முன்னோக்கு

இராணுவ செலவினங்களின் உலகளாவிய வெடிப்பும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

436வது வான்வழி படைப்பிரிவைச் சேர்ந்த விமானப்படை சிப்பாய் ஒருவர், டெலவேர் மாநிலத்தில் உள்ள டோவர் விமானப்படைத் தளத்தில், உக்ரேனுக்கு அனுப்புவதற்கான 155 மிமீ பீரங்கிக் குண்டுகளை மின்சார முடுக்கி வண்டியைப் பயன்படுத்தி கொண்டு செல்கிறார். ஏப்ரல் 20, 2022. [AP Photo/Alex Brandon]

மே 3 அன்று, உலக சோசலிச வலைத் தளம் நடத்திய சர்வதேச மே தின இணையவழி பேரணியானது, ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச, சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை மையக் கருப்பொருளாகக் கொண்டிருந்தது.

இந்த முன்னோக்கின் அவசரத்தன்மை, 2024 இல் உலகளாவிய இராணுவ செலவினம் மலைப்பூட்டும் வகையில் 2.7 ட்ரில்லியன் டாலர்களை எட்டியுள்ளதை ஆவணப்படுத்தியுள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி பயிலகம் (Stockholm International Peace Research Institute - SIPRI) கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய இராணுவ செலவினங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டிருக்கிறது. பைடென் நிர்வாகத்தின் கடைசி ஆண்டான 2024 ஆம் ஆண்டில் வாஷிங்டன் 997 பில்லியன் டாலர்களை போருக்காக செலவிட்டுள்ளது. ஜேர்மனி (88.5 பில்லியன் டாலர்கள்) மற்றும் ஜப்பானில் (55.3 பில்லியன் டாலர்கள்) போர் வரவு-செலவு திட்டத்தில் ஒரே ஆண்டில் முறையே 28 சதவீதம் மற்றும் 21 சதவீதம் அதிகரித்திருப்பதையும் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. ஜேர்மனி 2023 இல், ஏழாவது பெரிய இராணுவ செலவினத்தில் இருந்து கடந்த ஆண்டு நான்காவது பெரிய இராணுவ செலவினமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி 1.5 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக, அல்லது உலகளாவிய மொத்தத்தில் 55 சதவீதத்தை இராணுவத்துக்கு செலவிட்டுள்ளது. இது உக்ரேனில் நடந்து வரும் ஏகாதிபத்தியவாதிகளின் சூறையாடுவதற்கான போரில், குறிவைக்கப்பட்டுவரும் ரஷ்யாவால் ஒதுக்கப்பட்ட 149 பில்லியன் டாலர்களை விட 10 மடங்கு அதிகமாகும்.

கடந்த பத்தாண்டுகளில் இராணுவச் செலவினங்களின் அதிகரிப்பு இடைவிடாமல் நடந்து வருகிறது. 2015 இல் மொத்தம் 1 ட்ரில்லியன் டாலர்களில் இருந்து 1.67 ட்ரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. ஆனால், இது வெறும் ஆரம்பம்தான். ஏகாதிபத்திய சக்திகள், உலகத்தை பெரும் வல்லரசுகளுக்கு இடையே புதிய மறுபங்கீட்டில் தங்கள் கொள்ளைப் பொருட்களின் பங்கை உறுதி செய்யும் நோக்கத்துடன், தங்கள் போர் வரவு செலவுத் திட்டங்களில் மேலும் பெரிய அதிகரிப்புகளை அறிவித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 2026 க்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவு, 13 சதவீத அதிகரிப்புடன் பென்டகனுக்கு 1.01 டிரில்லியன் டாலர்களைக் கோருகிறது. இந்தப் பிரம்மாண்டமான தொகைக்கு நிதியாதாரம் வழங்க உதவுவதற்காக, ட்ரம்ப் வரவு-செலவு திட்டத்திலிருந்து கல்விக்கான செலவில் 12 சதவீத வெட்டுக்களை செய்வதற்கும், ஏனைய முக்கிய சமூக திட்டங்களுடன் சேர்ந்து, தேசிய சுகாதார நிறுவனங்கள் (NIH) மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) மீதும் பாரிய வெட்டுக்களைத் திணிக்கவும் திட்டமிடுகிறார்.

ஐரோப்பாவில், ஜேர்மனி போருக்குத் தயாராவதற்கு 1 ட்ரில்லியன் யூரோக்களை (1.13 ட்ரில்லியன் டாலர்) ஒதுக்கியுள்ளது: சாலைகள், பாலங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற சமூக உள்கட்டமைப்புக்களை, இராணுவ பயன்பாட்டிற்கு தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக 500 பில்லியன் யூரோக்கள் “சிறப்பு நிதி”; மற்றும் இராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்ய 500 பில்லியன் யூரோ நிதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளவாடங்களுக்கான 500 பில்லியன் யூரோ என்பது ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதத்திற்கு சமமானதாகும். இது முதலாம் உலகப் போரில், முதலாம் ஆண்டின் போது ஜேர்மன் போர் கடன்களுக்காக வழங்கிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.6 சதவீத தொகையை விட அதிகமாகும். இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஒரு வருடம் முன்பு, ஐந்து ஆண்டுகளாக ஹிட்லர் தனது நாஜி ஆட்சியை தீவிரமாக மீள்ஆயுதபாணியாக்கி கொண்டிருந்த பின்னர், 1938 இல் தான் அவர் இராணுவ செலவினங்களில் ஒப்பிடத்தக்க மட்டத்தை எட்டினார்.

இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கின் பரந்த வளர்ச்சியானது, நவீனகால மரண வியாபாரிகளான ஆயுத உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் நிதியியல் செல்வந்த தன்னலக் குழுக்களுக்கும் நல்ல லாபத்தை உறுதியளிக்கிறது. முதல் 100 உலகளாவிய ஆயுத உற்பத்தியாளர்கள் 2023 ஆம் ஆண்டில் 632 பில்லியன் டாலர்கள் மொத்த விற்பனையைப் பதிவு செய்தனர். இதில் 317 பில்லியன் டாலர்கள் அமெரிக்க உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஆட்சிக்கு ஏற்கனவே ஆயுதங்களை வழங்கிய ஜேர்மன் நிறுவனமான ரைன்மெட்டல் (Rheinmetall), 2024 இல் விற்பனையில் 36 சதவீத பிரமிப்பூட்டும் வளர்ச்சியைப் பதிவு செய்தது. மேலும், இந்த ஆண்டு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதலான அதிகரிப்பை இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது. நேட்டோ சக்திகளால் இராணுவச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக அதிகரிப்பது - ஜேர்மன், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட இலக்கு - 2030 ஆம் ஆண்டளவில் “400 பில்லியன் யூரோக்கள் வரையான” ஆர்டர்களை அதிகரிக்கும் என்று ரைன்மெட்டால் நிறுவனம் கூறுகிறது.

அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் தங்கள் இராணுவ செலவுகள் முற்றிலும் தற்காப்பு நோக்கங்களுக்கானவை என்றும், வரவு-செலவுத் திட்டங்கள் “பாதுகாப்பு செலவினங்களுக்காக” அர்ப்பணிக்கப்பட்டுள்ளன என்றும் கூறுகின்றன. இது ஒரு கொடூரமான பொய்யாகும். வாஷிங்டன், பேர்லின், இலண்டன், பாரிஸ் அல்லது டோக்கியோவாக ஆகட்டும், ஆளும் உயரடுக்குகள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள அவற்றின் போட்டியாளர்கள் மற்றும் பெயரளவிலான “கூட்டாளிகளுக்கு” எதிராக, இராணுவ வழிவகைகளைக் கொண்டு அவற்றின் சூறையாடும் பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களை முன்னெடுக்க தங்களை கோரப்பற்களுடன் ஆயுதபாணியாக்கி வருகின்றன.

ரஷ்யா மற்றும் சீனாவைப் பொறுத்த வரையில், ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு சமரசத்தைக் காண பெரும்பிரயத்தனம் கொண்டுள்ள ஆட்சிகள், ஏகாதிபத்தியத்துடன் ஒரு உடன்பாட்டை பேரம் பேசுவதற்கும் மற்றும் தத்தமது சொந்த நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதற்கான அவற்றின் “உரிமையை” பாதுகாப்பதற்காகவும் இராணுவ அச்சுறுத்தலையும் பிற்போக்குத்தனமான தேசியவாதத்தையும் பயன்படுத்தி வருகின்றன.

கடந்த தசாப்தத்தில், இராணுவ செலவினங்களிலான வெடிப்பார்ந்த அதிகரிப்பு, உலகெங்கிலும் மூலப்பொருட்கள், சந்தைகள், உழைப்புக் குவியல்கள் மற்றும் செல்வாக்கு மண்டலங்கள் மீதான கட்டுப்பாட்டிற்கான ஏகாதிபத்திய போர்களின் வெடிப்புடன் கைகோர்த்துச் சென்றுள்ளது. 2014 இல், அமெரிக்காவும் ஜேர்மனியும் ரஷ்ய-சார்பு ஜனாதிபதியைக் கவிழ்க்கவும், உக்ரேனை நேரடியாக ஏகாதிபத்திய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் கியேவில் பாசிஸ்டுக்களின் -தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முடுக்கிவிட்டன. இந்த நிகழ்ச்சிப்போக்கு 2022 இல் மாஸ்கோவின் படையெடுப்பையும் ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போரையும் தூண்டுவதற்கு காரணமாகியது.

பத்தாண்டுகளுக்குப் பின்னர், பாசிச சிந்தனையைக் கொண்ட ட்ரம்ப் தலைமையிலான வாஷிங்டன், மூன்றாம் உலகப் போராக துரிதமாக அபிவிருத்தி அடைந்து வருகின்ற ஒன்றில், பல முனைகளில் மோதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. உக்ரேன், ரஷ்யா மற்றும் ஒட்டுமொத்த யூரேஷிய நிலப்பரப்பையும் அமெரிக்க மூலதனத்தின் நலன்களுக்கு அடிபணிய வைக்கும் நோக்கம் கொண்ட இந்தப் போருக்கு கூடுதலாக, சீனாவின் பொருளாதார எழுச்சியைத் தடுப்பதற்கு, ஆசிய-பசிபிக்கில் அதனுடன் பகிரங்கமாக போரில் ஈடுபடுவதற்கு வாஷிங்டன் தயாரிப்பு செய்து வருகிறது.

சமீபத்திய SIPRI யின் அறிக்கை, சமீபத்திய ஆண்டுகளில் கூர்மையான இராணுவ செலவின அதிகரிப்புகளுக்கான ஒரு உந்து சக்தியாக இருக்கும் 2022 அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாய துறையை வெளிப்படையாக சுட்டிக்காட்டியது. சீனாவை “அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு மிகவும் விரிவான மற்றும் தீவிரமான சவால்” என்று விவரித்த அந்த ஆவணம், வரவிருக்கும் “தீர்க்கமான தசாப்தத்தில்” ரஷ்யாவையும் சீனாவையும் தோற்கடிக்க சூளுரைத்த பைடென் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்திற்கு வெறும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது.

மத்திய கிழக்கில், எரிசக்தி வளம் மிக்க பிராந்தியத்தில் அதன் சவாலுக்கிடமற்ற மேலாதிக்கத்தை பாதுகாப்பதற்கான வாஷிங்டனின் உறுதிப்பாடு, காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்க அதை இட்டுச் சென்றுள்ளது. வாஷிங்டனும் பேர்லினும் சியோனிச ஆட்சிக்கு பத்து பில்லியன் கணக்கான டாலர்கள் ஆயுதங்களை வழங்கி, லெபனானுக்குள் அதன் இரத்தந்தோய்ந்த தாக்குதலை விரிவாக்க அனுமதித்தன. அங்கு சியோனிச ஆட்சி, பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று ஊனப்படுத்தியதுடன், மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய பிராந்திய இலக்கான ஈரான் மீது தாக்குதல்களையும் தொடங்கியது.

கடந்த மார்ச் மாதம் யேமனில் ட்ரம்பால் தொடங்கப்பட்ட ஈரானுடன் இணைந்த ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சு நடவடிக்கையின் முதல் மாதத்தில், அமெரிக்கா வெடிமருந்துகள் மற்றும் இராணுவ ஆதார வளங்களுக்கு 1 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் அதிகரித்தளவில் தங்கள் முன்னாள் அமெரிக்க கூட்டாளியை ஒரு எதிரியாக காண்கின்றனர் என்பதோடு, உலக மேலாதிக்கத்திற்கான போராட்டத்தில் வாஷிங்டனால் ஓரங்கட்டப்படுவதை விரும்பவில்லை. ட்ரம்பின் “அமெரிக்கா முதலில்” வெளியுறவுக் கொள்கை என்பது 2ம் உலக யுத்தத்துக்கு பிந்தைய காலகட்டத்தில் மேலாதிக்கம் செலுத்திய அட்லாண்டிக் கடந்த உறவுகளின் முடிவை அர்த்தப்படுத்துகிறது என்பதை உணர்ந்து, ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் அமெரிக்காவிலிருந்து சுயாதீனமாக போர் தொடுக்க ஏதுவாக மீள்ஆயுதமயமாக்கல் முனைவுகளை முடுக்கி விட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சிப்போக்கு வர்க்க மோதலை தீவிரமாக அதிகரிக்கச் செய்யும். ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும், அதன் 27 அங்கத்துவ நாடுகள் போர் செலவினங்களுக்காக கூடுதலாக 800 பில்லியன் யூரோக்களை ஒதுக்குவதாக உறுதியளித்தபோது, சுமார் 93 மில்லியன் மக்கள், அல்லது மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர், 2024 ஆம் ஆண்டில் வறுமையில் வாழ்ந்து வந்தனர்.

ஒவ்வொரு ஏகாதிபத்திய நாட்டின் உத்தியோகபூர்வ அரசியல் வாழ்விலும் ஆதிக்கம் செலுத்தும் செல்வந்த நிதிய தன்னலக்குழுக்கள் இராணுவவாதம் மற்றும் போரின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்க விரும்புகின்றன.

இந்த இலக்கை ஒட்டி, அரசாங்கங்கள் பொதுச் செலவுகளையும் அனைத்து சமூக சேவைகளையும் தகர்க்கும் அதேவேளை, ஏகாதிபத்திய போருக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை நசுக்குவதை நோக்கமாகக் கொண்ட சர்வாதிகார ஆட்சி வடிவங்களை ஸ்தாபித்து வருகின்றன. தொழிற்சங்கங்கள் போருக்காக தொழிலாளர்களை அணிதிரட்ட ஆளும் வர்க்கத்தால் சுரண்டப்படும் பேரினவாத தேசியவாதத்திற்கு எரியூட்டி வருவதுடன், படைத்துறைசாரா உற்பத்தியை இராணுவ உற்பத்தியாக மாற்றுவதை செயலூக்கத்துடன் ஊக்குவித்து வருகின்றன.

மேலதிக இராணுவ செலவின அதிகரிப்புகளுக்கான ட்ரம்பின் அறிவிப்பு, அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தைக் கட்டமைப்பதற்கும், நூறாயிரக் கணக்கான கூட்டாட்சி அரசு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கும் மற்றும் ஒட்டுமொத்த அரசு துறைகளை இழுத்து மூடுவதற்குமான அவரின் இடைவிடாத அழுத்தங்களுடன் கைகோர்த்து செல்கிறது.

ஜேர்மனியில், வறுமை மற்றும் சமத்துவமின்மையின் மட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், கடந்த தசாப்தத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான அளவுக்கு இராணுவ செலவினத்தின் மீளெழுச்சி நடந்துள்ளது. ஆளும் உயரடுக்கு அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) என்ற கட்சியின் வடிவத்தில் பாசிசத்திற்கு திட்டமிட்டு மறுவாழ்வளித்து வருவதுடன், சுகாதாரப் பராமரிப்புக்கான வரவு-செலவு திட்டங்கள் எலும்புக்கூடாக வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளன.

ஏகாதிபத்தியவாதிகளின் சூறையாடும் உலகளாவிய அபிலாஷைகளைப் பாதுகாக்க, 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களின் போது மேலோங்கி இருந்த கொடூரமான, சர்வாதிகார சமூக ஒழுங்கிற்கு கடிகாரத்தைத் திருப்ப விரும்புகின்றனர்.

1916 இல் பேர்லினில் அவரது புகழ்பெற்ற மே தின உரையில், முதலாம் உலகப் போரின் இரத்தந்தோய்ந்த படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்த ஜேர்மன் சோசலிசவாதியான கார்ல் லீப்னெக்ட், அந்நேரத்தில் ஜேர்மன் குடிமக்கள் அனுபவித்து வந்த “மூன்று மாபெரும் பிரஷ்ய அரசின் தனிச்சலுகைகளை” கசப்பான முரண்பாடாகக் கண்டனம் செய்தார். “நாம் சிப்பாய்களாக இருக்கலாம், நாம் வரிகளை செலுத்தலாம், நமது நாக்கை நம் பற்களுக்கு இடையில் வைத்தும் இருக்கலாம்.” என்று அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச தொழிலாள வர்க்கமே ஏகாதிபத்திய உலகப் போர் மற்றும் சர்வாதிகாரத்தை ஆளும் உயரடுக்குகள் புதுப்பிப்பதை தடுத்து நிறுத்தும் தகைமை கொண்ட சமூக சக்தியாகும். ட்ரம்புக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா எங்கிலும் வேலைநிறுத்தங்களின் மேலெழுச்சியும் எடுத்துக்காட்டுவதைப் போல, தொழிலாள வர்க்கம் ஏற்கனவே பெரும் வர்க்கப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. காஸா இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய பாரிய எதிர்ப்பு போராட்டங்கள், சியோனிச ஆட்சி மற்றும் அதன் ஏகாதிபத்திய புரவலர்களின் காட்டுமிராண்டித்தனத்திற்கு மில்லியன் கணக்கான மக்களின் கடுமையான விரோதத்தை வெளிப்படுத்துகின்றன.

இராணுவவாதம், போர் மற்றும் அவற்றின் மூலகாரணமான முதலாளித்துவ இலாப அமைப்புமுறையை எதிர்ப்பதற்கு அவசியமான சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில் தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குவதே தீர்மானகரமான பணியாக உள்ளது. மே 3 அன்று உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஏற்பாடு செய்த சர்வதேச மே தின இணையவழி பேரணி இந்தப் போராட்டத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பை செய்யும்.

Loading