இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இந்தியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகர்ப்புறமுமான டெல்லியைச் சுற்றியுள்ள தொழில்துறைப் பகுதியில், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடத்தி வரும் எழுச்சி போராட்டம், அரசின் அடக்குமுறையை சந்தித்து வருகிறது. தேசிய அளவிலும், டெல்லியிலும், அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவிலும் ஆட்சியில் இருக்கும் இந்து மேலாதிக்கக் கட்சியான பாஜகவின் தூண்டுதலின் பேரில், பொலிசார், வறுமை ஊதியம் மற்றும் கொடூரமான வேலை நிலைமைகளுக்கு எதிராகப் போராடிய நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும், அவர்களுக்கு ஆதரவளித்த ஏராளமான ஆர்வலர்களையும் கைது செய்துள்ளனர்.
ஏப்ரல் 10 அன்று தொழிலாளர் கிளர்ச்சி தொடங்கியதிலிருந்து, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) 400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்கள் வழியாகத் தங்களின் அவலநிலையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியும், பல்வேறு வேலைநிறுத்த இடங்களில் உரையாற்றியும் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆதரவு காட்டிய இளம் தொழிலாளர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களைப் பிடிக்கவும் கைது செய்யவும் பொலிஸ் தற்போது தனது வலையை விரிவுபடுத்தியுள்ளது. இந்த ஆர்வலர்கள்தான் தொழிலாளர்களின் அமைதியின்மைக்கு முக்கியக் காரணம் என்று பொய் கூறும் காவல்துறை, அவர்களை தூண்டிவிடுபவர்கள் என முத்திரை குத்தியுள்ளது. வெளிப்படையான அவதூறு பரப்பும் வகையில், அவர்களில் சிலர் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானுடன் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச முதலமைச்சரும், இந்து பாசிசவாதியுமான யோகி ஆதித்யநாத், தொழிலாளர்களின் போராட்டங்களை, 'மாநிலம் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி சீராக முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், அமைதியையும் முன்னேற்றத்தையும் சீர்குலைப்பதற்கான ஒரு திட்டமிட்ட சதி' என்று குறிப்பிட்ட பிறகே பொலிஸ் ஆர்வலர்களைத் திட்டமிட்டு குறிவைக்கத் தொடங்கியது.
ஏப்ரல் 18 அன்று, தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள திருச்சிராப்பள்ளி நகரில், இளம் தொழிலாளர் ஆர்வலரான ஆதித்யா ஆனந்தை ஒரு ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். உத்தரப் பிரதேச காவல்துறைக் குழுவினர், அவரை கைது செய்வதற்காக, சுமார் 2,500 கி.மீ (1,500 மைல்கள்) பயணம் செய்திருந்தனர். அவரைக் கைது செய்வதற்கு 100,000 ரூபா பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தபோதிலும், ஆதித்யா வேலையில்லாமல் இருக்கிறார்.
தொழிலாளர் போராட்டங்களில் கலந்துகொண்ட ஒரே காரணத்திற்காக அரசியல் ஆர்வலர்களைக் கைது செய்வதற்காக உத்தரப் பிரதேச பொலிஸ் நாடு முழுவதும் தேடி வருகிறது. இதுவரை, சிறையில் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கும் மேலாக, நாடு முழுவதும் குறைந்த பட்சம் 63 பேரை அவர்கள் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புது தில்லியிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில், இந்திய நாடாளுமன்றக் கட்டிடங்கள் அமைந்துள்ள நொய்டா நகரில், ஏப்ரல் 13, திங்கட்கிழமை அன்று நடந்த வன்முறைக்கு ஆதித்யா ஆனந்தே “சூத்திரதாரி” என்று காவல்துறை விவரித்துள்ளது. காவல்துறையும் இந்திய பெருநிறுவன ஊடகங்களும் “வன்முறை” என்று வர்ணித்த இந்தச் சம்பவம், தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் நேருக்கு நேர் தாக்குதல் நடத்தி, அவர்களைக் தடியடியால் ஈவிரக்கமின்றி அடித்து, தடுத்து வைக்கப்பட்ட தொழிலாளர்களைத் தெருக்களில் இழுத்துச் சென்ற பின்னரே நிகழ்ந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, தொழிலாளர்கள் பொலிசார் மீது கற்களையும் பட்டாசுகளையும் வீசியும், காவல்துறை வாகனங்களைக் கவிழ்த்தும் தங்களைத் தற்காத்துக் கொண்டனர். மேலும் சில வாகனங்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
வன்முறையைத் தூண்டுதல் மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக ஆனந்த் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உள்ளூர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட, பிணையில் வெளிவர முடியாத கைது வாரண்டையும் காவல்துறை பெற்றுள்ளது. ஆனந்த் கைது செய்யப்படுவதற்கு முன்பு, காவல்துறை அவரது கூட்டாளிகள் என்று முத்திரை குத்திய மனிஷா சௌஹான் மற்றும் ரூப்ரேஷ் ராய் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனந்த் கைது செய்யப்பட்ட மறுநாள், புது தில்லியில் ஹிமான்ஷு தாக்கூர் மற்றும் உத்தரப் பிரதேச நகரமான லக்னோவில் சத்யம் வர்மா என மேலும் இருவரை காவல்துறை கைது செய்தது. இவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் “மஸ்தூர் பிகுல்” (தொழிலாளர்களின் எக்காளம்) என்ற தொழிலாளர் நலக் குழுவின் ஆர்வலர்கள் என்பதுதான். சமூக ஊடகங்கள் மூலம் இந்த ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் துயரங்களை ஆவணப்படுத்தி, பகிரங்கப்படுத்தியதும், அவர்களின் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டதும்தான் இவர்கள் செய்த ஒரே “பாவம்”.
ஆனந்த் கைது செய்யப்பட்ட பிறகு, நொய்டா காவல் ஆணையர் லட்சுமி சிங், 'நொய்டாவில் நடந்த வன்முறை ஒரு உள்நோக்கம் கொண்ட, சர்வதேச அளவில் திட்டமிடப்பட்ட செயல்பாடு' என்று பத்திரிகையாளர்களிடம் பரபரப்பாகக் கூறினார். இந்தக் கூற்றை ஆதரிக்க காவல் ஆணையர் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. தொழிலாளர்களின் எழுச்சிக்குப் பின்னால் பாகிஸ்தானைக் குறிப்பிடும் வகையில் 'பாகிஸ்தான் தொடர்பு' இருக்கலாம் என்று முதலமைச்சர் ஆதித்யநாத் முதலில் பரப்பிய குற்றச்சாட்டை அவர் வெறுமனே மீண்டும் கூறினார்.
தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் சிங் கூறியதாவது: “வன்முறையைத் தூண்டியது தொடர்பாக மனிஷா சௌஹான், ரூபேஷ் ராய் மற்றும் ஆதித்யா ஆனந்த் ஆகியோரின் பெயர்கள் வெளிவந்துள்ளன. ரூபேஷ் 2018 முதலும், ஆதித்யா 2020 முதலும் நாடு முழுவதும் தொடர்ந்து பயணம் செய்து வருகின்றனர்; எங்கு போராட்டம் நடந்தாலும், அவர்கள் அங்கு இருக்கிறார்கள். ரூபேஷ் ராய் தன்னை ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார், அதேசமயம் ஆதித்யா வேலையில்லாதவர்” என்றார். மூவரும் “தூண்டிவிடும் பேச்சுகளைப் பேசி, அதன் மூலம் தொழிலாளர்களைத் தூண்டியதாகவும்” நொய்டா காவல் ஆணையர் மேலும் குற்றம் சாட்டினார்.
இந்த பரபரப்பூட்டும் மற்றும் மிகவும் ஒருதலைப்பட்சமான கூற்றுகளுக்கு மாறாக, அதிர்ச்சியடைந்த ஆதித்யாவின் சகோதரர் ஆகாஷ் ஆனந்த், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசியபோது, “அவர் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் மட்டுமே கோரினார், அதில் என்ன தவறு இருக்கிறது?” என கேட்டார். “அவர் எப்போதும் அனைவரிடமும் ஒரு மனிதாபிமான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறு தொழிலாளர்களிடம் ஆதித்யா கெஞ்சும் காணொளி ஆதாரம் கூட எங்களிடம் உள்ளது, ஆனால் யாரும் எங்கள் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை,” என அவர் மேலும் விளக்கினார்.
ஆதித்யா ஆனந்த் தற்போது “குற்றத்தில் தனது பங்கை ஒப்புக்கொண்டதாக” கூறப்படுகிறது. அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்காக காவல்துறையினர் தாக்குதல்களையும் / அல்லது சித்திரவதைகளையும் பயன்படுத்தியுள்ளனர் என்பதை இது உணர்த்துகிறது. இந்திய பொலிஸ், கைதிகளைத் துன்புறுத்துவதிலும், கட்டாய வாக்குமூலங்களைப் பயன்படுத்தி ஏழை மக்களையும் அரசாங்க எதிர்ப்பாளர்களையும் நீண்டகால சிறைத் தண்டனைக்கு உள்ளாக்குவதிலும் பேர்போனவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்டுள்ள சிலரின் வழக்கறிஞர்கள், காவல்துறை சட்டத்தின் மிக அடிப்படையான நடைமுறைகளை மீறியுள்ளதாகவும், இந்தக் கைதுகள் முற்றிலும் சட்டவிரோதமானவை என்றும் வாதிட்டுள்ளனர். ஆதித்யா ஆனந்தின் வழக்கறிஞரான கபீர் குப்தா, டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம், “சட்டத்தின் கீழ் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதால், அவை சட்டவிரோதமானவை. கைதுக்கான காரணங்கள் வெளியிடப்பட்டு, எங்கள் கட்சிக்காரருக்குக் கைது குறிப்பாணை வழங்கப்படாவிட்டால், இந்தக் கைதுகளைச் சட்டப்பூர்வமானவை என்று கூற முடியாது” என்று கூறினார்.
கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் அவலநிலை, சொல்லப்போனால், இன்னும் மோசமாக உள்ளது. அவர்களை விடுவிக்க, அவர்களது குடும்பத்தினர் 20,000 ரூபா என்ற கடுமையான பிணைத்தொகையைச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கோருகிறது. கொலை, கலவரம் மற்றும் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளி ஆனந்த் குமார் ராமின் மனைவி தேவி, கிழக்கு மாநிலமான பீகாரில் இருந்து இரவு ரயிலில் 1,000 கி.மீ (600 மைல்கள்) தொலைவுக்கு கடினமான பயணம் மேற்கொண்டார். அவர் பணிபுரியும் தொழிற்சாலையில் மனிதவளத் துறையினரால் தனது கணவர் அழைக்கப்பட்டு, பின்னர் பொலிசார் அவருக்காகக் காத்திருந்த ஒரு தோட்டப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் பத்திரிகையாளர்களிடம் கூறினார். 'என் கணவர் மாதத்திற்கு 11,000 ரூபா ($118) மட்டுமே சம்பாதிக்கும்போது, நாங்கள் எப்படி 20,000 ($215) ரூபா திரட்டுவது?' என்று அவர் விரக்தியுடன் கேட்டார்.
இந்திய ஆளும் வர்க்கம் தொழிலாளர்களின் போராட்டங்களைக் குற்றமாக்குவதில் நீண்ட வரலாறு படைத்துள்ளது. 2011-12ல் தொடர்ச்சியான தீவிர வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்த, புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீனத் தொழிற்சங்கமான மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் (MSUW) முழுத் தலைமையும் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சிக்கவைக்கப்பட்டு, பழிவாங்கப்பட்டது இதன் மிகவும் இழிவான வழக்குகளில் ஒன்றாகும். 2012 ஜூலையில் ஹரியானாவின் மனேசரில் உள்ள மாருதி சுசுகி ஆலையில், நிறுவனத்தால் தூண்டப்பட்ட ஒரு தகராறு மற்றும் மர்மமான தீ விபத்தைத் தொடர்ந்து, பதின்மூன்று MSWU தலைவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஐந்து ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகும், நீதிபதி வேண்டுமென்றே சட்டத்தைத் திரிபுபடுத்தஇய ஒரு போலியான விசாரணைக்குப் பிறகும், அந்தப் பதின்மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது உயிருடன் இருக்கும் 11 MSWU தலைவர்களும் தங்கள் மேல்முறையீட்டின் மீதான நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில், பிணையில் வெளியே இருந்தாலும், அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, தாங்கள் அனுபவித்த கொடூரமான துன்பத்தினால் தொடர்ந்தும் அவதிப்படுகின்றனர்.
ட்ரம்பின் வரிகள் மற்றும் தற்போது ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போரினாலும் மேலும் அதிகரித்து வரும் உலகப் பொருளாதாரக் கொந்தளிப்புச் சூழலின் கீழ், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனத்தின் இடைவிடாது பெருகும் இலாபத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதாக உறுதியளிப்பதில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டில் இருந்தே, தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்குவதற்காக அதிகாரிகள் கையாளும் கடுமையான நடவடிக்கைகள் தலைதூக்குகின்றன. நொய்டா தொழிலாளர்கள் மீதான தாக்குதலை பாஜக முன்னின்று நடத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தலைமையிலான மாநில அரசாங்கங்களும் இதேபோல் போராடும் தொழிலாளர்கள் மீது பொலிசை ஏவிவிட்டு, வேலைநிறுத்தங்களைக் கலைக்க அத்தியாவசிய சேவைகள் சட்டங்களை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. ஏற்கனவே கடுமையாகச் சுரண்டப்படும் இந்தியத் தொழிலாள வர்க்கத்திற்கான குறைந்தபட்ச சட்டப்பூர்வப் பாதுகாப்புகளையும் கூடப் பறிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பாஜக அரசும் அறிமுகப்படுத்திய 'தொழிலாளர் சட்டங்களை' பலரும் இப்போது செயல்படுத்தி வருகின்றனர்.
நொய்டா தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் ஆர்வலர்களின் கைதுகள், சிறைவாசம் மற்றும் தொடர்ச்சியான வழக்குகளை உலக சோசலிச வலைத் தளம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள், தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்குவதையும், குறிப்பாகத் தொழிலாள வர்க்கப் போராட்டங்களை ஆதரிக்க முற்படும் இடதுசாரி எதிர்ப்புகளை ஒடுக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சோசலிச சிந்தனையுள்ள தொழிலறிஞர்களும் இந்த அக்கிரமத்தை வன்மையாகக் கண்டித்து, அதை வெளிக்கொணர்ந்து, இந்த வர்க்கப் போர்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோர வேண்டும்.
மேலும் படிக்க
- ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போரினால் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சிகளால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஏற்பட்ட விலை உயர்வுக்கு எதிராக வட இந்தியாவில் தொழிலாளர்கள் நடத்திய வெகுஜனப் போராட்டங்கள்
- பிற்போக்கை தோற்கடித்து சமூக சமத்துவத்தைப் பாதுகாக்க, தொழிலாளர்கள் தங்கள் சுயாதீன வர்க்க சக்தியை கட்டியெழுப்ப வேண்டும்!
