யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸ் பழிவாங்கலை எதிர்கொள்கின்றனர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தன்று நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பதிலடியாக, முப்பது மாணவர்கள் அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கையால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 அன்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் குழு ஒன்று பல்கலைக்கழக வளாகத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக தேசியக் கொடியை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாகக் கருப்புக் கொடியை ஏற்றியது.

தீர்க்கப்படாத அரசியல் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை குறிக்கவில்லை  என்பதை உணர்த்தும் வகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் “கறுப்பு தின” போராட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த அழைப்புக்கு இணங்க, கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் உறுப்பினர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள் மற்றும் சில சிவில் அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

உடனடியாக, இலங்கை பொலிஸ் தேசியக் கொடி அகற்றப்பட்டது தொடர்பாக தொடர் விசாரணைகளைத் தொடங்கியது. யாழ்ப்பாணத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு மாணவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், சட்டமா அதிபருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை கோரியது.

சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.), பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பொலிசார் மேற்கொண்டுள்ள இந்த அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டிப்பதோடு, மாணவர்கள் மீதான அனத்துக் குற்றச்சாட்டுகளும் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோருகின்றன. இது, யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர் சங்கம் (JUSU) மற்றும் அதன் மாணவர்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும்.

கொழும்பில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் உத்தரவு இல்லாமல், பொலிஸ் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகளை எடுத்திருக்காது. சுதந்திர தினத்தன்று வடக்கிலும் கிழக்கிலும் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டது குறித்த செய்திகளை கொழும்பு ஊடகங்கள் சிங்கள இனவாத தொனியில் வெளியிட்டன.

ஆரம்பத்தில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படி செயல்பட்ட பல்கலைக்கழக நிர்வாகம், ஒரு உள்ளக விசாரணையை நடத்தியது. சிரேஷ்ட பல்கலைக்கழக அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு, சுமார் 30 மாணவர்கள்  போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டிருந்ததாக அடையாளம் கண்டது.

இந்தக் குழுவின் விசாரணைகளின் போது, ​​தமிழ் பேசும் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் அரசால் இன்னும் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்படாததால், தமிழ் பேசும் மக்கள் பெப்ரவரி 4 ஆம் திகதியை கரி நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, மார்ச் 10 அன்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் (UGC) கோரிக்கையை ஏற்று, அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று பல்கலைக்கழகத்திற்குச் சென்றது.

அந்தக் குழுவினர், சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்திற்குள் கருப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

பின்னர், மார்ச் 13 அன்று, மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, கொடிப் பிரச்சினை தொடர்பாக மாணவர் சங்கத் தலைவர்கள் மார்ச் 16 அன்று தங்கள் அலுவலகத்தில் முன்னிலை ஆவதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கோரி பல்கலைக்கழகப் பதிவாளருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது.

சிரேஷ்ட மாணவர் சங்கத் தலைவர் தயாபரன் லஜிதரன், கலைத்துறை மாணவர் சங்கத் தலைவர் ஜதுர்சன் மற்றும் ஏ. அபிசேக் ஆகியோரின் பெயர்கள், அவர்களது பதிவு எண்களுடன் குறிப்பிடப்பட்டன. மார்ச் 17 அன்று மாணவர்களுக்குக் கடிதம் வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் அன்றே பொலிஸ் முன் ஆஜரானார்கள். பொலிசார் அவர்களிடம் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தி, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

மாணவர் சங்கத் தலைவர் தயாபரன் லஜிதரன் (இடது) மற்றும் ஏ. அபிசேக்

மாணவர் தலைவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அன்று, சக மாணவர்கள் மற்றும் போரில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் ஆதரவுடன் பல்கலைக்கழகத்தில் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

போராட்டத்தின் போது, ​​“மாணவர்களை ஒடுக்காதே,” “விசாரணைகளை நிறுத்து,” “வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம்,” “எங்களுக்கு எங்கள் நிலம் வேண்டும்,” “எங்கள் உறவினர்கள் எங்கே?” மற்றும் “எங்களுக்கு எங்கள் உரிமைகள் வேண்டும்” போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர். பல்கலைக்கக மாணவர் ஒன்றியத்தின் இரண்டு தலைவர்களும் பொலிசில் இருந்து திரும்பும் வரை போராட்டம் தொடர்ந்தது.

கலைத்துறை மாணவர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கனகசூரியன் கவிதரன் ஊடகங்களிடம் கூறுகையில், “இதுவரை, இந்த அரசாங்கம் தமிழர்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காணவில்லை. நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகிறோம். மாணவர்கள் முன்னின்று வழிநடத்துகின்றனர், காணாமல் போனவர்களின் உறவினர்கள் கதறி அழுகிறார்கள்” என்றார்.

சிவில் அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களையும் சொத்துக்களையும் விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் போனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்து செய்தல் ஆகியவை அவர்களது கோரிக்கைகளில் அடங்கும். “இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் உறுதியளித்தது, ஆனால் இதுவரை அவற்றை நிறைவேற்றவில்லை. இருப்பினும், இலங்கைக் கொடியை இறக்கி கருப்புக் கொடியை ஏற்றுவதை அது ஒரு குற்றமாகக் கருதுகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

“பேச்சுரிமை, எழுத்துரிமை, போராட்டம் நடத்தும் உரிமை மற்றும் துக்க நாள் அனுசரிக்கும் உரிமை ஆகியவை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கருப்புக் கொடியை ஏற்றுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கைச் சட்டத்தில் ஏதேனும் விதிமுறை உள்ளதா?” என மாணவர் தலைவர் தொடர்ந்து கூறினார்.

இலங்கையில் கொடியை அவமதிப்பது தொடர்பாக குறிப்பிட்ட சட்டம் எதுவும் இல்லை. ஆயினும், தேசியக் கொடியை உள்ளடக்கிய செயல்கள், பொது ஒழுங்குச் சட்டங்களின் கீழோ, சேதம் விளைவித்தல் அல்லது இடையூறு செய்தல் போன்ற தண்டனைச் சட்ட விதிகளின் கீழோ, அல்லது போராட்டங்களின் போது செய்யப்பட்டால் சட்டவிரோதக் கூட்டம் கூடுதல் சம்பந்தமான குற்றச்சாட்டுகளின் கீழோ தண்டனைக்கு வழிவகுக்கலாம்.

இலங்கையில் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ச்சியான பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும் நாங்கள் எதிர்க்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சிக்கும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யுனிஸ்ட் கழகத்திற்கும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்த வரலாறு உண்டு. நாங்கள் போரை எதிர்த்ததுடன், வடக்கிலிருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றுதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட கொடுங்கோல் சட்டங்களை இரத்து செய்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இலங்கையில் முதலாளித்துவத்தை துாக்கிவீசி, பாரபட்சம் நிறைந்த ஒற்றையாட்சி அரசை ஒழித்து, தெற்காசிய மற்றும் சர்வதேச அளவிலான ஒரு சோசலிசக் கூட்டமைப்பின் அங்கமாக, ஸ்ரீ-லங்கா-ஈழம் சோசலிசக் குடியரசு வடிவிலான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதன் மூலமும் மட்டுமே தமிழ் சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை அடைய முடியும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஏழைகளை அணிதிரட்டிக்கொண்டு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் இன வேறுபாடுகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் ஊடாக மாத்திரமே இந்த இலக்கை அடைய முடியும்.

அதே பத்திரிகையாளர் சந்திப்பில், அதே மாணவ பேச்சாளர், “குறிப்பாக, இலங்கையில் உள்ள சிங்கள மக்களைப் போல, தமிழர்களாகிய எங்களுக்குச் சம உரிமைகளோ, சம வாய்ப்புகளோ அல்லது அந்தஸ்தோ வழங்கப்படவில்லை...” என்று கூறினார். இது ஒரு பிழையான கண்ணோட்டம் ஆகும். உண்மையில், சுதந்திரம் என்று சொல்லப்பட்ட காலத்திலிருந்து, கொழும்பின் முதலாளித்துவ ஆட்சிகள், தமிழர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதத்தைப் பயன்படுத்தி, தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி, 26 ஆண்டு கால இரத்தக் களரி போர் உட்பட இன மோதல்களைத் தூண்டிவிட்டு வந்துள்ளன.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைப் போலவே, சிங்கள மொழி பேசும் தொழிலாளர்களும் ஏழைகளும் முதலாளித்துவ வர்க்கத்தின் கீழ் சம உரிமைகளை அனுபவிப்பதில்லை. அவர்கள் அனைவரும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீதான இந்தத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடுவதில் சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ  உயரடுக்குகளுக்குள்“ எந்த வேறுபாடுகளும் கிடையாது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்கள், தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்த இனவாதத்தைப் பயன்படுத்தும் தமிழ் உயரடுக்கினரின் அரசியல் கட்சிகளை ஆதரிக்கின்றனர். வரலாறு காட்டியுள்ளபடி, தமிழ் உயடுக்கினர்  தங்கள் வர்க்கச் சலுகைகளை மட்டுமே நாடி, கொழும்புடன் ஒத்துழைத்து பேரம்பேசுவதோடு, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் மீது ஏதேனும் பாரபட்சமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், அவை மாணவர்களை இனரீதியாகப் பிளவுபடுத்துவதற்காக அரசாங்க மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நகர்வுகளாகவே கருதப்பட வேண்டும். அத்துடன் அவை அவ்வாறே கண்டிக்கப்பட வேண்டும்.

முதலாளித்துவ அமைப்பிற்குள் மாணவர்களுக்கோ அல்லது பரந்த மக்களின் வேறு எந்தப் பிரிவினருக்கோ தீர்வு கிடையாது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தமது சோசலிச இயக்கத்தில் இணைந்து, ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடுமாறு சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு வலியுறுத்துகிறது. பல்கலைக்கழகத்தில் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் இருப்பை நிலைநாட்டவும், அதன் ஒரு கிளையை நிறுவவும், எங்களுடன் கலந்துரையாடல்களைத் தொடங்குமாறு மாணவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சி

337 (200), தெஹிவல வீதி, பொரலஸ்கமுவ

தொலைபேசி 011 3096987, வட்ஸ்அப் 0773562327