மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த திங்கட்கிழமை மாலை வெளியிட்ட ஒரு சக்திவாய்ந்த அறிக்கையில், கோர்னெல் பல்கலைக்கழகத்தில் ஆபிரிக்கா கற்கைகளில் பிரிட்டிஷ்-காம்பிய முனைவர் பட்ட (Ph.D.) மாணவரான மொமொடு தால், ட்ரம்ப் நிர்வாகத்தின் அரசியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க, அமெரிக்காவை விட்டு வெளியேறுவதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார்.
மொமொடு தால் தனது வழக்கை ஆதரித்த அனைத்து தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும், குறிப்பாக அவரது சட்டக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பின்வருமாறு எழுதினார்:
நான் செய்ய முயற்சித்த அனைத்தும் பாலஸ்தீனிய மக்களின் மனிதநேயத்தை உறுதிப்படுத்தும் சேவையாகும். அந்தப் போராட்டம் என் மீது ஒரு நீடித்த அடையாளத்தை விட்டுச் செல்லும்.
இன்று நான் அமெரிக்காவை விட்டு வெளியேறும் முடிவை சுதந்திரமாகவும், தலை நிமிர்ந்தும் எடுத்துள்ளேன்.

அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேலிய இனப்படுகொலையை வெளிப்படையாக எதிர்த்ததற்காக நூற்றுக்கணக்கான ஏனைய சர்வதேச மாணவர்களைப் போலவே மொமொடு தாலும் அரசாங்கத்தால் இலக்கு வைக்கப்பட்டார். பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதற்கும், குறிப்பாக, இஸ்ரேல் மீதான விமர்சனத்தை ஒடுக்குவதற்கும் ட்ரம்ப் பிறப்பித்த இரண்டு நிர்வாக உத்தரவுகளை சவால் செய்து, கோர்னெல் பல்கலைக்கழக பேராசிரியர் முகோமா வா என்ஜி மற்றும் சக பட்டதாரி மாணவர் ஸ்ரீராம் பரசுராம ஆகியோருடன் சேர்ந்து, கடந்த மாதம் ஒரு வழக்கைத் தாக்கல் செய்ததற்காக, ட்ரம்ப் நிர்வாகம் அவருக்கு எதிராக பழிவாங்க முயன்று வருகிறது.
மொமொடு தால் வழக்குத் தாக்கல் செய்த பின்னர், ட்ரம்ப் நிர்வாகம் பழிவாங்கும் நோக்கத்துடன் அவரது மாணவர் நுழைவனுமதியை இரத்து செய்ததுடன், அவரைத் துன்புறுத்தவும் அச்சுறுத்தவும் நாடுகடத்தல் குண்டர்களை அனுப்பவும் தொடங்கியது. அமெரிக்கா, எல் சால்வடோர் அல்லது குவாண்டனாமோ விரிகுடாவில் உள்ள ஒரு தடுப்புக்காவல் வதை முகாமில், ட்ரம்ப் நிர்வாகம் அவரை காணாமல் ஆக்குவதை தடுக்க, மொமொடு தாலின் வழக்கறிஞர்கள் ஒரு தற்காலிக தடை உத்தரவைக் கோரினர். ஆனால், ஆரம்ப கோரிக்கை கடந்த வாரம் அமெரிக்க மாவட்ட நீதிபதி எலிசபெத் சி. கூம்பால் நிராகரிக்கப்பட்டது.
அதே நாளில் எரிக் லீ மற்றும் அமெரிக்க-அரபு பாகுபாடு எதிர்ப்புக் குழு தலைமையிலான அவரது வழக்கறிஞர்கள் திருத்தப்பட்ட புகாரையும் புதிய அவசரகால மனுவையும் தாக்கல் செய்தனர்.
மொமொடு தால் தனது அறிக்கையில் விளக்கியுள்ளபடி:
நான் நீதிமன்றத்தில் ஆஜராவதை ட்ரம்ப் விரும்பவில்லை. அதனால் அவர், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) அதிகாரிகளை எனது வீட்டிற்கு அனுப்பி எனது நுழைவனுமதியை இரத்து செய்தார். நாங்கள் பொறுமையாக இருந்தோம், ஆனால் எங்கள் முதல் மனு மறுக்கப்பட்டது. வழக்கு தொடரும் வரை நான் தடுப்புக்காவலில் இருந்து விலகி இருக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இரண்டாவது விளக்கத்தை சமர்ப்பிக்க இருந்தோம்.
அமெரிக்கா முழுவதிலும் நடந்து வருவதை நாம் பார்க்கும்போது, நீதிமன்றங்களில் இருந்து ஒரு சாதகமான தீர்ப்பு எனது தனிப்பட்ட பாதுகாப்பிற்கும், எனது நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் திறனுக்கும் உத்தரவாதம் அளிக்கும் என்ற நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன். கடத்தப்படாமல் தெருக்களில் நடமாட முடியும் என்ற நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன். இந்த விருப்பங்களையெல்லாம் எடைபோட்டு, எனது சொந்த விருப்பப்படி வெளியேற நான் முடிவு செய்தேன்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
இது நிச்சயமாக நான் விரும்பிய விளைவு அல்ல. ஆனால், நீதித்துறை அல்லது சட்டத்தின் ஆட்சியை மதிக்காத ஒரு அரசாங்கத்தை நாம் எதிர்கொள்கிறோம்.
நடந்து வரும் இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதற்கு, முழு அரசியல் ஸ்தாபனத்தாலும் ஆதரிக்கப்பட்டுவரும் ஒரு பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மொமொடு தால் தனது துன்புறுத்தலை விவரித்தார்.
அமைதியாக இருக்கும் ஒவ்வொரு மனிதரும், நீங்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒரு இனப்படுகொலைக்கு எதிராகப் பேசுபவர்களை சிறையில் அடைப்பதானது, உங்கள் விழுமியங்களை பிரதிபலிக்கிறதா? இந்த வகையான தேசத்தில் நீங்கள் வாழ விரும்புகிறீர்களா? பாலஸ்தீனியர்கள் மீதான சியோனிச இனப்படுகொலை குறித்து மௌனமாக இருந்தவர்களின் உடந்தையை ட்ரம்ப் நிர்வாகம் சுரண்டிக் கொள்வதை நாம் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவில் அடக்குமுறை மற்றும் சுரண்டல் உறவுகளை சவால் செய்யும் எந்தவொரு வெளிப்பாட்டின் மீதும் பரவலான தாக்குதலைத் தொடங்குவதற்கு, பாலஸ்தீனிய மக்களுடனான ஒற்றுமையை அடக்குவது இப்போது பயன்படுத்தப்படுகிறது.
யதார்த்தத்தை தலைகீழாக மாற்றுவதற்காக அரசியல் மற்றும் ஊடக நிறுவனங்களை அவர் கடுமையான வார்த்தைகளில் கண்டனம் செய்தார்:
குழந்தைகளைக் கொல்வது தவறு என்று சொல்வதால் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் உலகில் நாம் வாழ்கிறோம் என்பது கற்பனைக்கு எட்டாதது. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான முடிவில்லா படுகொலைகளை ஆதரிப்பவர்களும், கொண்டாடுபவர்களும், இனப்படுகொலைக்கு எதிராகப் போராடுபவர்களை ஒடுக்குமுறையாளர்களாகக் சித்தரிக்கின்றனர். அதேவேளையில், மீண்டும் மீண்டும் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக அவர்களால் காட்டிக் கொள்ளவும் முடிகிறது.
மேலும் அவர் கூறுகையில்:
அரசு மேற்கொள்ளும் ஆட்கடத்தல், அடக்குமுறை, நாடுகடத்தல், குழந்தைகளைப் படுகொலை செய்தல் மற்றும் உலகளாவியளவில் பெரும்பான்மையினரை அடக்குதல் ஆகியவற்றால் மட்டுமே உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்று நீங்கள் நினைக்க வழிவகுத்திருந்தால், காஸாவின் கண்ணாடித் துண்டுகள் உங்களது கண்ணாடியாக இருக்கட்டும்.
“வரலாறு எங்களை நினைவில் கொள்ளும், நாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை” என்று மொமொடு தால் எச்சரித்தார். “எனது எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தாலும், இது இப்போது எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தீவிரமான மாற்றங்களை உள்ளடக்கியது என்றாலும், நதி முதல் கடல் வரை விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கான எனது உறுதிப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று அவர் வலியுறுத்தினார்.
மொமொடு தாலின் வழக்கு, ட்ரம்ப் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகின்ற அரசியல் ஒடுக்குமுறையின் ஒரு பரந்த பிரச்சாரத்தின் பாகமாகும். “பிடித்து ரத்து செய்யும்” திட்டம் என்றழைக்கப்படுவதன் கீழ், காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்ததற்காக அல்லது அதற்கு ஆதரவு தெரிவித்ததற்காக, நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்களின் நுழைவனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கண்காணிப்புடன், சமூக ஊடகங்களில் இடம்பெறும் அரசியல் பேச்சுக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
சட்டபூர்வமான நிரந்தர குடியிருப்பாளரும், கொலம்பியா பல்கலைக்கழக பட்டதாரி மாணவருமான மஹ்மூத் கலீல் உட்பட டசின் கணக்கான மாணவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நாடுகடத்தலுக்காக தடுப்புக்காவல் மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். ஃபுல்பிரைட் அறிஞரும் டஃப்ட்ஸில் முனைவர் பட்டம் பெற்ற மாணவியுமான ருமேசா ஓஸ்ட்டுர்க், மற்றும் ஏழு வயதிலிருந்தே அமெரிக்காவில் வசித்து வருகின்ற தென் கொரியாவைச் சேர்ந்த நிரந்தர குடியிருப்பாளரான யுன்சியோ சுங், முகமூடி அணிந்த குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) முகவர்களால் பாஸ்டனின் தெருக்களில் இருந்து கடத்தப்பட்டனர்.
கடந்த வியாழனன்று, மொமொடு தால், அவரது வழக்கறிஞர் எரிக் லீ, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் ஆகியோரைக் கொண்ட ஒரு அவசர இணையவழி கூட்டத்தை உலக சோசலிச வலைத் தளம் ஏற்பாடு செய்திருந்தது.
பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவான மாணவர்கள் துன்புறுத்தப்படுவது ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு பரந்த உந்துதலின் பாகமாகும் என்று எச்சரித்த பேச்சாளர்கள், ஜனநாயகக் கட்சியின் உடந்தையைக் கண்டனம் செய்தனர். மேலும், ஜனநாயக உரிமைகள் மீது போரை நடத்தும் முதலாளித்துவ தன்னலக்குழுவை எதிர்க்க, ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கு அழைப்பும் விடுத்தனர்.