அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இடைக்கால ஜனாதிபதி பணியவில்லையெனில், வெனிசுவேலா மீது இரண்டாவது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் அச்சுறுத்தல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்கேஸ் [AP Photo]

அமெரிக்க கமாண்டோக்களின் அதிரடித் தாக்குதல் மூலம் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதும் மதுரோவிற்கு பின்பு பதவியேற்ற இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்கேஸ் மீதும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாஃபியா பாணியிலான அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார்.

NBC செய்தி நிறுவனத்தின் கிறிஸ்டன் வெல்கருடனான தொலைபேசி நேர்காணல் மற்றும் கடந்த 48 மணிநேர ஊடக சந்திப்புகளில், புதிய இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்கேஸ் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு முழுமையாக கீழ்ப்படியவில்லை என்றால், வெனிசுவேலா மீது “இரண்டாவது தாக்குதல்” நடத்தப்படும் என்று ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

“அவர்கள் ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால், நாங்கள் இரண்டாவது முறை தாக்குதல் நடத்துவோம்,” என்று அவர் தற்பெருமையுடன் பீற்றிக் கொண்டார். ஆட்சி மாற்றம் மற்றும் 30 மில்லியன் மக்கள் (மூன்று கோடிகள்) வாழும் ஒரு நாட்டை அமெரிக்காவே “நிர்வகிப்பது” என்பது, “தற்போது உங்களிடம் இருப்பதை விட சிறந்தது” என்றும் அவர் அறிவித்தார். ஏற்கனவே அமெரிக்கப் படைகளை மீண்டும் அங்கு அனுப்ப வேண்டியிருக்கும் என்று தான் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

அச்சுறுத்தல்களை விடுத்துக்கொண்டே, அமெரிக்கா வெனிசுவேலாவுடன் “போரில் ஈடுபடவில்லை” என்றும், இந்த நடவடிக்கை “பாதுகாப்பு” மற்றும் “போதைப்பொருள் கடத்தல் தடுப்பு” ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு வரையறுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இருப்பினும், கடந்த சனிக்கிழமை காலை நடந்த நிகழ்வுகளின் அடிப்படை உண்மைகள் இந்தக் கூற்றுக்கள் ஒரு திட்டமிடப்பட்ட பொய் என்பதை அம்பலப்படுத்துகின்றன.

தலைநகர் காரகாஸ் (Caracas) மற்றும் வெனிசுவேலாவின் பல மாநிலங்கள் மீது ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல்கள், வெளிநாட்டு மண்ணில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதி கடத்தப்பட்டது, அவசரகால நிலை பிரகடனம் மற்றும் நாடு முழுவதும் ஆயுதப் படைகளைத் திரட்டியது ஆகியவை, சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் மற்றும் இது ஒரு போர்க் குற்றமாகும்.

ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் பிடித்து, விலங்கிட்டு அமெரிக்காவிற்கு பிடித்துச் சென்ற அமெரிக்கத் தாக்குதலால் உருவான தீவிர நெருக்கடிக்கு மத்தியில், முன்பு மதுரோவின் துணை ஜனாதிபதியாக இருந்த டெல்சி ரோட்ரிக்கேஸ், காரகாஸில் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த கடத்தல் சம்பவத்தை ஒரு “கொடூரம்” என்று ரோட்ரிக்கேஸ் கண்டித்தார் மற்றும் மதுரோவுக்கு தனது விசுவாசத்தை உறுதியளித்தார். அதே வேளையில், வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு சாத்தியமான “வணிகப் பங்காளியாக” அவரை சில வாரங்களுக்கு முன்பே வாஷிங்டன் அடையாளம் கண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஞாயிற்றுக்கிழமைக்குள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலதிக தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக தனது அரசாங்கம் அமெரிக்காவுடன் “பணிபுரிய” தயாராக இருப்பதாக அவர் பொதுமக்களிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த “ஒத்துழைப்புக்கு” ட்ரம்ப் மேலதிக அச்சுறுத்தல்களுடன் பதிலளித்துள்ளார். இதன் மூலம், எந்தவொரு தயக்கமும் அல்லது தேசிய இறையாண்மை குறித்த கோரிக்கைகளும், தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதன் மூலமே எதிர்கொள்ளப்படும் என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னதாக, மதுரோவுக்கு நேர்ந்ததை விட மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரோட்ரிக்கேஸை ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார். “அவர் சரியானதைச் செய்யாவிட்டால், அவர் ஒரு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும், அநேகமாக மதுரோவை விட பெரிய விலையாக அது இருக்கும்” என்று அவர் அறிவித்தார். இது, அமெரிக்க நாட்டின் தலைவரிடமிருந்து வந்த தெளிவான மரண அச்சுறுத்தலாகும். வெனிசுவேலா அதிகாரிகள் மதுரோவுக்கு “விசுவாசமாக இருந்தால்”, “அவர்களின் எதிர்காலம் மிகவும் மோசமாக இருக்கும், இது அவர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும்” என்று அவரது இதர கருத்துக்களிலும் இதே செய்தி வெளிப்பட்டது. அத்துடன், சாத்தியமான “இரண்டாவது தாக்குதல்” குறித்த குறிப்புகளையும் அவர் மீண்டும் மீண்டும் வழங்கினார்.

மதுரோ கடத்தப்பட்டதை ஒரு “கொடூரம்” என்று பகிரங்கமாகக் கண்டித்துள்ள ரோட்ரிக்கேஸ், ஜனாதிபதியை திருப்பி அனுப்பக் கோரி முறையீடுகளை விடுத்துள்ளார். அதே நேரத்தில், “இயல்புநிலைக்கு” அழைப்பு விடுத்த அவர், அமெரிக்காவின் கட்டளைகளைத் தான் பகிரங்கமாக எதிர்க்கப் போவதில்லை என்பதையும் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

காரகாஸ் மற்றும் சர்வதேச செய்தி நிறுவனங்களின் புதிய அறிக்கைகள், மதுரோ கடத்தப்படுவதற்கு முன்னதாக நடந்த அமெரிக்கத் தாக்குதலின் அளவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. கடந்த சனிக்கிழமை அதிகாலையில், தலைநகருக்கு மேலே குறைந்த உயரத்தில் விமானங்கள் பறந்ததாகவும், குறைந்தது ஏழு சக்திவாய்ந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், இராணுவ நிலைகள் அருகே புகைப் படலங்கள் தெரிந்ததாகவும், மேலும் நகரின் தெற்கே உள்ள ஒரு இராணுவத் தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

காரகாஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள மிராண்டா (Miranda), அராகுவா (Aragua) மற்றும் லா குவைரா (La Guaira) ஆகிய மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் இராணுவ நிலைகள் இரண்டையும் அமெரிக்கா தாக்கியுள்ளதாக வெனிசுவேலா அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தேசிய அவசரநிலை பிரகடனத்திற்கும், “தேசிய பாதுகாப்புத் திட்டங்களை” செயல்படுத்துவதற்கும் வழிவகுத்துள்ளது. இந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலானது, வெனிசுவேலாவின் கப்பல்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது பல மாதங்களாக அமெரிக்கா நடத்தி வரும் கடல்சார் தாக்குதல்களைத் தொடர்ந்து வந்துள்ளது. முக்கியமான அறிக்கைகளின்படி, அத்தாக்குதல்கள் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றுள்ளன. இந்த சமீபத்திய நடவடிக்கையானது, ஒரு தொடர்ச்சியான, தீவிரமடைந்து வரும் போரின் ஒரு பகுதியே தவிர, ஒருமுறை மட்டுமே நடத்தப்பட்ட “பொலிஸ் நடவடிக்கை” அல்ல என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அசோசியேட்டட் பிரஸ் (AP) அறிக்கையின்படி, நிக்கோலஸ் மதுரோவைப் பிடிப்பதற்கான அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் குறைந்தது 24 வெனிசுவேலா பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக வெனிசுவேலா இராணுவம் திங்கள்கிழமை அறிவித்தது. இதன் மூலம் உத்தியோகபூர்வமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 56 ஆக உயர்ந்துள்ளது.

24 வெனிசுவேலா பாதுகாப்பு அதிகாரிகளுடன் சேர்த்து, வெனிசுலாவேவில் பணியாற்றி வந்த 32 கியூபா இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக கியூபா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது கியூபாவில் இரண்டு நாட்கள் தேசிய துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் வெனிசுலாவேவில் மேலும் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாக AP செய்திகள் காட்டுகின்றன. ஆனால், அதன் எண்ணிக்கை எவ்வளவு என்பது உடனடியாகத் தெரியவில்லை. சனிக்கிழமை காரகாஸில் நடந்த தாக்குதலில் ஏழு அமெரிக்க படையினர்கள் காயமடைந்ததாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு மற்றும் துண்டுகளால் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர்களில் இருவர் இன்னும் குணமடைந்து வருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் AP-யிடம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை அன்று, வெனிசுவேலாவைக் கைப்பற்றுவது ஒரு இலாபகரமான வாய்ப்பைத் திறந்துவிடும் என்று ஆளும் உயரடுக்கிற்கு உறுதியளிக்க ட்ரம்ப் நகர்ந்தார். ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டிற்குள் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களைக் கவர்ந்திழுப்பதற்காக, வெனிசுவேலாவின் பாழடைந்த எண்ணெய் உள்கட்டமைப்பை “மீண்டும் கட்டியெழுப்பவும்” மற்றும் “மேம்படுத்தவும்” ஆகும் செலவுகளை அமெரிக்க அரசாங்கம் ஏற்க அல்லது உத்தரவாதம் அளிக்கத் தயாராக இருப்பதாக அவர் தற்பெருமையுடன் கூறினார்.

வெனிசுவேலாவின் தேசியமயமாக்கப்பட்ட எண்ணெய் வயல்களில் பெரும் முதலீடுகளைச் செய்தால், பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு “எங்களிடமிருந்தோ அல்லது வருவாய் மூலமாகவோ இழப்பீடு வழங்கப்படும்” என்று அவர் NBC செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அவர்கள் “மிகச் சிறப்பாகச் செயல்படுவார்கள்” என்று உறுதியளித்த அவர், வெனிசுவேலாவை அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு உற்பத்தியாளராக மாற்றுவது எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளைக் குறைக்கும் என்றும் உரிமை கோரினார்.

அமெரிக்காவின் பிரமாண்டமான எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைப் பாதுகாப்பதற்காக, வெனிசுவேலா எண்ணெய் தொழில்துறை உள்கட்டமைப்பில் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களை முதலீடு செய்ய வெள்ளை மாளிகை உத்தரவாதம் அளிக்கத் தயாராகி வருகிறது. அதே நேரத்தில், மருத்துவ உதவி, துணை ஊட்டச்சத்து உதவித் திட்டம் (SNAP) மற்றும் பெண்கள், குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு துணை ஊட்டச்சத்து திட்டம் (WIC) போன்ற பொதுநலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அது வெட்டிக் குறைத்து வருகிறது. இந்த உண்மை, இந்த ஏகாதிபத்திய நடவடிக்கையின் பின்னால் இருக்கும் நிதி நலன்களை வெளிப்படுத்துகிறது.

காரகாஸின் நிலவரப்படி, அமெரிக்காவின் குண்டுவீச்சு, மதுரோ கடத்தப்பட்டது மற்றும் அவசரகால நிலை பிரகடனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவுகள், முற்றுகையிடப்பட்ட ஒரு நகரத்தைப் போன்ற சூழலை உருவாக்கியுள்ளன. தலைநகரில் இருந்து வரும் அறிக்கைகள் மற்றும் காட்சிகள், மிராபுளோரஸ் (Miraflores) ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இராணுவத்தினர் மற்றும் கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதையும், மூலோபாய தளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வெட்டு நிலவுவதையும், குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்து குடியிருப்பாளர்கள் வெளியேறுவதையும் காட்டுகின்றன.

அரசாங்கம் தனது ஆதரவாளர்களை “தெருக்களுக்கு வருமாறு” அழைப்பு விடுத்துள்ளது. அதே நேரத்தில், “அனைத்து தேசிய பாதுகாப்புத் திட்டங்களையும்” செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இது ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் நிறுத்தி வைக்க அனுமதிக்கிறது.

முக்கிய இராணுவ நிலைகளுக்கு மேலே உள்ள வான்வெளியில் விமான எதிர்ப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மேலதிக அமெரிக்கத் தாக்குதல்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், தாக்குதல், ஆட்கடத்தல் மற்றும் மோசமான சமூக நிலைமைகளால் அதிகரித்து வரும் மக்கள் கோபத்தால் உருவாகும் போராட்டங்களை ஒடுக்குவதற்கும், வெனிசுவேலாவில் படைகள் மற்றும் பொலிசார் அணிதிரட்டப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வெனிசுவேலாவில் விரிவடைந்து வரும் இந்த நெருக்கடியானது —ஆப்கானிஸ்தான் முதல் ஈராக் வரையிலும், லிபியா முதல் சிரியா வரையிலும்— உலக சோசலிச வலைத் தளத்தால் விவரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்ட முந்தைய அமெரிக்க தலைமையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கைகளின் அதே பண்புகளை வெளிப்படுத்துகிறது. அவை எப்போதும் இராணுவ ஆக்கிரமிப்பையும், உள்நாட்டுப் போர்களைத் தூண்டுவதையும் இணைத்தே மேற்கொள்கின்றன.

மதுரோவை வலுக்கட்டாயமாக அகற்றியது, ரோட்ரிக்கேஸிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டி ஆகியவை, தற்செயலான நிகழ்வுகள் அல்ல. மாறாக, இது ஒரு புதுப்பிக்கப்பட்ட ‘மன்ரோ கோட்பாட்டின்’ (Monroe Doctrine) கீழ் மேற்கு அரைக்கோளத்தில் (வட அமெரிக்கா, இலத்தீன் மற்றும் தென் அமெரிக்கா) தனது மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுக்கும் முயற்சியின் வெளிப்பாடாகும்.

கடுமையான வறுமை, பணவீக்கம் மற்றும் ஆழமான சமூக சமத்துவமின்மை நிலவும் சூழலில், இந்த புதிய காலனித்துவ ஆக்கிரமிப்பானது வெனிசுவேலாவுக்குள்ளும், இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் மற்றும் அமெரிக்காவிற்குள்ளும் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும்.

Loading