இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலையை வலியுறுத்தி உலகம் முழுவதும் முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்திற்கு, மைக்கோலாய்வ் மேல்முறையீட்டு நீதிமன்றம் சிடுமூஞ்சித்தனமான பேரினவாதப் போக்கோடு பதிலளித்துள்ளது. போக்டனின் தண்டனைத் தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரி வரலாற்றாசிரியர்கள், கலைஞர்கள், சட்ட அறிஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து குவிந்த ஏராளமான கடிதங்களுக்குப் பதிலாக, நீதிமன்றம் ஒரு மின்னஞ்சல் அறிக்கையை அனுப்பி வருகிறது. அதில், “நீதிமன்றத்தின் அலுவலகப் பணிகள் அரசு மொழியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன” என்றும், கடிதங்கள் —அவை நீதிமன்றத்தால் “விண்ணப்பங்கள்” என்று குறிப்பிடப்படுகின்றன— “நீதிமன்ற அலுவலகப் பணிகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட மொழியான உக்ரேனிய மொழியில்” எழுதப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.,
நீதிமன்றத்தின் இந்தக் கோரிக்கை, ஆகஸ்ட் 10 முதல் வெடித்தெழுந்துள்ள அனைத்துலகப் பிரச்சாரத்தை நோக்கியே இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அன்றுதான், போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் 27 வயது நிறுவனரும் தலைவருமான சிரோட்டியுக்கிற்கு, உக்ரேனின் தெற்கு மைகோலாய்வ் பிராந்தியத்தில் உள்ள பெர்வோமைஸ்க் நகர மாவட்ட நீதிமன்றம், “இராணுவச் சட்டத்தின் கீழ் உயர் தேசத்துரோகம்...” இழைத்ததாகக் கூறி 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்தது. உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட மனு ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கண்டனக் கடிதங்கள் குவிந்துள்ளன. எதிர்ப்புகளை புறக்கணிக்கும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இந்தக் கடிதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்துக் கடிதங்களும் உக்ரேனிய மொழியிலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை, போக்டனுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொதுமக்களின் குரலை முடக்கவும் ஒடுக்கவும் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகும்.
நீதிமன்றத்தால் பயன்படுத்தப்பட்ட இந்த விதியின் மூலமானது முற்றிலும் பிற்போக்குத்தனமானது. ஏப்ரல் 25, 2019 அன்று இயற்றப்பட்ட உக்ரேனிய மொழியை அரசு மொழியாகப் செயல்படுத்துவதை உறுதிசெய்வதற்கான சட்டம், உக்ரேனின் பெரும் அளவிலான மக்களுக்கு —மூன்றில் ஒரு பங்கு முதல் பாதியளவு வரை என மதிப்பிடப்பட்டுள்ளது— அதாவது, ரஷ்ய மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கு எதிரான ஒரு பகிரங்கமான பாகுபாட்டுச் செயலாகும். .
போக்டன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட பெர்வோமைஸ்க் நகரமும், ஏப்ரல் 2024 முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மைக்கோலாய்வ் நகரமும் தெற்கு உக்ரேனின் ரஷ்ய மொழி பேசும் பகுதிகளாகும். உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் உக்ரேனிய மொழியிலேயே கடிதம் எழுத வேண்டும் என நிபந்தனை விதிக்கும் இந்த நீதிமன்றம், பெரும்பான்மையான மக்கள் தங்கள் தாய்மொழியின் அதிகாரப்பூர்வ உரிமையை இழந்துள்ள ஒரு பிராந்தியத்திலேயே இயங்குகிறது. உக்ரேனில் ரஷ்ய மொழி பேசும் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் அதே தேசியவாத பேரினவாதம்தான், இப்போது போக்டனின் விடுதலைக்கான சர்வதேசப் பிரச்சாரத்திற்கு எதிராகவும் திருப்பப்படுகிறது.
இந்தச் சட்டப்பூர்வமான சாக்குபோக்கு முற்றிலும் மோசடியானது. நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்படும் மொழிப் கட்டுப்பாடு, வழக்கு விசாரணையில் பங்கேற்பாளர்களால் சமர்ப்பிக்கப்படும் மனுக்கள், கோரிக்கைகள் மற்றும் ஆதாரங்கள் உள்ளிட்ட நடைமுறை ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும். வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் தண்டனைக்கு எதிரான எதிர்ப்புக் கடிதங்கள் இத்தகைய நடைமுறை ஆவணங்கள் அல்ல. அவை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தேசிய மொழியில்தான் எழுதப்பட வேண்டும் என்று எந்தச் சட்டமும் கட்டாயப்படுத்தவில்லை. இந்த நீதிமன்றம் அக்கடிதங்களை “விண்ணப்பங்கள்” என வகைப்படுத்தி, வெறும் திசைதிருப்பும் தந்திரமாகவே, இந்த நிர்வாக மொழிப் கட்டுப்பாட்டை அவற்றின் மீது திணித்துள்ளது.
இந்த சிடுமூஞ்சித்தனம் வெளிப்படையானது. “போக்டன் சிரோட்டியுக்” என்ற பெயரைக் கொண்டுள்ள எந்தவொரு கடிதத்தின் கருத்தையும், அது எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், புரிந்துகொள்ளும் முழுத் திறன் இந்த நீதிமன்றத்திற்கு உண்டு. தங்களது நேட்டோ (NATO) எஜமானர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, பணத்தையும் ஆயுதங்களையும் கோருவதற்காக எந்த மொழியிலும் பேச ஜெலன்ஸ்கியும் அவரது கூட்டாளிகளும் அசாதாரணத் தேர்ச்சியைக் காட்டுகின்றனர். வெளிநாட்டு நாடாளுமன்றங்களின் முன் நின்றுகொண்டு அவர்களின் சொந்த மொழிகளிலேயே மண்டியிட்டுக் கெஞ்சும் ஜனாதிபதியைக் கொண்ட அதே அரசுதான், ஒரு அரசியல் கைதிக்காக குரல் கொடுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் தங்களது எதிர்ப்பை உக்ரேனிய மொழியில்தான் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது.
இந்தப் பிரச்சாரத்தை முடக்குவதற்கான எந்த முயற்சியும் தோல்வியடையும். தொழிலாளர்கள், இளைஞர்கள், கொள்கைப் பிடிப்புள்ள கல்வியாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ள அனைவரும் நீதிமன்றத்தின் இந்தத் தன்னிச்சையான உத்தரவைப் பெரிதாகப் பொருட்படுத்த மாட்டார்கள். இந்த வழக்கின் உண்மைகள் மேலும் பரவலாகத் தெரியவரும்போது, இந்தத் தீர்ப்பிற்கு எதிரான ஆத்திரம் அதிகரிக்கும். கையெழுத்துகளின் எண்ணிக்கையும் உயரும். போக்டனின் பாதுகாப்பிற்காக மேலும் பல தனிநபர்களும் அமைப்புகளும் குரல் கொடுப்பார்கள்; எதிர்ப்புக் கடிதங்களும் தொடர்ந்து குவிந்து கொண்டே இருக்கும்.
இந்த தீர்ப்பிற்கு எதிரான ஆத்திரம் மறுக்க முடியாத உண்மைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. போக்டனின் விடுதலையைக் கோரும் மனுவில் இந்த உண்மைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன:
இந்தத் தண்டனைத் தீர்ப்பு முற்றிலும் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட அரசியல் கருத்துச் சுதந்திரத்தின் மீதே சுமத்தப்பட்டுள்ளது. சிரோட்டியுக்கிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஒரே ஆதாரம், உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) வெளியிடப்பட்ட ஆறு கட்டுரைகளும், அவற்றை வெளியிட்ட ஆசிரியர்களுடனான அவரது தொடர்புகளுமே ஆகும். எழுதுவது மற்றும் வெளியிடுவதைத் தவிர வேறு எந்தச் செயலிலும் அவர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படவுமில்லை, நிரூபிக்கப்படவுமில்லை. ஒரு சோசலிச வெளியீட்டுக்காக எழுதியதற்காக ஒரு குடிமகனைத் தேசத்துரோகக் குற்றவாளியெனத் தீர்ப்பளிப்பது என்பது, கருத்துச் சுதந்திரத்தையே குற்றமாக்குவதாகும். இது உக்ரேன் அரசியலமைப்பின் 34வது பிரிவையும், உக்ரேன் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் சாசனத்தின் 10வது பிரிவையும் மீறுவதாகும்.
அரசுத் தரப்பின் முதன்மையான குற்றச்சாட்டு ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை. ஏப்ரல் 25, 2024 அன்று உக்ரேனிய பாதுகாப்புப் படையினரால் (SBU) சிரோட்டியுக் கைது செய்யப்பட்டபோது, அவர் ரஷ்ய அரசின் முகவர் என்று உக்ரோனிய அரசு குற்றம் சாட்டியது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசம் மற்றும் வழக்கு விசாரணைகளுக்குப் பிறகும், அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஆதாரங்களே, சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு முரணாக அமைந்துள்ளன. தண்டனைக்கு அடிப்படையாக அமைந்த கட்டுரைகள், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கும் புட்டின் ஆட்சிக்கும் சிரோட்டியுக் தெரிவித்த எதிர்ப்பை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
நீதிமன்றம் தன் முன் வைக்கப்பட்ட நிபுணத்துவச் சான்றுகளுக்குப் பதிலளிக்கத் தவறிவிட்டது. உக்ரேனின் முன்னணி குற்றவியல் வல்லுநர்களில் ஒருவரான யூரி இர்கின் தயாரித்த 65 பக்க அறிக்கையானது, சிரோட்டியுக்கின் எழுத்துக்களை ஆய்வு செய்து, அவற்றில் புட்டின் அரசாங்கத்திற்கு ஆதரவான பிரசாரத்திற்கான எந்தவொரு “அறிக்கைகளோ, சொற்றொடர்களோ, வாக்கியங்களோ அல்லது வார்த்தைக் சேர்க்கைகளோ” இல்லை என்பதைக் கண்டறிந்தது. ஆனால், விசாரணை நீதிமன்றம் இந்த அறிக்கைக்குப் பதிலளிக்கவே இல்லை. அதற்குப் பதிலாக, மூன்றாவது முறையாக ஆய்வுக்கு உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கும் வகையிலான நிபுணர்களின் கண்டுபிடிப்புகளைப் புறக்கணித்து வழங்கப்படும் தீர்ப்பு சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகாது.
கூடுதல் உத்தரவுகள் இந்த வழக்கு நடவடிக்கையின் அரசியல் தன்மையை உறுதிப்படுத்துகின்றன. சிறைத் தண்டனையுடன் சேர்த்து, சிரோட்டியுக்கின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் வேலைத் திட்டம், சிற்றேடுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை அழிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசியல் இலக்கியங்களை அழிக்க உத்தரவிட்டிருப்பது, குற்றங்களை விசாரிப்பதற்குப் பதிலாகக் கருத்துக்களைத் தண்டிக்கும் ஒரு அரசின் செயலாகும்.
ஒரு நியாயமான விசாரணைக்கு சாத்தியமற்ற சூழ்நிலைகளிலேயே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் இடைநிறுத்தப்பட்ட, இராணுவச் சட்டம் அமலில் உள்ள ஒரு நாட்டில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உக்ரேனில் 2015-ஆம் ஆண்டின் “கம்யூனிச ஒழிப்பு” சட்டங்களுக்குப் பிறகு, கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவற்றின் சின்னங்களும் தடை செய்யப்பட்டன; 2022-இல், நாடாளுமன்றத்தின் மிகப்பெரிய எதிர்க்கட்சி உட்பட 11 எதிர்க்கட்சிகளை ஜெலன்ஸ்கி அரசாங்கம் இடைநிறுத்தியது. ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் 2025-இல் சிரோடியுக்கின் வழக்கை ஏற்றுக்கொண்டது. போக்டனுக்கு எதிரான இந்த வழக்கு நடவடிக்கைகள், ஐரோப்பிய மனித உரிமைகள் சாசனத்தின் 6, 7 மற்றும் 10-வது பிரிவுகளை மீறும் வகையிலான அரசியல் பழிவாங்கலாகும்.
இந்தத் தண்டனை போக்டனின் உயிருக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்துகிறது. அவர் கைது செய்யப்பட்டபோதே அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. அவருக்கு அவசரமாகத் தேவைப்பட்ட மருத்துவ சிகிச்சை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மறுக்கப்பட்டது. மிகச் சமீபத்தில்தான் அவருக்குச் சிகிச்சை தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையாலும் ஐரோப்பியக் கவுன்சிலாலும் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, அதிக நெரிசல், மருத்துவப் பராமரிப்பு மறுப்பு மற்றும் காவலில் உயிரிழப்புகள் அதிகரிப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு சிறை அமைப்பில், 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது மரண தண்டனைக்குச் சமமானதாகும்.
போக்டனின் விடுதலைக்கான போராட்டத்தின் முக்கியத்துவம் ஒரு தனிநபரின் விதியைத் தாண்டியது. முழு ஐரோப்பாவையும் உலகத்தையும் விழுங்க அச்சுறுத்தும் ஒரு பேரழிவுகரமான இராணுவ மோதலாக மிக வேகமாக தீவிரமடைந்து வரும் இந்த சகோதர படுகொலைப் போரை எதிர்த்ததற்காகவே அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போக்டனின் விடுதலைக்கான போராட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். மனுவில் கையெழுத்திடுபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர வேண்டும். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இரத்து செய்யப்பட்டு, போக்டன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரி தனிநபர்களும் அமைப்புகளும் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எதிர்ப்புக் கடிதங்களை அனுப்ப வேண்டும்.
எதிர்ப்புக் கடிதங்கள், அவற்றின் ஆசிரியர்கள் விரும்பும் எந்த மொழியிலும் எழுதப்படலாம். மொழிபெயர்ப்புச் செயலிகளைப் பயன்படுத்தக்கூடியவர்கள், தாங்கள் விரும்பினால், தங்களது கடிதங்களை உக்ரேனிய மொழியிலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், மொழி எதுவாக இருந்தாலும் தெரிவிக்கும் செய்தி ஒன்றுதான்:
போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்! பாசிசத்திற்கும் போருக்கும் எதிராக உக்ரேனிய, ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் ஓங்குக!
Свободу Богдану Сиротюку! За єдність українського, російського та міжнародного робітничого класу проти фашизму і війни!
Свободу Богдану Сиротюку! За единство украинского, российского и международного рабочего класса против фашизма и войны!
Libérez Bogdan Syrotiouk ! Pour l’unité de la classe ouvrière ukrainienne, russe et internationale contre le fascisme et la guerre!
Freiheit für Bogdan Syrotjuk! Für die Einheit der ukrainischen, russischen und internationalen Arbeiterklasse gegen Faschismus und Krieg!
¡Libertad para Bogdan Syrotiuk! ¡Por la unidad de la clase obrera ucraniana, rusa e internacional contra el fascismo y la guerra!
Libertà per Bogdan Syrotiuk! Per l’unità della classe operaia ucraina, russa e internazionale contro il fascismo e la guerra!
Bogdan Syrotiuk’a özgürlük! Ukraynalı, Rus ve uluslararası işçi sınıfının faşizme ve savaşa karşı birliği için!
Liberdade para Bogdan Syrotiuk! Pela unidade da classe trabalhadora ucraniana, russa e internacional contra o fascismo e a guerra!
බොග්දාන් සිරොටියුක්ට නිදහස! ෆැසිස්ට්වාදයට හා යුද්ධයට එරෙහිව උක්රේන, රුසියානු සහ ජාත්යන්තර කම්කරු පන්තියේ එක්සත්භාවය වෙනුවෙන්!
போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்! பாசிசத்திற்கும் போருக்கும் எதிராக உக்ரேனிய, ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் ஓங்குக!
释放博格丹·瑟罗秋克!为乌克兰、俄罗斯和国际工人阶级反对法西斯主义与战争的团结而斗争!
الحرية لبوغدان سيروتيوك! من أجل وحدة الطبقة العاملة الأوكرانية والروسية والعالمية ضد الفاشية والحرب!
ボグダン・シロチュクを釈放せよ!ファシズムと戦争に反対するウクライナ、ロシア、そして国際労働者階級の団結のために!
آزادی برای بوگدان سیروتیوک! برای اتحاد طبقه کارگر اوکراین، روسیه و جهان علیه فاشیسم و جنگ!
Vrijheid voor Bogdan Syrotjoek! Voor de eenheid van de Oekraïense, Russische en internationale arbeidersklasse tegen fascisme en oorlog!
