மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஒரு தரம் தாழ்ந்த போலி சட்ட நாடகத்தில், கடத்தப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை, ட்ரம்ப் நிர்வாகம் திங்கட்கிழமை அன்று மன்ஹாட்டனில் உள்ள மத்திய கூட்டாட்சி நீதிமன்றத்தில் (federal court) வலுக்கட்டாயமாக ஆஜர்படுத்தியது.
தனது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு மதுரோவிடம் கேட்கப்பட்டபோது, அவர்: “எனது பெயர் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மோரோஸ். நான் வெனிசுவேலா குடியரசின் ஜனாதிபதி. ஜனவரி 3-ம் தேதி முதல் நான் இங்கே கடத்தி வைக்கப்பட்டுள்ளேன்” என்று அறிவித்தார்.
அவர் சில வார்த்தைகளை மட்டுமே பேசிய நிலையில், 92 வயதான நீதிபதி ஆல்வின் கே. ஹெல்லர்ஸ்டைன் அவரைத் தடுத்தார். “இவை அனைத்தையும் பற்றிப் பேசுவதற்கு ஒரு நேரமும் இடமும் வரும்,” என்று அவர் கோபத்துடன் கூறினார்.
அமெரிக்க துணை மார்ஷல்கள் அவரை நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் சென்றபோது, மதுரோ ஸ்பானிய மொழியில்: “நான் கடத்தப்பட்ட ஒரு ஜனாதிபதி. நான் ஒரு போர்க்கைதி” என்று முழங்கினார்.
இந்த விசாரணை 35 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சிற்காக முன்னர் வாதிட்ட தற்காப்பு வழக்கறிஞர் பாரி போலாக், தனது வாடிக்கையாளரின் “இராணுவக் கடத்தலின்” சட்டப்பூர்வ தன்மையை எதிர்த்துப் போராடப் போவதாக அறிவித்தார். மதுரோ “ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் ஜனாதிபதி, அவருக்குரிய சலுகைகளைப் பெற அவருக்கு உரிமை உண்டு” என்று அவர் கூறினார்.
கடத்தப்பட்டபோது சிலியா புளோரஸ் மீது ஏவப்பட்ட வன்முறையின் வடுக்கள் அவரிடம் தென்பட்டன. டெலிகிராப் இதழ், புளோரஸின் “முகத்தில் காயங்கள் தெரிந்தன —அவரது நெற்றியில் ஒரு கோல்ஃப் பந்து அளவிலான வீக்கம் இருந்தது— சிவந்த கன்னங்கள் மற்றும் அவரது வலது கண்ணுக்கு மேல் ஒரு தழும்பு காணப்பட்டது” என்று செய்தி வெளியிட்டுள்ளது. அவரது வழக்கறிஞர் மார்க் டோனெல்லி, கடத்தலின் போது அவருக்கு “கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் அவரது விலா எலும்புகள் உடைந்திருக்கின்றனவா என்பதைக் கண்டறிய எக்ஸ்-ரே எடுக்க அனுமதிக்குமாறு நீதிபதியிடம் கோரினார்.
சங்கிலியால் பிணைக்கப்பட்ட மற்றும் கலைந்த தோற்றத்தில் இருக்கும் மதுரோவின் புகைப்படங்கள் அவரை அவமானப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது, சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு போர்க்குற்றமாகும். ஏனெனில், இது “தனிநபர் கண்ணியத்திற்கு எதிரான அத்துமீறல்கள், குறிப்பாக அவமானப்படுத்துதல் மற்றும் தரம் தாழ்ந்த முறையில் நடத்துதல்” என்ற தடையின் கீழ் வருகிறது.
மதுரோ ஆஜரான மன்ஹாட்டன் மத்திய கூட்டாட்சி நீதிமன்றம் தான், 2019-ல் ட்ரம்ப்பின் நெருங்கிய கூட்டாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்ட இடமாகும். எப்ஸ்டீன் ஆகஸ்ட் 10, 2019 அன்று சிறையில் கொல்லப்பட்டார். ஆனால், ட்ரம்ப் அரசு அதை தற்கொலை என்று அழைக்கிறது.
மதுரோவும் அவரது மனைவியும் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் (Metropolitan Detention Center) வைக்கப்பட்டுள்ளனர். இதே சிறையில் தான் முன்னாள் ஹோண்டுராஸ் அதிபர் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ் வைக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவிற்குள் 400 டன் கோகோயின் கடத்தியதாக அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட போதிலும், ட்ரம்ப் சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு மன்னிப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரோவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவராலும் நம்பப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. போதைப்பொருள் கடத்தியதற்காக மதுரோ கடத்தப்படவில்லை. அவரது நாடு உலகின் மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புகளைக் —303 பில்லியன் பீப்பாய்கள்— கொண்டிருப்பதாலும், அந்தப் பெரும் வளத்தை குண்டர் ட்ரம்ப் விரும்புவதாலுமே அவர் கடத்தப்பட்டார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப், “உலகின் மிகப்பெரிய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை அங்கு அனுப்பி, பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்து... நம் நாட்டிற்காகப் பணம் ஈட்டத் தொடங்கப்போகிறோம்” என்று பகிரங்கமாகவே கூறினார்.
வெனிசுவேலா மீதான இந்தத் தாக்குதலுக்கு முன்பே, அமெரிக்க பாராளுமன்றத்திற்கோ அல்லது அமெரிக்க மக்களுக்கோ தெரிவிக்காமல், எண்ணெய் நிறுவனங்களுக்கு ட்ரம்ப் தகவல் கொடுத்ததாக தி ஹில் பத்திரிகை திங்கட்கிழமை செய்தி வெளியிட்டது. “தாக்குதலுக்கு முன்னதாக அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இது குறித்து இரகசியத் தகவல் கொடுத்தீர்களா” என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்கள் ஜனாதிபதியிடம் கேட்டனர்.
அதற்கு “ட்ரம்ப் தலையசைத்து, இந்த நடவடிக்கைக்கு ‘முன்பும் பின்பும்’ அந்த நிறுவனங்களுடன் பேசியதாகக்” கூறினார். “அவர்கள் அங்கு செல்ல விரும்புகிறார்கள், வெனிசுவேலா மக்களுக்காக அவர்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்வார்கள், மேலும் அவர்கள் நம்மைச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்” என்று ட்ரம்ப் கூறினார்.
மதுரோ கடத்தப்பட்ட பிறகு திங்கட்கிழமை பதவியேற்ற வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்கேஸிடம் ட்ரம்ப் நிர்வாகம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. பொலிட்டிகோ செய்தியின்படி, “அமெரிக்காவின் எதிரி நாடுகளுக்கு எண்ணெய் விற்பதை நிறுத்துமாறு” ரோட்ரிக்கேஸை அமெரிக்க அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அந்த நிர்வாகத்தின் உள் விவாதங்களை அறிந்த ஒரு நபர் மற்றும் நிலைமையை நன்கு அறிந்த அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தி அட்லாண்டிக் இதழுக்கு அளித்த நேர்காணலில் ட்ரம்ப், “அவர் சரியானதைச் செய்யாவிட்டால், அவர் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும், அது ஒருவேளை மதுரோ கொடுத்த விலையை விட அதிகமாக இருக்கலாம்” என்று ரோட்ரிக்கேஸை மிரட்டினார்.
ஆரம்பத்தில் மதுரோ கடத்தப்பட்டதுக்கு எதிராக ஆவேசமாகப் பேசிய ரோட்ரிக்கேஸ், “இந்த நாட்டில் ஒரே ஒரு ஜனாதிபதி மட்டுமே இருக்கிறார், அவரது பெயர் நிக்கோலஸ் மதுரோ” என்று அறிவித்ததுடன், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை “காட்டுமிராண்டித்தனமானது” என்று சனிக்கிழமையன்று கண்டனம் செய்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமைக்குள் அவர் மிகவும் இணக்கமான தொனிக்கு மாறினார். வெனிசுவேலா “அமைதியான சகவாழ்வை” விரும்புவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதுடன், “ஒத்துழைப்புக்கான நிகழ்ச்சி நிரலில் எங்களுடன் இணைந்து செயல்படுமாறு” அமெரிக்க அரசாங்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை, “இது எமது அரைக்கோளம்” என்று ட்ரம்ப் முழங்கும் ஒரு படத்தைப் பதிவிட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு இலத்தீன் அமெரிக்காவையும் (கனடாவுடன் சேர்த்து) தனது சொத்தாகக் கோருகிறது. மேலும், தங்களை எதிர்க்கும் எவரையும் கடத்தவோ அல்லது கொலை செய்யவோ தயங்காது என்பதைத் தெளிவுபடுத்துவதன் மூலம், அப்பட்டமான காலனித்துவ காலத்திற்கு திரும்புவதை அமெரிக்கா உறுதிப்படுத்துகிறது.
மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் மதுரோ தனது நிரபராதித் தன்மையை அறிவித்துக் கொண்டிருந்தபோது, அதற்கு சில மைல்கள் வடக்கே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் கூடியது. அங்கு ட்ரம்ப் நிர்வாகம் கட்டவிழ்த்து விட்டுள்ள விபரீதத்தின் அளவு தெளிவாகத் தெரிந்தது. இது, அமெரிக்க குற்றவியல் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கேலிக்கூத்து மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த உலகையும் குறிவைக்கும் ஒரு போர் நடவடிக்கையாகும்.
ஐ.நா-வில் ஒரு நெருக்கடியான சூழல் நிலவியது. அடுத்த நாடு எது? ஐரோப்பிய ஒன்றியமா? ரஷ்யாவா? கனடாவா? கொலம்பியாவா? கியூபாவா? சீனாவா? கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ட்ரம்ப் குறைந்தது ஆறு ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார்.
வெனிசுவேலாவின் ஐ.நா. தூதர் சாமுவேல் மொன்கடா, அமெரிக்கா தனது நாட்டின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் நோக்கில் வெனிசுவேலாவைத் தாக்குவதாகக் குற்றம் சாட்டினார். “இது காலனித்துவம் மற்றும் நவ-காலனித்துவத்தின் மிக மோசமான நடைமுறைகளை மீண்டும் கொண்டுவரும் ஒரு நடவடிக்கையாகும்” என்றார்.
கொலம்பியாவின் பிரதிநிதி கூறுகையில், “எந்தச் சூழலிலும், எந்தக் காரணத்திற்காகவும், ஓர் ஆக்கிரமிப்புச் செயலைச் செய்வதற்கு ஒருதலைப்பட்சமாகப் பலத்தைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது. இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் மிகக் கடுமையான மீறலாகும்...” என்று குறிப்பிட்டார்.
சீனப் பிரதிநிதி கூறுகையில்: “அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான, சட்டவிரோதமான மற்றும் மிரட்டல் போக்கிலான செயல்களால் சீனா பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், அவற்றை வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் விளக்கமளிக்க அழைக்கப்பட்ட பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ், இந்தத் தாக்குதலின் உள்ளடக்கத்தை விளக்கினார். “கடந்த ஆண்டில் மட்டும், அமெரிக்கா ஏழு நாடுகளில் குண்டுவீச்சு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இவற்றில் எதற்கும் பாதுகாப்பு சபையின் அனுமதி பெறப்படவில்லை. மேலும், ஐ.நா. சாசனத்தின் கீழ் சட்டப்பூர்வமான தற்காப்பு நடவடிக்கையாகவும் இவை மேற்கொள்ளப்படவில்லை,” என்று அவர் கூறினார். “ஈரான், ஈராக், நைஜீரியா, சோமாலியா, சிரியா, ஏமன் மற்றும் இப்போது வெனிசுவேலா ஆகிய நாடுகள் இவ்வாறு குறிவைக்கப்பட்டுள்ளன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வெனிசுவேலாவிற்கு எதிராக அமெரிக்கா நடத்திய ஆட்சி மாற்ற நடவடிக்கைகளின் வரலாற்றை ஜெஃப்ரி சாக்ஸ் வரிசைப்படுத்தினார்: 2002-ல் அமெரிக்க ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, 2014-ல் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு நிதியுதவி அளித்தது, எண்ணெய் உற்பத்தியை 75 சதவீதமும், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) 62 சதவீதமும் வீழ்ச்சியடையச் செய்த கடுமையான பொருளாதாரத் தடைகள், 2019-ல் ஜுவான் குவைடோவை “இடைக்கால ஜனாதிபதியாக” ஒருதலைப்பட்சமாக அங்கீகரித்தது மற்றும் வெனிசுவேலாவின் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான அரசுச் சொத்துக்களைக் கைப்பற்றியது ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.
“பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் சர்வதேச சட்டத்தைப் பாதுகாக்கவும், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சாசனத்தைப் பாதுகாக்கவும் அழைக்கப்பட்டுள்ளனர்” என்று அறிவித்த சாக்ஸ், “நிக்கோலஸ் மதுரோவுக்கு தீர்ப்பளிக்க சபையின் உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.
ஆயினும்கூட, உலகெங்கிலும் இருந்து கண்டனங்கள் குவிந்த போதிலும், அமெரிக்க ஊடகங்கள் இந்த ஏகாதிபத்திய கொள்ளைச் செயலைக் கொண்டாடின. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதழின் தலையங்கம், “வெனிசுவேலாவில் ‘சர்வதேச சட்டம்’ எனும் மாயை” என்று சாடியதுடன், “தறுதலை அரசுகள் (Rogue regimes) இப்போது சர்வதேச சட்டத்தைத் தங்களின் சட்டமீறல்களை மறைக்கும் ஒரு கேடயமாகப் பயன்படுத்துகின்றன” என்று அறிவித்தது. கட்டுரையின் முடிவில் அந்த இதழ், “அமெரிக்காவின் துணிச்சலும் இராணுவ வலிமையும் வெளிப்படுவது, சுதந்திர உலகைப் பாதுகாக்க ஆயிரம் ஐ.நா. தீர்மானங்களை விட மேலானதாக அமையும்” என்ற குறிப்பிட்டது.
வாஷிங்டன் போஸ்ட் இதழின் தலையங்கமும் இதேபோல் வெட்கமின்றி எழுதியது. அதன் தலைப்பு, “மதுரோவின் கைது சட்ட ரீதியான கட்டுக்கதைகளை அம்பலப்படுத்துகிறது” என்று அறிவித்ததுடன், ட்ரம்ப் “நிர்வாகம் ஒரு வெளியுறவுக் கொள்கை நோக்கத்திற்காக ஒரு சட்ட ரீதியான காரணத்தை உருவாக்கியுள்ளது. அது பரவாயில்லை” என்று ஒரு துணைத் தலைப்பையும் சேர்த்திருந்தது. சர்வதேச சட்டம் என்பது ஒரு “சட்ட ரீதியான கட்டுக்கதை” என்று அந்த இதழ் பகிரங்கமாக அறிவித்தது.
இந்தத் தலையங்கங்கள், அமெரிக்கா நடத்தியது ஒரு குற்றம் என்பதற்கான வெளிப்படையான ஒப்புதல்கள் ஆகும். அத்தோடு அமெரிக்காவின் இராணுவ பலம், அமெரிக்காவை சட்டத்திற்கு மேலாக வைக்கிறது என்பதையும் இவை பறைசாற்றுகின்றன.
ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ், “சர்வதேச சட்டத்தின் விதிகள் மதிக்கப்படாதது குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன்” என்று தெரிவித்தார். ஆனால், இத்தகைய அறிக்கைகள் ட்ரம்ப்பின் உலகளாவிய இராணுவ வெறியாட்டத்தை நிறுத்திவிடப் போவதில்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சட்ட ஒழுங்கை உருவாக்கிய முதலாளித்துவ சக்திகள், இப்போது உலகை மீண்டும் ஒரு புதிய காலனித்துவ கூறு போடுதலுக்கு உட்படுத்தும் நோக்கில், அந்த சட்டங்களையே கிழித்தெறிந்து வருகின்றன. இதற்கு எதிரான எதிர்ப்பு கீழே இருந்து வர வேண்டும். அமெரிக்கா, வெனிசுவேலா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் ஏகாதிபத்திய போருக்கும், அதை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிராகச் சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே இதை முறியடிக்க முடியும்.
