மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இஸ்ரேலிய மற்றும் துருக்கியத் தலைவர்கள் சமூக ஊடகங்களில் ஒருவர் மீது ஒருவர் மிகவும் அசாதாரணமான வாய்வீச்சுத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர்.
ஏப்ரல் 11 அன்று, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் (X) தளத்தில், துருக்கிய ஜனாதிபதி ரசெப் தயிப் எர்டோகன் “தனது சொந்த குர்திஷ் மக்களைக் கொன்று குவிப்பதாகவும்”, “ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கும் அதன் பினாமிகளுக்கும் இடமளிப்பதாகவும்” மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையைக் குலைக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்தை இந்த “ஆத்திரமூட்டல்கள்” சீர்குலைக்கக்கூடும் என்று எர்டோகன் முன்னதாகவே எச்சரித்து, பிராந்தியத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சித்திருந்தார். காஸா மற்றும் பிராந்தியம் முழுவதும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய துருக்கிய அதிகாரிகள், நெதன்யாகுவை “எமது காலத்தின் ஹிட்லர்” என்று வர்ணித்தனர். மேலும், இஸ்ரேல் தனது அடுத்த எதிரியாக துருக்கியைக் கட்டமைப்பதாகக் கூறினர். தனது சொந்த அரசியல் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நெதன்யாகு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஜனாதிபதியின் ஆலோசகர் புர்ஹானெட்டின் துரான், நெதன்யாகு காஸாவில் இனப்படுகொலை செய்வதாகவும், பிராந்தியத்தைப் பேரழிவிற்குள் இழுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், எர்டோகனை “குர்துகளைக் கொன்று குவித்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மனிதர்” என்று அழைத்தார். துருக்கி மீது ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணைகளுக்குப் பதிலடி கொடுக்கத் தவறியதற்காக, துருக்கிய ஜனாதிபதியை விமர்சித்த அவர், எர்டோகனை ஒரு “காகிதப் புலி” என்று அழைத்தார். மேலும் அவர் மீது யூத எதிர்ப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதுடன், “இஸ்ரேலின் அரசியல் மற்றும் இராணுவத் தலைமைக்கு எதிராக துருக்கியில் கள விசாரணைகள் நடப்பதாக” அறிவித்தார். பாசிச தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் கிவீர் எபிரேய மொழியில், “எர்டோகன், உனக்கு ஆங்கிலம் புரியுமா?” என்று ட்வீட் செய்துவிட்டு, ஆங்கிலத்தில் ஒரு வசவுச் சொல்லையும் (F*** You) சேர்த்தார்.
முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் உள்ளிட்ட இஸ்ரேலிய அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள பல அரசியல்வாதிகள், துருக்கியை ஈரானுக்கு இணையான ஒரு புதிய பிராந்திய அச்சுறுத்தலாகப் பகிரங்கமாக விவரித்துள்ளனர். லிபியா மற்றும் கராபாக் ஆகிய இடங்களில் தலையிட்டது போலவே, துருக்கியால் “இஸ்ரேலுக்குள்ளும் நுழைய” முடியும் என்று எர்டோகன் முன்பு விடுத்த மிரட்டல்களை அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்— அதாவது, ஆர்மேனியாவுடனான மோதலில் அஜர்பைஜானுக்கு ஆதரவாகவும், லிபியாவின் உள்நாட்டுப் போரில் துருக்கி மேற்கொண்ட தலையீடுகளையுமே அவர் அவ்வாறு சுட்டிக்காட்டினார்.
துருக்கியை தனது அடுத்த எதிரியாகச் சித்தரிக்க இஸ்ரேல் வேண்டுமென்றே முயல்வதாக துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கான் பிடான் குற்றம் சாட்டினார். நெதன்யாகு “தனது விரிவாக்கக் கொள்கைகளை” தொடர்வதன் மூலம் பிராந்தியத்தில் “அமைதிப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்க” முயற்சிப்பதாக அவர் கூறினார்.
எர்டோகன் இது குறித்து வலியுறுத்திக் கூறுகையில், “இதற்கு முன்பு பலமுறை செய்தது போலவே, அமைதிக்கான மிகச்சிறிய நம்பிக்கையையும் சீர்குலைக்க இஸ்ரேல் அனைத்து வழிகளையும் கையாளும். மனிதகுலத்தின் ஒரு பக்கம் எமது பிராந்தியத்தில் எரியும் நெருப்பை அணைக்க முயலும் போது, இந்தப் படுகொலைக் கும்பல் அதில் அதிக எரிபொருளை ஊற்றுகிறது. அவர்கள் இதைச் செய்துவரும் வேளையில், அமைதிக்காகக் குரல் கொடுக்கும் நாடுகளை, குறிப்பாக துருக்கி மற்றும் ஸ்பெயினை திமிர்த்தனமாக இலக்கு வைப்பார்கள்,” என்றார்.
துருக்கியில் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் தீவிரமடைந்து வரும் அரசு ஒடுக்குமுறை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள உள்நாட்டு ஆத்திரத்தை, ஒரு வெளிநாட்டுப் போட்டியாளரை நோக்கித் திசைதிருப்பும் முயற்சியாகவே நெதன்யாகு மீதான எர்டோகனின் விமர்சனங்கள் பெரும்பாலும் அமைகின்றன. துருக்கியில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகள், பெரும்பாலான மக்கள் ஈரான் போரை எதிர்ப்பதைக் காட்டுகின்றன. இருப்பினும், அங்காரா அமெரிக்காவுடன் நேரடி மோதலில் ஈடுபடும் நிலையில் இல்லை. அது ஈரானைக் கண்டிக்கும் ரியாத் பிரகடனத்தில் இணைந்ததுடன், போருக்கு எதிரான தனது பொதுப் பிரதிபலிப்புகள் பலவற்றை இஸ்ரேலுக்கு எதிராகத் திசைதிருப்பியது. இதன் மூலம் போருக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்பைப் பயன்படுத்தி, இஸ்ரேல்தான் இந்த மோதலைத் தூண்டியது என்ற பிம்பத்தை வலுப்படுத்த முயல்கிறது.
தீவிரமடையும் இஸ்ரேலிய-துருக்கிய பதட்டங்கள்
இந்த சமீபத்திய வாய்வீச்சுத் தாக்குதல்கள், டெல் அவிவ் நகரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஓர் அறிவிப்பைத் தொடர்ந்து வந்துள்ளன: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், நிதி அமைச்சர் பெசலல் ஸ்மோட்ரிச், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-கிவீர், இஸ்ரேலிய இராணுவத்தின் (IDF) தலைமைத் தளபதி ஏயல் ஜமீர் மற்றும் முன்னாள் மொசாட் தலைவர் யோசி கோஹன் உள்ளிட்ட 34 இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எதிராக இஸ்தான்புல் தலைமை வழக்கறிஞர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். 2025 செப்டம்பர் பிற்பகுதியிலும் அக்டோபர் தொடக்கத்திலும் காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முயன்ற குளோபல் சுமுத் புளோட்டிலா என்றழைக்கப்படும் டசின் கணக்கான கப்பல்களை இஸ்ரேலிய கடற்படை வழிமறித்தது தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுவீடன் நாட்டின் சமூக ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் மற்றும் 24 துருக்கிய குடிமக்கள் உட்பட 39 கப்பல்களில் இருந்த அனைத்து சமூக ஆர்வலர்களையும் இஸ்ரேல் தடுத்து வைத்து, பின்னர் நாடுகடத்தியது. இந்த வழிமறிப்பு நடவடிக்கையை “மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு பயங்கரவாத நடவடிக்கை” என அங்காரா கண்டனம் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை, சித்திரவதை மற்றும் சட்டவிரோதமான முறையில் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன—இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரையிலான ஒட்டுமொத்த சிறைத்தண்டனைகளை இவை வழங்கக்கூடும்.
அக்டோபர் 2023 முதல் காஸாவில் நிகழ்ந்து வரும் பெருமளவிலான பொதுமக்களின் மரணங்களை அங்காரா தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், இஸ்ரேலுடன் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் தளவாடத் தொடர்புகளை அது பராமரித்து வருகிறது. அஜர்பைஜானின் எண்ணெய் ஏற்றுமதி இப்போதும் துருக்கி வழியாகச் செல்லும் குழாய்த்தடம் வழியாகவே இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், துருக்கியில் உள்ள அமெரிக்கத் தளங்கள், இஸ்ரேலுக்குப் பயனளிக்கும் இராணுவப் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளுக்காகத் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன.
கடந்த அக்டோபரில், காஸாவிற்காக ட்ரம்ப் நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரத்தில் எட்டப்பட்ட அழுகிப்போன ஒப்பந்தத்தில் எர்டோகனும் கையெழுத்திட்டிருந்தார். அந்தத் திட்டம், காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு எந்தவிதமான அரசியல் உரிமைகளையும் அங்கீகரிக்காமல், அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான ஒரு “சமாதானக் குழு” மூலம் காஸாவை நிர்வகிப்பதை முன்மொழிந்தது. அதே வேளையில், காஸாவின் எல்லைகளைக் கட்டுப்படுத்தும் நிரந்தரப் பாதுகாப்புப் பொறுப்பை இஸ்ரேலுக்கு அது வழங்கியது.
இந்த உடன்படிக்கை, ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு காஸாவின் அதிகாரத்தைக் கைவிட வேண்டும் எனக் கோரியது. ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் நாடு கடத்தப்பட்ட தலைவர்களுக்குப் புகலிடம் அளித்துள்ள துருக்கி, இந்த நிபந்தனைகளை ஏற்குமாறு ஹமாஸை வலியுறுத்திய மற்ற நாடுகளுடன் இணைந்துகொண்டது. காஸாவிற்கான ஒரு சர்வதேச நிலைப்படுத்தும் படையில் தனது படையினர்களைப் பங்களிக்க அங்காரா கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது. இருப்பினும் இஸ்ரேல் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டது.
இன்று இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையே பதட்டங்கள் வேகமாக அதிகரிப்பது, காஸா, சிரியா, ஈரான் மற்றும் இரு நாடுகளின் உள்நாட்டு அரசியல் நிகழ்வுகளால் தூண்டப்பட்டு, நீண்டகாலப் பகைமை வெளிப்படையான விரோதமாக மாறியிருப்பதைப் பிரதிபலிக்கிறது.
இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரண்டு கூட்டாளிகளுக்கு இடையே நிலவும் இந்தப் போட்டி, முதன்மையாக கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் மத்திய கிழக்கைப் பங்கிட்டுக்கொள்வதில் அவர்களுக்குக் கிடைக்கும் பங்குகளைப் பற்றியதாகும். மத்திய கிழக்கில் மேலாதிக்கத்திற்கான வாஷிங்டனின் உந்துதலின் அம்சங்களை இரு அரசாங்கங்களும் ஆதரிக்கும் அதே வேளையில், குறிப்பாக சைப்ரஸ் மற்றும் சிரியாவில் இஸ்ரேலின் விரிவடைந்து வரும் கூட்டாண்மைகள் குறித்து அங்காரா (துருக்கி) பெருகிய முறையில் கவலை கொண்டுள்ளது.
கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் இஸ்ரேல்–துருக்கி இடையிலான பதட்டங்கள்
கடந்த ட்சம்பரில், துருக்கியுடன் நீண்டகாலமாக மோதல்களைக் கொண்டுள்ள நாடுகளான கிரேக்கம் மற்றும் சைப்ரஸ் உடன் இணைந்து இஸ்ரேல் ஜெருசலேமில் ஒரு உச்சிமாநாட்டை நடத்தியது. மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள “முக்கியமான பிராந்திய உள்கட்டமைப்புகளை” பாதுகாப்பதற்காக “பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் இராணுவ விவகாரங்களில்” முத்தரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்த இந்த நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். இது உலகின் மிக நீளமான மற்றும் ஆழமான கடலுக்கடியிலான மின்சார கேபிள் மூலம் அவர்களின் மின் இணைப்புக் கட்டமைப்புகளை இணைக்கும் திட்டங்களையும், கடலோர இயற்கை எரிவாயு மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பையும் குறிக்கிறது.
சிரியாவில், டிசம்பர் 2024-இல் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சியை வீழ்த்தியதில் இருந்து துருக்கியின் கூட்டாளியான அகமது அல்-ஷாரா மற்றும் அவரது இஸ்லாமிய ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) அமைப்பினர் ஆட்சி செய்து வருகின்றனர். சிரியாவில் வடகிழக்கில் குர்திஷ் சுயாட்சி மற்றும் தென்மேற்கில் ட்ரூஸ் (Druze) சுயாட்சி உள்ளிட்ட ஒரு அதிகாரப்பகிர்வு கொண்ட அரசியல் கட்டமைப்பை இஸ்ரேல் ஆதரித்தது. இது, அந்தப் பகுதிகளில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ளவும், டமாஸ்கஸ் மற்றும் அங்காராவில் உள்ள அதன் ஆதரவாளரைப் பலவீனப்படுத்தவும் இஸ்ரேலை அனுமதிக்கிறது. ஆனால், கடந்த டிசம்பரில், குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளை (SDF) சிரிய இராணுவத்துடன் ஒருங்கிணைக்கவும், SDF கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீண்டும் டமாஸ்கஸின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரவும் அல்-ஷாராவின் முயற்சிகளுக்கு அமெரிக்க நிர்வாகம் ஆதரவளித்தது.
கடந்த ஜனவரி மாதம், அடுத்த தசாப்தத்திற்கான இஸ்ரேலின் பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் வரவுசெலவுத் திட்டம் குறித்த பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நேகல் கமிஷன் தனது அறிக்கையில், “டமாஸ்கஸில் துருக்கி மிகவும் செல்வாக்கு மிக்க சக்தியாக மாறியுள்ளது மற்றும் ஈரானின் ஷியா அச்சிற்குப் பதிலாக சுனி-துருக்கிய அச்சு உருவெடுத்துள்ளது” என்று குறிப்பிட்டது. மேலும், “சிரியாவை ஒரு அடிமை நாடாக மாற்றுவதன் மூலம் தனது பிராந்திய செல்வாக்கை அதிகரிப்பதில் துருக்கியின் நலன்கள் தெளிவாக உள்ளன. அது [இஸ்ரேல்] களத்தில் நடவடிக்கைகள் மற்றும் வேகமாக அதிகரிக்கக்கூடிய சாத்தியமான அச்சுறுத்தல்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டதுடன், துருக்கியுடன் ஏற்படக்கூடிய மோதலை எதிர்கொள்ள இராணுவத் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் வாதிட்டது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர்
எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் குற்றவியல் தாக்குதல்களே துருக்கியின் ஆளும் வர்க்கத்தினரிடையே பெரும் கலக்கத்தை தூண்டியுள்ளன. நேட்டோ உறுப்பு நாடாக இருப்பதாலும், அமெரிக்கத் தளங்களுக்கு இடமளிப்பதாலும், ஒருவேளை போலித் தாக்குதல் நடவடிக்கைகளாக இருக்கலாம் எனக் கருதப்படும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள, அமெரிக்க-இஸ்ரேலியப் படைகளுக்கு உளவுத் தகவல்களை வழங்கி வருகின்ற துருக்கி இந்தப் போரில் இழுக்கப்படக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த மோதலால் ஏற்படும் உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை உயர்வு, ஏற்கனவே கடுமையான வாழ்க்கைச் செலவு நெருக்கடியை மேலும் மோசமாக்கி, வர்க்கப் பதட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்கள் சட்டவிரோதமானது என்று எர்டோகன் அறிவித்து போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும், வாஷிங்டனுடனான கூட்டணியில் துருக்கி கொண்டுள்ள இராணுவ, பொருளாதார மற்றும் நிதி ரீதியான சார்பு நிலை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் “புதிய மத்திய கிழக்கு” கொள்கையுடன் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தை அவருக்கு ஏற்படுத்துகிறது. எர்டோகன் அவ்வாறு செய்யத் தவறினால், 2016-ஆம் ஆண்டு நேட்டோ ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி காட்டியது போல, அவருக்கு எதிராக மற்றொரு சதி நடக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே, தனது “நண்பர்” ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்காவைக் கண்டிக்க அவர் தயக்கம்காட்டி வருகிறார்.
அதற்குப் பதிலாக, எர்டோகன் இஸ்ரேலை இலக்கு வைத்து, போருக்கு அதுவே பொறுப்பு என்று கூறினார். மேலும் அவர், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை ஈரான் இலக்கு வைத்தது ஒரு நியாயமான தற்காப்பு நடவடிக்கை என்றாலும், அதை பிற நாடுகளின் இறையாண்மை மீதான தாக்குதலாக விவரித்தார். லெபனான் வரை பரவியுள்ள இந்தப் போர், ஈரானிய ஆட்சியின் வீழ்ச்சிக்கும், அது வாஷிங்டனிடம் அடிபணிவதற்கு வழிவகுக்கும் என்றும், இது துருக்கியின் எல்லைகளில் இஸ்ரேலின் செல்வாக்கை அதிகரிப்பதோடு, போரினால் வெளியேறும் அகதிகளின் புதிய அலையையும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் கூட்டணியில் உள்ள குர்திஷ் தேசியவாத சக்திகளின் பிரிவினைவாத முயற்சிகளையும் துரிதப்படுத்தும் என்றும் அங்காரா அஞ்சுகிறது.
ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியில் இஸ்ரேலிய-துருக்கியப் போட்டி
மத்திய கிழக்கு நாடுகளுக்கு மிகவும் முக்கியமான கேந்திரப் பகுதியாக இருந்துவரும் ஆப்பிரிக்காவின் கொம்புப் (Horn of Africa) பகுதியிலும் இஸ்ரேல் மற்றும் துருக்கிக்கு இடையிலான பதட்டம் அதிகரித்து வருகிறது. இப்பிராந்தியத்தின் துறைமுகங்கள், இராணுவத் தளங்கள் மற்றும் அரசியல் கூட்டணிகள் பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணைக்கான அணுகுமுறையைத் தீர்மானிக்கின்றன. செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாயின் தெற்கு நுழைவாயிலாக இருக்கும் இந்தப் நீரீணைப் பகுதி, எய்லாட்-அஷ்டோட் (Eilat–Ashdod) வழித்தடம் வழியாக இஸ்ரேலின் கடல்சார் வாழ்வாதாரமாகவும், இந்தியப் பெருங்கடலுக்கான துருக்கியின் அணுகல் புள்ளியாகவும் செயல்படுகிறது.
கடந்த தசாப்தத்தில், இவ்விரு நாடுகளும் ஒன்றுக்கொன்று எதிரான பிராந்தியக் கூட்டணிகளை உருவாக்கியுள்ளன: ஒரு பக்கம் துருக்கி–கத்தார்–சோமாலியா அச்சு, மறுபக்கம் இஸ்ரேல்–ஐக்கிய அரபு அமீரகம்–எரித்ரியா/எத்தியோப்பியா அச்சு என இவை அணிவகுத்துள்ளன.
இந்தப் போட்டியில் சோமாலியா மிகவும் வெளிப்படையான களமாக உள்ளது. மொகடிஷுவின் (Mogadishu) முதன்மையான அரசியல் பாதுகாவலராகவும், இராணுவப் பயிற்சியாளராகவும் மற்றும் பொருளாதாரக் கூட்டாளியாகவும் துருக்கி உருவெடுத்துள்ளது. துருக்கி தனது மிகப்பெரிய வெளிநாட்டு இராணுவத் தளத்தைத் தலைநகர் மொகடிஷுவில் இயக்குவதோடு, சோமாலியப் படைகளுக்குப் பயிற்சியளிக்கிறது மற்றும் துறைமுகம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. சோமாலியாவின் கடற்கரையிலிருந்து 250 மைல் தொலைவில் உள்ள குராட்-1 (Curad-1) கிணற்றில் ஆழ்துளையிடும் பணிகளைத் தொடங்குவதற்காக, அங்காரா சாக்ரி பே கப்பலையும் துணைக் கப்பல்களையும் அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கை இப்பிராந்தியத்தில் அதன் நீண்டகால புவிசார் மூலோபாய நலன்களைக் காட்டுகிறது.
இதற்கு நேர்மாறாக, இஸ்ரேல் சோமலிலாந்து (Somaliland) வழியாகத் தனது செல்வாக்கைச் செலுத்த முயன்றுள்ளது. கடந்த டிசம்பரில், சோமலிலாந்தை ஒரு இறையாண்மை கொண்ட தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் மற்றும் ஒரே ஐ.நா உறுப்பு நாடாக இஸ்ரேல் மாறியது. இந்த நடவடிக்கை, பெர்பெரா (Berbera) துறைமுகத்திற்கான அணுகலைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாகப் பரவலாகப் புரிந்துகொள்ளப்பட்டதுடன், அங்காரா மற்றும் மொகடிஷு ஆகிய இரு தரப்பினரையும் அது பகைத்துக்கொண்டது.
சூடானில், ஒரு மக்கள் எழுச்சியின் மத்தியில் சூடானிய இராணுவம் ஒரு முன்கூட்டிய சதிப்புரட்சியின் மூலம் ஜனாதிபதி உமர் அல்-பஷீரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு முன்பு, துருக்கி சுவாகின் (Suakin) தீவை —சில ஆய்வாளர்களால் செங்கடலிலுள்ள ஒரு சாத்தியமான கடற்படைத் தளமாகக் கருதப்படுகிறது— நீண்ட கால குத்தகைக்கு எடுத்திருந்தது. டிஜிபூட்டியில், அங்காரா தனது பரந்த செங்கடல் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக தனது இராஜதந்திர மற்றும் வர்த்தக இருப்பை விரிவுபடுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியில் இஸ்ரேலின் தடம் பழமையானது மற்றும் நுட்பமானது. எத்தியோப்பியாவின் மறுமலர்ச்சி அணை (GERD) தொடர்பான விவகாரங்கள் உட்பட, அந்த நாட்டுடன் நீண்டகாலமாக உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உறவுகளை இஸ்ரேல் பேணி வருகிறது. இந்த அணையினால் வறட்சி காலங்களில் நைல் நதியின் நீர் ஓட்டத்தைக் குறைக்கக்கூடும் என்று எகிப்தும் சூடானும் அஞ்சுகின்றன. செங்கடலில் உளவுத் தகவல்களைச் சேகரிப்பதற்காக எரித்ரியாவின் துறைமுகங்களையும் தீவுகளையும் இஸ்ரேல் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. எரித்ரியா, சோமாலிலாந்து மற்றும் தெற்கு ஏமன் ஆகிய நாடுகளின் முக்கிய சக்தியாக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகத்துடனான இஸ்ரேலின் கூட்டாண்மை, சூடான் உள்நாட்டுப் போரில் விரைவு ஆதரவுப் படைகளுக்கு (RSF) ஆதரவளிப்பதன் மூலம் அதன் செல்வாக்கை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஈரானுடன் இணைந்த ஹூவுதி அமைப்பினர், செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்கள், கப்பல்களை ஆபிரிக்காவின் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாகச் செல்ல நிர்ப்பந்தித்துள்ளன. இது செங்கடல் வழித்தடத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தொடர்ந்து முற்றுகையிட்டால் செங்கடலை மூடிவிடுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளதால் இது மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரியாத், கெய்ரோ மற்றும் இஸ்லாமாபாத் ஆகியவற்றுடன் அங்காராவின் நெருக்கமான உறவுகள் வலுப்பெறுவதை டெல் அவிவ் அமைதியற்ற நிலையிலேயே கவனித்து வருகிறது. எர்டோகன் பல ஆண்டுகளாக மோர்சிக்குப் பிந்தைய எகிப்தின் தலைமையை அங்கீகரிக்க மறுத்து வந்ததுடன், துருக்கியில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மூத்த தலைவர்களுக்குத் தொடர்ந்து புகலிடம் அளித்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசிக்கு நேரடி எதிர்ப்பாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அதே வேளையில், சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் — வாஷிங்டனில் உள்ள அதன் தூதரான யூசெஃப் அல் ஒதைபா, ஒருமுறை துருக்கியை “ஈரானை விட ஆபத்தான எதிரி” என்று வர்ணித்திருந்தார்— துருக்கியப் பொருளாதாரத்திற்குப் பில்லியன் கணக்கான டாலர்களை அனுப்பத் தொடங்கியுள்ளன. டெல் அவிவின் முன்னோக்கில், அங்காரா, ரியாத் மற்றும் அபுதாபி ஆகியவற்றுக்கு இடையேயான இந்த ஒருங்கிணைப்பு, இஸ்ரேலின் பிராந்திய நலன்களுக்கு விரோதமான ஒரு சுனி முஸ்லிம் அரசியல் அச்சாக வலுப்பெறும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று துருக்கி, அந்தல்யாவில் (Antalya) மூன்று நாள் இராஜதந்திர கருத்தரங்கை நடத்தியது. இதில் சிரிய ஜனாதிபதி அல்-ஷாரா மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசுத் தலைவர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இக்கருத்தரங்கின் ஒரு பகுதியாக, போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகை குறித்து கலந்துரையாடுவதுக்காக துருக்கி, பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர்.
