முன்னோக்கு

ட்ரம்பின் ஜனவரி 6 ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடந்து 5 ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜனவரி 6, 2021 அன்று, வாஷிங்டனில் உள்ள கேபிடலில் (நாடாளுமன்ற கட்டிடம்) உள்ள போலீஸ் தடையை உடைத்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு விசுவாசமான வன்முறை கிளர்ச்சியாளர்கள் நுழைய முயல்கின்றனர். [AP Photo/Julio Cortez]

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூலமாக வாஷிங்டனுக்கு வரவழைக்கப்பட்ட பாசிஸ்டுக்கள் தலைமயிலான கும்பல், 2021 ஜனவரி 6 அன்று அமெரிக்க கேபிடல் (நாடாளுமன்ற) கட்டிடத்தை முற்றுகையிட்ட ஒரு நாளைக்குப் பிறகு, இந்தத் தாக்குதல் “அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை” என்று உலக சோசலிச வலைத்தளம் (WSWS) எழுதியது.

அமெரிக்க ஜனநாயகத்தின் வெல்ல முடியாத தன்மை மற்றும் காலமற்ற நிலை குறித்த பழமையான புகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வெற்று அரசியல் கட்டுக்கதையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க பாசிசத்தின் எழுச்சி குறித்து சின்க்ளையர் லூயிஸ் எழுதிய புகழ்பெற்ற புனைகதை நூலின் தலைப்பான “இது இங்கே நடக்காது” என்ற பிரபலமான வாசகம், வரலாற்றால் முறியடிக்கப்பட்டுள்ளது. ஒரு பாசிச ஆட்சிக் கவிழ்ப்பு இங்கே நடக்க முடியும் என்பது மட்டுமல்ல; அது 2021 ஜனவரி 6 மதிய வேளையில் இங்கேயே நடந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்தவற்றிலிருந்து அந்த மதிப்பீட்டின் சரியான தன்மை தெளிவாகிறது.

2021 ஜனவரி 6 அன்று, ஜோ பைடென் மற்றும் கமலா ஹாரிஸின் வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் வாக்காளர் குழுவினரின் (Electoral College) வாக்குகளுக்குச் சான்றளிக்க காங்கிரஸ் கூடியது. ஒரு அரசியலமைப்பு ரீதியான சடங்காக இருக்க வேண்டிய அந்த நிகழ்வு, தேர்தலை வன்முறை மூலம் கவிழ்ப்பதற்கான ஒரு திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் இலக்காக மாறியது.

ட்ரம்பின் உத்தரவின் பேரில் வெள்ளை மாளிகையிலிருந்து அணிவகுத்து வந்த ஆயிரக்கணக்கானோர் அடங்கிய கும்பல், பலவீனமாக இருந்த பொலிசாரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு கேபிடல் கட்டிடத்தைத் தாக்கியது. ஒழுங்கமைக்கப்பட்ட கூலிப் படைகள் —முக்கியமாக, பெருமிதம் கொள்ளும் இளையோர் அமைப்பினர் (Proud Boys) மற்றும் சத்தியத்தைக் காக்கும் அமைப்பினர் (Oath Keepers)— கேபிடல் கட்டிடத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து தாக்குதலை தொடங்கின. இந்த சம்பவத்துக்கு பின்பு நடந்த விசாரணைகள், இதில் ஈடுபட்ட முன்னணி நபர்கள், தேர்தல் சான்றிதழைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட தேசத்துரோக சதி மற்றும் தொடர்புடைய குற்றங்களில் குற்றவாளிகள் என்று உறுதிப்படுத்தின. இந்த வன்முறை கடுமையானதாகவும் நீடித்ததாகவும் இருந்தது: இந்தத் தாக்குதலின் போது 140-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

அரசியலமைப்பை தூக்கியெறிவதும், தேர்தல் முடிவுகளை ரத்து செய்வதுமே இதன் அரசியல் நோக்கமாக இருந்தது. கேபிடல் கட்டிடத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த தூக்குமேடை வெறும் ஒரு பயங்கரமான காட்சிப்பொருள் அல்ல; அது அவர்களின் உள்நோக்கத்தின் பிரகடனம் ஆகும். ட்ரம்பின் சொந்த துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் கூலிப் படையினரிடம் இருந்து பிடிபடுவதிலிருந்து நூலிழையில் தப்பினர். முக்கிய அதிகாரிகள் பிடிபட்டிருந்தால், அவர்களைக் கொலை செய்வதன் மூலமோ அல்லது பிணைக் கைதிகளாகப் பிடிப்பதன் மூலமோ, சரணடைய வற்புறுத்தி, வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவை வலுக்கட்டாயமாகத் திணிக்கத் தேவையான செல்வாக்கை இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி பெற்றிருக்கும்.

ஜனவரி 6 என்பது, ஒரு தன்னிச்சையான வெடிப்பு அல்ல. இது பல மாதங்களாக உருவாக்கப்பட்ட ஒரு சதியின் உச்சக்கட்டம் மற்றும் பதவியேற்பு விழா நெருங்க நெருங்க வேகமெடுத்த ஒன்றாகும். அதன் பிறகு உடனடியாக வெளியிடப்பட்ட பிரதிநிதிகள் சபையின் பதவி நீக்கக் குழு அறிக்கை, ஜனவரி 6 ஆம் தேதிக்கு முந்தைய மாதங்களில் ட்ரம்பின் நடத்தையை ஆவணப்படுத்தியது. அதில் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கவும், தனது ஆதரவாளர்களை வாஷிங்டனுக்கு வரவழைக்கவும், அவர்களை கேபிடல் நோக்கி வழிநடத்தவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஆவணப்படுத்தப்பட்டன.

இந்தச் சதித்திட்டத்தின் மையப்புள்ளியாக ட்ரம்ப் இருந்தார். சான்றளிக்கப்பட்ட முடிவுகளை மாற்றுமாறு மாநில அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களை அவர் வற்புறுத்த முயன்றார். குறிப்பாக, ஜோர்ஜியா மாநிலத்தில், தேர்தல் முடிவை மாற்றியமைக்கத் தேவையான வாக்குகளை “கண்டுபிடிக்குமாறு” அவர் மாநிலச் செயலாளருக்கு அழுத்தம் கொடுத்தது மிகவும் மோசமான ஒன்றாகும். இந்த முயற்சிகள் தோல்வியடைந்தபோது, அந்தச் சதித்திட்டம் ஜனவரி 6-ம் தேதியை நோக்கியே ஒருங்கிணக்கப்பட்டது: அதாவது தேர்தல் வாக்காளர் குழு சான்றளிப்பதைத் தடுப்பது, நிறுவன ரீதியான முடக்கத்தை உருவாக்குவது மற்றும் அதிகார மாற்றத்தைத் தடுக்க வன்முறையைப் பயன்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அது செயல்படுத்தப்பட்டது.

ஜனவரி 6-ன் மிகவும் கண்டிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடந்தது என்பது மட்டுமல்ல, அது வெற்றிக்கு மிக அருகில் சென்றதும், அதற்கு ஜனநாயகக் கட்சியிடமிருந்து எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் எதிர்ப்பும் கிளம்பாததுமே ஆகும்.

தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அணிதிரளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. செனட்டர்களும் பிரதிநிதிகளும் தப்பி ஓடி ஒளிந்து கொண்டனர். மக்கள் போராட்டத்திற்கான எந்த வேண்டுகோளும் விடுக்கப்படவில்லை. தொழிலாள வர்க்கத்தை நாடு தழுவிய அளவில் அணிதிரட்ட எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. மேலும், பொதுமக்களின் ஆத்திரத்தை ஒரு தீவிரமான எதிர்ப்பாக மாற்ற எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் போது பைடெனின் எதிர்வினை என்பது மக்களை அழைப்பதாக இருக்கவில்லை. மாறாக, இந்தச் சதித்திட்டத்தின் சூத்திரதாரியான ட்ரம்ப்தான், தனது படைகளைத் திரும்பப் பெறுமாறு தேசியத் தொலைக்காட்சியில் வேண்டுகோள் விடுத்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான ஒரு மக்கள் எழுச்சி, மிக விரைவாக ஒரு பரந்த சமூக வெடிப்பின் வடிவத்தை எடுக்கும் என்று ஜனநாயகக் கட்சியினர் அஞ்சினர். அதாவது, அவர்களின் கட்டுப்பாட்டை மீறி, அந்த எதிர்ப்பு ஒரு நேரடி முதலாளித்துவ எதிர்ப்புத் தன்மையைப் பெற்றுவிடுமோ என்று அவர்கள் பயந்தனர். அவர்களின் “ஜனநாயகப் பாதுகாப்பு” என்பது ஆரம்பத்திலிருந்தே கீழிருந்து வரும் மக்கள் போராட்டத்தை அங்கீகரித்துவிடுவோமோ என்ற பயத்தால் முடக்கப்பட்டிருந்தது.

ஜனநாயக நிறுவனங்கள் “வலிமையானவை” என நிரூபிக்கப்பட்டதால் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடையவில்லை. சதிகாரர்களின் அனுபவமின்மை, தளவாடக் குறைபாடுகள் மற்றும் செயல்பாட்டு ரீதியான ஒருங்கின்மை, விரைவாக தீர்க்கமான பலத்தைப் பெற இயலாமை ஆகியவற்றால் அது குறுகியகால அளவில் தோல்வியடைந்தது.

வாஷிங்டன் டி.சி. தேசியக் காவல் படையின் (National Guard) வருகை பல மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டது. சாட்சியங்களும் ஆவணங்களும் தேசியக் காவல் படை கேபிடல் கட்டிடத்திற்கு வருவதற்கு முன்பு சுமார் 3 மணி நேரம் 19 நிமிடங்கள் இடைவெளி இருந்ததை விவரிக்கின்றன. அந்தத் தாமதமானது, ஆட்சி கவிழ்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான மிகச் சரியான கால அவகாசத்தை வழங்கியது.

சூழல் சற்று மாறியிருந்தாலும் இதன் முடிவு வேறாக இருந்திருக்கக் கூடும். அந்தக் கும்பல் ஒரு முக்கியமான ஜனநாயகக் கட்சி செனட்டரையோ அல்லது பிரதிநிதியையோ பிணைக்கைதியாகப் பிடித்திருந்தால்கூட, “ஸ்திரத்தன்மை” மற்றும் “தேசிய ஒற்றுமை” என்ற பெயரில் —பயங்கரமான சூழலுக்கு மத்தியில்— ஜனநாயகக் கட்சி மிக விரைவாக பேச்சுவார்த்தைக்கு இறங்கியிருக்கும். தாக்குதலின் போது ஜனநாயகக் கட்சியினரின் செயல்பாடானது, சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு உண்மையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான விருப்பமோ அல்லது திட்டமோ அவர்களிடம் இல்லை என்பதை நிரூபித்தது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதை விட, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய முன்னுரிமைகளுக்காக, குறிப்பாக ரஷ்யாவுடனான மோதலை தீவிரப்படுத்துவதற்காக, “இரு கட்சி” (bipartisan) ஒற்றுமையைப் பேணுவதே ஜனநாயகக் கட்சிக்கு மிக முக்கியமானதாக இருந்தது.

ஜனவரி 6 ஆட்சி கவிழ்ப்பின் உடனடி விளைவுகளுக்கு மத்தியிலும், பைடெனும் ஜனநாயகக் கட்சித் தலைவர்களும் ஒரு “வலிமையான குடியரசுக் கட்சி” தேவை என்பதில் பிடிவாதமாக இருந்தனர். இது ட்ரம்பிற்கு அதிகாரத்தை வழங்கிய அதே அரசியல் கருவியை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான அவர்களின் உறுதியையே காட்டியது. மக்களின் எந்தவொரு சுதந்திரமான அரசியல் அணிதிரட்டலையும் ஒடுக்கும் அதே வேளையில், வெளியுறவுக் கொள்கை, போர் நிதி ஒதுக்கீடு மற்றும் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் குடியரசுக் கட்சியின் ஒத்துழைப்பைப் பெறுவதே ஜனநாயகக் கட்சியின் ஆட்சியின் நோக்கமாக இருந்தது.

உக்ரேன் போரின் பதிவுகள் இந்த வர்க்க தர்க்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ரஷ்யாவிற்கு எதிரான பினாமிப் போரை முன்னெடுக்க, பைடென் நிர்வாகம் மீண்டும் மீண்டும் பெருமளவிலான நிதிப் பொதிகளைக் கோரியதுடன், “இரு கட்சி” வழிமுறைகளையே நம்பியிருந்தது. இது முக்கியமாக, குறிப்பிடத்தக்களவில் குடியரசுக் கட்சி ஆதரவுடன் உக்ரேனுக்கான பெரிய உதவி ஒதுக்கீடுகள் காங்கிரஸில் நிறைவேற்றப்படுவதில் முடிந்தது. நடைமுறையில், உள்நாட்டில் “ஜனநாயகத்தைப் பாதுகாப்பது” என்பது வெளிநாடுகளில் நடக்கும் போரின் தேவைகளுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டது.

2024 தேர்தல் பிரச்சாரத்தின் போதும், அதன் பின்னரும் ஜனநாயகக் கட்சியினர் நடந்துகொண்ட விதம் அவர்களின் வீழ்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. அந்தப் பிரச்சாரத்தின் போது, ட்ரம்ப் ஒரு பாசிசவாதி என்றும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் சர்வாதிகாரம் ஏற்படும் என்றும் முன்னணி ஜனநாயகக் கட்சியினர் முழங்கினர். ஆனால், ட்ரம்ப் வெற்றி பெற்றவுடன், அவர்கள் அந்த முடிவை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டதுடன், வரவிருக்கும் ஆட்சிக்கு எதிராக எந்தவொரு போராட்டத்தையும் கட்டியெழுப்பவில்லை. அவர்களின் எச்சரிக்கைகள் வெறும் தேர்தல் பிரச்சார உத்திகளாகவே இருந்தன ஒழிய, சர்வாதிகாரத்தைத் தடுப்பதற்கான திட்டமாக இருக்கவில்லை. ஒரு “சுமுகமான அதிகார மாற்றத்தை” (smooth transition) உறுதி செய்வதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.

ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, இந்தச் சீரழிவு இன்னும் வேகமெடுத்தது. ட்ரம்பின் ஆரம்பக்கால நடவடிக்கைகளில், ஜனவரி 6 குற்றவாளிகளுக்கு ஒட்டுமொத்த மன்னிப்பு வழங்குவது மற்றும் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ பிரகடனம் மூலம் தண்டனைகளைக் குறைப்பது போன்றவை அடங்கும்.

பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட விசாரணைகள், அவரது தேர்தல் வெற்றிக்குப் பிறகு நிறுத்தப்பட்டன அல்லது முடக்கப்பட்டன. தற்போது குடியரசுக் கட்சியினர் மற்றும் ட்ரம்பின் நீதித்துறையால் சட்ட ரீதியான ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருக்கும் சிறப்பு ஆலோசகர் ஜாக் ஸ்மித், கடந்த மாதம் பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழுவிடம் கூறுகையில், ட்ரம்ப் திட்டமிட்டே ஜனவரி 6 ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முன்னெடுத்தார் என்று தெரிவித்தார்: “அவரே இதைத் தூண்டினார், இதைப் பயன்படுத்திக் கொண்டார் மற்றும் இதன் விளைவுகள் அவருக்கு முன்னரே தெரிந்திருந்தன என்பதே ஆதாரங்கள் மூலம் எங்களின் பார்வையாக இருந்தது,” என்று ஸ்மித் கூறினார்.

ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டில், அவரது நிர்வாகம் சர்வாதிகாரத்திற்கான ஒரு முறையான சதித்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. ஜனவரி 6 அன்று எதைச் சாதிக்கத் தவறியதோ, அதை இப்போது நிறைவேற்ற இது முயல்கிறது. இது, அமெரிக்க நகரங்களில் தேசியக் காவல் படையினரை நிறுத்துவது, புலம்பெயர்ந்தோர் மீதான கொடூரமான தாக்குதல், நீதிமன்றங்களை வெளிப்படையாக மதிக்காமல் இருப்பது, அரசியல் எதிர்ப்புகளைக் குற்றமாக்குவது மற்றும் கலகச் சட்டத்தை பயன்படுத்துவோம் என்ற மிரட்டல் ஆகிய வடிவங்களை எடுத்துள்ளது.

வெனிசுவேலா மீதான படையெடுப்பும், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டதும் அப்பட்டமான குண்டரிசமாகும் (gangsterism). இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து வெனிசுவேலாவை அமெரிக்காவே “நிர்வகிக்கும்” என்ற ட்ரம்பின் பிரகடனம், ஒரு மீளமுடியாத கட்டத்தைக் குறிக்கிறது. அவரது இத்தகைய பேச்சுக்கள் சட்டபூர்வமான தன்மையின் எந்தவொரு பாசாங்கையும் கைவிட்டு, நாஜி மூன்றாம் பேரரசின் குற்றவியல் இராணுவ நடவடிக்கைகளையே பிரதிபலிக்கின்றன.

இந்தச் செயல்கள் இந்த ஆட்சியின் உள்நாட்டுப் போக்கிலிருந்து பிரிக்க முடியாதவை: ஆட்சி கவிழ்ப்பு சதிகாரர்களுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளித்தல், அரசியல் பழிவாங்கல், அரசாணை மூலம் ஆட்சி செய்தல் மற்றும் வன்முறையை ஒரு அரசு கொள்கையாக இயல்பாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். இதன் அடிப்படை முடிவு தவிர்க்க முடியாதது: சோசலிசத்திற்கான போராட்டம் இன்றி ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதோ அல்லது மீட்டெடுப்பதோ சாத்தியமற்றது.

சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு புதிய மக்கள் எதிர்ப்புத் தளத்தை உருவாக்குவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடி வருகிறது. இது ஒரு தெளிவான முதலாளித்துவ எதிர்ப்பு முன்னோக்கால் உந்தப்பட்ட வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இப்போது தேவையானது ஜனநாயகக் கட்சியின் பின்னால் அணிதிரளும் ஒரு “பரந்த கூட்டணி” அல்ல. மாறாக, தன்னலக்குழுவுக்கும், அதன் அரசுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் ஆகும்.

அதன் மையப் பொருள் என்னவென்றால், தொழிற்சாலைகள், பணியிடங்கள், போக்குவரத்து மையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தொழிலாள வர்க்க சாமனியர் குழுக்களை முறையாக உருவாக்குவதாகும். ஜனநாயக ரீதியான, தொழிலாளர்களின் சுய-அமைப்புகளான இந்த உறுப்புகள் மிக முக்கியமானவை: இவை, பெருநிறுவன அதிகாரத்துவத்தின் பிடியை உடைக்கவும், பல்வேறு தொழில்துறைகள் மற்றும் பிராந்தியங்களில் நடக்கும் போராட்டங்களை ஒன்றிணைக்கவும், புலம்பெயர்ந்தோர் மற்றும் குறிவைக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாக்கவும், சிதறிக்கிடக்கும் கோபத்தை சோசலிச வேலைத்திட்டத்தால் வழிநடத்தப்படும் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக மாற்றவும் நடைமுறை வழிகளை வழங்குகின்றன.

இந்தப் போராட்டம் 2026-ஆம் ஆண்டில் முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஜனவரி 6-ன் பாடங்கள் மற்றும் அதன் விளைவுகள்— தொழிலாள வர்க்கத்தின் கூட்டு நினைவகத்தில் ஒரு புலம்பலாக அல்லாமல், ஒரு செயல்பாட்டு வழிகாட்டியாகப் பதியப்பட வேண்டும்: சர்வாதிகாரத்தை உருவாக்கிய அதே நிறுவனங்கள் மற்றும் கட்சிகளிடம் முறையிடுவதன் மூலம் அதைத் தடுத்துவிட முடியாது. தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றவும், தன்னலக்குழுவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் சமூகத்தை சோசலிச அடித்தளத்தில் மறுசீரமைக்கவும் எடுக்கும் நனவான அரசியல் அணிதிரட்டல் மூலம் மட்டுமே சர்வாதிகாரத்தை நிறுத்த முடியும்.

Loading