மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக தரைப்படை துருப்புக்களை நிலைநிறுத்தத் தயாராகி வருவதாக இந்த வார இறுதியில் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவை ஈரானிய அணுசக்தி தளங்கள் மற்றும் எண்ணெய் குதங்களுக்கு எதிரான குறுகிய கால சிறப்புப் படை நடவடிக்கைகளாக முன்வைக்கப்பட்டாலும், இத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் ஈரானுக்கு எதிரான சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேலிய போரின் மிகப்பெரிய விரிவாக்கத்தையே குறிக்கும்.
போரில் கொல்லப்பட்ட முதல் ஆறு அமெரிக்க சிப்பாய்களின் உடல்களைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்விலிருந்து திரும்பும் வழியில், வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ விமானத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தரைப்படைகளைப் பயன்படுத்துவது குறித்து பகிரங்கமாக அச்சுறுத்தினார்—இது இனி வரப்போகும் பல உயிரிழப்புகளில் முதலாவதாக இருக்கக்கூடும்.
ட்ரம்ப் 'ஈரானுக்குள் அமெரிக்கத் தரைப்படைகளை நிலைநிறுத்துவதில் தனிப்பட்ட முறையில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார்' என்றும், போருக்குப் பிந்தைய ஈரானுக்கான தனது இலக்குகளை கோடிட்டுக் காட்டும் அதே வேளையில், 'வெள்ளை மாளிகைக்கு வெளியேயுள்ள உதவியாளர்கள் மற்றும் குடியரசுக் கட்சி அதிகாரிகளுடன்' இந்த யோசனை குறித்து கலந்துரையாடியதாகவும் NBC நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 'போரின் பிந்தைய கட்டத்தில் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்புகளைப் பாதுகாப்பதற்காக அந்நாட்டிற்குள் சிறப்புப் படைகளை அனுப்புவது' குறித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் கலந்துரையாடியதாக ஆக்சியோஸ் (Axios) உறுதிப்படுத்தியது.
கொடூரமான இஸ்ரேலிய ஆட்சியுடனும், காங்கிரஸில் (நாடாளுமன்றம்) உள்ள பாசிச குடியரசுக் கட்சியினருடனும் ட்ரம்ப் எதை கலந்துரையாடுகிறாரோ, அதை அவர் ஒட்டுமொத்த அமெரிக்க மக்களுடன் செய்ய மாட்டார். அமெரிக்க அரசியலமைப்பின்படி, போர் அறிவிப்பு ஒருபுறம் இருக்க, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு வெள்ளை மாளிகை காங்கிரஸிடம் அங்கீகாரம் கோரவில்லை.
ஆனால், அமெரிக்க மக்கள் இதை முன்பே கேள்விப்பட்டிருக்கிறார்கள். 'வரையறுக்கப்பட்ட' நடவடிக்கைகள் மற்றும் 'சிறப்புப் படைகள்' என்ற வாய்வீச்சுக்கள், கடந்த 75 ஆண்டுகளின் ஒவ்வொரு பெரிய தரைவழிப் போருக்கும் முன்பும், ஆளும் வர்க்கம் அதே பொய்யை கூறி வந்திருக்கிறது.
வியட்நாமுக்கு அனுப்பப்பட்ட 'இராணுவ ஆலோசகர்கள்' பின்னர் 550,000 தரைப்படையாக மாறினர். பேரழிவு தரும் ஆயுதங்கள் என்ற பொய்யின் அடிப்படையில் ஈராக்கில் தொடங்கப்பட்ட 'அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு' என்ற தாக்குதல் நடவடிக்கை 2011 இல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது — ஆனால் 2014 இல், மீண்டும் அங்கே திரும்பிய அமெரிக்க துருப்புக்கள், இன்றும் அங்கேயே நிலைகொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானின் 'வரையறுக்கப்பட்ட' இராணுவப் பணி 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இப்போது, நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் இன்றி, புனையப்பட்ட காரணங்களின் அடிப்படையில் ஈரான் மீது போர் தொடங்கி ஒரு வாரமே ஆன நிலையில், ஏற்கனவே ஏழு அமெரிக்கப் படையினர்கள் இறந்துள்ளனர். ஈராக்கை விட மூன்று மடங்கு பெரியதும், 9 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டதுமான ஒரு நாட்டின் மீது தரைப்படை ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கான அடித்தளத்தை ட்ரம்ப் நிர்வாகம் இப்போது அமைத்து வருகிறது.
இந்தப் போருக்கு எதிரான ஆழமான மக்கள் வெறுப்பை குறைத்து மதிப்பிட முடியாது. 'முடிவில்லாத போர்களுக்கு' எதிரானவர் போல் வேடமிட்டே 2016 மற்றும் 2024 தேர்தல்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றார் —ஆனால் அந்த மோசடி இப்போது அனைவரும் காணும் வகையில் அம்பலமாகியுள்ளது. எரிவாயு விலைகள் விண்ணைத் தொடும் போதும், போர் இயந்திரத்திற்கு நிதியளிக்க சமூக நலத் திட்டங்கள் முடக்கப்படும் போதும், ஒரு முழுத் தலைமுறையையே கட்டாய இராணுவச் சேவைக்காக அச்சுறுத்தப்படுவதும், தங்களின் மகன்களும் மகள்களும் போருக்குப் பலியாக அனுப்பப்படுவார்கள் என்பதை உழைக்கும் மக்கள் இயல்பாகவே உணர்ந்துள்ளனர். இதனால்தான், 'தரைப்படை இறக்கம்' போன்ற நயமாக மறைக்கப்பட்ட சொற்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது. அதே சமயம் 'இது ஈராக் அல்ல' என்று செனட்டர் லிண்ட்சே கிரஹாம் பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறார். ஆனால், இது ஈராக் தான், வியட்நாம் தான், மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள உழைக்கும் மக்களின் இழப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய ஒவ்வொரு போரும் இதுதான்.
அதே சமயம், ட்ரம்ப் இந்தப் போரின் இனப்படுகொலைத் தன்மையை மேன்மேலும் வெளிப்படையாக்கிக் கொண்டிருக்கிறார். கார்டியன் இதழுக்கு அளித்த பேட்டியில், 'நிபந்தனையற்ற சரணாகதி' குறித்த தனது கோரிக்கையை விவரித்த அவர், 'நான் நிபந்தனையற்றது என்று சொன்னேன். அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு அலற வேண்டும், அல்லது அவர்களால் தொடர்ந்து போரிட முடியாமல் போகும் போது, அங்கே அலறுவதற்குக் கூட யாரும் மிச்சம் இருக்க மாட்டார்கள்—அதுவும் நடக்கக்கூடும்' என்று கூறினார்.
பெருநிறுவன ஊடகங்களோ அல்லது ஜனநாயகக் கட்சியோ இந்த மொழிக்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இது ஒட்டுமொத்தமாக மக்களை அழிப்பதை அமெரிக்கா இலக்காகக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்துகிறது. தனது இலக்குகளை அடைய அமெரிக்க இராணுவம் 'என்ன வேண்டுமானாலும் செய்யும்' என்று கடந்த சனிக்கிழமை ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
அமெரிக்காவிற்குள் ஒரு சர்வாதிகாரியைப் போல செயல்படும் ட்ரம்ப், முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய குடிவரவுத் துறை குண்டர்களை முக்கிய நகரங்களுக்குள் அனுப்பி வைப்பதோடு, 9 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஈரானை அழிக்குமாறு அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிடுகிறார். நாஜி பாணியிலான 'பெரிய பொய்' நுட்பத்தைப் பயன்படுத்தும் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை அருகே ஒரு சிறுமிகளின் ஆரம்பப் பள்ளியை அழித்து, குறைந்தது 175 குழந்தைகளைக் கொன்ற வான்வழித் தாக்குதல்களுக்கு ஈரானே காரணம் என்று செய்தியாளர்களிடம் கூறினார். 'அவர்களுக்குத் துல்லியமான தாக்குதல் நடத்தத் தெரியாது; இது ஈரானால் செய்யப்பட்டது' என்று அவர் கூறினார். ஆனால், அமெரிக்கப் போர் விமானங்கள் அருகில் இருந்த கடற்படைத் தளத்தைத் தாக்கும் போது அந்தப் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டதை பென்டகன் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக அமெரிக்க ஊடகங்களே குறிப்பிட்டுள்ள நிலையில், ட்ரம்பின் இந்த அப்பட்டமான பொய் முரண்படுகிறது.
ஈரானின் அதி உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி கொமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கொமேனியை, அவரது தந்தைக்குப் பின் அப்பதவிக்கு ஈரானிய நிபுணர்கள் சபை தேர்ந்தெடுத்த பிறகு, ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு தங்களின் கொலைவெறி அச்சுறுத்தல்களை அதிகரித்தனர். போரின் முதல் சில மணிநேரங்களிலேயே, சி.ஐ.ஏ இலக்கு நிர்ணய உதவியுடன் இஸ்ரேலிய குண்டுகள் தெஹ்ரானில் உள்ள தலைமை வளாகத்தைத் தாக்கியதில் மூத்த கொமேனி படுகொலை செய்யப்பட்டார். புதிய ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே, எந்தவொரு புதிய ஈரானிய ஆட்சியாளருக்கும் இறுதி அங்கீகாரம் வழங்குவது நான்தான் என்று ட்ரம்ப் அறிவித்தார். இதன் மூலம் தனது அனுமதியின்றி அந்தப் பதவியை ஏற்கும் எவரையும் கொலை செய்வேன் என்று அவர் உறுதியளித்தார். மொஜ்தபா கொமேனி தங்களின் இலக்கு பட்டியலில் முதலிடத்தில் வைக்கப்படுவார் என்று இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பென்டகனின் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வரும் பாரிய போர் விரிவாக்கத்தை நிரூபிக்கின்றன. USS ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ் என்ற விமானம் தாங்கிப் போர்க்கப்பல் நோர்போக்கிலிருந்து போர் மண்டலத்தை நோக்கிப் புறப்பட்டுள்ளது. இது 10-12 நாட்களில் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் இருப்பது, அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் ஈரான் மீதான இடைவிடாத குண்டுவீச்சைத் தொடரவும், அதிகரிக்கவும் அனுமதிக்கும்.
இராணுவத்தின் 82-வது வான்வழிப் படைப்பிரிவு என்ற உயரடுக்கு பாராசூட் படைப்பிரிவு, அதன் திட்டமிடப்பட்ட பயிற்சி நடவடிக்கையை ரத்து செய்துள்ளது. இது 'ஈரானுடனான மோதல் விரிவடைந்து வரும் நிலையில், தரைப்போர் மற்றும் பிற பணிகளில் நிபுணத்துவம் பெற்ற படையினர்கள் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்படலாம் என்ற ஊகங்களை பாதுகாப்புத் துறைக்குள் வலுப்படுத்தியுள்ளது என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் ஏற்றுமதியில் 90 சதவீதத்தைக் கையாளும் கார்க் தீவிலுள்ள எண்ணெய் நிலையத்தை அழிக்க அல்லது நேரடியாகக் கைப்பற்ற, 4,500 படையினர்களைக் கொண்ட விரைவு அதிரடிப்படை அங்கு நிலைநிறுத்தப்படலாம் என்று ஊடகங்களில் ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
அமெரிக்க இராணுவம், தன்னிடம் உள்ள சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு மட்டும் ஈரானை வென்றுவிட முடியாது. ஈரான் என்பது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளையும் ஒன்றிணைத்ததை விட அதிக மக்கள் தொகையும், பரப்பளவும் கொண்ட ஒரு நாடாகும். மேலும், ஏகாதிபத்தியத் தலையீடுகளுக்கு எதிராக நீண்டகாலமாகப் போராடி வந்த வரலாற்றைக் கொண்டது. வெள்ளை மாளிகையிலுள்ள ட்ரம்ப்பிற்கு மூலோபாயம் என்று ஒன்று இருக்குமேயானால், அது முடிந்தவரை ஈரானியர்களைக் கொல்வது, அந்நாட்டின் உள்கட்டமைப்பை அழிப்பது மற்றும் இஸ்லாமிய மதகுருக்களின் சர்வாதிகாரத் தலைமையை மட்டுமல்லாமல், ஈரானின் அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் ஒட்டுமொத்தமாக அழிப்பதே திட்டமாகும்—இதன் மூலம் அந்நாட்டைத் தொழில்மயமாக்கலுக்கு முந்தைய நிலைக்குத் தள்ள அவர்கள் திட்டமிடுகின்றனர். 9 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு தனது எல்லைகளுக்கு வெளியே 'அதிகாரத்தைச் செலுத்த' முடியாதபடி செய்வோம் என்ற முழக்கத்தின் உண்மையான அர்த்தம் இதுதான்.
அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்தப் பாரிய படுகொலைகள் மூலம், ஒரு முன்னேறிய சமூகத்தையும், அதன் கலாச்சாரத்தையும் அழிக்கும் போக்கினை அமெரிக்க தொழிலாள வர்க்கம் கட்டாயம் எதிர்க்க வேண்டும். ஆனால், தொழிலாளர்களும் இளைஞர்களும், ஜனநாயகக் கட்சிக்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், அல்லது போராட்டங்களை நடத்தினாலும் அது ட்ரம்பின் கரங்களைத் தடுத்து நிறுத்திவிட மாட்டாது என்ற உண்மையை உணர வேண்டும். குடியரசுக் கட்சியைப் போலவே, ஜனநாயகக் கட்சியும் ஒரு பெரும் வணிகங்களின் கட்சியாகும். நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெற ட்ரம்ப் மறுப்பது குறித்து அவர்கள் சிறு சிறு குறைகளைக் கூறினாலும், இறுதியில் அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களையும், ஈரானுக்கு எதிரான போரின் இலக்குகளையும் பாதுகாக்கவே செய்கிறார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை CNN தொலைக்காட்சியில் தோன்றிய கனெக்டிகட் மாநில செனட்டரும், வெளியுறவுக் கொள்கையில் முன்னணி ஜனநாயகக் கட்சி செய்தித் தொடர்பாளருமான கிறிஸ் மர்பி, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுப்பதில் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் தான் உடன்படுவதாகத் தெரிவித்தார். 'அறிவை குண்டுவீசி அழித்துவிட முடியாது' என்பதால், அங்கு ஒரு 'இராஜதந்திர உடன்படிக்கை' இருக்க வேண்டும் என்று மட்டும் அவர் பரிந்துரைத்தார்.
'அமெரிக்க மக்கள் இந்தப் போரை விரும்பவில்லை' என்பதையும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்கள் பேரழிவை ஏற்படுத்தின என்பதையும் ஒப்புக்கொண்டுள்ள அதே வேளையில், அதை நிறுத்த கிறிஸ் மர்பி எந்த நடவடிக்கையும் முன்மொழியவில்லை. ஈரானுக்கு எதிரான போரின் முதல் நாளில் பள்ளி சிறுவர்கள் கொத்தாகக் கொல்லப்பட்டதை ஒரு 'தவறு' என்று குறிப்பிட்ட அவர், 'நான் நினைக்கிறேன், வெள்ளை மாளிகையில் இப்போது முடிவெடுக்கும் இடத்தில் தீவிரமான நபர்கள் இல்லை என்பதையே இது காட்டுகிறது' என்று கூறினார்.
ஆனால் போரைத் தொடரத் தேவையான நிதியை காங்கிரஸ் முடக்க வேண்டும் என்று எந்தவொரு முன்னணி ஜனநாயகக் கட்சியினரும் பரிந்துரைக்கவில்லை. போர் அதிகாரச் சட்டத்தை அமல்படுத்தவும், போருக்கான காங்கிரஸின் ஒப்புதலை ட்ரம்ப் கோர வேண்டும் என்றும் கடந்த வாரம் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் இரண்டிலும் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் தோல்வியடைந்ததை அவர்கள் அமைதியாக ஏற்றுக்கொண்டனர். ஜனநாயகக் கட்சியின் 'இடது' பிரிவின் தலைவர்கள் என்று அழைக்கப்படும் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் ஆகியோர் ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் குறித்த மேலோட்டமான 'விவாதத்தில்' பேசக் கூட ஆர்வம் காட்டவில்லை.
ஜனநாயகக் கட்சி, நடைமுறைகள் குறித்து சிறு குறைகளைக் கூறினாலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் வாதங்களையே வழிமொழிகிறது மற்றும் இந்த இனப்படுகொலை போருக்கு வசதி செய்து கொடுக்கிறது. போர் அதிகாரத் தீர்மானத்தின் மீதான கடந்த வார வாக்கெடுப்பு ஆரம்பத்திலிருந்தே ஒரு அரசியல் நாடகமாகும் — இது போரை நிறுத்துவதற்காக அல்ல, மாறாக அதற்கு ஜனநாயகக் கட்சியினர் வழங்கும் ஆதரவை மறைக்க ஒரு போர்வையாகவே வடிவமைக்கப்பட்டது. அவர்களின் பொதுவான அணுகுமுறை நடைமுறை குறித்துப் புகார் கூறுவதாக இருந்தாலும், ஆக்கிரமிப்பு மற்றும் படுகொலைகளை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் அதே ஈரான் எதிர்ப்பு பிரச்சாரத்தையே அவர்களும் மீண்டும் கூறுகின்றனர்.
தரைப்படைத் துருப்புக்களை நிலைநிறுத்துவது ஈரானுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கும் மற்றும் அமெரிக்க சமூகத்திற்கும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். 90 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டிற்கு எதிரான தரைப்படைப் போரை, அமெரிக்க சமூகத்தை முழுமையாகப் போருக்குக் கீழ்ப்படுத்தாமல் நடத்த முடியாது. இது, நிகழும் பேரழிவிற்கு எதிரான உள்நாட்டில் எழும் எதிர்ப்பை ஒடுக்குவதுக்கு, ஒரு கொடூரமான போலீஸ் அரசு ஆட்சியை நிறுவுவதுக்கு வழிவகுக்கும்.
ஆயினும், இந்தத் போர் தீவிரப்பாட்டின் பொறுப்பற்ற தன்மையே வளர்ந்து வரும் கோபத்தையும் எதிர்ப்பையும் உருவாக்குகிறது. மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் மற்றொரு ஏகாதிபத்திய இரத்தக் களரியை விரும்பவில்லை. மேலும் போர் நீடிக்க நீடிக்க, அதன் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் விளைவுகள் மிகவும் வெடிப்புத் தன்மையுள்ளதாக மாறும்.
ஆகவே, போருக்கு எதிரான எதிர்ப்பு அணிதிரட்டப்பட்டு, அதற்கு நனவான அரசியல் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறதா என்பதே தீர்மானகரமான கேள்வியாகும். போரை நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். இந்த மோதலின் பேரழிவுகரமான பொருளாதார விளைவுகளும், அமெரிக்காவிற்குள் உருவாகி வரும் சர்வாதிகாரத்துடன் அதற்குள்ள நேரடித் தொடர்பும், போரை கட்டாயமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை மில்லியன் கணக்கான மக்களுக்கு உணர்த்தும். மேலும், அமெரிக்காவின் போர் இயந்திரத்தை தகர்ப்பதற்கும், ட்ரம்ப் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கும் இதுவே வழியாக அமையும்.
போருக்கு எதிரான எதிர்ப்பு, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக நனவான இயக்கத்தின் வடிவத்தை - அதன் வேலைத்திட்டத்தில் சோசலிசமாகவும், அதன் முன்னோக்கில் சர்வதேசியமாகவும் - எடுக்க வேண்டும். மேலும் அது ஏகாதிபத்தியப் போருக்கும் அதைப் உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிராக, தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சக்தியைத் அணிதிரட்ட வேண்டும்.
