இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை), ஜூலை 29 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து 31 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள குறிகட்டுவான் இறங்குதுறையில் நடைபெற்ற மீனவர்களின் போராட்டத்திலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலும் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர் தினேஷ் ஹேமாலை கைது செய்வதாக ஊர்காவற்துறை பொலிசார் அச்சுறுத்த முயற்சித்ததை கண்டனம் செய்கின்றது.
கொழும்பிலுள்ள உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவுக்கு பொலிசாரின் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னரே, ஹேமாலை கைது செய்வதாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை பொலிசார் கைவிட்டனர். இந்தச் சம்பவம் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பாரதூரமான தாக்குதலாவதோடு முதலாளித்துவ அரசியல்வாதிகளையும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரையும் சவாலுக்கு உட்படுத்துபவர்களை அச்சுறுத்துவதற்காக பொலிசார் பயன்படுத்தும் வழிமுறைகளையும் இது அம்பலப்படுத்துகிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அண்மையிலுள்ள தீவுகளில் செயல்படும் மீனவர் கூட்டுறவு சமாசங்களால் இந்தப் போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டது. இப்பகுதியில் சுமார் 200 மீனவர்களின் வலைகளை சேதப்படுத்திய பெரிய இந்திய அடிமடி இழுவைப் படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தை ஒழுங்கமைத்தவர்கள், இந்திய மீனவர்களுக்கு எதிராக அரசாங்கம் தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்ய வேண்டும் மற்றும் சுட வேண்டும் என்று கூட கோரினர். ஆனால் எரிபொருள் விலையின் கடுமையான உயர்வு, திசாநாயக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கொள்கைகளை அமுல்படுத்துவது, வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலை உயர்வு மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் மத்தியில் மீனவர்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்பட்டமை பற்றி எந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.
இந்தத் தெரிவுசெய்யப்பட்ட அணுகுமுறை தற்செயலானதல்ல. அது இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைத்தவர்களின் வர்க்க நலன்களைப் பிரதிபலிக்கிறது. மீனவர் கூட்டுறவு சமாசங்களின் தலைமையானது வறிய சிறிய அளவிலான மீனவர்களால் அன்றி, மாறாக தமிழ் தேசியவாத அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட செல்வந்தர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் ஹேமால் போராட்டம் தொடங்கியதிலிருந்தே அதனை அவதானித்துக்கொண்டிருந்தார். பின்னர், அருகிலுள்ள ஒரு உணவகத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது, சீருடை அணிந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சாதாரண உடையில் இருந்த மேலும் இருவரும் அவரை அணுகினர். போராட்டம் மற்றும் ஊடகக் கலந்துரையாடலை சாதாரண உடையில் இருந்த அந்த இருவரும் கண்காணித்ததை ஹேமால் ஏற்கனவே அவதானித்திருந்தார். அவர் போராட்ட இடத்தைவிட்டு வெளியேறிய பின்னர், அவரது மோட்டார் சைக்கிளைப் பொலிசார் அவரைப் பின்தொடர்ந்திருந்தனர்.
ஹேமாலுக்கு எதிராக பொலிசார் விடுத்த அச்சுறுத்தல்கள், போராட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற ஊடகக் கலந்துரையாடலில் இடம்பெற்ற ஒரு சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாக இருந்தன.
ஊடகக் கலந்துரையாடலின் போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம், இந்திய இழுவைப் படகுகளுக்கு எதிராக இலங்கை கடற்படை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அவரது அழைப்பை தினேஷ் ஹேமால் சவாலுக்கு உட்படுத்தினார். இத்தகைய கோரிக்கை, வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும், இராணுவமயமாக்கலுக்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்ற அப்பிராந்திய மக்களின் அபிலாஷைகளுக்கு முரணானது என்பதை ஹேமால் சுட்டிக்காட்டினார்.
உலக சோசலிச வலைத் தள நிருபர் எழுப்பிய மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த பொன்னம்பலம், சர்வதேச நாணய நிதியத்தால் கோரப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்துவதை நியாயப்படுத்தி, அவை மக்களுக்கு நன்மை தருவதாக பொய்யாகக் கூறினார்.
யாழ்ப்பாண மாவட்ட மீனவர் கூட்டுறவு சமாசத்தின் தலைவர் அண்ணாலிங்கம் அண்ணராசாவிடமும் ஹேமால் கேள்வி எழுப்ப முயன்றார். பொன்னம்பலத்திடம் ஹேமால் கேள்வி எழுப்பியதனால் எரிச்சலடைந்ததாகத் தோன்றிய ஒரு ஊடகப் பிரதிநிதி, “அழைக்கப்பட்ட ஊடகங்களுக்கு மட்டுமே” கேள்வி கேட்க அனுமதி இருப்பதாகக் கூறி அவரைத் தடுக்க முயன்றார். “வடமராட்சி மீடியா ஹவுஸ்” என்ற அடையாள அட்டையை அணிந்திருந்த அந்த நபர், ஹேமாலிடம் அவரது ஊடகவியலாளர் அடையாள அட்டையைக் காட்டுமாறு கோரினார்.
அந்த நபர் உலக சோசலிச வலைத் தள நிருபரிடம் ஆவேசமாக நடந்துகொண்டபோது, “நீங்கள் பொலிசாரின் சார்பாக நிருபர்களைக் கண்காணிக்கும் பொலிஸ் வேலையைச் செய்கிறீர்கள்” என்று ஹேமால் தெரிவித்தார். அதற்கு, மீனவர் கூட்டுறவு சமாசத்தின் தலைவர்கள், “தாங்கள் அழைத்த ஊடகங்களையே” கலந்துரையாடலை நடத்த அனுமதிக்குமாறு ஹேமாலிடம் கூறினர்.
தன்னை மௌனமாக்கும் இந்த முயற்சியை ஹேமால் உறுதியாக நிராகரித்தார். தாம் உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர் என்பதையும், எந்தவிதமான தலையீடும் இன்றி தனது ஊடகப் பணியை மேற்கொள்ளும் உரிமை தனக்குள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். அவரை ஒதுக்கிவைக்க மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, போராட்ட அமைப்பாளர்களின் தேசியவாத மற்றும் முதலாளித்துவ ஆதரவு நிலைப்பாட்டையும், தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் நிலைப்பாட்டில் இருந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர்களின் இயலாமையையும் அம்பலப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் ஹேமாலை கைது செய்வதாக அச்சுறுத்தியபோது, அவர்களில் ஒருவர் ஊடகக் கலந்துரையாடலின் போது ஹேமால் கூறிய கருத்துகளைக் குறிப்பிட்டார். ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய அந்த அதிகாரி, “டேய், அங்கே [ஊடகக் கலந்துரையாடலில்] பெரிதாகப் பேசிக்கொண்டிருந்தது நீதானே!” என்று கத்தினார்.
ஊடகவியலாளராக ஹேமால் மேற்கொண்ட பணியில் தலையிடுவதற்கு எந்தச் சட்டபூர்வ அதிகாரமும் இல்லாத போதிலும், பொலிசார் அவரிடம் ஊடக அடையாள அட்டையைக் காட்டுமாறு கோரினர். அதோடு, அவரது தேசிய அடையாள அட்டையில் இருந்த விபரங்களையும் பதிவு செய்தனர்.
ஹேமால் கேள்வி எழுப்புவதைத் தடுக்கும் நோக்கில் சில ஊடகப் பிரதிநிதிகள் மேற்கொண்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் பொலிசார் துணிச்சலடைந்தனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அரசியல் பிரமுகர்களைச் சவாலுக்கு உட்படுத்தி, அவர்களுக்கு அசௌகரியமான கேள்விகளை எழுப்பியதற்காக ஒரு ஊடகவியலாளரை அச்சுறுத்தும் முயற்சியையே பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.
எமது தோழருக்கு எதிராக விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலை சோசலிச சமத்துவக் கட்சி மிகவும் பாரதூரமாகக் கருதுகிறது. மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் கீழ், ஊடகவியலாளர்களுக்கு எதிரான பொலிஸ் தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருகின்றன.
போரினால் பேரழிவுக்குள்ளான வடக்கு மற்றும் கிழக்கில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இரத்தக்களரியான இனவாதப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த பின்னரும், இராணுவம் தனது பரந்த இருப்பை தொடர்ந்து பேணி வருகிறது. இந்த மாகாணங்களில் மக்களை பொலிசாரும் இராணுவமும் கண்காணிப்பது நீண்டகாலமாக அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது.
குறிகட்டுவான் இறங்குதுறையில் நடைபெற்ற போராட்டத்தை பொலிசார் கண்காணித்தமையும், அங்கு சாதாரண மீனவர்கள் தங்களது மோசமடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகள் குறித்து வெளிப்படையாகப் பேசிய பின்னர், உலக சோசலிச வலைத் தள நிருபரை அச்சுறுத்தியமையும், அரசியல் கலந்துரையாடலைக் கட்டுப்படுத்தவும் எதிர்ப்பை ஒடுக்கவும் அரசு மேற்கொள்ளும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாகும்.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டத்திற்கு எதிராக அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிலையில், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, கண்காணிப்பு, அச்சுறுத்தல் மற்றும் ஒடுக்குமுறை இயந்திரத்தை மேலும் பலப்படுத்துவதன் மூலமே அது பதிலளித்து வருகிறது.
நாட்டில் அமுலிலுள்ள அவசரகாலச் சட்டம் மீண்டும் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதன் மூலம் ஜனாதிபதிக்கு இராணுவத்தைப் பயன்படுத்துதல், மக்கள் கூடுவதைத் தடைசெய்தல் மற்றும் வழமையான நீதிமன்ற நடைமுறைகளின்றி நபர்களைக் காவலில் வைப்பது போன்ற பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை, ஜனநாயக விரோதமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைத் தக்கவைத்திருக்கும் புதிய “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்” ஒன்றையும் அரசாங்கம் தயாரித்து வருவதோடு பல துறைகளில் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்ய அத்தியாவசிய சேவைகள் உத்தரவுகளையும் பயன்படுத்தியுள்ளது.
உலக சோசலிச வலைத் தளத்திற்கு எதிரான இந்த அச்சுறுத்தல்கள், இந்த விரிவான அரசியல் சூழலின் பின்னணியிலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டும். அரை நூற்றாண்டுக்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களுக்காகவும், ஜனநாயக உரிமைகள் மீதான அனைத்து தாக்குதல்களுக்கும், அனைத்து வகையான தேசியவாதத்திற்கும் இனவாதத்திற்கும் எதிராகவும் போராடி வந்துள்ளன. சிங்கள மொழியில் கம்கரு மாவத மற்றும் தமிழில் தொழிலாளர் பாதை பத்திரிகைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட அந்தப் போராட்டம், இன்று உலக சோசலிச வலைத் தளம் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொலிஸ் அச்சுறுத்தல்களாலோ அல்லது சோசலிச ஊடகவியலை ஒடுக்குவதற்கான முயற்சிகளாலோ சோசலிச சமத்துவக் கட்சியை அச்சுறுத்த முடியாது. உலக சோசலிச வலைத் தளத்தையும் ஏனைய சுயாதீன ஊடகவியலாளர்களையும் மௌனமாக்கும் ஒவ்வொரு முயற்சியையும் எதிர்த்து நிற்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் அனைவரிடமும் நாம் அழைப்பு விடுக்கிறோம்.
உலகளாவிய ரீதியில் அரசாங்கங்கள், மக்களின் பரந்த அடுக்குகளை வறுமைக்குள் தள்ளும் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்க அதிகரித்தளவில் எதேச்சதிகார வழிமுறைகளை நாடுவதுடன், இனவாத மற்றும் தேசியவாத பிளவுகளைத் திட்டமிட்டு தூண்டிவிடுகின்றன. ஆகவே, கருத்துச் சுதந்திரத்தையும் ஊடகச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டம், சமூகத்தை சோசலிச அடிப்படையில் மறுஒழுங்கமைப்பதற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும்.
