மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
வெனிசுவேலா மீது அமெரிக்கா ஒரு சட்டவிரோத இராணுவத் தாக்குதலை நடத்தி, அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்திய அடுத்த நாள், ட்ரம்ப் நிர்வாகம் இலத்தீன் அமெரிக்காவை மட்டுமல்லாமல் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவையும் இலக்காகக் கொண்டு உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அட்லாண்டிக் இதழுக்கு அளித்த பேட்டியில், சனிக்கிழமை தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்ற வெனிசுவேலா துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்கேஸுக்கு, மதுரோவை விட “மோசமான” விளைவுகள் ஏற்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார்.
“அவர் சரியானதைச் செய்யவில்லை என்றால், அவர் ஒரு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும், அநேகமாக மதுரோவை விட பெரிய விலையாக அது இருக்கும்” என்று ட்ரம்ப் கூறினார்.
ரோட்ரிக்கேஸ் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதாக சனிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் ட்ரம்ப் கூறிய சில மணிநேரங்களிலேயே இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது. ஆனால், ரோட்ரிக்கேஸின் பகிரங்க அறிக்கைகள் அமெரிக்காவிற்கு எதிராகவே உள்ளன. அமெரிக்காவின் நடவடிக்கையை ஒரு “காட்டுமிராண்டித்தனம்” என்று அவர் கண்டித்ததோடு, மதுரோ தான் வெனிசுவேலாவின் “ஒரே ஜனாதிபதி” என்றும் கூறினார்.
அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சரான மார்கோ ரூபியோ, NBC-யின் “பத்திரிகையாளர் சந்திப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் அடுத்த இலக்கு கியூபாவாக இருக்கலாம் என்று மறைமுகமாகத் தெரிவித்தார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் “அடுத்த இலக்கு” கியூபாவா என்று கேட்கப்பட்டபோது, “கியூபா அரசாங்கம் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது” என்று ரூபியோ பதிலளித்தார். மீண்டும் அவரிடம் வலியுறுத்திக் கேட்கப்பட்டபோது, “ஆம், அவர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடான டென்மார்க்கின் ஒரு பகுதியான கிரீன்லாந்தை, அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ளப்போவதாக தான் விடுத்திருந்த அச்சுறுத்தலை மீண்டும் புதுப்பிப்பதன் மூலம் ட்ரம்ப் இன்னும் ஒரு படி மேலே சென்றார்.
அட்லாண்டிக் இதழுக்கு அளித்த பேட்டியில், “எமக்கு கிரீன்லாந்து கண்டிப்பாகத் தேவை. பாதுகாப்பு காரணங்களுக்காக அது எமக்குத் தேவை,” என்று கூறிய ட்ரம்ப், அந்தத் தீவு “ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களால் சூழப்பட்டுள்ளது” என்று விவரித்தார். வெனிசுவேலா மீதான இராணுவ நடவடிக்கை என்பது கிரீன்லாந்தை கைப்பற்ற பலத்தைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தின் அறிகுறியா என்று கேட்டபோது, ட்ரம்ப் அதை மறுக்கவில்லை. (அதாவது, பலத்தைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதையே உணர்த்தினார்).
கடந்த ஞாயிற்றுக்கிழமை, டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் இதற்கு பதிலளிக்கையில், டென்மார்க் எல்லைக்குட்பட்ட பகுதியை “இணைத்துக் கொள்ள அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் கிடையாது” என்றார். கிரீன்லாந்து என்பது டென்மார்க் இராச்சியத்திற்கு உட்பட்ட ஒரு தன்னாட்சிப் பகுதியாகும். அந்தத் தீவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பை டென்மார்க் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ரூபியோ, வெனிசுவேலாவில் புதிய தேர்தல்களை நடத்துவதில் அமெரிக்கா ஆர்வம் காட்டவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். உலகின் மிகப்பெரியளவில் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ள வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதே ட்ரம்ப் நிர்வாகத்தின் முதன்மையான முன்னுரிமை என்று அவர் விளக்கினார்.
CBS தொலைக்காட்சியின் “தேசத்தை எதிர்கொள்ளுங்கள்” என்ற நிகழ்ச்சியில், தொகுப்பாளர் மார்க்ரெட் பிரென்னன், “உங்கள் கணக்கின்படியே 2024 தேர்தலில் மரியா கொரினா மச்சாடோ மற்றும் எட்முண்டோ கோன்சாலஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்” என்று சுட்டிக்காட்டி, “அங்கு ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான உடன்பாடு ஏதேனும் உள்ளதா?” என்று ரூபியோவிடம் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ரூபியோ, தேர்தல்கள் குறித்துப் பேசுவது “காலத்திற்கு முந்தையது” என்று கூறி, “அமெரிக்காவின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் செழிப்பு ஆகியவற்றைப் பற்றித்தான் நாம் முதன்மையாகக் கவலைப்படுகிறோம்” என்று சேர்த்துக் கொண்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு குற்றவியல் கொள்ளை நடவடிக்கையின் போது, “ஜனநாயகத்தை” நிலைநாட்டப் போவதாகப் பாசாங்கு செய்யக்கூட அமெரிக்க அரசு விரும்பவில்லை.
பொருளாதார நெருக்குதலின் மூலம் மிரட்டிப் பணிய வைப்பதே இவர்களின் மூலோபாயம் ஆகும். அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையானது — இதை ரூபியோ மென்மையாக “தனிமைப்படுத்துதல்” (quarantine) என்று அழைக்கிறார் — வெனிசுவேலா எண்ணெயை ஏற்றுமதி செய்வதைத் தடுத்து, அந்த அரசாங்கத்தின் முதன்மை வருவாய் ஆதாரத்தைத் துண்டிப்பதாகும். வாஷிங்டன் விதிக்கும் நிபந்தனைகளின் கீழ், வெனிசுவேலா தனது தேசியமயமாக்கப்பட்ட எண்ணெய் தொழிற்துறையை அமெரிக்க நிறுவனங்களுக்குத் திறந்துவிடும் வரை இந்த முற்றுகை தொடரும் என்று ரூபியோ விளக்கினார்.
வெனிசுவேலா மீதான இந்தத் தாக்குதல், சீனா மற்றும் ரஷ்யாவுடன் அமெரிக்கா கொண்டுள்ள விரிவான மோதலின் ஒரு பகுதியாக உள்ளது. தற்போது வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்தை சீனா வாங்குகிறது. வெனிசுவேலாவின் எண்ணெய் தொழில்துறையை கைப்பற்றுவதன் மூலம், தனது எதிரி நாடுகளுக்குக் கிடைக்கும் ஒரு முக்கிய எரிசக்தி ஆதாரத்தைப் பறிக்க வாஷிங்டன் இலக்கை நிர்ணயித்துள்ளது.
ரூபியோ, “சீனாவுக்கு ஏன் அவர்களின் எண்ணெய் தேவை? ரஷ்யாவிற்கு ஏன் அவர்களின் எண்ணெய் தேவை? ஈரானுக்கு ஏன் அவர்களின் எண்ணெய் தேவை? அவர்கள் இந்தக் கண்டத்திலேயே இல்லை. இது மேற்கு அரைக்கோளம் (வட அமெரிக்கா, இலத்தீன் மற்றும் தென் அமெரிக்கா), இது நாம் வாழும் இடம், அமெரிக்காவின் எதிரிகளுக்கும் போட்டியாளர்களுக்கும் இந்த மேற்கு அரைக்கோளம் ஒரு செயல்பாட்டுத் தளமாக இருப்பதை நாம் அனுமதிக்கப் போவதில்லை” என்று பிரகடனம் செய்தார்.
குடியரசுக் கட்சியின் செனட்டர் ரொம் கொட்டன் ஒரு மோசமான குண்டனைப்போல், “டெல்டா படைகள் (Delta Force) உள்ளே சென்று நிக்கோலஸ் மதுரோவைப் பிடித்தபோது அவர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் எங்கும் காணப்படவில்லை. உண்மையில், கடந்த ஜூன் மாதம் ஈரானில் சீனா மற்றும் ரஷ்யாவின் விஷயத்தில் நீங்கள் பார்த்த அதேதான் இதுவும். நாம் ஈரானைத் தாக்கினோம். சீனா மற்றும் ரஷ்யா எதுவும் செய்யவில்லை. அவர்கள் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அமெரிக்கா இன்னும் உலகின் மேலாதிக்கம் செலுத்தும் வல்லரசாகவே இருக்கிறது என்பதற்கு இது ஒரு நினைவூட்டல்” என்று குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட தாக்குதலுக்குப் பிந்தைய நிகழ்வுகள், இந்த மோதல் ஒரு விரிவான போராக உருவெடுத்து வருவதைத் தெளிவுபடுத்தியுள்ளன. இது ஒரு போர் அல்ல, வெறும் “சட்ட அமலாக்க நடவடிக்கை” (law enforcement operation) என்று ABC-யின் “இந்த வார” நிகழ்ச்சியில் ரூபியோ மீண்டும் கூறியது முற்றிலும் கேலிக்கூத்தாகும்.
இந்தத் தாக்குதலில் எண்பது வெனிசுவேலா மக்கள் —படையினர்கள் மற்றும் பொதுமக்கள்— கொல்லப்பட்டுள்ளனர். வெனிசுவேலாவின் மிகப்பெரிய இராணுவத் தளத்திலுள்ள குறைந்தது ஐந்து கட்டிடங்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன. அமெரிக்கப் போர்க்கப்பல்கள் அந்த நாட்டின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளன. ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் ஜனாதிபதி கடத்தப்பட்டு அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், ட்ரம்ப் நிர்வாகம் இப்போது படுகொலைகள், நிலப்பகுதிகளை இணைத்தல் மற்றும் பல கண்டங்களில் மேலதிக இராணுவத் தாக்குதல்கள் என்று பகிரங்கமாக அச்சுறுத்தி வருகிறது.
இந்தச் செயல்கள் முற்றிலும் சட்டவிரோதமானவை. வெனிசுவேலா மீதான இராணுவத் தாக்குதல், ஐநா சாசனத்தின் பிரிவு 2(4)-ஐ மீறுகிறது. இது, “எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதை” தடை செய்கிறது. ஐநா பொதுச் சபைத் தீர்மானம் 3314-ன் கீழ், கடற்படை முற்றுகையானது ஒரு ஆக்கிரமிப்புச் செயலாகும். இது, “மற்றொரு நாட்டின் ஆயுதப் படைகளால் ஒரு நாட்டின் துறைமுகங்கள் அல்லது கடற்கரைகளை முற்றுகையிடுவது” ஆக்கிரமிப்பாகும் என்று அதன் பட்டியலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவது என்பது, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் “கொள்ளையடித்தல்” (pillage) என்பதாகும். இந்தச் செயல்கள் எதுவுமே ஐ.நா பாதுகாப்பு சபையால் அங்கீகரிக்கப்படவில்லை. மேலும், இவை தற்காப்புக்கான பிரிவு 51-ன் (Article 51) தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை. ஏனெனில், அந்தப் பிரிவு ஒரு உண்மையான ஆயுதத் தாக்குதல் நடந்திருந்தால் மட்டுமே தற்காப்பு நடவடிக்கையை அனுமதிக்கிறது.
வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்த குற்றவியல் ஆக்கிரமிப்புப் போருக்கு ஜனநாயகக் கட்சி எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸிலுள்ள ஜனநாயகக் கட்சியினர், இந்த தாக்குதலுக்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் நியாயங்களை ஏற்றுக்கொண்ட அதே வேளையில், நடைமுறை சார்ந்த புகார்களை மட்டுமே முன்வைத்துள்ளனர்.
ஜனநாயகக் கட்சியின், செனட்சபை சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர் கூறுகையில்: “நான் தெளிவாகச் சொல்கிறேன், மதுரோ ஒரு சட்டவிரோதமான சர்வாதிகாரி,” என்று அறிவித்தார். ஆனால், “அடுத்தது என்ன என்பதற்கான நம்பகமான திட்டம் இல்லாமல்” மற்றும் காங்கிரஸிற்கு போதுமான விளக்கங்கள் அளிக்கப்படாமல் இந்தப் போர் தொடங்கப்பட்டது என்று மட்டுமே அவர் குறை கூறினார்.
ஜனநாயகக் கட்சியின் மக்களவை சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஸும் அதே பாணியைப் பின்பற்றி, “மதுரோ ஒரு கெட்டவன் என்பதையும், எமது இராணுவம் முற்றிலும் வியக்கத்தக்கது என்பதையும் ஒட்டுமொத்தமாக ஒப்புக்கொள்ளும் ஒரு உற்சாகமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்” என்று அறிவித்தார். மதுரோ “அரசாங்கத்தின் சட்டபூர்வமான தலைவர் அல்ல” என்று ஜெஃப்ரிஸ் அறிவித்தார். இந்த தாக்குதலுக்கான நிர்வாகத்தின் மோசடியான முன்மாதிரியை முழுமையாக ஜெப்ரீஸ் ஏற்றுக்கொள்கிறார். மேலும், “காங்கிரஸுக்கு முறையாக அறிவிக்க” தவறியதற்காக மட்டுமே ட்ரம்ப்பை விமர்சித்தார்.
இந்த யுத்தத்தை எதிர்ப்பதற்கு தொழிலாள வர்க்கம் ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவையும் நம்பக் கூடாது. ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அமெரிக்கா, வெனிசுவேலா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களை சுயாதீனமான அணிதிரட்டுவதன் மூலம், கீழிருந்துதான் எதிர்ப்புகள் வர வேண்டும்.
