அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் முறிவடையும் தருவாயில் இருக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

புதன்கிழமை வர்சைலெஸில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம், கையெழுத்திடப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள், வெள்ளிக்கிழமையன்றே முறிவடையும் தருவாயை எட்டியிருந்தது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானியப் பேச்சுவார்த்தையாளரை அனுப்ப ஈரான் மறுத்ததைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் தொடங்கவிருந்த முதற்கட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே இரத்து செய்யப்பட்டன.

வடக்கு இஸ்ரேலில் இருந்து பார்க்கும்போது வெள்ளிக்கிழமை, 19 ஜூன் 2026 அன்று தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து வானை நோக்கி புகை எழும்புகிறது. [AP Photo/Leo Correa]

லெபனான் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இஸ்ரேல் வெள்ளிக்கிழமையன்று தெற்கு லெபனான் முழுவதும் எண்பதுக்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தபட்சம் 47 பேர் கொல்லப்பட்டனர். க்ஃபார் டெப்னிட் கிராமத்திற்கு அருகில் ஹிஸ்புல்லா பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் நான்கு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த குண்டுவீச்சு நபடியே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியத்தின் மீது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல்கள் ஏப்ரல் நடுப்பகுதியில் நடைமுறைக்கு வந்திருந்த போர்நிறுத்தத்தை முற்றாக சீர்குலைத்தன.

இந்த உடன்படிக்கையானது அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் 'லெபனான் உட்பட அனைத்து களமுனைகளிலும்' அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று கோருகிறது. ஆனால் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக இல்லாததோடு, அதற்கு கட்டுப்படவும் மறுத்துவிட்டது. இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்த ஒப்பந்தத்தை 'இஸ்ரேலுக்கு கெட்டது' என்று அழைத்ததுடன், தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் 'இஸ்ரேல் அரசு ஒரு நிலையற்ற குடியரசு அல்ல' என்றும் அறிவித்தார்.

ட்ரம்ப் வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாக்குதல்களை நிறுத்துமாறு அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மதிய வேளையில், இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் தங்களின் போர்நிறுத்தத்தை மீண்டும் புதுப்பிக்க ஒப்புக்கொண்டன. நாட்டின் பாதுகாப்புக்கு தேவைப்படும் வரை இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானில் தங்கியிருக்கும் என்று நெதன்யாகு கூறினார். இந்த இலையுதிர்காலத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் நெதன்யாகு, இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து சீர்குலைக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்க உளவு அமைப்புகள் ட்ரம்பிற்கு எச்சரித்துள்ளன.

பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு, மத்திய கிழக்கிற்கான ட்ரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் சுவிட்சர்லாந்திற்குச் சென்று கொண்டிருப்பதாக ஆக்ஸியோஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. அங்கு 'சாத்தியமான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரானுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அது குறிப்பிட்டிருந்தது. ட்ரம்பின் மருமகனான ஜாரெட் குஷ்னரும் ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் இருந்தார். எனினும், இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பே ரத்து செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தம், ஈரானின் மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தவறிவிட்டது எனக் கூறி, அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் பரந்த பிரிவினரிடமிருந்து வந்த கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது. ஆயுத சேவைகள் குழுவின் தலைவரான மிசிசிப்பியின் குடியரசுக் கட்சி செனட்டர் ரோஜர் விக்கர் கூறுகையில், இந்த உடன்படிக்கையானது 'ஜனாதிபதியின் இலக்குகளுக்கு முற்றிலும் முரணான வகையில்' போரின் 'வெற்றிகளைப் பேசித் தீர்த்துவிடுகிறது' என்று குறிப்பிட்டதோடு, ஈரானுக்கான அதன் 300 பில்லியன் டாலர் புனரமைப்பு நிதியானது 'ஒப்பீட்டளவில் ஜனாதிபதி ஒபாமாவின் 2015ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஒரு அற்பத் தொகையாகக் காட்டக்கூடும்' என்றும் எச்சரித்தார். லூசியானாவின் குடியரசுக் கட்சி செனட்டர் பில் காசிடி இந்த ஒப்பந்தத்தை 'பல தசாப்தங்களில் மிக மோசமான வெளியுறவுக் கொள்கையிலான பெரும் தவறு' என்று அழைத்ததுடன், 'இதைப் பார்த்தால் ரீகன் கல்லறையில் கூட நிம்மதியாக இருக்க மாட்டார்' என்றும் எழுதினார்.

ஜனநாயகக் கட்சியினரும் இதே வார்த்தைகளில் இதனைக் கண்டித்தனர். செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர், இந்தப் போர் 'ஒவ்வொரு அளவீட்டிலும் அமெரிக்காவை மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது' என்று கூறியதுடன், பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஸ், 'ஈரான் வலுவாக உள்ளதுடன் அமெரிக்கா பாதுகாப்பின்றி உள்ளது' என்று அறிவித்தார். கனெக்டிகட்டின் செனட்டர் கிறிஸ் மர்பி, இந்த ஒப்பந்தத்தை 'அடிப்படையில் ஈரானின் நிபந்தனைகளுக்கு ஈரானிடம் சரணடைவதாகும்' என்று அழைத்தார் — பின்னர் அவர் அதற்கு ஆதரவளிப்பதாகவும் அறிவித்தார்.

இரு கட்சிகளுமே, சர்வதேச சட்டத்தை மீறி பல்லாயிரக்கணக்கான ஈரானியர்களையும் லெபனானியர்களையும் கொன்ற இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்க்கவில்லை. அவர்கள் அதில் வெற்றி பெறத் தவறியதற்காக மட்டுமே ட்ரம்பைக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

போரின் நோக்கங்களை அடையத் தவறியதால், ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ட்ரம்ப் பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டார். உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் கொண்டு செல்லப்படும் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 118 டொலருக்கும் அதிகமாக உயர்ந்ததுடன், மே மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்கத்தை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.2 சதவீதமாக உயர்த்தியது.

ஈரான் 'நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்' என்ற கோரிக்கையை கைவிட்டது ஏன் என்று கேட்கப்பட்டபோது, ட்ரம்ப் சந்தைச் சூழலைச் சுட்டிக்காட்டினார். பிரான்சில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் அவர் பேசுகையில், 'நான் ஒரு பொருளாதாரப் பேரழிவைக் காண விரும்பவில்லை. இதை தொடர்ந்திருந்தால், அது நடந்திருக்கலாம்' என்று கூறினார். 'முன்னாள் ஜனாதிபதி மறைந்த மாமனிதர் ஹெர்பர்ட் ஹூவர் போல் நான் இருக்க விரும்பவில்லை' என்றும் அவர் கூறினார்.

பொருளாதார நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து எண்ணெய் விலைகள் குறைந்திருந்தாலும், பெட்ரோல் விலை போருக்கு முந்தைய நிலையை விட இன்னும் ஒரு கேலனுக்கு ஒரு டொலர் அதிகமாகவே உள்ளதுடன், மத்திய வங்கியாளர்கள் இன்னும் 'அபாயம் நீங்கிவிட்டதாக அறிவிக்கத் தயாராக இல்லை' என்று பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட 300 பில்லியன் டொலர் நிதி ஏற்கனவே சிதையத் தொடங்கியுள்ளது: வளைகுடா நாடுகள் அதற்கு நிதியளிக்கத் தயங்குவதுடன் வாஷிங்டன் 'பத்து சதம்' கூட செலுத்தாது என்று ட்ரம்ப் மறுத்துள்ளார். போர் காரணமாக நீரிணை மூடப்பட்டு 100 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், சுமார் 20,000 மாலுமிகள் பாரசீக வளைகுடாவில் தவிப்பதுடன், தோராயமாக 2,000 கப்பல்கள் சிக்கியவாறே உள்ளன.

போரின் ஆரம்ப மணித்தியாலங்களில் தனது தந்தை படுகொலை செய்யப்பட்ட பின்னர் பதவியேற்றுள்ள ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கொமேனி கூறுகையில், ட்ரம்ப் 'வேறு வழியின்றி' இதில் கையெழுத்திட்டுள்ளார் என்று குறிப்பிட்டதுடன், ஈரான் 'அளவுக்கு அதிகமான கோரிக்கைகளுக்கு' பணியாது என்றும் எச்சரித்தார்.

இந்தப் போர் கடுமையான மனித உயிரிழப்புகளுடன் முன்னெடுக்கப்பட்டது. பெப்ரவரி 28 அன்று மோதல்கள் ஆரம்பமானது முதல் 3,468 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 26,500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக ஈரானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது; மனித உரிமைகள் கண்காணிப்பகமான HRANA உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,636 என தெரிவிப்பதுடன், அவர்களுள் 1,700 இற்கும் அதிகமானோர் பொதுமக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆரம்பகட்டத் தாக்குதல்களில் ஆன்மீகத் தலைவர் அலி கொமேனி மாத்திரமன்றி, ஈரானிய தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் மற்றும் டசின் கணக்கான சிரேஷ்ட தளபதிகள் உட்பட ஈரானிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கொல்லப்பட்டனர். நாட்டிற்குள், விலைகள் வருடத்திற்குள் 84 சதவீதத்தாலும், உணவுச் செலவுகள் 131 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளன.

லெபனான் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இதற்குச் சமாந்தரமாக மார்ச் 2 அன்று ஆரம்பமான லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் குறைந்த பட்சம் 3,711 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்; ஏப்ரல் 8 நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலில் 357 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க இராணுவப் பணியாளர்கள் 13 பேர் உயிரிழந்ததுடன் 380 இற்கும் அதிகமானோர் காயமடைந்ததோடு, ஓமான் கடற்பரப்பில் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்கா தனது பல முக்கியமான ஆயுதங்களின் இருப்பில் பாதியளவுக்கும் மேலாகப் பயன்படுத்தித் தீர்த்துள்ளதுடன், அவற்றுள் சிலவற்றை மீண்டும் ஈடு செய்வதற்குப் பல வருடங்கள் ஆகும்.

காசாவில் இஸ்ரேல் தனது இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தி வந்த நிலையிலேயே ஈரானின் மீதான இந்தத் தாக்குதல் அரங்கேறியது. கடந்த அக்டோபரில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததன் பின்னர் கொல்லப்பட்ட 1,005 பேர் உட்பட, 2023 அக்டோபர் முதல் அங்கு 73 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு இவ்வாரம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களில் போக்குவரத்தைச் சீர்செய்த டசின் கணக்கான பொலிஸார் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அதிகாரிகள் இம்மாதம் தெரிவித்ததுடன், இத்தாக்குதல்கள் போர்க்குற்றங்களாகக் கருதப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலியப் படைகள் இப்போது காசாவின் 60 சதவீதத்திற்கும் அதிகமான பிரதேசத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதோடு கடந்த மாதம் நெதன்யாகு இராணுவத்திற்கு 70 சதவீதப் பிரதேசத்தைக் கைப்பற்றுமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், எஞ்சிய சிறிய பகுதிக்குள் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் முடக்கப்பட்டுள்ளனர். கடந்த கோடை காலத்தில் காசா முழுவதும் பஞ்சம் நிலவுவதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியதுடன், போர்நிறுத்தத்தின் கீழ் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிவாரண லொரிகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளதாக உதவி முகவர் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

Loading