இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி.) கட்டுப்படுத்தப்படும் அகில இலங்கை பொது சுகாதார ஊழியர் சங்கத்தின் தலைவர்கள், குண்டர் பலத்தைப் பயன்படுத்தி, ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தினால் மே 20 அன்று மதிய உணவு இடைவேளையின் போது நடாத்தப்படவிருந்த மருத்துவமனை உதவியாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தைக் குழப்புவதற்கு முயன்றதை சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சுகாதார தொழிலாளர் நடவடிக்கை குழுவும் வன்மையாகக் கண்டிக்கின்றன.
சம்பளமில்லாமல் வாரத்திற்கு வேலை செய்யும் 8 மணித்தியாலங்களுக்கும் கொடுப்பனவு வழங்குதல், மருத்துவமனை உதவி பணியாளர் வெற்றிடங்களை நிரப்புதல், மேலதிக நேர கொடுப்பனவு விகிதத்தை அதிகரித்தல் மற்றும் போக்குவரத்துப் கொடுப்பனவை வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. கண்டி தேசிய மருத்துவமனை, கொழும்பு தெற்கு களுபோவில, கொழும்பு வடக்கு றாகம மற்றும் கம்பளை போதனா வைத்தியசாலை, மாத்தறை மாவட்ட வைத்தியசாலை, தெஹியத்தகண்டிய, கேகாலை மற்றும் கொழும்பு முல்லேரியா ஆகிய ஆதார வைத்தியசாலைகளுக்கு முன்னால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தொழிற்சங்கமானது முன்னிலை சோசலிசக் கட்சியினால் (மு.சோ.க.) ஸ்தாபிக்கப்பட்டதாகும்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் நடத்தப்படவிருந்த போராட்டத்தைத் தடுப்பதற்காக, அகில இலங்கை பொது சுகாதார ஊழியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான சுமித் என்பவர் அச்சுறுத்தல் விடுத்து தலையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தைப் பற்றி அறிவிப்பதற்காக மருத்துவமனை வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மே 19 அன்று இரவோடு இரவாகக் கிழித்தெறியப்பட்டிருந்ததாகவும், போராட்டப் பிரசுரங்களை வாசித்துக் கொண்டிருந்த ஊழியர்களிடம் அவற்றை விநியோகித்தது யார் எனக் கேட்டு, அனுமதியின்றி மருத்துவமனைக்குள் பிரசுரங்களை விநியோகிக்க முடியாது எனக் கூறி அவர்களை அச்சுறுத்தியதாகவும் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திற்குத் (WSWS) தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடைபெற்ற ஏனைய மருத்துவமனைகளிலும் அகில இலங்கை பொது சுகாதார ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் பொலிஸாருடன் இணைந்து, மருத்துவமனை வாயில்களை மறித்துப் போராட்டத்தைக் குழப்ப முயன்றதாக, 'அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவித்தல்' என்ற தலைப்பில் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டம்பிடியே சுகதானந்த தேரர் மே 21 அன்று வெளியிட்ட காணொளிப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஜே.வி.பி. தொழிற்சங்க அதிகாரிகளின் இந்த இழிவான குண்டர் நடவடிக்கையை கண்டிப்பதற்குப் பதிலாக, சுகதானந்த தேரரோ, “புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட' ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் 'வாயில் காவல்காக்கும் செக்யூரிட்டி வேலையைச் செய்யும் கீழ்நிலைக்கு வீழ்ந்துள்ளமை' குறித்து தனது கவலையை வெளியிட்டார். அவரது இந்த கருத்தானது, ஜே.வி.பி. தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் குண்டர் நடவடிக்கையினால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை மூடிமறைப்பதாகும்.
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பே, ஜே.வி.பி.யின் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரும் தற்போதைய அமைச்சருமான கே. டி. லால் காந்த, வேலைநிறுத்தங்கள் உட்பட தொழிற்சங்க நடவடிக்கைகள் தமது தேர்தல் பிரச்சாரங்களுக்குத் தடையாக இருப்பதால் அவற்றை நிறுத்த வேண்டும் என்று தனது கட்சியின் கீழ் உள்ள சங்கங்களின் தலைவர்களுக்கு உத்தரவிட்டிருந்ததுடன் அவர்களும் அதனை அப்படியே நடைமுறைப்படுத்தினர். அதுமட்டுமன்றி, இந்த போராட்டத் தடையானது ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்த பின்னரும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதோடு, அரசாங்கமானது அரச துறையின் 15 பிரிவுகளில் அனைத்து தொழிற்துறை நடவடிக்கைகளையும் சட்டவிரோதமாக்குவதற்கு அத்தியாவசிய சேவை உத்தரவுகளைப் பிறப்பித்து, அதனைத் தொடர்ந்தும் நீடித்தும் வருகின்றது.
2025 அக்டோபர் மாதத்தில் மின்சார சபை தொழிலாளர்களின் போராட்டத்தின் மத்தியில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக அதற்கு எதிராகத் தலையிட்டு, அந்தப் போராட்டங்களை அரசாங்கத்தின் 'முற்போக்கான பயணத்திற்கு' எதிரான பிற்போக்கு நடவடிக்கைகள் என விபரித்தார். இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில், மருத்துவர்களின் போராட்டங்களை இலக்கு வைத்து கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அதேபோன்றதொரு தலையீட்டைச் செய்த அவர், வீதிகளில் இறங்கிப் போராடினாலும் கோரிக்கைகளை வழங்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார். ஜே.வி.பி. தலைமை தாங்கும் அரசாங்கம், தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காகத் தனது தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவக் குழுக்களை ஒரு பொலிஸ் படையாகப் பயன்படுத்துவதோடு, கொடூரமான ஒடுக்குமுறைச் சட்டங்களையும் உத்தியோகபூர்வ பொலிஸ் மற்றும் இராணுவத்தையும் பயன்படுத்தி வருகின்றது.
சுகாதார ஊழியர்கள் குழுவொன்றின் போராட்டத்திற்கு எதிரான ஜே.வி.பி.யின் குண்டர் மிரட்டல்களை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என நாம் தொழிலாள வர்க்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த அத்துமீறலானது, தொழிலாளர் போராட்டங்களைச் சட்டத்தினாலும் பொலிஸ்-இராணுவ அத்துமீறல்களினாலும் மாத்திரமன்றி, குண்டர் பலத்தைப் பயன்படுத்தியும் ஒடுக்கப் போவதாக விடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கையாகும்.
முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க.) அதன் தொழிற்சங்கங்களின் அதிகாரிகளும் ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கத்தை ஒரு 'முற்போக்கான' மற்றும் மக்கள் அரசாங்கம் என்றே அழைக்கின்றனர். எனவே, தொழிலாளர்களுக்கு எதிரான இத்தகைய செயல்களை, கடந்த காலத்தை மறந்துவிட்டு செயற்படுவதாக கூறி வெள்ளை பூசுவதில் ஆச்சரியமேதுமில்லை.
கடந்த காலத்தை நினைவூட்டுவதன் மூலம் ஜே.வி.பி. தலைவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் போலி இடதுகள் கூறினாலும், ஜே.வி.பி.க்கு அத்தகைய 'புகழ்பெற்ற' கடந்த காலம் எதுவும் கிடையாது, அவ்வாறு அவர்கள் நல்வழிப்படப் போவதுமில்லை.
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்கள் ஜே.வி.பி.யில் இருந்த காலத்திற்கு முன்பிருந்தே, ஜே.வி.பி.க்கு தொழிலாளர் போராட்டங்களை எதிர்க்கின்ற அவற்றின் மீது தாக்குதல் நடத்துகின்ற ஒரு வரலாறே உள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர்கள் ஜே.வி.பி.யின் தீவிர உறுப்பினர்களாக இருந்த காலத்தை எடுத்துக் கொண்டாலும், ஜே.வி.பி.யானது இனவாத யுத்தத்துக்கு போர் முரசு கொட்டி, தொழிலாளர் போராட்டங்களை போருக்கு எதிரான செயல்களாக முத்திரை குத்தி ஒடுக்குவதில் பங்காளியாக இருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக 1987-1990களில் இனவாதப் பிரச்சாரத்தைத் கட்டவிழ்த்துவிட்ட ஜே.வி.பி., அதன் செயற்பாட்டை எதிர்த்த தொழிலாளர்கள், தொழிலாள வர்க்கக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்யத் தனது துப்பாக்கிதாரிகளை அனுப்பியது மாத்திரமன்றி, தொழிலாளர்களையும் ஏழைகளையும் துப்பாக்கி முனையில் மிரட்டித் தங்களது பாசிசக் கிளர்ச்சிகளுக்குள் தள்ளிய சந்தர்ப்பங்களும் உண்டு. ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர்கள் அவற்றை வீரச் செயல்களாகக் கொண்டாடி, ஆண்டுதோறும் விழாக்களை நடத்தி வருகின்றனர்.
ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவர்களின் குண்டர் மிரட்டல்களும் போராட்டத்தைக் குலைக்கும் முயற்சிகளும் இருந்தபோதிலும், போராட்டம் நடைபெற்ற ஏனைய மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான மருத்துவமனை உதவியாளர்கள் அதில் கலந்துகொண்டனர். வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டியிருந்தாலும் 5 நாட்களுக்கே சம்பளம் வழங்கப்படுவதால், வாரத்திற்கு 8 மணித்தியாலங்கள் சம்பளமின்றி வேலை செய்ய வேண்டியுள்ளதாக மருத்துவமனை உதவியாளர்கள் கூறுகின்றனர். 2019 ஆம் ஆண்டிலிருந்து ஊழியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாததால், நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக இரண்டு அல்லது மூன்று பேரின் வேலையை ஒரு தனி ஊழியரே செய்ய வேண்டியுள்ளதோடு, அவர்களால் இடமாற்றங்களையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.
அரசாங்கம் மேலதிக நேர கொடுப்பனவுகளை வெட்டியுள்ளதால், சேவைக் காலம் மற்றும் அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் ஒரு கனிஷ்ட சுகாதார ஊழியருக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு ஒரு மணித்தியாலத்திற்கு 166 மற்றும் 208 ரூபா மாத்திரமேயாகும். மேலதிக நேரக் கொடுப்பனவு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாகும். அதேபோன்று, சுகாதார ஊழியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கு மூன்று வருடங்களுக்குப் பெரியளவில் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கமும் அதன் தொழிற்சங்க அடியாட்களும் பெருமையடித்துக் கொள்கின்ற போதிலும், அது ஒரு பொய்யானக் கூற்றாகும். முன்னர் வழங்கப்பட்ட 12,500 ரூபா கொடுப்பனவை அடிப்படைச் சம்பளத்துடன் சேர்த்ததைத் தவிர, கனிஷ்ட ஊழியர்களில் சுமார் 70 சதவீதமானோருக்கு 2025 ஆம் ஆண்டிற்கு 975 ரூபாவும், 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்காக 1,137 ரூபாவும் மாத்திரமே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன வெட்டுக்களையும் ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரின் சுமையையும் மக்கள் மீது சுமத்துவதன் பாகமாக, இலவச சுகாதார சேவையை வெட்டுவதோடு வாழ்க்கை நிலைமைகள் மீது கடுமையான தாக்குதல்களை தொடுக்கின்றது. இவற்றுக்கு எதிராக சுகாதார ஊழியர்கள் மத்தியிலும், ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் மத்தியிலும் வளர்ந்து வரும் எதிர்ப்பையே மருத்துவமனை உதவியாளர்களின் இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் காட்டுகின்றன.
எனினும், அரசாங்கம் சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளை நிராகரித்து, அதன் தொழிற்சங்கங்களைத் தொழிலாளர்களுக்கு எதிராகப் பொலிஸ் வேலையில் ஈடுபடுத்துவது குறித்து முன்னிலை சோசலிசக் கட்சியின் தொழிற்சங்க அதிகாரத்துவம் புலம்புவதானது, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற மாயைக்குள் தொழிலாளர்களை முடக்குவதற்காகவே ஆகும். அரசாங்கம் அத்தியாவசிய சேவை உத்தரவுகளைப் பிறப்பிப்பது குறித்து முன்னிலை சோசலிசக் கட்சி வாய்மூடி மௌனமாக இருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகள் மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் குற்றவியல் போரினால் தீவிரமடைந்துள்ள நெருக்கடியின் சுமையைத் தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கான தாக்குதலின் அங்கமாகவே அரசாங்கம் இந்த ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. எந்த வகையிலேனும் தொழிலாளர் போராட்டங்கள் வளர்ச்சியடைவது முதலாளித்துவ வர்க்க ஆட்சிக்கு ஒரு அச்சுறுத்தலாகவே அரசாங்கம் கருதுகின்றது.
தொழிலாளர்கள் தங்களது எரியும் கோரிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக ஒரு உண்மையான போராட்டத்தை ஒழுங்கமைக்க வேண்டுமாயின், அதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தங்களது சொந்த அமைப்புகளாக ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நிறுவனத்திலும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்புவதன் மூலமும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதன் மூலமுமே அதனைச் செய்ய முடியும். வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்காக அரசாங்கம் தொடுக்கும் தாக்குதல்கள், அதற்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசரத் தேவையைக் காட்டுகின்றன.
