முன்னோக்கு

ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதலுக்கு சமீபத்தில் இலக்கான மொமொடு தால் மீதான தாக்குதலை எதிர்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

மொமொடு தால்

கடந்த ஒரு வாரத்தில், ட்ரம்ப் நிர்வாகம் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை செயல்படுத்துவதை வியத்தகு முறையில் தீவிரப்படுத்தியுள்ளது. அது, முதல் திருத்த உரிமைகளைப் பயன்படுத்தியதற்காக தனிநபர்களைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளது. மேலும் அது, 1798 ஆம் ஆண்டின் பிற்போக்குத்தனமான அன்னிய எதிரிகள் சட்டத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை உரிய நடைமுறை இல்லாமல் நாடு கடத்தும் நடவடிக்கைகளுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்புகளை வெளிப்படையாக மீறியுள்ளது.

கோர்னெல் பல்கலைக்கழகத்தில் பிரிட்டிஷ்-காம்பியன் மாணவரான மொமொடு தால் (Momodou Taal), இந்தக் கொடூரமான அரசியல் மிரட்டல் மற்றும் அடக்குமுறை பிரச்சாரத்தின் சமீபத்திய இலக்காக உள்ளார்.

கடந்த வெள்ளியன்று, நீதித்துறை வழக்கறிஞர்கள், தால் “தானாக முன்வந்து” குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கக் துறையினரின் காவலில் (ICE) நாடுகடத்தப்படுவதற்காக “சரணடைய வேண்டும்” என்று மின்னஞ்சல் மூலம் முறையான கோரிக்கையை விடுத்தனர். இது, இந்த வழக்கு தொடர்பாக அரசாங்கம் அவரைக் கைது செய்து நாடு கடத்துவதைத் தடுக்கும் ஒரு தற்காலிக தடை உத்தரவைக் கோரும் கோரிக்கைக்கும், ட்ரம்பின் நிர்வாக உத்தரவுகளை அரசியலமைப்பிற்கு முரணான பேச்சு சுதந்திரத்தை மீறுவதாக எதிர்த்து மொமொடு தால் தாக்கல் செய்த வழக்குக்கும் நேரடியான பதிலாகும்.

அதாவது ஜனாதிபதி, அவருக்கு எதிரான ஒரு நீதிமன்ற வழக்கின் பிரதிபலிப்பாக, வழக்கைத் தாக்கல் செய்த தனிநபரை கடத்தவும், தடுத்து வைக்கவும் மற்றும் நாட்டிலிருந்து வெளியேற்றவும் முயற்சிக்கிறார். செல்லுபடியாகும் மாணவர் விசாவை வைத்திருக்கும் மொமொடு தால் எந்தக் குற்றமும் செய்யவில்லை. அவரை காவலில் வைப்பதற்கோ அல்லது நாடுகடத்துவதற்கோ எந்த சட்டபூர்வமான நியாயப்படுத்தலும் அவருக்கு வழங்கப்படவில்லை.

மொமொடு தால், கோர்னெல் பல்கலைக்கழக சக மாணவரான ஸ்ரீராம் பரசுராமா (Sriram Parasurama) மற்றும் பேராசிரியர் மோகோமா வா என்ஜிகே (Mũkoma Wa Ngũgĩ) ஆகியோருடன் சேர்ந்து, ஒரு வாரத்திற்கு முன்பு, மார்ச் 15 அன்று இந்த வழக்கைத் தாக்கல் செய்தார். காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை எதிர்க்கும் கொலம்பியா பல்கலைக்கழக பட்டதாரி மாணவன் மஹ்மூத் கலீல் மற்றும் ஏனைய மாணவர்களைக் கடத்தியதை நியாயப்படுத்த நிர்வாகம் கையிலெடுத்துள்ள நிர்வாக உத்தரவுகளுக்கு எதிரான முதல் குறிப்பிடத்தக்க சட்ட வழக்கு இதுவாகும்.

இந்த உத்தரவுகள் பேச்சு சுதந்திரத்தை நசுக்குவதன் மூலமும், அரசியல் எதிர்ப்பை குற்றமாக்குவதன் மூலமும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கொள்கையை விமர்சிப்பவர்களை நாடுகடத்தப்படுவார்கள் அல்லது வழக்குத் தொடரப்படுவார்கள் என்று அச்சுறுத்துவதன் மூலமும் முதலாம் மற்றும் ஐந்தாவது அரசியலமைப்பு திருத்தங்களை அப்பட்டமாக மீறுவதாக இந்த வழக்கு குற்றம் சாட்டுகிறது. “ஒரு சர்வாதிகார ஆட்சியில் மட்டுமே நாட்டின் தலைவர் தனது நிர்வாகத்தை விமர்சித்த அரசியல் எதிரிகளை சிறையில் அடைக்கவும் நாடு கடத்தவும் முடியும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, புதன்கிழமை, அடையாளம் தெரியாத சட்ட அமுலாக்க முகவர்கள் இதாகாவில் இருக்கும் தனது வீட்டை முற்றுகையிட்டதாகவும், தன்னைக் கைது செய்யத் தயாராகி வருவதாகவும் தால் தெரிவித்துள்ளார். இந்தப் பின்தொடர்தல் மற்றும் மிரட்டலுக்கு பதிலளிக்கும் விதமாக, தாலின் வழக்கறிஞர்கள், அவரைக் கைது செய்து காவலில் வைப்பதைத் தடுக்க ஒரு தற்காலிக தடை உத்தரவுக்கு (TRO) அவசர கோரிக்கையை தாக்கல் செய்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, மார்ச் 21 அன்று நள்ளிரவு 12:52 மணிக்கு, தாலின் வழக்கறிஞர்கள் நீதித்துறையிடம் இருந்து ஒரு மின்னஞ்சலைப் பெற்றனர். நீதித்துறையின் குடிவரவு வழக்கு அலுவலகத்தைச் சேர்ந்த ஈதன் கான்டரிடமிருந்து வந்த கடிதத்தில், ICE “திரு. தால் மற்றும் அவரது ஆலோசகரை NTA இன் தனிப்பட்ட சேவைக்காக [ஆஜராக அறிவிப்பு] பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய நேரத்தில், சிராகுஸில் உள்ள HSI அலுவலகத்தில் நேரில் ஆஜராகவும், திரு. தால் ICE காவலில் சரணடைய வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த மின்னஞ்சலின் பொருள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கைக் குறிக்கிறது. அது, மொமொடு தால் மற்றும் பலர் எதிர் ட்ரம்ப், 25-cv-335 (NDNY) ஆகும். அதாவது, மொமொடு தால் தானே சரணடைய வேண்டும் என்ற கோரிக்கை, ட்ரம்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வழக்கின் விடையிறுப்பாகும் என்பதை நீதித்துறை ஒப்புக் கொள்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல், மொமொடு தாலின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் அவசரமாக தாக்கல் செய்த மனுவில், இந்த நடவடிக்கையானது, வாதியை நாட்டிலிருந்து வெளியேற்றுவதன் மூலம், “இந்த வழக்கு மீதான நீதிமன்றத்தின் அதிகார வரம்பை அகற்றுவதற்கான சட்டவிரோத முயற்சி” மேற்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடுகிறது.

மொமொடு தாலின் வழக்கறிஞர் எரிக் லீ (Eric Lee) உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறுகையில், “நீதித்துறை என்று அழைக்கப்படும் அமைப்பின் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தை அவர்கள் அதைச் செய்வதைத் தடுக்குமாறு நாங்கள் குறிப்பாகக் கோரிய சில மணிநேரங்களுக்குப் பிறகுதான், மொமொடு தாலின் சட்டக் குழுவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

“ஒரு ஜனநாயகத்தில், நிர்வாக உத்தரவுகளின் அரசியலமைப்புத்தன்மையை சவால் செய்யும் நபர்களை ஜனாதிபதி கைது செய்வதில்லை. இது அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளைத் தாக்குகிறது: அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்திடம் மனு அளிக்கும் உரிமை என்பன இல்லாமல், உரிமைகள் மசோதா ஒரு காலாவதியான கடிதமாகும்” என்று வழக்கறிஞர் எரிக் லீ குறிப்பிட்டார்.

மொமொடு தால் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் இலக்கு, மஹ்மூத் கலீல் மற்றும் இந்த வார தொடக்கத்தில் அவரது வீட்டிற்கு வெளியே முகமூடி அணிந்த பெடரல் முகவர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பதர் கான் சூரி ஆகியோரை புலம்பெயர்வு மற்றும் குடியேற்ற அமலாக்கத்துறை முகவர்கள் கடத்தி காவலில் வைத்ததுடன் பொருந்தி உள்ளது. காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான அவர்களின் நிலைப்பாடுகளுக்காக, அமெரிக்காவின் “தேசிய பாதுகாப்புக்கு” அச்சுறுத்தல் என்ற போர்வையில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“விதிவிலக்கான நிலை” என்ற பாசிச தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் ட்ரம்ப் நிர்வாகம், ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு திட்டமிட்ட மற்றும் முறையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஜனநாயக நெறிகள் மீதான ஒவ்வொரு மீறலும் இன்னும் கடுமையான மற்றும் நீண்டகால தாக்குதல்களுக்கு களம் அமைக்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய வன்முறை வியத்தகு முறையில் அதிகரித்து வரும் நிலையில் இவை அனைத்தும் நிகழ்ந்து வருகின்றன. ஏற்கனவே நூறாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ள காஸாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த வாரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் வெள்ளை மாளிகை, இந்த வாரம் யேமனுக்கு எதிராக ஒரு பாரிய குண்டுவீச்சு தாக்குதலை தொடங்கியது. பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டுவரும் இந்த தாக்குதல், உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான யேமனில் மனிதாபிமான பேரழிவை அதிகப்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தால் தூண்டிவிடப்பட்ட சர்வாதிகார சதி என்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தை இலக்கு வைத்து செயல்படுத்தப்படுகிறது. இது, முதலாளித்துவ தன்னலக்குழுவால் உருவாக்கப்பட்டு, அதற்காகவும், அதன் அரசாங்கமாகவும் செயல்படுகிறது. இது, தொழிலாளர்களின் ஒவ்வொரு சமூகத் திட்டத்திலும் உரிமையிலும் ஒரு மிருகத்தனமான போரை நடத்தி வருகிறது.

கடந்த வியாழனன்று, ஏற்கனவே அதன் தொழிலாளர் சக்தியில் பாதிப் பேரைப் பணிநீக்கம் செய்துள்ள கல்வித் துறையை கலைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வித்துறை செயலாளர் லிண்டா மக்மஹோனுக்கு வழிகாட்டும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவில் ஒட்டுமொத்த பொதுக் கல்வியும் அகற்றப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், ட்ரம்ப் நிர்வாகம் சமூகப் பாதுகாப்பு, மருத்துவ உதவி மற்றும் உணவு முத்திரைகளில் வரலாறு காணாதளவுக்கு வெட்டுக்களைத் தயாரித்து வருகிறது. மேலும், முக்கிய சமூக சேவைகளை வழங்கும் அனைத்து கூட்டாட்சி அரசு நிறுவனங்களையும் மூடுகிறது.

ஜனநாயகக் கட்சி இந்த தாக்குதலை எதிர்க்கவில்லை. மாறாக, அதற்கு வழிவகுத்துள்ளது. சரியாக ஒரு வாரத்திற்கு முன்னர், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஆறு மாதங்களுக்கு முழுமையாக நிதியளிக்கும் குடியரசுக் கட்சி செலவின மசோதாவை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கு செனட்டிலுள்ள ஜனநாயகக் கட்சியினர் தீர்க்கமான வாக்குகளை வழங்கினர். உலக சோசலிச வலைத் தளம் இந்த மசோதாவை ஜனநாயகக் கட்சியினரின் செயல்படுத்தும் சட்டம் என்று வகைப்படுத்தி, மார்ச் 15 அன்று, “சமூகத் திட்டங்களை வெட்டுவதற்கும், கூட்டாட்சி அரசு ஊழியர்களை நீக்குவதற்கு ஒரு போலீஸ் அரசுக்கு அடித்தளம் அமைப்பதற்கும் ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க்கிற்கு ஒரு வெற்றுக் காசோலையை வழங்கியுள்ளனர்.” என்று எழுதியது. இது இப்போது வெளிப்படுகிறது.

அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளையும் தூக்கியெறிவதற்கான இந்த இருகட்சி சதியை நிறுத்த தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான சக்தியாக தலையீடு செய்ய வேண்டும். பாசிசத்தை நோக்கிய தன்னலக்குழுவின் திருப்பத்தை நீதிமன்றங்கள் அல்லது ஜனநாயகக் கட்சி மூலம் தடுத்து நிறுத்த முடியாது.

சோசலிச சமத்துவக் கட்சி, ட்ரம்ப் நிர்வாகத்தால் துன்புறுத்தப்படும் மொமடு தால், மஹ்மூத் கலீல் மற்றும் அனைவரையும் பாதுகாக்க நாடு முழுவதும் தொழிலாளர்களை அணிதிரட்ட அழைப்பு விடுக்கிறது. ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை நிறுத்த ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் பணியிட நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராகவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் மீதான பெருநிறுவன தாக்குதலுக்கு எதிராகவும், தொழிலாளர்களை அணிதிரட்ட, வேலையிடங்கள், பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் அண்டை அயல்பகுதிகளில் சாமானிய தொழிலாளர் குழுக்கள் பெருநிறுவன-சார்பு தொழிற்சங்க எந்திரத்தில் இருந்து சுயாதீனமாக, கட்டியெழுப்பப்பட வேண்டும். சர்வாதிகாரத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தின் வளர்ச்சி, தன்னலக்குழுக்களின் செல்வத்தைப் பறிமுதல் செய்வதற்கும், சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையின் மீதான அவர்களின் பொருளாதார சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தால் உட்செலுத்தப்பட்டு வழிநடத்தப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவது பற்றிய தகவல்களுக்கும், உங்கள் பாடசாலை அல்லது பணியிடத்தில் எதிர்ப்புக்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும் கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.