சாம்சங் இந்தியா வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஸ்ராலினிஸ்டுகள் தலைமையிலான CITU விடுத்துள்ள உத்தரவுகள், இடைநீக்கம் செய்யப்பட்ட 23 தொழிலாளர்களை பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

ஸ்ராலினிச தலைமையிலான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) 500 நிரந்தரத் தொழிலாளர்களின் ஒரு மாத கால போர்க்குணமிக்க வேலைநிறுத்தத்தை திடீரென நிறுத்தியதை அடுத்து, சாம்சங் இந்தியா, தமிழ்நாட்டில் உள்ள அதன் வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி ஆலையில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த இலையுதிர்காலத்தில் 5 வார வேலைநிறுத்தத்தின் போது சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட தளம் அமைக்கப்பட்டது. தொழிலாளர் விரோத நீதிமன்ற உத்தரவின் காரணமாக, சாம்சங் தொழிலாளர்கள் மறியல் செய்ய தடை விதிக்கப்பட்டதுடன் ஆலையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவில் "வேலைநிறுத்த" கூடாரத்தை அமைக்க வேண்டியிருந்தது. அக்டோபர் 8, 2024 அன்று, போலீசார் தொழிலாளர்களைத் தாக்கி கூடாரத்தை இடித்துத் தள்ளினர்.

நிறுவனத்தால் எதேச்சதிகாரமாகவும் பழிவாங்கும் விதமாகவும் இடைநீக்கம் செய்யப்பட்ட 23 தொழிலாளர்களை மீண்டும் உடனடியாக பணியில் அமர்த்தாமலேயே, மார்ச் 7 அன்று தொழிலாளர்களை போராட்டத்தை நிறுத்துமாறு CITU உத்தரவிட்டது. CITU வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அதன் முடிவு தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் எந்த வாக்கெடுப்பும் நடத்தவில்லை. தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதுதான் வேலைநிறுத்ததின் பிரதான காரணமாக இருந்தது.

இந்தக் காட்டிக்கொடுப்பால் தைரியம் அடைந்த தென் கொரியாவை தளமாகக் கொண்ட அந்த நாடுகடந்த நிறுவனம், நிரந்தர தொழிலாளர்களில் பெரும்பாலோருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர போனஸை வழங்க மறுத்து வருவதுடன் போராளித் தொழிலாளர்களாக அறியப்பட்டவர்களை, ஆலைக்குள் மிகவும் கடினமான வேலைகளுக்கு திட்டமிட்டு மாற்றுகிறது.

சாம்சங் இந்தியா ஆலை அமைந்துள்ள சென்னையின் புறநகரில் உள்ள தொழில்துறை பகுதியில் தொழிலாளர்கள் மத்தியில் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு வளர்ந்து வருவதால், ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உடன் இணைந்த தொழிற்சங்க அமைப்பான CITU இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

ஸ்ராலினிஸ்டுகள், இந்த வேலைநிறுத்தம் ஒரு பரந்த தொழிலாள வர்க்க அணிதிரட்டலுக்கான தூண்டுதலாக மாறக்கூடும் என்றும் அது அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விரைவாக விடுபடக்கூடும் என்றும் அஞ்சினர். இந்த வேலைநிறுத்தத்தை அடக்குவதற்கு, தமிழ்நாட்டின் திமுக தலைமையிலான மாநில அரசாங்கத்தில் உள்ள அவர்களின் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளிடமிருந்து வந்த கடும் அரசியல் அழுத்தத்திற்கு அவர்கள் உள்ளானார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்திற்கு (SIWU) அங்கீகாரத்தைப் பெறவும், அவர்களின் பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யும் கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் நிரந்தரத் தொழிலாளர்கள் நடத்தி வரும் கிட்டத்தட்ட ஒரு வருட காலப் போராட்டம் முழுவதும், சாம்சங் நிர்வாகத்தையே திமுக முழுமையாக ஆதரித்துள்ளது. சாம்சங் தொழிலாளர்கள் மீது திமுக பலமுறை போலீஸ் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. தொழிற்சங்க அங்கீகாரம் இந்தியாவின் அரசியலமைப்பின் கீழ் ஒரு சட்டபூர்வ உரிமையாக இருக்கின்ற போதிலும் பல மாதங்களாக மாநில தொழிலாளர் துறை SIWU ஐ அங்கீகரிக்க மறுத்துவிட்டது.

ஜூலை 2024 இல் தங்களது சொந்த முன்முயற்சியினால் SIWU ஐ உருவாக்கிய சிறிது காலத்திற்குப் பின்னர், சர்வாதிகார சாம்சங் நிர்வாகத்திற்கு எதிரான தங்கள் போராட்டத்தை வலுப்படுத்தும் என்ற தவறான நம்பிக்கையில், தொழிலாளர்கள் CITU-வை நோக்கி திரும்பி, தங்கள் தொழிற்சங்கத்தை அதனுடன் இணைத்தனர்.

அதற்கு பதிலாக, பாதுகாப்பான, நல்ல ஊதியம் தரும் வேலைகளுக்கான சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை திட்டமிட்டு தனிமைப்படுத்திய CITU, நிர்வாகம் தொழிலாளர்கள் மத்தியில் பிளவுபடுத்தும் படிநிலையை உருவாக்குவதை சவால் செய்வதற்கு, ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்களின் ஆதரவைக் கோருவதை வழக்கம் போல மறுத்தது.

இதன் விளைவாக, வேலைநிறுத்தம் செய்பவர்கள் நிரந்தரமாக வேறொருவரால் மாற்றீடு செய்யப்படுவார்கள் என்ற மறைமுக அச்சுறுத்தலுடன், மேலதிக தற்காலிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, நிரந்தரமற்ற தொழிலாளர்களைப் பயன்படுத்தி நான்கு வார வேலைநிறுத்தம் முழுவதும் உற்பத்தியைத் தொடர்வதற்கு நிறுவனத்தால் முடிந்தது.

சாமானிய தொழிலாளர்களான மூன்று SIWU அலுவலகப் பணியாளர்களை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து, அவர்களாகவே வேலைநிறுத்தம் செய்ததுடன் பெப்ரவரி 5 ஆம் தேதி வேலைநிறுத்தம் தொடங்கியது. நிர்வாகத்தின் இடைவிடாத தொழிலாளர் துன்புறுத்தலை, குறிப்பாக தொழிற்சங்க ஆதரவாளர்களை துன்புறுத்துவதை எதிர்த்த இந்த தொழிலாளர்கள், நிறுவனத்தின் தென் கொரிய மேலாளர்களில் ஒருவருடன் ஒரு சந்திப்பை கோரினர்.

பின்னர் வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சியில் நிறுவனம் மேலும் இருபது தொழிலாளர்களை இடைநீக்கம் செய்தது.

இந்தப் புதிய ஆத்திரமூட்டலுக்குப் பின்னர், வேலைநிறுத்தத் தொழிலாளர்களின் அழுத்தத்தின் கீழ், இரண்டு வாரத்தின் பின்னர் மார்ச் 13 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மற்ற ஆலைகளில் தொழிலாளர்களின் ஒரு நாள் அனுதாப வேலைநிறுத்தத்தை நடத்தப் போவதாக CITU அறிவித்தது. டஜன் கணக்கான ஆலைகளில் உள்ள தொழிலாளர்கள் அதைத் தொடர்ந்து பங்கேற்கும் தங்கள் விருப்பத்தை அறிவித்தனர். எனினும் CITU, சிபிஎம் ஆகியவை மார்ச் 13 க்கு முன்னரே வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவருவதை உறுதி செய்தன. வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கி தொழிலாள வர்க்கத்தை திமுக மற்றும் பிற வலதுசாரி முதலாளித்துவ கட்சிகளுடன் கட்டிப்போட்ட ஸ்ராலினிஸ்டுகளின் பல தசாப்த கால வரலாற்றை கருத்தில் கொண்டால், இது எந்த ஆச்சரியமும் தரப்போவதில்லை.

SIWU இன் பிரதான செய்தித் தொடர்பாளராகச் செயல்படும் CITU மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், வேலைக்குத் திரும்புவதை அறிவிக்கையில், வேலைநிறுத்தம் செய்தவர்களின் நிறுவன அடையாள அட்டைகளை இரத்து செய்வதிலிருந்து சாம்சங் பின்வாங்கியதிலும், அவர்கள் ஒவ்வொருவரும் 'மன்னிப்பு' கடிதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டதிலும் இருந்து ஒரு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக கூறினார்.

கடந்த இலையுதிர்காலத்தில் சாம்சங் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தை CITU எதேச்சதிகாரமாக முடிவுக்குக் கொண்டு வந்தபோது முத்துக்குமார் கூறிய கூற்றுகளைப் போலவே, ஸ்ராலினிஸ்டுகளின் வெற்றி பற்றிய கூற்றுக்களும் வெறுமையானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட 23 தொழிலாளர்கள் இப்போது நிர்வாகத்தின் 'ஒழுங்கு நடவடிக்கை (disciplinary action) செயற்பாடுகள்' என்ற திட்டத்தின் கீழ் மேலதிக நிறுவனப் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுவதுடன் அனைத்து முன்னாள் வேலைநிறுத்தக்காரர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை மீண்டும் நாசப்படுத்திய ஸ்ராலினிச முத்துக்குமார், மார்ச் 21 அன்று ஒரு பேஸ்புக் பதிவில், 'சுமூகமான மற்றும் அமைதியான உறவுகளைப் பேணுவதற்கு' CITU வளைந்துகொடுத்த போதிலும், நிர்வாகம் தொழிலாளர்கள் மீது வெளிப்படையான விரோதப் போக்கைக் காட்டுவதாக முறைப்பாடு செய்தார்.

அதே பதிவில், அவர் நிர்வாகத்தின் தொடர்ச்சியான பழிவாங்கல் நடவடிக்கைகளைப் பற்றி விரிவாகக் கூறினார். வருடாந்திர போனஸை நிறுத்தி வைப்பதோடு மட்டுமல்லாமல், SIWU க்கு பதிலாக நிர்வாகம் உருவாக்கிய 'தொழிலாளர் கமிட்டியில்' சேருவதற்கு நிர்வாகம் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது, என அவர் பதிவிட்டுள்ளார்.

வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் அடிக்கடி மிகவும் கடினமான அல்லது முறையான பயிற்சி பெறாத வேலைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். சில பெண் தொழிலாளர்கள் வெவ்வேறு துறைகளுக்கு மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டு, அங்கு அவர்கள் கனமான பொருட்களைக் கையாள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் 'பயிற்சி அமர்வுகளில் கலந்துகொள்ளவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதன் போது நிறுவன மேலாளர்கள் அவர்களைத் துன்புறுத்தி மிரட்ட முயற்சிக்கின்றனர்.

CITUவினால் சாம்சங் தொழிலாளர் காட்டிக்கொடுக்கப்பட்டதானது, தொழிலாள வர்க்கத்தை நன்றாகக் குழப்பி சீ ர்குலைப்பதற்காக 'இடதுசாரி' என்றும் 'கம்யூனிஸ்ட்' என்றும் கூட காட்டிக் கொள்ளும் ஸ்ராலினிச சிபிஎம், முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக அது வகிக்கும் பங்கிற்கு பொருத்தமாக உள்ளது.

திமுகவின் நெருங்கிய கூட்டாளியான சிபிஎம், அதனுடன் அரசியல் ரீதியாக முறையற்ற உறவைப் பேணுகிறது. சிபிஎம் கட்சிக்கு திமுக பெரும் நிதியுதவியும் வழங்குகிறது. இதற்குக் காரணம், சிபிஎம் மற்றும் அதன் ஸ்ராலினிச சகோதர கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ) இந்தியாவின் தேசிய நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் பிரதிநிதித்துவம் வகிப்பதற்காகவே அவை திமுக உடன் தேர்தல் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறன. 2019 தேசிய தேர்தலில் சிபிஎம் பிரச்சாரத்திற்கு திமுக 100 மில்லியன் ரூபா (1.5 மில்லியன் டாலர்கள்) நிதியளித்தது.

தமிழ்நாட்டில் திமுகவின் மூர்க்கமான வணிக சார்பு கொள்கைகள் இருந்தபோதிலும் திமுகவை மதச்சார்பற்ற மற்றும் 'முற்போக்கு' கட்சியாக சிபிஎம் நீண்ட காலமாக ஊக்குவித்து வருகிறது. சிபிஎம், திமுக ஆகிய இரண்டும் INDIA (இந்தியா- Indian National Developmental Inclusive Alliance) கூட்டணியின் வலுவான ஆதரவாளர்கள் ஆகும். இக்கூட்டணி, சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் தேசிய அரசாங்கத்திற்கான விருப்பமான கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியால் வழிநடத்தப்படுகிறது.

இந்தச் சூழலில்தான், சாம்சங் தொழிலாளர்களை மட்டுமன்றி, காஞ்சிபுரம் தொழில்துறைப் பகுதியில் உள்ள தொழிலாளர்களையும் CITU மீண்டும் மீண்டும் காட்டிக்கொடுப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

சமீபத்திய வேலைநிறுத்தத்தை கைவிடுவதாக அறிவித்த பின்னர், நிர்வாக துஷ்பிரயோகத்தை பொறுத்துக்கொள்ளுமாறு முத்துக்குமார் தொழிலாளர்களுக்கு விரிவுரை வழங்கினார். 'நிர்வாகம் உங்களை மோசமாக நடத்தினால், எதிர்வினையாற்ற வேண்டாம்; உங்கள் வேலையைச் செய்து கடினமாக உழைக்கவும். பயிற்சி பற்றியோ அல்லது நிர்வாகம் உங்களிடம் எப்படிப் பேசுகிறது என்பதைப் பற்றியோ கவலைப்பட வேண்டாம். அதைப் புறக்கணிக்கவும்,' என அவர் கூறுகிறார்.

அனைத்து சுயாதீன முயற்சிகளையும் விட்டுக்கொடுக்குமாறும், CITU எந்திரத்தின் உத்தரவுகளை கண்மூடித்தனமாக பின்பற்றுமாறும் முத்துக்குமார் மேலும் தொழிலாளர்களை வற்புறுத்தினார். 'நீங்களாகவே எதையும் யோசிக்காதீர்கள்' என்று உத்தரவிட்டார். 'பிரச்சினைகள் இருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், நாங்கள் அவற்றைக் கையாள்வோம். ஆனால் நாங்கள் நிர்ணயித்த எல்லைகளுக்கு அப்பால் செல்லாதீர்கள்,' என்றார். இத்தகைய சொற் பிரயோகம், 'நிர்வாகத்துடன் இணக்கமாக' செயற்படும் CITU இன் அதிகாரத்துவ மற்றும் பெருநிறுவன சார்பு நோக்குநிலையை எடுத்துக்காட்டுவதுடன், ஸ்ராலினிச அதிகாரத்துவம் தாம் வழிநடத்துவதாகக் கூறும் தொழிலாளர்கள் மீதான அதன் விரோதம் மற்றும் பயத்திற்கு சான்றாக நிற்கிறது.

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை ஸ்ராலினிஸ்டுகள் தனிமைப்படுத்தி அடக்குவதாலும், திமுக தலைமையிலான மாநில அதிகாரிகளிடமிருந்து அதற்கு கிடைத்த ஆதரவாலும் ஊக்கமடைந்த நிறுவனம், தனது விட்டுக்கொடுக்காத நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. வறிய ஊதியங்கள், நீண்ட நேர வேலை, மோசமான வேலை நிலைமைகள் மற்றும் தொழிலாளர்கள் துஷ்பிரயோகம் மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகளையும் எதிர்த்துப் போராடுவதற்கு எதிரான கடுமையான மற்றும் எதேச்சதிகாரமான ஒழுக்காற்று நடைமுறைகள் ஆகியவை இதில் அடங்கும்.

தொழிலாளர் துறை SIWUவை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்ய நிர்பந்திக்கப்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பின்னரே, மூன்று SIWU அலுவலக ஊழியர்கள் ஆத்திரமூட்டும் வகையில் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஸ்ராலினிஸ்டுகள் மாநில அரசாங்கத்தை வழிநடத்தும் அண்டை மாநிலமான கேரளாவிலும் சிபிஎம் இன் தொழிலாளர் விரோத அரசியல் வெளிப்படையாகத் தெரிகிறது. ASHA (ஆஷா - அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்) என்று பிரபலமாக அறியப்படும் 26,000 க்கும் மேற்பட்ட கிராமப்புற பொது சுகாதார ஊழியர்கள், மாதத்திற்கு 21,000 ரூபாய் ($243) வாழ்வாதார ஊதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் கோரி ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், வணிக சார்பு முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான ஸ்ராலினிச அரசாங்கம் வேலைநிறுத்தத்திற்கு விரோதமாக உள்ளது, இத்தகைய அடிப்படை கோரிக்கைகளுக்கு கூட நிதியளிக்க மாநிலத்தில் பணம் இல்லை என்று தொழிலாளர்களிடம் கூறுகிறது.

சாம்சங் தொழிலாளர்களின் அனுபவம், கொடூரமான வேலை நிலைமைகளையும் நிர்வாகத்தின் முகவர்களாக செயல்படும் தொழிற்சங்கங்களையும் எதிர்கொள்கின்ற, உலகளவில் உள்ள தொழிலாளர்களின் அனுபவங்களை பிரதிபலிக்கிறது. சாம்சங் தொழிலாளர்கள் தீர்க்கமான உறுதிப்பாட்டைக் காட்டியுள்ளதோடு சாம்சங்கின் எதேச்சதிகார நிர்வாகத்தை எதிர்ப்பதில் பெரும் தியாகங்களைச் செய்துள்ள போதிலும், அவர்களின் போராட்டம் நாசப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால்தான் சாம்சங் தொழிலாளர்கள் CITU உடன் தீர்க்கமாக முறித்துக் கொண்டு, ஒரு சுயாதீனமான சாமானிய தொழிலாளர் நடவடிக்கைக் குழுவை நிறுவுவதன் மூலம் தங்கள் போராட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அத்தகைய குழு நிரந்தர, ஒப்பந்த, தற்காலிக தொழிலாளர்களையும், பிற சாம்சங் தொழிலாளர்களையும் இந்தியாவிலும் உலகளவிலும் ஒன்றிணைக்க வேண்டும். அவர்கள் காஞ்சிபுரம் தொழில்துறை பகுதியிலும், இந்தியா முழுவதும், அதற்கு அப்பாலும் உள்ள தங்கள் சகோதர சகோதரி தொழிலாளர்களுடன் உறுதியான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

வர்க்கப் போராட்டத்திலும் சோசலிச சர்வதேசியத்திலும் வேரூன்றிய இயக்கத்தால் மட்டுமே, சாம்சங் போன்ற நாடுகடந்த நிறுவனங்களின் கொடூரமான சுரண்டலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.