிர்வாகம் அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் நேட்டோ கூட்டணியை ஐக்கியப்படுத்த நம்பியது. 2022 இல், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் பைடென், “நேட்டோ ஒருபோதும், இன்று இருப்பதைப் போல ஒருபோதும் ஒற்றுமையாக இருந்ததில்லை” என்று அறிவித்தார்.
நேட்டோ அதன் ஆரம்பத்தில் இருந்தே, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளை ஒரு “சமாதான அமெரிக்கானா” என்ற கட்டமைப்பிற்குள் ஐக்கியப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது: முதலில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக, பின்னர் ரஷ்யாவுக்கு எதிராக. இந்தக் கட்டமைப்பிற்குள், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான மற்றும் அட்லாண்டிக் கடல் கடந்த ஏகாதிபத்திய பதட்டங்களின் நடுவராகச் செயல்பட அமெரிக்கா பரந்த வளங்களைச் செலவிட்டு வந்தது.
ரஷ்யாவுக்கு எதிராக ஒரு “சூடான போரை” நடத்துவதன் மூலமாக நேட்டோ கூட்டணியை ஐக்கியப்படுத்துவதற்கான பைடெனின் முயற்சி, அமெரிக்காவிற்கும் அதன் நேட்டோ கூட்டாளிகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பிளவின் அடிப்படை யதார்த்தத்தை மூடிமறைக்க முனைந்தது.
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல் இப்போது புவிசார் அரசியலின் மையத்தில் அதிகமாக உள்ளது. அமெரிக்க உலகளாவிய மேலாதிக்க நெருக்கடிக்கு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மறுநோக்குநிலைபடுத்துவதன் மூலம் பதிலளிக்க ட்ரம்ப் நிர்வாகம் முயற்சிக்கும் வேளையில், ஐரோப்பிய சக்திகளுடனான அமெரிக்காவின் மோதல் ஆழமடைந்து வருகிறது.
ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகப்பெரிய புவிசார் அரசியல் போட்டியாளரான சீனாவுடன் போருக்கான விநியோக தளத்தை உருவாக்குவதற்காக, அமெரிக்கக் கண்ட நாடுகளை ஆதிக்கம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் கடந்த மாதம் பின்வருமாறு விளக்கியிருந்தார்:
ஐரோப்பிய பாதுகாப்பில் முதன்மையாக கவனம் செலுத்துவதை, அப்பட்டமான மூலோபாய யதார்த்தங்கள் அமெரிக்காவைத் தடுக்கின்றன. ... பசிபிக் பகுதியில் சீனாவுடனான போரைத் தடுப்பதற்கும், பற்றாக்குறையின் யதார்த்தத்தை அங்கீகரிப்பதற்கும், மற்றும் ஆதாரவள பரிமாற்றங்களைச் செய்வதற்கும் அமெரிக்கா முன்னுரிமை அளித்து வருகிறது.
ஜனவரி 7 அன்று, பதவியேற்பதற்கு வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்னர், ட்ரம்ப், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டிலும் அங்கத்துவ நாடாக இருக்கும் டென்மார்க்கின் ஒரு கடல் கடந்த பிராந்தியமான கிரீன்லாந்தை இணைத்துக் கொள்ள இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறை எழுப்பினார்.
ஜெலென்ஸ்கி உடனான அவரது சந்திப்புக்கு வெறும் இரண்டு நாட்களுக்கு முன்னர், ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத இறக்குமதி வரிகளை விதிக்கும் என்றும், ஐரோப்பிய ஒன்றியம் “அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக” உருவாக்கப்பட்டது என்றும் அறிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஆணையத்தின் வர்த்தக செய்தித் தொடர்பாளர் ஓலோஃப் கில் கூறுகையில், “சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கான நியாயமற்ற தடைகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாகவும் உடனடியாகவும் எதிர்வினையாற்றும்,” என்றார்.
ஸ்பானிய பிரதம மந்திரி பெட்ரோ சான்சேஸ், “முற்றிலும் நியாயப்படுத்த முடியாத மற்றும் நமது பொருளாதார இறையாண்மைக்கு ஒரு மறைமுகமான அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற சுங்கவரிகளைக் கொண்டு நமது பொருளாதாரங்கள் தாக்கப்படும் போது, நாம் எமது நலன்களைப் பாதுகாப்போம்” என்று குறிப்பிட்டார்.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வார்த்தை மோதல்கள், போட்டி நேட்டோ கூட்டணியை சூழ்ந்துள்ள தீயில் பெட்ரோலை ஊற்றியுள்ளது. “இன்று சுதந்திர உலகிற்கு ஒரு புதிய தலைவர் தேவை என்பது தெளிவாகியுள்ளது” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி காஜா கல்லாஸ் ஒரு உரையில் கூறினார். முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதியான பிரான்சுவா ஹாலண்ட், “ட்ரம்ப் நிர்வாகம் இனியும் எமது கூட்டாளி அல்ல” என்று குறிப்பிட்டார்.
இவ்வார தொடக்கத்தில், “அமெரிக்கா தனது படைகளை ஐரோப்பா கண்டத்திலிருந்து திரும்பப் பெறுவதாக அச்சுறுத்தி வருவதால், ஜேர்மனியில் பிரெஞ்சு அணுவாயுத திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களை நிறுத்த, ஜேர்மனியும் பிரான்சும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மறுநோக்கு நிலைப்படுத்துவதற்கான ட்ரம்பின் முயற்சிகள், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஒரு நெருக்கடியைத் தூண்டி விட்டுள்ளன. ரஷ்யாவுடனான மோதலைக் கைவிட்டு, நேட்டோவை உடைப்பது அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கிற்கு பேரழிவுகரமானதாக இருக்கும் என்று நம்பும் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகள், ட்ரம்பின் மாற்றத்தை ஆழமாக எதிர்த்து வருகின்றன. சமூக வேலைத்திட்டங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதலை அவர்கள் ஆதரிக்கின்ற அதேவேளையில், இந்த பிரச்சினை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்தை நேரடியாக பாதிக்கிறது.
“வெள்ளைமாளிகை ஓவல் அலுவலகத்தில் நடந்த ட்ரம்ப்-ஜெலென்ஸ்கி நிகழ்ச்சியில் புட்டின் வெற்றி பெற்றார்” என்று, ட்ரம்பின் கொள்கைகளை முழுமையாக ஆதரித்துவரும் வோல் ஸ்ட்ரீட் ஜர்னலின் ஆசிரியர் குழு தெரிவித்துள்ளது.
உக்ரேனிய போர் “அமெரிக்க சிப்பாய்கள் ஒரு துப்பாக்கிச் சூடு கூட நடத்தாமல்” ரஷ்யாவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் திறனை அமெரிக்காவிற்கு வழங்கியதாக ஜேர்னல் எழுதியது. இந்த “அடிப்படை ஆர்வம் மாறவில்லை, ஆனால் முழு உலகத்தின் முன்னிலையிலும் உக்ரேனை திட்டுவது, இந்த இலக்கை அடைவதை மிகவும் கடினமாக்கும்” என்று அது குறிப்பிட்டது.
அமெரிக்க செனட்டில் முன்னணி “CIA ஜனநாயகக் கட்சியைச்” சேர்ந்த எலிசா ஸ்லாட்கின், ஜெலென்ஸ்கியுடனான மோதல் “புட்டினையோ அல்லது ஜி ஜின்பிங்கையோ தவிர வேறு யாருக்கும் சிறந்த நாளாக அமையவில்லை” என்று கவலையுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதாவது, உக்ரேனில் ஏற்படும் ஒரு தலைகீழ் மாற்றம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சீனாவுடனான மோதலில் வலுப்படுத்துவதற்குப் பதிலாக, அதைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். அடுத்த செவ்வாயன்று காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் ட்ரம்ப் ஆற்றும் உரைக்கு பதிலளிக்கும் விதமாக, ஜனநாயகக் கட்சியினருக்காகப் பேச ஸ்லாட்கின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தில் எந்த போர்-எதிர்ப்பு கன்னையுமில்லை. ஜனநாயகக் கட்சியானது, ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த உறுதிபூண்டுள்ளது. இதற்கிடையே, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடனான மோதலைத் தூண்டும் செயல்பாட்டினூடாக, சீனாவுடன் மோதலுக்கு களம் அமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு அமெரிக்க காலனித்துவ சாம்ராஜ்யத்தை நிறுவுவதே ட்ரம்ப்பின் நோக்கமாகும்.
இந்த ஆழமடைந்து வரும் நெருக்கடியில், தொழிலாள வர்க்கம் எந்தவொரு நாட்டிலும் ஆளும் வர்க்கத்தின் ஏதேனும் ஒரு பிரிவுடன் அணிசேராமல், ஒரு சுயாதீனமான, சர்வதேசிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் ஊடாக, ஏகாதிபத்திய சக்திகளின் போர்த் திட்டங்களை எதிர்க்கும் சோசலிச சர்வதேசியவாத பதாகையின் கீழ் அணிதிரள வேண்டும்.