இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இந்தியாவின் சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST), உதவிப் பேராசிரியர் லோரா சந்தகுமார் அவர்களைப் பணிநீக்கம் செய்ததையும், அதைத் தொடர்ந்து அவரது வசிப்பிடத்திலிருந்து அவரை வெளியேற்றியதையும் உலக சோசலிச வலைத் தளம் கடுமையாகக் கண்டிக்கிறது.
2025 மே மாதம், இந்தியாவின் இந்து-மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடுத்த ஆக்கிரோஷமான போருக்கு எதிராக, தனது தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்கின் 'பதிவில்' (Status) எதிர்ப்பை வெளிப்படுத்தியதற்காக உதவிப் பேராசிரியர் சந்தகுமார் பழிவாங்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் லோரா சந்தகுமார், இதுபோன்ற இராணுவ வன்முறையில் பிரதானமாக பாதிக்கப்படுவோர் அப்பாவி மற்றும் பலவீனமானவர்களே என்று குறிப்பிட்டார்.
நியூஸ் மினிட் இணையதள அறிக்கையின்படி, இந்த இளம் கல்வியாளர் 12 போர் எதிர்ப்புச் செய்திகளைப் பதிவிட்டிருந்தார்.
பொருளாதார நெருக்கடி, இடப்பெயர்வு மற்றும் அப்பாவி உயிர்கள் இழப்பு போன்ற போரின் நிஜ வாழ்க்கை விளைவுகளைப் பற்றி அவர் எச்சரித்தார். அவர் மற்றொரு செய்தியில், இந்திய இராணுவத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை இந்திய சமூக ஊடகங்களில் கொண்டாடுவதை, இது வீரமல்ல, கோழைத்தனம் என்று கூறி கண்டித்தார்.
பேராசிரியர் சந்தகுமார் WSWS உடன் நீண்ட நேரம் உரையாடி, SRMIST நிர்வாகத்திடம் தான் அனுபவித்த துயரங்களை விவரித்தார்:
8 மே 2025 அன்று காலை, எனது துறைத்தலைவர் (HOD) என்னை அலுவலகத்திற்கு அழைத்தார். இயக்குநரும் மற்றொரு ஆசிரியரும் அதே அறையில் இருந்தனர். அப்போது நான் எனது சமூக ஊடகக் கணக்கில் என்ன பதிவிட்டுக் கொண்டிருந்தேன் என்று அவர்கள் என்னிடம் கேட்டனர். இது சிந்துர் நடவடிக்கை (பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியத் தாக்குதலுக்கு அரசாங்கம் வைத்த பெயர்) நடந்து கொண்டிருந்த நேரம்.
'நான் போருக்கு எதிரான செய்திகளையும் அமைதிக்கான செய்திகளையும் பதிவிட்டுக் கொண்டிருந்தேன். நான் எதுவும் தவறாகப் பதிவிடவில்லை, நல்ல விஷயங்களை மட்டுமே பதிவிடுகிறேன்,' என்றேன்.
இதற்கு, இயக்குநர் (வெங்கட சாஸ்திரி), 'உங்களைப் பலர் பின்தொடர்கிறார்கள் என்பதும், ஒரு பேராசிரியராக நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழகத்தை இது எவ்வளவு பாதிக்கும் என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் ஒரு ஆசிரியராகத் தோல்வியடைந்துவிட்டீர்கள், (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது)” என்று கூறினார்.
அன்று பிற்பகல், சுமார் 2:30 மணிக்கு துறைத்தலைவர் என்னை அலுவலகத்திற்கு அழைத்ததுடன் சுமார் 3:00 மணிக்கு எனக்கு இடைநீக்க உத்தரவு வழங்கப்பட்டது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, எனது வாட்ஸ்அப் திரைப்பிரதிகள் ட்விட்டரில் (X) வைரலானதைப் பற்றி பேராசிரியர் கவிதா மூலம் அறிந்துகொண்டேன். யாரோ ஒருவர் அதை SRMIST பதிவாக அடையாளப்படுத்தி இணைப்புக்களை ஏற்படுத்தியிருந்தார். அவர் பாலாவின் (ஒரு பாஜக நிர்வாகி) ட்விட்டர் பதிவின் இணைப்பையும் அனுப்பினார். அதன் பிறகே இவை அனைத்தும் ஏன் நடக்கிறது என்பதை நான் புரிந்துகொண்டேன்.
SRMIST இன் உதவிப் பேராசிரியர் என்று என்னைக் குறிப்பிட்டு ஒரு போலிப் படத்துடன், இந்திய ஆயுதப் படைகளுக்கு எதிராக நான் பதிவிட்டதாக எனக்கு எதிரான SRMIST இன் குற்றச்சாட்டு அறிக்கை கூறியது. பாதிக்கப்பட்டவள் என்பதற்குப் பதிலாக என்னை குற்றவாளியாகச் சித்தரிக்கும் இது முற்றிலும் பொய்யானது. SRM நிர்வாகத்தாலேயே என் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் பிற தீவிர வலதுசாரிகள், நான் போர் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டிருந்ததற்காக என்னை வேட்டையாடினர்.பின்னர், எனக்கு ஒரு காரணம் காட்டும் அறிவிப்பு வந்தது. அதில், 'அவர் தனது சொந்த திறனில் பதிவிட்டிருந்தாலும், SRMIST இலிருந்து தன்னை இணைத்து பதிவிட்டதை அவர் பொய்யென நிரூபிக்கத் தவறிவிட்டார். எனவே குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன' (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது)
பேராசிரியர் லோரா சந்தகுமார் தொடர்ந்தார்:
குற்றம் சாட்டப்பட்ட ஊழியர் மீது அன்றி, குற்றம் சாட்டும் நிர்வாகியின் கைகளிலேயே ஆதாரம் காட்டவேண்டிய பொறுப்பு உள்ளது. நிர்வாகமும் விசாரணைக் குழுவும் இதுவரை அந்தத் திரிபுபடுத்தப்பட்ட படத்தின் மூல இணைப்பை (URL) எனக்குத் தரவில்லை.
நான் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, எனது மின்னஞ்சல், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் அரட்டை இயலிகளுக்கு அசிங்கமான வசவுச் சொற்களுடன் கூடிய அவதூறான செய்திகள் வரத் தொடங்கின.
என் மேற்பார்வையாளர் என்னை அழைத்து என்ன நடக்கிறது என்று கேட்டார். பாலா என்ற ஒருவர் இதைப் பதிவிட்டுள்ளதாகவும், எனது அனைத்து தனிப்பட்ட தளங்களிலும் எனக்கு அவதூறான மின்னஞ்சல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருப்பதாகவும் அவரிடம் கூறினேன். 'பெண்களாகிய எங்களுக்கு எங்கள் வீடுகளில் கூட பேச்சு சுதந்திரம் இல்லை, நாட்டில் எப்படி இருக்கும்?' என மேற்பார்வையாளர் கூறினார்.
வட இந்திய ஒன்றியப் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதாக கூறிக்கொண்டு 7 மே 2025 அன்று, மோடி ஆட்சி பாகிஸ்தான் மீது தனது 'ஆபரேஷன் சிந்தூர்' இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல், பஹல்காம் என்ற அழகிய மலைப் பிரதேச நகரத்தில் நடந்தது.
பஹல்காம் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. பொதுமக்களைக் கொல்வதை நோக்கமாகக் கொண்டு இஸ்லாமியப் பயங்கரவாதிகள் கமாண்டோ பாணியில் தாக்குதல் நடத்தியதில், இந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகளில் 26 பேர் கொல்லப்பட்டதுடன் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.
எந்த ஆதாரத்தையும் வழங்காமல், மோடி அரசாங்கம் உடனடியாக இந்த 'எல்லையைத் தாண்டிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு' பாகிஸ்தானைக் குற்றம் சாட்டியதுடன், புது தில்லியைத் துணைக்கண்டத்தின் பிராந்திய மேலாதிக்க சக்தியாக நிறுவுவதற்கான தனது இலக்கை அடைவதற்கான ஒரு வழியாக இதைப் பயன்படுத்திக் கொண்டது. மே 7 அன்று, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பல இலக்குகள் மீது அது மிகப்பெரிய சட்டவிரோத வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. பின்னர் நான்கு நாட்கள் நடந்த மோதல், தெற்காசியாவின் அணு ஆயுத நாடுகளை முழுமையான போரின் விளிம்பிற்கே கொண்டு வந்தது.
கடந்த மே மாதம் அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர், லோரா சந்தகுமார் பல போலித்தனமான ஒழுக்கப்படுத்தும் நடவடிக்கையிலான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்:
நான் நான்கு அவமானகரமான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டேன். எனது சாட்சிகளில் ஒருவரான திரு. மதுசூதனன், விசாரணையின் போது, எனது இணையதள சுயவிவரத்தின் திரைப்பிரதியை அவர் பார்த்ததில்லை என்றும், நான் எங்கும் SRMIST இன் உதவிப் பேராசிரியராக என்னைக் குறிப்பிட்டுக் கொண்டதைக் காணவில்லை என்றும் கூறினார். இது எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லை.
SRMIST இன் சட்ட அதிகாரி திரு. ரவி அங்கு வந்திருந்ததோடு அவரே முழு விசாரணையையும் கட்டுப்படுத்தினார். அவர் அங்கிருப்பதன் மூலம் அச்சுறுத்தியதால், மூன்றாவது விசாரணையின் போது அவர் இருப்பதை நான் எதிர்த்தேன்.
நான்காவது விசாரணையின் பின்னர், எனது போர்-எதிர்ப்பு பதிவுகளுடன் ஸ்தாபகத் துணைவேந்தர் திரு. பச்சமுத்து அவர்களை சந்திக்குமாறு என்னிடம் கூறப்பட்டது. நான் சந்திப்புக்கு நேரம் கேட்க முயன்றேன், ஆனால் அது பலனளிக்கவில்லை. விசாரணை ஒரு பாதகமான அறிக்கையுடன் முடிவடைந்தது. நான் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மாநில மகளிர் ஆணையத்திற்கும் ஒரு மனு எழுதினேன்.
அதன்பிறகு, உதவிப் பேராசிரியர் லோரா சந்தகுமார் தனக்கு கிடைத்த பணிநீக்கக் கடிதத்தை பற்றி விவரித்தார்:
பின்னர் டிசம்பர் 5, (2025) அன்று, எனது பதவிகளுக்கான பணிநீக்கக் கடிதத்தைப் பெற்றேன். அந்த உத்தரவில், நான் நிறுவனத்தில் கற்பிக்கத் தகுதியற்றவள் என்றும், நான் மேல்முறையீட்டு அதிகாரியான, அதாவது பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
நான் (வேலைநீக்க) கூட்டத்தின் குறிப்புகள், விசாரணைக் கூட்டங்களின் ஆவணங்கள்—முக்கிய சான்றுகள் ஆகியவற்றைக் கேட்டு வருகிறேன், அவற்றில் எதையும் நான் பெறவில்லை.
நான் தவறான இடைநீக்கம், சட்டவிரோதமான மற்றும் ஒருதலைப்பட்சமான விசாரணை செயல்முறை மற்றும் நியாயமற்ற பணிநீக்கத்தையும் எதிர்கொண்டேன். இது அவதூறுக்கு வழிவகுத்து, எனது தொழில் வாழ்க்கையை களங்கப்படுத்தி, எனது குடியிருப்பிலிருந்து என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வழிவகுத்தது. எனது மதம் (தலித் கிறிஸ்தவர்) மற்றும் எனது போர்-எதிர்ப்புப் பதிவுகள் காரணமாகவே நான் குறிவைக்கப்பட்டுள்ளேன்.
எனக்கு குறிப்பிடத்தக்க ஆதரவும் கிடைத்துள்ளது. ஐஐடி மற்றும் பிற இடங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் உட்பட 160க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், என்னை அவமானகரமாக நடத்தியதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
லோரா சந்தகுமாரின் வெளிப்படையான பழிவாங்கல் தனித்த நிகழ்வு அல்ல. இது, பாகிஸ்தானை நோக்கிய இந்தியாவின் ஆக்ரோஷமான இராணுவ நிலைப்பாடு (சிந்தூர் நடவடிக்கை 'இடைநிறுத்தப்பட்டுள்ளது' என்றே அரசாங்கம் வலியுறுத்துகிறது); பாஜக அரசாங்கத்தால் தூண்டப்படும் மதவாத வெறி; மற்றும் அனைத்து எதிர்ப்புக் கருத்துக்களுக்கும் விரோதமாக அரசு திட்டமிட்டு நடத்தி வரும் ஒடுக்குமுறையினதும் பின்னணியில் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலின் தீவிரமயமாதலின் போது, உலக சோசலிச வலை தளம் மீண்டும் மீண்டும் எச்சரித்ததைப் போல், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அறிஞர்களின் எதிர்ப்பை அடக்கும் நோக்கில் உள்நாட்டில் தீவிரப்படுத்தப்பட்ட சர்வாதிகார நடவடிக்கைகளிலிருந்து மோடி அரசாங்கத்தின் போர்வெறிமிக்க செயல்களைப் பிரிக்க முடியாது.
2023 டிசம்பரில், அரசாங்கம் பாராளுமன்றத்தின் மூலம் 'பாரதிய நியாய சஞ்ஹிதா (பிஎன்எஸ்), 2023' என்ற புதிய 'தேசத்துரோகச் சட்டத்தை' நிறைவேற்றியது. இதன் நோக்கம் 'தேசத்திற்கு' எதிரான அனைத்து எதிர்ப்புகளையும் அடக்குவதே ஆகும். நடைமுறையில் தேசம் என்பது மோடி அரசாங்கத்தைக் குறிக்கிறது. இது 'அரசு, ஆயுதப் படைகள் மற்றும் பொது அமைதிக்கு எதிரான குற்றங்கள்' உட்பட குற்றவியல் குற்றங்களின் ஒரு நீண்ட பட்டியலை ஆவணப்படுத்துகிறது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து பிற்போக்குத்தனமாக கொண்டுவரப்பட்ட இந்தியாவின் முந்தைய தேசத்துரோகச் சட்டத்துடன் ஒப்பிடும்போது, BNS சட்டமானது 33 குற்றங்களுக்கான சிறைத்தண்டனைகளையும், 83 குற்றங்களுக்கான அபராதங்களையும் அதிகரித்துள்ளது.
இந்த கொடூரமான BNS சட்டம் இப்போது அரசாங்கத்தின் போர் மனப்பான்மை, மதவெறித் தூண்டுதல் மற்றும் அடக்குமுறையையும் விமர்சிக்கும் குரல்களை அடக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 23 அன்று, வரவிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்காத அரசாங்கத்தின் பங்கை சமூக ஊடகப் பதிவுகளில் கேள்விக்குட்படுத்தியதற்காக, ஒரு கலைஞரான நேஹா சிங் ராத்தோர் மற்றும் லக்னோ பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் மதுரி ககோடி ஆகியோர் மீது, நீண்ட சிறைத்தண்டனைகளைக் கொண்ட BNS குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. செய்திகளின்படி, அந்தப் பேராசிரியர் (பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு) காஷ்மீரிகளுக்கு எதிரான கொடூரங்களைக் கண்டித்து தொடர்ச்சியான பதிவுகளை வெளியிட்டதோடு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக தொடர்புடைய இந்து-கடும்போக்குவாதிகளைக் குறிக்கும் வகையில் 'மஞ்சள் பயங்கரவாதிகள்' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
பின்னர், 'ஆபரேஷன் சிந்தூருக்குப்’ பிறகு, பேராசிரியர் அலி கான் மஹ்மூதாபாத் BNS சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான மஹ்மூதாபாத், போர் குறித்த விளக்கக்காட்சியை ஒரு இந்து மற்றும் ஒரு முஸ்லிம் என்ற இரண்டு பெண் இராணுவ அதிகாரிகள் வழங்குவதன் மூலம் மோடி அரசாங்கம் அரங்கேற்ற முயன்ற மத நல்லிணக்க போலி நாடகத்தைப் பற்றி ஒரு முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பேராசிரியர் லோரா சந்தகுமார் மற்றும் பிற போர் எதிர்ப்பு கல்வியாளர்களைக் குறிவைப்பது, இந்திய-பாகிஸ்தான் மோதல் முழுவதும் WSWS ஆல் பகுப்பாய்வு செய்யப்பட்ட நிகழ்வுப் போக்குகளின் ஒரு செறிவான வெளிப்பாடாகும். ஆபரேஷன் சிந்தூரின் தொடக்கத்திலிருந்தே, பாஜக அரசாங்கம் இதை 'தேசிய ஒற்றுமையின்' பரிசோதனையாகச் சித்தரித்து, கருத்து வேறுபாட்டை துரோகத்துடன் சமன்படுத்தியுள்ளது. பெருநிறுவன ஊடகங்கள் இராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட்டு, விமர்சனக் குரல்களை அடக்கி, பதிலடி கொடுப்பதற்கான அழைப்புகளைப் தூக்கிப் பிடித்துள்ளன. சமூக ஊடகத் தளங்கள் கண்காணிக்கப்பட்டு, பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டு, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சாரம் 'தேசிய பாதுகாப்பு' பற்றிய கவலைகளால் அன்றி, உள்நாட்டு எதிர்ப்பு பற்றிய ஆளும் வர்க்கத்தின் அச்சத்தாலேயே முன்னெடுக்கப்படுகிறது. இந்தியாவின் பாகிஸ்தானுடனான மோதல், இந்திய முதலாளித்துவத்தின் மூலோபாய நலன்களுடனும், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான அதன் அணிசேர்வுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அரசாங்கம் கொடூரமான சிக்கன நடவடிக்கைகள், தனியார்மயமாக்கல் மற்றும் பெருநிறுவன சார்பு மறுசீரமைப்பை அமுல்படுத்துவதானது பெருகிவரும் சமூக கோபத்தை உருவாக்கியுள்ளது. யுத்தமானது சமூக கோபத்தை வெளிப்புறமாகத் திசைதிருப்பும் ஒரு வழிமுறையாகவும், மறுபக்கம், வகுப்புவாதத்தைத் தூண்டி, உள்நாட்டில் அடக்குமுறையை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தச் செயல்பாட்டில் பல்கலைக்கழகங்கள் ஒரு முக்கியமான நிலையை வகிக்கின்றன. அறிவுசார் வாழ்க்கையின் மையங்களாகவும், சாத்தியமான எதிர்ப்புகளின் தளங்களாகவும் இருப்பதால், அவை இணங்கிச் செல்ல நிர்ப்பந்திக்கும் குறிப்பிட்ட அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில், ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களைக் கொடூரமாக அடக்கியதில் இந்த நிகழ்வுப் போக்கு பரவலாக வெளிப்பட்டது.
SRMIST போன்ற தனியார் பல்கலைக்கழகங்கள், பெருநிறுவன வலையமைப்புகளில் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்டு, அரசின் ஆதரவைச் சார்ந்திருப்பதால், அரசியல் மிரட்டல்களுக்கு எளிதில் ஆளாகக்கூடியவை. லோரா சந்தகுமாரைப் பணிநீக்கம் செய்ததன் மூலம், SRMIST நிர்வாகம், அரசாங்கத்தின் போர் கொள்கைக்கு விரோதமான எதிர்ப்பு அதன் வளாகத்திற்குள் சகித்துக்கொள்ளப்படாது என்ற தெளிவான சமிக்ஞையை அனுப்பியுள்ளது.
பேராசிரியர் சந்தகுமாரைக் குறிவைத்தமை, ஆழமாகப் பதிந்திருக்கும் சமூக சமத்துவமின்மையுடனும் தொடர்புடையது. அவர் பாரம்பரியமாக வறுமை நிலையில் உள்ள மற்றும் தொடர்ச்சியான பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்படும் மக்கள் பகுதியினரான ஒரு தலித் கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரது பணிநீக்கத்திற்கான உடனடி காரணம் அவரது போர் எதிர்ப்பு நிலைப்பாடாக இருந்தாலும், இந்தியாவில் உள்ள அடக்குமுறையின் பரந்த வடிவமானது சிறுபான்மையினர், தொழிலாளர்கள் மற்றும் ஆதிக்க தேசியவாதக் கதைகளுக்கு சவால் விடுப்பவர்கள் மீது தொடர்ந்து அதிகமாகப் பயன்பட்டுள்ளது.
பேராசிரியர் லோரா சந்தகுமார் துன்புறுத்தப்பட்டதற்கு ஸதாபனக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிபலிப்பு மிகவும் சொல்லுபடியற்றதாக உள்ளது. காங்கிரஸ் கட்சி, ஸ்டாலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அதன் நெருங்கிய கூட்டாளியான சிபிஐ, மற்றும் திமுக மற்றும் தமிழ்நாட்டின் ஏனைய இன-பிராந்திய கட்சிகள் அனைத்தும் லோரா சந்தகுமாரை பாதுகாக்கத் தவறிவிட்டன. அவருடைய அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டதை எவரும் கண்டிக்கவில்லை.
இது, 'ஆபரேஷன் சிந்தூருக்கும்' இந்திய ஆளும் வர்க்கத்தின் அதிகாரப்பூர்வ போர் புனைவுக்கும் இந்தக் கட்சிகளே அளித்த ஆதரவுடன் ஒத்துப்போகிறது.
கல்விச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்பது போருக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து பிரிக்க முடியாதது. இந்திய-பாகிஸ்தான் மோதல் போட்டி ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்காக நடத்தப்படும் வரை, அடக்குமுறை தீவிரமடையும். பல்கலைக்கழகங்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் கலாச்சார நிறுவனங்களும் போர் முயற்சிகளுக்குக் கீழ் கொண்டுவரப்படுவதோடு, எதிர்த்து குரல் கொடுக்கும் தனிநபர்கள் அச்சுறுத்தல், பணிநீக்கம் அல்லது அதைவிட மோசமான விளைவுகளை எதிர்கொள்வார்கள்.
எனவே, லோரா சந்தகுமாரின் பாதுகாப்பு என்பது ஒரு தனிப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. இதை, வலதுசாரிப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அரசியல் கட்டமைப்பிற்குள் செயல்படுகின்ற நீதிமன்றங்கள், பல்கலைக்கழக நிர்வாகங்கள் அல்லது நாடாளுமன்ற உத்திகளிடம் ஒப்படைக்கப்படவும் கூடாது.
இதற்கு, இன, மத மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்து, தொழிலாளர் வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவது அவசியமாவதோடு, சந்தகுமாரை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான போராட்டத்தை, போர், சர்வாதிகாரம் மற்றும் மதவாத பிற்போக்குக்கு எதிரான மற்றும் சமூக சமத்துவத்திற்கான போராட்டத்துடன் இணைக்க வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் போரை நோக்கித் தள்ளும் அதே ஆளும் வர்க்கங்களே வறுமை, வேலையின்மை மற்றும் பொது சுகாதாரம் மற்றும் கல்வியைச் சிதைப்பதற்கும் பொறுப்பாளிகளாகும்.
லோரா சந்தகுமாரை முழு சம்பளத்துடன் உடனடியாகப் பணியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும், அவரது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சமின்றி அனைத்துப் பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் போரை எதிர்க்கும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் WSWS அழைப்பு விடுக்கிறது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதை, தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு மாபெரும், சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதோடு இணைக்க நாங்கள் போராடுகிறோம். அத்தகைய இயக்கம் மூலமாக மட்டுமே போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலைத் தடுக்கவும், சமூக சமத்துவம் மற்றும் உண்மையான ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்திற்கான அடித்தளங்களை அமைக்கவும் முடியும்.
