மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மிச்சிகனின் சகினாவ் நகரில் உள்ள நெக்ஸ்டீர் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தில் ஒரு கிளர்ச்சி நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காலையன்று, இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குள் மூன்றாவது முறையாக, ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்தின் (UAW) கிளை 699ஆல் முன்வைக்கப்பட்ட நிறுவனத்திற்கு ஆதரவான தற்காலிக ஒப்பந்தத்தை, அந்த வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையின் 1,300 தொழிலாளர்கள் வாக்கெடுப்பு மூலம் தோற்கடித்துள்ளனர். ஒட்டுமொத்த வாக்கெடுப்பில் 55-45 சதவிகிதம் பேர் எதிராக வாக்களித்த நிலையில், உற்பத்திப் பிரிவு தொழிலாளர்கள் 59 சதவிகிதம் வாக்களித்து அதை நிராகரித்தனர். ஏப்ரல் 2 அன்று முதல் தற்காலிக ஒப்பந்தம் 96.2 சதவிகிதம் வாக்குகளாலும், மே 14 அன்று இரண்டாவது ஒப்பந்தம் 73 சதவிகிதம் வாக்குகளாலும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு வந்துள்ளது. மேலும், மே 20-21 தேதிகளில் நடைபெற்ற வேலைநிறுத்த அங்கீகார வாக்கெடுப்பில் 86 சதவிகிதம் பேர் வாக்களித்து நிறைவேற்றினர்.
தனது வழக்கமான பாணியில், UAW எந்திரம், முக்கியப் பிரச்சினையை மழுப்பவும் தொழிலாளர்களின் எதிர்ப்பை மழுங்கடிக்கவும் வடிவமைக்கப்பட்ட சில மேலோட்டமான மாற்றங்களுடன் அதே ஒப்பந்தத்தை மீண்டும் தொழிலாளர்கள் முன் சமர்ப்பிப்பதன் மூலம் பதிலளித்துள்ளது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் ஒரு சூழ்நிலையில், வறுமை நிலை ஊதியத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தொழிலாளர்களுக்கு உணர்த்துவதே இதன் நோக்கம் ஆகும் —அதே சமயம், உற்பத்தித்திறன் கோரிக்கைகளும் படிநிலைக் கட்டமைப்புகளும், அடுத்தகட்ட விட்டுக்கொடுப்புகள் ஏற்கெனவே உள்ளடக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கின்றன.
நெக்ஸ்டீர் தொழிலாளர்களின் இந்த எதிர்ப்பானது தொழிற்சங்க எந்திரத்துடன் நேரடி மோதல் என்ற நிலையை எட்டியுள்ளது. மே 17, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற UAW கிளை 699 இன் உறுப்பினர் கூட்டத்தில், சர்வதேச சேவைப் பிரதிநிதியான ஜேசன் டக் —இவர் ஆண்டுக்கு 148,476 டாலர்கள் சம்பளத்தை பெறுவதுடன், சர்வதேச நிர்வாகத்திற்குப் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு 2021 விட்டுக்கொடுப்பு ஒப்பந்தத்திற்கான கிளை 699 இன் பேச்சுவார்த்தை குழுத் தலைவராக இருந்தவர்— தொழிலாளர்களைத் திட்டினார். தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஆலையை மூடிவிடுவோம் என்று மிரட்டினார். மேலும் உறுப்பினர்கள் தாங்கள் அச்சுறுத்தலுக்குப் பணிய மாட்டோம் என்று தெளிவுபடுத்தியபோது, கூட்டத்தின் நடுவிலேயே அவர் வெளிநடப்பு செய்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்ட கிளை 699 இன் செய்திமடல், தொழிலாளர்கள் மீதான அவமதிப்பைக் கக்கும் ஒரு ஆவணமாக இருந்தது. இந்த ஆவணம், “வாக்களிப்பின் முக்கியத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம்” என்று உரிமை கோரிய பின்னர், அது தற்போதைய ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும்; வேலைநிறுத்தம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும்; பணி அட்டவணைகள் மாற்றமின்றி உள்ளன என்றும்; “அனைத்து உறுப்பினர்களும் திட்டமிட்டபடி தொடர்ந்து பணியாற்ற வேண்டும்” என்றும்; “வேலைநிறுத்தம் அல்லது வேலை நிறுத்தம் தொடர்பான எந்தவொரு முடிவும் அதிகாரப்பூர்வ தொழிற்சங்க அங்கீகாரத்தின் மூலமாக மட்டுமே எடுக்கப்பட முடியும்” என்றும்; உறுப்பினர்கள் “ஊகங்களைத் தவிர்க்க வேண்டும்” மற்றும் “சரியான வழிகாட்டுதலுக்காக” காத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கிறது.
இந்த தொழிற்சங்க எந்திரம் தொழிலாளர்களிடம் குழந்தைகளிடம் பேசுவது போல் பேசுகிறது. இதனை எளிய மொழியில் மொழிபெயர்த்தால், அவர்களின் செய்தி இதுதான்: அதாவது, “உங்கள் வாக்குகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத்துடனான எங்கள் செயல்பாடுகளில் உங்கள் கருத்துக்களுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. வாயை மூடிக்கொண்டு, நாங்கள் சொல்வதைச் செய்யுங்கள்” என்பதாகும்.
தொடர்ச்சியாக நடைபெறும் “பேச்சுவார்த்தைகளில்” இருந்து கணிசமாக சிறந்த எதுவும் வெளிவரும் என்று நினைப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. நிறுவனம் ஏன் கூடுதலாக எதையும் வழங்க வேண்டும்? UAW எந்திரம் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்காது என்பது நெக்ஸ்டீர் நிர்வாகத்திற்குத் தெரியும். எனவே அதற்கு மாறுபட்ட எதையும் வழங்குவதற்கு அதற்கு எந்தக் காரணமும் இல்லை.
உண்மையில், இந்த நிறுவனம் திணிக்க முயலும் நிபந்தனைகள், நிறுவனத்திற்கும் தொழிற்சங்க எந்திரத்திற்கும் இடையே நீண்ட காலத்திற்கு முன்பே ஆலோசித்து முடிவு செய்யப்பட்டவை ஆகும். மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடப்பது எந்தவொரு அர்த்தமுள்ள வகையிலும் பேச்சுவார்த்தை அல்ல, மாறாக நிர்வாகத்தால் எழுதப்பட்ட அதே ஒப்பந்தத்தை நான்காவது, ஐந்தாவது அல்லது ஆறாவது வாக்கெடுப்பு மூலம் எவ்வாறு திணிக்க முடியும் என்பதைத் தீர்மானிப்பதற்கான ஒரு சதியாகும். அது தோல்வியடைந்தால், நடுவர் தீர்ப்பின் மூலம் நிபந்தனைகளைத் திணிக்கப் போவதாக தொழிற்சங்க எந்திரம் ஏற்கனவே சமிஞ்கை செய்துள்ளது.
UAW என்பது எந்தவொரு வழக்கமான அர்த்தத்திலும் ஒரு தொழிற்சங்கம் அல்ல. அது, தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கூட்டாகப் போராடும் ஒரு அமைப்பும் அல்ல. அது, ஆண்டுக்கு 150,000 முதல் 270,000ம் டாலர்களுக்கும் மேல் சம்பளம் பெறும் அதிகாரிகளால் நிரம்பிய ஒரு அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. அந்த அதிகாரிகள், பெருநிறுவனத்தின் மனிதவளத் துறையின் ஒரு அங்கமாக, தொழிற்துறை பொலீசாக செயல்படுகிறார்கள்.
2024-ல் UAW-வின் முதல் 15 அதிகாரிகள் மட்டும் 3.2 மில்லியன் டாலர்களை ஊதியமாக பெற்றனர். UAW-வின் தலைவர் பெய்ன் 274,407 டாலர்களைப் பெற்றார். அதே சமயம், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட UAW கண்காணிப்பாளரின் 93 பக்க அறிக்கை, அவரது உள்வட்டத்திற்கு சவால் விடுபவர்களின் ‘தொண்டையை அறுப்பதாக’ விடுக்கப்பட்ட மிரட்டல்களை ஆவணப்படுத்தியுள்ளது.
2022 இல் UAW தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவரும், 2026 இல் மீண்டும் போட்டியிடுபவருமான மேக் ட்ரக்ஸ் தொழிலாளி வில் லெஹ்மன், 2022 இல் பெய்ன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரது சொந்த சம்பளம் மட்டுமே மாறும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மதிப்பீடு அனைத்து அம்சங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சங்க எந்திரத்தின் துரோகங்கள் இன்னும் கொடூரமானதாகவும் வெட்கமற்றதாகவும் மாறியுள்ளன.
இந்த எந்திரம் எவ்வளவு அதிகமாகத் துரோகம் இழைக்கிறதோ, அவ்வளவு ஆக்ரோஷமாக ஜனநாயகக் கட்சியைச் சுற்றியுள்ள போலி இடது அமைப்புகள் அதனை ஊக்குவிக்கின்றன. அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பு பெயினை ஒரு சிறந்த சீர்திருத்தவாதியாக விளம்பரப்படுத்தும் அரசியல் நடவடிக்கையில் நெருக்கமாக ஈடுபட்டுள்ளது.
பொருளாதாரத் தேசியவாதத்தின் அடிப்படையில் ட்ரம்புடன் ஒரு நடைமுறை கூட்டணியை ஏற்படுத்தியுள்ள பெயினுடன், DSA-விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய உதவியாளர்கள் சொலிடாரிட்டி ஹவுஸில் இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள்.
குறிப்பாக, பெயினை தீவிரமாக விளம்பரப்படுத்தி வந்த DSA உடன் இணைந்த ஜாகோபின் பத்திரிகை, நெக்ஸ்டீர் போராட்டத்தைப் பற்றி துல்லியமாக எதையும் எழுதவில்லை. அவர்கள் இந்த எந்திரத்தின் துரோகங்கள் இருந்தபோதிலும் அதை ஆதரிக்கவில்லை, மாறாக அந்த துரோகங்களின் காரணமாகவே அதை ஆதரிக்கிறார்கள். இந்த எந்திரத்தைப் போலவே, அவர்களும் தொழிலாளர்களுக்கு முற்றிலும் விரோதமான மேல்-நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவினருக்காகப் பேசுகிறார்கள்.
இந்த தொழிற்சங்க எந்திரத்தை சீர்திருத்த முடியாது. அதிகாரத்துவம் தொழிலாளர்களின் பிரதிநிதி அல்ல. மாறாக, அது தொழிலாளர்களின் எதிரி. வேலைநிறுத்த நடவடிக்கை உட்பட எந்தவொரு உண்மையான போராட்டத்தையும் இந்த எந்திரம் எடுக்கப்போவதில்லை. அது தொழிலாளர்களாலேயே தயாரிக்கப்பட்டு வழிநடத்தப்பட வேண்டும்.
சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியானது (IWA-RFC), தொழிற்சங்க எந்திரங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் இவை இரண்டுக்கும் சேவை செய்யும் அரசியல் கட்சிகளிடமிருந்து முற்றிலும் சுயாதீனமாக, பணியிடத்தில் உள்ள தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாகக் கட்டுப்படுத்தப்படும் புதிய அமைப்புகளை உருவாக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்துகிறது. அதிகாரத்துவத்திடமிருந்து அதிகாரத்தை சாமானிய தொழிலாளர்களிடம் மாற்றுவதும், தொழிலாளர்களுக்கும் அவர்களின் கூட்டுப் போராட்டத்திற்கும் இடையிலான ஒரு நிறுவன ரீதியான தடையாக இருக்கும் இந்த எந்திரத்தை ஒழிப்பதும் தான் இப்போதைய பணியாகும்.
இந்த முறைமை UAW க்கு மட்டும் தனித்துவமானது அல்ல. ஒவ்வொரு தொழில்துறையிலும் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சங்க எந்திரமும் இதே அடிப்படை வழியில் தான் செயல்படுகிறது. இந்த ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், நியூ யோர்க் மாநில செவிலியர்கள் சங்கம் ஒரு வரலாறு காணாத அளவிற்கு 41 நாள் வேலைநிறுத்தத்தை முடக்கியதுடன், தொழிலாளர்கள் படிப்பதற்குக் கூட வாய்ப்பளிக்கப்படாத விட்டுக்கொடுப்பு ஒப்பந்தங்களின் கீழ் 15,000 செவிலியர்களை மீண்டும் வேலைக்கு அனுப்பியது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், ஐக்கிய உணவு மற்றும் வர்த்தக தொழிலாளர் சங்கத்தின் (UFCW) கிளை 7, கொலராடோவின் கிரீலியில் உள்ள JBS மாட்டிறைச்சி ஆலையில் 3,800 தொழிலாளர்கள் நடத்திய மூன்று வார கால வெளிநடப்பு, 60 ஆண்டுகளுக்கும் மேலான மிகப்பெரிய அமெரிக்க இறைச்சி பதப்படுத்தும் வேலைநிறுத்தத்தை முடக்கியது. வேலைநிறுத்தத்தின் போது ஆலையின் செயல்பாடுகளைத் தொடர கருங்காலி “மாற்றுத் தொழிலாளர்களை” அனுமதித்த பின்னர், ஏப்ரல் 7 அன்று ஒப்பந்தம் எதுவுமின்றி தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு UFCW உத்தரவிட்டது.
இத்தகைய எண்ணற்ற பிற உதாரணங்கள் உள்ளன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தொழிலாளர்களின் சுயாதீனமான நடவடிக்கை பெருநிறுவனங்களின் இலாபங்களையோ அல்லது எந்திரத்தின் சொந்த நிறுவன ரீதியான நிலையையோ அச்சுறுத்துவதைத் தடுப்பதற்காக, தொழிற்சங்க அதிகாரத்துவம் நிர்வாகத்துடன் கைகோர்த்துச் செயல்படுகிறது.
நெக்ஸ்டீரில் நடப்பது சர்வதேச தொழிலாள வர்க்கம் முழுவதும் நடந்து வரும் ஒரு கிளர்ச்சியின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். இத்தாலியில், சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் காஸா இனப்படுகொலைக்கு எதிராக தொழிலாளர்கள் இந்த மாதத்தில் மட்டும் மூன்று பொது வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளனர் — அதே நேரத்தில் CGIL, CISL மற்றும் UIL அதிகாரத்துவங்கள் வேண்டுமென்றே இதில் பங்கேற்காமல் விலகியிருந்தன. ஜேர்மனியில், 160,000 வேலை இழப்புகள் ஏற்பட்ட போதிலும் தொழிற்சங்கம் ஒரு தொழிற்துறை நடவடிக்கையைக் கூட ஒழுங்கமைக்க மறுத்துள்ளதால், முக்கிய நிறுவனங்கள் முழுவதும் ஐ.ஜி மெட்டால் தொழிற்சங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. பொலிவியாவில், ஒரு காலவரையற்ற தேசிய வேலைநிறுத்தம் நாட்டை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அதே நேரத்தில் COB தொழிற்சங்க எந்திரம் இந்த எதிர்ப்பைக் கட்டுப்படுத்த தீவிரமாக வேலை செய்கிறது.
நெக்ஸ்டீர் தொழிலாளர்கள் ஒரு சுடரை ஏற்றியுள்ளனர், அதை வாகனத் துறை முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள தொழிலாளர்கள் கவனித்து வருகின்றனர்.
நெக்ஸ்டீர் தொழிலாளர்கள் அடுத்த கட்டத்தை எடுக்குமாறு IWA-RFC வலியுறுத்துகிறது: மதிப்பிழந்த கிளை 699 பேச்சுவார்த்தைக் குழுவிலிருந்து சுயாதீனமாக, போராட்டத்தின் செயல்பாட்டுத் தலைமையாக நெக்ஸ்டீர் தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுவை உருவாக்கி விரிவுபடுத்துங்கள். தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிலேயே ஒரு மாபெரும் உறுப்பினர் கூட்டத்தை நடத்தக் கோருங்கள். வெள்ளிக்கிழமை இரவு ஒப்பந்தம் முடிவடைந்த டானா தொழிலாளர்களுடனும், ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் முடிவடையவிருக்கும் அமெரிக்கன் ஆக்சில் தொழிலாளர்களுடனும், நெருக்கடியான தருணங்களில் இருக்கும் பிரிட்ஜ்வாட்டர் இன்டீரியர்ஸ் மற்றும் மேக்னா சீட்டிங் தொழிலாளர்களுடனும், ஏற்கெனவே மாற்றுப் பணியாளர்களின் பகுதிகளை ஏற்க மறுப்பதாக உறுதியளித்துள்ள மூன்று முக்கிய வாகன உற்பத்தி நிறுவனங்களின் — போர்டு ரூஜ் மற்றும் பிற இடங்களில் உள்ள — தொழிலாளர்களுடனும் தொடர்புகொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கம் உருவாக்கத் தூண்டப்படும் பாதையே முன்னோக்கிச் செல்வதற்கான பாதையாகும்: அது சுயாதீனமான அமைப்பு, புதிய போராட்ட நிறுவனங்கள், மற்றும் சர்வதேச தொழிலாளர் இயக்கத்திற்கு முக்கியத் தடையாக இருந்துவரும் அதிகாரத்துவ அமைப்புகளுடனான ஒரு நனவான முறிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
