ட்ரம்ப் நிர்வாகம் ஈரானுக்கு எதிரான போரை மிகப் பெருமளவில் தீவிரப்படுத்தி வருகிறது. ஜூன் 17 போர்நிறுத்தம் 'முடிவடைந்துவிட்டது' என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஜூலை 11 அன்று அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது குண்டுவீச்சைத் தொடங்கியது. தொடர்ந்து ஒன்பது இரவுகளாக ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்கப் படைகள், தாக்குதல்களின் இலக்குகளை இராணுவத் தளங்களிலிருந்து பாலங்கள், இரயில்பாதைகள், துறைமுகங்கள் மற்றும் மின்சார விநியோக வலையமைப்புகள் வரை விரிவுபடுத்தயுள்ள அதேவேளை, ஏவுகணைத் தாக்குதல்களின் மூலம் கடற்படை முற்றுகையும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
வெள்ளிக்கிழமை ஜோர்டானில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை, வடக்கு ஈராக்கில் மேலும் ஒரு அமெரிக்க சிப்பாய் உயிரிழந்ததாகவும், ஜோர்டானில் உள்ள தளத்தில் மேலும் இதுவரை அடையாளம் காணப்படாத மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க இராணுவம் அறிவித்தது. வாஷிங்டன் போஸ்ட் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, இந்தப் போரில் அமெரிக்கத் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 அல்லது 18 ஆக இருக்கக்கூடும். அதேநேரம் 430க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இரு அமெரிக்கப் படையினர் உயிரிழந்த ஜோர்டான் இராணுவத் தளம் ஒரே வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறை தாக்குதலுக்கு உள்ளானது. அதற்கு முந்தைய நாள் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 20 படையினர் காயமடைந்ததாக போஸ்ட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. மேலும், ஜோர்டானில் இடம்பெற்ற இரண்டு தாக்குதல்கள் குறித்தும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டது. அவற்றில் ஒன்று கிங் பைசல் விமானத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்; அதில் பல சிப்பாய்கள் காயமடைந்தனர். இளவரசர் ஹசன் விமானத் தளத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் Black Hawk ஹெலிகாப்டர்கள் சேதமடைந்தன. இந்தத் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவிக்க பென்டகன் பேச்சாளர்கள் மறுத்தனர். மே 5 முதல் இந்தப் போர் தொடர்பாக எந்தவொரு பென்டகன் பேச்சாளரும் ஊடகக் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
ஜூலை 15 அன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்ட செய்தியின்படி, ட்ரம்ப் 'ஈரானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நோக்கில் நகர்ந்து வருகிறார்.' பரிசீலனையில் உள்ள தேர்வுகளில், 'ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானியத் தீவுகளை கைப்பற்ற அமெரிக்க தரைப்படைகளை அனுப்புவதும்' அடங்குவதுடன் 'அமெரிக்கப் படைகளைப் பயன்படுத்தி கார்க் தீவு மற்றும் ஹோர்முஸ் நீரிணையோரப் பகுதிகளை கைப்பற்றும் சாத்தியக்கூறு' குறித்து வெள்ளை மாளிகையின் நிலைமைகளை ஆராயும் அறையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் அந்தச் செய்தி தெரிவித்தது. பத்திரிகையாளர் செய்மூர் ஹெர்ஷ், ஜூன் 10 அன்று வெளியிட்ட தகவலில், ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்களுக்கு எதிராக குறைந்த சக்தி கொண்ட அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது 'சாத்தியமா?' என்று ட்ரம்ப் கேட்டதாக குறிப்பிட்டார்.
'அமெரிக்கா இன்னும் விரிவான போருக்குத் தயாராகி வருகிறது' என்று நிர்வாகத்தின் உள்நிலை கலந்துரையாடல்களை அறிந்த அமெரிக்க அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வெளியான வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில் தெரிவித்தார். பென்டகன் இப்பிராந்தியத்திற்கு மேலும் போர் விமானங்களை அனுப்பி வருவதாகவும், ஆனால் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் தொலைதூரத் தாக்குதல் ஆயுதங்களின் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதாகவும் அவர் எச்சரித்தார். அதோடு, போரினால் ஏற்பட்ட சேதம் காரணமாக மேலதிக படைகளையும் விமானங்களையும் அனுப்புவதற்கான திறனும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 'பாதுகாப்பாக இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு எங்களிடம் போதுமான வளங்கள் இல்லை. வெள்ளை மாளிகை அதைப் பற்றிய முழு உணர்வில் இருப்பதாக நான் நினைக்கவில்லை,' என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையில், ஈரானும் தனது பதிலடி நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது. கடந்த வாரம் பந்தர் அப்பாஸ் நகரைச் சேவையளிக்கும் பாலங்கள் மற்றும் இரயில் பாதைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை, பதற்றத்தை மேலும் உயர்த்திய நடவடிக்கையாக தெஹ்ரான் கருதியதாகவும், அதற்கேற்ப பதிலடி கொடுத்ததாகவும் போஸ்ட் மேற்கோள் காட்டியிருந்த அதிகாரி தெரிவித்தார். 'அமெரிக்காவுக்கு மிகப்பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்துவது பற்றிய தயக்கம் அவர்களுக்கு முன்பைவிடக் குறைந்திருந்தது,' என்று அவர் கூறினார்.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக நீடித்து வரும் இந்தப் போர், ஜோர்டான், குவைத் மற்றும் வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனையோ, ஹோர்முஸ் நீரிணையை மூடியே வைத்திருக்கும் அதன் ஆற்றலையோ சீர்குலைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக, குவைத்தில் உள்ள மின்சார மற்றும் குடிநீர் உற்பத்தி நிலையமொன்றை இலக்கு வைத்து ஈரான் தாக்கியது. ஜோர்டான் மூன்று ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக அறிவித்ததோடு அகாபா துறைமுகம் மற்றும் விமான நிலையம் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஜூலை 15 அன்று ஈரானிய புரட்சிகரக் காவற்படை வெளியிட்ட அறிக்கையில், 'அமெரிக்க கொள்ளைக்காரர்கள்' ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியைத் தடை செய்து வருவதால், 'அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் நலன்களுக்கு சேவை செய்யும் பிற எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி வழித்தடங்களும் மூடப்படும் என்பதை எதிர்பார்க்க வேண்டும்' என்று எச்சரித்தது.
ஈரானுக்குள் தரைவழி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்கப் படைகள் தயாராக இல்லை என்று இராணுவ ஆய்வாளர்கள் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் தெரிவித்தனர். எனினும் ட்ரம்ப் தரைவழி நடவடிக்கையை கைவிட மறுக்கின்றார். மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் சேத் ஜோன்ஸ், 'நீரிணையில் உள்ள தீவுகளிலோ அல்லது ஈரானின் கரையோரப் பகுதிகளிலோ தரைப்படைகளை இறக்குவது மிகப்பெரிய தவறாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஈரானியர்களின் தொலைதூர ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள அமெரிக்கப் படைகள் தயாராக இருப்பதாக நான் நினைக்கவில்லை,' என்றார்.
கார்க் தீவில் அமெரிக்கப் படைகள் தரையிறக்கப்பட்டால், கரையோரத்திலிருந்து தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு அவர்கள் உள்ளாக நேரிடும். இதுவரை ஏற்பட்டுள்ள அமெரிக்க உயிரிழப்புகள் அதற்கான வெறும் ஆரம்ப விலையாக மட்டுமே இருக்கும். ஒவ்வொரு புதிய உயிரிழப்பும், ட்ரம்ப் ஏற்கனவே கலந்துரையாடியுள்ள அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட, போரை மேலும் தீவிரப்படுத்துவதற்கான அழுத்தத்தை அதிகரிக்கும்.
பின்வாங்குவதானது உலகளாவிய அளவில் அதன் மேலாதிக்கத்திற்கும் கௌரவத்திற்கும் பேரழிவுகரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற இந்தப் போரின் உள்தர்க்கமே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மேலும் போரை தீவிரப்படுத்தும் திசைக்குத் தள்ளுகிறது. வியட்நாம் போர் முழுவதும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தை ஆட்கொண்டிருந்த அச்சம் இதுவேயாகும். 1970 ஏப்ரலில், அமெரிக்கா 'பரிதாபத்திற்குரிய, சக்தியற்ற மாபெரும் இராட்சதனாக' நடந்து கொள்ளக் கூடாது என்று அப்போதைய ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் அறிவித்தார். ஆனால் ஒவ்வொரு தீவிரப்படுத்தலும் போரை மேலும் விரிவுபடுத்தி, அதன் அபாயங்களைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. தயாராக இருக்கும் எதிரிக்கு எதிராகவும், போர் இருப்புகள் குறைந்து வரும் நிலையிலும், அமெரிக்கப் படைகளை ஈரானிய நிலப்பரப்பில் தரையிறக்குவது அளவிட முடியாத பொறுப்பற்ற நடவடிக்கையாக இருக்கும்.
ஈரானுக்கு எதிரான இந்தப் போரானது நேட்டோ வல்லரசுகளால் வழங்கப்பட்ட ஆயுதங்களையும் நிதியளிப்புகளையும் கொண்டு, உக்ரேன் ரஷ்ய நகரங்கள் மீது இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருவதில் இருந்து, சீனாவுக்கு எதிரான பொருளாதார முற்றுகை வரை விரிவடைந்துள்ள ஒரு பரந்த உலகப் போரின் ஒரு பகுதியாகும். ஈரான் துல்லியமான முறையில் முக்கிய இலக்குகளைத் தாக்கும் திறனை வெளிப்படுத்தியிருப்பதானது சீனா அல்லது ரஷ்யா இலக்கு நிர்ணய உதவிகளை வழங்கி வருகின்றனவோ என்ற கவலையை அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் எழுப்பியுள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் சனிக்கிழமை செய்தி வெளியிட்டது. இந்தக் கூற்று உண்மையா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, ஈரானுக்கு எதிரான போர் மிகவும் பரந்த உலகளாவிய போரின் ஒரு முனையாகும்.
இந்தப் போருக்கு எதிராக மக்களிடையே பரவலாக வளர்ந்து வரும் எதிர்ப்பை செயலிழக்கச் செய்வதில் ஜனநாயகக் கட்சி அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள அரசியல் பாத்திரத்தை வகித்து வருகிறது.
இந்த வார இறுதியில், போர் மிகப் பெரிய அளவில் விரிவடையும் விளிம்பில் நின்றுகொண்டிருந்த நிலையில், ட்ரம்பின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக என்ற பெயரில், ஜனநாயகக் கட்சி நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட 'நியாயமான போராட்டம் தொடர்கிறது (Good Trouble Lives On)' என்ற பேரணிகளை நடத்தியது. ஆனால் அட்லாண்டாவில் நடைபெற்ற அந்த இயக்கத்தின் பிரதான பேரணியில், மூன்றரை மணி நேரம் நீடித்த உரைகளில், 'ஈரான்' என்ற சொல் ஒருமுறைகூட உச்சரிக்கப்படவில்லை.
அதே வார இறுதியில், வெர்மான்ட் மாநில செனட்டர் பேர்னி சேண்டர்ஸும், நியூயோர்க் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸும், செனட் வேட்பாளர் அப்துல் எல்-சய்யீத் ஆதரவாக டெட்ராய்ட்டில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினர். எல்-சய்யீத் அல்லது ஒகாசியோ-கோர்டெஸ் ஆகியோரில் எவரும் ஈரானைப் பற்றிக் குறிப்பிடவில்லை. சாண்டர்ஸ், போரைப் பற்றி ஒரே ஒரு வாக்கியத்தில் மட்டுமே குறிப்பிட்டார். அதேபோல், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை, அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (Democratic Socialists of America—DSA) அமைப்பின் மிகவும் முக்கியமான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக விளங்கும் நியூயோர்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானியுடன் நடத்திய 65 நிமிட நேர்காணலையும் வெளியிட்டது. அந்த நேர்காணலிலும் மம்தானி ஈரானைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
ஜூன் 17 அன்று ட்ரம்ப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, ஜனநாயகக் கட்சித் தலைமை அதை 'சரணடைதல்' என்று விமர்சித்தது. அந்த அரசியல் நிலைப்பாடே கடந்த வார இறுதியிலும் தொடரப்பட்டது. செனட் புலனாய்வுக் குழுவின் துணைத் தலைவரும், வர்ஜீனியா மாநில ஜனநாயகக் கட்சி செனட்டருமான மார்க் வார்னர், ஏபிசி தொலைக்காட்சியின் திஸ் வீக் நிகழ்ச்சியில், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் ட்ரம்ப் தோல்வியடைந்ததாகக் குற்றம்சாட்டிய அவர், 'ஆட்சி மாற்றத்தில் நாம் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறோம்? முன்பைவிட மோசமான ஒரு கூட்டம் இப்போது ஆட்சியில் இருக்கிறது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைப்பற்றுவது நடக்கவில்லை, அது இன்னும் அங்கேயே இருக்கிறது,' என்றார்.
போருக்கான அனைத்து நிதியையும் நிறுத்த வேண்டும் என்று கோரிய மாசசூசெட்ஸ் மாநில செனட்டர் எட் மார்க்கேயின் நிலைப்பாட்டை ஏற்கிறீர்களா என்று ஏபிசி இன் ஜொனாதன் கார்ல் கேட்டபோது, அதை நிராகரித்த வார்னர், 'எங்களுடைய படைகள் அந்தப் பிராந்தியத்தில் உள்ளன,' என்று கூறி, அதற்குப் பதிலாக ட்ரம்ப் 'காங்கிரஸின் முன் வந்து, அமெரிக்க மக்களிடம் தனது வாதத்தை முன்வைக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். ட்ரம்பின் போர் அதிகாரங்களுக்கு விதிக்கப்படவிருந்த கட்டுப்பாடுகளைத் தடுக்க வாக்களித்த பென்சில்வேனியா மாநில ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜோன் பெட்டர்மன், 'ஈரானை தொடர்ந்து எதிர்கொள்வது முற்றிலும் பொருத்தமானது என்று நான் கருதுகிறேன்,' என்றார்.
ஈரான் மீதான ட்ரம்பின் மீளத் தொடங்கப்பட்ட குண்டுவீச்சு, பல வாரங்களாக ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்கள் முன்வைத்து வந்த கோரிக்கைகளையே நடைமுறைப்படுத்துகிறது. அவர்களின் உண்மையான நிலைப்பாடு, இந்தப் போர் தொடர வேண்டும் என்பதாகும்.
ஜனநாயகக் கட்சி இந்தப் போரை ஆதரிப்பதற்கான காரணம், அது ட்ரம்பைப் போலவே அதே ஆளும் வர்க்கத்தின் கட்சியாக இருப்பதாலேயே ஆகும். அவர்களின் நடவடிக்கைகள், காஸா இனப்படுகொலைக்கு ஆயுதங்களை வழங்கிய பைடன் நிர்வாகத்தின் கொள்கையின் தொடர்ச்சியாக இருப்பதோடு, பைடன் நிர்வாகத்தின் ஆலோசகராக இருந்த ஆமோஸ் ஹோக்ஸ்டீன் ஒப்புக்கொண்டபடி, ஈரான் மீதான தாக்குதல்களுக்கான செயற்பாட்டு தயாரிப்புகளும் அந்த நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஜனநாயகக் கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்கள், மத்திய கிழக்கையும் அதன் எரிசக்தி வளங்களையும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதில் இந்தப் போர் போதிய வெற்றியைப் பெறவில்லை என்பதிலேயே மையம் கொண்டுள்ளன.
போருக்கு எதிராக மக்கள் மத்தியில் பெருகிவரும் பரந்த எதிர்ப்பை, இடைக்காலத் தேர்தல்களில் வாக்குகளைச் சேகரிக்கும் தேர்தல் பிரச்சார நடவடிக்கையாக மட்டுப்படுத்துவதே ஜனநாயகக் கட்சியின் செயற்பாடாகும். எதிர்ப்பை அடக்கி ஒடுக்குவதற்கு ஜனநாயகக் கட்சி செயல்படுவதாலேயே ட்ரம்ப் நிர்வாகத்தால் மக்களின் கருத்தை அலட்சியப்படுத்த முடிகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், இன்னும் விரிவான ஒரு போருக்கான பாதையை ஜனநாயகக் கட்சி செப்பனிடுகிறது.
மேலும் படிக்க
- ட்ரம்பின் பொலிஸ் அரசு ஒடுக்குமுறையும் ஈரானுக்கு எதிரான தீவிரத் தாக்குதலும்: ஒரே போரின் இரு முனைகள்
- தேர்தல்கள் குறித்த ட்ரம்பின் உரை: நெருக்கடியில் சிக்கியுள்ள ஆளும் வர்க்கம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது
- ஈரான் மீது தரைவழித் துருப்புக்களை அனுப்புவது குறித்து வெள்ளை மாளிகை தீவிரமாக விவாதித்து வருகிறது
