அமெரிக்க-மெக்சிகோ எல்லையின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டில் எடுக்க அமெரிக்க இராணுவத்திற்கு ட்ரம்ப் உத்தரவு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அரிசோனா-மெக்சிகோ எல்லையில் அமெரிக்கப் படைகள் [Photo: U.S. Army/2nd Lt. Corey Maisch]

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு குறிப்பாணையில், அமெரிக்க-மெக்சிகோ எல்லையின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் எடுக்குமாறும், எல்லையைக் கடந்து வரும் புலம்பெயர்ந்தோரை ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தைத் தாக்குவதைப் போல் நடைமுறையளவில் கையாளும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டார்.

இந்த குறிப்பாணையில் ஒரு பிரிவு உள்ளது: “இந்த குறிப்பாணையின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்வதுக்கு ஆயுதப்படை உறுப்பினர்கள் பாதுகாப்பு செயலாளரால் பரிந்துரைக்கப்பட்ட பலத்தைப் பயன்படுத்துவதற்கான விதிகளைப் பின்பற்றுவார்கள்.” பலத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த எந்த எல்லைகளும் நிர்ணயிக்கப்படவில்லை. இதன் அர்த்தம், அமெரிக்க இராணுவ போர்க்குற்றங்கள் மற்றும் தனிப்பட்ட போர்க் குற்றவாளிகளின் ஒரு இழிபுகழ்பெற்ற பாதுகாவலராக இருக்கும் பாதுகாப்புத்துறை செயலர் பீட் ஹெக்செத், அமெரிக்காவிற்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக கொலைப் படைகளைப் பயன்படுத்த ஒப்புதல் கொடுக்க முடியும் என்பதாகும்.

“அமெரிக்காவின் தெற்கு எல்லையை மூடுவதற்கும் படையெடுப்புகளை முறியடிப்பதற்குமான இராணுவ நடவடிக்கை” என்ற தலைப்பின் கீழ், மெக்சிகோ உடனான நில எல்லையிலிருந்து 60 அடி தூரத்திற்குள் உள்ள அனைத்து கூட்டாட்சி அரசு நிலங்களையும் பென்டகனின் அதிகார வரம்பிற்கு மாற்றுமாறு பாதுகாப்பு, உள்துறை, வேளாண்மை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர்களை இந்த குறிப்பாணை அறிவுறுத்துகிறது.

இந்த நீண்ட நிலப்பரப்பு “ரூஸ்வெல்ட் இட ஒதுக்கீடு” என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இது முதலில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டின் கீழ் கூட்டாட்சி அரசின் நிலமாக ஒதுக்கப்பட்டது. இது கலிபோர்னியா, அரிசோனா மற்றும் நியூ மெக்சிகோ வழியாக செல்லும் அமெரிக்க-மெக்சிகோ நில எல்லையின் பரந்த பெரும்பகுதியை உள்ளடக்கியிருக்கிறது. ஆனால், டெக்சாஸ் மற்றும் மெக்சிகோவிற்கு இடையிலான எல்லையான ரியோ கிராண்டே இதில் சேர்க்கப்படவில்லை. இந்த துண்டு நிலமானது, எல்லையில் உள்ள பூர்வீக அமெரிக்கர்களுக்கான ஒதுக்கீடுகளின் பகுதிகளையும், சில தனிமைப்படுத்தப்பட்ட தனியார் சொத்துக்களையும் விலக்குகிறது.

புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்பின் பாசிச தாக்குதல்களுடன் ஒத்துழைத்துள்ள ஜனநாயகக் கட்சியின் பொதுவான நிலைப்பாட்டிற்கு ஏற்ப, கலிபோர்னியாவின் கவின் நியூசோம், அரிசோனாவின் கேட்டி ஹோப்ஸ் மற்றும் நியூ மெக்சிகோவின் மிஷேல் லூஜன் கிரிஷாம் ஆகிய மூன்று மாநிலங்களின் ஜனநாயகக் கட்சி ஆளுநர்களிடம் இருந்து எல்லை குறிப்பாணைக்கு எந்த பகிரங்க பதிலும் கிடையாது. DHS இன் ஒரு பிரிவான கூட்டாட்சி அரசின் அவசரநிலை மேலாண்மை நிறுவனத்திடமிருந்து மானியங்களை DOGE மதிப்பாய்வு செய்வதால், எல்லை அமலாக்கத்திற்கான கூட்டாட்சி அரசின் உதவியில் $69 மில்லியன் டாலர் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஜனநாயகக் கட்சியின் ஹோப்ஸ் பல வாரங்களாக புகார் அளித்து வருகிறார்.

ட்ரம்பின் உத்தரவின்படி, ரூஸ்வெல்ட் ஒதுக்கீடுகள் “தேசிய பாதுகாப்பு பகுதிகளாக” பெயரிடப்படும். அவ்விதத்தில் எல்லை அமலாக்க நடவடிக்கை “பாதுகாப்புத் துறையின் அதிகார வரம்பின் கீழ் உள்ள ஒரு இராணுவ நிறுவலில் நிகழும்.” இது குடியேறுபவர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் அமெரிக்காவிற்குள் பொலிஸ் நடவடிக்கைகளில் இராணுவத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் Posse Comitatus சட்டத்தை மீறவில்லை என்று கூற நிர்வாகத்தை அனுமதிக்கும்.

பாதுகாப்புச் செயலாளர் தனது விருப்பப்படி கூட்டாட்சி அரசின் பிரதேசத்தைப் பயன்படுத்துவதற்கான பரந்த அதிகாரங்களை இந்த குறிப்பாணை பட்டியலிடுகிறது. இது, “எல்லைத் தடை கட்டுமானம் மற்றும் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு உபகரணங்களை வைப்பது உள்ளிட்ட இராணுவ நடவடிக்கைகளை” வெளிப்படையாக செயல்படுத்தும். மேலும், நாடுகடத்தலுக்காக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்படும் வரை புலம்பெயர்ந்தோரை தடுப்புக் காவலில் வைப்பதும் இதில் அடங்கும்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் பகுப்பாய்வின் படி:

இந்த நடவடிக்கை, இறுதியில் இராணுவத்தின் பாரிய வரவு-செலவுத் திட்டத்தை எல்லை பாதுகாப்பிற்காக இன்னும் நேரடியாக பயன்படுத்த முடியும் என்பதையே அர்த்தப்படுத்தும். பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, அத்தகைய நிலங்களின் கட்டுப்பாட்டை இராணுவத்திற்கு மாற்றவும், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரை தற்காலிகமாக வைத்திருக்கும் இடமாக இந்த மண்டலத்தை பயன்படுத்தவும், ட்ரம்ப் நிர்வாகம் பல வாரங்களாக திட்டமிட்டு வந்தது. பல அமெரிக்க தடுப்புகாவல் மையங்கள் பல ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலைகளை எட்டியுள்ளன. இது வெள்ளை மாளிகையின் பெருமளவிலான நாடுகடத்தல் இலக்குகளைத் தடுக்கிறது. இருப்பினும், இந்த நிலங்களில் தற்காலிக தடுப்பு மையங்கள் கட்டப்படும் என்று ஆணையில் குறிப்பிடப்படவில்லை.

ஆரம்ப இராணுவ நடவடிக்கை 45 நாட்களுக்குள் “படிப்படியாக” மேற்கொள்ளப்படும் என்றாலும், அந்தக் குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “எந்த நேரத்திலும், உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர், ஜனாதிபதியின் உதவியாளர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர், மற்றும் பிற நிர்வாகத் துறைகள் மற்றும் முகமைகளின் ஒருங்கிணைப்புடன் தெற்கு எல்லையை ஒட்டிய கூடுதல் கூட்டாட்சி அரசின் நிலங்களுக்கு இந்த புரிந்துணர்வின் கீழான நடவடிக்கைகளை பாதுகாப்புச் செயலர் விரிவுபடுத்தலாம்.”

“ஜனாதிபதியின் உதவியாளர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்” என்பது புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் முன்னாள் தற்காலிக தலைவரும் வெள்ளை மாளிகையில் ட்ரம்பின் உயர்மட்ட புலம்பெயர்ந்தோர்-விரோத குண்டருமான ரொம் ஹோமனின் உத்தியோகபூர்வ பட்டமாகும்.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையைத் தாண்டியும் புலம்பெயர்வோரின் நடமாட்டம் ஒரு “படையெடுப்பை” உருவாக்குகிறது என்றும், “அமெரிக்காவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை இது அச்சுறுத்துகிறது” என்றும் ட்ரம்பின் கூற்றுகளை முழு குறிப்பாணையும் மீண்டும் கூறுகிறது. விரக்தியடைந்த மற்றும் பட்டினியால் வாடும் அகதிகளின் நடவடிக்கைகளை விவரிக்க இதுபோன்ற மொழியைப் பயன்படுத்துவது ஆத்திரமூட்டுவதும் முற்றிலும் முன்கண்டிராததுமாகும். இது ட்ரம்ப் விரும்பும் எதையும் செய்வதற்கு “தலைமைத் தளபதி” என்ற முறையில் அவரது அதிகாரங்களைப் பயன்படுத்த நோக்கம் கொண்டுள்ளது.

பென்டகனுக்கும் எல்லையில் உள்ள உள்ளூர் தளபதிகளுக்கும் ஒரு வெற்று காசோலைக்கு நிகரான மொழியும் இதில் உள்ளடங்கும்:

நிர்வாக ஆணை 14167 இல் ஒதுக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதற்கு நியாயமான முறையில் அவசியமான மற்றும் பொருத்தமான இராணுவ நடவடிக்கைகளை பாதுகாப்புச் செயலாளர் தீர்மானிக்கலாம், மேலும் அவை இராணுவ நிறுவல்களின் பாதுகாப்பைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் அவசியமானவை மற்றும் அமெரிக்க குறியீட்டின் தலைப்பு 10 இன் பிரிவு 2672 மற்றும் 1950 ஆம் ஆண்டின் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 21 இல் அங்கீகரிக்கப்பட்டபடி, இராணுவ நிறுவலில் இருந்து நபர்களை விலக்குவதற்கான இராணுவ நிறுவல் தளபதியின் நீண்டகால அதிகாரத்திற்கு இணங்குகின்றன.

இதன் விளைவாக, எல்லையில் உள்ள ஒவ்வொரு படைப்பிரிவின் தளபதியும் தனது கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கும் உரிமையுள்ள ஒரு இராணுவ நிறுவல் தளபதியாக நியமிக்கப்படுவார் - பெயரைத் தவிர மற்ற அனைத்திலும் ஒரு குடியேற்ற காவல் அதிகாரியாக அவர் செயற்படுவார்.

புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான போரை தனது நிர்வாகத்தின் முதல் முன்னுரிமையாக ஆக்கிய ட்ரம்ப் பதவியேற்ற நாளான ஜனவரி 20 அன்று பிறப்பித்த நிர்வாக உத்தரவுகளை இந்த குறிப்பாணை அடிக்கடி குறிப்பிடுகிறது. இந்த உத்தரவுகளில் ஒன்று, “1807 கிளர்ச்சி சட்டத்தை கையிலெடுக்கலாமா என்பது உட்பட, தெற்கு எல்லையின் முழுமையான செயல்பாட்டு கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு அவசியமாக இருக்கக்கூடிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை” 90 நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு செயலர்களுக்கு அறிவுறுத்துகிறது.

மினியாபோலிஸில் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்ததைத் தொடர்ந்து வெடித்த பாரிய போராட்டங்களுக்கு எதிராக ஜூன் 2020 இல் ட்ரம்ப் இந்த சட்டத்தை செயல்படுத்த முனைந்தார். இது அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் மட்டுமல்ல, மாறாக அமெரிக்காவின் ஒட்டுமொத்த பிராந்தியம் முழுவதிலும் இராணுவச் சட்டத்தை ஸ்தாபிக்கும் விளைவைக் கொண்டிருக்கும். 1861-1865 உள்நாட்டுப் போருக்குப் பின்னர் எந்த ஜனாதிபதியும் இராணுவச் சட்டத்தை அறிவித்ததில்லை.

இதற்கிடையே, எல்லை அமலாக்கத்தை ஒரு முழு அளவிலான இராணுவ நடவடிக்கையாக மாற்றுவதை நோக்கிய ஒரு கூடுதல் நடவடிக்கையாக, வட அமெரிக்காவிற்குள் அமெரிக்க இராணுவப் படைகளைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் வடக்கு கட்டளையகம், அமெரிக்காவின் ஏவுகணை ஏவும் மூன்றாவது நாசகாரி கப்பலான USS ஸ்டாக்டேலை, USS ஸ்புரன்ஸ் மற்றும் USS கிரேவ்லி ஆகியவற்றுடன் தெற்கு எல்லை நடவடிக்கைகளில் சேர உத்தரவிட்டது. ஸ்டாக்டேல் சான் டியாகோவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை விட்டு வெளியேறி கடலோர காவல்படை மிதவையில் சேர புறப்பட்டது. முன்னர் அமெரிக்க மத்திய கட்டளையகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த நாசகாரிக் கப்பல், செங்கடல் மீது யேமனில் ஹவுத்திகளால் இயக்கப்படும் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது.