இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இரண்டாம் உலகப் போரின் போது போலந்து-எதிர்ப்பு நாஜி ஒத்துழைப்புவாத சக்திகளை உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி ஊக்குவித்து வருவது தொடர்பான இராஜதந்திர நெருக்கடியானது, நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான தங்களின் பினாமி போரை மூடிமறைத்திருந்த அரசியல் பொய்களைத் தவிடுபொடியாக்குகிறது. உக்ரேனில் உள்ள நேட்டோ-ஆதரவு ஆட்சியானது, ஜனநாயகத்தினதும் தேசிய சுதந்திரத்தினதும் பாதுகாவலன் அல்ல, மாறாக தீவிர வலதுசாரி சக்திகளின் மீது தங்கியிருக்கும் ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாகும்.
கடந்த மே மாத இறுதியில், ஜெலென்ஸ்கி ஒரு இராணுவப் பிரிவிற்கு “உக்ரேனிய மக்கள் இராணுவத்தின் வீரர்கள்” என்ற கௌரவப் பட்டத்தை வழங்கும் ஆணையை வெளியிட்டார். இது சோவியத் ஒன்றியம் மீதான நாஜி ஜேர்மனியின் படையெடுப்பிற்கு ஒத்துழைத்த, உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்பின் (OUN) இராணுவப் பிரிவான உக்ரேனிய கிளர்ச்சிப் படையைக் (UPA) குறிக்கிறது. OUN அமைப்பும் நாஜி துணைப் பொலிஸில் இருந்த அதன் உறுப்பினர்களும் 1941-இல் கியேவ் நகரில் நடந்த பாபி யார் (Babi Yar) படுகொலை உட்பட சோவியத் யூதர்களின் இனப்படுகொலையில் பங்கேற்றும் இருந்தனர். இவர்களில் பலர் பின்னர் UPA-வை உருவாக்கினர், இது உக்ரேனில் சோவியத் ஆதரவுப் போராளிகளை வேட்டையாடியதுடன், இன்றைய மேற்கு உக்ரேனில் உள்ள வோல்ஹினியா (Volhynia) பகுதியில் போலந்து மக்கள் மீதான இனப்படுகொலையையும் நடத்தியது.
ஜூன் 19 அன்று, தீவிர வலதுசாரியான போலந்து ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கி, 2023-இல் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்த ஒரு வருடத்திற்குப் பிறகு போலந்து ஜெலென்ஸ்கிக்கு வழங்கிய அந்நாட்டின் மிக உயரிய அரசு கௌரவமான “வெள்ளை கழுகு விருதை” அவரிடமிருந்து பறித்தார். தனது அரசாங்கத்தின் கவலைகளை ஜெலென்ஸ்கி அரசாங்கத்திற்கு தான் “பலமுறை சுட்டிக்காட்டியும்”, அதன் “நிலைப்பாடு மாறவில்லை” என்று நவ்ரோக்கி கூறினார். எவ்வாறாயினும், “உண்மைகள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல” என்றும், “குறைந்தது 1,00,000 போலந்து குடிமக்கள் UPA அமைப்பால் படுகொலை செய்யப்பட்டனர்” என்றும் அவர் மேலும் கூறினார்.
இதற்கு ஜெலென்ஸ்கி அரசாங்கம் வார்சோவியை (போலந்து தலைநகரம்) கண்டித்து, இனப்படுகொலை செய்த நாஜி ஆதரவு சக்திகளை மேலும் தீவிரமாக ஊக்குவிப்பதன் மூலம் பதிலடி கொடுத்தது. ஜெலென்ஸ்கி தனது பதக்கத்தை போலந்துக்கே தபாலில் திருப்பி அனுப்பினார். உக்ரேனின் இராணுவ உளவுத்துறையின் (HUR) தலைவராகவும், தற்போது ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவராகவும் உள்ள கைரிலோ புடானோவ் ஜூன் 20 அன்று கூறுகையில், போலந்தின் தகுதி வரிசையின் தங்க அதிகாரி சிலுவை விருதை தான் துறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், போலந்தில் “எங்கள் குடிமக்களுக்கு எதிராக வெறுப்புணர்வின் சக்கரம் நியாயமின்றியும் செயற்கையாகவும் சுழற்றப்படுகிறது” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதன் விளைவாக, சோவியத் யூனியன் மீதான நாஜி படையெடுப்பின் 85-வது நினைவு நாளன்று, ஜெலென்ஸ்கியையும் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவத்தையும் (UPA) பாதுகாக்கும் ஒரு முழு வீச்சிலான பிரச்சார நடவடிக்கை நடந்து வந்தது. முன்னாள் உக்ரேனிய ஜனாதிபதிகளான லியோனிட் குச்மா, விக்டர் யுஷ்சென்கோ மற்றும் பெட்ரோ போரோஷென்கோ ஆகியோர் ஜெலென்ஸ்கிக்கு ஒற்றுமையைக் காட்டும் விதமாக தங்களுடைய வெள்ளை கழுகு விருதுகளை திருப்பித் தருவதாக சபதம் செய்துள்ளனர். உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, வார்சோவியின் விமர்சனத்தை “மாஸ்கோ மட்டுமே பயனடையும் ஒரு மூலோபாய தவறு” என்று கண்டித்தார்.
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேன் தற்போது நேட்டோ ஆதரவுடன் நடத்தி வரும் போரை, சோவியத் யூனியனுக்கு எதிராக ஹிட்லர் நடத்திய அழிவுப் போருடன் ஒப்பிட்டு, உக்ரேனிய கிளர்ச்சி இராணுவத்தை ஜெலென்ஸ்கி ஊக்குவிப்பதை சிபிஹா ஆதரித்துப் பேசினார். “UPA-விற்கு உக்ரேன் அளிக்கும் ஆதரவு அறிக்கைகளில் போலந்திற்கு எதிரான எந்தவொரு உள்நோக்கமும் முற்றிலும் இல்லை” என்று அவர் அபத்தமாக வாதிட்டார். அதற்குப் பதிலாக, ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல் ஏகாதிபத்திய மாஸ்கோவிற்கும், போல்ஷிவிக்-கம்யூனிச ஆக்கிரமிப்பிற்கும் எதிராகப் போராடியவர்களைக் கௌரவிப்பதே” இதன் நோக்கம் என்று சிபிஹா வாதாடினார்.
சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்பான ஆபரேஷன் பார்பரோசா, அக்டோபர் புரட்சிக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் எதிரான ஏகாதிபத்திய எதிர்-புரட்சியின் மிகக் கொடூரமான வெளிப்பாடாக இருந்தது. அது ஒரு முழு அழிப்புப் போராகும். யூதர்கள், கெரில்லாக்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளைப் பட்டினி, அடிமை உழைப்பு, மற்றும் பெருங்கொலைகள் மூலம் “யூத-போல்ஷிவிசத்தை” அழித்து, ஜேர்மானிய ஏகாதிபத்தியத்திற்கான வாழ்விடத்தை (Lebensraum) உருவாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது. நாஜிக்களின் போர் இயந்திரம் நசுக்கப்பட்ட நேரத்தில், 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் இறந்திருந்தனர்.
சோவியத் யூனியனில் இருந்த நாஜி ஒத்துழைப்புப் படைகளை ஜெலென்ஸ்கியால் பாதுகாக்க முடிவதற்குக் காரணம், இந்த நடவடிக்கைக்கு முக்கிய நேட்டோ ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும் என்பதால் மட்டுமே ஆகும். 2022 ரஷ்யப் படையெடுப்பிற்கு முன்னும் பின்னும் உள்ள ஆண்டுகளில், வாஷிங்டன், பேர்லின் மற்றும் பிற நேட்டோ சக்திகள் உக்ரேனிய ஆட்சிக்கு பில்லியன் கணக்கான டாலர்களை வாரி வழங்கிய அதே வேளையில், உக்ரேனிய ஆட்சியானது இரண்டாம் உலகப் போரின் பாசிச ஒத்துழைப்பாளர்களை திட்டமிட்ட முறையில் மறுவாழ்வு செய்தது.
உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்பின் தலைவர் ஸ்டீபன் பண்டேராவின் நினைவாக தெருக்களுக்கு மறுபெயரிடப்பட்டதுடன், உக்ரேனிய நாடாளுமன்றமும் இராணுவத் தலைமையகமும் பண்டேராவின் பிறந்தநாளை பகிரங்கமாகக் கொண்டாடியுள்ளன. நாஜிக்களின் வாபென் எஸ்எஸ் (Waffen SS) படையிடமிருந்து நேரடியாக சின்னங்களைப் பெற்ற அசோவ் பட்டாலியன் போன்ற வெளிப்படையான நவ-பாசிச அமைப்புகள், ஆயுதப் படைகளில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு, மேற்கத்திய ஊடகங்களால் “ஜனநாயகத்தின்” பாதுகாவலர்களாகக் கொண்டாடப்பட்டன.
UPA ஆணை பிறப்பிக்கப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, “போல்ஷிவிக் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான சிலுவைப் போரில்” சேரும் உரிமைக்காக ஹிட்லரிடம் மனு அளித்திருந்த, உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்பின் தலைவரும் நாஜிக்களின் கூட்டாளியுமான ஆண்ட்ரி மெல்னிக்கின் உடலை, ஜெலென்ஸ்கி அரசாங்கம் கீவ்வின் தேசிய இராணுவக் கல்லறைக்குத் திருப்பிக் கொண்டுவந்து மீண்டும் அடக்கம் செய்தது. ஜெலென்ஸ்கி தனிப்பட்ட முறையில் மெல்னிக்கை “மிகுந்த மரியாதைக்குரியவர்” என்று புகழ்ந்துரைத்து, உக்ரேன் “தேசிய படையினர்களின் ஒரு நினைவு மண்டபத்தை” உருவாக்கி வருவதாக அறிவித்தார். நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையானது, இரத்தக் கறைபடிந்த இந்த உருவத்தை “சர்ச்சைக்குரிய 20 ஆம் நூற்றாண்டின் நாயகன்” என்று வர்ணித்தது.
பாசிசத்தின் தீவிரமடைந்து வரும் இந்த மகிமைப்படுத்தலானது, நேட்டோ பினாமி போரின் ஆழமடைந்து வரும் நெருக்கடியினதும் மற்றும் ஆட்சி மீதான மக்கள் ஆதரவு சரிந்து வருவதினதும் வெளிப்பாடாக உள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில், தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஒரு பேரழிவுகரமான போருக்குள் தள்ளுவதற்கு ஏதுவான ஒரு தீவிரப் பேரினவாதக் கற்பனைக் கதையை உருவாக்குவதற்காக, ஆளும் தன்னலக் குழுவானது, திரிக்கப்பட்ட ஒரு தேசிய வரலாற்றை மீண்டும் தீவிரமாகப் பயன்படுத்தி வருகிறது.
OUN அமைப்பினர்களை நோக்கித் திரும்புவதானது, சர்வாதிகார ஆட்சி வடிவங்களுடன் நோக்கித் திரும்புவதோடு கைகோர்த்துச் செல்கிறது. ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சொந்த சட்டபூர்வமான பதவிக்காலம் 2024 மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இருப்பினும், அவர் எதிர்க்கட்சிகளைத் தடைசெய்து, சுதந்திரமான தொழிற்சங்கங்களை ஒடுக்கி, இடதுசாரிகளிடமிருந்து வரும் போருக்கான எந்தவொரு எதிர்ப்பையும் சட்டவிரோதமாக்கி, இராணுவச் சட்டத்தின் கீழ் அதிகாரத்தில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறார்.
ஜெலென்ஸ்கி ஆட்சியானது நாஜி ஆதரவாளர்களைப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், போரை எதிர்த்துவரும் இடதுசாரிகளை சிறையில் அடைத்து வருகிறது. போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் தலைவரும், உக்ரேனைச் சேர்ந்த இளம் ட்ரொட்ஸ்கிசவாதியுமான போக்டன் சிரோடியுக், கடந்த 2024 ஏப்ரலில் உக்ரேனின் பாதுகாப்புப் பிரிவினால் (SBU) கைது செய்யப்பட்டார். உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) கட்டுரைகளை வெளியிட்டதற்காக அவர் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றத்திற்கு 15 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. போக்டன், நேட்டோ ஆதரவுடைய கீயேவ்விலுள்ள அரசாங்கத்திற்கும், மாஸ்கோவில் உள்ள புட்டின் ஆட்சிக்கும் எதிராக ஒரு சோசலிச மற்றும் சர்வதேசவாத நிலைப்பாட்டிலிருந்து இந்தப் போரை எதிர்க்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும், உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையிலும், அவர் நிகோலாய் சிறையில் விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலில் இருக்கிறார். அதேவேளையில், அவரைச் சிறையில் அடைத்துள்ள ஜெலென்ஸ்கியின் அரசு, வோல்ஹினியாவின் (Volhynia) கொலையாளிகளைத் தேசிய நாயகர்களாகப் போற்றி வருகிறது.
ஐரோப்பா முழுவதிலும் உள்ள ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள், நாஜிக்களின் கூட்டாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து, இராணுவவாதத்திற்குப் புத்துயிர் அளித்து, புதிய போர்களுக்குத் தயாராவதற்காக 20-ஆம் நூற்றாண்டின் வரலாற்றைத் திரித்துரைக்கின்றன. 1941-ல் சோவியத் யூனியனுக்கு எதிராக இன அழிப்புப் போரைத் தொடங்கி, மீண்டும் ஆயுதங்களைத் திரட்டி, தனது இராணுவவாத மரபுகளுக்குப் புத்துயிர் அளித்து வரும் ஜேர்மனியிலும் இதே செயல்முறைதான் நடைபெற்று வருகிறது.
காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையை எதிர்க்கும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள், யூத-எதிர்ப்பாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, தங்கள் வளாகங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, வேலையிலிருந்து நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். யூத-எதிர்ப்பு என்ற குற்றச்சாட்டானது, ஏகாதிபத்திய போருக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளுக்கும் எதிரான ஒரு ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. ஆயினும்கூட, பாரிய படுகொலையை எதிர்ப்பவர்கள் மீது இந்த அவதூறைச் சுமத்தும் அதே அரசாங்கங்கள் தான், பாரிய படுகொலையை நடத்திய மனிதர்களுக்கு நினைவுச்சின்னங்களை எழுப்பும் ஓர் ஆட்சிக்கு ஆயுதங்களை வாரி வழங்கி வருகின்றன.
சோவியத் யூனியனுக்கு எதிராக நாஜிக்கள் மேற்கொண்ட பார்பரோசா நடவடிக்கையின் 85வது ஆண்டு நிறைவு ஒரு எச்சரிக்கையாகும். ஒரு காலத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக ஹிட்லரை ஆயுதபாணியாக்கிய அதே ஏகாதிபத்திய வல்லரசுகள் தான், அணுஆயுத நாடுகளுக்கு இடையே நேரடி மோதலாக வெடிக்கும் என்று அச்சுறுத்தும் ஒரு போரில், ரஷ்யாவிற்கு எதிராக கிழக்கு ஐரோப்பாவின் மிகவும் பிற்போக்குத்தனமான சக்திகளை மீண்டும் ஆயுதபாணியாக்கி வருகின்றன.
வார்சோவிற்கும் கியேவ்விற்கும் இடையிலான மோதலானது, இரண்டு முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு இடையேயான பிளவாகும். இவை இரண்டுமே நேட்டோவிற்கு உட்பட்டவை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எதிரிகளாகும். தற்போதைக்கு அனைத்தும் இந்த கூட்டுப் போர் முயற்சிக்குக் கீழ்ப்படிந்தே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் சமீபத்தில் இந்த சர்ச்சை குறித்துக் கூறுகையில், “ஒத்துழைப்பு என்பது எமது இரு நாடுகளினதும் தேசங்களினதும் நலன்களுக்குப் பலனளிக்கிறது, அதே நேரத்தில் மோதலானது மாஸ்கோவின் நலன்களுக்கே பலனளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
தொழிலாளர்களால் ஜெலென்ஸ்கி ஆட்சியையோ அல்லது அதன் போலந்து மற்றும் நேட்டோ ஆதரவாளர்களையோ ஆதரிக்க முடியாது. ஸ்டீபன் பாண்டேராவிற்கு மறுவாழ்வு அழிப்பதுக்கும், சோசலிஸ்டுகள் மீதான அடக்குமுறைக்கும் எதிராகவும், சர்வதேச தொழிலாள வர்க்கம் தனது சொந்த வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும்: உக்ரேன், போலந்து, ரஷ்யா மற்றும் அனைத்து நாட்டு தொழிலாளர்களும் தங்களின் சொந்த ஆளும் வர்க்கங்களுக்கும், அவர்கள் நடத்தும் ஏகாதிபத்திய போருக்கும் எதிராக ஒன்றிணைய வேண்டும். இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் போராட்டமாகும். அனைத்துலகக் குழு, போக்டன் சிரோடியுக்கின் உடனடி விடுதலையைக் கோருகிறது. போருக்கும் பாசிசத்திற்கும் எதிரான போராட்டமே சோசலிசத்திற்கான போராட்டமாகும்.
