முன்னோக்கு

துருக்கியில் நெருக்கடியும் புரட்சிகரத் தலைமைக்கான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

துருக்கியின் இஸ்தான்புல் நகர மேயர் எக்ரெம் இமாமோக்லு கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டதை அடுத்து, நடந்த போராட்டத்தில், கலவர எதிர்ப்பு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரில் அமர்ந்திருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள். திங்கள், மார்ச் 24, 2025 [AP Photo/Huseyin Aldemir]

மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்றுவரும் பாரிய போராட்டங்களால் துருக்கி அதிர்ந்து போயுள்ளது. இஸ்தான்புல் நகர மேயரும் கெமலிஸ்ட் குடியரசுக் மக்கள் கட்சியின் (CHP) ஜனாதிபதி வேட்பாளருமான எக்ரெம் இமாமோக்லு, ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் இஸ்லாமிய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தூண்டப்பட்ட இந்த இயக்கம், துருக்கியிலும் உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அமைப்பின் ஆழமான நெருக்கடியிலிருந்து எழும் முக்கியமான அரசியல் பிரச்சினைகளை எழுப்புகிறது.

துருக்கியில் 1923 ஆம் ஆண்டு குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து மிகவும் பலவீனமாக இருக்கும் அதன் ஜனநாயகம், அதிகரித்து வரும் உலகளாவிய ஏகாதிபத்தியப் போர் மற்றும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மையின் அழுத்தத்தின் கீழ் தள்ளாடி வருகிறது. வாக்களிக்கும் உரிமை, உரிய நடைமுறைக்கான உரிமை, கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், ஆர்ப்பாட்டம், பத்திரிகை சுதந்திரம் போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. தேர்தல்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையிலான எர்டோகன் அரசாங்கம், அதன் சட்டபூர்வமான தன்மையைத் தூக்கி எறிந்து வருகிறது.

எதிர்ப்பு போராட்டங்களை அடக்குவதற்கு ஒரு பெரிய அளவிலான போலீஸ் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, கைது செய்யப்பட்டுள்ள கிட்டத்தட்ட 2,000 பேர்களில் குறைந்தது 260 பேர் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டவர்களில் தொழிற் கட்சி (EMEP), தொழிலாளர் ஜனநாயகக் கட்சி (IDP), இடது கட்சி, துருக்கிய தொழிலாளர் கட்சி (TİP), துருக்கிய கம்யூனிஸ்ட் இயக்கம் (TKH), துருக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (TKP) உள்ளிட்ட ஏராளமான இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் அடங்குவர். புரட்சிகர தொழிலாளர் கட்சியின் (DIP) துணைத் தலைவரும், இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தின் கல்வியாளருமான லெவென்ட் டோலெக், மாணவர் புறக்கணிப்புக்கு ஒற்றுமை தெரிவிக்கும் நடவடிக்கையில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கியப் பிரிவான சோசலிச சமத்துவக் குழு (Socialist Equality Group), இந்தக் குழுக்களுடனான அதன் அரசியல் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோருகிறது. மேலும், அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க பரந்தளவிலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அழைக்கிறது.

இஸ்தான்புல் மற்றும் நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரத்திலும், மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் நடத்திவரும் பாரிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்பன, அரசியலமைப்பிற்கு முரணான தடைகள் மற்றும் பொலிஸ் அடக்குமுறையை மீறி இடம்பெற்று வருகின்றன. சமீபத்திய காலங்களில் உலகின் மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு இயக்கங்களில் ஒன்றாக இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

துருக்கியில் வெடித்துள்ள புரட்சிகர நெருக்கடி, இதர நாடுகளின் எதிர்காலத்திற்கான முன்னறிவிப்பாகும். பரந்துபட்ட மக்களை அணிதிரட்டும் புறநிலைக் காரணங்கள் - ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல், வெளிப்படையான சமூக சமத்துவமின்மைகள் மீதான கோபம் மற்றும் முடிவற்ற ஏகாதிபத்தியப் போருக்கு எதிர்ப்பு - உலகளாவியவை. துருக்கியிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினை என்பது, ஒரு புரட்சிகர அரசியல் முன்னோக்கும், தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதுமாகும்.

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதும், நிதிய தன்னலக்குழுவின் நலன்களுக்காக ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான அவர் மேற்கொண்டுவரும் முயற்சியும் உலகம் முழுவதும் சர்வாதிகார மற்றும் பாசிச போக்குகளை ஊக்குவித்து துரிதப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைப் போலவே, துருக்கியிலும் ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவுவது என்பது, இந்த அல்லது அந்த அரசியல்வாதியின் நோக்கங்களிலிருந்து விளைவானதல்ல. மாறாக, ஆளும் வர்க்கத்தின் புறநிலைத் தேவைகளிலிருந்து விளைகிறது. பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் மீதான முதலாளித்துவ தன்னலக்குழுவின் சர்வாதிகாரம், அதனுடன் ஒரு அரசியல் சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவருகிறது.

ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை குறித்து உலக சோசலிச வலைத்தளம் பின்வருமாறு விளக்கியது:

இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகம் அதிகாரத்திற்கு வருவது, அமெரிக்காவில் நிலவும் உண்மையான சமூக உறவுகளுக்கு ஏற்ப, அமெரிக்க அரசியல் மேற்கட்டுமானத்தின் வன்முறை மறுசீரமைப்பைக் குறிக்கிறது.

இது துருக்கிக்கும் பொருந்தும். துருக்கி கடுமையான வர்க்க விரோதங்களால் பிளவுபட்டுள்ளது. மேலும், ஆளும் வர்க்கம் ஒரு வெடிப்பை நோக்கிச் செல்லும் ஒரு சமூக வெடிமருந்து கிடங்கின் மீது அமர்ந்திருக்கிறது. குடியரசு மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இமாமோக்லு கைது செய்யப்பட்டதன் மூலம் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ள ஜனாதிபதி சர்வாதிகாரம், எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தை குறிவைக்கிறது.

உலகின் 17வது பெரிய பொருளாதாரமான துருக்கி, ஐரோப்பாவை விட வருமானத்திலும், செல்வ சமத்துவமின்மையிலும் முன்னிலை வகிக்கிறது. ஒரு கட்டத்தில் 80 சதவீதத்தை எட்டிய அதிகாரப்பூர்வ பணவீக்கம் 2022 முதல் உச்சத்தை அடைந்துள்ளது. மேலும், அரசாங்கத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைக்கான திட்டம் உண்மையான ஊதியங்களையும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு அரசாங்கம் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு செல்வத்தை பெருமளவில் மாற்றுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கையானது, வர்க்கப் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு முதன்முதலில் ஆட்சிக்கு வந்து துருக்கிய பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்துடனும் முதலாளித்துவ உலகமயமாக்கலுடனும் முன்னெப்போதையும் விட அதிகமாக ஒருங்கிணைத்த எர்டோகன் அரசாங்கத்தின் கொள்கைகள், வர்க்க உறவுகளில் ஆழமான மாற்றங்களைக் கொண்டு வந்தன. அதிகரித்து வரும் பாட்டாளி வர்க்கமயமாக்கலும், வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கமும் சர்வதேச மற்றும் தேசிய மூலதனத்திற்கான மலிவு உழைப்பின் ஆதாரமாக மாற்றப்பட்டுள்ளன.

2000 ஆம் ஆண்டில், 65 சதவீத மக்கள் நகரங்களில் வாழ்ந்தாலும், இந்த எண்ணிக்கை இப்போது 90 சதவீதத்தை தாண்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டில், கூலித் தொழிலாளர்களின் விகிதம் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. இது, 2000 ஆம் ஆண்டில் 48 சதவீதமாக இருந்தது. 35 மில்லியன் தொழிலாளர் படை மற்றும் பெரிய தொழில்துறை நகரங்களுடன், துருக்கி மிகவும் வளர்ந்த மற்றும் அதிகரித்து வரும் போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கத்தைக் கொண்டுள்ளது.

அரசாங்கத்திற்கு ஆதரவான அல்லது முதலாளித்துவத்திற்கு ஆதரவான தொழிற்சங்க கூட்டமைப்புகள் வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கு உதவிய பல தசாப்தங்களுக்குப் பிறகு, வளர்ந்து வரும் திடீர் வேலைநிறுத்த இயக்கங்களில் இந்தப் போர்க்குணம் வெளிப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு எர்டோகனின் வேலைநிறுத்தத் தடையை எதிர்த்து உலோகத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த ஆண்டு சுரங்கத் தொழிலாளர்கள் முதல் ஜவுளித் தொழிலாளர்கள் வரை, சுகாதார வல்லுநர்கள் முதல் கட்டுமானத் தொழிலாளர்கள் வரை பாரிய போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

துருக்கியில் நடந்த நிகழ்வுகள், WSWS இன் 2025 புத்தாண்டு அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் பகுப்பாய்வை விரைவாக உறுதிப்படுத்தின:

கடந்த ஐந்து ஆண்டுகள், முதலாளித்துவ நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகள் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பால் ஆதிக்கம் செலுத்தப்படும். அதிகரித்து வரும் உலகப் போர்; தொடர்ச்சியான COVID-19 தொற்றுநோய் மற்றும் H5N1 பறவைக் காய்ச்சல்; பெரியம்மை போன்ற புதிய நோய்க்கிருமிகளின் தோற்றம்; அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான ஒருங்கிணைந்த தாக்குதல், சுரண்டல் மற்றும் சமூக துயரங்களின் பாரிய அதிகரிப்பு; ஆகியவற்றுக்கு உலகம் பூராகவும் உள்ள தொழிலாளர்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த ஒன்றோடொன்று தொடர்புடைய நெருக்கடிகளுக்கான மூல காரணம், சமூகம் முழுவதையும் இலாபத்திற்கும் தனிப்பட்ட செல்வக் குவிப்புக்கும் அடிபணியச் செய்யும் ஒரு தன்னலக்குழு ஆகும். இந்த தன்னலக்குழுவுக்கு எதிரான போராட்டம் என்பது அதன் இயல்பிலேயே ஒரு புரட்சிகரப் பணியாகும்.

எர்டோகன் அரசாங்கத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அதே முதலாளித்துவ தன்னலக்குழு, அதன் பிற்போக்குத்தனமான நலன்களைப் பின்தொடர்வதற்காக கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் வட ஆபிரிக்காவில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களில் ஆழமாக ஈடுபட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து எர்டோகன், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு போர்களை ஆதரிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்: அவர் ஈராக்கில் போரை ஆதரித்தார், ஆப்கானிஸ்தானுக்கு துருப்புக்களை அனுப்பினார், லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றப் போர்களுக்கு பங்களிப்பு செய்தார். அவரது சொல்லாட்சி விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் ஆதரவுடன் காசாவில் இஸ்ரேலிய சியோனிச ஆட்சியின் தொடர்ச்சியான இனப்படுகொலையை அவர் ஆதரித்து வருகிறார்.

இஸ்ரேலுக்கு அஜர்பைஜானின் எண்ணெய் ஏற்றுமதிக்கான குழாய் பாதையை துருக்கி பராமரித்து வருவதோடு, ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளை குறிவைத்துவரும் அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் இராணுவத் தளங்களையும் துருக்கி கொண்டுள்ளது. பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எர்டோகன் உடந்தையாக இருந்து வருவதால், மக்களின் பார்வையில் அவரது அரசாங்கம் நம்பகத்தன்மையை இழந்துள்ளது.

2014 உக்ரேன் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு தீவிரமடைந்துவந்த ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ தாக்குதலுக்கு, எர்டோகன் அரசாங்கத்தின் முழுமையாக ஒத்துப்போகும் திறன் இல்லாமை, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரில் குர்திஷ் தேசியவாத இயக்கத்துடனான அதன் கூட்டணி என்பன, துருக்கியின் சர்வாதிகார திருப்பத்தை துரிதப்படுத்தியுள்ளது. தீவிரமடைந்து வரும் ஏகாதிபத்தியப் போரின் மத்தியில், துருக்கி அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் சூழ்ச்சி செய்ய முயன்றதால் பதட்டங்கள் அதிகரித்தன. இந்த நிலைமை, ஜூலை 15, 2016 அன்று எர்டோகனை தூக்கியெறியும் நோக்கில் நேட்டோ ஆதரவுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி பெரும் எதிர்ப்பின் காரணமாக தோல்வியடைந்த பிறகு, அவர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நீடித்த அவசரகால நிலையை அறிவித்து வன்முறையான எதிர்த் தாக்குதலைத் தொடங்கினார். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு வாக்கெடுப்பானது, எர்டோகனுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியது.

அந்த நேரத்தில் துருக்கிய சோசலிச சமத்துவக் குழு பின்வருமாறு கூறியது:

துருக்கியில் ஜனநாயகத்தின் பொறிகள் கூட ஆளும் வர்க்கத்தின் இராணுவவாத மற்றும் சர்வாதிகார உந்துதலுடன் இனி ஒத்துப்போகமாட்டாது என்பதை எர்டோகன் முன்மொழிந்த அரசியலமைப்பு திருத்தம் காட்டுகிறது. ...அவரால் இனி உள் அரசியல் எதிர்ப்பை பொறுத்துக்கொள்ள முடியாது. முதலாளித்துவத்தின் போட்டிப் பிரிவுகளின் எதிர்ப்பையும், தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் எதிர்ப்பையும் நசுக்குவதற்கு அவர் அதிகாரங்களை நாட வேண்டும்.

அதன் பின்னர், 2020 முதல் கோவிட்-19 தொற்றுநோய், 2022 முதல் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவும் நேட்டோவும் தொடுத்துவரும் போர் மற்றும் 2023 முதல் காசாவில் இடம்பெற்றுவரும் இஸ்ரேலிய இனப்படுகொலை ஆகியவற்றால், உலக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பும் ஆழமடைந்தன. இன்று, முன்னெப்போதையும் விட, பெரும்பான்மையான மக்களால் வெறுக்கப்படும் அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியத்தின் வளர்ந்து வரும் ஆக்கிரமிப்பு போர்களுக்கு ஏற்ப, ஒரு கொள்கையை செயல்படுத்த துருக்கிய முதலாளித்துவத்திற்கு ஒரு சர்வாதிகார ஆட்சி தேவை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழுமையான ஆதிக்கத்தின் கீழ் மத்திய கிழக்கை மீண்டும் காலனித்துவப்படுத்தும் ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டங்களில் துருக்கி ஒரு முக்கிய கூட்டாளியாகக் கருதப்படுகிறது. பாலஸ்தீனத்திலிருந்து லெபனான் வரை, சிரியாவிலிருந்து ஏமன் வரை, அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போர், ஒரு “புதிய மத்திய கிழக்கை” உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அங்கு அப்பகுதியின் வரைபடம் மீண்டும் வரையப்படும். 1979 ஈரானிய புரட்சியுடன் முழுமையான கட்டுப்பாட்டை இழந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்த இலக்கை அடைவதற்கு ஈரான் ஒரு தடையாக இருந்து வருவதாக கருதுகிறது. மேலும், ஏகாதிபத்திய-சியோனிச இராணுவத் தாக்குதலின் உடனடி அச்சுறுத்தலுக்கும் ஈரான் உள்ளாகியுள்ளது.

ஈரானுடன் நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் துருக்கியின் ஆதரவு இல்லாமல், இத்தகைய ஆக்கிரமிப்பை அவர்களால் மேற்கொள்ள முடியாது. 2024 டிசம்பரில் சிரியாவில் அல்-கொய்தாவுடன் இணைந்த ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற ஆயுதக் குழு அதிகாரத்திற்கு வருவதுக்கு அங்காரா முக்கிய பங்கு வகித்தது. அமெரிக்கா தலைமையிலான ஈரானிய எதிர்ப்பு அச்சின் ஒரு முக்கிய பாகமாக பார்க்கப்படும் அங்காரா, டமாஸ்கஸில் HTS ன் புதிய ஆட்சி மற்றும் குர்திஷ் தேசியவாத இயக்கத்துடன், குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) தலைவர் அப்துல்லா ஓகலன் மூலம் துருக்கி ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கிறது.

அதனால்தான், எர்டோகனுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்பும் ட்ரம்ப், அவரை “ஒரு நல்ல தலைவர்” என்றும் “எனது நண்பர்” என்றும் அழைக்கிறார். இமாமோக்லு கைது செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, எர்டோகன் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசினார். ட்ரம்பின் மத்திய கிழக்கு தூதர் இந்த தொலைபேசி அழைப்பை “சிறந்தது” மற்றும் “மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று விவரித்தார். துருக்கியில் கைதுகள் மற்றும் வெகுஜன போராட்டங்களுக்கு மத்தியில், மார்ச் 25-26 அன்று வாஷிங்டனுக்கு சென்ற துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடானுக்கு அன்பான வரவேற்பு கிடைத்தது. அதே நாட்களில், துருக்கியில் போராட்டங்கள் மற்றும் பொலிசாரின் மிருகத்தனத்தை ஒளிபரப்பும் ஏராளமான சமூக ஊடக கணக்குகளுக்கான அணுகலை எலோன் மஸ்க்கின் எக்ஸ்/ட்விட்டர் தடுத்தது.

அமெரிக்காவுடனான வளர்ந்து வரும் பதட்டங்கள் மற்றும் நேட்டோவிற்குள் ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு மத்தியில், எர்டோகன் அரசாங்கத்தை ஒரு முக்கிய கூட்டாளியாக ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் கருதுகின்றன. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சமாதான உடன்படிக்கைக்கு எதிராக உக்ரேனில் போரைத் தொடர விரும்பும் ஐரோப்பிய சக்திகள், “விருப்பமுள்ளவர்களின் கூட்டணியை” உருவாக்கி, நேட்டோ துருப்புக்களை உக்ரேனுக்கு அமைதி காக்கும் படை என்ற பேரில் அனுப்ப திட்டமிட்டுள்ளன. மத்தியதரைக் கடல் முதல் கருங்கடல் வரையிலான ஜலசந்தியைக் கட்டுப்படுத்தும் மற்றும் நேட்டோவின் இரண்டாவது பெரிய இராணுவப் படையைக் கொண்டுள்ள துருக்கி, “சமாதானம்” என்ற பெயரில் அணு ஆயுத மோதலைத் தூண்டக்கூடிய இந்தத் தீவைப்புத் திட்டங்களில் முக்கிய பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் துருக்கிக்கும் இடையேயான அகதிகளுக்கு எதிரான அசிங்கமான ஒப்பந்தமும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆதரவு நிலைப்பாடும், துருக்கியில் அரசியல் எதிர்ப்பு மீதான அடக்குமுறையை எர்டோகனின் ஐரோப்பிய கூட்டாளிகள் கண்டும் காணாதவர்களாக இருப்பதற்கு வழி வகுக்கும் என்ற அவரது கணக்கீடும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் அவற்றின் விளைவுகளிலிருந்து, குறிப்பாக சிரியாவில் இருந்து உயிர்தப்பி துருக்கிக்குள் வந்த சுமார் 5 மில்லியன் அகதிகளை அங்காரா ஐரோப்பாவிற்குள் செல்ல விடாமல் தடுத்து வைத்துள்ளது.

சோசலிச சமத்துவக் குழு, நியாயமான விசாரணைக்கான உரிமையை மீறி கைது செய்யப்பட்ட இமாமோக்லு மற்றும் அனைத்து குடியரசுக் மக்கள் கட்சியின் உறுப்பினர்களையும் விடுவிக்கக் கோருகிறது. இருப்பினும், இது குடியரசுக் மக்கள் கட்சிக்கு எந்த விதமான அரசியல் ஆதரவையும் வழங்குவதை குறிக்கவில்லை. அதன் இயல்பிலேயே, குடியரசுக் மக்கள் கட்சி ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க இலாயக்கற்று உள்ளது. மாறாக, குடியரசுக் மக்கள் கட்சி, பாரிய இயக்கத்தை தேர்தல் கட்டமைப்பிற்குள் திசைதிருப்பி, அதை நசுக்க முயற்சிக்கிறது. எர்டோகன் அரசாங்கத்தைப் போலவே, இந்த அடிப்படை பிரச்சினைகள் உருவாகும் முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் முதலாளித்துவ ஆட்சியை சவால் செய்யும் ஒரு புரட்சிகர தொழிலாள வர்க்க இயக்கத்தை குடியரசுக் மக்கள் கட்சி எதிர்த்து வருகிறது.

குடியரசுக் மக்கள் கட்சி என்பது எர்டோகன் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் அதே ஏகாதிபத்திய சக்திகளுடன் இணைந்த ஒரு முதலாளித்துவ தேசியவாதக் கட்சியாகும். மேலும், அது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க இலாயக்கற்றுள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. துருக்கிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு புரட்சி குறித்த அச்சங்களைத் தணிப்பதற்காக, குடியரசுக் மக்கள் கட்சி, ஏகாதிபத்திய சக்திகளுக்கு உறுதியளிக்கவும், அது ஒரு “நேட்டோ கட்சி” என்று அறிவிப்பதன் மூலமும், அவர்களின் ஆதரவைப் பெறவும் முயன்றுள்ளது. ஏராளமான ஸ்ராலினிச மற்றும் பப்லோவாத அரசியல் போக்குகள், பாரிய போராட்ட இயக்கத்தை குடியரசுக் மக்கள் கட்சியின் தலைமைக்கும், அதன் அரசியலுக்கும் முழுமையாகக் கீழ்ப்படுத்துவதன் மூலம், ஒரு புரட்சிகர சோசலிச மாற்றீட்டின் வளர்ச்சியைத் தடுப்பதுக்கான தமது பங்கை நிறைவேற்றி வருகின்றன.

ஒரு முதலாளித்துவக் கட்சியான குடியரசுக் மக்கள் கட்சியின் முதுகெலும்பற்ற தன்மை மற்றும் அரசியல் சரணடைதல் என்பது உலகளாவிய நிகழ்வுப்போக்கின் ஒரு பாகமாகும். 1917 அக்டோபர் புரட்சியை விளாடிமிர் லெனினுடன் இணைந்து வழிநடத்தி 1938 இல் நான்காம் அகிலத்தை நிறுவிய லியோன் ட்ரொட்ஸ்கி, தனது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் விளக்கியது போல, தற்போதைய சகாப்தத்தில் உலகில் உள்ள எந்த முதலாளித்துவப் பிரிவும் ஜனநாயகம், சமூக சமத்துவம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கையை தொடர்ந்து பாதுகாக்க முடியாது. இந்தப் பணிகளானது, சமூகச் செல்வத்தை உருவாக்கி, ஏகாதிபத்தியப் போருக்கு விலையைச் செலுத்திவரும் தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகின்றது. தொழிலாளர் அதிகாரத்தை நிறுவுவதும், சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துவதும் ஒரு தேசிய அளவிலான பணி அல்ல, மாறாக ஒரு சர்வதேச பணியாகும். மேலும், உலக அளவில் சோசலிசப் புரட்சியின் வெற்றியின் மூலம் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும்.

ஏகாதிபத்தியப் போர் மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், மத்திய கிழக்கு சோசலிச கூட்டமைப்பு என்ற முழக்கத்தின் கீழ், துருக்கிய தொழிலாள வர்க்கம் தனது இடத்தைப் பிடிக்க வேண்டும்.

துருக்கியிலும், அனைத்து நாடுகளிலும் உள்ள அடிப்படையான கேள்வி, தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்துவரும் இயக்கத்தை வழிநடத்த ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவது பற்றியதாகும். இதன் பொருள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும், அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளையும் கட்டியெழுப்புவதாகும். இந்த முன்னோக்குடன் உடன்படுபவர்கள் அதன் அடிப்படையில் செயல்பட்டு சோசலிச சமத்துவக் கட்சியை (துருக்கி) கட்டியெழுப்புவதுக்கு பங்கேற்க வேண்டும்.