மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
பங்குனி 7ம் திகதி வெள்ளியன்று இடம்பெற்ற “அறிவியலுக்காக எழுந்து நில்” போராட்டங்கள், பாசிச ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. அறிவியல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதல்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், தொழிலாளர்கள், தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வாஷிங்டன் டி.சி. மற்றும் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
சோசலிச சமத்துவக் கட்சி இந்த ஆர்ப்பாட்டங்களை வரவேற்கிறது. தொழிலாள வர்க்கத்தை சாத்தியமானளவுக்கு பரந்தளவில் அணிதிரட்டவும் மற்றும் போராட்டங்களை சர்வதேச அளவில் விரிவுபடுத்தவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அத்தியாவசிய பொது சுகாதாரத் திட்டங்கள், பூமியின் வானிலை மற்றும் காலநிலையைக் கண்காணிப்பதற்கான உள்கட்டமைப்பு, ஏரிகள், ஆறுகள், காடுகள், புல்வெளிகள், மீன்கள், வனவிலங்குகள் மற்றும் பலவற்றின் ஆரோக்கியத்தை அழிப்பதற்கு எதிராக உலகளாவிய போராட்டம் நடத்தப்பட வேண்டும்.
இந்தத் தாக்குதல் “அரசு செயல்திறனை” மேம்படுத்துதல் என்ற பெயரில் பாசிச பில்லியனர் எலோன் மஸ்க்கால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது, பெருநிறுவன தன்னலக்குழுவின் செல்வக் குவிப்பு மீதான அனைத்து வரம்புகளையும் ஒழித்துக்கட்டுவதற்கான ஓர்வெல்லியனின் இரட்டைப் பேச்சாகும்.
குறிப்பாக, ட்ரம்ப்பும் எலோன் மஸ்க்கும் பொது சுகாதாரத்தின் அனைத்து அம்சங்களிலும் இலக்கு வைத்துள்ளனர். ஏற்கனவே சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் (HHS) 13 பிரிவுகளில் 5,000 க்கும் மேற்பட்ட பதவிகளைக் குறைத்துள்ளனர். இவர்களுடைய தலைமை முகவர் HHS செயலாளர் ரோபர்ட் எப். கென்னடி ஜூனியர் ஆவார். இவர், அறிவியல் மற்றும் முன்னேற்றத்தை முழுமையாக நிராகரிப்பதை உள்ளடக்குகிறார்.
எந்தவொரு பொருத்தமான சுகாதாரத் தகுதிகள் எதுவும் இல்லாமல், தடுப்பூசி எதிர்ப்பு தவறான தகவல்கள் மற்றும் போலித்தனங்களை வழங்குபவர்களில் மிகவும் இழிபுகழ் பெற்றவர்களில் ஒருவரான கென்னடி, ஒரு காலத்தில் உலகின் தலைசிறந்த பொது சுகாதார நிறுவனங்களாக இருந்தவற்றை இப்போது மேற்பார்வையிடுகிறார். தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய், இந்த குளிர்காலத்தில் ஏற்கனவே 20,000 அமெரிக்கர்களைக் கொன்ற ஒரு பேரழிவு காய்ச்சலான, H5N1 “பறவை காய்ச்சல்” தொற்றுநோயின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் மற்றும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்காவில் மிக மோசமான தட்டம்மைநோய் வெடிப்பு உள்ளிட்ட பல சுகாதார நெருக்கடிகளைக் கையாள்வதற்கு கென்னடி பொறுப்பாக இருக்கிறார். அறிவியலின் இந்த கொடூரமான எதிர்ப்பாளர் HHS இன் தலைமையில் இருப்பதால், அமெரிக்க மற்றும் உலக மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை மிகைப்படுத்த முடியாது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் முதல் ஆறு வாரங்களில் மட்டுமே அறிவியலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான தாக்குதல்களில் பின்வருவன உள்ளடங்கும்:
- உலக சுகாதார அமைப்பிலிருந்தும், எல்லைகள் தெரியாத வைரஸ்கள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து வகையான சர்வதேச ஒத்துழைப்பிலிருந்தும் விலகுதல்.
- காலநிலை மாற்றத்தின் யதார்த்தத்தை மறுப்பது மற்றும் அதை ஏற்படுத்துவதில் பெருவணிகங்கள் மற்றும் புதைபடிவ எரிபொருள் தொழில்களின் பங்கு பற்றிய எந்தவொரு விவாதத்தையும் தடை செய்ய முயல்வது.
- தேசிய சுகாதார நிறுவனங்களுக்கான பில்லியன் கணக்கான நிதியை வெட்டுவது உட்பட, பல நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சியைப் பாதிக்கும் நிதி முடக்கங்களைச் அமுல்படுத்துதல்.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, தேசிய பூங்கா சேவை மற்றும் வன சேவையில் கிட்டத்தட்ட 5,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தல்
- பறவைக் காய்ச்சல் தொடர்பான அறிவியலை மூடிமறைக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான முக்கிய மையங்களின் (CDC) அறிக்கைகளை கையாளுதல், அதே நேரத்தில் பொது சுகாதாரம் மற்றும் பிற கூட்டாட்சி அரசு நிறுவனங்கள் முழுவதும் மீதும் வாயடைப்பு உத்தரவைத் திணித்தல்
- கல்வித் துறையை முற்றிலுமாக கலைக்கப் போவதாக அச்சுறுத்தல்
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு பரந்த நிஜ-உலக தாக்கங்களை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாக, அவை அதிதீவிர வலதுசாரி அரசியலின் குணாம்சமான சித்தாந்த அம்சங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன: இவை அறிவியல், கல்வி, பொது சுகாதாரம், மெய்யியல் சடவாதம் மற்றும் அறிவொளியின் முற்போக்கான மரபியம் மீதான அவமதிப்பாகும்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிதீவிர தேசியவாத “அமெரிக்கா முதலில்” என்ற நிகழ்ச்சி நிரல், காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும், தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் அவசியமான சர்வதேச அறிவியல் ஒத்துழைப்புக்கு இயல்பாகவே விரோதமாக உள்ளது.
இயற்கையையும் சமூகத்தையும் அறிவியல் ரீதியாகப் புரிந்துகொள்வதற்கான போராட்டம், இனத்தின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் அனைத்து முயற்சிகளையும் நிராகரிக்க வேண்டும். இது, சமூக எதிர்ப்பை அடக்குவதற்காக முதலாளித்துவ ஆளும் உயரடுக்கால் உருவாக்கப்பட்ட ஒரு சமூகக் கட்டமைப்பாகும். இதற்கு, பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் முயற்சிகள் உட்பட, புலம்பெயர்ந்தோர் மீதான இரு கட்சி தாக்குதல்களை வெளிப்படையாக நிராகரிப்பது அவசியமாகும்.
இருப்பினும், அறிவியலின் எந்தவொரு பாதுகாப்பையும், இன்றைய பல போராட்டங்களுக்கு ஒரு தளமாக இருக்கும் ஜனநாயகக் கட்சியின் கைகளில் விட்டுவிட முடியாது. நெடுங் கோவிட் மூலம் முடிவில்லாத பாரிய தொற்று, இறப்பு மற்றும் பலவீனப்படுத்துதல் என்ற “என்றென்றும் கோவிட்” கொள்கையை பைடென் நிர்வாகம்தான் செயல்படுத்தியது. கோவிட்-19 இன் தொடர்ச்சியான பரவல், பறவைக் காய்ச்சலின் தோற்றம் மற்றும் தட்டம்மை போன்ற நீண்டகாலத்துக்கு முன்பே அழிக்கப்பட்ட நோய்க்கிருமிகள் மீண்டும் வருவது ஆகியவை அனைத்தும், ட்ரம்ப் மற்றும் கென்னடிக்கு வழி வகுத்த பைடென் நிர்வாகத்தின் பொது சுகாதாரத்தை பகிரங்கமாக நிராகரித்ததன் விளைவாகும்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, முதல் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக “அறிவியலுக்கான பேரணி” என்ற பதாகையின் கீழ் இதேபோன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில், உலகளவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். இன்று இந்தப் போராட்டங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வது, அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் இரண்டு கட்சிகளில் ஒன்றான ஜனநாயகக் கட்சியின் மீது அழுத்தம் கொடுக்கும் நோக்கில் எந்தவொரு மூலோபாயமும் தோல்வியடைந்ததற்கான சான்றாகும்.
ஜனநாயகக் கட்சியினருடன் முறித்துக் கொள்வது என்பது, ஆளும் உயரடுக்கிற்கு எதிரான எந்தவொரு சுயாதீனமான சவாலையும் நீண்ட காலமாக நசுக்கி வந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் முறித்துக் கொள்வதையும் அவசியமாக்குகிறது. நூறாயிரக் கணக்கான அமெரிக்கர்களின் தேவையற்ற உயிரிழப்புகளுக்கு இட்டுச் சென்ற கோவிட்-19 தொற்றுநோயின் உச்சத்தில் தொழிற்சாலைகள், வேலையிடங்கள் மற்றும் பள்ளிகளை பாதுகாப்பற்ற முறையில் மீண்டும் திறப்பதற்கு போலி-இடது அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளுடன் (DSA) சேர்ந்து, அவர்களும் மத்திய பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இன்றைய போராட்டங்களின் உத்தியோகபூர்வ ஆதரவாளரும், அனுசரணையாளருமான ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம் (UAW) குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். இது ட்ரம்ப் நிர்வாகத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறது. கடந்த செவ்வாயன்று, கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு எதிராக ட்ரம்ப் அவரது சமீபத்திய சுற்று சுங்கவரிகளை அறிவித்த பின்னர், UAW தலைவர் ஷான் ஃபெயின், “தொழிலாள வர்க்கத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏப்ரல் மாத வாகன கட்டணங்களை வடிவமைக்க வெள்ளை மாளிகையுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு மற்றும் வாகனத் தொழில்துறையிலும் அதற்கு அப்பாலும் ஆயிரக் கணக்கான பணிநீக்கங்கள் விளையக்கூடும் என்பதால், சுங்கவரிகள் தொழிலாள வர்க்கத்திற்கு அழிவை மட்டுமே கொண்டு வரும் என்பதை விஞ்ஞானபூர்வமாக பொருளாதாரம் படிக்கும் எவரொருவரும் அறிவர்.
அறிவியலுக்கான போராட்டம் அனைத்திற்கும் மேலாக ஒரு வர்க்கப் பிரச்சினையாகும். நாஜிக்களின் புத்தக எரிப்பைப் போலவே, ஒவ்வொரு பிற்போக்குத்தனமான அரசாங்கமும் வரலாற்றுரீதியில் காலாவதியான சமூக வர்க்கமும் தீர்க்கமான அரசியல் இலக்குகளுக்காக அறிவியலையும் சடவாத உலக கண்ணோட்டத்தையும் இழிவுபடுத்தி துன்புறுத்தி வந்துள்ளன. இவ்விதத்தில் அறிவியலின் வளர்ச்சி எப்பொழுதும் முற்போக்கான சமூக சக்திகளைச் சார்ந்துள்ளது.
முதலாளித்துவத்தின் கீழ், சர்வதேச தொழிலாள வர்க்கம் சமூகத்தில் புரட்சிகர சக்தியாக உள்ளது. அதன் புறநிலை இருப்பு முதலாளித்துவ அரசு, தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், பெருநிறுவன செல்வந்த தட்டுக்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ சமூகபொருளாதார அமைப்புமுறைக்கு நேர் எதிராக நிற்கிறது.
நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் பசி மற்றும் நோய்களை ஒழிக்கவும், அறியாமை மற்றும் மாயவாதத்தை வெல்லவும், உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கவும் சாத்தியமாக்கியுள்ளது. மேலும், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) புரட்சி மூலம் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகளில் ஏற்பட்ட புரட்சிகரமான முன்னேற்றங்கள், மனித தொடர்புக்கான தடைகளை உடைத்து, வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத அளவிற்கு அனைத்து மனிதகுலத்தையும் கல்வி கற்பிக்கவும் ஒருங்கிணைக்கவும் சாத்தியமாக்கியுள்ளன.
தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே அறிவியலுக்கும் மனித முன்னேற்றத்திற்குமான போராட்டத்தை நடத்த முடியும். விஞ்ஞானிகள் இப்போது மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களைப் பாதிக்கும் அதே பாட்டாளி வர்க்கமயமாக்கல் செயல்முறையை அனுபவித்து வருகின்றனர்.
தங்கள் வாழ்க்கைத் தரங்கள், வேலைகள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ளும் அனைத்துத் தொழிலாளர்களுடனும் விஞ்ஞானிகள் தங்கள் பொதுவான நலன்களை அங்கீகரிக்க வேண்டும். உங்கள் கல்வி நிலை அல்லது சம்பளம் எதுவாக இருந்தாலும், அமெரிக்காவை ஆளும் தன்னலக்குழுவிற்கு, நீங்கள் மற்ற தொழிலாளர்களைப் போலவே செலவழிக்கத்தக்கவர்.
அறிவியலை உண்மையாகப் பாதுகாப்பதற்கு, அறிவியல் நிறுவனங்களில் உள்ளவர்கள் உட்பட அனைத்து கூட்டாட்சி அரசு ஊழியர்களும் வேலை இழப்பு, நிதி முடக்கம் மற்றும் பணி நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக பெரும் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு தயாராக வேண்டும். இது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிராக முழுத் தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
இயற்கை உலகைப் புரிந்து கொள்வதற்கு அவசியமான அதே விஞ்ஞான வழிமுறைகள் சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். முதலாளித்துவம் என்பது வரலாற்றுரீதியில் காலாவதியாகிவிட்ட ஒரு சமூக அமைப்புமுறையாகும். அது, மனிதகுல முன்னேற்றத்திற்கு பிரதான தடையாக நிற்கிறது என்பதை ஒரு சடவாத பகுப்பாய்வு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரையும், சர்வதேச இளைஞர் மற்றும் சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள் அமைப்பு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறும், புரட்சிகர சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்பவும், தனியார் இலாபத்திற்குப் பதிலாக சமூக சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச சமுதாயத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக அறிவியலைப் பாதுகாப்பதை முன்னெடுத்துச் செல்லவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.