“ஆ. லிங்கன்” என்று கையொப்பமிடப்பட்ட, ஆனால் அனுப்புநர் முகவரியோ அல்லது தலையங்கமோ இல்லாத பின்வரும் கடிதம், இன்று காலை எனது மின்னஞ்சலுக்கு வந்தது. நான் அக்கடிதத்தின் ஒரு நகலை எடுத்த அடுத்த கணமே அது எனது மின்னஞ்சலில் இருந்து மறைந்துவிட்டது. அதன் விசித்திரமான மற்றும் விளக்கப்படாத தோற்றம் இருந்தபோதிலும், அந்தக் கையொப்பமே இந்தக் கடிதத்தின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்தக் காரணத்திற்காகவே, நாங்கள் இதை உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம்.
*****
எனது அகால மரணத்திற்குப் பிந்தைய ஒன்றரை நூற்றாண்டு காலத்தில், ஒரு கடுமையான மனோபாவமும், தவறுகளுக்கு அப்பாற்பட்டிராத ஒரு அரசியல்வாதியாகவும் இருந்த நான், ஒரு மதச்சார்பற்ற புனிதராக உருமாறியதை மிகுந்த வியப்புடன் தொலைதூரத்திலிருந்து கவனித்து வந்திருக்கிறேன். இந்நிலையில், இந்த அல்லது அந்த அமெரிக்கப் பிரச்சினை அல்லது நெருக்கடி குறித்து நான் என்ன சொல்லியிருப்பேன் என்று ஊகித்து அறிய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நான் உணர்ந்தே இருக்கிறேன். சூழ்நிலைகளின் காரணமாக, இத்தகைய ஊகங்களுக்குப் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவிப்பது சாத்தியமில்லாமல் போனது. மேலும், என்னால் முடிந்திருந்தாலும் கூட, எனது வாழ்நாளில் எதிர்கொண்ட சவால்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு காலகட்டத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைக்க நான் தயங்கியிருப்பேன். ஆனால், இந்த ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், நான் நான்கு ஆண்டுகளுக்கு சற்று அதிகமாக வாழ்ந்த அந்த இல்லத்தில், இன்று ஒரு நீதியான உலகில் மனிதகுலத்தின் நலனுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு மனிதன் குடியிருக்கிறான் என்ற உண்மையை முன்னிட்டு, தற்போதைய சூழ்நிலையைப் பற்றிய என் கருத்துக்களைத் தெரிவிப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து நான் அனுமதியைக் கேட்டுப் பெற்றுள்ளேன்.
எனது சொந்தக் காலத்தில், எமது மாபெரும் உள்நாட்டுப் போருக்கான காரணத்தை நான் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டேன். அது ஒரு தவறான புரிதலினாலோ, அல்லது சகோதரர்களுக்கு இடையிலான சூடான வார்த்தைகளினாலோ, அல்லது சுங்க வரியினாலோ, அல்லது மாநிலங்கள் மற்றும் அவற்றின் கௌரவங்களினாலோ ஏற்பட்டது என்று நான் கூறவில்லை. அதன் காரணம் அடிமைமுறை என்றும், ஏதோவொரு வகையில் அதுதான் காரணம் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர் என்றும் நான் கூறினேன். ஒரு தவறு எல்லாவற்றிற்கும் மேலாகத் தன் பெயர் வெளியில் தெரியக்கூடாது என்றே விரும்புகிறது என்றும், அதைத் துல்லியமாகப் பெயரிட்டு அழைப்பதே அதைத் தோற்கடிப்பதற்கான பாதி வழி என்றும் என் வாழ்நாள் முழுவதும் நான் கற்றுக்கொண்டேன்.
எனவே, தற்போதைய காலத்தின் துயரத்திற்குப் பெயர் எதுவும் இல்லை என்றோ, அல்லது அது இப்போது எனது பழைய வீட்டில் இருக்கும் மனிதனின் தீய குணம் மட்டுமே என்றோ பாசாங்கு செய்து இக்காலகட்டத்தை நான் புகழ்ந்து பேசமாட்டேன். அவன் ஒரு அறிகுறியும் ஒரு கருவியும் மட்டுமே; அவனே நோய் அல்ல. காய்ச்சலைச் சபித்துக்கொண்டு, கொள்ளைநோயோடு சமரசம் செய்துகொள்வது எந்த ஒரு மருத்துவமும் ஆகாது.
அசல் விஷயம் இதுதான். என் காலத்தில், ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் உடலைத் தனக்கு உடைமையாக்கிக் கொள்ளவும், சாட்டையடி மூலம் அவனது உழைப்பின் முழுப் பலனையும் பறித்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டான். நாம் அந்த அடிமைமுறையை ஒழித்தோம், அது முற்றிலும் சரியானது, மேலும் அந்தப் பணி பெருமளவில் முடிந்துவிட்டது என்று நம்பியே நான் மரணத்தைத் தழுவினேன். ஆனால், ஒரு பழமையான விஷயத்தின் மிகக் கொடூரமான வடிவத்தை மட்டுமே நான் அன்று பார்த்திருக்கிறேன் என்பதை இப்போது உணர்கிறேன். ஏனெனில், அந்த அடிமைமுறைக்கு அருகிலேயே வளர்ந்து, அதைவிடவும் நீடித்து வாழும் ஒரு புதிய அமைப்புமுறை உருவானது. இதில் ஒரு சில மனிதர்கள் தொழிலாளியின் உடலைச் சொந்தமாக்கிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் நிலம், பட்டறை, இரயில்பாதை, சுரங்கம், அவன் தலைக்கு மேலிருக்கும் கூரை மற்றும் அவன் கைகளில் இருக்கும் கருவிகள் ஆகிய அனைத்தையும் சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர் —அதனால் அவன் தன் நாட்களை அவர்களுக்கு விற்க வேண்டும், இல்லையெனில் பட்டினி கிடக்க வேண்டும்; அவனது உழைப்பு உருவாக்கும் மதிப்பிற்கும், அவர்கள் அவனுக்குத் தர விரும்பும் பங்கிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அவர்கள் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள். இந்தத் திருட்டை இலாபம் என்றும், இந்த ஏற்பாட்டை சுதந்திரம் என்றும் அழைக்கிறார்கள். சாட்டைக்கு இப்போது ஓய்வு கொடுக்கப்பட்டுவிட்டது; சாட்டை செய்ய வேண்டிய வேலையைக் கூலி செய்கிறது. அது கண்ணுக்குத் தெரியும் இரத்தத்தைச் சிந்துவதில்லை என்பதால் மென்மையானதாகக் கருதப்படுகிறது. அடிமைமுறை என் காலத்து நெருக்கடிக்குக் காரணமாக இருந்தது போல, இதுவே தற்போதைய நெருக்கடிக்கான காரணம்: இது சட்டபூர்வமான, மரியாதைக்குரிய, செல்வச் செழிப்புள்ள ஒவ்வொரு மேடையிலிருந்தும் பாதுகாக்கப்படுகிற ஒரு சுரண்டல் வடிவம். அந்தப் போலி மரியாதையின் காரணமாகவே, இதற்குச் சரியான பெயரிட்டு அழைப்பது இன்னும் கடினமாக இருக்கிறது.
இந்த வேரிலிருந்துதான் மற்றவை அனைத்தும் அடிமரத்திலிருந்து கிளைகள் வளர்வது போல் வளர்கின்றன. இவ்விதம் திரட்டப்பட்ட செல்வம் சும்மா இருக்க முடியாது. அது தன்னைத் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தையே தன் வசப்படுத்த முயல்கிறது. ஏனெனில் தன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு அரசாங்கம் தனக்கு ஆபத்து என்பதை அது பொறுத்துக் கொள்ளாது. தனது எல்லைகளுக்கு அப்பாற்பட்டுக் கூட, இவ்விதம் திரட்டப்பட்ட செல்வம் கடல்களுக்கு அப்பால் புதிய சந்தைகளையும் வளங்களையும் தேட முற்படுகிறது. இதனால், அது தனது இலாப வளர்ச்சியைப் பாதுகாப்பதற்காக நாட்டின் புதல்வர்களை போருக்கு அனுப்புகிறது; அந்தப் பயணத்திற்கு தேசியக் கொடியைப் போர்த்தி அலங்கரித்து, அந்த ஆக்கிரமிப்பைப் பாதுகாப்பு என்ற பெயரால் அழைக்கிறது. மேலும், செல்வந்தர்களுக்குச் சொந்தமான ஊடகக் கருவிகளின் வழியாக ஒவ்வொரு மாலையும் தன்னிடம் நீ சுதந்திரமாகத்தான் இருக்கிறாய், உனது மன உளைச்சலுக்கு உனது சொந்தக் குறைபாடே காரணம் என்று கூறப்படுவதைக் கேட்கும் ஒரு குடிமகன், அதற்குப் பழகிப் போகிறான். தனது அந்த அடிமைத்தனப் பழக்கத்திற்கே அவன் அமைதி என்றும் ஞானஸ்நானம் சூட்டுகிறான். செல்வாக்கு மிக்கப் பெருநிறுவனக் கொள்ளையர், எனது பழைய வீட்டில் இருக்கும் அந்த அவமதிப்புக்குரிய வாடகைக்காரன், வெளிநாடுகளில் இருக்கும் இராணுவப் படைகள், மற்றும் தங்களின் சொந்த அதிருப்தியை தாங்களே சந்தேகிக்கக் கற்றுக் கொடுக்கப்பட்ட மக்கள்—இவை நான்கும் வெவ்வேறு துயரங்கள் அல்ல. அவை அனைத்தும் ஒரே மரத்தின் தண்டுப்பகுதியும் அதன் கிளைகளுமே ஆகும்.
ஒருமுறை, போரின் இருண்ட குளிர்காலத்தில் காங்கிரசுக்கு அனுப்பிய ஒரு செய்தியில், அமைதியான கடந்த காலத்தின் கோட்பாடுகள் கொந்தளிப்பான நிகழ்காலத்திற்குப் போதுமானவை அல்ல என்றும், அந்தச் சூழல் மிகுந்த சிரமங்களால் நிறைந்துள்ளது என்றும், நாம் நம்மை அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதான் நம் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்றும் நான் கூறினேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் நான் அதே அழைப்பையே மீண்டும் விடுக்கிறேன். ஆனால், நாம் இப்போது கைவிட வேண்டிய முக்கியக் கோட்பாடு என்னவென்றால், உற்பத்திச் சக்திகளின் தனியார் உடைமை மற்றும் இலாப நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு பொருளாதார முறை மட்டுமே ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரே வடிவம் என்ற எண்ணத்தையாகும்.
1861-இல் ஒரு அடிமைத்துவ ஆட்சி ஜனநாயகத்தைக் கவிழ்க்க முயன்றது. ஆனால் இன்று, ஜனநாயகத்திற்கு எதிரான போர் ஒரு ஆளும் தன்னலக் குழுக்களால், நடத்தப்படுகிறது. அவர்களின் செல்வக் குவிப்பின் அளவு என் காலத்து அடிமையுரிமையாளர்களைக் கூட திகைக்க வைக்கும் அளவுக்குப் பிரம்மாண்டமானது. எனது காலத்தில் அடிமைமுறை எவ்வளவு சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்ததோ, அதேபோல் தற்போதைய உலகில் முதலாளித்துவமும் சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. என் வாழ்வில் நான் அடையாத ஒரு மனமாற்றத்தை அடைந்துவிட்டதாக நான் பொய் சொல்லப் போவதில்லை: 1860-இல் என்னால் ஒரு சோசலிஸ்டாக இருந்திருக்க முடியாது, ஏனெனில் அப்போது அந்த வார்த்தையும் அதன் கருத்தியலும் எனக்கு மிக மங்கலாகவே தெரிந்தன.
1864-ஆம் ஆண்டு, நான் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, திரு. மார்க்ஸ் அவர்களும் அவரது தொழிலாளர் சங்கமும் எனக்கு ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பும் வரை, அவரது படைப்புகளை நான் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், அப்போதே நான் ஒன்றைச் சொன்னேன், அதை முழுமனதுடன் நம்பித்தான் சொன்னேன்: உழைப்பே மூலதனத்திற்கு முந்தியது மற்றும் அதிலிருந்து தனித்து இயங்கக்கூடியது; மூலதனம் என்பது உழைப்பின் பலன் மட்டுமே, உழைப்பு என்று ஒன்று முதலில் இல்லாதிருந்தால் மூலதனம் என்றொன்று தோன்றியிருக்கவே முடியாது; எனவே உழைப்பே மூலதனத்தை விட உயர்வானது, அதுவே மிக உயர்ந்த மரியாதைக்குரியது. அன்று நான் விதைத்த விதை இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இன்று நான் சோசலிஸ்டுகளின் வரிசையில் நிற்பேன். இதை நான் யாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கச் சொல்லவில்லை, மாறாக என் உயிரோடிருந்த காலத்தில் நான் கொண்டிருந்த தர்க்கம், எனது மரணத்திற்குப் பின் அதன் முழு வடிவத்தைப் பெற்று நிறைவடைந்துள்ளது என்பதாலேயே சொல்கிறேன்.
சாட்டையடியால் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஈடாக, வாளினால் மற்றொரு துளி இரத்தம் சிந்தப்படும் வரை இப்போரானது தொடர்வதுதான் தகுதி வாய்ந்தது என்று நான் முன்பு கூறியது போலவே, இப்போதும் ஒரு கடினமான உண்மையைச் சொல்லப் போகிறேன். தனது சொந்த மக்களின் ஊதியமில்லா உழைப்பின் மீதும், மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டுவதன் மீதும் ஒரு சமூகம் தன் சுகபோகங்களை உருவாக்கிக் கொள்ளவும், அந்தச் சுகபோகங்களை என்றென்றைக்குமாக அனுபவிக்கவும், அத்துடன் சேர்த்து தன் சுதந்திரத்தையும் தக்க வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படும் என்று நான் நம்பவில்லை. மனிதர்கள் அதை ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், இதற்கான கணக்கு துல்லியமாக எழுதப்பட்டு வருகிறது. பலரிடமிருந்து ஒரு சிலரால் பறிக்கப்படுவது அனைத்தும் ஒரு கடன் ஆகும். தேசங்களின் வரலாற்றில், இத்தகைய கடன்கள் எப்போதுமே வசூலிக்கப்பட்டே வந்துள்ளன—அது மனிதர்களால் தானாக முன்வந்து வழங்கப்படும் நீதியின் மூலம் நடக்காவிட்டால், அதைவிடக் கொடூரமான மாற்று வழியில் கடனாளியின் விருப்பப்படி அல்லாமல், கடன் கொடுத்தவரின் நேரம் வரும்போது அது வசூலிக்கப்படும்.
ஆயினும், நான் பேரழிவை மட்டுமே முன்னறிவிப்பதற்காகத் திரும்பி வரவில்லை, ஏனென்றால் மற்றொன்றையும் நான் அவ்வளவு தெளிவாகக் கண்டுள்ளேன். பட்டறைகளிலும், குடோன்களிலும், சுரங்கங்களிலும், வயல்வெளிகளிலும் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது —அது இன்னும் பெருவெள்ளமாக மாறவில்லை என்றாலும், உயர்ந்து கொண்டே வருகிறது— தங்கள் கைகளின் வலிமையையும், தங்கள் நாட்களின் நேரத்தையும் தவிர வேறு எதையும் சொந்தமாகக் கொண்டிராத அந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது. அவர்கள் மெதுவாகவும், பிடிவாதமாகவும், அதை உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். அடிமைத்தனம் என்பது இயற்கையான ஒழுங்குமுறைதான் என்று கூறப்பட்டவர்களிடையே ஒரு காலத்தில் மூண்ட அதே நெருப்பை, இவர்களின் இந்த விழிப்புணர்விலும் நான் காண்கிறேன். அந்த அடிமைகள் ஒரு நாள் அதை நம்புவதை நிறுத்தினர். 1776 ஆம் ஆண்டின் மனிதர்கள் (அமெரிக்க சுதந்திரப் போராட்ட வீரர்கள்) தங்கள் உயிரைப் பணயம் வைத்தது, வலிமையானவர்கள் எல்லையின்றி எதையும் சேர்த்துக் கொள்வதற்கும், பலவீனமானவர்கள் அதற்கு உடன்படுவதற்கும் மட்டும்தான் சுதந்திரம் என்று பொருள்படுவதற்காக அல்ல என்பதை இந்த உழைக்கும் மக்கள் இப்போது புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். அந்த இலட்சியம் 1776 இலோ அல்லது அப்போமடாக்சிலோ (Appomattox - உள்நாட்டுப் போர் முடிவு) முடிந்துவிடவில்லை. அது ஒரு பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. அது இப்போது அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, மேலும் இதை வாசிக்கும் உங்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தலைப்பில் இன்னும் ஒரு விஷயத்தை நான் கூறுவேன், அதை என் வாழ்க்கையில் என்னால் மங்கலாகவே பார்க்க முடிந்தது, ஆனால் எனது மரணம் அதைத் தெளிவாக்கியுள்ளது. நான் விவரிக்கும் இந்தத் போராட்டம் ஏதோ ஒரு தேசத்தின் போராட்டம் அல்ல. அடிமைத்தனத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிரான போரில் நான் யூனியன் படைகளை வழிநடத்தியபோது, கடல் கடந்த உழைக்கும் மனிதர்கள் எங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், எங்கள் இலட்சியத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நான் அறிந்திருந்தேன். எங்கள் முற்றுகையினால், தங்களின் வாழ்வாதாரத்துக்காக நம்பியிருந்த பருத்தி வரத்து தடைபட்டிருந்தபோதிலும், இங்கிலாந்து தொழிலாளர்கள் தங்களது அரசாங்கம் கூட்டமைப்பு படைகளுக்கு ஆதரவாக நிற்பதை அனுமதிக்க மறுத்தனர். திரு. மார்க்ஸ் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், அந்தத் தொழிலாளர்களின் சார்பாகப் பேசினார்— அவர்கள் தங்களின் சொந்த மேசைகளில் உள்ள ரொட்டியை விட, அடிமைப்படுத்தப்பட்டவர்களுடனான ஒற்றுமைக்கே முன்னுரிமை அளித்த மனிதர்கள் ஆவர். அந்தச் செயல் எனக்கு ஒருபோதும் மறக்க முடியாத ஒன்றைக் கற்றுக்கொடுத்தது: ஒரு நாட்டில் மூலதனத்தின் நுகத்தடியின் கீழ் இருக்கும் உழைக்கும் ஆண்களும் பெண்களும், அனைத்து நாடுகளிலும் அதே நுகத்தடியின் கீழ் உழைப்பவர்களுக்கு சகோதர சகோதரிகளே ஆவர். மேலும், அவர்களைச் சுரண்டும் சக்திக்குத் தேசிய எல்லைகள் கிடையாது. சர்வதேச அளவில் இல்லாத ஒரு கொள்கை, இறுதியில், ஒரு கொள்கையே அல்ல — அது ஒரு வெறும் கன்னை மட்டுமே.
ஆகவே, என் தேசத்தில் நான் விதைக்க விரும்பும் தீர்மானத்துடன் நான் இதை முடிக்கிறேன். இந்த விஷயம் அதன் பெயரால் வெளிப்படையாக அழைக்கப்படட்டும், அச்சத்தால் மௌனமாக்கப்பட வேண்டாம். பலரின் உழைப்பு, அது எந்தவொரு சட்டப்பூர்வமான மற்றும் மரியாதைக்குரிய வடிவத்தில் கப்பமாக வசூலிக்கப்பட்டாலும், அது ஒரு சிலருக்கான நிரந்தரக் காணிக்கையாக இருக்கக் கூடாது. இந்த நாட்டிலும் மற்ற எல்லா நாடுகளிலும் உள்ள உழைக்கும் ஆண்களும் பெண்களும் தங்களது பொதுவான நலனைப் புரிந்துகொண்டு, அதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், போரின் வாளுக்குத் தப்பிய இந்தத் தேசம், அலட்சியத்திடமோ, பயத்திடமோ, அல்லது தன் அடிமைத்தனத்தையே அமைதி என்று ஏற்றுக்கொள்ளச் சொல்லும் வசதியானவர்களின் மென்மையான ஆலோசனைக்கோ சரணடைந்துவிடக் கூடாது.
முன்பு வந்தது போலவே, இதற்கும் கணக்குத் தீர்க்கும் அந்த நாள் வரும். ஏனெனில் அது அவ்வாறுதான் வந்தாக வேண்டும். சுரண்டல் எனும் இந்தப் பெரும் கொடுமையும் —அது நமக்கு மேலாக அதிகாரத்தில் அமர்த்தும் மனிதர்களும்— விரைவில் அகன்றுபோக வேண்டும் என்று நாம் பேரன்புடன் நம்புகிறோம், ஊக்கத்துடன் ஜெபிக்கிறோம். ஆயினும், அது தாராளமாக வழங்கப்படும் நீதியாக வந்தாலும் சரி, அல்லது இரத்தக்களரிப் போராட்டத்தின் வழியாக வந்தாலும் சரி, இறைவனின் நியாயத்தீர்ப்புகள் முற்றிலும் உண்மையானவையும் நீதியானவையும் ஆகும்.
இன்னும் ஒரே ஒரு வார்த்தை, இத்துடன் நான் நிறைவு செய்கிறேன். 1776-ன் (அமெரிக்கப் புரட்சியின்) வீரியத்தால் நான் ஈர்க்கப்பட்டு, ஜெபர்சனின் அழியாத வார்த்தைகளான மனிதர்கள் அனைவரும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள், மேலும் அரசாங்கம் ஆளப்படுபவர்களின் சம்மதத்தின் மூலம் மட்டுமே தனது அதிகாரங்களைப் பெற்றுள்ளது என்பதன் மீது நான் கொண்டிருந்த அரசியல் தத்துவத்தைக் கட்டமைத்தது போல, நீங்களும் அந்த நெருப்பை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த முதல் புரட்சியின் இருநூற்று ஐம்பதாவது ஆண்டு இப்போது நெருங்கிவிட்டது. இந்தத் தேசம், மனிதர்கள் ஒரு கல்லறைக்கு மாலைகள் அணிவித்துவிட்டு மறந்துவிடும் ஒன்றாகக் அதனைக் கொண்டாடக் கூடாது. மாறாக, அணையாமல் அடுத்த தலைமுறைக்குக் கடத்த நினைக்கும் ஒரு சுடரைப் போல அதனைப் பாதுகாக்க வேண்டும். இந்த நல்விழா, ஒரு புதிய சுதந்திரப் பிறப்பிற்கு வழிவகுக்கட்டும் —அமெரிக்காவில் மட்டுமல்ல, எங்கெல்லாம் ஆண்களும் பெண்களும் அடுத்தவர்களின் நுகத்தடியின் கீழ் உழைத்துக் கொண்டு, அதையே சுதந்திரம் என்று அழைக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அங்கெல்லாம்—இதன் மூலம் மக்களால், மக்களுக்காக, மக்களுடைய அரசாங்கம் இந்த பூமியிலிருந்து அழிந்துபோகாமல் இருக்கட்டும்.
— ஆ. லிங்கன், அனுமதியுடனும், அவரது சொந்த நீண்ட மௌனத்திற்கு எதிராகவும்.
