சுகாதார சேவையில் ஊதிய வெட்டுக்களுக்கு எதிராகப் போராடுவது எப்படி?

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கொடுப்பனவுகளை வெட்டுவதற்கான வரவு-செலவுத் திட்ட பிரேரணைகளுக்கு எதிராக சுகாதாரத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (HTUA) வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 24 மணி நேரம் அடையாள வேலை நிறுத்தமொன்றை அறிவித்துள்ளது. இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தாதிமார்கள், மருத்துவ தொழிலறிஞர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஏனைய ஊழியர்களும் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.

சுகாதார தொழிலாளர் நடவடிக்கைக் குழு, 'சுகாதார சேவையில் ஊதிய வெட்டுக்களுக்கு எதிராகப் போராடுவது எப்படி?' என்ற தலைப்பில் இந்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்காக ஒரு ஸூம் (Zoom) கூட்டத்தை இந்த வியாழக்கிழமை (மார்ச் 6), மாலை 7 மணிக்கு நடத்த முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்று, அதில் நடைபெறும் கலந்துரையாடல்களில் பங்குகொள்ளுமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று 20,000 மருத்துவர்கள் பங்குபற்றும் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இது குறித்து ஆராய்வதாக வாக்குறுதி வழங்கியதையடுத்து, அந்த நடவடிக்கையை இடைநிறுத்தியதாக தொழிற்சங்க அதிகாரத்துவம் நேற்று அறிவித்தது.

அரசாங்கத்தின் வாக்குறுதிக்கு தலையசைத்து, கடைசி நிமிடங்களில் இந்த நடவடிக்கையை நிறுத்தியமை, தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் உறுப்பினர்களின் உரிமைகளுக்காக உண்மையான போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு எதிராக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. அனைத்து தொழிற்சங்க தலைவர்களின் கடந்த கால பதிவுகளும் இது போன்றவையே ஆகும்.

சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு, வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு எதிரான சுகாதார ஊழியர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களின் மேலதிக நேர ஊதியம் மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.

ஏனைய அரச துறைகளைப் போலவே, சுகாதார ஊழியர்களுக்கும் பணவீக்கத்தை ஈடுகட்டப் போதாத சிறிய ஊதிய உயர்வுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன; பல்வேறு கொடுப்பனவுகள் குறைக்கப்படுவது, பதவி உயர்வுகளை நீண்ட காலத்திற்கு தாமதப்படுத்துவது மற்றும் தாங்க முடியாத வேலைச் சுமைகளும் இந்த வெட்டுக்களில் அடங்கும்.

அரசாங்கம் 2025 முதல் 2027 வரை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்ட மிகக் குறைந்த ஊதிய உயர்வுகளை மட்டுமே வழங்கியுள்ளது. ஒரு தொழிற்சங்க தலைவரின் கூற்றுப்படி, புதிய விகிதங்களுக்கு ஏற்ப, ஒரு இளநிலை தாதி, சிரேஷ்ட தாதி, மேட்ரன் ஆகியோருக்கு முறையே மாதத்திற்கு ரூபா 13,000, 17,500 மற்றும் 22,000 என்ற தொகையில் மேலதிக நேர ஊதிய இழப்பு ஏற்படுகிறது.

மூன்றாம் தரத்திலிருந்து இரண்டாம் தரத்திற்கான தாதிமாரின் பதவி உயர்வு காலம், ஐந்து ஆண்டுகளிலிருந்து பத்து ஆண்டுகளாகவும், இரண்டாம் தரத்திலிருந்து முதல் தரத்திற்கான பதவி உயர்வு காலம், ஏழு ஆண்டுகளிலிருந்து பதினொரு ஆண்டுகளாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஊதிய உயர்வுகளை தாமதப்படுத்துவது மட்டுமன்றி, ஓய்வு பெறும் வயது வரை சில தாதிமாரால் முதல் தரத்தை அடைய முடியாமல் போகும்!

மிக முக்கியமான கேள்வி: சிறந்த வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லாத மாத வருமானத்தையும் கூட வெட்டிக் குறைப்பதற்கு எதிராகப் போராடுவது எப்படி? என்பதாகும்.

தொழிற்சங்க தலைவர்கள், அரசாங்கத்துக்கு வீண் கோரிக்கைகளை முன்வைப்பதற்காகவே சுகாதார ஊழியர்களின் போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

மார்ச் 6 அன்று,. பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சுக்கான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாலேயே, சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்த எதிர்ப்புக்கு அழைப்புவிடுத்துள்ளனர். அவர்களின் நோக்கம், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து சலுகைகளைப் பெற முடியும் என்ற மாயையைப் பரப்புவதற்கே அன்றி, தங்கள் உரிமைகளுக்கான உண்மையான போராட்டத்தைத் தொடங்குவதற்கு சுகாதார ஊழியர்களை அணிதிரட்டுவதற்காக அல்ல.

27 பெப்ரவரி 2025 அன்று வரவு=செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு எதிராக மாத்தறை பொது மருத்துவமனையில் தாதிமார் போராட்டம் நடத்திய போது

ஏனைய துறைகளில் உள்ள அவர்களின் சகாக்களைப் போலவே, சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும், 2023 முற்பகுதியில் இருந்து நடைமுறையில் உள்ள, ரணில் விக்கிரமசிங்க அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்ட அலைகளை காட்டிக்கொடுத்து வந்துள்ளனர்.

அகில இலங்கை தாதியர் சங்கம் மற்றும் அரச சேவை ஐக்கிய தாதிமார் சங்கம் உட்பட ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார தொழிற்சங்கங்கள், எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்கவில்லை.

அகில இலங்கை தாதியர் சங்க செயலாளர் எச்.எம்.எஸ். மெதிவத்த, இது “மக்கள் சார்பு' அரசாங்கத்தின் இறுதி வரவு-செலவுத் திட்டம் அல்ல, எனக் கூறினார். எதிர்கால வரவு-செலவுத் திட்டம் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என அர்த்தப்படுத்தவே அவர் முயற்சிக்கின்றார். அரசாங்கம் “திருப்திகரமான ஊதிய உயர்வை முன்மொழிந்துள்ளது” எனக் கூறி அவர் அதைப் பாராட்டினார்.

அரசாங்கம் பகிரங்க சுற்றுநிரூபங்கள் வெளியிடும் போது ஊதியம் அல்லது கொடுப்பனவு வெட்டு ஏதேனும் இருந்தால், அவற்றை எதிர்க்க தனது சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அரச சேவை ஐக்கிய தாதிமார் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவ ஆனந்த ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு பயனற்ற அழுத்தம் கொடுப்பதன் மூலம் நமது உரிமைகளை வெல்ல முடியும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் பரப்பும் பொய்களை நம்ப வேண்டாம்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்வின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தால் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளே, இந்த வெட்டுக்களின் தோற்றுவாய் ஆகும்.

ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சுமத்துவதற்கும், வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கும், முதலீட்டாளர்களதும் பெரும் வணிகங்களினதும் இலாபத்தை அதிகரிப்பதற்காவுமே, அரச திரைசேரிக்கு பிரமாண்டமான வருவாயை ஈட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை, நிதிக் குறைப்பால் பாதிக்கப்பட்டுள்ள அதே வேளை, பணம் செலுத்தக்கூடியவர்களுக்காக மருத்துவமனைகள் மற்றும் ஏனைய சுகாதார நிறுவனங்கள் உட்பட தனியார் சுகாதார சேவைகள், காளான்கள் போல் பெருகி வருகின்றன.

ஜனாதிபதி, தனது வரவு-செலவுத் திட்ட உரையின் போது, பொது சுகாதாரத்திற்காக ரூபாய் 604 பில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவீதம் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். அரசாங்கமும் ஊடகங்களும், இதை “வரலாற்றிலேயே” பெரிய அதிகரிப்பாக வர்ணிக்கின்றன.

இருப்பினும், இலவச பொது சுகாதார சேவையை சீர்திருத்துவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.84 சதவீதம் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என 2015 இல் நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் துறையில் பிரமாண்டமான சரிவுகள் ஏற்பட்டுள்ளன. 2020 முற்பகுதியில் கோவிட்-19 தொற்றுநோய் தலைதூக்கியதுடன் இது அம்பலத்துக்கு வந்தது. பின்னர் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத மற்றும் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடி, சுகாதார சேவைக்கு அழிவையே தந்துள்ளது.

வைத்தியர்கள் மற்றும் தாதிமார் உட்பட தொழிலறிஞர்களின் பற்றாக்குறை, பழைய கட்டிடங்கள், பழைய உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளதும் ஆய்வகங்களதும் பற்றாக்குறை இலவச சுகாதார சேவையைப் பாதிக்கின்றன. நோயாளிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இருதரப்பினரும் துன்பப்படுகின்றனர்.

சிறிய ஊதிய உயர்வுகள் மற்றும் ஏனைய சலுகை வெட்டுக்களும் சுகாதாரத்துறைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. பெரும்பாலான அரச ஊழியர்கள் கொடூரமான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஊதிய உயர்வுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இலட்சக்கணக்கான தொழில்கள் அழிந்து போகும் வகையில் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்குதலும் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையின் நெருக்கடியானது உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு நாட்டிலும், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களதும் அவற்றின் ஆட்சிகளதும் முதல் பலிக்கடா, சுகாதார சேவை மற்றும் ஏனைய சமூகநலத் திட்டங்களே ஆகும். பெரும் வணிக நிறுவனங்கள் இலவச பொது சுகாதாரத்தை தங்கள் இலாபத்திற்கு ஒரு தடையாகக் கருதுவதோடு, அதை முழுமையாக நீக்கி, சுகாதார சேவையை தனியார் இலாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற விரும்புகின்றன.

இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏனைய தொழிலாளர் பிரிவினருடன் ஐக்கியப்பட்டு, தங்ககளின் அரசியல் மற்றும் தொழில்துறை சக்தியை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே சுகாதார ஊழியர்களால் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.

முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு உழைக்கும் மக்கள் பொறுப்புச் சொல்ல வேண்டியதில்லை. சுகாதாரத் துறையிலும் மற்றும் அனைத்து தொழிலாளர் பிரிவினரதும் கடுமையான போராட்டங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய கடந்த கால படிப்பினை என்னவெனில், முதலாளித்துவ முறைமையின் கீழ் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்பதே ஆகும்; தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கீழ் தொழிலாளர்களால் உண்மையான போராட்டத்தை நடத்த முடியாது; தொழிற்சங்க அதிகாரத்துவம் முதலாளித்துவத்திற்கு விசுவாசமாக இருப்பதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்ளது.

தொழிலாளர்களே செல்வத்தின் உண்மையான உற்பத்தியாளர்களாக இருப்பதோடு உயரும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப சிறந்த ஊதியத்தை கோருவதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. சுகாதாரம் மற்றும் கல்வியும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் அடிப்படை உரிமைகளாகும்.

சிறந்த ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளுக்காகவும், பரந்த மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும் நடத்த வேண்டிய போராட்டத்தை, தொழிலாளர் வர்க்கம் தனது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதற்காக, அனைத்து தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக, மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் உட்பட அனைத்து வேலைத் தளங்களிலும் தொழிலாளர்களால், ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கை குழுக்களை உருவாக்குவது அவசியம்.

நாங்கள், பிரதான முன்நடவடிக்கையாக சுகாதார தொழிலாளர் நடவடிக்கைக் குழுவை உருவாக்கியுள்ளதோடு ஒவ்வொரு வைத்தியசாலை மற்றும் சுகாதார நிறுவனத்திலும் எங்களுடன் இணைந்து இதே போன்ற குழுக்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த ஆரம்ப நடவடிக்கைகளைப் பற்றி கலந்துரையாடி உங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

பொது சுகாதார ஊழியர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கை குழு பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

  • வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதை நிராகரிக்கவும்! இந்த பிரமாண்டமான நிதியானது சுகாதாரம், கல்வி மற்றும் சமூக திட்டங்களை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்!
  • சரிந்து வரும் சுகாதார சேவையை சீரமைத்து நவீனமயமாக்குவதற்காக பில்லியன் கணக்கில் நிதியை ஒதுக்கீடு செய்! மேலும் சுகாதார ஊழியர்களை நியமித்திடு!
  • உயரும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப சிறந்த ஊதியம் வேண்டும்!
  • தொழிலாளர்களை தரங்களின் அடிப்படையில் பிரிக்கும் தொழிற்சங்கங்களின் முயற்சிகளை நிராகரித்து, அனைத்து சுகாதார ஊழியர்களின் மற்றும் ஒட்டுமொத்தமாக தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக நடவடிக்கை குழுக்கள் போராட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தால் தூண்டிவிடப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு ஒன்றிணைந்த, சர்வதேச பிரதிபலிப்பு அவசியமாகும். இலங்கையின் நடவடிக்கைக் குழுக்கள், சர்வதேச போராட்டத்திற்கான ஒருங்கிணைப்பு மையமாக வளர்வதற்கு, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் இணைய வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வெல்வதற்கு, சர்வதே நாணய நிதியம் ஆணையிட்டுள்ள, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கை குழு வலியுறுத்துகிறது.

கூட்டத்தில் இணைந்துகொள்ள இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்.