மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
உலக சோசலிச வலைத் தளம், அமெரிக்காவிலுள்ள சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகியவை, சனிக்கிழமை அதிகாலையில் வெனிசுவேலா மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பையும், ஜனாதிபதி நிக்கோலோஸ் மதுரோவை குற்றவியல் ரீதியில் கடத்தியதையும், சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கின்றன. மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அந்தப் பிராந்தியத்திலிருந்து அனைத்து அமெரிக்க துருப்புக்களும், இராணுவ சக்திகளும் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.
குறைந்தது 40 பேரைக் கொன்ற இந்த ஆக்கிரமிப்பானது, சட்டபூர்வமான தன்மை என்ற எந்தவொரு தோற்றத்தையும் ட்ரம்ப் ஆட்சி முற்றிலுமாக நிராகரித்துள்ளதைக் காட்டுகிறது. இது, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறி தொடுக்கப்பட்ட, தூண்டப்படாத ஆக்கிரமிப்புப் போர் ஆகும். மேலும், இது வெனிசுவேலா மற்றும் முழு இலத்தீன் அமெரிக்காவின் மீதும் மீண்டும் ஒரு காலனித்துவக் கட்டுப்பாட்டை திணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலை அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் எதிர்க்க வேண்டும்.
கடந்த சனிக்கிழமை பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய ட்ரம்பின் “யுத்த அமைச்சர்” பீட் ஹெக்சேத், “2026 க்கு வரவேற்கிறோம்” என்று அறிவித்தார். புத்தாண்டு பிறந்து மூன்றே நாட்களில், வெனிசுவேலா மீதான இந்தத் தாக்குதலானது — காஸா இனப்படுகொலை, லெபனான், சிரியா மற்றும் ஈரான் மீதான குண்டுவீச்சுகளின் மூலம் 2025-ஐக் குறிக்கின்ற ஏகாதிபத்திய வன்முறை — 2026-இல் மேலும் தீவிரமடையும் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
வெளியுறவுக் கொள்கைக்கும் உள்நாட்டுக் கொள்கைக்கும் இடையில் உறுதியான சுவர் என்று எதுவுமில்லை. அமெரிக்க எல்லைகளுக்கு அப்பாலும் ஏகாதிபத்திய குண்டர் தனம், அமெரிக்காவிற்குள்ளும் ஒரு பாசிச ஜனாதிபதி சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கான சதித்திட்டத்தின் வேகத்துடனேயே இணைந்து செல்லும்.
சனிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் ஆற்றிய உரையில், “பாதுகாப்பான, முறையான மற்றும் விவேகமான அதிகார மாற்றத்தைச் செய்யக்கூடிய காலம் வரும் வரை” அமெரிக்காவே அந்த நாட்டை (வெனிசுவேலாவை) நிர்வகிக்கும் என்று ட்ரம்ப் அறிவித்தார். கடந்த காலங்களில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் போர்களை ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய பாசாங்குத்தனமான வார்த்தைகளைக் கொண்டு நியாயப்படுத்த முயன்றது. ஆனால், ட்ரம்ப் அத்தகைய பாசாங்குகளைக் கூட தூக்கி எறிந்துவிட்டார். வெனிசுவேலா மீதான இந்தத் தாக்குதலின் நோக்கம், அந்த நாட்டையும் அதன் எண்ணெய் வளங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே என்று அவர் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.
“உலகிலேயே மிகப்பெரிய நிறுவனங்களான எமது அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் அங்கே சென்று பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிடப் போகின்றன,” என்று ட்ரம்ப் அறிவித்தார். ஏதேனும் எதிர்ப்பு கிளம்பினால், இன்னும் கொடூரமான இராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் அச்சுறுத்தினார். “தேவைப்பட்டால் இரண்டாவது மற்றும் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 முதல் 750 பில்லியன் டாலர் வரையிலான “முதலீட்டு வாய்ப்புகளை” மதிப்பீடு செய்ய, முன்னணி தனியார் முதலீட்டு நிதிகள் மற்றும் சொத்து மேலாளர்கள் வரும் மார்ச் மாதம் தலைநகர் கராகஸிற்கு (Caracas) ஒரு பிரதிநிதிகள் குழுவை அனுப்பத் தயாராகி வருவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
வெனிசுலாவேவின் பிரம்மாண்டமான எண்ணெய் இருப்புக்களுக்கு அப்பால், அந்த நாடு இதர முக்கியமான இயற்கை வளங்களிலும் விதிவிலக்கான செழிப்பைக் கொண்டுள்ளது.
அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் (கயானா மலைப் பகுதிகள்) குறிப்பிடத்தக்க தங்க இருப்புக்கள் உள்ளன. தங்கம் மற்றும் பாக்சைட் (bauxite) ஆகியவற்றை விட சிறிய அளவில் இருந்தாலும், கயானா பிராந்தியத்தில் வைர படிவுகளும் காணப்படுகின்றன. புதிய சுரங்க எல்லைகளுடன் தொடர்புடைய தாமிரம், நிக்கல், மாங்கனீசு மற்றும் சிறிய அளவிலான கோல்டன் (coltan) மற்றும் காசிட்டரைட் (cassiterite) படிமங்கள் வெனிசுலாவேவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கணிசமான அளவு யுரேனியம் மற்றும் தோரியம் படிவுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் போர் ஒரு முக்கியமான புவிசார் அரசியல் நோக்கத்திற்காகச் செய்யப்படுகிறது. வெனிசுவேலா மீதான ஆக்கிரமிப்பும் அதன் ஜனாதிபதி கடத்தப்பட்டதும், ட்ரம்ப் சனிக்கிழமை கூறியது போல், “அமெரிக்க இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எவருக்கும்” விடுக்கப்பட்ட ஒரு “எச்சரிக்கை” ஆகும்.
தனது புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தைக் (National Security Strategy) குறிப்பிட்டுப் பேசிய ட்ரம்ப், “மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் இனி ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படாது” என்று அறிவித்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரஷ்ய இராணுவவாதி பிஸ்மார்க்கின் புகழ்பெற்ற “இரத்தமும் இரும்பும்” (blood and iron) உரையை மேற்கோள் காட்டிய ட்ரம்ப், இந்தத் தாக்குதலானது “உலகளாவிய அதிகாரத்தை எப்போதும் தீர்மானிக்கும் இரும்புச் சட்டங்களின்” மீள் உறுதிப்பாடு என்று பெருமை பீற்றிக் கொண்டார்.
அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராகச் செயல்படக்கூடிய இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்களே இதன் உடனடி இலக்குகளாகும். கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ பற்றிப் பேசுகையில், ஒரு தெரு ரவுடியின் கொச்சையான மொழியில் ட்ரம்ப், “அவர் தனது பாதுகாப்பில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று எச்சரித்தார். பாசிச யுத்த அமைச்சர் பீட் ஹெக்செத் இதனுடன் சேர்ந்து: “அமெரிக்கா தனது விருப்பத்தை எங்கேயும், எப்போது வேண்டுமானாலும் செயல்படுத்த முடியும்,” என்று கூறினார். மேலும், வெனிசுவேலா மீதான தாக்குதலுக்கும் கடந்த ஆண்டு ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சுக்கும் இடையே நேரடி ஒப்பீட்டை அவர் முன்வைத்தார். “ஈரானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதைப் போலவே, மதுரோவுக்கான வாய்ப்பு பறிக்கப்படும் வரை, அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது,” என்று ஹெக்செத் ஏளனமாகக் கூறினார்.
வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ — ஹிட்லருக்கு ரிப்பன்ரொப் எப்படியோ, அவ்வாறே ட்ரம்பிற்கு இவர் இருக்கிறார் — கியூபா அரசாங்கத்திற்கு தனது சொந்த பாணியில் ஒரு குண்டர் மிரட்டலை விடுத்தார். நான் அந்தத் தீவு நாட்டின் தலைவராக இருந்தால், “நான் கவலைப்படுவேன்,” என்று அவர் கூறினார்.
ஆனால், இந்த அச்சுறுத்தல்கள் இலத்தீன் அமெரிக்காவோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை. வெனிசுவேலா மற்றும் ஈரான் தவிர, கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்கா மேலும் ஐந்து நாடுகள் மீது குண்டுவீச்சு நடத்தியுள்ளது: அவை, சிரியா, ஈராக், ஏமன், சோமாலியா மற்றும் மிக சமீபத்தில் டிசம்பரில் நைஜீரியா ஆகியவைகளாகும். மெக்ஸிகோவிற்கு எதிராக போர் அச்சுறுத்தல்களை விடுத்துள்ள ட்ரம்ப், கிரீன்லாந்து மற்றும் கனடாவை இணைப்பதைக் குறித்துப் பேசியுள்ளார். மேலும் பனாமாக் கால்வாயை அமெரிக்கா கட்டுப்படுத்துவது பற்றிய கேள்வியானது, “பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது” என்றும் அறிவித்துள்ளார்.
சீனாவிற்கு விடுக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புச் செய்தி இதில் மிகத் தெளிவாக உள்ளது. இந்தத் தாக்குதல் நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்புதான், வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, பெய்ஜிங்கின் இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதி கியூ சியாவோகி தலைமையிலான உயர்மட்ட சீனக் குழுவைச் சந்தித்து, கூட்டு எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்போடு ஒத்துப் போகும் வகையில் திட்டமிடப்பட்ட அமெரிக்கத் தாக்குதலானது, சீனாவுக்கும் இலத்தீன் அமெரிக்காவுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகளைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும்.
ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் குற்றவியல் தன்மையுடையவை மட்டுமல்ல, அவை முற்றிலும் ஒரு பைத்தியக்காரத்தனமான போக்கைக் கொண்டுள்ளன. 2003-இல் அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தபோது, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு “பேரழிவுடன் கூடிய நடவடிக்கையில்” நுழைந்துள்ளதாக உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது. “அதனால் உலகை வெல்ல முடியாது. மத்திய கிழக்கு மக்களிடையே மீண்டும் காலனித்துவத் தளைகளைத் திணிக்க முடியாது. ... போரின் மூலம், அதன் உள்நாட்டுப் பிரச்சனைகளுக்கு ஒரு நிலையான தீர்வை அதனால் காண முடியாது,” என்று உலக சோசலிச வலைத் தளம் அன்று கூறியது.
அந்த எச்சரிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அதைவிட மிகவும் பொறுப்பற்றவை — இது ஒரு பெரும் பேரழிவை நோக்கிய பயணமாகும்.
30 மில்லியன் மக்களையும், 3 லட்சத்து 50 ஆயிரம் சதுர மைல்களுக்கு மேல் பரப்பளவையும் கொண்ட ஒரு நாட்டை, வாஷிங்டன் அதிகாரிகள் கட்டளையிட முடியும் என்பது போல, ரூபியோ, ஹெக்செத் மற்றும் ட்ரம்ப் ஆட்சியின் இதர அதிகாரிகளால் வெனிசுவேலா “நிர்வகிக்கப்படும்” என்று சனிக்கிழமை ட்ரம்ப் அறிவித்தார். உண்மையில், இத்தகைய ஆக்கிரமிப்பிற்கு நூறாயிரக்கணக்கான அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்துவதும், மக்களின் பெரும் எதிர்ப்பிற்கு மத்தியில் ஒரு கொடூரமான நகர்ப்புற போர் நடவடிக்கையும் தேவைப்படும். “தரைப் படையினர்களைப் பயன்படுத்துவதற்கு” தான் அஞ்சவில்லை என்று கூறியதன் மூலம் ட்ரம்ப் இதையே சுட்டிக்காட்டியுள்ளார்.
2003-ஆம் ஆண்டு ஈராக் படையெடுப்பிற்கு சுமார் 1,80,000 கூட்டணிப் படைகள் தேவைப்பட்டன என்பதையும், அதில் 1,30,000 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதையும் நினைவுபடுத்த வேண்டும். மொத்தத்தில், அந்தப் போர் முயற்சிக்கு ஆதரவாக கிட்டத்தட்ட அரை மில்லியன் அமெரிக்கப் பணியாளர்கள் அந்தப் பிராந்தியம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டனர். மேலும் ஈராக், வெனிசுவேலாவை விடக் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருந்ததோடு, ஒரு தசாப்த கால பொருளாதாரத் தடைகளால் ஏற்கனவே சிதைந்து போயிருந்தது. வெனிசுவேலாவை அடிபணியச் செய்வதற்குத் தேவையான இராணுவ ஆக்கிரமிப்பின் அளவானது, முழு இலத்தீன் அமெரிக்காவிலும், உண்மையில் உலகம் முழுவதிலும் ஒரு இரத்தவெறி பிடித்த, நீண்டகால மோதலாக மிக வேகமாக உருவெடுக்கும்.
ட்ரம்ப் அரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற தன்மையை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியின் பின்னணியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அரசியல் ரீதியாக, ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் பல வெளிப்படையாகக் கூறப்படாத நோக்கங்கள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இதில் எப்ஸ்டீன் (Epstein) பாலியல் கடத்தல் வலையமைப்பு தொடர்பான அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியும் அடங்கும். இந்த வலையமைப்பானது, நிதிய மேல்தட்டு வர்க்கம் மற்றும் அரசு இயந்திரத்திற்குள் இருக்கும் முக்கிய நபர்களோடு தொடர்புடையது.
ஆனால், அதைவிட மிக முக்கியமான நலன்கள் இதில் அடங்கியுள்ளன. அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால வீழ்ச்சியை இராணுவவாதம் மற்றும் போரின் மூலம் மாற்றியமைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தின் பொருளாதார அடித்தளங்கள் கடுமையாக சிதைந்துள்ளன. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,300 டாலரைத் தாண்டியுள்ளது. இது, உலகளாவிய கையிருப்பு நாணயமாக (global reserve currency) டாலர் மீதான நம்பிக்கை சரிந்துள்ளதன் உண்மையான அளவீடாகும். அமெரிக்காவின் தேசியக் கடன் 38 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. வெனிசுவேலாவின் எண்ணெயைக் கைப்பற்றுவதும், மேற்கு அரைக்கோளத்தில் (வட அமெரிக்கா, இலத்தீன் மற்றும் தென் அமெரிக்கா) அமெரிக்காவின் கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்டுவதும், அதன் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலையைத் தக்கவைக்க அத்தியாவசியமானது என்று ஆளும் வர்க்கம் கருதுகிறது.
இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை பாரியளவில் தீவிரப்படுத்த வேண்டியிருக்கும். இராணுவவாதம் மற்றும் உலகளாவிய வெற்றிக்கான வானளாவிய செலவுகள், சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலமும், எஞ்சியிருக்கும் முக்கிய சமூக நலத் திட்டங்களை அழிப்பதன் மூலமும் ஈடுகட்டப்படும். வெளிநாடுகளில் புதிய காலனித்துவ மேலாதிக்கத்தைத் திணிக்க, ட்ரம்ப் நிர்வாகம் உள்நாட்டில் எழும் மக்கள் எதிர்ப்பையும் முறியடிக்க வேண்டும். இந்த மூலோபாயத்திலிருந்து உருவாகும் தவிர்க்க முடியாத பேரழிவுகள், சர்வதேச ரீதியாகவும், அமெரிக்காவிற்குள்ளும் இன்னும் பெரிய வன்முறை மூலம் எதிர்கொள்ளப்படும்.
சனிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில், மதுரோவை “பிடித்துக் கடத்தியது” குறித்து பெருமை பீற்றிக்கொண்ட ட்ரம்ப், அங்கிருந்து தடையின்றி அமெரிக்காவின் முக்கிய நகரங்களை அச்சுறுத்தும் வகையில் தனது பேச்சை மாற்றினார். வாஷிங்டன் டி.சி., லொஸ் ஏஞ்சல்ஸ், மெம்பிஸ் மற்றும் நியூ ஆர்லியன்ஸ் ஆகிய நகரங்களில் தேசிய பாதுகாப்புப் படை நிலைநிறுத்தப்பட்டதைப் பாராட்டிய அவர், “இன்னும் பல நகரங்களில் அவர்கள் இதைச் செய்ய வேண்டும்” என்று அறிவித்தார். வெளிநாடுகளில் அமெரிக்காவின் நடத்தையை நிர்வகிக்கும் அதே வன்முறையின் “இரும்புச் சட்டங்கள்”, உள்நாட்டில் உள்ள மக்கள் மீதும் திணிக்கப்படும்.
ட்ரம்ப் ஒரு தனிநபராக செயல்படவில்லை என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். அவர் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவியாக இருக்கிறார். ஜனநாயக அல்லது சட்டபூர்வ வழிவகைகள் மூலம் இனியும் தொடர முடியாத கொள்கைகளை வலுக்கட்டாயமாகச் செயல்படுத்துவதற்காக, தன்னலக்குழுக்களால் கக்கியெடுக்கப்பட்ட ஒரு குண்டராக அவர் இருக்கிறார்.
2025-ஆம் ஆண்டில், அமெரிக்க பில்லியனர்கள் — சுமார் 900 நபர்கள் — தங்களின் நிகர மதிப்பில் 18 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளனர். இதன் மூலம், அவர்களின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 7 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 1933-இல் ஜேர்மன் ஆளும் வர்க்கம், சர்வாதிகாரத்தின் மூலமாக மட்டுமே செயல்படுத்தப்படக்கூடிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஹிட்லரை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது. ட்ரம்ப் அதே பணியையே செய்கிறார்.
குறிப்பிடத்தக்க வகையில், அமேசான் பில்லியனர் ஜெஃப் பெஸோஸுக்கு சொந்தமான வாஷிங்டன் போஸ்ட், நாளிதழ், மதுரோ கடத்தப்பட்டதை “பல ஆண்டுகளில் ஒரு ஜனாதிபதி மேற்கொண்ட மிகத் துணிச்சலான நடவடிக்கைகளில் ஒன்று” என்று புகழ்ந்து தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த இராணுவ நடவடிக்கையின் “சந்தேகத்திற்கு இடமில்லாத தந்திரோபாய வெற்றியை” அந்தப் பத்திரிகை பாராட்டியதோடு, மதுரோவின் வீழ்ச்சி “நல்ல செய்தி” என்றும், முந்தைய நிர்வாகங்கள் தயங்கிய இடத்தில் “தொடர்ந்து செயல்பட” ட்ரம்பிற்கு இருக்கும் விருப்பத்தைப் பாராட்டியும் எழுதியுள்ளது.
ஜனநாயகக் கட்சியும் ட்ரம்பைப் போலவே அதே வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் அதே அமைப்பு முறையை பாதுகாக்கிறது. ஆதலால், அவர்களின் அணிகளிடம் இருந்து எந்தவொரு தீவிரமான எதிர்ப்பும் வராது. ட்ரம்பிற்கும் அவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் முற்றிலும் தந்திரோபாய ரீதியானவை மட்டுமே, அவை மூலோபாய ரீதியானவை அல்ல. வெனிசுவேலா மீதான தாக்குதலுக்கு அவர்கள் அளித்துள்ள மௌனமான எதிர்வினை இதனைத் தெளிவுபடுத்துகிறது. பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், மதுரோ “அரசாங்கத்தின் சட்டபூர்வமான தலைவர் அல்ல” என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய அதேவேளையில், காங்கிரசுக்கு இதுகுறித்த முன்னறிவிப்பு வழங்கப்படாதது குறித்து மட்டுமே முணுமுணுத்தார்.
சில வாரங்களுக்கு முன்புதான், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இணைந்து 900 பில்லியன் டாலர் இராணுவச் செலவின மசோதாவை நிறைவேற்றினர். இது தற்போது இரக்கமின்றி நடைமுறைப்படுத்தப்படும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு வழங்கப்பட்ட தெளிவான ஆதரவாகும்.
தனது பங்கிற்கு, மக்கள் மத்தியில் எழக்கூடிய பரந்த எதிர்ப்பை எதிர்பார்த்த செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், வெனிசுவேலாவிற்கு எதிரான நடவடிக்கை “சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆனால், அவர் போரை நிறுத்துவதற்கான எந்தவொரு மூலோபாயத்தையோ அல்லது அதற்கு எதிராக மக்களைத் அணிதிரட்டுவதற்கான அழைப்பையோ விடுக்கவில்லை.
இதற்கான எதிர்வினை தொழிலாள வர்க்கத்திடமிருந்து வரும். அது வெனிசுலாவேவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருக்கும். மீண்டும் காலனித்துவ ஆதிக்கத்தைத் திணிப்பது உலகெங்கிலும் பெரும் எதிர்ப்பைச் சந்திக்கும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள், வெனிசுவேலாவிற்கு எதிரான போருக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவுவதைக் காட்டுகின்றன. மீண்டும் பதவியேற்ற முதல் ஆண்டின் இறுதியில் ட்ரம்பின் ஆதரவு விகிதம் வெறும் 36 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது, அரை நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் எந்தவொரு ஜனாதிபதியும் தனது பதவிக்காலத்தின் பெற்ற புள்ளியைவிட, மிகக் குறைந்த அளவு ஆதரவாகும்.
வெனிசுவேலா மீதான தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே போராட்டங்கள் வெடித்தன. இது, விரிவடைந்து வளரப்போகும் மக்கள் எதிர்ப்பின் ஆரம்ப அறிகுறியாகும். எவ்வாறாயினும், காஸா இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களின் அனுபவமானது, வாஷிங்டனிடம் முறையிடுவது அரசாங்கக் கொள்கையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதைக் காட்டுகிறது. ஒரு வேலைத்திட்டமும் தலைமையுமின்றி, மக்களின் கோபமானது மீண்டும் முதலாளித்துவ அரசின் அரசியல் கட்டமைப்புகளுக்குள்ளேயே திருப்பி விடப்படுகிறது.
இப்போது தேவைப்படுவது என்னவென்றால், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் நனவான தலையீடாகும். போரின் வேர்கள் முதலாளித்துவ அமைப்பு முறையிலும், நாட்டை ஆளும் தன்னலக்குழுவின் நலன்களிலும் இருப்பதை புறக்கணித்துவிட்டு போரை மட்டும் கண்டிப்பது, தோல்விக்கும் மனச்சோர்வுக்குமே வழிவகுக்கும்.
இத்தகைய போராட்டத்திற்கான சூழல் இப்போது கனிந்துள்ளது. வெளிநாட்டில் நடக்கும் போர் என்பது உள்நாட்டில் நடக்கும் சமூக எதிர்ப்புரட்சியிலிருந்து பிரிக்க முடியாதது — அதாவது விண்ணைத் தொடும் பணவீக்கம், செயற்கை நுண்ணறிவால் (AI) ஏற்படும் வேலை இழப்புகள், ஆழமடைந்து வரும் வறுமை மற்றும் ஒவ்வொரு ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளையும் திட்டமிட்டு அழித்தல் ஆகியவற்றுடன் இது பிணைந்துள்ளது.
தன்னலக்குழு ஒரு சமூக வெடிமருந்துப் பெட்டியின் மீது அமர்ந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய எரிமலை வெடிப்பு, வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய சுனாமியைத் தூண்டுகிறது. இவை இரண்டும் முதலாளித்துவ அமைப்பு முறையின் அதே முரண்பாடுகளிலிருந்தே எழுகின்றன.
இது அமெரிக்காவில் மிகவும் வன்முறையாக வெளிப்பட்டாலும், இதே அடிப்படையான போக்குகள் உலகம் முழுவதும் நிலவுகின்றன. அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் இப்போது உலகை மீண்டும் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளும் உலகளாவிய முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஐரோப்பாவில், முக்கிய முதலாளித்துவ அரசாங்கங்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய, மிகப்பெரியளவில் இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவை, ரஷ்யாவிற்கு எதிரான போருக்காக கூச்சலிடுவதோடு சமூக நலத் திட்டங்களையும் அழித்து வருகின்றன. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் நேட்டோவில் (NATO) உள்ள அவர்களது ஏகாதிபத்தியக் கூட்டாளிகளுக்கு, வெனிசுவேலா மீதான ட்ரம்பின் தாக்குதலானது அவர்களது பழைய காலனித்துவப் பேரரசுகளை மீட்டெடுப்பதற்கான ஒரு சமிக்ஞையாகத் தெரிகிறது. பெரும் இராணுவக் கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள ஜேர்மன் ஆளும் வர்க்கம், கண்டம் முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் தனது இராணுவப் பலத்தை நிலைநிறுத்தி, ஒரு நான்காவது பேரரசு (Fourth Reich) பற்றிய கனவுகளை வளர்த்து வருகிறது.
ஆளும் வர்க்கம் 2026-ஆம் ஆண்டு எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது: அது கட்டுப்பாடற்ற இராணுவ வன்முறையின் ஆண்டாக இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். இதற்கான விடை என்னவென்றால், 2026-ஐ வர்க்கப் போராட்டத்தின் ஆண்டாகவும், சோசலிசத்திற்கான ஒரு பாரிய இயக்கத்தை அபிவிருத்தி செய்யும் ஆண்டாகவும் இருக்க வேண்டும்.
போருக்கு எதிரான போராட்டம் என்பது அதை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டமாகும். இந்தப் போராட்டம் தொழிலாள வர்க்கத்தால் வழிநடத்தப்பட வேண்டும். உண்மையான ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டும் போராட்டத்தில் மக்களின் அனைத்து முற்போக்கு பிரிவினரையும் அணிதிரட்ட வேண்டும்.
தன்னலக்குழுக்களின் சர்வாதிகாரத்திற்கு மாற்றீடாக இருப்பது சோசலிசமே: முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தனிப்பட்ட இலாபத்திற்காக அல்லாமல் சமூகத் தேவையின் அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கமைக்கவும் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே அதன் இலக்காகும்.
சோசலிச சமத்துவக் கட்சியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன: எங்கள் அணிகளில் இணையுங்கள். அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியையும், உலகம் முழுவதிலும் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளையும் கட்டியெழுப்புங்கள். எல்லைகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும், முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டவும், ஒரு புதிய சமூகத்தின் அடித்தளமாக சோசலிசத்தை நிறுவவும் போராட்டத்தை முன்னெடுங்கள்.
