நிதியியல் கொந்தளிப்பு அதிகரித்து வரும் நிலையில், சீனா மீது ட்ரம்ப் 104 சதவீத சுங்கவரியை விதிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் “பரஸ்பர சுங்கவரிகள்” என்றழைக்கப்படுவதன் பதாகையின் கீழ், உலகிற்கு எதிரான பொருளாதார போரைத் தொடங்கி ஒரு வாரத்திற்குப் பின்னர், 9ம் திகதி முதல் சீனாவின் பொருட்களுக்கு 104 சதவீத வரி விதிக்கப்படும்.

கடந்த வாரம் அமெரிக்கா 54 சதவீத இறக்குமதி வரிகளை விதிக்க முடிவு செய்ததற்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவின் பண்டங்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, சீனா மீது கூடுதலாக 50 சதவீத இறக்குமதி வரிகளைக் கொண்டு தாக்குதல் நடத்த ட்ரம்ப் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் விதிக்கப்பட்டு ஜனாதிபதி பைடெனின் கீழ் பராமரிக்கப்பட்ட முந்தைய சுங்கவரி உயர்வுகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால், சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளின் அளவு இப்போது சுமார் 120 சதவீதமாக உள்ளது. இப்படி ஒரு சம்பவத்தை இதற்கு முன் பார்த்ததில்லை.

இந்த சமீபத்திய நடவடிக்கைகள் பெய்ஜிங்கிலிருந்து ஒரு எதிர்மறையான பதிலைத் தூண்டியுள்ளன.

இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

அமெரிக்கா இந்த அதிகரித்த சுங்கவரி நடவடிக்கைகளை செயல்படுத்துவதை தொடருமானால், சீனா தனது சொந்த உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க உறுதியான எதிர் நடவடிக்கைகளை எடுக்கும்.

மேலும், அமெரிக்கா தனது சொந்த வழியில் செல்ல வலியுறுத்தினால், சீனா இறுதிவரை போராடும்.

இதர நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த முற்படுகையில், பெய்ஜிங் ஒரு பெரிய போருக்கு தயாராகி வருகிறது. உலகின் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்திலுள்ள இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான முழுமையான மோதல் உலகம் முழுவதும் எதிரொலிக்கும். இது, தனிப்பட்ட நாடுகளுக்கு ஏற்கனவே இருந்ததை விட இன்னும் அதிகமான விளைவுகளை ஏற்படுத்தும். 

சீன வர்த்தக அமைச்சக அதிகாரி சுங்கவரி உயர்வுபற்றி கூறுகையில், 

ஒரு தவறு மற்றொரு தவறுடன் சேர்ந்து, மீண்டும் ஒருமுறை அமெரிக்கத் தரப்பின் கட்டாயப்படுத்தும் தன்மையை அம்பலப்படுத்துகிறது. இதனை சீனா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. 

சீனாவிற்கு எதிரான பொருளாதாரப் போர் தென்கிழக்கு ஆசிய நாடுகளை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, மலேசியாவில் 24 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், கம்போடியா 49 சதவீதம், இந்தோனேசியாவில் 32 சதவீதம், தாய்லாந்து 37 சதவீதம் உள்ளிட்ட மிக உயர்ந்த சுங்கவரிகளால் இந்த நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சுங்கவரிகள், இந்த நாடுகளின் பொருளாதாரங்களை பேரழிவிற்கு உட்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. 

இந்த நடவடிக்கைகளின் நோக்கம் அமெரிக்காவிற்கும் இந்த நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தகத்தை சமப்படுத்துவதோ அல்லது சமநிலைப்படுத்துவதோ அல்ல. ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகளும், அவர்களின் மிகவும் மனநிலை பிறழ்ந்த தருணங்களில் கூட, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு நெருங்கி வருவதற்கான பொருளாதார வசதிகள் இல்லாததால், இது நீண்ட காலத்துக்கு சாத்தியமாகும் என்று நம்பவில்லை. 

இந்தப் பிராந்தியத்திற்கு எதிரான அமெரிக்காவின் சுங்கவரி உயர்வுகள் இரண்டு நோக்கங்களுக்கு சேவை செய்கின்றன: ஒன்று பொருளாதாரம் மற்றொன்று புவிசார் அரசியல். 

ட்ரம்ப், தனது முதல் நிர்வாகத்தின் போது சீனாவிற்கு எதிரான வரிகளை உயர்த்தியதன் முதல் சுற்றுக்குப் பிறகு, பல நிறுவனங்கள், வரிகளைத் தவிர்ப்பதற்காக, “சீனா பிளஸ் ஒன்” என்று அழைக்கப்படும் ஒரு உத்தியான சீனாவைத் தவிர வேறு நாடுகளில் உற்பத்தி வசதிகளை அமைப்பதன் மூலம், அமெரிக்க சந்தையை இலக்காகக் கொண்ட தங்கள் செயல்பாடுகளில் சிலவற்றை இந்தப் பிராந்தியத்திற்கு மாற்றின. அந்தப் பாதை இப்போது மூடப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை தசாப்தங்களாக மாறிவரும் சூழ்நிலையின் விளைவாகவே புவிசார் அரசியலின் இலக்குகள் உருவாகியுள்ளன. 

2011 ஆம் ஆண்டு, ஜனாதிபதி ஒபாமா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இருந்து தனது சீன எதிர்ப்பு “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை” அறிவித்தார். அவரது சீன-விரோத நடவடிக்கை தொடங்கியதில் இருந்து, அப்பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளும் பொருளாதார ரீதியில் அவை ஆழமாக தொடர்பு கொண்டுள்ள சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு சமநிலைப்படுத்தும் நடவடிக்கையைப் பேண முனைந்து வருகின்றன.

இந்த நாடுகளுக்கு எதிரான ட்ரம்ப்பின் வரிவிதிப்புப் போர், அதுபோன்றவொரு தந்திரோபாய நாட்கள் முடிந்துவிட்டன என்பதற்கான ஒரு பிரகடனமாகும். இவர்கள் வேலியிலிருந்து இறங்கி, பெய்ஜிங்கிற்கு எதிரான அமெரிக்காவின் அதிகரித்து வரும் போர் நடவடிக்கைகளுக்குப் பின்னால் நிற்க வேண்டும். இல்லையெனில், இவர்கள் கடுமையாக தாக்கப்படுவார்கள். 

சுங்கவரிகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம். ஆனால், எந்தவொரு பேச்சுவார்த்தையும் பொருளாதாரத்தை விட அதிகமானவற்றை உள்ளடக்கி இருக்கும். ஏனெனில், ட்ரம்ப்பின் ஆட்சி கூறியது போல், வரிகளில் ஏற்படும் எந்தவொரு குறைப்பும் நாடுகள் “பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட வேண்டும்” —அவற்றில் மிகப் பெரியது சீனா.

ட்ரம்ப் உலகிற்கு எதிராக போர் தொடுத்து வருகின்ற நிலையில், அமெரிக்காவின் உண்மையான பொருளாதாரம் மற்றும் பலவீனமான நிதியியல் அமைப்புமுறை ஆகிய இரண்டையும் குறிப்பிடத்தக்க பின்னடைவு தாக்குகிறது. 

இதுவரை, இந்த வரி உயர்வுகள் சீனாவில் இருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பரந்த அளவிலான பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கும், சீனா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருந்து அவற்றின் உற்பத்தி செயல்முறைகளுக்கு இறக்குமதிகளை நம்பியிருக்கும் வணிகங்களுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க இறக்குமதிகளில் ஏறத்தாழ பாதி, அமெரிக்க நிறுவனங்கள் இறுதிப் பண்டங்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் இடைநிலைப் பொருட்களாகும். கடந்த காலங்களில் சுங்கவரிகள், பூர்த்தி செய்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைப் பாதித்தன. ஆனால், கடந்த நான்கு தசாப்தங்களாக பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியின் வளர்ச்சியுடன் அந்த நாட்கள் போய்விட்டன. 

சிறியதும் பெரியதுமான அமெரிக்க வணிகங்களின் ஒட்டுமொத்த செலவுக் கட்டமைப்பும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விளைவை எதிர்கொள்ள, முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் சாத்தியமான ஒரே வழியில், அவர்கள் பணிநீக்கங்கள் மூலம் செலவு-வெட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதே நேரத்தில், இலாபங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக எஞ்சியிருப்பவர்களை சுரண்டுவதை தீவிரப்படுத்த வேண்டும். இந்த செயல்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டது. வரியால் தூண்டப்பட்ட பணிநீக்கங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதுவரை, வரிப் போரின் மிகவும் வெளிப்படையான விளைவு, நிதிச் சந்தைகளில் உணரப்பட்டுள்ளது. கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் இடம்பெற்ற நான்காவது பெரிய சரிவை வோல் ஸ்ட்ரீட் சந்தித்தது. அப்போது சந்தை மூலதனத்தில் இருந்து ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் துடைத்தெறியப்பட்டன.

திங்கட்கிழமை வர்த்தகம் மிகவும் பரபரப்பாக இருந்த நிலையில், சந்தை இறுதியில் மிகச் சிறிய இழப்புகளுடன் நிலைபெற்றது.

ஆனால் நேற்றும் பங்கு விற்பனை தொடர்ந்தது. S&P 500 குறியீடு 1.6 சதவீதம் சரிந்தது, நாஸ்டாக் 2 சதவீதம் சரிந்தது.

சந்தைகளில் ஏற்பட்ட கூர்மையான வீழ்ச்சிகள், ட்ரம்பின் பரிவாரத்தில் உள்ள இரண்டு முக்கிய நபர்களுக்கு இடையே ஒரு சூடான வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது: ஒருவர், அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவரும் பில்லியனருமான எலோன் மஸ்க், மற்றவர் வர்த்தகம் மற்றும் உற்பத்திக்கான மூத்த ஆலோசகரும் முன்னணி சீன எதிர்ப்பு பருந்தாக இருக்கும் பீட்டர் நவரோ. 

கடந்த செவ்வாய் காலை, எலோன் மஸ்க் வெறும் “கார் அசெம்பிள் செய்பவர்” என்றும், புதிய சுங்கவரி ஆட்சிக்கு எதிரான தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதாகவும் நவரோ ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறியதை அடுத்து, மஸ்க் நவரோவை ஒரு “முட்டாள்” என்றும், “செங்கல் மூட்டையை விட ஊமையானவர்” என்றும் கண்டித்தார். 

எலோன் மஸ்க்கின் இந்த தாக்குதலானது, ட்ரம்பின் நடவடிக்கைகள் தங்க முட்டையிடும் வாத்தை கொல்லப் போகின்றன என்று அஞ்சும் நிதியியல் தன்னலக்குழுவின் பிரிவுகளின் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. இவர்களின் பிரமாண்டமான செல்வ வளங்கள் தன்னிறைவு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இருந்து அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டதில் இருந்து ஈட்டப்பட்டவை அல்ல. மாறாக, அவை பூகோளமயமாக்கலை தங்களுக்கு சாதகமாக சுரண்டிக் கொண்டதன் மூலமாக குவிக்கப்பட்டுள்ளன.

அவர்களுடைய செல்வக் குவிப்பில் ஒரு குறிப்பிடத்தக்க காரணி டாலரின் மேலாதிக்கம் ஆகும். இது அமெரிக்கா வரலாற்று ரீதியாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடன்களை அதிகரிக்க அனுமதித்துள்ளது. இது, ஒட்டுண்ணித்தனம் மற்றும் ஊக வணிகம் மூலம் பரந்த செல்வங்களைக் குவிக்க உதவுகிறது.

ஆனால், நவரோ ஒரு முன்னணி பாத்திரம் வகித்துவரும் நிலையில், ட்ரம்ப் முன்னெடுத்துள்ள பொருளாதார தனிமைப்படுத்தல்வாதம், டாலரின் உலகளாவிய பாத்திரத்தின் மீது ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்ச்சியான சந்தை விற்பனையைத் தவிர, மற்றொரு நிதியியல் நெருக்கடி உருவாகக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு மிக முக்கியமான புதிய அபிவிருத்தியும் அங்கே இருந்தது.

சுங்கவரி உயர்வுகளுக்கு ஆரம்ப எதிர்வினையாக, ட்ரம்பின் நடவடிக்கைகள் மந்தநிலையைக் கொண்டுவரும் என்ற அச்சத்தில், பாதுகாப்பான புகலிடத்தைத் தேடும் முதலீட்டாளர்கள் கருவூலப் பத்திரங்களை வாங்கியதன் விளைவாக, அவற்றின் மீதான ஆதாயத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. [பத்திர விலைகளும் ஆதாயங்களும் ஒரு தலைகீழ் உறவைக் கொண்டுள்ளன, அதில் அவற்றுக்கான தேவை அதிகரிக்கும் போது, அவற்றின் விலைகள் வீழ்ச்சியடைகின்றன.]

ஆனால், திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் இந்த இயக்கம் வேறு திசையில் சென்றது. திங்களன்று, 10 ஆண்டு கருவூல பத்திரத்தின் ஆதாயம் 0.19 சதவீத புள்ளிகளால் உயர்ந்தது. இது, செப்டம்பர் 22 க்குப் பின்னர் மிகப்பெரிய ஒரு நாள் உயர்வாகும். நேற்று, 58 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய அரசு கடனை வாங்குவதற்கான ஒரு “பலவீனமான” ஏலமாக விவரிக்கப்பட்ட ஒன்றுக்கு மத்தியில், ஈவுத்தொகை இன்னும் கூடுதலாக 0.11 சதவீத புள்ளிகளால் உயர்ந்தது.

பொதுவாக ஏற்ற இறக்கங்கள் மிகச் சிறியதாக இருக்கும் ஒரு சந்தையில், மொத்தமாக 0.3 சதவீத உயர்வு பெரியதாகக் கருதப்படுகிறது.

பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் படி:

கடந்த செவ்வாய்க்கிழமை பங்குகளின் விற்பனையானது, சில முதலீட்டாளர்கள் மிகக் குறைந்த ஆபத்துள்ள சொத்துக்களைக் கூட எவ்வாறு கைவிடுகிறார்கள் என்பதற்கான சமீபத்திய அறிகுறியாகும் ... முக்கிய வர்த்தக கூட்டாளிகள் மீதான ட்ரம்பின் வரிகள் சந்தைகளில் கடுமையான ஏற்ற இறக்கத்தைத் தூண்டுகின்றன.

தனியார் முதலீட்டு நிதிகள் மற்றும் பிற சந்தை வர்த்தகர்களுக்கு நிதியளிக்கும் வங்கிகளால் விடுக்கப்பட்டு வரும் விளிம்பு அழைப்புகளின் அதிகரிப்பு, இந்த விற்பனையில் செயல்படும் உந்து சக்திகளில் ஒன்றாகும். கடன்களுக்கு ஈடாக, அவர்கள் பணத்தைக் கேட்கிறார்கள். ஆனால், நிதிகள் வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பு விரைவாக வீழ்ச்சியடைவதால், வங்கிகள் தங்களிடம் அதிக பணம் வைப்பிலிட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றன.

2020 ஆம் ஆண்டில், கோவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சில முதலீட்டு நிதிகள் மிகப்பெரிய லாப இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது பணத்திற்கான ஒரு அவசரத்திற்கு வழிவகுத்தது. ஏனெனில் தனியார் முதலீட்டு நிதிகள் தாங்கள் சார்ந்திருக்கும் கடன் வரிகளைப் பராமரிக்க வங்கிகளுக்கு பணத்தை வழங்குகின்றன.

இதில் உள்ள அபாயம் என்னவென்றால், தனியார் முதலீட்டு நிதிகள் ஏறத்தாழ அதே வணிக மாதிரிகளுடன் செயல்படுகின்ற நிலையில், பங்கு விலைகள் மற்றும் பிற நிதி சொத்துக்களின் வீழ்ச்சி பல மடங்கு அதிகரிப்பதாலும், பணத்திற்கான வெறி பரவலான இட்டுச் சென்று ஒரு நிதியியல் நெருக்கடியைத் தூண்டிவிடும். 

இந்த நிலையில், நிதியியல் தன்னலக்குழு ஆழமடைந்து வரும் நெருக்கடியை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பது தெளிவாகிறது. 

தொழிலாள வர்க்கமும் அதையே செய்ய வேண்டும். இது இன்னும் அதிகமாக இருப்பதற்குக் காரணம், பாதுகாப்புவாத நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்யும் ஆளும் உயரடுக்கினரைப் போலல்லாமல், முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் தொழிலாள வர்க்கத்துக்கு எந்த “பிணையெடுப்பு” வழிமுறையும் இல்லை. 

ஆகவே, அது நிலைமையை நிதானமாக மதிப்பீடு செய்ய வேண்டும். அந்த அடிப்படையில், அதன் சுயாதீன நலன்களுக்காக போராடுவதற்கு அவசியமான அரசியல் மூலோபாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

தற்போதைய “பைத்தியக்காரத்தனம்” ட்ரம்பின் நோய் பிடித்த மூளையின் விளைபொருள் அல்ல என்ற புரிதலுடன் இந்த மதிப்பீடு தொடங்க வேண்டும். முதலாளித்துவ அமைப்புமுறையை பிரதிநிதித்துவம் செய்து, ஆழ்ந்த பைத்தியக்காரத்தனத்தின் மிக மோசமான வெளிப்பாடாக மட்டுமே ட்ரம்ப் இருந்து வருகிறார்.

பொருள் வளங்களும் உழைப்பின் அதிகரித்த உற்பத்தித்திறனும் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான நிலைமைகளை உருவாக்கியுள்ள சூழ்நிலையில், இந்தப் பைத்தியக்காரத்தனம் —அழிவுகரமான வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் போர்கள், ஒரு மூன்றாம் உலகப் போரின் அதிகரித்து வரும் அபாயம், பேரழிவு தரும் நிதியியல் நெருக்கடியின் எப்போதும் இருந்துவரும் அச்சுறுத்தல், மந்தநிலையின் சாத்தியக்கூறு, பிற நோய்கள் மற்றும் ஆபத்துகளின் முடிவற்ற பட்டியல்— முதலாளித்துவ அமைப்புமுறை வரலாற்று ரீதியாக காலாவதியாகிவிட்டது, அதை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

தெய்வங்கள் யாரை அழிக்க விரும்புகிறதோ அவர்களை முதலில் பைத்தியமாக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 

ஆனால், முதலாளித்துவ அமைப்புமுறை தானாக தூக்கியெறியப்பட மாட்டாது. சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டத்தின் மூலமாக மட்டுமே அதை நனவுபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர முடியும்.