மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மனிதகுலத்திற்கு எதிராக மேற்கொண்ட குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிடியாணை பிறப்பித்ததை அடுத்து, பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே செவ்வாயன்று மணிலாவில் உள்ள நினாய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். டுடெர்ட் கைது செய்யப்பட்ட பன்னிரண்டு மணி நேரத்திற்குள், நெதர்லாந்திலுள்ள ஹேக்கிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
மூன்று நீதிபதிகள் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றக் குழு பிறப்பித்த 15 பக்க பிடியாணையில், நாட்டின் தெற்கில் உள்ள டாவோவின் மேயராகவும், ஜனாதிபதியாகவும் இருந்த காலத்தில், “போதைப்பொருட்களுக்கு எதிரான போர்” என்று அழைக்கப்படுவதன் ஒரு பகுதியாக, அப்பாவி பிலிப்பைன்ஸ் பொதுமக்களுக்கு எதிராக டுடெர்ட் படுகொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பத்தாயிரக் கணக்கானவர்களை படுகொலை செய்த போலிஸ் மற்றும் கண்காணிப்பாளர்கள் உள்ளடக்கிய ஒரு படுகொலை வலையமைப்பை டுடெர்ட் ஒழுங்கமைத்து, ஊக்குவித்து, நிதியளித்து, மேற்பார்வையிட்டார்.
டுடெர்ட்டேயின் கைதும் நாடுகடத்தலும், அந்நாட்டின் புவிசார் அரசியல் திசை தொடர்பாக பிலிப்பைன்ஸ் உயரடுக்கிற்குள் நடந்து வரும் அரசியல் போரின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது. மே மாதம் நடைபெறவிருக்கும் ஒரு இடைக்காலத் தேர்தலின் மத்தியில் நாடு உள்ளது. இது, ஒருபுறம் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருடன் கூட்டணி வைத்த சக்திகளாலும், மறுபுறம் அவரது போட்டியாளரும் முன்னாள் ஜனாதிபதியின் மகள் துணை ஜனாதிபதி சாரா டுடெர்ட்டுடன் கூட்டணி வைத்த சக்திகளாலும் கடுமையாகப் போட்டியிடப்படுகிறது. மார்கோஸை எதிர்க்கும் பட்டியலில் ரோட்ரிகோ டுடெர்ட்டே மிகவும் செல்வாக்கு மிக்க நபராகவும், அரசியல் ஞானத்தந்தையாகவும் உள்ளார்.
சீனாவுடனான போருக்கான வாஷிங்டனின் தீவிர தயாரிப்புகள் பிலிப்பைன்ஸ் உயரடுக்கினரிடையே மோதலுக்கு எரியூட்டுகின்றன. சீனாவுடனான பொருளாதார உறவுகளுக்கும் அமெரிக்காவுடனான அரசியல் உறவுகளுக்கும் இடையே சமநிலைப்படுத்துவது முற்றிலும் சாத்தியமற்றதாகிவிட்டது. டுடெர்ட் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், பிலிப்பைன்ஸ் வெளியுறவுக் கொள்கையை வாஷிங்டனிலிருந்து விலகிச் செல்ல முயன்றார். மேலும், அமெரிக்காவுடனான பல கூட்டு இராணுவப் பயிற்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்த டுடெர்ட்டே, தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய நீர்நிலைகள் தொடர்பாக சீனாவிற்கு எதிரான இறையாண்மை உரிமை கோரல்களைத் பின்தொடர மறுத்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியின் மகனான மார்கோஸ் ஜூனியர், வாஷிங்டனின் போர் உந்துதலில் பிலிப்பைன்ஸை மீண்டும் ஒருங்கிணைத்துள்ளார். அமெரிக்கப் படைகளுக்கு இராணுவத் தளங்களைத் திறந்து வைத்துள்ள அவர், தென் சீனக் கடலில் ஆளில்லா விமானங்களைக் கொண்டு சீனாவுடனான மோதல்களை மேற்பார்வையிட பென்டகனை அனுமதித்துள்ளார். அத்துடன், கிட்டத்தட்ட சீனா முழுவதையும் குறிவைக்கும் திறன் கொண்ட ஒரு இடைநிலை தூர டைபூன் வகை ஏவுகணை செலுத்தி அமைப்பை நாட்டிற்கு அமெரிக்கா நிலைநிறுத்துவதற்கு அங்கீகாரமும் மார்கோஸ் ஜூனியர் அளித்துள்ளார்.
“போதைப்பொருட்களுக்கு எதிரான போர்” என்பது மார்கோஸ் ஜூனியருக்கும் டுடெர்ட்டேவுக்கும் இடையிலான பிளவு அல்ல. டுடெர்ட்டேயின் கொள்கைகளை மார்கோஸ் ஜூனியர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். அவருக்கு முன்பிருந்த ஜனாதிபதியின் கீழிருந்த கட்டுப்பாடற்ற இரத்தக்களரி குறைக்கப்பட்டாலும், டுடெர்ட்டே உருவாக்கிய அடக்குமுறை எந்திரம் நடைமுறையில் உள்ளது. மேலும், பொலிஸ் மற்றும் கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து ஏராளமானவர்களை படுகொலை செய்து வருகின்றனர். மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக டுடெர்ட்டே மீது குற்றச்சாட்டுகள் இருந்தால், மார்கோஸ் ஜூனியரும் அதே குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும்.
புதிய ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க கொள்கையைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்ற தன்மை அரசியல் கொந்தளிப்பைக் கூர்மைப்படுத்தி பிலிப்பைன்ஸ் உயரடுக்கில் பிளவை விரிவுபடுத்தியுள்ளது. மணிலாவின் புவிசார் அரசியல் நோக்குநிலை குறித்த கேள்வி, USAID க்கான நிதி வெட்டு மற்றும் அடிப்படை சமூக மேம்பாட்டு திட்டங்களில் அதன் தாக்கம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, பிலிப்பைன்ஸ் பொருளாதாரத்தின் மீது சாத்தியமான காப்புவரிகளின் தாக்கம் பற்றிய தீவிர ஊகங்களால் சிக்கலாகியுள்ளது.
நாட்டில் அரிசி விலை வரலாறு காணாதளவு உச்சத்தை எட்டியுள்ளது. மார்கோஸ் ஜூனியரின் நிர்வாகம் கடந்த மாதம் தேசிய உணவுப் பாதுகாப்பு அவசரநிலையை அறிவித்தது. ரோட்ரிகோ டுடெர்ட்டே அரிசி விலையையும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத மார்கோஸின் இயலாமையையும் ஒரு முக்கிய தேர்தல் பிரச்சினையாக மாற்றினார்.
செனட்டின் பாதி உறுப்பினர்களை மிக முக்கியமாக தேர்ந்தெடுக்கும் இந்த இடைக்கால தேர்தல், நாட்டின் புவிசார் அரசியல் நோக்குநிலை மற்றும் மோசமடைந்து வரும் சமூக நிலைமைக்கு அதன் பிரதிபலிப்பு குறித்து உயரடுக்கிற்குள் ஒரு கருத்து வாக்கெடுப்பாக மாறியுள்ளது.
தேர்தல் காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னதாக காங்கிரஸ் கூட்டத்தொடரின் கடைசி நாளில், ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ஜனாதிபதி மார்கோஸ் ஜூனியரை படுகொலை செய்ய அழைப்பு விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட துணை ஜனாதிபதி சாரா டுடெர்ட்டே மீது பதவி நீக்க குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. காங்கிரஸ் பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. மேலும் குற்றச்சாட்டுகள் விசாரணைக்காக புதிய செனட்டிற்கு அனுப்பப்படும்.
மார்கோஸ் ஜூனியர் தலைமையிலான பிரச்சாரம், பிலிப்பைன்ஸ் மக்கள் “சீன சார்பு” வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. போர் வெறிக்கூச்சல் மற்றும் இனவெறி தேசியவாத சூழலைத் தூண்டுவதற்கு, பாரிய சீன உளவு பார்த்தல் பற்றிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பொய்கள் பிரமாண்டமான சமூக நெருக்கடியிலிருந்து மக்களின் கோபத்தைத் திசைதிருப்பும் நோக்கம் கொண்டவையாகும்.
மீண்டும் டாவோ நகர மேயராக போட்டியிடும் ரோட்ரிகோ டுடெர்டே, எதிர்க்கட்சி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கடந்த ஞாயிறன்று அவர் துணை ஜனாதிபதி மற்றும் பிற எதிர்க்கட்சி வேட்பாளர்களுடன் ஹாங்காங்கிற்கு அங்குள்ள பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களின் பெரிய சமூகத்தின் மத்தியில் ஒரு அரசியல் அணிவகுப்பிற்காக பயணம் செய்தார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை, ஹாங்காங்கிலிருந்து திரும்பிய விமானம் மணிலாவில் தரையிறங்கியபோது அவர் கைது செய்யப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு இன்டர்போல் சேவை செய்யும் ஐ.சி.சி-யிடமிருந்து கைது வாரண்ட் பெற்றதாகவும், முன்னாள் ஜனாதிபதியைக் கைது செய்ய இன்டர்போல் பிரதிநிதியுடன் பிலிப்பைன்ஸ் பொலிசுக்கு அங்கீகாரம் அளித்ததாகவும் மார்கோஸ் நிர்வாகம், செவ்வாயன்று இடம்பெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் விமான நிலையத்தில் குவிந்தனர். டுடெர்ட்டே கிரேம் முகாமில் பொலிஸ் காவலுக்கு கொண்டு செல்லப்படவில்லை. மாறாக, அவர் பிலிப்பைன்ஸ் விமானப்படையின் தலைமையகமான வில்லாமோர் விமானத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
பிலிப்பைன்ஸ் ஐ.சி.சி.யில் தனது உறுப்புரிமையை திரும்பப் பெற்றதால், சர்வதேச பிடியாணை செல்லாது என்று கூறி டுடெர்ட்டேவின் சட்டப் பிரதிநிதி உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கை தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம் கூடவில்லை, மறுநாள் வழக்கை விசாரிப்பதாகக் கூறியது. செவ்வாய்க்கிழமை, ஒரு தனியார் வாடகை விமானம் டுடெர்ட்டேவை ஹேக்கிற்கு கொண்டு சென்றது.
2018 ஆம் ஆண்டில், பிலிப்பைன்ஸை ஐ.சி.சி.யின் உறுப்பினரிலிருந்து விலக்கிக் கொண்ட டுடெர்ட்டே, அவரது நிர்வாகத்தின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் குறித்த எந்தவொரு சர்வதேச விசாரணையையும் நிராகரித்து வந்தார். கடந்த செவ்வாயன்று தன்னுடைய சுருக்கமான செய்தியாளர் கூட்டத்தில் ஜனாதிபதி மார்கோஸ் ஜூனியர், முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து ஒப்படைக்கும் முடிவு ஒரு அரசியல் முடிவு அல்ல, மாறாக இன்டர்போலுடன் இணங்கி நடக்கும் முடிவு என்று அபத்தமாக பாசாங்கு செய்தார். பிலிப்பைன்ஸ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை அங்கீகரிக்கவில்லை, ஆனால் இன்டர்போலின் கோரிக்கைக்கு பதிலளித்ததாக அவர் கூறினார். மேலும், “இன்டர்போல் உதவி கேட்டது,” நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம், ஏனென்றால் அவர்களிடம் எங்களது உறுதிமொழிகள் உள்ளன என்று அவர் கூறினார்.
டுடெர்ட்டேவின் கைது, போதைப்பொருள் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் குடும்பங்கள் உட்பட பிலிப்பைன்ஸ் சமூகத்தின் பரந்த பிரிவுகளால் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. டுடெர்ட்டே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு அவர் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளியாவார்.
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கு பதிலாக, அவர்களை சுட்டுக் கொல்லுமாறு டுடெர்ட்டே பகிரங்கமாக பொலிசாருக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்தப் பிரச்சாரத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து போலீசாருக்கும் வழக்கில் இருந்து விலக்கு அளிப்பதாக அவர் வெளிப்படையாக மீண்டும் மீண்டும் கூறினார். டுடெர்ட்டேயின் அறிவுறுத்தலின் கீழ், கொல்லப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் பொலிசார் கண்காணிப்பாளர்களுக்கு பணம் கொடுக்கத் தொடங்கினர். சிதைக்கப்பட்ட சடலங்கள் தெருக்களில் விடப்பட்டன, “நான் ஒரு போதைப்பொருள் வியாபாரி” என்று எழுதப்பட்ட அட்டைப் பலகைகள் உயிரற்ற உடல்களின் மீது வைக்கப்பட்டன.
உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை மற்றும் பொலிஸ் துறையினரால் நடத்தப்பட்ட கொலைகளுக்கும், கண்காணிப்பாளர்களால் நடத்தப்பட்ட கொலைகளுக்கும் இடையிலான விகிதத்தை கவனமாகக் கணக்கிட்டதன் அடிப்படையில், டுடெர்டே நிர்வாகத்தின் கீழ் பொலிசாராலும், கண்காணிப்பாளர்களாலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கான சிறந்த மதிப்பீடு சுமார் 30,000 ஆகும்.
பாதிக்கப்பட்டவர்கள் பிலிப்பைன்ஸ் சமுதாயத்தில் மிகவும் வறிய, ஒடுக்கப்பட்ட அடுக்குகளில் இருந்து பிரத்தியேகமாக வந்திருந்தனர். போதைப்பொருளுக்கு எதிரான டுடெர்ட்டேயின் போர் ஏழைகள் மீதான போராகும். மோசமடைந்து வரும் சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மை அச்சுறுத்தலை ஒடுக்குவதில் ஆளும் உயரடுக்கின் பாசிச முகமாக அது இருந்தது.
இந்தக் கொலை இயந்திரத்தை டுடெர்ட்டே மட்டும் உருவாக்கவில்லை. அப்போது பிலிப்பைன்ஸ் தேசிய போலீஸ் தலைவராக இருந்த செனட்டர் ரொனால்ட் டெலா ரோசா அடக்குமுறையின் அன்றாட நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். டுடெர்ட்டோவின் சட்டக் குழு இதை நியாயப்படுத்தியது. தொழிலதிபர்கள், அமைச்சரவை அதிகாரிகள் மற்றும் மதப் பிரமுகர்கள் அடங்கிய ஒரு வலையமைப்பு அவரது பயங்கரவாத எதிர்ப்புக் குழுவில் அமர்ந்து மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதை மேற்பார்வையிட்டது. அதுவரை பிலிப்பைன்ஸ் வரலாற்றில் மிகப் பெரிய பெரும்பான்மையாக இருந்த பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஜனாதிபதியை ஆதரித்தது. இப்போது டுடெர்ட்டேவை கண்டனம் செய்யும் மார்கோஸ் வேட்பாளர் பட்டியலில் இருப்பவர்களில் பலரும் உண்மையில் அவரது ஆதரவாளர்களாக இருந்தனர்.
2016 இல் போதைப்பொருளுக்கு எதிரான டுடெர்ட்டின் போருக்காக ஒபாமா நிர்வாகம் மில்லியன் கணக்கான நிதிகளை வழங்கியது. இறந்தவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே நூற்றுக்கணக்கில் இருந்த நிலையில், டுடெர்ட் நூறாயிரம் பேரைக் கொல்வது குறித்து பகிரங்கமாக பேசினார். பிலிப்பைன்ஸ் வெளியுறவுக் கொள்கையை சீனாவை நோக்கி டுடெர்ட் நோக்குநிலைப்படுத்திய போதுதான் ஒபாமாவின் வெள்ளை மாளிகை மனித உரிமைகள் மீதான அதன் அக்கறையை வெளிப்படுத்த தொடங்கியது. 2017 இல் ட்ரம்ப் நிர்வாகம் டுடெர்ட்டின் கொள்கைகளை உற்சாகத்துடன் ஆதரித்தது. தெற்கு எல்லையில் புலம்பெயர்ந்தவர்களைக் கையாள்வதில் டுடெர்ட் தனது வழிமுறைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அமெரிக்காவுக்கு கற்பிப்பார் என்று நம்புவதாக ட்ரம்ப் ஒரு தொலைபேசி அழைப்பில் டுடெர்ட்டுக்கு தெரிவித்தார். “அனைத்து குடிமக்களும் செழித்து வளர அனுமதிக்கும் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் சமூகங்களைக் கட்டியெழுப்புவதில் உங்கள் பங்களிப்பை நாங்கள் அங்கீகரிக்கிறோம் மற்றும் பாராட்டுகிறோம்” என்று ஒரு கடிதத்துடன் “ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டிற்கு” டுடெர்ட்டுக்கு ஜோ பைடென் அழைப்பு விடுத்தார்.
டுடெர்ட் அதிகாரத்திற்கு வருவதற்கான அரசியல் பொறுப்பு பிலிப்பைன்ஸ் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CPP) மற்றும் அதன் அரசியல் வழியைப் பின்பற்றும் பயான் போன்ற பல்வேறு தேசிய ஜனநாயக அமைப்புகள் மீதே தங்கியுள்ளது. டாவோவின் மேயராக டுடெர்ட்டேவை CPP நீண்ட காலமாக ஆதரித்து வந்தது. பயான் என்ற அமைப்பு 2016 இல் அவரது தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தது. CPP தலைவர் ஜோஸ் மா சிசன், டுடெர்ட்டேவின் தேர்தலை வரவேற்று, அவரை ஒரு சோசலிஸ்ட் என்று அழைத்தார், மேலும் அவரது அமைச்சரவையில் மூன்று உறுப்பினர்களை நியமித்தார். போதைப்பொருட்களுக்கு எதிரான அவரது போரின் தொடக்கத்தில், CPP மற்றும் பயான் ஆகியவை ஜனாதிபதியை பாதுகாத்தன.
ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். தனது பெற்றோரின் இராணுவ சர்வாதிகாரத்தில் முக்கிய பங்கு வகித்த அவர், இலோகோஸ் நோர்டேவின் ஆளுநராக பணியாற்றினார். 2022 இல் மார்கோஸ் ஜூனியர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் அமெரிக்க நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள கைது வாரண்டுக்கு எதிராக மார்கோஸுக்கு விதிவிலக்கு அளிக்க பைடென் ஏற்பாடு செய்தார்.
டுடெர்ட் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டதை நியாயப்படுத்தும் சட்ட வழக்கு, தலைமை ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜுவான் பொன்ஸ் என்ரிலே ஆல் முன்வைக்கப்பட்டது. தற்போது 100 வயதை தாண்டிய என்ரேல், மார்கோஸ் சீனியர் நிர்வாகத்தின் கீழ் இராணுவச் சட்டத்தின் சிற்பியாகவும், இராணுவ சித்திரவதை மற்றும் கொலைக்கான முழு எந்திரத்தின் தலைவராகவும் இருந்தார்.
ICC பிடியாணையின் உள்ளடக்கமும், எல்லாவற்றிற்கும் மேலாக, அது வெளியிடப்பட்ட நேரமும் மிகவும் அரசியல் தன்மையைக் கொண்டுள்ளன. விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், அமெரிக்கா ரோம் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை மற்றும் ICC இல் உறுப்பினராக இல்லை என்றாலும் கூட, டுடெர்ட்டேயின் கைது வாஷிங்டனின் ஒப்புதலும் ஆதரவும் இல்லாமல் நடந்திருக்க முடியாது. டுடெர்ட்டேயை கைது செய்து ஒப்படைப்பதற்கான முடிவு துல்லியமாக எட்டப்பட்டிருந்த போதிலும், அது தெளிவாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு சேவையாற்றுகிறது.
வாஷிங்டன் தனது நலன்களுக்கு சேவை செய்யும் போது போர்க் குற்றவாளிகளைப் பாதுகாத்து நிதியளிக்கிறது. காசாவில் போர்க்குற்றங்களுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான நிலுவையில் உள்ள பிடியாணையை நிறைவேற்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு உதவுபவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வாஷிங்டன் அச்சுறுத்துகிறது. அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்யும் வரை டுடெர்ட்டேவின் படுகொலைப் போராட்டத்தை அது ஆதரித்து வந்தது. சீனாவுடனான போர் உந்துதலில், மணிலாவின் புவிசார் அரசியல் விசுவாசத்திற்காக வாஷிங்டன் நடத்தும் அரசியல் போரின் ஒரு பகுதியே டுடெர்ட்டேவின் கைது நடவடிக்கையாகும்.