முன்னோக்கு

இலத்தீன் அமெரிக்கக் கடற்பரப்பில் அமெரிக்காவின் கொலைவெறித் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க இராணுவம் ஒரு படகை அழித்து, கப்பலில் இருந்தவர்களை எந்தவொரு விசாரணையோ அல்லது சட்டப்பூர்வ நடைமுறையோ இன்றி கொன்ற காட்சிகளை அமெரிக்க தென்னக இராணுவக் கட்டளையகம் மே 30 அன்று வெளியிட்டது. [Photo: US Southern Command]

இலத்தீன் அமெரிக்கக் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்துவதாகக் கூறப்படும் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை இப்போது 200 பேரையும் தாண்டியுள்ளது. ஒரே வாரத்தில் நடந்த நான்காவது தாக்குதலான இந்த சமீபத்திய தாக்குதலில், கிழக்கு பசிபிக் பகுதியில் ஒரு சிறிய படகு தீப்பற்றி எரியும் வீடியோவை கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்க இராணுவம் வெளியிட்டது. இதில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மூன்று மனிதர்களையும் சேர்த்து, செப்டம்பர் 2, 2025 அன்று கரீபியனில் இந்த பாரிய படுகொலை நடவடிக்கையிலிருந்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது. இந்த நடவடிக்கை அக்டோபர் மாதம் கிழக்கு பசிபிக் கடல் பகுதிக்கும் விரிவடைந்து, சுமார் 60 படகுகளை அழித்துள்ளது.

பாரிய படுகொலைகள் ஒரு தினசரி, அதிகாரத்துவ நடவடிக்கையாக மாற்றப்பட்டுள்ளன. சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் ஏகாதிபத்தியக் கொள்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. இது, ஈரான் மற்றும் லெபனானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போருடன் இணைந்து அரங்கேறுகிறது — மார்ச் 2 முதல் லெபனானில் 3,371 பேர் இறந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகமும், ஈரானில் 3,636 பேர் இறந்துள்ளதாக HRANA என்ற மனித உரிமை அமைப்பும் கணக்கிட்டுள்ளன — மேலும் 70,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்துள்ள காஸா இனப்படுகொலையின் உச்சக்கட்டத்தின் மீது இது கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாரிய படுகொலைத் தாக்குதல் அமெரிக்காவிற்குள் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு நேரடி எச்சரிக்கையையும் விடுக்கிறது: கரீபியனில் பரிசோதிக்கப்படும் முறைகள் நாட்டிற்குள்ளும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

படகுகள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரைக் கூட ட்ரம்ப் நிர்வாகம் அடையாளம் காட்டவில்லை. பெயர்கள் எதுவும் வெளியிடப்படவில்லை, குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை, இறந்தவர்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களைச் செய்தார்கள் என்பதைக் காட்டும் எந்தவொரு ஆதாரமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அமெரிக்க இராணுவம் ஒவ்வொரு முறையும், படகுகள் “போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தன” என்று மட்டுமே திரும்பத் திரும்பக் கூறி, அதற்கு மேல் வேறு எதையும் வழங்குவதில்லை. இந்தத் தாக்குதல்கள் அனைத்திலும், மூன்று பேர் மட்டுமே உயிர் பிழைத்து மீட்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொலம்பியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்கள், தங்கள் உறவினர்கள் மீனவர்கள் அல்லது கரிபியன் தீவுகளுக்கும் தென் அமெரிக்கக் கடற் பகுதிக்கும் இடையில் பயணம் செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அடையாளம் காட்ட முன்வந்துள்ளனர். நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் நேர்காணல்களின்படி, கொலம்பியா மற்றும் ஈக்வடாரில் உள்ள முழு மீன்பிடி சமூகங்களும் தங்கள் வாழ்வாதாரத்தைக் கைவிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன.

ட்ரம்ப் நிர்வாகத்தின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் நிரூபிக்கப்படாதவை. மேலும், அவை நிரூபிக்கப்பட்டாலும் கூட, இந்தக் கொலைகள் குற்றங்களாகவே இருக்கும். உலகில் எங்கிருந்தாலும், எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி, விசாரணையின்றி, எந்தவொரு நீதித்துறை நடைமுறையும் இன்றி, வெறும் சந்தேகத்தின் பேரில் மட்டுமே மக்களுக்கு மரணதண்டனை நிறைவேற்ற முடியும் என்று ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதான் சட்டத்திற்குப் புறம்பான படுகொலையின் வரையறையாகும் — மேலும் கொல்லப்பட்ட ஒவ்வொருவரும் வாஷிங்டன் கூறுவது போலவே குற்றவாளிகளாக இருந்தாலும்கூட, இது சட்டத்திற்குப் புறம்பான கொலையாகவே நீடிக்கும்.

இந்த தாக்குதலின் குற்றகரமான தன்மை அதன் முதலாவது தாக்குதலிலேயே நிறுவப்பட்டது. ஆரம்ப ஏவுகணைத் தாக்குதலில் உயிர் பிழைத்த இருவர் தப்பித்து படகுகளின் சிதைந்த பாகங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தவித்தபோது, அவர்களைக் கொன்று முடிப்பதற்காக இரண்டாவது தாக்குதலுக்கு உத்தரவிடப்பட்டது. காயமடைந்த உயிர் பிழைத்தவர்களைக் கொல்வது ஜெனீவா உடன்படிக்கைகளின் கீழ் ஒரு அப்பட்டமான போர்க்குற்றமாகும். பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் படகிலிருந்த அனைவரையும் கொல்ல உத்தரவிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் நவம்பர் 28 அன்று செய்தி வெளியிட்டது.

இந்த இரு தாக்குதல்களிலும் படகில் இருந்த 11 பேரும் கொல்லப்பட்டனர் — முதல் தாக்குதலில் ஒன்பது பேரும், இரண்டாவது தாக்குதலில் உயிர் பிழைத்த இருவரும் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அன்றைய தினம் ட்ரூத் சமூகத் தளத்தில் முதல் தாக்குதலின் வீடியோவைப் பதிவிட்டார். இந்தக் கொலைகள் ஒரு காட்சிப் பொருளாகவும், அரசு எவரையும், எங்கும், முழுமையான தண்டனையின்றி கொல்ல முடியும் என்பதற்கான அச்சுறுத்தும் செயல் விளக்கமாகவும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

இன்சைட் குற்றவியல் நிறுவனத்தின் ஆய்வாளர்கள், இந்தத் தாக்குதல்கள் கடத்தல் நடவடிக்கைகளை குறிப்பிடத்தக்க வகையில் சீர்குலைக்கவில்லை என்று கண்டறிந்துள்ளனர். ஏனெனில், இந்த தாக்குதல்கள் கடத்தலைச் சீர்குலைக்கும் நோக்கத்துக்காக ஒருபோதும் நடத்தப்பட்டதில்லை.

கடலில் மேற்கொள்ளப்படும் இந்த படுகொலைத் தாக்குதலானது, இலத்தீன் அமெரிக்கா நாடுகள் மீதான அமெரிக்காவின் மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும், வாஷிங்டனுக்கு முழுமையாகப் அடிபணியாத அரசாங்கங்களுக்கு எதிராக ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை தயாரிப்பதற்கும் அல்லது பலப்படுத்துவதற்குமான ஒரு பரந்த தாக்குதலின் ஒரு அங்கமாகும். இதே தாக்குதல்தான் ஜனவரியில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை சிறப்புப் படையினர் கடத்தியதற்கும், கியூபாவிற்கு எதிரான இராணுவக் குவிப்பு மற்றும் எரிபொருள் முற்றுகைக்கும் காரணமாயிருந்தது.

மிகப் பரந்த அளவில், இந்தத் தாக்குதலானது பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கிற்கு எதிரான வாஷிங்டனின் நகர்வுகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது. இதில் பசிபிக் பெருங்கடலில், குறிப்பாக பெருவின் சான்கே துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீன மீன்பிடிக் கப்பல்களைக் கண்காணிப்பதும் அடங்கும். இந்தத் துறைமுகம் 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திறக்கப்பட்டு, சீன நிறுவனமான COSCO-வால் இயக்கப்படுகிறது. இந்நிறுவனத்தை, இலத்தீன் அமெரிக்காவில் தனது மேலாதிக்கத்திற்கு ஒரு மூலோபாய சவாலாக அமெரிக்கா கருதுகிறது.

இந்த மாபெரும் படுகொலை தாக்குதலுக்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் போலி-சட்ட அடிப்படையானது, கிட்டத்தட்ட 50 பக்கங்கள் கொண்ட நீதித்துறையின் இரகசியக் குறிப்பைச் சார்ந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அமெரிக்காவுடன் “ஆயுத மோதலில்” இருப்பதாக அந்தக் குறிப்பு கூறுகிறது—இது காவல் பணிக்கும் போருக்கும் இடையிலான வேறுபாட்டை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு மோசடியாகும். இதன் மூலம் நிர்வாக அதிகாரம் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி கொடிய வன்முறையைப் பிரயோகிக்க முடியும்.

இருப்பினும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என இவற்றை வகைப்படுத்துவது, ஒருபோதும் இராணுவப் பலத்தைப் பயன்படுத்த அங்கீகாரம் அளிக்காது. அதற்கு காங்கிரஸின் (நாடாளுமன்றத்தின்) சட்டம் தேவைப்படுகிறது. இதற்கு எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையோ அல்லது உடனடி அச்சுறுத்தல் பற்றிய நம்பகமான ஆதாரமோ இல்லை. சட்ட வல்லுநர்கள் இந்தத் தாக்குதல்களை போர் அதிகாரங்களை அரசியலமைப்பிற்கு முரணான முறையில் பறிக்கும் செயல் என ஒருமனதாக விவரித்துள்ளனர்.

கரீபியன் மற்றும் பசிபிக் பகுதிகளில் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிகவும் பரந்த ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. கடற்பகுதிகளில் இடம்பெறும் படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட அதே “பயங்கரவாத” நியாயவாதம், ஜனவரி 7 அன்று மினியாபோலிஸில் தனது காரில் இருந்து ஒரு நடவடிக்கையை கவனித்துக் கொண்டிருந்தபோது ICE முகவரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரெனீ குட் மற்றும் ஜனவரி 24 அன்று எல்லைப் பாதுகாப்பு முகவரால் சுட்டுக் கொல்லப்பட்ட செவிலியரும் போராட்டக்காரருமான அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் கொலைகளை நியாயப்படுத்த ட்ரம்பின் பிரதிநிதிகளால் பயன்படுத்தப்பட்டது.

அமெரிக்க வடக்கு கட்டளைப் பிரிவின் தளபதி ஜெனரல் கிரிகோரி கில்லோட், டிசம்பர் 11 அன்று செனட் ஆயுத சேவைகள் குழுவிடம், அமெரிக்க மண்ணில் உள்ள “பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்டவைகளுக்கு” எதிராக இத்தகைய தாக்குதல்களை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார்: “எனக்கு எந்தக் கவலையும் கிடையாது மற்றும் அது சட்டபூர்வமான உத்தரவு என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தால், நான் நிச்சயமாக அந்த உத்தரவை நிறைவேற்றுவேன்,” என்று அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்பு ஜனாதிபதி குறிப்பாணையில் (NSPM-7) முறைப்படுத்தப்பட்ட புதிய உள்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பின் கீழ், வெள்ளை மாளிகையும் நீதித்துறையும் அரசியல் எதிர்ப்பாளர்கள் மீது ஒரு பரந்த ஒடுக்குமுறையை கட்டாயமாக்குகின்றன. மேலும் “உள்நாட்டு பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்தப்படும் அமெரிக்கர்களும் இதே வழிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்களா என்பதைத் தெரிவிக்க அவை மறுக்கின்றன.

இந்த அப்பட்டமான சட்டவிரோதத்தன்மை மற்றும் ஆபத்தான முன்னுதாரணங்கள் இருந்தபோதிலும், அரசியல் ஸ்தாபனத்திற்குள் இருந்து இந்தத் தாக்குதல்களை நிறுத்துவதற்கான எந்தவொரு தீவிர முயற்சியும் இல்லை.

இப் பிராந்திய அரசாங்கங்களின் எதிர்வினை அனைத்து வகையான முதலாளித்துவ தேசியவாதத்தின் திவால்நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. ஆர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே மற்றும் ஈக்வடார் ஜனாதிபதி டேனியல் நோபோவா ஆகியோர் ட்ரம்ப்புடன் பகிரங்கமாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். போதைப்பொருள் கும்பல்களை இலக்கு வைப்பதாக கூறிக்கொண்டு, அமெரிக்கா மற்றும் ஈக்வடார் படைகள் மார்ச் மாதத்தில் “ஒட்டுமொத்தமாக அழிக்கும் நடவடிக்கை” என்பதைத் தொடங்கின. இந்த நடவடிக்கையில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டதாகவும், விவசாயத் தொழிலாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பல புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பெயரளவிலான “இடது” அரசாங்கங்களும் இந்த தாக்குதலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் உடந்தையாக இருந்துள்ளன. மெக்சிகோவின் கடல் பகுதியில் சந்தேகத்திற்குரிய படகுகளை மெக்சிகோ கடற்படை வழிமறிப்பதற்கான ஒரு உடன்பாட்டைப் பேச்சுவார்த்தை மூலம் எட்டிய பிறகு, மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், படகுகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்குத் தன் எதிர்ப்பைக் கைவிட்டார். அதே நேரத்தில், மெக்சிகன் மண்ணில் போதைப்பொருள் கடத்தல் தலைவர்கள் என்று கூறப்படுபவர்களை இலக்கு வைத்துக் கொலை செய்வது உட்பட, இரகசிய சி.ஐ.ஏ நடவடிக்கைகள் குறித்த ஊழலை அவர் எதிர்கொண்டுள்ளார். எல்லை தாண்டி அமெரிக்கப் படைகளை அனுப்புவோம் என்ற ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்காக வாஷிங்டனுடன் இராணுவ மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலேயே அவரது கவனம் தொடர்ந்து இருந்து வருகிறது.

கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ படகுகள் மீதான தாக்குதல்களை விமர்சித்துள்ளார். ஆனால் இந்த விமர்சனம், மதுரோ கடத்தப்பட்ட பிறகு ஐ.நா மற்றும் அமெரிக்க நாடுகளின் அமைப்பு (OAS) ஆகியவற்றின் அவசரக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுப்பதோடு சரி, அதற்கு மேல் செல்லவில்லை. இந்த படகுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் கொலம்பிய குடிமக்களும் அடங்குவர் என்ற போதிலும் அவர் இதோடு நிறுத்திக்கொண்டார். பெட்ரோ மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகிய இருவரும் முறையே பிப்ரவரி 3 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் தங்களது வெள்ளை மாளிகை சந்திப்புகளின்போது ட்ரம்ப்பின் மோதிரத்தை முத்தமிட்டு, அந்த தொடர் கொலையாளியை அவரது முகத்திற்கு நேராகப் பாராட்டிய போதிலும், படகுத் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு பொது எதிர்ப்பைக் கூட அவர்கள் வெளியிடவில்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தில், லூலா கூட்டு போதைப்பொருள் மற்றும் ஆயுதத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வாஷிங்டனுடன் ஒரு கூட்டாண்மையில் கையெழுத்திட்டார். ஆனால் மே 29 அன்று, பிரேசிலிய கும்பல்களை அமெரிக்கா “பயங்கரவாதி” என்று அறிவித்தது பிரேசிலிய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

இந்த மூன்று நிகழ்வுகளிலுமே பிராந்தியத்தின் மிகப்பெரிய வல்லரசு நாடுகள் (மெக்சிகோ, கொலம்பியா மற்றும் பிரேசில்) “இடது” தேசியவாதிகளால் ஆளப்படுகின்றன. இவர்கள் ட்ரம்புக்கு இடமளித்து, வெனிசுவேலாவுக்கு எதிரான நவ காலனித்துவ சதிப்புரட்சி, கியூபாவின் கழுத்தை நெரிக்கும் செயல் மற்றும் ஆழ்கடலில் அமெரிக்கா நடத்தும் கொலைவெறித் தாக்குதல் ஆகியவற்றுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இலத்தீன் அமெரிக்காவை மீண்டும் காலனித்துவப்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முனைப்பை, முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவையும் சார்ந்து எதிர்க்க முடியாது.

இது லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை திட்டவட்டமாக உறுதிப்படுத்துகிறது. தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியை அடைந்த நாடுகளில், உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பாகமாக தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற முடியும் என்பதை இக்கோட்பாடு நிறுவியது. இதில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை எதிர்ப்பதும் அடங்கும்.

அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சியின் எதிர்வினை, இலத்தீன் அமெரிக்காவை மீண்டும் காலனியாக்குவதற்கான இந்த இராணுவவாதத் தாக்குதல் இரு கட்சிகளுக்குமே பொதுவான கொள்கை என்பதை உறுதிப்படுத்துகிறது. ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்த போர் அதிகாரத் தீர்மானங்கள் தோல்வியடைந்தன. அவை நிறைவேறாது என்பதும், ஒரு தாக்குதலைக் கூட அவற்றால் நிறுத்த முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. காங்கிரஸில் உள்ள சில ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், இரகசிய விளக்கக் கூட்டங்களில் இருந்து வெளியேறிய பிறகு தாங்கள் “அதிர்ச்சியடைந்ததாகவும்” “ஏமாற்றமடைந்ததாகவும்” கூறினர். ஆனால், பாதுகாப்பு அமைச்சர் ஹெக்செத் திருத்தப்படாத தாக்குதல் காட்சிகளை ஒப்படைக்க வேண்டும் அல்லது அவரது பயண வரவுசெலவுத் திட்டத்தில் 25 சதவீதத்தை இழக்க நேரிடும் என்று மிரட்டுவதைத் தாண்டி அவர்கள் எதுவும் செய்யவில்லை.

இதற்கிடையில், அதே ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றக் குழுதான் இந்தத் தாக்குதல்களைத் தக்கவைப்பதற்கான இராணுவ வரவுசெலவுத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளுக்கும் ஆதரவாக வாக்களித்துள்ளது.

இந்த படகுத் தாக்குதல்கள், இலத்தீன் அமெரிக்காவை மேலாதிக்கம் செலுத்துவதற்கான ஏகாதிபத்திய முயற்சிகளின் நீண்டகாலப் போர்வையாக இருந்துவரும் இரு கட்சிகள் ஆதரிக்கும் “போதைப்பொருளுக்கு எதிரான போரை” தீவிரப்படுத்துகின்றன. இந்தப் போர், ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன், மெக்சிகோவில் உள்ள கொலைகாரத் திட்டமான கொலம்பியா மற்றும் மெரிடா திட்டங்களுக்காக பில்லியன் கணக்கில் பணத்தை வாரி வழங்கியுள்ளது.

எந்தவொரு குற்றச்சாட்டுகளும் இல்லாமலோ அல்லது பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று அடையாளம் காணக்கூட முற்படாமலோ, சர்வதேசக் கடற்பரப்பில் கொலை செய்வதற்கான உரிமை தனக்கு இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஓர் அரசாங்கம், அதே முறைகளை அமெரிக்காவிற்குள் இருக்கும் தொழிலாளர்கள், போராட்டக்காரர்கள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிராகவும் பயன்படுத்தத் தயங்காது.

பாசிச ஆட்சி வடிவங்களைத் திணிப்பதற்கான இந்த வேகமான முயற்சி ஒரு சர்வதேச செயல்முறையாகும். இதை எதிர்த்துப் போராடும் பொறுப்பை ஜனநாயகக் கட்சியினரிடமோ அல்லது எந்தவொரு முதலாளித்துவ தேசியவாதப் போக்கிடமோ ஒப்படைக்க முடியாது. போருக்கும் சர்வாதிகாரத்திற்கும் மூல காரணமான முதலாளித்துவ இலாப அமைப்பு முறையை ஒழிப்பதற்கு, அமெரிக்காவிலும், அமெரிக்கக் கண்டங்கள் முழுவதிலும், சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் அவசியமானது.

Loading