அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் போர்வையில், காஸாவை இணைக்கும் முயற்சியை இஸ்ரேல் தீவிரப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்கா மற்றும் சர்வதேச ஊடகங்கள் டரம்ப் நிர்வாகத்திற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நிபந்தனைகளில் கவனம் செலுத்தி வரும் வேளையில், இஸ்ரேல் மத்திய கிழக்கு முழுவதும் தனது அட்டூழியத்தை பெருமளவில் விரிவுபடுத்தி வருகிறது. மேலும் காஸாவை நிரந்தரமாக ஆக்கிரமிக்கவும், லெபனான் மீதான தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தவும் அது நகர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த அக்டோபரில் நடைமுறைக்கு வந்த போர்நிறுத்தத்தின் கீழ் இஸ்ரேல் தன் வசம் வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட 53 சதவீத நிலப்பரப்பிற்கும் அப்பால் மிக அதிகமாக, காஸாவின் 70 சதவீதப் பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு தான் உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை அறிவித்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை குடியேற்றப் பகுதியில் நடந்த மாநாடு ஒன்றில் உரையாற்றிய நெதன்யாகு, “நாங்கள் இப்போது காஸாவின் 60 சதவீத நிலப்பரப்பைக் கட்டுப்படுத்துகிறோம். உங்களுக்குத் தெரியும், நாங்கள் 50 சதவீதத்தில் இருந்தோம், 60 சதவீதத்திற்கு நகர்ந்தோம். எனது உத்தரவு... 70 சதவீதத்திற்கு நகர்வதுதான்,” என்று கூறினார். இந்த உத்தரவு காஸாவிலுள்ள 2.1 மில்லியன் பாலஸ்தீனியர்களை அதன் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான பகுதிக்குள் முடக்கிவிடும்.

கடந்த புதன்கிழமை, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், காஸாவில் இனச்சுத்திகரிப்பை செய்ய வேண்டும் என்ற தனது அழைப்புகளை மீண்டும் வலியுறுத்தினார். “ஹமாஸ் காஸாவை சிவில் ரீதியாகவோ அல்லது இராணுவ ரீதியாகவோ ஆளப்போவதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், அவ்வாறே அது நடக்கும், மேலும் காஸாவிலிருந்து மக்கள் தன்னார்வமாக வெளியேறும் திட்டமும் செயல்படுத்தப்படும்” என்று காட்ஸ் எக்ஸ் (X) தளத்தில் எழுதியுள்ளார்.

காஸாவில் இஸ்ரேலியப் போரினால் ஏற்பட்ட அழிவுகளை ஒரு ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வான்வழிப் புகைப்படம் காட்டுகிறது. [AP Photo/Mohammad Abu Samra]

லெபனானில், தெற்கு பெய்ரூட் புறநகர்ப் பகுதியான ஷூயிஃபாத் மீது வியாழக்கிழமை நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு பெண், அவரது பெண் குழந்தை மற்றும் சிரியாவை சேர்ந்த ஒரு குழந்தை கொல்லப்பட்டனர்—இது கடந்த மூன்று வாரங்களில் பெய்ரூட்டுக்கு அருகில் நடத்தப்பட்ட முதல் இஸ்ரேலியத் தாக்குதலாகும். சிடோன் அருகே வாகனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதை உள்ளடக்கி, வியாழக்கிழமை நாடு தழுவிய அளவில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை இஸ்ரேலிய இராணுவம் டயர் நகரத்திலிருந்து ஒட்டுமொத்த மக்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டதுடன், ஷஹ்ரானி நதிக்கு தெற்கே உள்ள அனைத்துப் பகுதிகளையும் —இது லெபனான் நிலப்பரப்பில் சுமார் 15 சதவீதமாகும்— போர் மண்டலமாக அறிவித்தது.

இஸ்ரேல் தான் ஒப்புக்கொண்ட போர்நிறுத்தங்களை திட்டமிட்டு முறையாக மீறி வருகிறது. அக்டோபர் 10, 2025 அன்று, காஸாவில் “போர்நிறுத்தம்” அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 900 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

லெபனானில், நவம்பர் 27, 2024 அன்று நடைமுறைக்கு வந்த அமெரிக்கா மத்தியஸ்தம் வகித்த போர்நிறுத்தம், 60 நாட்களுக்குள் தெற்குப் பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று கோரியது. ஆனால், இஸ்ரேல் ஒருபோதும் அங்கிருந்து வெளியேறவில்லை மற்றும் தொடர்ந்து குண்டுவீச்சுக்களை நடத்தி வருகிறது. ஏப்ரல் 16 அன்று நடைமுறைக்கு வந்த மற்றொரு போர்நிறுத்தமும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் மீறப்பட்டு வருகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் முழு ஆதரவுடன் காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் என்ன செய்து வருகிறது என்பதை, ஈரானுடன் அமெரிக்கா செய்யும் எந்தவொரு ஒப்பந்தத்தின் உண்மையான உள்ளடக்கத்தையும் நிரூபிக்கும். இது அமைதியைக் குறிக்காது, மாறாக மத்திய கிழக்கில் தங்கள் மேலாதிக்கத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் இஸ்ரேலின் அடுத்தக்கட்ட தாக்குதல்களுக்கான முன்னுரையாக மட்டுமே அமையும்.

கடந்த ஏப்ரல் 8 போர்நிறுத்தத்தை நீடிக்கவும், ஹோர்முஸ் நீரிணையை படிப்படியாக மீண்டும் திறக்கவும், அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்கவும் மற்றும் ஈரானிய யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தி வைப்பது குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் 60 நாள் புரிந்துணர்வு ஒப்பந்த வரைவுக்கு அமெரிக்க மற்றும் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக ஆக்ஸியோஸ் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

அணு ஆயுதத்தை உருவாக்க மாட்டோம் என்று ஈரான் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும். இந்த உடன்படிக்கையில் ஈரானுக்கான 300 பில்லியன் டாலர் “மறுசீரமைப்பு நிதி” சேர்க்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு வளைகுடா அரபு நாடுகள் நிதியளிக்கும் என்றும், சீனா இதில் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆக்ஸியோஸ் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கொமேனி ஆகியோரின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கடந்த வியாழக்கிழமை கொலராடோ ஸ்பிரிங்ஸில் செய்தியாளர்களிடம் கூறுகையில்: “நாங்கள் சில மொழி சார்ந்த விஷயங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்... நாங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை, ஆனால் அதற்கு மிக அருகில் இருக்கிறோம், மேலும் நாங்கள் தொடர்ந்து அதற்காக பணியாற்றுவோம்” என்று கூறினார்.

அமெரிக்க இராணுவம் கடந்த புதன்கிழமை இரவு பந்தர் அப்பாஸில் உள்ள ட்ரோன் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தின் மீது குண்டுவீசித் தாக்கியது—இது மூன்று நாட்களில் தெற்கு ஈரான் மீதான இரண்டாவது அமெரிக்கத் தாக்குதலாகும். அமெரிக்கப் படைகள் முன்னதாக ஹோர்முஸ் நீரிணைக்கு மேல் ஐந்து ஈரானிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியிருந்தன. இதற்குப் பதிலடியாக ஈரானின் புரட்சிகரக் காவல் படை குவைத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியது, அதை குவைத் வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்தன.

மேலும், அமெரிக்காவின் எந்தவொரு ஆக்கிரமிப்பும் “இன்னும் தீர்க்கமான பதில் தாக்குதலை” எதிர்கொள்ளும் என்று ஈரானின் புரட்சிகரக் காவல் படை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “தொடர்ச்சியான போர்நிறுத்த மீறல்கள்” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆரம்பித்த போரில் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஈரானின் உள்கட்டமைப்பிற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. பென்டகனின் தற்காலிகக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் ஜூல்ஸ் ஹர்ஸ்ட், போரில் ஏற்பட்டுள்ள அமெரிக்காவின் நேரடிச் செலவு 29 பில்லியன் டாலர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்; பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை ஈடுசெய்வதற்காக 100 பில்லியன் டாலர்கள் வரையிலான கூடுதல் நிதிக் கோரிக்கையைத் தயாரிக்க ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது.

ஈரானுக்கு எதிராக இவ்வளவு பெரிய வன்முறை ஏவப்பட்ட போதிலும், அமெரிக்கா தனது முக்கிய போர்க் குறிக்கோள்களில் தோல்வியடைந்துள்ளது. ஈரானிய அரசாங்கத்தை கவிழ்க்கவோ, ஈரானிய மக்களின் எதிர்ப்பை உடைக்கவோ அல்லது ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைப் பெறவோ அமெரிக்காவால் முடியவில்லை.

இந்தப் போர் வாஷிங்டனில் அரசியல் நெருக்கடியை ஆழப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை ட்ரம்ப் போதிய அளவு பாதுகாக்கவில்லை என்று கூறி, ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒருசேர அவரை வலது பக்கத்திலிருந்து இருந்து தாக்கிப் பேசி வருகின்றனர்.

காஸாவில் கள நிலவரப்படி, போர்நிறுத்த எல்லையாகக் கருதப்படும் “மஞ்சள் கோட்டை” தாண்டி இஸ்ரேலியப் படைகள் சீராக முன்னேறி வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவான ஆயுதக் குழுக்கள், பாலஸ்தீனக் குடும்பங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவர்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி வருகின்றன.

இடம்பெயர்ந்த 26 வயதான பாலஸ்தீனியரான வேல் நாயிஃப் அபு அல்-அஜீன் தி கார்டியன் நாளிதழிடம் கூறுகையில், ஆயுதமேந்திய நபர்கள் மதியம் 1 மணிக்கு தமது பகுதிக்குள் நுழைந்து, இரவு 10 மணிக்குள் வீடுகளை காலி செய்யுமாறு குடியிருப்பாளர்களுக்கு அவகாசம் அளித்தனர் என்றார். ஐரோப்பிய வெளியுறவு உறவுகளுக்கான கவுன்சிலின் முஹம்மது ஷஹாதா அந்த நாளிதழிடம் கூறுகையில், நெதன்யாகுவின் இந்த உத்தரவு “செல்வதற்கு வேறு இடமே இல்லாத பல மக்களுக்கு மரண தண்டனையாக அமையும்” என்று குறிப்பிட்டார்.

லெபனானில், யுனெஸ்கோவால் (UNESCO) பாதுகாக்கப்பட்ட 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலுவைப்போர் காலத்துக் கோட்டையான போபோர்ட் கோட்டையின் (Beaufort Castle) மீது கடந்த புதன்கிழமை இஸ்ரேலிய பீரங்கிப்படை தாக்குதல் நடத்தியது. இதற்கு லெபனானின் கலாச்சார அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடக்கு இஸ்ரேலில் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலல் ஸ்மோட்ரிச் எக்ஸ் (X) தளத்தில்: “எமது சிப்பாய்கள் மீது தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு ட்ரோனுக்கும் பதிலடியாக, 100 கட்டிடங்கள் தகர்க்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Loading