முன்னோக்கு

சீனாவில் சுரங்கப் பேரழிவு: உலகளாவிய தொழில்துறைப் படுகொலைக் களத்தில் மற்றுமொரு துன்பம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.

சீனாவில் 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழ்ந்த மிக மோசமான சுரங்கப் பேரழிவில், கடந்த வெள்ளிக்கிழமை ஷான்சி மாகாணத்தில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கரமான எரிவாயு வெடிப்பில் 82 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 120க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதோடு மேலும் இருவரைக் காணவில்லை. பேராசை கொண்ட பெருநிறுவனங்களின் இலாப வேட்கைக்கு, உலகெங்கிலும் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களின் உயிரும் ஆரோக்கியமும் கீழ்ப்படுத்தப்படுவதால் அவர்கள் எதிர்கொள்ளும் அபாயகரமான மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த சூழல்களுக்கு இந்தத் துயரம் ஒரு தெளிவான உதாரணமாகும்.

வட சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள சாங்ஷி நகரின் கின்யுவான் மாவட்டத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரிச் சுரங்க வளாகத்தின் நுழைவாயிலில், ஞாயிற்றுக்கிழமை, மே 24, 2026 அன்று, ஒரு சோதனைச் சாவடியில் பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை நிறுத்துகின்றனர். [AP Photo/E. Eduardo Castillo]

இந்த வெடிப்பு, தனியாருக்குச் சொந்தமான ஷான்சி டோங்ஜோ நிலக்கரி குழுமத்தால் இயக்கப்படும் நான்கு சுரங்கங்களில் ஒன்றான லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் நிகழ்ந்தது. கடந்த ஆண்டு பாதுகாப்பு விதிமீறல்களுக்காக இந்தக் குழுமத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. சீனாவின் தேசிய சுரங்கப் பாதுகாப்பு நிர்வாகம், 2024இல் 'கடுமையான பாதுகாப்பு அபாயங்கள்' உள்ளதாகக் குறிப்பிடப்பட்ட 1,128 சுரங்கங்களில் ஒன்றாகப் பட்டியலிட்ட இந்தச் சுரங்கத்தில், அதிக அளவு வாயு இருந்ததால், வெடிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் இருந்தது.

பேரழிவு நடந்த இடத்திற்கு அவசரமாக அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள், சுரங்க அமைப்பின் துல்லியமற்ற வரைபடங்கள் மற்றும் நிலத்தடியில் பணியில் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாகக் குறிப்பிடப்பட்டதால் முடக்கப்பட்டனர். பல தொழிலாளர்களுக்குக் கட்டாய இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படவில்லை. அதிகாரப்பூர்வ விசாரணைகள் இப்போதுதான் தொடங்கியுள்ள நிலையில், வெடிப்பு நடந்த நேரத்தில் நிலத்தடியில் இருந்த 247 பேரில் 124 பேர் மட்டுமே சுரங்கத்திற்குள் நுழைந்ததாக உத்தியோகப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார்பன் மோனாக்சைடு உணரி ஒன்று, பாதுகாப்பற்ற வாயு அளவைக் குறிக்கும் தானியங்கி எச்சரிக்கையை எழுப்பிய போதிலும், அது புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த முரண்பாடுகள், சுற்றியுள்ள கின்யுவான் மாவட்டத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் பரவலாகக் காணப்படும் ஒரு நடைமுறையைச் சுட்டிக்காட்டுகின்றன. அதாவது, உற்பத்தியை அதிகரிக்கவும் வரிகளைக் குறைக்கவும், கண்காணிப்புக் கருவிகள் இல்லாத, ஒப்பந்தமற்ற தொழிலாளர்களைக் கொண்டு, அங்கீகரிக்கப்படாத, மறைவான சுரங்கப்பாதைகளை இயக்குவதே அந்த நடைமுறையாகும். மேலதிகமான சுரங்கக் குழிகள், நச்சு வாயுக்களை அகற்றுவதற்கும் வெடிக்கும் தன்மையுள்ள வாயுக்கலவை உருவாவதைத் தடுப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட காற்றோட்ட அமைப்புகளின் செயல்திறனையும் பாதிக்கின்றன.

82 தொழிலாளர்களின் மரணம், அருகிலுள்ள ஷாங்ஷுவாங் கிராமத்தில் உள்ள குடும்பங்களை வெகுவாகப் பாதிக்கும். சுரங்கத் தொழிலாளர்கள் தங்களின் அபாயகரமான வேலைக்காக கிராமப்புற ஊதிய விகிதத்தை விட அதிகமாகப் பெற்றாலும், அவர்கள் பெரும்பாலும் ஒரு கூட்டுக் குடும்பத்திற்கு ஒரே நிதி ஆதரவாக இருக்கிறார்கள். லியுஷென்யு சுரங்கத்தில், வேலைக்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படும் ஒரு நிறுவன நகரத்தில் வசிக்கின்ற, பாதுகாப்பற்ற நிலைமைகள் குறித்துப் பேசினால் வேலை நீக்கத்தை எதிர்கொள்கின்ற உழைப்பாளிகள் முகங்கொடுக்கும் இக்கட்டான சூழ்நிலைகளை சர்வதேச சுரங்கத் தொழிலாளர்கள் உணர்ந்திருப்பார்கள். சீனாவிலும், அரசு நடத்தும் தொழிற்சங்கங்கள், உலகெங்கிலும் உள்ள தங்களின் சகாக்களைப் போலவே பெருநிறுவனங்களதும் அரசாங்கத்தினதும் சார்பாக தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு செயல்படுகின்றன.

கடந்த 15 ஆண்டுகளில், அரசாங்கம் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கங்களை மூடி, பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமையாக்கியதால், சீனாவில் நிலக்கரிச் சுரங்கங்களில் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை வியத்தகு அளவில் குறைந்துள்ளது. பல அரசுக்குச் சொந்தமான மெகா சுரங்கங்கள், அமெரிக்கா உட்பட மற்ற இடங்களில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களை விட மேம்படுத்தப்பட்ட அதிநவீன 5ஜி கண்காணிப்பு அமைப்புகள், நிலக்கரி வெட்டும் ரோபோ இயந்திரங்கள் மற்றும் தானியங்கி இழுவை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இவை நிலக்கரிச் சுரங்க முகப்பில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைக் குறைக்கின்றன.

உற்பத்தி அதிகரித்த போதிலும், சீனாவின் நிலக்கரிச் சுரங்கங்களில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் இருந்து சில நூறுகளாகக் குறைந்துள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இறப்பு எண்ணிக்கை 2000ம் ஆண்டில் 5,703 இலிருந்து 2020இல் 228 ஆகக் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில், ஒரு மில்லியன் டொன்னுக்கு ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4.12 இலிருந்து 0.058 ஆகக் கணிசமாகக் குறைந்திருப்பதையும் இது பிரதிபலிக்கிறது.

தொழில்துறையின் கோரிக்கைகளால் மட்டுமன்றி, நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கொடூரமான நிலைமைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மரணங்கள் சம்பந்தமான பரவலான கோபத்தாலும் உந்தப்பட்டே, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும் கடுமையான ஒழுங்குமுறைகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை நோக்கித் திரும்பிய போதிலும், சீனா எரிசக்திக்கு மட்டுமன்றி, உறுக்கு மற்றும் இரசாயனத் தொழில்களுக்கும் நிலக்கரியை பெருமளவில் சார்ந்துள்ளதோடு வருடாந்திர பூகோள நிலக்கரி உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்ட பங்கைக் கொண்டுள்ளது.

ஷான்சி மாகாணம் நாட்டின் நிலக்கரி இருப்புகளில் ஏறக்குறைய கால் பகுதியைக் கொண்டுள்ளதுடன் எஃகு தயாரிப்புக்குத் தேவையான கோக்கிங் நிலக்கரியின் பிரதான உற்பத்தியாளருமாகும். இந்த மாகாணத்தில் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தும் சுமார் 370 'நுண்ணறிவு' சுரங்கங்கள் இருந்தாலும், லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கம் உட்பட இன்னும் பல சுரங்கங்கள் பெருமளவில் மனித உழைப்பையே சார்ந்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வெடிப்புக்கு சீன அரசாங்கத்தின் பிரதிபலிப்பு, அதிக உயிரிழப்புகள் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமன்றி, பரந்த அளவில் தொழிலாள வர்க்கத்தினர் மத்தியிலும் கோபத்தைத் தூண்டும் என அது பீதியடைந்துள்ளதை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது. ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடனடியாக உயிர்களைக் காப்பாற்ற எந்த முயற்சியையும் விட்டுவிடக்கூடாது என்று வலியுறுத்தியதுடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட துணைப் பிரதமர் ஜாங் குவோகிங்கை ஷான்சிக்கு அனுப்பினார். ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகிய இருவரும், இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இருப்பினும், அரசு ஊடகங்கள் உள்ளூர் மற்றும் மாகாண அளவிலான ஒழுங்குமுறை அதிகாரிகளின் பங்கைப் பரிசோதிப்பதை விடுத்து, சுரங்க நிர்வாகத்தின் குற்றத்தின் மீது தங்கள் கவனத்தைச் செலுத்தியுள்ளன. ஆயினும், சீன சமூக ஊடகங்களில் பெருகிவிட்ட இலட்சக்கணக்கான பதிவுகளில் பல, சுரங்கத்தின் உள்ளார்ந்த அபாயங்களையும் முந்தைய பாதுகாப்பு மீறல்களையும் கருத்தில் கொண்டு, அது தொடர்ந்து செயல்பட ஏன் அனுமதிக்கப்பட்டது? என்ற வெளிப்படையான கேள்வியை எழுப்புகின்றன.

இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில், தொழிலாளர்களின் உயிர்கள் உட்பட, எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி மற்றும் இலாபங்களுக்கான இடைவிடாத உந்துதலே இருக்கின்றது. கடந்த 40 ஆண்டுகளாக சீன கம்யூனிஸ்ட் கட்சியால் முதலாளித்துவம் திட்டமிட்டு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் சீனத் தொழிலாள வர்க்கத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற துன்பங்களே, சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் சவாலாகும்.

உலகெங்கிலும், சுரங்கத் தொழிலாளர்கள் இந்தத் தொழிலின் உள்ளார்ந்த அபாயங்கள் காரணமாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். பூகோள தொழிலாளர் படையில் சுமார் 1 சதவீதத்தினருக்கு மட்டுமே இந்த தொழிற்துறை வேலைவாய்ப்பு அளித்தாலும், உலகளவில் ஏற்படும் அனைத்து வேலைத்தள மரணங்களிலும் 8 சதவீதத்திற்கும் அதிகமானவை இங்குதான் நடக்கின்றன.

இந்த ஆண்டின் மிக மோசமான பேரழிவு, கொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ரொபாயா சுரங்கங்களில் ஏற்பட்டது. ஜனவரி 28 அன்றும் மார்ச் 4 அன்றும் இரண்டு சுரங்கங்கள் இடிந்து விழுந்ததில் அறுநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். உலகின் டான்டலம் (இரசாயணத் தனிமம்) இருப்பிற்கு 15 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை இந்தச் சுரங்கங்கள் அளிக்கின்றன.

இருப்பினும், சுரங்க மரணங்கள் தொழில்நுட்பத்தில் பின்தங்கிய பகுதிகளில் மட்டுமன்றி, பிரதான முதலாளித்துவ நாடுகளிலும் தொடர்ந்து நிகழ்கின்றன. கடந்த வாரம் அமெரிக்காவில் தனித்தனி சம்பவங்களில் இரண்டு சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்: கென்டக்கியில் உள்ள ஒரு திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கத்தில், 25 வயதான மெக்கானிக் பிரஸ்டன் பொல்லார்ட் மீது கனரக உபகரணங்கள் விழுந்ததில் அவர் நசுங்கி இறந்தார்; மற்றும் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு நிலத்தடி நிலக்கரிச் சுரங்கத்தில் விழுந்ததில் 34 வயதான ஜக்காரே வோல்ஃப் கொல்லப்பட்டார்.

பல தசாப்தங்களில் நிகழ்ந்த மிக மோசமான நிலக்கரிச் சுரங்கப் பேரழிவுகளில் ஒன்றாக, 2010 ஏப்ரல் 5 அன்று மேற்கு வர்ஜீனியாவில் உள்ள அப்பர் பிக் பிராஞ்ச் சுரங்கத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிவிபத்தில் 29 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் துயரச் சம்பவம் தடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான்கு தனித்தனி விசாரணைகள் கண்டறிந்த போதிலும், மாஸ்ஸி எனர்ஜிக்குச் சொந்தமான அந்தச் சுரங்கத்தில் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நியூசிலாந்தின் தெற்குத் தீவின் தொலைதூர மேற்குக் கடற்கரையில் உள்ள பைக் ரிவர் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 29 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இரண்டாவது வெடிவிபத்திற்குப் பிறகு மீட்புப் பணிகள் கைவிடப்பட்டன. பெரும் கடனில் மூழ்கியிருந்த பைக் ரிவர் கோல் நிறுவனம், அடிப்படை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஒரு அரச விசாரணை ஆணையம் கண்டறிந்த போதிலும் மீண்டும் யாரும் பொறுப்பேற்கவில்லை.

சீனா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அல்லது உலகின் வேறு எந்த இடமாக இருந்தாலும், சுரங்கத் தொழிலாளர்கள் ஒரே மாதிரியான ஆபத்துகளையும் அரசியல் சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். தொழிலாளர்கள் விஷயங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளாமல், நிர்வாகம், அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களதும் ஒருங்கிணைந்த சக்திகளுக்கு எதிராகத் தங்கள் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் போராட முடியாது.

உற்பத்தி மற்றும் பாதுகாப்பில் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஒவ்வொரு சுரங்கத்திலும் வேலைத்தளத்திலும் சுயாதீன தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைப்பதன் அவசியத்தை இது ஏற்படுத்துகிறது. தொழிற்சங்கங்களால் திணிக்கப்படும் தேசியத் தடைகளைத் தாண்டி, தொழிலாளர்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும், பல்வேறு தொழில்துறைகளிலும் சர்வதேச அளவிலும் தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும் உதவும் வகையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்முயற்சியால் சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேச கூட்டணி (IWA-RFC) உருவாக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இதுபோன்ற பேரழிவுகளின் மூல காரணமான இலாப முறைமையை ஒழிப்பதற்கும், சோசலிச அடிப்படையில் உற்பத்தியை பகுத்தறிவுடன் மறுசீரமைப்பதற்கும், சீனா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் ஐக்கியப்பட்டு போராட்டம் நடத்த வேண்டியது அவசியமாகும். சீனாவிலும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்குமாறும், உலக சோசலிச வலைத் தளத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading