இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை அரச அச்சகத் திணைக்கள ஊழியர்கள், தங்கள் ஊதியங்கள் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் செவ்வாயன்று திணைக்களத்தின் முன்பாக மறியல் போராட்டம் ஒன்றை நடத்தினர். திங்களன்று நடந்த வேலைநிறுத்தத்தில் 1,100 ஊழியர்களில் ஏறக்குறைய அனைவரும் பங்கேற்றதோடு மறுநாள் நடந்த மறியல் போராட்டத்தில் சுமார் 300 ஊழியர்கள் பங்குபற்றினர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் தங்களின் சம்பளத்தை பல்வேறு நிலைகளில் குறைத்து வருவதாக போராட்டக்காரர்கள் உலக சோசலிச வலைத்த தள (WSWS) செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அவர்களின் கூற்றுப்படி, மே மாதத்தில் அவர்களின் சம்பளத்தில் 75 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை வழங்கப்பட்டு வந்த சீருடைகள், பால் மா மற்றும் சவர்க்காரம் ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளன.
சம்பளக் குறைப்புகளுக்கு எதிராக அச்சுத் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியும் கோபமும் அதிகரித்து வருகிறது. தங்களின் தொழில் மற்றும் ஊதிய உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்க அச்சகத் தொழிலாளர்கள் நடத்தும் இந்தப் போராட்டம், அரசாங்கத்தின் கொடூரமான சிக்கனத் திட்டம் சம்பந்தமாக தொழிலாள வர்க்கத்தின் வெறுப்பைப் பிரதிபலிக்கிறது.
செவ்வாயன்று போராட்டத்தில் கலந்துகொண்ட பெயர் குறிப்பிடாத தொழிலாளி ஒருவர் WSWS நிருபரிடம் கூறியதாவது: “இந்தக் கொடுப்பனவானது அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் ஒரு பொதுவான கொடுப்பனவு. அது வெட்டப்பட்டதிலிருந்து, இப்போது எங்களுக்கு அடிப்படைச் சம்பளம் மட்டுமே கிடைக்கிறது. எங்களால் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. எங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப முடியவில்லை. தொலைதூரத்திலிருந்து வேலைக்கு வருபவர்கள் தங்கும் விடுதிகளில் தங்குகிறார்கள். அவர்களால் தங்கும் விடுதி வாடகையைச் செலுத்த முடியவில்லை. பொருட்களின் விலைகள் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. சர்வதேச நாணய நிதியம் (IMF) சொல்வது போலவே அரசாங்கம் செயல்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் அரச நிறுவனங்களை மூடிவிட்டு, தனியார் துறையை வலுப்படுத்த விரும்புகிறது. தொழிலாளர்கள் சலிப்படைந்து வேலையை விட்டு விலகும் ஒரு சூழ்நிலையை உருவாக்குவதேர அரசாங்கத்தின் விருப்பமாகும்.”
அரசாங்க அச்சகத்தில் உள்ள தொழிலாளர்களில் சுமார் 95 சதவீதம் பேர் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்ததாகவும், ஜே.வி.பி./தே.ம.ச. மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை அளித்து அந்த வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் கூறினார். “12 இலட்சத்திற்கு ஒரு புதிய காரை வாங்கலாம் என்று அவர்கள் சொன்னார்கள். ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குகிறோம் என்று சொன்னார்கள். நீங்கள் ஒரு அழகான வாழ்க்கையை வாழலாம் என்று சொன்னார்கள். இப்போது என்ன நடந்தது? விவசாயிகளுக்கு உரம் இல்லை. மக்களுக்கு மருந்து இல்லை. அரசாங்க ஊழியர்களின் ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலதிக நேர வேலை குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் இப்படி எப்படி வாழ முடியும்? நிலக்கரி ஊழல் உட்பட எல்லாவற்றாலும் ஏற்பட்ட இழப்புகள் மக்கள் மீது சுமத்தப்படுகின்றன. எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்கள் மீது வரி விதிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கோபமாகக் கூறினார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரைப் பற்றியும் பேசிய அந்தத் தொழிலாளி, அது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்றார். “போருக்கு முன்பு, இலங்கை அரசாங்கம் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாகக் கூறியது. ஆனால் அங்கே ஒரு ஏவுகணை தாக்கியபோது, இங்கே எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டது. அரசாங்கம் வாய் திறந்தால், அது பொய் சொல்லும்,” என்று அவர் இகழ்ச்சியுடன் கூறினார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான மற்றொரு தொழிலாளி, வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டதாகக் கூறினார்: “பொருட்களின் விலை உயரும்போது, வாழ்க்கைச் செலவும் உயர்கிறது. இங்குள்ள தொழிலாளர்கள் உண்ணாமலும் குடிக்காமல் கடுமையாக உழைக்கிறார்கள். சில இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன. காதுகளைப் பிளக்கும் அளவுக்கு இரைச்சல் அதிகமாக இருக்கிறது. ஆனாலும், நாங்கள் அதையெல்லாம் சகித்துக்கொண்டு, சிறிதளவு பணம் சம்பாதிப்பதற்காக உழைக்க வேண்டியுள்ளது. ஒரு வருடம் ஆகியும் எங்களுக்குச் சம்பளம் வரவில்லை. கொடுப்பனவுகளும் குறைக்கப்பட்டுள்ளன. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளத்திலிருந்து கடன்களைக் கழித்த பிறகு, ஒரு ரூபா கூட மிச்சமில்லை.”
அரசாங்க அச்சகத் திணைக்களத்தைத் தனியார்மயமாக்குவதற்காக ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமிட்ட வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே இந்தச் சம்பளக் குறைப்பு ஆகும். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வெகுஜன ஊடகம் மற்றும் சுகாதார அமைச்சர் நளின் டி ஜயதிஸ்ஸ பேசுகையில், “முந்தைய அரசாங்கத்தின் காலத்திலிருந்தே அரசாங்க அச்சகத் திணைக்களத்தில் சம்பளப் பிரச்சினை இருந்து வருகிறது. அதை ஒரு முறையான அமைப்புக்குக் கொண்டுவர இன்னும் முடியவில்லை. இந்த அச்சுத் திணைக்களம் திறைசேரியிலிருந்து அதிகப் பணத்தைச் செலவழித்து நடத்தப்படுகிறது. அரசாங்க அச்சுப் பணிகளை மேற்கொள்ளும் அதே வேளைய, வர்த்தகச் சந்தையில் போட்டியில் நுழைந்து, அச்சுத் திணைக்களத்தை இலாபகரமான நிலைக்குக் கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம். தற்போதுள்ள சம்பளம் மற்றும் படிமுறை அமைப்பு அதற்கு ஒரு தடையாக உள்ளது,” என்றார்.
தற்போதுள்ள சம்பள முறையைச் சரிசெய்ய நேரம் எடுக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர் ஜயதிஸ்ஸ, அச்சக ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்குப் பின்னால் அரசியல் தூண்டுதல் இருப்பதாக அச்சுறுத்தும் குற்றச்சாட்டை முன்வைத்தார். “வேலைநிறுத்தம் செய்து சரிவராது. அங்கே அரசியல் தூண்டுதல் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்,” என அவர் கூறினார்.
தொழிலாளர்களின் சம்பளக் குறைப்புப் பிரச்சினைக்கு அரசாங்கம் எந்தத் தீர்வையும் கொண்டு வராது என்பதையே அவரது கூற்றுகள் உணர்த்துகின்றன. புதிய ஊதிய முறை என்னவாக இருக்கும் என்று அவர் கூறவில்லை என்றாலும், ஊதியக் குறைப்பு என்பது அரசாங்கத்தின் திட்டம் என்பதும், அச்சகத்தை ஒரு தனியார் வாங்குபவருக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பதும் அதன் அர்த்தமாகும்.
தொழிலாளர்கள் கூறியபடி, முந்தைய அனைத்து அரசாங்கங்களிலும் தொடங்கப்பட்டதைப் போலவே, அச்சகப் பணிகளை நிறுவனத்திலிருந்து தனியார் துறைக்கு மாற்றும் செயல்பாடு தொடர்கிறது. அச்சகம் தற்போது சிரமப்படும், பாழடைந்த இயந்திரமாக மாறியுள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான அச்சகம், சர்வதேச நாணய நிதியம் தனியார்மயமாக்கப் பரிந்துரைத்துள்ள நிறுவனங்களில் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை அரசாங்கத்தின் முதன்மை நோக்கம், அச்சகத்தை எவ்வாறு இலாபகரமான நிறுவனமாக மாற்றுவது பற்றி அமைச்சர் ஜயதிஸ்ஸ கூறியிருப்பது ஓர் எச்சரிக்கையாகும். அது சாத்தியமில்லை என்றால், அந்த நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் தயங்காது.
அரசாங்க அச்சக ஊழியர்கள் ஊர்வலம் சென்ற போது.
அச்சகத் திணைக்களத்தில் உள்ள ஏனைய கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைத் தூண்டிவிடுவதாலேயே இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊதியம் குறைக்கப்பட்டாலும் தொழிலாளர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றே அவர் கூறுகிறார். அவரும் ஒரு தலைவராக இருக்கும் ஜே.வி.பி.யைச் சேர்ந்த அச்சகத் தொழிற் சங்கம், ஊதிய வெட்டுக்களைப் பொறுத்துக்கொள்ளுமாறு தொழிலாளர்களிடம் கூறி வருகிறது. ஜே.வி.பி. அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு சற்று முன்பிருந்தே, அதன் தொழிற்சங்கம் வேலைநிறுத்தங்கள் உட்பட தொழில்துறை போரட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுத்து வந்தது.
அச்சகத்தில் உள்ள ஏனைய தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகளின் முகவர் அதிகாரத்துவத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்து, அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவுவதற்கே அவை இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்கின்றன.
இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள், கடந்த சில மாதங்களாக அமைச்சர் ஜயதிஸ்ஸவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி, போராட்டம் ஒன்றை ஒழுங்கமைப்பதை வேண்டுமென்றே தவிர்த்து வருவதுடன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக மற்றும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் சம்பள வெட்டுக்களையும் தனியார்மயமாக்கலையும் தடுத்துவிட முடியும் என்ற ஒரு பாரதூரமான மாயையைத் தொழிலாளர்கள் மத்தியில் பரப்பி வருகின்றன.
செவ்வாய்க்கிழமை போராட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்துக்கள் மூலம் இது தெளிவுபடுத்தப்பட்டது. வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய அச்சக தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.எஸ்.ஆர். பெர்னாண்டோ, 'அரசாங்கம் இப்பிரச்சினையைத் தீர்க்காவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்' என்று ஒரு பொய் வாய்ச்சவடாலை விடுத்தார்.
'இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் அச்சகத்தை மூட முயற்சிக்கிறது. “நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்,' என்று அரசாங்க அச்சக முற்போக்கு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் நிமல் சந்திரசிறி கூறினார். மற்றொரு சங்கம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தக் கட்சிகள் அனைத்தும் மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் தலைவர்களும், தனியார்மயமாக்கல் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அனைத்து சிக்கன நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவாளர்களாக உள்ளனர். ஆட்சியில் இருந்தபோது, இந்தக் கட்சிகள் தொழிலாளர்களின் போராட்டங்கள் மீது பொலிஸ் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளைச் செயல்படுத்தின. அச்சு இயந்திரத்தை இயக்க முடியாவிட்டால், சுயவிருப்பு ஓய்வுத் திட்டத்தைச் செயல்படுத்தி தொழிலாளர்களைப் வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சில தொழிற்சங்கத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தொழிலாளர்களின் வேலைகளுக்கும் ஊதியங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் இந்த அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகளின் நடவடிக்கைகளையும் பிரச்சாரங்களையும் அவர்கள் நிராகரிக்க வேண்டும். நெருக்கடியில் இருக்கும் ஒரு முதலாளித்துவ அமைப்பில், எந்த நாட்டிலும் தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் பாதுகாப்பாக இல்லை. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போரினால் இலங்கையின் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கனத் திட்டத்தை அமுல்படுத்துவதை துரிதப்படுத்துகிறது.
முதலாளித்துவ நிறுவனங்களும் அவற்றின் பாதுகாவலர்களான முதலாளித்துவ அரசாங்கங்களும், தொழிலாளர்களின் உரிமைகளை பெருகிவரும் இலாப வேட்டைக்கு பலிகடாக்களாக்கியுள்ளன. இலங்கை மின்சார சபை கடந்த ஆண்டு முதல் ஆறு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஊழியர்கள் தனியார்மயமாக்கலுக்கும், வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் சம்பந்தமான நிச்சயமற்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
தொழிற்சங்கங்கள், அவற்றின் தலைவர்களால் அரசாங்கத்திற்கும் நிறுவனங்களுக்கும் கருவிகளாக மாற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அச்சகத் தொழிலாளர்களோ அல்லது தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு பிரிவினரோ தங்கள் உரிமைகளுக்காக ஒரு உண்மையான போராட்டத்தை நடத்த முடியாது. இதற்காக, தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும் முதலாளித்துவக் கட்சி முகவர்களையும் உள்ளே நுழைய அனுமதிக்காமல், தொழிலாளர்கள் தங்களின் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, சர்வதேச நாணய நிதிய வெட்டுக்களுக்கும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கும் எதிராக ஒரு பொதுப் போராட்டத்தை ஒழுங்கமைக்க வேண்டும். தொழிற்சங்கத் தலைவர்களின் வஞ்சகப் பேச்சுகளை நிராகரித்து, தொழிலாளர்கள் இந்த முன்நகர்வை எடுக்க வேண்டும்.
முதலாளித்துவ முறைமைக்குள்ளும், தேசிய அரச கட்டமைப்பிற்குள்ளும், தொழிலாள வர்க்கத்தால் தனது உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர்களின் கூட்டாளிகள் சர்வதேசத் தொழிலாள வர்க்கமே ஆகும்; அது, பிரதான முதலாளித்துவ நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும், தன்மீது திணிக்கப்படும் முதலாளித்துவ நெருக்கடியின் சுமைக்கு எதிராகப் போராட முன்வந்துள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சியால் முன்வைக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தைப் பற்றிய கலந்துரையாடலுக்கு முன்வருவதன் மூலம் செயற்பாட்டில் இறங்குமாறு அச்சகத் திணைக்கள மற்றும் ஏனைய துறைகளிலும் உள்ள தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
