மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் 11, 2020 அன்று, உலக சுகாதார அமைப்பு (WHO) கோவிட்-19 ஐ உலகளாவிய பெருந்தொற்று நோயாக அறிவித்தது. இது 1918-1920ல் ஏற்பட்ட வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு மிக மோசமான உலகளாவிய பொது சுகாதார நெருக்கடியாக மாறும் ஒரு மிக முக்கிய புள்ளியைக் குறித்து நிற்கிறது. இது, ஒட்டுமொத்த உலக மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையை ஆழமாக பாதித்ததுடன், ஒவ்வொரு நாட்டிலும் சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையையும் சீர்குலைத்துள்ளது.
இந்த சோகமான ஆண்டின் நினைவு தினத்தை, ஒவ்வொரு நாட்டின் அரசியல் அமைப்பும் மற்றும் பெருநிறுவன ஊடகங்களும் அதிலிருந்து ஏறத்தாழ உலகளவில் மௌனத்துடன் கடந்துசென்றுள்ளன. கோவிட்-19 ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை தொடர்ந்து முடக்கி கொன்று வருகிறது என்ற உண்மை இருந்து வருகின்ற போதிலும், வெளியிடப்பட்ட ஒவ்வொரு கட்டுரையும் இந்த தொற்றுநோயின் பேரழிவுகரமான தன்மையைக் குறைத்து, நிகழ்காலத்தை விடுத்து, இறந்த கால நிகழ்வாக குறிப்பிடுகின்றன.
இந்தத் தொற்றுநோயின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை அளவிடுவதும் கணக்கிடுவதும் கடினமானதாகும். உலகளவில் சுமார் 30 மில்லியன் மக்கள் கடுமையான கோவிட் -19 பெருந்தொற்று அல்லது வைரஸ் உடலில் ஏற்படுத்தும் எண்ணற்ற பாதகமான உடல்நல பாதிப்புகளால் இறந்துள்ளனர் என்று அதிகபடச இறப்புப் பற்றிய ஆய்வீடுகள் குறிப்பிடுகின்றன.
மே 2020 இல், நோயாளிகள் மூலம் முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்ட நெடுங் கோவிட் (Long COVID), இப்போது உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்திருக்கிறது. கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸ் ஒவ்வொரு உடலுறுப்பு அமைப்பிலும் நீடித்திருக்கும் என்றும் இரத்த-மூளைத் தடையைக் கூடக் கடந்து பெரும்பாலும் உடலைப் பலவீனப்படுத்தும் 200 க்கும் மேற்பட்ட ஆய்வுகளில் பதியப்பட்டிருக்கும் அறிகுறிகளைக் காண்பிக்கிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. கோவிட்-19 நோய்த்தொற்றுகள் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக நோய், நுரையீரல் பாதிப்பு, நோயெதிர்ப்பு சீர்குலைவு, பரந்த அளவிலான நரம்பியல் கோளாறுகள் மற்றும் பலவற்றின் அபாயத்துடன் திட்டவட்டமாக இணைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மறு தொற்றும் நெடுங் கோவிட் நோயை உருவாக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது என்பதை பல அறிவியல் ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. தொற்றுநோய் பரவலைக் கண்டுபிடிப்பதற்கான ஒரே நம்பகமான அளவீடாக இருக்கும் கழிவுநீர் தரவு (Wastewater data), சராசரி அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கிட்டத்தட்ட நான்கு முறை கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது. தற்போதைய இதேநிலை தொடருமானால், இந்த எண்ணிக்கை மார்ச் 2030 க்குள் ஒரு நபர் எட்டுமுறை நோய்த் தொற்றுகளுக்கு ஆளாவார். இந்த ஒரு உண்மை சந்தேகத்திற்கு இடமின்றி உலகம் முழுவதிலும் இருக்கிறது.
இந்தப் பேரழிவுக்கு என்ன காரணம், இதற்கு யார் பொறுப்பு?
மிகவும் அடிப்படையான அர்த்தத்தில், இந்த தொற்றுநோய்க்குப் பதிலளிக்கும் விதமாக உலகளவில் செயல்படுத்தப்படும் சமூக குற்றவியல் கொள்கைகளுக்கு முதலாளித்துவ அமைப்புமுறைதான் ஆதாரமாக உள்ளது. முதலாளித்துவம் உலகத்தைப் போட்டி தேசிய அரசுகளாகப் பிரித்து, சமூக தேவைகளைத் தனியார் இலாபத்திற்கு அடிபணியச் செய்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
சமூகத்தை நடத்தும் பெருநிறுவன-நிதியியல் தன்னலக் குழு, இலாப ஓட்டத்தையும் பங்குச் சந்தையின் எழுச்சியையும் சீர்குலைக்கும் எதுவும் நடந்துவிடக்கூடாது என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டன. அனைத்து சூழ்நிலைகளிலும் முதலாளித்துவ அரசாங்கங்களின் பிரதான ஆர்வமும், கொள்கை நோக்கமும் அவர்களின் செல்வவளத்தைப் பெருக்கி, சுரண்டலை அதிகரிப்பதுதான் என்பதை நிறுவுவதற்கு இந்தத் தொற்றுநோயைப் பயன்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த பெருந்தொற்றை அறிவித்த நேரத்தில், ஒரு ஆபத்தான புதிய கொரொனா வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதை விஞ்ஞான சமூகம் அறிந்து வெறும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது. ஆரம்பத்திலிருந்தே முக்கியமான நேரத்தை இழந்தாகிவிட்டது. கோவிட்-19 ஆல் ஏற்படப்போகும் தவிர்க்கமுடியாத ஆபத்துக்கள் குறித்து 2020 பிப்ரவரி தொடக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் மற்ற அரசாங்கங்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தன என்பது பின்னர் தெரியவந்துள்ளது. ஆனால், வேண்டுமென்றே ஒரு சர்வதேச பதில் நடவடிக்கையை ஒருங்கிணைக்காமல் அதற்கு பதிலாக “தீங்கு விளைவிக்கும் புறக்கணிப்பு” கொள்கையை அவை நடைமுறைப்படுத்தியிருந்தன.
2020 பிப்ரவரி மத்தியில், அமெரிக்காவும் உலகமும் ஒரு கொடிய நோய்க்கிருமியை எதிர்கொள்வது தெளிவாகத் தெரிந்தன. மேலும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அதன் பரவல் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களின் மரணத்திற்கு வழிவகுக்கும். பிப்ரவரி 29, 2020 அன்று அமெரிக்காவில் முதல் மரணம் நிகழ்ந்து கண்டுணரப்பட்ட சிறிது நேரத்திலேயே, பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
வைரஸ் பரவலின் ஆரம்ப மையப்பகுதிகளாக இருந்த மருத்துவமனைகள் விரைவாக நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. சுகாதாரப் பணியாளர்கள் போதுமான அல்லது பாதுகாப்புகள் எதுவுமே இல்லாத நிலையில், தொற்று அல்லது இறப்புகள் ஏற்படாத அளவுக்கு நோயாளிகளை பாதுகாப்பதுக்கு சிரமப்பட்டனர்.
பிணவறைகள் நிரம்பி வழிவதும், கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்படுவதும் எங்கும் நிறைந்து கொண்டிருந்தன. அமெரிக்கா, இத்தாலி மற்றும் உலகெங்கிலும் நடந்த இந்த கொடூரமான காட்சிகளால் அரசாங்கம் இதற்கு எதிர்வினையாற்றி உயிர்களுக்கு முன்னுரிமை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்களின் நனவில் ஆதிக்கம் செலுத்தின.
ஆனால், உயிர்களைக் காப்பாற்றவும் மக்களைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பத்தில் செயல்படுத்திய உலகின் ஒரேயொரு நாடு சீனா மட்டுமே. ஜனவரி 2020 இல் சீனத் தொழிலாள வர்க்கத்தினரிடையே அதிகரித்து வந்த கோபம், ஜனவரி 23, 2020 அன்று ஹூபே மாகாணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை முன்னோடியாகக் கொண்டுவர அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது. இதில் ஊரடங்குகள், பாரிய பரிசோதனைகள், நோய் தொடர்புத் தடமறிதலை கடுமையாக்குதல் மற்றும் நீண்டகாலமாக நிறுவப்பட்ட பிற பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவை அடங்கும்.
எழுபத்தாறு நாட்களுக்குப் பிறகு, சீனா முழு பொதுமுடக்கத்திலிருந்து மீண்டு, அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு தீவிர பரிசோதனை மற்றும் தடமறிதல் கொள்கைகளைப் பராமரித்து ஒப்பீட்டளவில் இயல்பு வாழ்க்கையைத் தொடங்கியது. உலக ஏகாதிபத்தியம், சீன கம்யூனிஸ்ட் கட்சியை (CCP) இந்த உயிர்காக்கும் கொள்கையை கைவிட அழுத்தம் கொடுப்பதற்கு முன்பு, இது 1-2 மில்லியன் இறப்புகளுக்கு வழிவகுத்தது.
சீனாவுக்கு வெளியே, 2020 மார்ச் மத்தியில், உலகின் ஒவ்வொரு பெருநகரப் பகுதியிலும் உள்ள பணியிடங்கள் மற்றும் பள்ளிகளில் கொரொனா வைரஸ் கடுமையாகப் பரவத் தொடங்கியது. இது உயிர்களைக் காப்பாற்றுவதற்காக அத்தியாவசியமற்ற பணியிடங்கள் மற்றும் பள்ளிகளை மூடுவதற்கு கட்டாயப்படுத்த வாகனத்துறை தொழிலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகளை தூண்டியது.
வோல் ஸ்ட்ரீட் மற்றும் உலக நிதிய மையங்களில் பங்குச் சந்தைகள் சரிந்ததால், அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்து முயற்சிகளும் வங்கிகளைப் பிணை எடுப்பதை நோக்கியே இருந்தன. உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் வைரஸை எதிர்கொள்வதற்கும் ஒரு திட்டமிட்ட திட்டத்தைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவதும் வோல் ஸ்ட்ரீட்டின் கீழ்நோக்கிய வீழ்ச்சியைத் தடுப்பதும் ஆளும் உயரடுக்கின் முக்கிய முன்னுரிமையாக இருந்தது.
மார்ச் 22, 2020 அன்று, நியூ யோர்க் டைம்ஸ் அதன் “ஏகாதிபத்திய தூதர்” தோமஸ் ப்ரீட்மேன் எழுதிய ஒரு தலையங்க கட்டுரையை வெளியிட்டது. இது, மீண்டும் வேலைக்குத் திரும்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திற்கான புதிய மந்திரமான “நோயை விட மோசமான சிகிச்சை இருக்க முடியாது” என்பதை உருவாக்கியது. கேர்ஸ் சட்டம் (CARES Act) நிறைவேற்றப்பட்ட அடுத்த வாரத்தில், இந்தப் பிரச்சாரம் வேகமெடுத்தது. இது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் ஓய்வு பெற்றவர்களும் ஒவ்வொரு நாளும் வேகமாக உயிரிழந்து கொண்டிருந்தபோது, செல்வந்தர்களுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வழங்கத் தொடங்கியது.
முழு அதிகாரபூர்வ விபரிப்பும் உயிர்களைக் காப்பாற்றுவதாகக் கூறப்படுவதிலிருந்து பொருளாதாரத்தை விரைவாக மீண்டும் திறப்பதை நோக்கி மாறியிருந்தது. இது, ஸ்வீடனை முன்னோடியாக எடுத்துக்கொண்டு வேண்டுமென்றே பாரிய தொற்றுநோய்க்கான “கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கையைப் பரவலாக ஊக்குவித்து ஒத்துப்போவதாக இருந்தது. இந்தப் போலி அறிவியல் கொள்கையானது, ஒருமுறை கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட மக்கள், அந்நோய்க்கு என்றென்றும் நோய் பாதிக்காமலிருக்க எதிர்ப்பு சக்தியுடன் இருப்பார்கள் என்ற மோசடியான கூற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதன் மனிதாபிமானமற்ற தன்மை ஒருபுறம் இருக்க, 2002-2004 சார்ஸ்-கொரோனா வைரஸ்-1 வெடிப்புக்குப் பின்னர் ஆவணப்படுத்தப்பட்டவாறு, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் பரந்த அளவிலான விளைவுகள் குறித்த வரலாற்று தரவுகளைப் புறக்கணித்த அதேவேளையில், இது வைரஸைப் பற்றி முற்றிலும் தவறான கருத்துக்களை பரப்பியிருந்தது.
டொனால்ட் ட்ரம்ப், போரிஸ் ஜோன்சன், ஜெய்ர் போல்சனாரோ மற்றும் சர்வதேச அளவில் அவர்களது சக சிந்தனையாளர்களின் ஒவ்வொரு பேச்சு மற்றும் கொள்கையிலும், “தகுதியானவர்கள் உயிர் வாழ்வதற்கான” நவீன நெறிமுறைகள் ஊடுருவி, சூடான யூஜெனிச மற்றும் பாசிச கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மால்தூசியனிசத்தின் நவீன விளம்பரம் மரணத்தைக் கொண்டாடும் தன்மையைப் பெற்றது.
அமெரிக்காவில், ஜோ பைடென் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் எந்த அடிப்படையான மாற்றமும் ஏற்படவில்லை. “அறிவியலைப் பின்பற்றுவதாக” வாக்குறுதியளித்தபோதிலும், பைடென் பொது சுகாதாரத்தை வோல் ஸ்ட்ரீட்டின் கோரிக்கைகளுக்கு அடிபணியச் செய்தார். நவீன அறிவியலின் உண்மையான மிகப்பெரிய சாதனையான உயிர் காக்கும் தடுப்பூசிகளை, தனியார் இலாபம் மற்றும் தடுப்பூசியை வைத்து மேற்கொள்ளப்பட்ட தேசியவாதத்திற்கு அடிபணியச் செய்யப்பட்டது. இன்றுவரை, 68 சதவீத ஆபிரிக்கர்கள் உட்பட குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இரண்டு தடவை போடப்படும் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகளைப் பெறமுடியவில்லை.
ஆரம்பத்தில் “தடுப்பூசி மட்டும்” என்ற உத்தியைப்பின்பற்றி, பின்னர் முகக்கவசம் மற்றும் பிற பொது சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரமாக ஊக்கப்படுத்தாத நிலையில், நவம்பர் 2021 இல், பைடென் நிர்வாகம் மிகவும் தொற்று மற்றும் தடுப்பூசி-எதிர்ப்பு ஓமிக்ரான் மாறுபாடு வைரஸ் தொற்றின் தோற்றத்தை வெளிப்படையான மகிழ்ச்சியுடன் வரவேற்றது. அடுத்தடுத்த காலகட்டத்தில், அது ஒட்டுமொத்த தொற்றுநோய் கண்காணிப்பு அமைப்புமுறையையும் படிப்படியாகத் தகர்த்தது. மேலும், அடுத்துவந்த கோடையில் வெள்ளை மாளிகை முடிவில்லாத வெகுஜனத் தொற்று, இறப்பு மற்றும் பலவீனப்படுத்துதல் என்ற “என்றென்றும் கோவிட்” கொள்கையை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டது.
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பதிலளிக்கும் விதமாக, அறிவியலின் மீதான இருகட்சிகளின் தாக்குதல் பொது சுகாதாரத் துறையை முடக்கியதுடன், அடுத்துவரும் தொற்று நோய்க்குக் களத்தை அமைத்துக் கொடுத்தது. வரலாற்று ரீதியாக மனிதர்களிடையே பறவைக் காய்ச்சல் 50 சதவீத இறப்பு விகிதத்தைக் ஏற்படுத்தியுள்ளது என்ற உண்மை இருந்தபோதிலும், கடந்த ஆண்டில், பைடென் நிர்வாகம் கறவை மாடுகளிடேயே H5N1 பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.
கோவிட்-19 இலிருந்து பாரிய இறப்பு மற்றும் உடல் பலவீனத்தை இயல்பாக்குவது உட்பட பைடெனின் பேரழிவுகரமான கொள்கைகள், ட்ரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கும், சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் (HHS) 13 முகமையகங்கள் ரோபர்ட் எஃப். கென்னடி ஜூனியரால் கட்டுப்படுத்தப்படுவதற்கும் நிலைமைகளை உருவாக்கியது. உலகில் தடுப்பூசி எதிர்ப்பு பற்றி தவறான தகவல்களை வழங்குவதில் மிகவும் இழிபுகழ்பெற்ற கென்னடி, டெக்சாஸ் மற்றும் தென்மேற்கு பகுதிகளில் அதிகரித்துவரும் தட்டம்மை நோய்க்கு பதிலளிக்கும் விதமாக, தடுப்பூசிகள் குறித்து ஏற்கனவே சந்தேகம் எழுப்பி வருகிறார். இந்த நோய், ஏற்கனவே இரண்டு பேரைக் கொன்றுள்ளது.
கடந்த வாரம், தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) தலைவராக ட்ரம்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய் பட்டாச்சார்யாவை உறுதிப்படுத்தும் விசாரணைகளைச் செனட் நடத்தியது. “கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தி” அறிக்கையான கிரேட் பாரிங்டன் பிரகடனத்தின் இணை-ஆசிரியராக நன்கு அறியப்பட்ட பட்டாச்சார்யா, இந்தத் தொற்றுநோயின்போது அவரது குற்றவியல் பங்கு குறித்து ஒரு ஜனநாயகக் கட்சியினாரால் கூட கேள்வி கேட்கப்படவில்லை.
இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆரம்ப வாரங்கள் தொடர்ச்சியான ஆபத்தான நடவடிக்கைகளால் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பின்வருவன அடங்கும்:
- உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா விலகுவது, தொற்றுநோய்களைக் கண்காணித்து பதிலளிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது;
- சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையில் (HHS) உள்ள அனைத்து 13 முகமையகங்கள் மீதும் முன்னெப்போதும் இல்லாதவகையில் விதிக்கப்பட்ட ஒரு தடை உத்தரவு, அதில், முக்கிய பொது சுகாதார தகவல்களை வெளியிடத் தடைசெய்துள்ளது.
- விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களைக் குறிவைத்து சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை (HHS), நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), தேசிய சுகாதார நிறுவனங்களில் (NIH) மற்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஆகியவற்றில் 5,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு மைய நோக்கம், கோடிக்கணக்கான அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் தங்களின் உயிர்வாழ்விற்காக நம்பியுள்ள சமூகப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் மருத்துவ உதவிகளை அழிப்பதாகும். இது, முதியவர்களைக் கொல்வதுடன் ஆயுட்காலத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட இருகட்சிகளின் தொற்றுநோய் கொள்கைகளின் தர்க்க ரீதியான நீட்டிப்பாகும். சமீபத்திய ஆய்வு ஒன்று சமூக செலவினங்களில் $156 பில்லியன் டாலரை மிச்சப்படுத்தியுள்ளது என்று மதிப்பிடுகிறது.
மேலும், அதிகமானவர்கள் உயிரிழந்திருக்க வேண்டும் என்பதே ஆளும் உயரடுக்கின் கணிசமான பிரிவுகளின் நிலைப்பாடாக இருந்து வருகிறது என்பதை இந்தத் தொற்றுநோய் வெளிப்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் ட்ரம்ப், குடியரசுக் கட்சியினர் மற்றும் பாசிச கோடீஸ்வரர் எலோன் மஸ்க் போன்ற அவர்களின் ஆதரவாளர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அந்தப் பிரிவிலிருந்து, உயிர்களைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முதியவர்களைக் கொன்று சமூகப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு மற்றும் மருத்துவ உதவிக்கான செலவினங்களைக் குறைப்பதற்கான தவறவிட்ட வாய்ப்பாகக் கருதப்பட்டன.
இந்தப் பெருந்தொற்றுநோய் ஏற்பட்ட சமயத்திலிருந்து, உலக சோசலிச வலைத் தளம் (wsws.org) அறிவியல் உண்மைக்காகத் தொடர்ந்து இடைவிடாத போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறது. இதன் மூலம், அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களின் பொய்களை நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம். கொள்கை ரீதியான அறிவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அவர்களை பாதுகாத்து வருகிறோம். மேலும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே சாத்தியமான உத்தியான உலகளவில் அதனை ஒழிப்பதற்கான அறிவியல் கொள்கையை ஆதரித்துள்ளோம். உலக சோசலிச வலைத் தளத்தால் தொடங்கப்பட்ட கோவிட்-19 பெருந்தொற்றுநோய் குறித்த உலகளாவிய தொழிலாளர்களின் விசாரணையானது (Inquest into the COVID-19 Pandemic), உண்மையை வெளிக்கொணர்வதற்கும் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கும் நமது உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக இருக்கிறது.
இந்தத் தொற்றுநோய் எந்த விதத்திலும் முடிவுக்கு வரவில்லை. புதிய மாதிரிகள் தொடர்ந்து வெளிவருகின்றன. மேலும், பறவைக் காய்ச்சல் போன்ற புதிய நோய்க்கிருமிகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. இந்தக் குளிர்காலத்தில், கோவிட்-19 மற்ற சுவாச நோய்களுடன் ஒன்றிணைந்து மீண்டும் சுகாதார அமைப்புகளைத் திணர வைத்துள்ளது. 20,000 க்கும் அதிகமான அமெரிக்க மக்கள் பருவகால வைரஸ் காய்ச்சலால் இறந்துள்ளனர். இந்தச் சூழலில், உலக சோசலிச வலைத் தளம் பின்வரும் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறது:
- “என்றென்றும் கோவிட்” கொள்கையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, அறிவியல் அடிப்படையிலான பொது சுகாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்து! உலகளவில் முகக்கவசம், விரிவான பரிசோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல், அனைத்து பொது இடங்களிலும் மேம்பட்ட காற்றோட்டம் மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி ஆகியவை இதில் அடங்கும்.
- அடுத்த தலைமுறை தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மிக்பெரிய முதலீடு செய்! இதன்மூலம் உயிர் காக்கும் கருவிகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சியுடன் இது இணைக்கப்பட வேண்டும்.
- சோசலிசக் கோட்பாடுகளின் அடிப்படையில் சமுதாயத்தை அடிப்படையாக மறுஒழுங்கமைப்பதற்காக! தனியார் லாபத்தை விட பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதையும், அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதையும் உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான்.
கோவிட்-19 தொற்றுநோய் பாரிய சமூகத்தின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு முதலாளித்துவத்தின் இயலாமையையும், இந்த சமூக அமைப்புமுறை பிற்போக்குத்தனத்தின் உச்ச நிலையில் உள்ளது என்பதையும் அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது. தொழிலாள வர்க்கம் அவசியமான முடிவுகளை எடுத்து ஒரு சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பெருந்தொற்று நோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், சுரண்டல், அடக்குமுறை மற்றும் தடுக்கக்கூடிய மரணத்திலிருந்து விடுபட்ட உலகைக் கட்டியெழுப்புவதற்கும் ஒரே பாதை, சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டம் மட்டுமே ஆகும்.