ஜேர்மனியின் மீள்ஆயுதமயமாக்கலை நிறுத்து! போருக்குப் பதிலாக சோசலிசம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வடக்கு ஜேர்மனியின் முன்ஸ்டரில் உள்ள தேசிய இராணுவத் தளத்திலிருந்து லிதுவேனியாவிற்கு கொண்டு செல்வதற்காக ஜேர்மன் படையினர்கள் ஹோவிட்சர் டாங்கிகளை ஏற்றுகிறார்கள். பிப்ரவரி 14, 2022 திங்கட்கிழமை [AP Photo/Martin Meissner]

ஜேர்மன் ஆளும் வர்க்கம், அமெரிக்காவில் பாசிச ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்பற்றி வருகின்ற அதே பாதையையே பின்பற்றுகிறது என்று சோசலிச சமத்துவக் கட்சி (SGP) கூட்டாட்சித் தேர்தல்களுக்கான அதன் தேர்தல் அறிக்கையில் எழுதியது. “அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கு” என்பதற்கான ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் பதில் “அனைத்துக்கும் மேலாக ஜேர்மனி” என்பதாகும். அது, “ஹிட்லருக்குப் பிறகு காணப்படாத வேகத்தில் மீண்டும் ஆயுதம் ஏந்துவதன் மூலம் ட்ரம்பிற்கு பதிலளிக்கிறது.”

தேர்தலுக்கு வெறும் ஒரு சில நாட்களுக்குப் பின்னர், கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளும் (CDU/CSU) சமூக ஜனநாயகக் கட்சியினரும் (SPD) ஒரு பிரம்மாண்டமான மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டில், இரண்டு உலகப் போர்களில் தோல்வியடைந்து கொடூரமான குற்றங்களைச் செய்த பிறகு, ஜேர்மனியை ஒரு ஆக்ரோஷமான இராணுவ சக்தியாக மீண்டும் ஆயுதபாணியாக்குவதே இவர்களின் இலக்காகும். இந்த வேலைத்திட்டத்தின் விளைவுகளானது, போர், சர்வாதிகாரம் மற்றும் இறுதியில் அணுஆயுத பேரழிவாகும். உத்தியோகபூர்வ பிரச்சாரத்தால் இந்த உண்மையை மறைக்க முடியாது.

மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்தின் அளவு பிரம்மாண்டமானது. சிறப்பு நிதி என்றழைக்கப்படுவதன் கீழ் மட்டும் ஐநூறு பில்லியன் யூரோ கடன்கள் எடுக்கப்பட உள்ளன. இது முதன்மையாக சமூக உள்கட்டமைப்பை “போருக்கு ஏற்றதாக” ஆக்குவதற்கும் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் இராணுவமயமாக்குவதற்கும் பயன்படுத்தப்படும்: கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துதல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சியை இராணுவத்தின் தேவைகளுக்கு அடிபணியச் செய்வதிலிருந்து, காசாவில் இனப்படுகொலையை எதிர்ப்பவர்களின் விஷயத்தில் ஏற்கனவே நடப்பது போல, எதிரிகளை அடக்குதல் மற்றும் துன்புறுத்தல் வரை மேற்கொள்ளப்படும்.

வரம்பற்ற கடன் வாங்குதல் சாத்தியமாகும் வகையில், ஜேர்மன் ஆயுதப் படைகளுக்கு (Bundeswehr) செலவிடுவதற்கான கடன் தடை முற்றிலுமாக ரத்து செய்யப்பட உள்ளது. ஆரம்பத்தில் மேலதிகமாக 500 பில்லியன் யூரோக்கள் பாதுகாப்புச் செலவினங்களுக்காக ஒதுக்கப்படும். இந்தத் தொகை எந்தக் காலத்தில் செலவிடப்படும் என்பது இன்னும் தெளிவாக இல்லை என்றாலும் கூட, இந்த பிரம்மாண்டமான தொகைகளை இரண்டு உலகப் போர்களுக்கு முந்தைய மீள்ஆயுதமயமாக்கலுடன் மட்டுமே ஒப்பிட முடியும்.

ஒரு வருடத்திற்கு இதனை கணக்கிட்டால், 500 பில்லியன் யூரோ அதிகரிப்பு மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 11 சதவீதத்திற்கு பொருந்தும்—இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அல்லது பனிப்போரின் வேறெந்த ஆண்டிலும் ஜேர்மனியின் மீள்இராணுவமயமாக்கலின் போது இருந்ததை விட இரண்டு மடங்குகள் அதிகமாகும். முதலாம் உலகப் போரின் முதல் ஆண்டில் கூட, யுத்தக் கடன்கள் “மட்டுமே” 1913 இன் மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.6 சதவீதமாக இருந்தது. ஹிட்லர் ஐந்தாண்டு கால பாரிய மீள்ஆயுதமயமாக்கலுக்குப் பின்னர், 1938 இல் தான் ஒரு உயர்ந்த எண்ணிக்கையை எட்டினார்.

இப்போது போலவே அப்போதும் ஜேர்மன் பேரரசு இராணுவமயமாக்கலுக்கு நிதியளிக்க பாரிய கடன்களில் மூழ்கியது. கடன்கள் அதிகரிக்க அதிகரிக்க, போர் தவிர்க்க முடியாததாயிற்று. ஏனெனில், இந்தக் கடன்களைப் போரில் கொள்ளையடிக்கும் பொருள்களின் மூலமே மறுநிதியளிக்க முடியும். இன்றைய மீள்ஆயுதமயமாக்கலும் அதே தர்க்கத்தைப் பின்தொடர்கிறது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு முன்னதாகவே, அனைத்துக் கட்சிகளின் அரசியல்வாதிகளும் கூறியது போல், இது “ரஷ்ய ஆக்கிரமிப்பு” என்று அழைக்கப்படுவதற்கு எதிரான பாதுகாப்பிற்காக அல்ல, மாறாக மிருகத்தனமான ஆக்கிரமிப்புப் போர்களுக்கான தயாரிப்பிற்காகும்.

ஆளும் வர்க்கத்தின் முன்னணி சித்தாந்தவாதிகள் இதை வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். இதற்கு சான்றாக, அரசியல் விஞ்ஞானி ஹெர்பிரட் முன்ங்லெர், டெர் ஸ்பீகல் பத்திரிகையில், “விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கு, அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கால்” பிரதியீடு செய்யப்பட்டுள்ளது என்று எழுதினார். பொருளாதார பலத்தை விட இராணுவ பலத்திற்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

ஆகவே, ஐரோப்பா “சாத்தியமானளவுக்கு விரைவாக மீள்ஆயுதபாணியாகி தன்னை அரசியல்ரீதியில் மறுஒழுங்கு செய்து கொள்ள வேண்டும்” என்று முன்ங்லெர் நிறைவு செய்கிறார். அது “புதிய உலகளாவிய அரசியல் கட்டமைப்புகளுக்கு அறிவுபூர்வமாகவும் மன ரீதியாகவும் தகவமைத்துக் கொள்ளும் திறன் கொண்ட ஒரு அரசியல் வர்க்கத்தை உருவாக்க வேண்டும்”. மேலும், “வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில்” ஒரு பாத்திரம் வகிப்பதற்கு, ஐரோப்பியர்கள் “இந்த அதிகார அடிப்படையிலான ஒழுங்கமைப்பின் விதிகளை விரைவாக கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால்: குற்றவியல் போர்களில் இருந்து வெட்கப்படாத கைசர் வில்ஹெல்ம் II, எரிச் லுடென்டோர்ஃப், அடால்ஃப் ஹிட்லர் மற்றும் வில்ஹெல்ம் கீட்டல் போன்ற அரசியல்வாதிகள் மற்றும் தளபதிகள் “ஐரோப்பாவிற்கு” (முன்ங்லெர் எப்போதும் ஐரோப்பாவை குறிப்பிடுகிறார் என்றால், அது ஜேர்மனி என்று அர்த்தமாகும்) மீண்டும் தேவை.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் மீள்ஆயுதமயமாக்கல் திட்டமும் இதே வழியைப் பின்தொடர்கிறது. இது நேரடியாக அணு ஆயுத வல்லரசான ரஷ்யாவை குறிவைத்துள்ளது. ஜேர்மன் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்னரே கூட, சான்சிலர் ஷொல்ஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்டோரியஸ் ஆகியோர், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போரில் ஜேர்மனி தகைமை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தனர். மீள்ஆயுதமயமாக்கல் திட்டம் இந்த பைத்தியக்காரத்தனத்தை நடைமுறைப்படுத்துகிறது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அழித்தொழிப்பு போர் இடம்பெற்று எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மனி மீண்டுமொருமுறை ரஷ்யாவுக்கு எதிரான ஒரு முழுவீச்சிலான போருக்கு தயாரிப்பு செய்து வருகிறது. இது ஒட்டுமொத்த கண்டத்தின் அழிவுக்கும் வழி வகுக்கும்.

ஆனால், இன்னும் பல ஆபத்துகள் உள்ளன. 2018 இல், அப்போதைய மகா கூட்டணி ஏற்கனவே பரந்த இராணுவமயமாக்கலுக்கு ஆதரவாக பேசியதுடன், மேற்கு பால்கன்களில் இருந்து ரஷ்யா, உக்ரேன், துருக்கி, ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா வரையில், ஜேர்மன் ஏகாதிபத்தியம் அதன் செல்வாக்கு மண்டலங்களாக கருதும் அதன் கூட்டணி உடன்படிக்கையில் ஒட்டுமொத்த நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் ஒட்டுமொத்த கண்டங்களின் பெயர்களையும் குறிப்பிட்டது. தற்போதைய திட்டங்களும் இதன் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழல்கள் “விதிகள் அடிப்படையிலான ஒழுங்கின்” முடிவு குறித்தும் பொருளாதார நலன்களைப் பின்தொடர்வதற்காக இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவது குறித்தும் பேசும் போது, இது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மோதல் என்பதையே அர்த்தப்படுத்துகிறது என்பதை அவர்கள் நன்கறிவார்கள்.

ஜேர்மனி ஐரோப்பாவில் மேலாதிக்கம் செலுத்துவதில் வெற்றி பெற்றால் மட்டுமே அதன் யுத்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியும். பிரம்மாண்டமான ஆயுதச் செலவும் இந்த நோக்கத்திற்கு உதவுகிறது. கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் திட்டங்களுக்கு சமாந்தரமாக, முன்னாள் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவருமான ஊர்சுலா வொன் டெர் லெயன் (CDU) ஐரோப்பிய ஒன்றியத்தை ஆயுதபாணியாக்கும் 800 பில்லியன் யூரோ மதிப்பிலான ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளார். போர் செலவினங்களை அதிகரிப்பதன் மூலம், ஆயுத அமைப்புகள், உற்பத்தி திறன்கள் மற்றும் நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐரோப்பிய மீள்ஆயுதமயமாக்கலின் இந்த செயல்முறையை ஜேர்மனி மேலாதிக்கம் செலுத்த முயன்று வருகிறது.

இது தவிர்க்க முடியாமல் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான மோதல்களை அதிகரிக்கும். இவை அனைத்தும் வெறித்தனமான வேகத்தில் ஆயுதபாணியாக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் அதன் இராணுவச் செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்திற்கு அதிகரிக்கவும், ஐரோப்பாவை அதன் அணுஆயுத “குடையின்” கீழ் வைத்திருக்கவும் விரும்புகிறது. சிப்பாய்கள் மற்றும் ரிசர்வ் படையினரின் எண்ணிக்கையை 200,000 இல் இருந்து 500,000 ஆக அதிகரிப்பதற்காக நாட்டின் அனைத்து ஆண்களும் இராணுவப் பயிற்சி பெறுவார்கள் என்று போலந்து பிரதம மந்திரி டொனால்ட் டஸ்க் அறிவித்துள்ளார். மேலும், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுடன் சேர்ந்து உக்ரேனுக்கு தனது சொந்த துருப்புக்களை அனுப்ப பிரிட்டன் தயாராக உள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் மீதான போர் பிரகடனம்

மீள்ஆயுதமயமாக்கல் திட்டமானது, சர்வதேச எதிர்ப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிராக மட்டும் செலுத்தப்படவில்லை, அது தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு போர்ப் பிரகடனமும் ஆகும்.

பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை அழித்தும், சமூக பாதுகாப்பு அமைப்புமுறைகளை அழித்தும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்தும் 2010 மற்றும் 2019 க்கு இடையில் ஜேர்மனியின் கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 81 சதவீதத்தில் இருந்து 59 சதவீதமாக குறைக்கப்பட்ட பின்னர், இப்போது அது மீள்ஆயுதமயமாக்கலுக்காக புதிய உயரங்களுக்கு உந்தப்பட்டு வருகிறது. தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரையில், இது அவர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான மேலதிக தாக்குதல்களைக் குறிக்கிறது. ஊதிய வெட்டுக்கள், ஏராளமானோரின் பணிநீக்கம் மற்றும் நலன்புரி அரசு அழிப்பு என்ற வடிவத்தில் பணம் கறந்தெடுக்கப்படுகிறது.

கடுமையான வர்க்கப் போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை. அரசாங்கம் தங்கள் மீது திணிக்க விரும்பும் உண்மையான ஊதியக் குறைப்புகளுக்கு எதிராக பொதுத்துறை தொழிலாளர்கள், அஞ்சல்துறை தொழிலாளர்கள் மற்றும் பிராந்திய போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதர ஐரோப்பிய நாடுகளிலும் கடுமையான வர்க்கப் போராட்டங்கள் அபிவிருத்தி அடைந்து வருகின்றன. கிரேக்கத்தில், மில்லியன் கணக்கானவர்கள் சமூகப் பேரழிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்கள் கீழிருந்து வரும் அழுத்தங்களுக்கு அடிபணியத் தயாராக இல்லை. தங்களது செல்வவளம், தனிச்சலுகைகள் மற்றும் போர்க் கொள்கைகளைப் பாதுகாப்பதற்காக, அவர்கள் அதிகரித்தளவில் பாசிச வழிமுறைகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். மிகவும் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய அரசின் உயர்மட்டத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் மேலெழுந்திருப்பது தற்செயலானதோ அல்லது தவறான புரிதல்களினாலோ ஏற்பட்டதல்ல. மாறாக, அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியின் வெளிப்பாடாகும். இது குண்டர்வாதம் மற்றும் வன்முறையின் உதவியுடன் மட்டுமே அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதைக் காட்டுகிறது. இதே அபிவிருத்தி ஜேர்மனியிலும் நடந்து கொண்டிருக்கிறது.

இதனால்தான், வருங்கால சான்சிலர் பிரெடெரிக் மெர்ஸ் (CDU) பொதுத் தேர்தலுக்கு சற்று முன்னதாக, பாசிச ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் ஒத்துழைப்பு பெற முனைந்ததோடு, அதன் ஆதரவுடன் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் புலம்பெயர்ந்தோர்-விரோத தீர்மானம் ஒன்றையும் முன்தள்ளினார். சமூக ஜனநாயக கட்சியினரும் பசுமைக் கட்சியினரும் கூட அகதிகளுக்கு எதிரான ஆத்திரமூட்டலை, அவற்றின் தேர்தல் பிரச்சாரத்தின் மையத்தில் நிறுத்தி, அவ்விதத்தில் பாசிச ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியை பலப்படுத்தின.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிக்கு இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தேர்தல் முடிவுகளையும் ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்குகின்றன. தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்த இரண்டு கட்சிகளுமே மறுஆயுதமயமாக்கலுக்காக ஒரு ட்ரில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கவில்லை. புதிய அரசாங்கத்திற்கு அதன் பைத்தியக்காரத்தனமான போர்க் கொள்கைக்கு மக்கள் ஆணை கிடையாது. இப்போது கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி, ஏற்கனவே வாக்களிப்பில் தோற்கடிக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதன் மூலமாக தேர்தல் முடிவுகளை அப்பட்டமாக அலட்சியம் செய்து அரசியலமைப்பை மாற்றுவதற்கு முயன்று வருகின்றன.

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய அனைத்துக் கட்சிகளும் இராணுவவாதத்தை ஆதரிக்கின்றன. பசுமைக் கட்சியினர் மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்தை இன்னும் இரக்கமின்றி திணிக்க வேண்டும் என்று கூட அழைப்பு விடுத்து வருகின்றனர். பாரிய வெட்டுக்கள் மூலம் பெரும் தொகைகள் திரட்டப்பட வேண்டும்; உளவுத்துறை அமைப்புக்கள் போன்ற பிற பகுதிகளுக்கு கடன் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். இந்த முன்னாள் அமைதிவாதிகள் மிக மோசமான போர் வெறியர்களாக தற்போது மாறிவிட்டனர்.

ரஷ்யா மற்றும் ஐரோப்பா விடயத்தில் AfD தந்திரோபாய வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் தேசிய நலன்களைப் பின்தொடர்வது என்று வருகையில், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான பாதுகாப்புத் துறை வரவு-செலவு திட்டக்கணக்கை ஆதரிக்கிறது என்பதோடு, ஒரு ஜேர்மன் அணுகுண்டுக்கும் கூட அழைப்பு விடுத்து வருகிறது. இராணுவவாதத்திற்கான எதிர்ப்பை ஒடுக்குவதற்கு பாசிஸ்ட்டுக்கள் அவசியப்படுவதால் அது அரசாங்கப் பணிகளில் நேரடியாக ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

இடது கட்சி குறிப்பிடத்தக்க வகையில் ஒரு இழிந்த பாத்திரத்தை வகித்து வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது AfD மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராகப் பேசியதால், அது 25 சதவீத இளம் வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்றது. வாக்குச் சாவடிகள் மூடப்பட்ட உடனேயே, அதன் பிரதிநிதிகள் கூட்டுத் திட்டங்களை அமல்படுத்துவது குறித்து கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியுடன் “பேச்சுவார்த்தை நடத்த தாங்கள்” தயாராக இருப்பதாக அறிவித்தனர். மார்ச் 1 அன்று, இடது கட்சியின் ஒரு நிர்வாகி உக்ரேனுக்கு கடன் நிவாரணம் வழங்கவும், உக்ரேனை ஆதரிக்க போதுமான நிதியை விடுவிக்க கடன் தடையை தளர்த்தவும் அழைப்பு விடுத்தார்.

போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக!

போர் மற்றும் பாசிசத்தின் பேரழிவைத் தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி, அனைத்து செல்வங்களையும் உருவாக்கி, போர்கள் மற்றும் நெருக்கடிகளின் சுமைகளைத் தாங்கிவரும் சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும்.

அவ்வாறு செய்வதற்கு, அது தொழிற்சங்கங்களின் முடக்கும் செல்வாக்கை முறியடிக்க வேண்டும். இந்த அதிகாரத்துவ எந்திரங்கள் நீண்டகாலத்திற்கு முன்னரே பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் எடுபிடிகளாக மாறி, எந்தவொரு தொழில்துறை நடவடிக்கையையும் நாசப்படுத்தி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி, பெருநிறுவனங்களின் சார்பாக பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களை ஒழுங்கமைத்து வருகின்றன. வர்த்தகப் போர் நடவடிக்கைகள் மற்றும் இராணுவ ஆயத்தப்படுத்தல் குறித்து அவை உற்சாகமடைகின்றன.

IG Metall தொழிற்சங்கத்தின் தலைவி கிறிஸ்டியன் பென்னர், CDU/CSU மற்றும் SPD இன் மறுஆயுதபாணியாக்க திட்டத்தை வரவேற்றதன் வழக்கமான எதிர்வினை இதுவாகும்: “அறிவிக்கப்பட்ட சிறப்பு நிதிகள், அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் காட்டுகின்றன: நடவடிக்கை இப்போது விரைவாகவும் தைரியமாகவும் எடுக்கப்பட வேண்டும் என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொண்டுள்ளனர்”.

எனவே, சோசலிச சமத்துவக் கட்சி, பணியிடங்களிலும், சுற்றுப்புறங்களிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை நிறுவுவதற்கு அழைப்பு விடுக்கிறது. இது, பாரிய பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தை தொழிலாளர்கள் தங்கள் சொந்தக் கரங்களில் எடுக்கவும், அதை போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கவும் உதவுகிறது.

தேசியவாதம், வர்த்தகப் போர் மற்றும் மீள்ஆயுதமயமாக்கலின் வளர்ச்சிக்கு எதிராக தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்தை நாங்கள் முன்நிறுத்துகிறோம். முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டு, இலாப நலன்கள் அல்ல, மக்களின் தேவைகளை மைய நிலைக்கு கொண்டுவரும் ஒரு சோசலிச சமூகத்தால் மாற்றப்பட்டால் மட்டுமே போரை நிறுத்தவும், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் முடியும். பெரிய வங்கிகளும் பெருநிறுவனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.

2014 இல், ஜேர்மன் அரசாங்கம் “ஜேர்மனியின் இராணுவக் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக” அறிவித்து, அமெரிக்காவுடன் சேர்ந்து உக்ரேனில் வன்முறையான ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஒழுங்கமைத்த போது, ஜேர்மன் இராணுவவாதத்தின் வெடிப்பார்ந்த அபிவிருத்தி குறித்து நாங்கள் எச்சரித்திருந்தோம். இதுபற்றி ஒரு தீர்மானத்தில் பின்வருமாறு எழுதியும் இருந்தோம்:

வரலாறு ஒரு பழிவாங்கலுடன் மீண்டும் திரும்பி வருகிறது. நாஜிக்களின் குற்றங்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரில் அது தோற்கடிக்கப்பட்டு ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டுமொருமுறை கெய்சர் பேரரசு மற்றும் ஹிட்லரின் ஏகாதிபத்திய வல்லரசு அரசியலை ஏற்று வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போர்ப் பிரச்சார தீவிரத்தின் வேகம், முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்த காலத்தை நினைவூட்டுகிறது.

இந்த வளர்ச்சி எவ்வளவு தூரம் முன்னேறி வருகிறது என்பதை மகா கூட்டணியின் திட்டமிடப்பட்ட போர் சாதனைகள் எடுத்துக் காட்டுகின்றன. அரசியல்ரீதியாக செயலூக்கத்துடன் செயல்படுவதற்கு, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்தைப் படித்து அதில் சேர வேண்டிய நேரம் இது. ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்புவது மட்டுமே அபிவிருத்தியடைந்து வரும் உலகப் போரை நிறுத்துவதற்கான ஒரே வழியாகும்.