முன்னோக்கு

அமெரிக்காவில் ஏப்ரல் 5 அன்று ட்ரம்பிற்கு எதிராக இடம்பெற்ற பாரிய போராட்டங்களின் அரசியல் முக்கியத்துவம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் தன்னலக்குழு மற்றும் பாசிசத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஏப்ரல் 5, 2025

அமெரிக்காவில் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு எதிரான போராட்டத்தில், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பாரிய போராட்டங்கள் ஒரு திருப்புமுனையாக அமைந்தன.

ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கி 11 வாரங்களுக்குள், வாஷிங்டனில் உள்ள வணிக வளாகத்தில் 100,000 பேர் முதல் நியூ யோர்க் நகரத்தின் ஐந்தாவது அவென்யூவில் பல்லாயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றது வரை 1,600 தனித்தனி போராட்டங்களில் மில்லியன் கணக்கானோர் வீதிகளில் இறங்கினர். மேலும், அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில், மிச்சிகனில் உள்ள லான்சிங் மற்றும் உட்டாவின் சால்ட் லேக் சிட்டி போன்ற மாநில தலைநகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர், தொலைதூர கெட்சம், இடாஹோவில் (மக்கள் தொகை 3,555) வன சேவை வெட்டுக்களை எதிர்த்து 500 பேர் வரை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்ற பிராந்தியங்களில் பெரிய போராட்டங்கள் நடந்தன. அவற்றில் அயோவாவின் டெஸ் மொயினஸில் 7,000 போராட்டங்கள் நடந்தன. அங்கு ட்ரம்ப் கமலா ஹாரிஸை 13.2 சதவீத புள்ளிகளால் தோற்கடித்திருந்தார். புலம்பெயர்ந்த விவசாயத் தொழிலாளியான ஒரு தாய் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, நியூ யோர்க்கின் சாக்கெட்ஸ் துறைமுகத்தில் உள்ள பாசிச “சிறப்பு எல்லை ஜார்” டொம் ஹோமனின் வீட்டிற்கு ஆயிரம் பேர் அணிவகுத்துச் சென்றனர்.

“கை வைக்காதே!” என்ற பேரிலான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பத்தில் ஜனநாயகக் கட்சியைச் சுற்றியுள்ள குழுக்களால் அழைக்கப்பட்டிருந்தாலும், விடையிறுப்பு பெரிதும் தன்னெழுச்சியானதாக, அமைப்பாளர்களின் எதிர்பார்ப்புகளை அல்லது நோக்கங்களை விட மிக அதிகமாக இருந்தது. பில்லியனர் தன்னலக்குழுக்கள் மற்றும் எலோன் மஸ்க்கை கண்டித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட பதாகைகளை வைத்திருந்தனர். அவர்களில் ஒரு சிலரே, வருங்கால சர்வாதிகாரியை எதிர்க்க எதுவும் செய்யாத எதிர்க்கட்சியாகக் கருதப்படும் ஜனநாயகக் கட்சியை ஏற்றுக்கொண்டனர்.

தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தோர், சமூக நலன்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் பாசிச தாக்குதல்களை போராட்டக்காரர்கள் கண்டனம் செய்தனர். ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவராலும் ஆதரிக்கப்படும் காசா மீதான இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு போராட்டக்காரர்கள் மத்தியில் எதிர்ப்பு பரவலாக இருந்தது. மேலும், ட்ரம்ப் பதவியேற்றதற்குப் பின்னர் இருந்து ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் தலைவர்களின் கூச்சலிடும் செயல்திறன் மீது வெளிப்படையான வெறுப்பு இருந்தது.

ஆர்ப்பாட்டங்களின் அளவு, ட்ரம்ப் ஒரு சவால் செய்ய முடியாத அரசியல் பிரமுகர் என்ற பிரதான ஊடகங்கள் மற்றும் பெருநிறுவன அரசியல்வாதிகளின் - ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளைச் சேர்ந்த - உத்தியோகபூர்வ அரசியல் நிலைப்பாட்டை முற்றிலும் இழிவுபடுத்துகிறது.

ட்ரம்பின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக் காலத்தின் முதல் 76 நாட்களின் போது, அவரது நடவடிக்கைகள் பாரியளவில் மதிப்பிழந்துள்ளன. மத்தியிலுள்ள கூட்டாட்சி அரசு தொழிலாளர்களின் பெருமளவிலான பணிநீக்கங்கள், சமூக செலவினங்களில் வெட்டுக்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ட்ரம்பினது தாக்குதல்கள், குறிப்பாக காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை எதிர்த்துப் போராடி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு எதிராக இயக்கப்பட்டு வருவதை பெரும்பான்மையானவர்கள் எதிர்க்கின்றனர்.

ட்ரம்புக்கு வாக்களித்தவர்களில் பலர் ஒரு தன்னலக்குழு அரசாங்கத்தின் யதார்த்தத்தை எதிர்கொள்கின்றனர். ஏப்ரல் 2 அன்று, உலகம் முழுவதும் வர்த்தகப் போரைத் தொடங்குவதற்கான அவரது முடிவின் தாக்கம் உணரப்படுவதற்கு முன்பே பாசிச ஜனாதிபதியின் “ஒப்புதல்” மதிப்பீடு சரிந்துவிட்டது. வெள்ளை மாளிகை அனைத்து இறக்குமதிகள் மீதும் வரிகளை விதிப்பதற்கு முன்பு நடத்தப்பட்ட சமீபத்திய ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் கருத்துக் கணிப்பில், ட்ரம்பிற்கு இணக்கமாக 42 சதவீதம் இருந்தது. அதில், 22 சதவீதம் பேர் மட்டுமே அமெரிக்கா “சரியான திசையில்” செல்வதாக உணர்ந்தனர்.

இந்த நிலைமைகளின் கீழ், எதுவும் செய்ய முடியாது என்று ஜனநாயகக் கட்சியினர் அறிவிக்கின்றனர். அவர்களின் கூற்றுப்படி, பிரதிநிதிகள் சபையில் ஐந்து இடங்கள் பெரும்பான்மையுடனும், செனட்டில் மூன்று இடங்கள் பெரும்பான்மையுடனும், நவீன வரலாற்றில் வாஷிங்டன் மீதான “கட்டுப்பாட்டில்” மிகக் குறுகிய கட்சி வித்தியாசத்தில் ஒருவராக இருக்கும் ட்ரம்ப்பை தோற்கடிக்க முடியாது.

ஆனால் உண்மை என்னவென்றால், ஜனநாயகக் கட்சியினர் அவரைத் தோற்கடிக்க விரும்பவில்லை. அடுத்த ஆறு மாதங்களுக்கு ட்ரம்பின் நிபந்தனைகளுக்கு இணங்க மத்திய கூட்டாட்சி அரசாங்கத்திற்கு நிதியளிப்பதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற தீர்மானகரமான வாக்குகளை அளிக்க செனட்டிலுள்ள சிறுபான்மை தலைவர் சார்ல்ஸ் சூமர் ஜனநாயகக் கட்சியினரின் ஒரு குழுவிற்கு தலைமை தாங்கினார்.

ட்ரம்புக்கு இரண்டு எதிரெதிரான வர்க்க அடிப்படையிலான பதில்கள் உள்ளன. ஒருபுறம், சமூக நலத் திட்டங்கள், ஜனநாயக உரிமைகள், புலம்பெயர்ந்தோர் மீதான ட்ரம்பின் தாக்குதல்களுக்கும், காசாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கான அவரது ஆதரவிற்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மறுபுறம், அங்கே ஜனநாயகக் கட்சியினர் பேசும் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளின் எதிர்ப்பு உள்ளது. இந்தப் பிரிவுகள் சமூக வேலைத்திட்டங்கள் மீதான ட்ரம்பின் தாக்குதலில் உடன்படுகின்றன என்பதோடு, பிரதானமாக வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகளில், குறிப்பாக உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் இருந்து ட்ரம்ப் விலகிச் செல்வதில் மட்டுமே அவரை எதிர்க்கின்றன.

கடந்த சனிக்கிழமை பெருந்திரளான மக்கள் திரண்டதற்கு ஜனநாயகக் கட்சியினரின் எதிர்வினையானது, அதிர்ச்சி, பதட்டம், இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு திகிலூட்டுவதாகக் கூட இருந்தது. அனைத்திற்கும் மேலாக, ட்ரம்பிற்கு எதிராக கீழிருந்து ஒரு பாரிய இயக்கம் உருவாகும் வாய்ப்பு இருப்பதையும், அதில் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் அரசியல் ரீதியாக அணிதிரண்டு தங்கள் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் சாத்தியக்கூறு குறித்தும் அவர்கள் பீதியடைந்துள்ளனர்.

பெருநிறுவன ஊடகங்களும் அதே எதிர்வினையைக் கொண்டுள்ளன என்பதோடு, உண்மையில் என்ன நடந்தது என்பதை மூடிமறைக்க தற்போது செயல்பட்டு வருகின்றன. ஐந்தாவது அவென்யூவின் 20 தொகுதிகளை நிரப்பிய போராட்டத்தை நியூ யோர்க் டைம்ஸின் அச்சுப் பதிப்பு, ஒரே ஒரு முதல் பக்க புகைப்படத்தில் ஒப்புக்கொண்டது. இதுபற்றிய உண்மையான அறிக்கை 16 ஆம் பக்கத்திற்கு தள்ளப்பட்டது. வாஷிங்டன் போஸ்ட் அதன் முதல் பக்கத்தில் எதையும் வெளியிடவில்லை. உள்ளூர் செய்திகளுக்காக ஒதுக்கப்பட்ட அதன் மெட்ரோ பிரிவில் “ட்ரம்பை எதிர்க்க ஆயிரக்கணக்கானோர் பேரணி” என்ற தலைப்பின் கீழ் அதன் அறிக்கையை வெளியிட்டது. ஞாயிறன்று வலைத்தளங்கள் மற்றும் கேபிள் தொலைக்காட்சியில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சிகளில் இந்த எதிர்ப்புக்கள் கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டன.

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் மற்றும் பிற போலி-இடது குழுக்களைப் போலவே, ஜனநாயகக் கட்சிக்கு வக்காலத்து வாங்குபவர்களும் உடந்தையாளர்களும், போராட்டங்களின் அளவு மற்றும் தீவிரம் குறித்து அதேயளவுக்கு அவர்களின் வயிற்றில் நோய்வாய்ப்பட்ட வலியைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் தொழிற்சங்க எந்திரங்களை ஊக்குவித்த அதேவேளையில், இனவாத மற்றும் பாலின அடையாளத்தின் திவாலான அரசியலைப் பயன்படுத்தி, எதிர்ப்புக்களை ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் திருப்பி விடும் பாத்திரத்தை மேற்கொண்டார்கள்.

வாஷிங்டன், சிக்காகோ மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பேரணிகள் நடைபெற்ற ஒரு சில முக்கிய நகரங்களில், மேடைப் பேச்சாளர்களில் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ட்ரம்பை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வேலைத்திட்டத்தை வழங்க அவர்களிடம் எதுவும் இல்லை. நியூ யோர்க் மற்றும் டெட்ராய்ட் உள்ளிட்ட பிற நகரங்களில், பேச்சாளர்களே இல்லை. இது, இவர்களின் அரசியல் திவால்நிலையின் இன்னும் வெளிப்படையான வெளிப்பாடாக இருந்தது.

இதற்கு முரண்பட்ட விதத்தில், நாங்கள் எங்கெல்லாம் தலையிட்டோமோ அங்கெல்லாம் சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் முன்னெடுத்த அரசியல் முன்னோக்கிற்கு அனைத்து வயதையும் பின்னணியையும் சேர்ந்த ஆயிரக் கணக்கான போராட்டக்காரர்களிடையே ஒரு சக்திவாய்ந்த விடையிறுப்பு இருந்தது. போர், சர்வாதிகாரம் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் ஐக்கியப்படுத்துவதற்கான எங்கள் அழைப்பைப் போலவே, ஜனநாயகக் கட்சியினரையும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும் கண்டனம் செய்த எங்கள் அறிக்கை பரந்தளவில் எதிரொலித்தது.

பெருகி வந்த எதிர்ப்பு, ட்ரம்ப் மற்றும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஆழ்ந்த விரோதத்தை வெளிப்படுத்திய அதேவேளையில், ஏப்ரல் 5 அன்று வீதிகளில் இறங்கிய இயக்கம் இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இதுவரையில், அதற்கு ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டம் அல்லது அமைப்பு ரீதியான வெளிப்பாடு இல்லை. தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான மற்றும் நனவான சக்தியாக சூழ்நிலையில் தலையீடு செய்யவில்லை. தொழிற்சங்க எந்திரம் ட்ரம்பை ஆதரிக்கின்ற நிலைமைகளின் கீழ், ஜனநாயகக் கட்சி எந்த நிஜமான எதிர்ப்பையும் காட்டாத நிலைமைகளின் கீழ், பாரிய எதிர்ப்பின் மேலெழுச்சி ஒரு ஆரம்ப மற்றும் பெரிதும் தன்னிச்சையான வடிவத்தை எடுத்துள்ளது.

எவ்வாறிருப்பினும், இந்த தன்னியல்பான தன்மை அரசியல் தெளிவுபடுத்தலின் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பாசிசத்தின் நிஜமான இயல்பு குறித்த ஒரு புரிதலைக் கொண்டு தொழிலாள வர்க்கம் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும் —இது ஒரு தனிநபர் பிறழ்ச்சியாக அல்ல, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று நிலைமுறிவின் விளைபொருளாகும். தொழிலாள வர்க்கத்தின் எதிரி ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் மட்டுமல்ல, ஜனநாயகக் கட்சி, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அமெரிக்காவை ஆளும் நிதிய தன்னலக்குழு உட்பட முழு முதலாளித்துவ அரசும் ஆகும்.

பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு நனவான போராட்டமாக மாற வேண்டும். செல்வந்த தட்டுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கும், தொழிலாளர்களின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கும், மற்றும் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கமைப்பு செய்வதற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கம் அவசியப்படுகிறது.

இந்தப் போராட்டம் சர்வதேச ரீதியானதாக இருக்க வேண்டும். சமத்துவமின்மை, எதேச்சாதிகாரவாதம் மற்றும் போர் என அமெரிக்காவில் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் நிலைமைகள் ஒவ்வொரு நாட்டிலும் பிரதிபலிக்கின்றன. முதலாளித்துவ அமைப்புமுறை உலகம் தழுவியதாக இருப்பதைப் போலவே, அதைத் தூக்கியெறிவதற்கான போராட்டமும் உலகம் தழுவியதாக இருக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் உலகெங்கிலுமான தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட வேண்டும்.

இந்த வேலைத்திட்டத்திற்காகவே சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் போராடுகின்றன. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்த அனைவரையும் இந்த போராட்டத்தை முன்னெடுக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். சோசலிச சமத்துவக் கட்சியில் சேருங்கள்! வரவிருக்கும் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பு செய்வதற்கு அவசியமான தலைமையைக் கட்டியெழுப்புவோம்.