ஜனநாயகக் கட்சியின் மௌனத்திற்கு மத்தியில், வெனிசுவேலா மீது ட்ரம்ப் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வெனிசுலாவின் காரகாஸின் சான் அகஸ்டின் புறநகர்ப் பகுதியிலுள்ள கேபிள் கார் நிலையம், சனிக்கிழமை, டிசம்பர் 27, 2025. [AP Photo/Matias Delacroix]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த வாரம் முதன்முதலில் வெளியிட்ட ஒரு அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், டிசம்பர் 24 அன்று மத்திய புலனாய்வு முகமை (CIA) வெனிசுவேலா பிராந்தியத்தின் மீது ஒரு ட்ரோன் தாக்குதலை நடத்தியது என்பதை சி.என்.என் செவ்வாயன்று உறுதிப்படுத்தியது.

இந்த தாக்குதல் வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் அறிவிக்கப்படாத போரின் ஒரு குற்றவியல் விரிவாக்கமாகும். இந்த ஆக்கிரமிப்புப் போரில், ஒரு செயல்திறன் மிக்க முற்றுகையை அமல்படுத்துவதும், தெற்கு கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் சர்வதேச கடல் பகுதிகளில் நடத்தப்படும் தொடர் கொலைகளும் அடங்கும். கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து நடத்தப்பட்ட 30 தாக்குதல்களில் குறைந்தது 107 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கிறிஸ்துமசுக்கு முன் தினம், ஒரு துறைமுக நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலானது, ஆகஸ்ட் மாதம் இப்பகுதியில் அமெரிக்க இராணுவக் குவிப்பு தொடங்கிய பிறகு, வெனிசுலாவிற்குள் நடத்தப்பட்ட முதல் வான்வழித் தாக்குதலாகும்.

1962 கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் அமெரிக்கா கரீபியனில் மிகப்பெரிய இராணுவப் படையை குவித்துள்ளது. அமெரிக்க தெற்கு கட்டளை மையத்தின் படி, கிட்டத்தட்ட 15,000 இராணுவ சிப்பாய்கள் இப்போது இப் பிராந்தியத்தில் செயல்பட்டு வருகின்றனர். உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் போர்டு தலைமையிலான ஒரு டசினுக்கும் மேற்பட்ட பெரிய போர்க் கப்பல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கடற்படையினரை ஏற்றிச் செல்லும், நீரிலும் நிலத்திலும் தாக்குதல் நடத்தும் இரண்டு கப்பல்கள் இந்தப் பிரமாண்டமான இராணுவக் குவிப்பில் அடங்கும்.

அமெரிக்க மக்கள் வெனிசுவேலா மீதான அமெரிக்கப் போரை பெருமளவில் எதிர்க்கின்றனர். CBS News/YouGov கருத்துக்கணிப்பில் 70 சதவீதம் பேர் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை எதிர்ப்பதாகவும், 30 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மக்கள் கவனிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலத்தில் இந்த மோதலை தீவிரப்படுத்த ட்ரம்ப் முயற்சிக்கிறார். இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முயற்சியில் அவருக்கு அமெரிக்க ஊடகங்களும் அரசியல் நிறுவனங்களும் துணை நிற்கின்றன.

ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது அமெரிக்கா விமானத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது என்ற உண்மை —சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு போர் நடவடிக்கை— அரசியல் ஸ்தாபகத்திலோ அல்லது பெருநிறுவன ஊடகங்களிலோ எந்த அக்கறையுள்ள விவாதத்தையும் தூண்டவில்லை. இந்தத் தாக்குதல் செய்தி, செய்தித் தாள்களின் முன் பக்கங்களில் சிறிய தலைப்புச் செய்திகளாகவே ஒதுக்கப்பட்டன. செவ்வாய் மாலை வரை வாஷிங்டன் போஸ்ட் இதழின் முன் பக்கத்தில் கூட இது இடம்பெறவில்லை.

டிசம்பர் 26 அன்று, ஒரு வானொலி நேர்காணலின் போது ட்ரம்ப் முதன்முதலில் இந்த தாக்குதலை வெளிப்படுத்தினார். நியூ யோர்க் வானொலி நிகழ்ச்சியை நடத்தும் கோடீஸ்வர குடியரசுக் கட்சி நன்கொடையாளர் ஒருவரிடம், கப்பல்கள் வரும் “ஒரு பெரிய தொழிற்சாலை அல்லது நிலையத்தை” அமெரிக்கா அழித்துவிட்டதாக அவர் கூறினார்.

வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவைப் படுகொலை செய்யும் திறன் அமெரிக்காவிற்கு உண்டு என்ற செய்தியை அவருக்குத் தெரிவிப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று சி.ஐ.ஏ அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலை பகிரங்கமாக வெளிப்படுத்தும் ட்ரம்பின் முடிவு, “அமெரிக்கா நினைத்த நேரத்தில் மதுரோவை நெருங்கித் தாக்க முடியும்” என்ற ஒரு “தீவிரமான செய்தியை” அவருக்குத் தெரிவிப்பதாக, சி.ஐ.ஏ-வின் இலத்தீன் அமெரிக்காவிற்கான முன்னாள் நிலையத் தலைவர் ரிக் டி லா டோர், USA Today இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகள் குறித்து, அந்த நிர்வாகத்தின் வெனிசுலாவிற்கான முன்னாள் சிறப்புத் தூதர் எலியட் ஆப்ராம்ஸ், “வெனிசுலாவின் பொருளாதாரம் மோசமடையும், மதுரோ அரசாங்கத்தின் நிதிநிலை இன்னும் சீர்குலையும், இது பொதுமக்களின் அழுத்தத்தையும் அரசாங்கத்திற்குள் இருக்கும் உள் அழுத்தத்தையும் அதிகரிக்கும், ஒரு கட்டத்தில் வெகுஜனப் போராட்டங்களோ அல்லது இராணுவத்தில் உள்ள யாராவது ஒருவரோ அரசாங்கத்தைக் கவிழ்க்க முற்படுவார்கள்” என்று குறிப்பிட்டார்.

கடல் பகுதியில் தீவிரமடைந்து வரும் கடற்கொள்ளை நடவடிக்கைகளுக்கு மத்தியில்தான் இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெனிசுவேலாவின் முக்கிய வருவாய் ஆதாரத்தின் மீது ஒரு செயல்திறன் மிக்க முற்றுகையை விதிக்கும் வகையில், வெனிசுவேலா கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற பல எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் பறிமுதல் செய்யப்பட்ட செஞ்சுரீஸ் (Centuries) என்ற கப்பல், சீன வர்த்தக நிறுவனம் வாங்கிய வெனிசுவேலா கச்சா எண்ணெயைச் சுமந்து சென்றது. பெல்லா 1 (Bella 1) என்ற மற்றொரு கப்பல், டிசம்பர் 21 முதல் அமெரிக்க கடலோர காவல்படையின் துரத்தலில் இருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறது. அத்தருணத்தில், ரஷ்யாவின் பாதுகாப்பைக் கோரும் நோக்கில், அந்தக் கப்பலின் ஊழியர்கள் அதன் பக்கவாட்டில் ரஷ்யக் கொடியை வரைந்துள்ளனர்.

ரஷ்யாவும் சீனாவும் வெனிசுவேலா மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குள் இழுக்கப்படுகின்றன என்ற உண்மை, இது வெறுமனே ஒரு பிராந்திய நடவடிக்கை அல்ல, மாறாக ஒரு பரந்த உலகளாவிய மோதலின் ஒரு பகுதி என்பதை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசுகளும் உலகெங்கிலும் போரைத் தூண்டி வருகின்ற நிலையில், இந்தப் போர் விரிவாக்கம் வந்துள்ளது. ஐரோப்பிய சக்திகள் உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்புவது குறித்து பகிரங்கமாக விவாதித்து வருகின்றன. வெனிசுவேலாவிற்கு எதிராக இப்போது தொடங்கப்பட்டுள்ள இந்தப் போர், இலத்தீன் அமெரிக்காவைத் தாண்டி வெகுதூரம் விரிவடையும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது.

இலத்தீன் அமெரிக்காவை ட்ரம்ப் குறிவைப்பதன் நோக்கம், உலகம் முழுவதும் போர் நடத்துவதற்கான ஒரு அதிகாரத் தளத்தை உருவாக்குவதே ஆகும். ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் (National Security Strategy), “மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை மீட்டெடுப்பதையும்”, சீனா “எமது அரைக்கோளத்தில் மூலோபாய ரீதியாக முக்கியமான சொத்துக்களை சொந்தமாக்கி வைத்திருக்கவோ அல்லது கட்டுப்படுத்தும் திறனை கொண்டிருக்கவோ” அனுமதிக்கக் கூடாது என்பதையும் வெளிப்படையாக வலியுறுத்துகிறது. இந்த ஆவணம், “எமது அரைக்கோளம்” என்று முன்வைக்கப்படும் இரண்டு கண்டங்களின் மீது அமெரிக்காவின் உரிமையை திறம்பட வலியுறுத்துவதுடன், ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதலுக்கு ஒரு களமாகப் பயன்படுத்துவதற்காக, இந்தக் கண்டங்களின் வளங்களைக் கைப்பற்ற வாஷிங்டன் திட்டமிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காகவே வெனிசுவேலா மீது போர் தொடுக்கப்படுவதாக ட்ரம்ப் கூறினாலும், வெனிசுவேலா போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு முக்கிய நாடு அல்ல. “போதைப்பொருள் ஒழிப்புப் போர்” என்ற சாக்குப்போக்கு, வெனிசுவேலா அரசாங்கத்தைக் கவிழ்ப்பது மற்றும் அந்நாட்டின் பரந்த எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவது என்ற உண்மையான நோக்கத்தை மறைப்பதற்கான ஒரு வெளிப்படையான மோசடியாகும். வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தனது எண்ணத்தை ட்ரம்ப் மறைக்கவில்லை. மதுரோவின் “நாட்கள் எண்ணப்படுகின்றன” என்று அவர் அறிவித்துள்ளார்.

ட்ரம்பின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஜனநாயகக் கட்சி எந்தவொரு அர்த்தமுள்ள எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர், “ட்ரம்ப் அமெரிக்க மக்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் மற்றும் அவரது மூலோபாயம் என்ன என்பதை விளக்க வேண்டும்” என்று மட்டுமே கூறினார். ஆனால், மற்ற ஜனநாயகக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து ஷுமரும், மதுரோ பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்தை நீங்கள் எதிர்க்கிறீர்களா என்று இந்த மாத தொடக்கத்தில் கேட்கப்பட்டபோது, “நிச்சயமாக, மதுரோ தானாகவே நாட்டை விட்டு வெளியேறினால் அது அனைவருக்கும் மகிழ்ச்சிதான்” என்று ஷுமர் பதிலளித்தார். டிசம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஏ.பி.சி தொலைக்காட்சியின் “இந்த வாரம்” என்ற நிகழ்ச்சியில் செனட் உளவுத்துறைக் குழுவின் முக்கிய ஜனநாயகக் கட்சி உறுப்பினரான மார்க் வார்னர் பங்கேற்றார். மதுரோவை வெளியேற்றுவதற்கான ட்ரம்பின் முயற்சியை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா என்று தொகுப்பாளர் மார்தா ராடாட்ஸ் கேட்டபோது, “வெனிசுவேலா மக்கள் மதுரோ வெளியேற வேண்டும் என்று விரும்புவதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று வார்னர் பதிலளித்தார். ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக ட்ரம்ப் போதுமான அளவு ஆக்ரோஷமாக இல்லை என்று விமர்சிக்கும் அதே வேளையில், வெனிசுவேலாவிற்கு எதிரான போர் விரிவாக்கத்தை ஜனநாயகக் கட்சித் தலைமை பரந்த அளவில் ஆதரிக்கிறது.

ஜனநாயகக் கட்சியின் “முற்போக்கு” பிரிவு என்று அழைக்கப்படும் பிரிவினர், இதில் கிட்டத்தட்ட மௌனம் காக்கின்றனர். ட்ரம்ப் தாக்குதல்களை அறிவித்ததில் இருந்து, செனட்டர் பேர்னி சாண்டர்ஸோ அல்லது பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸோ வெனிசுவேலா குறித்து எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. காங்கிரஸின் விசாரணைகளுக்கோ, இந்த தாக்குதல்களின் சட்டப்பூர்வமான தன்மை குறித்த விசாரணைக்கோ அல்லது இராணுவத் தீவிரப்பாட்டை நிறுத்துவதற்கான சட்டத்திற்கோ எந்தவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டின் இறுதியில், குடியரசுக் கட்சியினருடன் இணைந்து 901 பில்லியன் டாலர் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தை (NDAA) நிறைவேற்றி, வெனிசுவேலா மீது போர் தொடுக்கப் பயன்படுத்தப்படும் அதே இராணுவக் கட்டமைப்பிற்கு ஜனநாயகக் கட்சியினர் நிதி ஒதுக்கினர்.

2025 ஆம் ஆண்டு, காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இனப்படுகொலை, உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ போர் தீவிரப்படுத்தல், உலகெங்கிலும் அமெரிக்க இராணுவக் குவிப்பு ஆகியவற்றின் ஒரு போர் ஆண்டாக இருந்தது. வெனிசுவேலா மீதான ட்ரம்பின் ஆளில்லா விமானத் தாக்குதல், புத்தாண்டில் உலகெங்கிலும் போர் தொடுக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.

Loading