முன்னோக்கு

UAW தலைவர் பதவிக்கு வில் லெஹ்மன் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ளார்: சாமானிய தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தில் ஒரு மைல்கல்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வில் லெஹ்மன்

கடந்த புதன்கிழமை, டெட்ராய்ட்டில் நடைபெற்ற ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) 39 வது அரசியலமைப்பு மாநாட்டில், மேக் ட்ரக்ஸ் (Mack Trucks) தொழிலாளியான வில் லெஹ்மன், அதன் தலைவர் பதவிக்கான வேட்பாளராக முன்மொழியப்பட்டார். UAW அதிகாரத்துவத்தை ஒழிப்பதற்கும், சாமானிய தொழிலாளர்களிடம் அதிகாரத்தை மாற்றுவதற்குமான ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் போட்டியிடும் ஒரு சோசலிச தொழிலாளி வேட்பாளராக முன்மொழியப்பட்டிருப்பது, தேசிய மற்றும் உலக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரும் நிகழ்வாகும்.

மாநாட்டில் அதிகபட்ச எண்ணிக்கையிலான இரண்டு பிரதிநிதிகளால் அவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டது, இந்த வேலைத்திட்டத்தின் பின்னால் வாகனத்துறை தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு தொடர்ச்சியான பிரச்சாரத்தால் உருவாக்கப்பட்டதாகும். மாநாட்டிற்கு முந்தைய வாரங்களில், லெஹ்மன் தனது பெயரை வேட்பாளராக முன்மொழியுமாறு தொழிலாளர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார். நெக்ஸ்டீர் (Nexteer), டானா (Dana), ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) மற்றும் ஃபோர்டு (Ford) ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த UAW உறுப்பினர்கள் உள்ளடங்கிய ஆதரவாளர்கள் மாநாட்டில் லெஹ்மனுக்காகப் பிரச்சாரம் செய்தனர்.

தொழிலாளர்கள் அவரது பிரச்சாரத்தை ஆதரித்தனர், ஏனெனில் அது UAW எந்திரத்துடனான அவர்களது சொந்த அனுபவங்களை வெளிப்படுத்தியது: காட்டிக்கொடுப்பு ஒப்பந்தங்கள், எதிர்ப்பை ஒடுக்குதல், பெருநிறுவன இலாபத்தைப் பாதுகாத்தல் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களை ஜனநாயகக் கட்சிக்கும் அரசுக்கும் கீழ்ப்படுத்துதல் ஆகியவையே இந்த அனுபவங்களாகும்.

லெஹ்மன் வேட்பாளராக முன்மொழியப்பட்டிருப்பது வளர்ந்து வரும் ஒரு கிளர்ச்சியின் மிக நனவான வெளிப்பாடாகும். சாகினாவில் (Saginaw) உள்ள நெக்ஸ்டீர் தொழிலாளர்கள் UAW ஆதரவு பெற்ற மூன்று உடன்பாடுகளை நிராகரித்துள்ளனர் மற்றும் 86 சதவீத வாக்குகளுடன் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். த்ரீ ரிவர்ஸில் (Three Rivers) உள்ள அமெரிக்கன் ஆக்சில் (American Axle) தொழிலாளர்கள் 2008 க்குப் பிறகு முதல் முறையாக வெளிநடப்பு செய்தனர். டானா தொழிலாளர்கள் தங்களுக்குப் பின்னால் சலுகைகளைத் திணிப்பதற்கான அதே முயற்சியை எதிர்த்துள்ளனர். ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய நிறுவனங்களின் தொழிலாளர்கள், UAW அதிகாரத்துவத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் பாரிய பணிநீக்கங்கள் மற்றும் ஆலை மூடல்களுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

வில் லெஹ்மன் UAW தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது இது இரண்டாவது முறையாகும். 2022 தேர்தல், UAW-இன் “ஜனநாயக சீர்திருத்தங்கள்” என்று சொல்லப்படுபவற்றை ஒரு மோசடி என அம்பலப்படுத்தியது. உறுப்பினர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வாக்களித்தனர். சங்கத்தின் உயர்மட்ட சர்வதேச அதிகாரிகளுக்கான வரலாற்றிலேயே முதல் நேரடி வாக்கெடுப்பில், தொழிலாளர்கள் தேர்தல் பற்றி அறிந்துகொள்வதையும், வாக்குச்சீட்டுகளைப் பெறுவதையும், பங்கேற்பதையும் தடுப்பதற்கு அதிகாரத்துவம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தது.

இந்த முறையும் தொழிற்சங்க எந்திரம் வித்தியாசமாக நடந்துகொள்ளப் போவதில்லை. லெஹ்மனின் பிரச்சாரத்தைத் தனிமைப்படுத்தவும், உறுப்பினர்களிடையே விவாதங்களை ஒடுக்கவும், இந்தத் தேர்தலை எந்திரத்தின் போட்டிப் பிரிவினருக்கு இடையிலான ஒரு மோதலாகக் காட்டுவதற்கும் அதிகாரத்துவம் தன் வசம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தும்.

இப்போதிலிருந்து அக்டோபரில் தேர்தல் முடியும் வரை, லெஹ்மனின் பிரச்சாரத்திற்குத் தொழிலாளர்களிடமிருந்து அதிகபட்ச ஆதரவு கிடைக்க வேண்டும். தொழிற்சாலையில் தொடர்ந்து பணியாற்றி வரும் ஒரு தொழிலாளியான லெஹ்மனுக்கு, பின்பலமாக இருப்பதற்கு எந்தவொரு அதிகாரத்துவ எந்திரமோ அல்லது சக்திவாய்ந்த அரசியல் தொடர்புகளோ கிடையாது. மாறாக, அவரது பிரச்சாரத்தை ஆதரிக்கும் போர்க்குணமிக்க தொழிலாளர்களின் வளர்ந்து வரும் ஒரு வலைப்பின்னல் மூலமாக மட்டுமே அவரது பிரச்சாரம் பரவலாக அறியப்படும்.

லெஹ்மன் வேட்பாளராக முன்மொழியப்பட்டிருப்பதன் முக்கியத்துவம் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் போட்டியிடும் வேலைத்திட்டத்தில்தான் அடங்கியுள்ளது. அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA), ஜாகோபின் (Jacobin), லேபர் நோட்ஸ் (Labor Notes) மற்றும் தொழிற்சங்க எந்திரத்தின் நடுத்தர வர்க்க “இடது” பாதுகாவலர்களின் ஒட்டுமொத்த வட்டாரமும் எதெல்லாம் சாத்தியமற்றது என்று பிடிவாதமாகக் கூறுகிறதோ, அதை அவர் செய்து காட்டிக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு சோசலிஸ்டாகப் பகிரங்கமாகப் போட்டியிடுகிறார், அதிகாரத்துவத்தை ஒழிக்க அழைப்பு விடுக்கிறார், தொழிற்சங்கங்களை ஜனநாயகக் கட்சிக்கு கீழ்ப்படுத்துவதைக் கண்டிக்கிறார், மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையை முன்வைக்கிறார்.

தான் வேட்பாளராக முன்மொழியப்பட்டதற்குப் பின்னர் லெஹ்மன் விளக்கியவாறு: “இந்த பிரச்சாரம் அந்த அதிகாரத்துவ எந்திரத்திற்கு எதிரானது. இந்த தொழிற்சங்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதிகாரத்துவத்திடமிருந்து அதிகாரத்தை சாமானிய தொழிலாளர்களுக்கும் — அதாவது தொழிற்சாலை தளத்தில் உள்ள தொழிலாளர்களுக்கும் மாற்றுவதற்கான ஒரு போராட்டமே இதுவாகும்.”

அதிகாரத்துவத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு மாநாட்டில் இத்தகையதொரு பிரச்சாரம் வாக்குச்சீட்டில் இடம் பெற்றது அந்த அதிகாரத்துவ எந்திரத்திற்கு விழுந்த ஒரு பலத்த அடியாகும். இந்த மாநாடு, பெருமளவிற்கு, முழுநேர அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஊதியம் பெறும் உத்தியோகஸ்தர்களின் ஒரு சபையாகவே இருந்தது — இந்த எந்திரம் தொழிலாளர்களின் போராட்டக் கருவியாகச் செயல்படாமல், பெருநிறுவனங்களின் கோரிக்கைகளைத் திணிக்கும் ஒரு தொழில்துறை போலீஸ் படையாகவே செயல்படுகிறது.

இருப்பினும், பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் — பெரும்பாலும் தங்களது முதலாவது மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் — லெஹ்மனின் பிரச்சாரத்தை வரவேற்றதோடு, அந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒட்டுமொத்த விதம் குறித்தும் தங்களது கடுமையான அருவருப்பை வெளிப்படுத்தினர்.

மாநாட்டிற்குள், தற்போதைய தலைவர் ஷான் ஃபைனுக்கு  கூடுதலாக வழங்கப்படவுள்ள $30,000 உட்பட உயர்மட்ட அதிகாரிகளுக்கான சம்பள உயர்வை அதிகாரத்துவம் அங்கீகரித்தது. பல தசாப்த கால காட்டிக்கொடுப்புகளின் விளைவாக வாழ்வாதாரத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலில், அதிகாரத்துவத்தின் பங்கை அதிகரிப்பதற்கான ஒரு வாக்கெடுப்பாகவே இது புறநிலையாக அமைந்திருந்தது. இந்த மாநாடு, தொழிலாளர்களின் மாதாந்திரச் சந்தா தானாகவே குறைக்கப்படுவதற்கான வேலைநிறுத்த நிதியின் வரம்பை $850 மில்லியனிலிருந்து $1.3 பில்லியனாக உயர்த்தியதன் மூலம், அந்தச் சந்தாத் தொகையை உயர்ந்த மட்டத்திலேயே தக்கவைத்துக் கொண்டது; அதே நேரத்தில், வேலைநிறுத்த ஊதியத்தில் கணிசமான உயர்வை வாக்கெடுப்பு மூலம் நிராகரித்ததோடு, வாராந்திர வேலைநிறுத்த ஆதரவுத் தொகையில் தொழிலாளர்களுக்கு ஒரு அடையாளப்பூர்வமான உயர்வை மட்டுமே வழங்கியது.

கிளை தொழிற்சங்கங்களின் தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்குப் போதுமான ஆதரவைப் பெற்றபோது, நடைமுறை விதிகளையே இடைநிறுத்துவதற்கும், தான் அங்கீகரிக்காத தீர்மானங்களை மேலும் பரிசீலிப்பதைத் தடுப்பதற்கும் இந்த அதிகாரத்துவ எந்திரம் ஒரு முன்மொழிவை வலுக்கட்டாயமாக நிறைவேற்றிக் கொண்டது. ICE (குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு) போலீஸை ஒழிக்கக் கோரும் தீர்மானத்தை இந்த மாநாடு நிராகரித்தது; அதே நேரத்தில், இஸ்ரேலில் செய்திருந்த தொழிற்சங்கத்தின் முதலீடுகளில் இருந்து $400,000 தொகையைத் திரும்பப் பெறுவது தொடர்பான ஒரு பெயரளவிலான தீர்மானத்தை நிறைவேற்றியது.

அதன்பின்னர் அதிகாரத்துவம், வோல் ஸ்ட்ரீட் மற்றும் போரின் ஒரு கருவியாக தொழிலாளர்களால் பரவலாக வெறுக்கப்படும் ஜனநாயகக் கட்சியினரை மேடைக்கு அழைத்து பேச வாய்ப்பளித்தது. AFL-CIO தலைவர் லிஸ் ஷுலர், வரும் நவம்பரில் ஜனநாயகக் கட்சியினரைத் தேர்ந்தெடுப்பதற்காக பல்லாயிரக்கணக்கான UAW பிரச்சாரத் தொழிலாளர்களை அணிதிரட்டுமாறு அழைப்பு விடுத்தார். சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போர் நடவடிக்கைகளுக்காக காங்கிரசில் ஒரு பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர், காங்கிரஸ் உறுப்பினர் டெபி டிங்கலுக்கு உரை நிகழ்த்த வாய்ப்பளிக்கப்பட்டது. UAW இன் “இடது” ஜனநாயகக் கட்சி வேட்பாளராக விளம்பரப்படுத்தப்பட்ட அப்துல் எல்-சயீத், பொருளாதார தேசியவாதத்தின் மொழியில் அதே அடிப்படையான செய்தியையே வழங்கினார்.

அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA), லேபர் நோட்ஸ் (Labor Notes) மற்றும் ஜாகோபின் (Jacobin) பத்திரிகையின் ஆதரவுடன் ஃபைன் 2022 இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற அடுக்குகளிலிருந்து உருவான இந்த அரசியல் போக்குகள், ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க எந்திரத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். ஃபைனின் நிர்வாகத்தின் கீழ் DSA ஐச் சேர்ந்த பல நபர்களுக்கு உயர்மட்டப் பதவிகள் அள்ளிக்கொடுக்கப்பட்டன; அங்கு அவர்கள் ஆயிரக்கணக்கான வேலை இழப்புகள், பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள், “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” (America First - அமெரிக்கா முதலில்) தேசியவாதத்திற்கான ஆதரவு மற்றும் போருக்காக அமெரிக்கத் தொழில்துறையை மறுசீரமைத்தல் ஆகியவற்றைத் தொழிலாளர்கள் மீது திணிப்பதில் கூட்டுப் பொறுப்பாளிகளாக மாறினர்.

தங்களை சோசலிச அமைப்புகள் என்று கூறிக்கொண்டு, லெஹ்மனின் பிரச்சாரத்திற்கான ஆதரவை மறுக்கும் எந்தவொரு அமைப்பும் தன்னை முழுமையாக அம்பலப்படுத்திக் கொள்கிறது. அவர்களின் விரோதப் போக்கு மிகவும் தீவிரமாக இருப்பதால், அவர்களால் இந்த பிரச்சாரம் ஒன்று நடப்பதைக் கூட ஒப்புக்கொள்ள முடிவதில்லை. இப்போது UAW அதிகாரத்துவத்தின் ஒரு நடைமுறைப் பத்திரிகையாகவே மாறிவிட்ட லேபர் நோட்ஸ், இந்த நிகழ்வை ஃபைனுக்கான ஒரு ஜனநாயகப்பூர்வ ஆதரவாகவே சித்தரித்தது; அதே நேரத்தில் லெஹ்மனைப் பற்றி ஒரே ஒரு முறை மட்டுமே குறிப்பிட்டது, அதுவும் “அதிகம் அறியப்படாத ஒரு சில வேட்பாளர்களுக்கு” மத்தியில் அவரை புதைத்து விட்டது.

தொழிற்சங்க எந்திரத்திற்கு எதிராக ஒரு சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியை வளர்ப்பதற்கான ஒரு முக்கியமான பொறிமுறையாக இருப்பதன் காரணமாகவே, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) லெஹ்மனின் பிரச்சாரத்தை ஆதரித்துள்ளது. ஜனநாயகக் கட்சியிலும் அதைச் சுற்றியும் உள்ள போலி-இடது அமைப்புகள் WSWS ஐ ஒரு “குறுங்குழுவாத” அமைப்பு என்று கண்டிக்கின்றன. இதன் மூலம், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் அதிகாரத்துவ எந்திரத்திற்குத் தொழிலாள வர்க்கத்தைக் கீழ்ப்படியச் செய்ய அது மறுப்பதையே அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

லெஹ்மன் வேட்பாளராக முன்மொழியப்பட்டிருப்பது, இப்போது வாகனத் துறை முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களின் எதிர்ப்பை ஊக்குவிப்பதற்கும் வளர்ப்பதற்குமான ஒரு பிரச்சாரத்தின் தொடக்கப் புள்ளியாக மாற வேண்டும். இதில் பின்வருவன அடங்கும்:

  • அதிகாரத்தை ஆலைத் தளத்திற்கு மாற்றுவதற்காக, UAW எந்திரத்திலிருந்து சுயாதீனமாகவும் தொழிலாளர்களாலேயே கட்டுப்படுத்தப்படக்கூடியதுமான சாமானிய தொழிலாளர் குழுக்களை ஒவ்வொரு ஆலையிலும் வேலைத்தலத்திலும் உருவாக்குதல்.
  • ஆலைகள், நிறுவனங்கள், தொழில்துறைகள் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களை இணைத்து, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலமாக இக்குழுக்களை ஒன்றிணைத்தல்.
  • ஆலைகள் மற்றும் வேலைத்தலங்களில் நடக்கும் போராட்டத்தை, அமெரிக்க முதலாளித்துவத்தின் இரு கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டிற்கும் எதிராகத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கமாக வளர்த்தெடுத்தல்.
  • அமெரிக்காவில் உள்ள வாகனத் தொழிலாளர்களின் போராட்டத்தை சர்வதேச எதிர்ப்பு அலையுடன் இணைத்தல்.

UAW தேர்தலில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் உலகளாவியவை. வாகனத் தொழிலாளர்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டும் அதே முதலாளித்துவ நெருக்கடிதான் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களையும் எழுச்சி கொள்ளச் செய்கிறது. மெக்சிகோவில், வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் பணிநீக்கங்கள் மற்றும் மூடல்களுக்கு எதிராக ஆலைகளை ஆக்கிரமித்துள்ளனர். துருக்கியில், சுரங்கத் தொழிலாளர்கள் காவல்துறைத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு, சுரங்கங்களைக் கைப்பற்றி, நிறுவனத்தின் குண்டர்களால் நடத்தப்பட்ட கைதுகளையும் ஆயுதத் தாக்குதல்களையும் மீறிச் செயல்பட்டுள்ளனர். இத்தாலியில், சிக்கன நடவடிக்கைகள், இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிராகப் பொது வேலைநிறுத்தங்கள் போக்குவரத்து, விநியோகச் சேவைகள், பள்ளிகள் மற்றும் பொதுச் சேவைகளை மீண்டும் மீண்டும் முடக்கியுள்ளன.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் தாங்க முடியாத விலைவாசிகள், பணிநீக்கங்கள், வேலைப்பளு அதிகரிப்பு மற்றும் வறுமை ஊதியங்களை எதிர்கொள்கின்றனர். அதே நேரத்தில் முதலாளித்துவ அரசாங்கங்கள் சர்வாதிகாரம், பொலிஸ் வன்முறை, புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் மற்றும் போரின் விரிவாக்கம் ஆகியவற்றைக் கொண்டு சமூக எதிர்ப்புக்குப்  பதிலளிக்கின்றன. UAW மாநாட்டின் முந்தைய நாள் அன்று, எலோன் மஸ்க் உலகின் முதலாவது டிரில்லியனர் ஆனார்; இது தொழிலாள வர்க்கத்தின் தீவிரமான சுரண்டலின் மீது தனது செல்வத்தைக் கட்டியெழுப்பியுள்ள ஒரு முதலாளித்துவ தன்னலக்குழுவால் சமூகம் ஆதிக்கம் செலுத்தப்படுவதன் ஒரு கோரமான வெளிப்பாடாகும்.

இந்தத் தன்னலக்குழுவிற்கோ, அதன் கட்சிகளுக்கோ அல்லது அதன் கோரிக்கைகளைத் திணிக்கும் தொழிற்சங்க எந்திரங்களுக்கோ வேண்டுகோள் விடுப்பதன் மூலம் எதுவும் தீர்க்கப்படப் போவதில்லை. வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியே தீர்மானகரமான கேள்வியாகும்: தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டை உடைத்தெறிவது, ஒவ்வொரு வேலைத்தலத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவது, மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி மூலமாகத் தொழில்துறைகள் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களை ஒன்றிணைப்பது ஆகியவையே அந்தத் தீர்மானகரமான பணிகளாகும்.

Loading