முன்னோக்கு

அங்காராவில் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக: ஐரோப்பிய வல்லரசுகள் உக்ரேன் போரை ரஷ்யாவுடனான நேரடி மோதலை நோக்கித் தள்ளுகின்றன.

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (மத்தியில்), பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (வலது), மற்றும் ஜேர்மன் அதிபர் பிரடெரிக் மெர்ஸ் ஆகியோர் ஜூன் 24, 2026 புதன்கிழமை அன்று ஜேர்மனியின் பேர்லினில் நடந்த E5 நேட்டோ உச்சிமாநாட்டில் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். [AP Photo/Ebrahim Noroozi]

உக்ரேனில் போர் வழக்கத்திற்கு மாறான ஆபத்தான ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. ஜூலை 7-8 தேதிகளில் அங்காராவில் நடக்கவிருக்கும் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவுடனான மோதலைப் பொறுப்பற்ற முறையில் தீவிரப்படுத்தி, ரஷ்யப் பகுதிக்குள் ஆழமாக ஊடுருவும் தாக்குதல்களை நடத்துவதற்கான ஒரு ஏவுதளமாக உக்ரேனை மாற்றி, ஒரு நேரடி நேட்டோ-ரஷ்யப் போருக்கான அரசியல், இராணுவ மற்றும் தொழில்துறை அடித்தளங்களைத் தயார் செய்து வருகின்றன.

இத்தகையதொரு போர் உக்ரேனுடன் மட்டும் மட்டுப்பட்டு நிற்காது. இது ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் விழுங்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதுடன், மிக விரைவாக ஒரு அணுஆயுத மோதலாகவும் மாறக்கூடும்.

தொழிலாளர்கள் இந்த சூழ்நிலையின் தீவிரத்தை புரிந்து கொண்டு, தேவையான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். நூறாயிரக்கணக்கான உக்ரேனிய மற்றும் ரஷ்ய படையினர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த நகரங்களும் அழிக்கப்பட்டு மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இருப்பினும் நேட்டோ வல்லரசுகள், எல்லாவற்றிற்கும் மேலாக ஐரோப்பாவில் உள்ளவை, இந்தப் படுகொலையை நிறுத்த முனையவில்லை. அவர்கள் அதை தீவிரப்படுத்தி வருகின்றனர், மேலும் நூறாயிரக்கணக்கான மற்றும் மில்லியன் கணக்கானவர்களை இன்னும் பலிகொடுக்கத் தயாராக உள்ளனர்.

முதன்மையான ஆபத்து என்னவென்றால், ஒரு பினாமிப் போருக்கும், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடிப் போருக்கும் உள்ள வேறுபாடு முறையாக அழிக்கப்பட்டு வருகிறது என்பதாகும். ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள இலக்குகள் — எரிசக்தி நிலையங்கள், இராணுவ-தொழில்துறை தளங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்புகள் — மீது உக்ரேன் நடத்தும் அதிக தூரம் செல்லும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் என்பன, நேட்டோவின் உளவுத்துறை, செயற்கைக்கோள் கண்காணிப்பு, இலக்குத் தரவுகள், ஆயுத அமைப்புகள் மற்றும் அரசியல் வழிகாட்டுதல்களையே சார்ந்துள்ளன.

ஐரோப்பிய வல்லரசுகள் வேண்டுமென்றே போரை தீவிரப்படுத்த கியேவை தூண்டி வருகின்றன. ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிகளுக்குள் ஊடுருவி நடத்தப்படும் தாக்குதல்கள் மாஸ்கோவை பதிலடி கொடுக்க தூண்டும் என்றும், அதன்பின் ரஷ்யாவின் எந்தவொரு எதிர்த் தாக்குதலையும் இன்னும் பரந்த நேட்டோ தலையீட்டை நியாயப்படுத்தப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஐரோப்பிய வல்லரசுகள் கணக்குப்போடுகின்றன. இதுதான் ஆத்திரமூட்டலின் தர்க்கம் ஆகும். இது உலகப் போருக்கு இட்டுச் செல்லும் தர்க்கமாகும்.

இந்தப் போர் அதிகரிப்பின் அடுத்த கட்டமாக அங்காராவில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாடு தயாராகி வருகிறது. 2035-ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பாதுகாப்பு மற்றும் பரந்த இராணுவம் சார்ந்த செலவினங்களுக்காக ஒதுக்குவது உட்பட, இராணுவச் செலவினங்களை பெருமளவில் அதிகரிக்க இந்தக் கூட்டணி தன்னை அர்ப்பணித்துள்ளது. நேட்டோவின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, “நேட்டோ 3.0” என்றழைக்கப்படும் ஒரு “மறுதொடக்கம் செய்யப்பட்ட” கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில், “அமெரிக்க வல்லமையின் ஆதரவுடன்” ஐரோப்பாவில் நடக்கும் போருக்கு ஐரோப்பிய வல்லரசுகள் மிகப் பெரிய பொறுப்பை ஏற்கும். ஜூன் மாதம் நடைபெற்ற நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில், “போருக்கான திறனுடன் தயார் நிலையில் இருத்தல்,” இராணுவ உற்பத்தி மற்றும் உக்ரேனுக்கான ஆயுத விநியோகம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ஐரோப்பா ஒரு போர் கூட்டணியாக மறு ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது. ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், போலந்து, பால்டிக் நாடுகள் மற்றும் நோர்டிக் நாடுகள் ஆகியவை இந்தப் போரை முன்னோக்கி தள்ளும் மிக ஆக்ரோஷமான சக்திகளில் அடங்கும். அமெரிக்க மேலாதிக்கத்தின் நெருக்கடி, ட்ரம்பின் கீழ் அமெரிக்கக் கொள்கையின் நிச்சயமற்ற தன்மை மற்றும் அட்லாண்டிக் கடந்த கால ஒழுங்கின் பலவீனம் ஆகியவை, இந்த நாடுகள் தங்களுடைய சொந்த இராணுவத் திறன்களை மேம்படுத்தவும், தங்களின் ஏகாதிபத்திய நலன்களை நிலைநாட்டவும் கட்டாயப்படுத்துகின்றன.

ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு, உக்ரேன் போர் என்பது உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை சுதந்திரமான இராணுவ வல்லரசுகளாக மாறுவதற்கான ஒரு வழியாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரிய மறு ஆயுதபாணியாகுதல், இராணுவ உற்பத்திக்காக தொழில்துறையை மறுசீரமைத்தல், கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துதல், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை இராணுவமயமாக்குதல் மற்றும் உள்நாட்டில் ஒரு போலீஸ் அரசு அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றை நியாயப்படுத்த அவர்கள் இதனைப் பயன்படுத்துகிறார்கள். மறு ஆயுதமேந்தலும் போரும், இராணுவத் தீவிரப்படுத்தலை வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் உலகை மீண்டும் பிரிப்பதற்கும் ஒரு வழியாகக் கருதும் ஆளும் வர்க்கத்தின் பதிலடியாகும்.

தீவிரமடைந்து வரும் இந்தப் போருடன் சேர்த்து, மனிதப் படுகொலைக்காக முன்னெப்போதையும் விட அதிகளவிலான மனித வளமும் திரட்டப்பட்டு வருகிறது. ரஷ்யா மேலும் பல இராணுவத் திரட்டல்களுக்குத் தயாராகி வருகிறது. பல ஆண்டுகால போரினால் முற்றிலும் பலவீனமடைந்துள்ள உக்ரேன், தன் இராணுவப் படைகளை நிரப்புவதற்கு தீவிரமாக முயன்று வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம், கீயேவ் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து, உக்ரேனை விட்டு வெளியேற அனுமதி இல்லாத, புதிதாக ஐரோப்பாவிற்கு வரும் இராணுவ வயதைக் கொண்ட உக்ரேனிய ஆண்களுக்கு தற்காலிகப் பாதுகாப்பை வழங்குவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. போரிலிருந்து தஞ்சம் புகும் உக்ரேனிய தொழிலாளர்களும் இளைஞர்களும், முன்னரங்க போர்க்களத்திற்கு பீரங்கித் தீவனமாகத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.

போர்க்களத்தில் உக்ரேனால் ரஷ்யாவைத் தோற்கடிக்க முடியாது. எனவே, அதன் மூலோபாயம் என்னவென்றால், போரை உச்சக்கட்டத்திற்கு தீவிரப்படுத்தி, ரஷ்யாவின் பழிவாங்கலைத் தூண்டி, நேட்டோவை இந்த மோதலில் இன்னும் நேரடியாக ஈடுபடுத்துவதாகும். கிரிமியன் தீபகற்பத்திலும் ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிகளிலும் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு, போக்குவரத்து அமைப்புகள் மற்றும் இராணுவ-தொழில்துறை வசதிகள் உள்ளிட்ட போருக்குப் பயன்படுத்தப்படும் ரஷ்ய கட்டமைப்புகள் மீது “முற்கூட்டியே தாக்குதல்களை” நடத்தும் நடவடிக்கைகளுக்கு ஜெலென்ஸ்கி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த மூலோபாயத்தின் அரசியல் நோக்கம் உக்ரேனின் போர்க்கள நிலையை மேம்படுத்துவது மட்டுமல்ல, புட்டின் ஆட்சியை நிலைகுலையச் செய்வதுமாகும். உக்ரேனின் ஆழ ஊடுருவித் தாக்கும் நடவடிக்கையானது, பொருளாதாரத் தடைகள், கிரிமியா மீதான தாக்குதல்கள் மற்றும் இராணுவ அழுத்தங்களைப் பயன்படுத்தி மாஸ்கோவைக் பணிய வைக்க முடியும் அல்லது ரஷ்ய அரசுக்குள் ஒரு நெருக்கடியைத் தூண்ட முடியும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் மூலோபாயவாதிகளும், பெருகிய முறையில் செயல்பட்டு வருகின்றனர்.

லண்டன் டைம்ஸ் இதழில் மார்க் கலியோட்டி எழுதிய “கிரிமியாவை இழந்துவிடுவோம் என்று புட்டின் அஞ்சினால், அவர் என்ன செய்வார் என்று சொல்ல முடியாது” என்ற தலைப்பிலான சமீபத்திய கட்டுரை இந்த கணக்கீடுகளைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. ரஷ்யாவின் நிர்வாக மற்றும் வர்த்தக உயரடுக்கினரின் ஒரு பகுதியினர், மோதலை முடக்கவும், கைப்பற்றப்பட்டதைத் தக்கவைத்துக் கொள்ளவும், பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் விரும்புவதாக கலியோட்டி குறிப்பிடுகிறார். ஆனால் அதே நேரத்தில், தீவிரமான நடவடிக்கைகளைக் கோரும் ஒரு பெரும் போர்க்குணமிக்க பிரிவையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்: இலட்சக்கணக்கான மாற்று இராணுவ படையினர்களைத் திரட்டுவது, கட்டாய இராணுவச் சேவைக்கு உட்பட்டவர்களைப் பயன்படுத்துவது மற்றும் உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கும் ஐரோப்பிய தொழிற்சாலைகளுக்கு எதிராக இன்னும் தீவிரமான இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை இதில் அடங்கும்.

இது உலக சோசலிச வலைத் தளத்தால் (WSWS) விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகிறது. நேட்டோ நாடுகள் ஒரு நிலையான மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய சூழலை கையாளவில்லை. புட்டின் பின்வாங்குவார் அல்லது அவர் நிலைகுலைந்து போவார் என்று சூதாடிக்கொண்டே, அவர்கள் அவரை ஒரு முட்டுச்சந்தில் தள்ளுகிறார்கள். ஆனால், கிரிமியாவை இழப்பது அல்லது அதைப் பாதுகாக்க முடியாமல் போவது தனது ஆட்சியின் பிழைப்பிற்கே அச்சுறுத்தலாக மாறும் என்று கிரெம்ளின் நம்பினால், அது ஒரு கடுமையான போர்த் தீவிரப்படுத்தலுடன் பதிலடி கொடுக்கக்கூடும். மாஸ்கோவை உடைக்கும் என்று ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் சில பிரிவினர் நம்பும் அதே அழுத்தம், அதே நேரத்தில் ஒரு பரந்த போரைத் தூண்டக்கூடும்.

கடந்த கால் நூற்றாண்டுகால புட்டினின் ஒட்டுமொத்தக் கொள்கையும், அதன் “மேற்கத்திய பங்காளிகளுடன்” சமரசம் செய்துகொள்வதன் மூலம், உலக முதலாளித்துவ ஒழுங்கிற்குள் ரஷ்ய தன்னலக் குழுவிற்கான ஒரு இடத்தைப் பாதுகாப்பது என்ற திவாலான கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கருத்து தற்போது தவிடுபொடியாகிப் போயுள்ளது. கிரெம்ளினின் ஒவ்வொரு விட்டுக் கொடுப்பையும், தயக்கத்தையும் நேட்டோ நாடுகள் போரை மேலும் தீவிரப்படுத்தவே பயன்படுத்தியுள்ளன.

இது ஒரு வெடிக்கும் சூழ்நிலையாகும். உக்ரேனில் உள்ள நேட்டோவுடன் தொடர்புடைய தளவாட மையம் மீதான ரஷ்யத் தாக்குதல், ஆலோசகர்கள் அல்லது ஒப்பந்தக்காரர்கள் என்ற போர்வையில் செயல்படும் நேட்டோ பணியாளர்களின் மரணம், பால்டிக் அல்லது கருங்கடலில் ஒரு கடல்சார் மோதல், ரஷ்யாவின் “நிழல் கடற்படையை” சுற்றியுள்ள ஒரு மோதல், அல்லது ஐரோப்பிய இரயில், துறைமுகம், எரிசக்தி அல்லது ஆயுத வசதிகளுக்கு எதிரான நாசவேலைகள் ஆகியவை விரைவான ஒரு போர்த் தீவிரப்படுத்தல் சுழலைத் தூண்டக்கூடும். ஆளும் வர்க்கங்கள் ரஷ்யாவுடனான எதிர்காலப் போரைப் பற்றி “சில ஆண்டுகளுக்குள்” அல்லது “இந்த தசாப்தத்தின் இறுதிக்குள்” நடைபெறும் என்று சாதாரணமாகப் பேசுகின்றன. ஆனால், அவர்களின் சொந்த செயல்களே அத்தகைய போர் இன்னும் மிக விரைவாக வெடிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கி வருகின்றன.

அணுஆயுத வல்லரசு ஒன்றின் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்கள், அணுஆயுதத் தீவிரப்படுத்தலின் ஆபத்தைக் கொண்டுவருகின்றன. நேட்டோ அமைப்பே ஐரோப்பாவில் அணுஆயுதப் போருக்குத் தயாராவதை நோக்கி முன்னெப்போதையும் விட மிகவும் பகிரங்கமாக நகர்ந்து வருகிறது. பின்லாந்து நாடாளுமன்றம், அணுஆயுதங்கள் மீதான அந்நாட்டின் தடையை நீக்க வாக்களித்துள்ளது. இதன்மூலம் ரஷ்யாவுடன் 1,300 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நாட்டில் நேட்டோவின் அணு குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான சட்டரீதியான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. பிரான்சின் அணுஆயுதப் பாதுகாப்பை ஐரோப்பா முழுவதும் விரிவுபடுத்துவதற்கான மக்ரோனின் முன்மொழிவு மற்றும் ஆர்க்டிக், பால்டிக் மற்றும் நோர்டிக் பிராந்தியங்கள் முழுவதும் நேட்டோ இராணுவ உள்கட்டமைப்பை விரிவாக்கம் செய்ததைத் தொடர்ந்து இது நடந்துள்ளது.

இதில் ஜேர்மனி முக்கியப் பங்கு வகிக்கிறது. சோவியத் ஒன்றியம் மீதான நாஜி படையெடுப்பின் 85வது ஆண்டு நிறைவான ஜூன் 22 அன்று, பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜேர்மன் இராணுவத்தின் 45வது கவசப் பிரிகேடின் முதல் பெரிய பயிற்சியில் பங்கேற்பதற்காக லிதுவேனியாவிற்கு விஜயம் செய்தார். 2027 ஆம் ஆண்டிற்குள், சுமார் 5,000 ஜேர்மன் சிப்பாய்கள் ரஷ்யா மற்றும் பெலாரஸ் எல்லைகளுக்கு அருகில் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளனர்.

இதன் குறியீட்டுத் தன்மை இதைவிட தூண்டக்கூடியதாக இருக்க முடியாது. ஜூன் 22, 1941 இல், நாஜி ஜேர்மனி வரலாற்றிலேயே மிகப்பெரிய அழிவுப் போரான “ஆபரேஷன் பார்பரோசா”வை தொடங்கியது. இதில் குறைந்தது 2.7 கோடி (27 மில்லியன்) சோவியத் குடிமக்கள் கொல்லப்பட்டனர். இப்போது, 85 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேர்மனியின் டாங்கிகளும் படைகளும் மீண்டும் ரஷ்யாவின் எல்லைகளை நோக்கி நகர்கின்றன. ஜேர்மன் ஏகாதிபத்தியம் நேட்டோ, ஜனநாயகம் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு என்ற பதாகையின் கீழ், தனது பழைய கிழக்கு நோக்கி விரிவுபடுத்தும் கொள்கையை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களைப் போலவே, பேர்லின் கிழக்கு ஐரோப்பா மற்றும் யூரேசியாவில் தனது மேலாதிக்க மூலோபாயத்திற்கு உக்ரேனை மையப் புள்ளியாக்கி வருகிறது.

தொழிலாள வர்க்கம் இந்தக் கொள்கைக்காக இரண்டு முறை விலை கொடுக்க வேண்டியுள்ளது: சமூக நலக் குறைப்புகள், ஊதிய முடக்கம், நீண்ட வேலை நேரம் மற்றும் வேலை இழப்புகள் ஆகியவற்றின் மூலமாகவும் — ஆளும் வர்க்கத்தின் விருப்பம் நிறைவேறினால், தங்களின் இரத்தத்தாலும் விலை கொடுக்க நேரிடும்.

இந்தப் போர், போலி-இடது அமைப்புகளின் திவால் தன்மையையும் மற்றும் அதிகாரப்பூர்வ போர்-எதிர்ப்புச் சூழலில் எஞ்சியிருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது. இந்தச் சக்திகளில் சிலர் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரை பகிரங்கமாக ஆதரிக்கின்றனர். மற்றவர்கள் அதை முறைப்படி எதிர்த்தாலும், போரை நடத்தும் அரசாங்கங்கள், கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்ட மறுக்கிறார்கள். அதற்குப் பதிலாக, அவர்கள் போர் ஆதரவுக் கட்சிகளுக்குத் தங்களை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். இராஜதந்திர அழுத்தம் மற்றும் நாடாளுமன்றத்தின் மீது மாயைகளை இவர்கள் உருவாக்குகிறார்கள், மேலும் போருக்கான எதிர்ப்பை தங்களது சொந்த முதலாளித்துவ வர்க்கத்தின் தேசிய நலன்களுக்கு அடிபணியச் செய்கிறார்கள். அவர்களின் “போர்-எதிர்ப்பு” வாய்வீச்சுக்கள் ஒரு ஏமாற்று வேலை: அவை போரை நிறுத்துவதற்குப் பயன்படவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு உண்மையான சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கம் உருவாவதைத் தடுப்பதற்கே பயன்படுகின்றன.

ஜேர்மனியில், இடது கட்சி மெர்சின் அரசாங்கத்திற்கும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கும் ஒரு அரசியல் பாதுகாவலராகச் செயல்படுகிறது. அது மாநில அரசாங்கங்களில் பங்கேற்றுள்ள இடங்களில், உக்ரேனுக்கான இராணுவ ஆதரவை ஆதரித்துள்ளது, மேலும் போர்க் கடன்கள் மற்றும் மறு ஆயுதமேந்தல் நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது. பசுமைக் கட்சியினர் நேட்டோ போர்த் தீவிரவாக்கத்தின் மிகவும் ஆக்ரோஷமான ஆதரவாளர்களில் ஒன்றாக உள்ளனர், அதே நேரத்தில் தொழிற்சங்கங்கள் போர் பொருளாதாரத்தை ஆதரிப்பதோடு, தொழிலாளர்களை “தேசிய பாதுகாப்பு” மற்றும் “போட்டித்திறன்” ஆகியவற்றுக்கு அடிபணியச் செய்கின்றன. அதிகாரப்பூர்வ இடதுகள் முதலாளித்துவத்தையும், தேசிய-அரசையும் மற்றும் அதன் சொந்த முதலாளித்துவ வர்க்கத்தின் ஏகாதிபத்திய நலன்களையும் பாதுகாக்கின்றனர்.

ரஷ்யாவிற்கு எதிரான இந்த போர்த் தீவிரப்படுத்தல் என்பது, உலக ஏகாதிபத்தியமானது, உலகத்தை மீண்டும் மறுபங்கீடு செய்வதற்கான ஒரு முனையாகும். உக்ரேன் போரை இயக்கும் அதே ஆளும் வர்க்கங்கள் தான், காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆயுதங்களையும் அரசியல் ஆதரவையும் வழங்கி வருகின்றன, ஈரானுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போரை நடத்துகின்றன, மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிராக தங்கள் இராணுவப் படைகளைக் குவித்து வருகின்றன. ஒரு மூன்றாம் உலகப் போர் என்பது எதிர்காலத்திற்காக வெறும் தயாரிப்பில் மட்டும் இல்லை, அது ஏற்கனவே கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் பசிபிக் ஆகிய பிராந்தியங்களில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட போர் முனைகளின் வழியாக வெளிப்பட்டு வருகிறது. எனவே, நேட்டோ-ரஷ்யாவுக்கு இடையேயான நேரடிப் போரின் ஆபத்து என்பது, முதலாளித்துவத்தின் நெருக்கடியிலிருந்து உருவான ஏகாதிபத்திய வன்முறையின் உலகளாவிய வெடிப்பின் ஒரு பகுதியாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இந்தப் போரின் பைத்தியக்காரத்தனத்திற்கு எதிரான போராட்டம், புட்டின் ஆட்சியின் பிற்போக்குத்தனமான கொள்கைகளை நிராகரிப்பதையும் கோருகிறது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு என்பது நேட்டோவின் முற்றுகைக்கு எதிரான ஒரு முற்போக்கான அல்லது ஏகாதிபத்திய-எதிர்ப்புப் பதில் நடவடிக்கை அல்ல. அது சோவியத் ஒன்றியத்தின் ஸ்டாலினிச அழிவு மற்றும் முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பிலிருந்து உருவான ஒரு முதலாளித்துவ தன்னலக் குழுவின் ஆட்சியின் விரக்தியடைந்த பதிலாகும். இது, ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தைப் பிரிப்பதற்கும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்குப் போரை பெருமளவில் விரிவுபடுத்துவதற்கான சாக்குப்போக்கை வழங்குவதற்கும் மட்டுமே உதவியுள்ளது.

இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), நேட்டோ ஏகாதிபத்தியம் மற்றும் புட்டின் ஆட்சி ஆகிய இரண்டிற்கும் எதிராக உக்ரேன் மற்றும் ரஷ்யாவின் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த போராடி வருகிறது. படையெடுப்பிற்குப் பிந்தைய தனது முதல் அறிக்கையில், ICFI ரஷ்யாவின் இராணுவத் தலையீட்டைக் கண்டித்து இவ்வாறு அறிவித்தது: “அமெரிக்க மற்றும் நேட்டோ வல்லரசுகளின் தூண்டுதல்களும் அச்சுறுத்தல்களும் இருந்தபோதிலும், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை சோசலிஸ்டுகளும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களும் எதிர்க்க வேண்டும்.”

இதுவே தற்போதும் மிக முக்கியமான நிலைப்பாடாக உள்ளது. தொழிலாள வர்க்கம் நேட்டோவின் போரை சோசலிச சர்வதேசவாதத்தின் அடிப்படையில் மட்டுமே எதிர்க்க முடியும், ரஷ்ய தேசியவாதத்தின் அடிப்படையில் அல்ல.

கீயேவில் உள்ள நேட்டோ ஆதரவு ஆட்சி, அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களை விட எந்த வகையிலும் ஜனநாயகத்தன்மை கொண்டது அல்ல. அது எதிர்க்கட்சிகளை சட்டவிரோதமாக்கியுள்ளது, சுதந்திரமான தொழிற்சங்கங்களை ஒடுக்கியுள்ளது, இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது, ஜெலென்ஸ்கியின் சட்டபூர்வமான பதவிக்காலம் முடிந்த பிறகும் அவரது ஆட்சியை நீடித்து வருகிறது, மேலும் பாசிச சக்திகளை அரசு மற்றும் இராணுவத்திற்குள் இணைத்துள்ளது. அது நாஜி ஜேர்மனியுடன் ஒத்துழைத்து, யூத இனப்படுகொலை மற்றும் போலந்து மற்றும் யூதர்களின் படுகொலைகளில் பங்கேற்ற அமைப்புகளான OUN மற்றும் UPA ஆகியவற்றை மகிமைப்படுத்துகிறது, அதே நேரத்தில் போரை எதிர்க்கும் சோசலிசவாதிகளை சிறையில் அடைக்கிறது.

போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் (Young Guard of Bolshevik-Leninists) முன்னணி உறுப்பினரான போக்டன் சிரோட்டியுக், உக்ரேனில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கைது செய்யப்பட்டு, பொய்க் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, போரின் பிற்போக்குத்தனமான தன்மையையும் கீயேவில் உள்ள நேட்டோ ஆதரவு ஆட்சியையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜெலென்ஸ்கியின் சர்வாதிகாரத்தையும் போரையும் சிரோட்டியுக் எதிர்த்ததோடு, உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்கள் தத்தமது முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக ஐக்கியப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இதற்காக, அவர் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ICFI மற்றும் WSWS ஆகியவை போக்டன் சிரோட்டியுக்கை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யக் கோரி உலகளாவிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அவரது வழக்கு இந்தப் போரின் மைய அரசியல் பிரச்சினையை வெளிப்படுத்துகிறது: அதாவது தேசியவாதம், ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக உக்ரேனிய, ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டம் அதுவாகும்.

நேட்டோ-ரஷ்யாவுக்கு இடையேயான நேரடிப் போரின் ஆபத்து, இந்த பிரச்சாரத்திற்கும், இந்த முன்னோக்கிற்கும் மிக உயர்ந்த அவசரத் தேவையை அளிக்கிறது. ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், போலந்து, இத்தாலி, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளின் தொழிலாளர்களுக்கு தங்களின் ஆளும் வர்க்கங்களின் இலாபத்திற்காகவும் மூலோபாய இலட்சியங்களுக்காகவும் ஒருவரையொருவர் கொன்று கொள்வதில் எந்த விருப்பமும் இல்லை. அவர்களின் பொதுவான எதிரி முதலாளித்துவமே ஆகும், இது மனிதகுலத்தை போர், சர்வாதிகாரம் மற்றும் சமூகப் பேரழிவை நோக்கித் தள்ளுகிறது.

போருக்கு எதிரான போராட்டம் பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வேரூன்ற வேண்டும். இதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதும், இராணுவ உற்பத்தி மற்றும் ஆயுதப் போக்குவரத்திற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டுவதும், வேலைநீக்கங்கள், ஊதியக் குறைப்புகள், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை போருக்கு எதிரான போராட்டத்துடன் ஒன்றிணைப்பதும் அவசியமாகும்.

அனைத்திற்கும் மேலாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புவது அவசியமாகும். ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாகியுள்ள சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே, ஒரு பேரழிவுகரமான ஐரோப்பிய மற்றும் உலகளாவிய அணுஆயுதப் போரை தடுத்து நிறுத்த முடியும்.

Loading